சரவணன் மாணிக்கவாசகம் முகநூலில்
Tuesday 19 January 2021
என் பார்வையில் 2020ன் சிறந்த குறுங்கதைகள் மற்றும் அல்புனைவுகள்
Saturday 16 January 2021
என் பார்வையில் 2020ன் சிறந்த புனைவுகள்
சரவணன் மாணிக்கவாசகம் முகநூலில் எழுதிய பதிவு
Thursday 14 January 2021
இருபதாண்டு கால தமிழ் நாவல்கள்
சுனீல் கிருஷ்ணன் - அந்திமழை கட்டுரை
இரண்டாயிரம் ஆண்டிற்குப் பிறகு வந்த சிறந்த தமிழ் நாவல்கள்
சசிதரன் வலைப்பக்கம்
நூல்கள் பட்டியல் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் வாங்குவதற்கு அடிக்கடி நான் பட்டியல் போடுவேன். போன மாதம் ஒருவர் food court-ல் நான் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தமிழில் நீங்க படிச்ச நாவல்களை சொல்லுங்கள் என்றார். அப்போது கீழே உள்ள சில புத்தகங்களில் சிலவற்றை சொன்னேன். வீட்டுக்கு வந்தவுடன் பட்டியலை தயாரிக்க ஆரம்பித்தேன். கதை மாந்தர்கள் கண்முன்னே வந்து சென்றனர். அந்தந்த புத்தகங்களை வாசித்த இடங்களின் ஞாபகமும் வந்தது. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் படித்த புத்தங்களின் ஞாபகங்களுடன் நேரம் செலவழித்தேன். கீழே கூறியுள்ள அனைத்து புத்தங்களையும் நான் படித்திருக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டிற்கு பிறகு வெளிவந்த நாவல்களில் எனக்கு பிடித்தவை கீழே :
1)காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2) தாண்டவராயன் கதை -பா.வெங்கடேசன்
3)உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார்
4)நீலகண்டம் -சுனீல் கிருஷ்ணன்
5)சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்
6)அஞ்ஞாடி - பூமணி
7)தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ்
8) ஆழி சூழல் - ஜோ .டி குருஸ்
9)வேனல் - காலப்பிரியா
10)பருக்கை - வீரபாண்டியன்
11)வலம் - விநாயக முருகன்
12)துறைவன் - கிறிஸ்டோபர் ஆன்றணி
13)ரோல்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்
14) யாமம் - எஸ் . ராமகிருஷ்னன்
15)புலிநகக் கொன்றை - பி ஏ கிருஷ்ணன்
16) கடல்புரத்தில் - வண்ண நிலவன்
17)கூகை - சோ.தர்மன்
18)சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்
19)செடல் -இமையம்
20)ஆப்பிளுக்கு முன் - சரவன்கார்த்திகேயன்
21)கானகன் - லஷ்மி சரவணக்குமார்
22)கொரில்லா - ஷோபாசக்தி
23)நடுகல் - தீபச்செல்வன்
24) வெட்டுப் புலி - தமிழ்மகன்
25) வேள்பாரி - சு.வெங்கடேசன்
26)மிளிர் கல் - இரா. முருகவேள்
27)காடு - ஜெயமோகன்
28)சுளுந்தீ - முத்துநாகு
29)கங்காபுரம் -வெண்ணிலா
30)பேய்ச்சி -நவீன்
31)ஆறாவடு - சயந்தன்
32)அஞ்சுவண்ணம் தெரு - தோப்பில் முஹம்மது மீரான்
33) விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - சி.மோகன்
34)அழியாச்சொல் - குட்டி ரேவதி
35) மீன்காரத் தெரு -கீரனுர் ஜாகீர் ராஜா
36)கோட்டை வீடு - ம.கா முத்துரை
37)கழுதைப்பாதை -எஸ். செந்தில்குமார்
38)மரயானை -சிந்து பொன்ராஜ்
39)வாரணாசி - பா.வெங்கடேசன்
40)பட்டக்காடு - அமலராஜ் பிரான்சிஸ்
41)உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
42)சலூன் -வீரபாண்டியன்
43)ஜெப்னா பேக்கரி - வாசு முருகவேள்
44)காடோடி - நக்கீரன்
45)இச்சா - ஷோபா சக்தி
46)யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்
47)கெடை காடு - ஏக்நாத்
48)குற்றப்பரம்பரை - வேல ராமமூர்த்தி
49)ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்
50)ஆதிரை - சயந்தன்
51)சக்கை - கலைச்செல்வி
52) பார்த்தீனியம் - தமிழ்நதி
53)ஏதிலி - அ.சி. விஜிதரன்
54)ஏந்திழை - ஆத்மார்த்தி
55) உம்மத் -ஸர்மிளா செய்யத்
56)இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
57)மலைக்காடு - சீ.முத்துசாமி
58)பேட்டை - தமிழ்ப் பிரபா
59)லாக்கப் - சந்திரகுமார்
60)இரவு - ஜெயமோகன்
61)கொற்கை - ஜோ .டி குருஸ்
62)வெண்முரசு வரிசை நாவல்கள் - ஜெயமோகன்
63) வாழ்க வாழ்க - இமையம்
64)தூர்வை -சோ.தர்மன்
65)பிறகு - பூமணி
66)ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
67)ஐந்து முதலைகளின் கதை -சரவணன் சந்திரன்
68)கீதாரி - கலைச்செல்வி
எனக்கு பிடித்த இன்னும் சில நூல்களின் வெளிவந்த வருடங்கள் தெரியவில்லை அதனால் அவற்றை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை .
Tuesday 5 January 2021
நாயனம் - ஆ மாதவன்
ஆ மாதவனின் நினைவாக அவரின் சிறந்த கதையான நாயனம்
இறந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதியமல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று விரல் திருநீற்றுப் பட்டையுடன், நீட்டி நிமிர்ந்து அந்திமத்துயில் கொள்கிறார். கறுப்பு உடம்பு, வயசாளி, மேல்வரிசைப் பல் கொஞ்சம் பெரிசு, உதட்டை மீறி ஏளனச் சிரிப்பாக அது வெளித் தெரிகிறது. தலைமாட்டில் குத்து விளக்கும், நுனி வாழையிலையில் நிறை நாழி பழமும் ஊதுவத்தியும், சிவப்பு அரளிப்பூ மாலையுமாக ஜோடித்திருக்கிறார்கள். சாவு மணம் ஊதுவத்தியிலிருந்து கமழ்கிறது.
‘யென்னைப் பெத்த யப்போவ்.. யெனக்கினி ஆரிருக்கா?… என்று கால்மாட்டில் பெண்அள் கும்பலிலிருந்து நாற்பது வயசுக்காரி கறுப்பி முட்டி முட்டி அழுகிறாள். அவளுக்கு பச்சைக் கண்டாங்கிதான், பொருந்துகிறது.
சாயங்காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. தென்னந் தோப்புக்கு அப்பால், வாழைப் பண்ணையைத் தாண்டி, பாறைகள் நிறைந்த ஆற்றின் புது வெள்ளத்தின் குளிரைக் காற்று சுமந்து வருகிறது. காக்கைகள் கூட்டுக்குப் பறந்து போகின்றன. தாழைப்புதர் வேலிகளின் நடுவில்- வாய்க்கால் கரையிலிருந்து , முற்றிய கமுகு மரத்தை வெட்டிச் சுமந்து கொண்டுவந்து, முற்றத்தில் பாடை ஏணி தயாரிக்கிறார்கள். பிளந்த கமுகுமரம், வெளீரென்று பொள்ளையாக முற்றத்தில் துண்டாகக் கிடக்கிறது.
வாசலில், இளவுக் கூட்டத்தினரிடையே, செத்தவரின் தடியன்களான ஆண்பிள்ளைகள் இரண்டு அழுக்குத் துண்டை அணிந்து கொண்டு சுறுசுறுவென்று , எண்ணெய்ச் சிலைகள் போலத் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறர்கள். சின்னவன், கொஞ்சம் அழுகிறான். பெரியவன் முழங்கையைக் கன்னத்துக்கு முட்டுக் கொடுத்துக் கூரையின் துலாக் கட்டையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். உள்ளேயிருந்து வரும் ஒப்பாரி, இப்பொழுது பழக்கமாகிச் சாதாரணமாகி விடுகிறது.
“ இப்படியே இருந்தாப் பொழுதுதான் இருட்டும். இருட்டு வருமுன்னே இதோ அதோன்னு காரியத்தை முடிப்பம்; என்ன தங்கப்பா??”
“ஆமாமாம். நாயனக்காரனைத்தான் இன்னம் காணோம். யாரு போயிருக்காங்க அழைச்சார?”
“வடிவேலும் சின்னண்ணணும் போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே இன்னிக்கு ஆம்புட்றது கஸ்டம் . அல்லாம், முத்துபட்டி திருவிழாவுக்குப் போயிருப்பாங்க.”
“சின்னண்ணன் போயிருக்கிறான்லியா அப்போ நிச்சயம் யாரையாவது இட்டுக்கிட்டு வருவான். வரட்டும். அதுக்குள்ளியும் மத்த வேலைங்களெப் பாக்கறது.”
மழைவரும் போல் இருந்தது. அந்தியிருள் குளிர ஆரம்பித்தது. கியாஸ் விளக்கொன்றைச் சுமந்து கொண்டு , வயல் வரப்பு வழியாக வாய்க்காலைத் தாண்டி ஒருவன் கரையேறி வந்து கொண்டிருக்கிறான். விளக்கின் ஒளியில், வாழை மரமும், பச்சை ஓலைய்ப் பந்தலும் பெரிய பெரிய நிழல்களாக வளர்ந்து திரைக்காட்சி போல மாறி மாறிப் போயிற்று.
விளக்கு சுமந்து வந்தவன், வேர்க்க விறுவிறுக்க முற்றத்தில் ஸ்டாண்டு மேல் விளக்கை இறக்கி வைத்தான். விளக்கின் உஸ்… உஸ்..! உள்ளே அழுகை ஓய்ந்து போயிருந்தது. குசுகுசுத்த குரலில் பெண்கள் வக்கணை பேசுகிறார்கள். ஊதுவத்தி இன்னும் மணமாக மணத்துக்கொண்டு புகை பரத்துகிறது.
விளக்கு வந்துவிட்ட வசதியில் முற்றத்துச் சந்தடி, அங்கிங்காக விலகி நின்றுகொண்டு இருட்டில், தெரியாத வயல் வரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சலிப்பு- எல்லாரது முகத்திலும் அசட்டுக்களையை விரவிவிட்டிருக்கிறது. சும்மாவேனும் எத்தனை தரம் வெற்றிலை போடுகிறது? எத்தனை தரம் பீடி பிடிக்கிறது?
“விடிஞ்ச மொதக்கொண்டு ஒண்ணுமே சாப்பிடலே. எப்போ இந்தக் காரியம் முடியறது, குளிச்சு மாத்திச் சாப்பிடுறதோ? சரியான தொந்தரவு போ.”
யாரோ ஓராள் இருட்டைப் பொத்துக்கொண்டு வெள்ளையாக நடையும் வேகமுமாக ஓடிவந்தான்.
“சின்னண்ணனும், வடிவேலும் தட்றாம்பட்டிக்குச் சைக்கிள்லே போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே யாரும் நாயனக்காரங்க ஆப்டலியாம். சேதி சொல்லச் சொன்னாங்க.” வந்தவன் பந்தலையும்- கியாஸ் விளக்கையும்- முசுமுசுத்த கும்பலையும் – உள்ளே பெண்களீன் அர்த்தமற்ற அலமலங்களையும் – மாறி மாறி ப் பார்த்துவிட்டுப் பீடிக்கு நெருப்புத் தேடி ஒதுங்கினான். எப்பிடியும் தட்றாம்பட்டி போய் ஆளை இட்டுக் கொண்டுவர இன்னும் ஒரு மணியோ , ஒன்றரை மணியோ நேரமாகலாம், கும்பலின் முகம் சுணங்கியது.
“இந்தக் காலத்திலே, யாருப்பா நாயனமும் , பல்லக்கும் வச்சிக்கிறாங்க? ஏதோ அக்கம் அசலுக்கு ஒரு தொந்தரவு இல்லாமெ, காரியத்தை முடிக்கிறதெ விட்டுவிட்டு? இப்போ பாரு , எத்தினிஎ பேரு இதுக்கோசரம் காத்துக் கெடக்கிறாங்க ?”
”இல்லே, மூத்த பிள்ளைதான் சொல்லிச்சிது. செத்தவரு முன்னாடியே சொல்லி வச்ச சங்கதியாம். தமக்கு , சுடுகாடு யாத்திரை தவுல் நாயனக் கச்சேரியோட நடத்தணுமினு. அதாம் அந்த பொண்ணும் அழுகையா அழுதிச்சி. செத்தவங்க ஆத்துமா நிம்மதியாப் போகட்டுமேன்னு தான், இப்போ, மேலாத்தூர் போய் அங்கியும் ஆம்புடாமே தட்றாம்பட்டி போயிருக்காங்களாம்.”
“நல்ல ரோதனையாப் போச்சு. செத்தவங்களுக்கென்ன? அவுங்க போயிட்டாங்க. இருக்கிறவங்க களுத்து அறுபடுது “.
மழை வந்தேவிட்டது. ஹோவென்று . கூரை மேலும் பச்சைப் பந்தல் மேலும் இரைச்சலிட்டது. சுற்றிலும் கமுகு, தென்னை , தாழைப்புதூர் மேல் எல்லாம் கொட்டியதால் இரைச்சல் பலமாகக் கேட்டது. கியாஸ் லைட்டைத் திண்ணைமேல் தூக்கி வைத்தார்கள். திண்ணையில் அமர்ந்திருந்தவர்களின் தலை முண்டாசும், தலையும் பெரிய நிழல்களாகச் சுவரில் உருக்குலைந்து தெரிந்தன.
உள்ளே ஏதோ குழந்தை அடம்பிடித்து அழத் துவங்கியது. தாய்க்காரி பூச்சாண்டியைக் கூப்பிடுகிறாள். பிய்த்து எறிவேன் என்கிறாள். ‘சனியனே , உயிரை வாங்காதே’ என்கிறாள். குழந்தை நிறுத்தாமல் அழுகிறது.
எல்லோர் முகத்திலும் ,சலிப்பும், விசாரமும், பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்ற்ன. தலை நரைத்த முக்கியஸ்தர்களுக்கு யாரை, என்ன பேசி, நிலைமையை ஒக்கிட்டு வைப்பது என்று தெரியவில்லை. எல்லாரும், இருட்டாக நிறைந்து கிடக்கும் வயலின் வரப்புப் பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மழை சட்டென்று ஓய்கிறது. இரைச்சல் அடங்குகிறது. கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. முற்றத்தில் தண்ணீர் தேங்கி வழிந்து போகிறது.
இதற்குள்ளியும் பாடை தயாராகி , உடம்பு சிவப்புப் பட்டு மூடிக்கொண்டு , நீட்டி நிமிர்ந்து- பந்தலில் தயாராகி இருந்தது. நீர்மாலைக்குப் போன புத்திரர்கள் இரண்டு பேரும், மழையில் குளித்துத் தலைமேல் வெண்கல ஏனத்தைச் சுமந்து கொண்டு, பிணத்தின் தலைமாட்டில் வந்து, முக்காடிட்ட முண்டச்சி போல நின்றார்கள்.
‘பொம்மனாட்டிங்க குலவை போடுங்க தாயீ. அதுக்கும் சொல்லியா தரவோணும்?’ என்று தலையாரி குரல் கேட்க, தாமதித்து நின்றவர்கள் போல் கிழவிகள். கொலு கொலுவென்று ஒப்பாரி போலவே குலவையிட்டார்கள். இருட்டில் ஒதுங்கி நின்றவர் ஒன்றிரண்டு பேர் கூடப் பந்தலுக்குள் வந்து திண்ணையில் நுழைந்தார்கள்.
‘வாய்க்கரிசி போட இன்னும் , உள்ளே பொம்மனாட்டிக இருந்தா வந்து போடலாம். நேரமிருக்குது” என்றார் தலையார்.
” அட அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சே. இன்னும் புதுசாத்தான் ஆரம்பிக்கோணும். புறப்படுறதை விட்டுப்பிட்டு , அடியைப்புடிடா ஆபயாண்டீன்னு முதல்லே இருந்தே ஆரம்பிக்கோணுமா? தம்பி , சின்னத்தம்பு உன் கைக்கடியாரத்தலே மணியென்ன இப்போ?”
“ மணியா? அதெல்லாம் ரொம்ப ஆச்சு. ஒம்போது ஆகப்போவுது. எப்போ நாயனக்காரங்க வந்து எப்போ பொறப்படபோறமோ?’
எல்லோரது கண்களும் வயல் வரப்பையே பார்த்துக் கொண்டிருந்தன . இப்போது – மரண சம்பவத்தை விட , நாயனந்தான் முக்கியப் பிரச்சனையாக அத்தனை பேர் மனத்திலும் பெரிய உருக்கொண்டு நின்றது.
“யாரோ வர்ராப்போல இருக்குதுங்களே” என்று ஒரு குரல் தொலைவில் இருட்டுப்பாதையைப் பார்த்துச் சந்தேகப்பட்டது.
“ஆமாண்ணோவ், வர்ராங்க போல , யாரப்பா அது வெளக்கை சித்தெ தூக்கிக்கொண்டு போங்களென். மழையிலே சகதியும் அதுவுமா கெடக்குது. சின்னண்ணன் தான், தோள் அசைப்பைப் பார்த்தா தெரியுதில்லே”.
எல்லாரது முகங்களும் தெளிவடைந்தன. இடுப்பு வேஷ்டியை முறுக்கிக்கொண்டு, முண்டாசைச் சரி செய்துகொண்டு எல்லாரும் எழுந்து தயாராகி நின்றனர். சில ஆண் பிள்ளைகள் உள்ளே பெண்களிடம் போய் விடை பெற்று வந்தனர். உள்ளே விட்டிருந்த அழுகை ‘யங்கப்போ’ என்று பின்னும் ஈனமாக எழுந்தது.
கியாஸ் விளக்கு வட்டத்தில், சின்னண்ணனும் வடிவேலுவும் வென்றுவந்த வீரர்கள் போல நின்றனர்.
“ அட , மேலாத்தூரிலே போனா அங்கே ஒரு ஈ, காக்கை இல்லெ. படு ஓட்டமா ஓடினோம். வீரண்ணன் சேரியிலே, ஒரு நல்ல வித்வான். மாரியம்மன் கொடையப்போ கூட நம்மூருக்கு வந்து வாசிச்சான். முனிரத்தினம்ன்னு பேரு . எப்படியும் அவரெ இட்டாந்திராலாம்ன்னு போனா. மனுசன், சீக்கா படுத்த படுக்கையா கெடக்கிறான். விடா முடியாதுன்னு, சைக்கிளைப் உடிச்சோம். தட்றாம்பட்டுலே, தோ… இவங்களெத் தான் புடிச்சுக் கொண்ணாந்தோம். சமத்திலே ஆள் ஆம்பிட்டதே தம்பிரான் புண்ணியமாப் போச்சு.”
எல்லோரும் பார்த்தார்கள்.
காய்ந்து போன மூங்கில் குழாய் போல, சாம்பல் பூத்த நாயனத்தை வைத்துக்கொண்டு , மாறு கண்ணும் குட்டைக் கிராப்பும், காவி மேலாப்புமாக, ஒரு குட்டை ஆசாமி, ‘இவனா?’ என்று கருவுவதற்குள் , ‘இவனாவது அந்த நேரத்தில் வந்து தொலைஞ்சானே’ என்ற சமாதானம் , எல்லாருக்கும் வெறுப்பை மிஞ்சி எட்டிப் பார்த்தது. தவுல்காரன், அடுப்படி, தவசிப்பிள்ளை மாதிரி வேர்க்க விறுவிறுக்க , ‘ஐயோ’ என்ற பார்வையில், முன்னால் வரமாட்டேன் என்று பின்னால் நின்றான்.
‘வெட்டியானெக் கூப்பிடுறது. நெருப்பெல்லாம் ரெடி..சங்கை ஊதச்சொல்லு பொறப்படலாமா? உள்ளே கேட்டுக்கோ.’
தாறுடுத்திக் கொண்டு பாடைப்பக்கம் நாலுபேர் தயாரானார்கள். கருமாதிக்கான பிள்ளைகள் இரண்டும், பெரியவன் தீச்சட்டியை வெட்டியான் கையிலிருந்து வாங்கிக் கொண்டான். சின்னவன், ஈர உடையில் , வெட வெடவென்று நடுங்கிக்கொண்டு , பெரியவன் பின்னால் செய்வதறியாமல் நின்றான்.
“பொறப்படுங்கப்பா. தூக்கு” என்ற கட்டளை பிறந்ததும் தாறுடுத்த நால்வரும் பாடையின் பக்கம் வந்தார்கள். உள்ளேயிருந்து பெண்கள், முட்டிக்கொண்டு தலைவிரி கோலமாக ஓடிவந்தார்கள். “யெங்களெ உட்டுட்டுப் போறீங்களே?” என்று கதறல் சகதியும் அதுவமாகக் கிடந்ததினால் விழுந்து அழுவதற்கு எல்லாரும் தயங்கினார்கள். பெண் மட்டும். ‘ங்கப்போ எனக்கினி யாருருக்கா” என்று பாடையின் கால்மாட்டில் வந்து விழுந்தாள்.
”கோவிந்தா!கோவிந்தா!” என்ற கோஷத்துடன் பாடை தோளில் ஏறிற்று. “யாருப்பா அது நாயனம். உம் … சும்மா உங்களைப் பார்க்கவா கூட்டியாந்தோம் முன்னாடி போங்க. வெளக்குத் தூக்கறவன் கூடவே போங்க. மோளத்தைப் பிடிங்க..”
நாயனக்காரன் முகம் பரிதாபமாக இருந்தது. அழைத்துவந்த வேலண்ணன் அவன் காதருகில் எதோ சொன்னான். நாயனக்காரன் மெல்ல உதட்டில் வைத்து, “பீ ப்பீ.. ‘ என்று சுத்தம் பார்த்தான். ஊர்வலம் , சகதி வழுக்கும் வரப்புப்பாதையில் போய்க்க்கொண்டிருந்தது. கியாஸ் விளக்கின் ஒளியில் எல்லார் நிழலும் தாழைப் புதரின் மேலே கமுகு மர உச்சி வரை தெரிந்தது.
’கூ..ஊஉ..ஊஉ..’ என்றூ, வெட்டியானின் இரட்டைச் சங்கு அழுதது. நாயனக்காரன் வாசிக்க ஆரம்பித்திருந்தான். ‘பீ..பீ’ என்ற அவலம் பரிதாபகரமாக இருந்தது. தவுல்காரன் சந்தர்ப்பம் தெரியாமல் வீறிட்ட குழந்தைபோல-வாத்தியத்தைத் தொப்புத் தொப்பென்று மொத்தினான்.
விவஸ்தை கெட்ட மழை. வருதடி வைத்த அலமங்கலும், கீழே வழுக்கும் வரப்புப் பாதையும், தாழைப்புதரும், கௌமுகின் தோப்பின் உச்சியில் தங்கி நின்ற குளிர்ந்த இருட்டும், மரணமும் , பசியும், அசதியும், வெறுப்பும்,துக்கமும், எரிச்ச்சலும், கோபமும், எல்லாருடைய உள்ளங்களிலும் நாயனத்தின் கர்ண கடூரமான அபஸ்வரமாக வந்து விழுந்து வயிறெரியச் செய்தது.
கியாஸ் விளக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது.தீச்சட்டியில் குமைந்த வறட்டியின் புகையால் சங்கு ஊதுபவன் செருமினான். அனைவரும் பேச்சற்ற அவல உருவங்களாக நிழல்களை நீளவிட்டு நடந்து கொண்டிருந்தார்கள்.
‘பீப்பீ..பீ..பீ’
எல்லாருக்கும் வயிற்றைப் புரட்டியது. நெஞ்சில் ஏதோ அடைத்துக் கொண்டது போல சிரமமாக வந்தது. தலையைப்பிய்த்தது.
பின்னும் , ‘பீ..ப்பீ..பீ..பீ!
ஊர்வலம், ‘சனியனே’ என்ற பாவனையில் அவனையே பார்த்துக்க் கொண்டு வழி நடந்தது. யாராருக்கெல்லாமோ பாதை வழுக்கியது. பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன், சக்தி தேங்கிய பள்ளத்தில் விழுந்தான். உடன் வந்த ஒருவர் , அவனைத் தூக்கிவிட்டுவிட்டு . ‘நீயெல்லாம் அங்கே எதுக்கோசரம் வரணும் , சனியனே?” என்று எந்த எரிச்சலையோ அவன் மேல் கோபமாக் கொட்டினார்.
ஆற்றங்கரை வரப்பு ஆரம்பமாகியிருந்தது. சிள் வண்டுகளின் இரைச்சல் கேட்டது. அக்கரையில், கடந்து வஞ்சித்துறையிலிருந்து தவளைகள், ‘குறோம் குறோம்’ என்று எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. குட்டி குட்டிக் கறுப்புப் பன்றிகள் போலப்பாறைகள் நிறைந்த ஆற்றில், புதுவெள்ளம் இரைச்சலோடு ஒழுகும் அரவம் கேட்டது. குளிர் , இன்னும் விறைப்பாக உடல்களைக் குத்திற்று.
சுடுகாட்டுத் தூரம் தீராத் தொலைவெளியாகத் தோன்றியது. இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’
நாயனக்காரன் பக்கமாகத் தலை முண்டாசோடு வந்து கொண்டிருந்த தலையாரி முத்தன் , அவனையும் அந்த நாயனத்தையும் ஒரு முறை வெறித்துப் பார்த்தார். கியாஸ் லைட்டின் மஞ்சள் வெளிச்சத்தில் உப்பென்று மூச்சு நிறைந்த கன்னங்களுடன், நாயனக்காரனின், அந்தப் பொட்டைக்கண் முகம், எரிச்சலை இன்னும் வளர்த்தது.
இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’
”படவா ராஸ்கல். நாயனமா வாசிக்கிறே?” தலையாரி முத்தன் ரொம்ப முரடு. அவரது அதட்டலை பாடை தூக்கிக்கொண்டு முன்னால் போய்க் கொண்டிருந்தவர்கள் கூடத் தயக்கத்தோடு திரும்பி நின்று செவிமடுத்தனர்.
அவ்வளவுதான்!
தலையாரி, நாயனக்காரன் பிடரியில் இமைக்கும் நேரத்தில் ஒரு மொத்து. ஆற்றில் துணி துவைப்பது மாதிரி ஒரு சத்தம். நாயனத்தை அப்படியே இழுத்துப் பறித்து கால் மூட்டின் மேல் வைத்து , இரண்டு கைகளாஅலும், ‘சடக்’ இரண்டு துண்டு ! புது வெள்ளமாகச் சலசலத்து ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் இருட்டில் நாயனத் துண்டுகள் போய் விழுந்தன.
‘ஒடிக்கோ பயமவனே, நாயனமா வாசிக்க வந்தே? நின்னா உன்னையும் முறிச்சு ஆத்திலெ வீசி யெறிஞ்சுடுவேன்.”
ஊர்வலம் தயங்கக் கொஞ்சம் நின்றது. எல்லார் முகத்திலும், ’முத்தண்ணே நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு தங்கக் காப்பு அடிச்சுப் போட்டாலும் தகும்’ என்ற திருப்தி பளிச்சிட்டது.
“என்ன நின்னுட்டீங்க?- போங்கப்பா தோ மயானம் வந்தாச்சே, நல்ல நாயனக்காரனெ கொண்ணாந்தீங்க”.
இதைக் கேட்க நாயனக்காரனும் தவுல்காரனும் வரப்பு வெளியில் இல்லை. ஆற்றின் இடப்பக்கம் சந்தின் இருட்டில் இறங்கித் தெற்குப் பார்த்த பாதை வழியாக , இரண்டு பேரும் ‘செத்தோம் பிழைச்சோம்’ என்று விழுந்து எழுந்து ஓடிக்கொண்டிருந்தனர்1
விடாப்பிடியாகக் கழுத்தை அழுத்திய சனியன் விட்டுத் தொலைத்த நிம்மதியில் ஊர்வலம் சுடுகாட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.