Wednesday 3 April 2019

கதாநதி - பிரபஞ்சன்

 

 

 

கதாநதி 1: சூடாமணி - உளவியல் கலைஞர்

வளர்ப்புப் பூனை வீட்டுக்குள் சாவதானமாக, எப்பக்கமும் திரும்பாது நடந்து வந்து, நீங்கள் அமர்ந்திருக்கும் சோபாவின் மேல் தாவி ஏறி, உங்கள் மடியில் தலை வைக்கும்போதுதான் பூனையையே நீங்கள் பார்ப்பீர்கள். பூனை சத்தம் எழுப்பாது. அறிவுக்கும் ஞானத்துக்கும் சத்தம் சத்ருவாகவே இருக்கிறது. மனம், இன்னொரு மனதைச் சத்தம் போட்டுக்கொண்டு தொடுவதில்லை. மவுனம் என்ற சக்திவாய்ந்த மொழியை நாம் அறிவோமே!
எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் (1931 2010) கதைகள் , தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் முக்கியமான இடம் வகிப்பவை. சூடாமணியின் கதைகள் தமிழ், இந்திய விழுமியங்களின் வேர்களின் நிலை கொண்டு, மாற்றங்களை உட்செரித்துக் கொண்டு வெறுப்புகள் இல்லாத மனோ நிலைகளைக் கட்டமைக்கும் தத்துவப் பார்வை கொண்டவை. சத்தம் போட்டு பேசாதவை. பூனையின் காலடிகள் சத்தம் எழுப்புவதில்லை.
சூடாமணியின் தோள் பையில் பல உலகங்கள். அவரது கைவிரல்கள் போல அவருக்கு நெருக்கமானவை. அதில் ஒன்று குழந்தைகளின் அற்புத உலகம்.
யமுனா, கந்தனுடன் பாண்டி ஆடிக் கொண்டிருக்கிறாள். அம்மா, காரடையான் நோன்புக்கான சரடு கட்டிக்கொள்ள அழைக்கிறாள். எனக்கு எதுக்கு சரடுஎன்கிறாள் யமுனா.
‘‘நல்ல புருஷன் கிடைத்து, அவன் ஷேமமாக இருப்பான். அதுக்குத்தான்.’’
‘‘எனக்கு எட்டு வயசுதானே ஆகிறது. அக்காக்கள் கல்யாணம் ஆனவர்கள். அவர்கள் கட்டிகிடட்டுமே.’’
கடைசியில் யமுனா, கட்டிக்கொள்ள வேண்டி இருந்தது. அவளுடைய சினே கிதன் கந்தனுக்கு உடம்பு திடுமென சரியில்லாமல் போயிற்று. நாளுக்கு நாள் நோய் முற்றிப் படுத்த படுக்கையானான். கந்தனின் தந்தையிடம் அவள் தாத்தா மருந்து கொடுத்துக் கந்தனுக்குத் தரச் சொன்னார். யமுனாவின் அப்பா, இங் கிலீஷ் டாக்டரை ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அம்மா, நாட்டு வைத்தியரை அழைக்கச் சொன்னாள். பாட்டி, திருப் பதிக்கு வேண்டச் சொன்னாள். யமுனா யோசித்தாள். அவள் கையில் கட்டிய சரடு அவளுக்குப் புதிய எண்ணத் தைக் கொடுத்தது. அவள், கந்தனுக்கு மனைவி ஆகிவிட்டால் புருஷனை சரடு காப்பாற்றிவிடுமே! அவள் பெருமா ளிடம் நான் கந்தனைக் கல்யாணம் பண் ணிக்கொள்கிறேன். என் வரப் போகிற புருஷனைக் காப்பாற்றிவிடுஎன்று வேண்டிக்கொள்கிறாள். கந்தன் பிழைத் துக் கொண்டான். மருந்து, இங்கிலீஷ் டாக்டர், நாட்டு வைத்தியர், வெங்கடா சலபதி எல்லோருமே கந்தன் பிழைத்த துக்கு உரிமை கொண்டாடினார்கள்.
யமுனா பெருமிதப் புன்னகைப் பூத் தாள். அவளுக்குத் தெரியும், கந்தன் பிழைத்தது எப்படி என்று. அவள் பெரு மாளை மகிழ்ச்சியோடும் நன்றியோடும் நினைத்து, ‘உனக்குப் பாண்டி ஆடத் தெரியுமா? தெரிந்தால், வாயேன் உன்னை முதலில் ஆட விடுகிறேன்என்று பெருமாளை ஆட அழைக்கிறாள்.
தி.ஜானகிராமனின் சிலிர்ப்புதரத்தில் சூடாமணி, குழந்தைகள் பற்றிய பல கதைகள் எழுதியிருக்கிறார். குழந்தை களின் நீள அகலம் பற்றி, படிப்பு பற்றிக் கவலைப்படும் பெற்றோர் அவர்களின் உலகத்துக்குள் பிரவேசித்து அவர்களின் அசலான அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதே இல்லை என்பது சூடாமணி யின் கவலை.
ஐம்பது அறுபதுகளில் பெண்கள் உயர் கல்வி பெறுவதில் அத்தனை சிரமம் இல்லை. கல்வி, அத்துடன் வேலை வாய்ப்பு, உலக அறிவு, பொருளாதாரச் சுதந்திரம் என்பது போன்ற பல கதவுகள் பெண்களுக்குத் திறந்து வைக்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றோர் பொறுப்பிலிருந்து, காதல் மற்றும் கல் யாணத் தேர்வுகள் பெண்களின் சுதந்திரப் பரப்புக்குள் வந்து சேர்ந்தன. முன்னேற் றம் நோக்கிய இந்தச் சமூக மாறுதலைச் சூடாமணி மிக கவனமாக தன் கதைகளில் கையாண்டார். அவரது மிகச் சிறந்த கதைகளின் ஒன்று நான்காம் ஆசிரமம்.அக்காலத்தில் (1972) மிகப் பெரிய தாவலை நிகழ்த்திக் காட்டியது.
தன் மனைவி சங்கரியை மயானத்தில் எரித்து, துயரத்தோடு திரும்பி நடக்கிறார் புரொஃபஸர் ஞானஸ்கந்தன். அப்போது சங்கரியின் முன்னாள் கணவன் மூர்த்தியைப் பற்றியும், அவளுடைய முதல் கணவனும் முதல் காதலனுமான மனோகரனைப் பற்றியும் உரையாடு கிறார்கள். பதினாறு வயதில் காதல் என்று எதையோ எண்ணிக்கொண்டு மனோகரனைத் திருமணம் செய்து கொள்கிறாள் சங்கரி. அத்திருமணத்தை வாழ்த்தியவர் அவள் தந்தையின் நண்பரான பேராசிரியர் ஞானஸ்கந்தன். பின்னர், மூர்த்தியைக் கைப் பிடிக்கிறாள். இரண்டு குழந்தைகளைப் பெறு கிறாள். திடுமென அதையும் துறந்து, 58 வயதான பேராசிரியரை விரும்பு கிறேன்என்று சொல்லித் திருமணமும் செய்துகொள்கிறாள். பிறகு, அவரிடம் இருந்து விவாகரத்து கேட்கிறாள். பேரா சிரியர் விவாகரத்து கொடுக்கவில்லை. ஏன் எனில், அவர் அவளைத் துறக்க விரும்பவில்லை. சங்கரி, தன் முடிவைத் தானே தேடிக்கொள்கிறாள்.
பதினாறு வயதில் அவளுக்கு ஏற்பட்ட பருவம் சார்ந்ததும் கனவு சார்ந்ததும் ஆன, வசீகரத் துளிர்ப்பில் மனோகரன் அவள் காதலன் ஆனான். கனவு கலைந் தது. பின், அவள் உடம்பு அவளிடம் யாசிக்கிறது. அவள் மூர்த்தியை மணந்து இரண்டு குழந்தைகளையும் பெறு கிறாள். பின்னர், உடம்பு எல்லாம் ஒன்று மில்லை என்ற புரிதலில் அறிவும் ஞான மும் அவளை அழைத்துச் சென்று பேராசிரியரிடம் சேர்க்கிறது. அவர்கள் புத்தகம், வாசிப்பு, தத்துவம் என்று உலகை விசாலிக்கிறார்கள். அதே சமயம், சங்கரிக்கு றெக்கை துளிர்க் கிறது. பேராசிரியருக்கோ சங்கரியோடு சேர்ந்த வாழ்க்கை வேர்விட்டுப் பூமிக் குள் பிரவேசிக்கிறது. மனிதர் தனியாகத் தானே வந்தோம். தனியாகத்தானே போக வேண்டும். தனிமைதானே நிரந்தரம். எனக்குத் தனிமை வேண்டும்என்கிறாள் சங்கரி. பேராசிரியர் அவளைப் பிரிய மறுக்கிறார். அவள் நிரந்தரமாகப் பிரிந்தே போகிறாள்
சங்கரியின் வளர்ச்சியை ஆசிரமம் என்கிறார் சூடாமணி. பிரமச்சரியம், இல்லறம், துறவு, வானப்பிரஸ்தம் என்பது போல, இது சங்கரிக்கு ஏற்பட்ட ஆசிரமம். தனியாக இருந்து பூரணம் பெற நினைக்கிறாள் அவள். அவளுக்கு அவள் போதும், அவள் அவளோடு மட்டும் உரையாடி, உறவாடி தன்னுள் இருக்கும் சங்கரியைக் காண அவள் விரும்புகிறாள்.
தனியாக இருப்பது, தனியாக வாழ்வது சிரம அனுபவமாகவே இருக்கிறது. பறவைகளை தவளைகள் விரும்புவதில்லை.
இது பால் தொடர்பான கதை இல்லை. வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்கலாம். இது வேதாந்தமும் இல்லை. ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம்சிறுகதையுடன் இக்கதையை பேசுகிறார்கள். அக்கதை, அக்காலத்தில் பெரிய உரையாடலை ஏற்படுத்தியது. இக்கதை, அக்காலத்தில் பெரிய விவாதங்களை எழுப்பியது. எனினும், கலை, நுணுக்கம், சமூக அவதானம், இலக்கியத் தரம் என்ற வகையில் நான்காம் ஆசிரமம்கதை தமிழில் நிலைத்திருக்கும். ஜெயகாந்தன் கதை உடம்பின் பிரச்சினை பற்றிப் பேசுகிறது. சூடாமணியின் கதையோ, உடம்பைக் கடப்பதைப் பேசுகிறது.
1954 தொடங்கி 2004 வரை சுமார் 574 சிறுகதைகள் எழுதியிருக்கிறார் சூடாமணி. வெளி உலக அனுபவங்கள் அவருக்குக் குறைவு. அக வெளியை நிறைத்துக்கொண்டு, மனித மனசஞ் சாரங்களில் எழுத்துப் பயணம் செய்தார். அவரைப் போன்ற சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள் தனித்திருப்பது அரிது. ஆனால் சூடாமணி அன்பில் களித்தார். அறிவிலும் ஞானத்திலும் உள்ளொளிப் பெருக்கிக் கொண்டர்.
1967-ல் சூடாமணி நீயே என் உலகம்என்று ஒரு கதை எழுதினார். அதில், ஒருவனுக்குப் பெரும் செல்வம் கிடைக்கிறது. அதை ஏற்கலாம் என்று யோசிக்கிறான். தன்னுடையதல்லாத அதை எப்படி செலவழிப்பது என்றும் நினைக்கிறான். கடைசியில் அறப்பணிக்கு நன்கொடை அளிக்கிறான். ‘‘பணத்தைக் கொடுத்து பொருள் வாங்குவார்கள். நான் சமர்த்தனான வியாபாரி. நான் பணம் கொடுத்து இளம் முகங்களின் புன்னகையை வாங்கப் போகிறேன்’’ என்கிறான்.
சூடாமணி 2010-ல் காலமானபோது, பல கோடி ரூபாய் அறச் செயலுக்கு அளித்துச் சென்றார். அவரால் பலன் பெறும் மாணவர்கள், மருத்துவப் பயனாளிகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூனையின் இயல்பு மென்மையானது. ஆனால் இருப்பு வலிமையானது.
கதைகள், கற்பனைகள் என்று நாம் சொன்னாலும், அவற்றைப் படைத்தவர்களையே அவை இனம் காட்டுகின்றன. கதைகள் கண்ணாடிகள். எழுதியவர்களின் முகத்தையே அவை காட்டுகின்றன. கண்ணாடிகள் பொய் சொல்வதில்லை.
- நதி நகரும்

 

 

கதாநதி 2: சார்வாகன் - வீழ்ச்சிகளை எதிர்த்த மேன்மை

ஹரி சீனிவாசன் என்ற பெயர் கொண்ட மருத்துவ டாக்டர், சார்வாகன் என்ற புனைப் பெயரில் கவனிக்கத்தக்க சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்தார். தாமரை, எழுத்து, ஞானரதம், பிரக்ஞை போன்ற இலக்கிய பத்திரிகைகளில் அவர் கதை கள் வெளிவந்தன. அக்கதைகளுக்கு நான் ரசிகன்.
வாழ்க்கையை, அதன் சமதளத்தில் விசாரியாமல், நுண்தளத்தில் பார்த்து எழுதியவர். அவர் கதைகளின் அடிப்படை பண்பு அங்கதம்.
சார்வாகன் என்ற பெயர், மிகப் பழங்காலத்துத் தத்துவவாதியைக் குறிப்பது. அவன் நாஸ்திகனாக, கடவுள் மறுப்பாளனாக இருந்து அக்காலத்தில் அதிர்வூட்டியவன். வாசகன், அந்தப் பெயரால் கவரப்படக் கூடும். தனி மனித வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் புரையோடிய பொய்மைகளை மிதமான தொனியில், கலை வரம்புக்கு உட்பட்டு எழுதியவர் சார்வாகன்.
சின்னூரில் கொடியேற்றம்என்று ஒரு கதை. ராமாஞ்ஜுலு நாயுடு என்கிற அந்தக் காலத்துகாங்கிரஸ்காரர், சுதந்திரத் தினத்தில் கொடியேற்றப் புறப்படுகிறார். அந்தக் காலத்துக் காங்கிரஸ்காரர் என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தங்கள் இருப்பது வாசகர் களுக்குப் புரியும். அந்தக் காலம் என்பது சுதந்திரத்துக்கு முந்தைய, விடுதலையை முன்வைத்து வீரர்கள் போராடிக்கொண்டிருந்த காலம். அரசியல் என்றால் அடி, சிறை என்பது அர்த்தமாக இருந்த காலம். நாயுடு அப்படிப்பட்டவர்.
ஒரு ஆண்டு சிறை வாசம் அனுபவித்தவர். சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் பொதுத் தேர்தல் வந்த போது, தன்னை வேட்பாளராகக் கட்சி நிறுத்தும் என்று அவர் எதிர்பார்த்தார். என்ன அப்பாவி பாருங்கள், அந்த மனிதர். ரத்தம் சிந்த ஒருத்தன், பதவி சுகம் காண இன்னொருத்தன் என்பதுதானே சுதந்திர இந்தியாவின் நியதி? நாயுடு ஒதுக்கப்பட்டுவிட்டார். என்றாலும் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, சின்னூர் நகரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆக்கப்பட்டுவிட்டார். அந்த ஹோதாவில் கொடி ஏற்றவும் புறப்பட்டுவிட்டார். அவர் மகனுக்கு, இது, இந்த வயசில் அனாவசியமான வேலை என்று தோன்றுகிறது.
ஆனால், நாயுடு நன்மைகளை மட்டும் மேய்ந்து வாழும் சாதுப் பசு. அவர், ‘யோக்யன் எல்லாம் ஒதுங்கிப் போயிட்டா, தேசம் குட்டிச் சுவராய்த்தானே போகும்என்று (ஏதோ தேசம் மணிமாளிகையாக இருப்பது போல) பேசுகிறார்.
மார்பளவு காந்தி சிலை. அவரைச் சுற்றி இரும்பு வேலி. காந்தி விரும் பினாலும் சின்னூரைவிட்டு வெளியேற முடியாது. இங்கிலீஷ் பேண்டு காதைத் துளைத்தது. ஒருத்தன், இடது கையால் காந்தியின் நெற்றியில் குங்குமம் பூசுகிறான். நாயுடு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து வெள்ளையனோடு போராடிய நாம் இப்போது விலைவாசி ஏற்றத்தோடு போராடிக்கொண்டிருக்கிறோம்' என்று ஆரம்பிக்கும்போது, பெரும் கூப்பாடு எழுந்தது. ஒருவர் தின்பண்ட விநியோகம் செய்ததைத் தொடர்ந்து கூட்டம் அவருக்கு முன் கை ஏந்திப் பெரும் கூச்சல் செய்தது. வெற்றிகரமாக நாயுடு பேச்சை முடித்துக்கொண்டார்.
மூவர்ண மிட்டாய் வழங்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அந்த பேண்டு மட்டும் திரும்பத் திரும்ப, ‘இட்ஸ் எ லாங் லாங் வே டு டிப்பரேரிஎன்ற ஐரிஷ் பாடலின் முதல் வரியை வாசித்துக்கொண்டிருந்தது.
அழகான சொல்முறையோடு வளர்ந்து அழகாக முடியும் கதை இது. இப்படியான கதைகள் பல சார்வாகனிடம் இருக்கின்றன. பாரதி சுதந்திரத்துக்கு 30 ஆண்டுகளுக்கும் முன் வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று…’ என்று எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. எல்லாம் தாழ்வுற்று என்றார். அரசியல், அறம், பண்பாடு முதலான பல சமூக விழுமியங்களும் தாழ்வுற்றுவிட்ட இந்தியா, அதன் காரணகர்த்தாவான ஆங்கிலேயர் பற்றி பாரதி கவனம் கொள்கிறார். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியா பற்றிப் பாரதி அறியாதது, அவரது பாக்கியம். ஆனால், சார்வாகன் இந்தக் காலத்து எழுத்தாளர். அவர் அதை எழுதுவது அவர் கடமை. மிகக் கூர்மையான தொனியில், ஆனால் கூர்மை தெரியாத விதத்தில் அங்கதத் தொனியில் எழுதி இருக்கிறார். அந்தத் தொனியில் எழுதிய மிகச் சிலரில், முக்கியமானவர்.
தபால்காரக் கதிர்வேலு பற்றிய ஒரு கதை. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் ஊடாக ஊசலாடும் அப்பாவியின் கதை. சார்வாகனின் வசனத்துக்கு உதாரணமாக சில வரிகள்:
தபால்காரக் கதிர்வேலு ரொம்பச் சாதாரணமான மனுஷன்தான். தன் வேலையைத் தனக்குத் தெரிந்த முறையில் நாணயமாகச் செய்து நல்ல பேர் வாங்கி, பெரியதொரு குடும்பத்தைப் பெற்றெடுத்து வளர்த் துக்கொண்டு, நல்லநாள் என்றைக் காவது வராதா என்ற நம்பிக்கையில் ஓட்டிக்கொண்டு தவம் செய்யும் லட்சோபலட்ச ஜனங்களில் அவரும் ஒருவர். அவரைக் குற்றம் சொல்வதற் கில்லை. யாரையும் குற்றம் சொல்வதற் கில்லை. அவர் பிறந்த வேளை அப்படிப் பட்டது போலும். ஆனாலும், நாட்டிலே இருக்கிற முக்காலே மூணு வீசம் ஜனங்களும் அதே வேளையில்தானா பிறந்திருக்க வேணும்!
சார்வாகன் எத்தனை நம்பிக்கை களை, மரபுகளை, நிறுவனப்பட்ட வாழ்க்கை முறைகளை இடித்துக் கொண்டு நடக்கிறார். நடந்தபடி விதைத் தூவுவது போல எத்தனைகளைத் தூவுகிறார். கிண்டல் இல்லை, நகைச்சுவையும் இல்லை இந்தத் தொனி. நடுத்தர வர்க்கத்தை விமர்சிக் கும் தாட்சண்யத்தோடு கூடிய தொனி அது. சரி, நபர் எப்படி?
கதிர்வேலு, அலுவலகப் பணி போக, ஒழிந்த நேரத்தில் கனவு காண்பார். கனவுகள் காணக் காசு தேவையில்லை. ஆகவே காண்பார். அசாதாரணக் கனவுகள். டார்ஜான் போல பயங்கர மிருகங்கள் மத்தியில் அவர் வாழ்வார். சிந்துபாத் போல, விக்கிரமாதித்த மகாராஜா போலஎல்லம்மாவுக்கு மணியார்டர் வந்திருக்கிறது. வழக்கம் போல அஞ்சு, பத்து இல்லை. சுளையாக ஐநூறு. வடக்கே போன மகன் அனுப்பியது. என்ன துரதிருஷ்டம் எல்லம்மா போய்இரண்டு மாதமாயிற்றாம். பாலு நாய்க்கர்தான் சொன்னார். பணமா? மணியார்டரா? பாலுவுக்கு உலகம் வர்ணமயமாகி இருந்தது. கிழவிக்கு இப்போ பணம் எதுக்கு? பணம் கொடுத்துவிட்டாற் போல கணக்குக் காட்டிவிட்டால் என்ன? கதிர்வேலு (சுரத்தின்றி) மறுக்கிறார். இத்தனைக் காலம் மரியாதையான வாழ்க்கையை (அவமரியாதையாக) வாழ்ந்துவிட்டு இப்போது? பாலு நழுவியபடி, ‘நான் தமாஷ்னா பண்ணேன். நமக்கெதுக்கு நாய்ப் பணம்?’ என்கிறார்.
நரி, தந்திரமான பிராணிஎன்று மனிதர்கள் பேசுகிறார்கள். எந்த நரி, இன்னொரு நரியை மோசம் பண்ணியது?
கதிர்வேலு, வண்ணமயமான கனவு காண்கிறார். ஐநூறு ரூபாய். வீட்டிலே இருக்கிறவளுக்கு புடவை. குழந்தைகளுக்கு ஆடைகள், சில்லறைக் கடன்கள் தீர்ந்து எத்தனை நிம்மதி. பணம் அனுப்பிய மகன், விபத்தில் மரணம் அடைந்தது என்கிற மணியார்டர் செய்தி, ஒரு பச்சைக்கொடி! பாலு வேறு மூளையில் குதிக்கிறான்.
தபால்காரர், மணியார்டர் படிவத்தை எடுத்து விலாசதாரர் காலமாகிவிட்டார்என்று எழுதித் தபால் ஆபீஸை நோக்கி நடக்கத் தொடங்கினார். பணத்தை ஆபீஸில் கட்ட வேணுமே!
சார்வாகனின் புகழ்பெற்ற குறு நாவல் அமரப் பண்டிதர்’. இது, அரசியல் தொடங்கி பல்வேறு தளங்களில் பயணப்பட்டு, ஒரு குள்ள மனிதனை அமரனாக்கி முடிகிறது. தொழுநோய் மருத்துவத்தில் பெரிய நிபுணர் சார்வாகன் என்கிற டாக்டர் சீனிவாசன். அதற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர். குறைவாகவே எழுதியவர். அது நல்லதும் கூட. குறைவாக எழுதியதில், நிறைவுடைய பல கதைகள் சார்வாகனின் பலம். மனித இயல்பை, இயல்பாக, பக்கச் சார்பு இன்றி பரிவோடு சொல்ல முயன்று வெற்றியும் கண்ட எழுத்தாளர் சார்வாகன். 1929-ல் பிறந்து மிக அண்மையில்தான் மறைந்தார். தமிழில் மறக்கக் கூடாத எழுத்தாளர் இவர்.
சார்வாகனின் 41 சிறுகதைகள், 3 குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு சார்வாகன் கதைகள் என்ற பெயரில், நற்றினை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- நதி நகரும்

 

 

 

கதாநதி 3: பாக்கியம் சங்கர் - வடசென்னையில் இருந்து ஒரு கலைக் குரல்

வடசென்னை என்பதும் மனிதர்கள் அடர்ந்து வாழும் பகுதிதான். என்ன சொன்னேன்? வாழும் பகுதி என்றா? அல்ல. வாழ முயற்சிக் கும் ஊர்தான். ஏனைய ஒரு மற்றும் தென் சென்னைகளின் சிலர் நினைப்பது போல கொசுக்கள், ஈக்கள், மூட்டைகள், பாம்பு தேள்கள் வாழும் ஊர் அல்ல. அங்கும் காதல், அன்பு, துரோகம், மது, வன்முறைகள் என்கிற மனித இலக் கணங்களோடு மானுட விவசாயம்தான் நடந்துகொண்டிருக்கிறது. திருவொற்றி யூர் மண்ணைத் திருநீறு என்றார் ஒரு அடிகள். ஒரு வள்ளலார் அங்கே தருமம் தழைதோங்குகிறது என்றார். அங்கேயும் புல் முளைக்கிறது. பூ பூக்கிறது. அப்புறம் என்ன வழக்கு?
தண்டையார்பேட்டை, வண்ணாரப் பேட்டை முதலான பல பிரதேசங்களில் எனக்குப் பரிச்சயம் உண்டு. என் நண் பர்களான கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் அங்கு தமிழ் முகத்தை நவீனமாக் கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர் களில் முக்கியமானவர் அண்மை வரவு கவிஞரும் எழுத்தாளருமான பாக்கியம் சங்கர். நான் வடசென்னைக்காரன்என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைத் தொகுதி, அவசியம் வாசிக்கப்பட வேண்டிய சுயமானம் தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத் தகுந்த படைப்பாக மிளிர்கிறது.
பாக்கியம் சங்கர் யாரை எழுதியிருக் கிறார்? பிச்சைக்காரர்கள் பற்றி, பாலியல் தொழிலாளி பற்றி, காமத் தரகர்கள் பற்றி, கானாக் கலைஞர் பற்றி, காதலர்கள் பற்றி, சுடுகாட்டில் எரியும் பிணத்தருகே காதல்செய்வோர் பற்றி, வேலை முடித்துத் தருவதாகக் கூறி, வியர்வைக் கூலி வாங்கும் அரசியல் தரகர்கள் பற்றி, படிக்க வேண்டிய பையன்களை போஸ்டர் ஒட்டவும் கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் இழிஞர்கள் பற்றி. இந்த உதாரணப் பட்டியல், இந்தக் கட்டுரைத் தொகுதி, ஏதோ வாசகர்களைக் கண்ணீர்த் தொட்டி யில் முக்கிச் சோப்புப் போடும் என எண்ண வேண்டாம். அந்த மனிதர்கள், தங்கள் சோகங்களுக்கு முன் கொண்டாட்டங் களை நிறுத்துகிறார்கள். தங்கள் வதை களுக்கு முன் அன்பை, கருணையை நிறுத்துகிறார்கள். இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு முன் இசையை நிறுத்துகிறார்கள். சாவுப் பாடைகளுக்கு முன் குத்தாட்டம் போட்டு மரணத் தின் முகத்தில் கரி பூசுகிறார்கள். பாக்கியம் சங்கர், இவைகளைத்தான் எழுதுகிறார்.
இல்லாமல்லி, பர்மா பஜாரில் புகழ் கொடி ஏற்றியவள். ஒரு மழைக்காலத்தில் வந்து சேர்கிறாள், கதை சொல்லியின் கடைக்கு. சாம்பல் நிறக் கண்கள். நதியா கம்மல். பாவாடைத் தாவணியில், இரட்டை சடை போட்டு குஞ்சலம் வைத்துக் கட்டியிருந்தாள். சற்றுப் பூசினாற்போல வாகு. தாவணியின் முனையைப் பிழிந்து கொண்டு கதை சொல்லியைப் பார்க்கிறாள்.
‘‘அலோ, சீத்தாராமன் எப்ப வரு வான்?’ என்று இவனிடம் கேட்கிறாள்.
‘‘இன்னைக்கு வரமாட்டார். என்ன விஷயம்?’’
‘‘ம்வேலையைப் பார்த்துட்டு காசு கொடுக்கல நாதாரி நாயி. காத்தால வரேன்னு சொல்லு. காசு கொடுத்தா வாங்கி வையிஎன்ன புரியுதா?’’
இவனுக்குப் புரிகிறது. முதலாளி யும் காசு கொடுத்துச் சென்றார். இல்லா மல்லியும் வந்து வாங்கிக்கொண்டு அதை எண்ணும்போது, இவனைப் பார்த்து ‘‘சாப்டியா?’’ என்கிறாள். ‘‘இல்லை’’ என்கிறான். ‘‘பிரியாணி சாப்பிட்றியா?’’. இப்படித்தான் இவனுக்கும் இல்லா மல்லிக்கும் நட்பு துளிர்க்கிறது. இலாவுக்குப் பிடித்த நடிகர் அர்ஜுன். ஏன்? அவர்தான் தீவிரவாதிகளிடமிருந்து இந்திய தேசத்தைக் காப்பாற்றுகிறார். பிடித்த பாடகர் சந்திரபாபு.
ஒருநாள் உடம்பு சரியில்லை என்று அவனுடன் மருத்துவமனைக்குச் சென்று திரும்பும் வழியில், காவல் நண்பர்களால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப் படுகிறாள். இலா மருந்து சீட்டை காட்டுகிறாள். கடமையே கண் என்று நம்புகிறவர்கள் நம் காவல் சகோதரர்கள். அப்புறம் விடுதலை பெற்று வருகிறாள் இலா. இவனும் அவளும் சரக்கு சாப்பிடுகிறார்கள். அவள் தொடையைக் காட்டுகிறாள். சூடு போட்டு சதை கண்ணிப் போயிருக்கிறது. ஏன் சூடு? சட்ட பரிபாலனத்தில் அப்படி ஒரு விதி இருக்கிறது. காலம் செல்கிறது. இவனுக்குப் பணமுடை. இலாவிடம் கேட்கலாம் என்று தரகருக்குப் போன் செய்கிறான். அப்போதுதான் தெரிகிறது இலா இறந்துவிட்டாள் என்பது. ஆஸ்பத் திரி பிணவறையில் இருந்தவளை இவனும் தரகரும் போய் பார்க்கிறார்கள். ஒரு கஸ்டமரோடு கடலில் குளிக்கப் போயிருக்கிறாள். அலை அவளைக் கொண்டு போயிற்று. ஒரு தொப்பிக்காரர் வருகிறார். ‘‘என்னய்யா, பாடியை நீ வாங்கிக்கிறியா, இல்ல அநாதைப் பொணம்னு ஃபைல் பண்ணிடவா?” என்கிறார். இவனால் அழத்தான் முடிந்தது. அவள் ஒரு காலத்தில் பாடி ஆடிக் காட்டிய சந்திரபாபுவின்
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை/காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை/ மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை/ சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை
பாடலில் கரைந்து நிற்கிறான் இவன்.
பிச்சைக்காரர்கள் பற்றி பாக்கியம் சங்கர் எழுதியிருக்கிறார். பிச்சைக்காரர் என்றதும் அழுக்கடைந்து, கை கால் களில் பஞ்சு வைத்துக் கட்டிக் குளிக் காமல்இல்லை. அப்படி இல்லை. வெளுத்த உடையும் புதுக் கைலியுமாக ஜொலிஜொலிப்புமாக இருந்தார் ஒரு பிச்சைக்காரர். பிச்சைக்காரர்கள் பற்றிய ஒரு படத்துக்கு நிஜப் பிச்சைக்காரர் களைத் தேடி அலைகிற குழுவில் நம் கதைசொல்லியும் இருக்கிறார்.
‘‘நடிக்க வர்றீங்களா?’’
‘‘எவ்ளோ தருவே?’’
‘‘மாசம் ஐயாயிரம். சாப்பாடு போட்டு.’’
‘‘ராஜாஇப்படி நிழல்ல உக்காந்து கினு காலாட்டிகினே பத்தாயிரம் ரூவா சம்பாரிச்சிருவேன். என்னைப் போய்க் கஷ்டப்படச் சொல்றியே…’’
இரு கால்களும் இல்லாத இன்னொரு பிச்சைக்காரர். பூக்கட்டும் மனைவி. அவர் பேசுகிறார். ‘‘பிச்சைனு யார்கிட்ட யும் கேக்கறதில்லை. கொடுத்தா வாங்கிக்கிடுவேன். பேத்திக்கு ஏதாச்சும் பண்ணிட்டோம்னா நிம்மதியா போய்ச் சேர்ந்துருவோம்…’’ அப்போது ஒரு பெண் பெரியவரை நோக்கி ஓடி வந்தது. கையில் ஒரு பொட்டலம் இருந்தது.
‘‘தாத்தா, முதலாளியம்மா கொடுத் தாங்க. நீயும் ஆயாவும் சாப்டுங்க, தேடுவாங்க. நான் போறேன்.’’
பாக்கியம் சங்கர் எழுதுகிறார்: துள்ளிக் குதித்து வந்து தாத்தாவிடம் கொடுத்த அந்தப் பொட்டலத்தில் அவள் அன்பைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்…’
அந்தப் பெண்ணின் பெயர் மோஸம். பருவநிலை என்று அதற்கு அர்த்தம். சில மாதங்களுக்குப் பிறகு, சங்கர் அந்த இடத்துக்குச் செல்கிறார். விசாரிக்கிறார். பெரியவர் சாலையைக் கடக்கும்போது விபத்தில் இறந்துபோனார். மனைவி, மோஸம் என்கிற பெண்ணை அழைத்துக்கொண்டு எங்கு போனாள்? தெரியவில்லை.
சங்கர் இப்படி எழுதுகிறார்: திரும்ப நடந்தேன். கையில் பொட்டலத்தோடு ஓடிவந்த மோஸத்தின் முகம் திரும்பத் திரும்ப வந்து போனது. மோஸம் இப் போது எங்கே இருப்பாள்? அவளுக்கு யாரைத் தெரியும்? வாழ்வின் சகல அவஸ்தைகளோடும் வாழ்ந்துகொண் டிருந்த அந்த எளிய ஜீவன்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? மோஸம் என்றால் பருவநிலை. ஏதாவ தொரு பருவநிலையில் மோஸத்தைப் பார்த்துவிட மாட்டேனா..?’
பாக்கியம் சங்கரின் மொழி, அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகு டையதாக இருக்கிறது. அசலான மனிதர் களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது. செய்யும் பணியில் தம்மை ஒப்புக் கொடுத்து, உண்மைகளை முன்வைத்து இயங்குகிறபோது, எழுத்து எழுதுபவர் நகங்களைப் போல உடம்பின் உறுப் பாகவே மாறிவிடும். சங்கருக்கு மாறியிருக்கிறது.
நான் வடசென்னைக்காரன்என்னும் இத்தொகுதி பாக்கியம் சங்கருக்கு சரி யான முகத்தையும், அடையாளத்தையும் கொடுத்திருகிறது. பாவைமதிபுத்தக வெளியீட்டு நிறுவனம் முதல் முயற்சியாக இப்புத்தகத்தை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
- நதி நகரும்...

 

 

 

கதாநதி 4: விடுதலை பேசும் கலைக் குரல் தமயந்தி

நடைபாதை ஓரத்தில் ஒரு பூ பூத் திருக்கிறது. நான் தினமும் நடக்கும் பாதை அது. நேற்று அது இல்லை. யாருக்காக அது பூத்துள்ளது? அந்த இருவருக்காக என்று தோன்றுகிறது. நேற்று சந்தித்து நட்புகொண்டு, நேசம் கொண்ட அந்த இருவருக்காக என்று நாம் நம்ப என்ன வழக்கு? பின் ஏன் பூக்க வேண்டும், பூ? அந்த இருவரின் சிநேகத்தில் மகிழ்ந்து அதைப் பாராட்டி வரவேற்கும் முகத்தான் அந்தப் பூ பூக்கிறது. உலகம் முழுக்க, மண் மேல் பூக்கள் ஆயிரம் ஆயிரமாய் ஏன் மலர வேண்டும்? அன்பின் நேச மனத்தைக் கொண்டாடத்தான். சரி. மலர்கள் ஏன் வாடி உதிர வேண்டும்? அந்த இருவர் ஒரு வரையொருவர் பகைத்துப் புண்படுத்தி விலகும்போதெல்லாம் மலர்கள் வாடுகின்றன. உதிர்ந்து போகின்றன.
மலர் உதிர்வது என்பது மனம் உதிர்வது. மனம் உதிரும்போதெல்லாம் பதைத்துப் போகிறார் தமயந்தி. ஏன் மனிதர்கள் பிணக்கு கொள்கிறார்கள்? இருவேறு தேசத்து ராணுவக்காரன் மாதிரி ஏன் பகைக்கிறார்கள்? பங்காளி கள் மாதிரி ஏன் வழக்கு பேசுகிறார்கள்? எதிரிகள் போல ஏன் வதை செய்ய வேண்டும்? சொற்களை எறிந்து ஏன் காயப்படுத்த வேண்டும்? புறக்கணிப்பு, அவமானம் என்பதெல்லாம் ஒரு கூரை யின் கீழ் தாம்பத்யம் என்ற பெயரில் நிலை பெற வேண்டும்தானா? தமயந்தி இந்தக் கேள்விகளோடு பயணம் செய்கிறார். எழுதும்போதும் இதையே எழுதுகிறார். எவையெல்லாம் அவரை இம்சிக்கிறதோ அவைகளை அவர் எழுதுகிறார். எனெனில் அவர் எழுத்தாளர்.
தமயந்தியை 1980-களின் கடைசிப் பகுதியில், அவர் கதைகளின் வழியே சந்திக்க நேர்ந்தது. அவசியம் படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என்பதை முதல் சில சிறுகதைகளிலேயே நினைக்க வைத்தார். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். கணவன், மனைவி, காதலன், காதலி, தந்தை, மகள், நண்பர், நண்பி என்கிற உறவுகளின் பிணைப்பு, எவ்வாறு நாளடைவில் வன்மம் கொள்கிறது? வன்முறை ஒரு வாழ்க்கை நிகழ்வே போல எப்படி உருமாற்றம் அடைந்து பெண்களைச் சிதைக்கிறது என்கிற புலத்தைத் தமயந்தி அளவுக்குக் காத்திரமாகச் சொன்னவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே ஆவார்கள். அவருக்குக் கூடி வந்திருக்கிற கலைத் திரட்சியும், வடிவ நேர்த்தியும், மொழி ஆளுமையும் தனித்வம் பொருந்தியவை.
அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்என்கிற தமயந்தியின் சிறந்த கதைகளைக் கொண்டிருக்கும் தொகுதியில் முகம்எனும் கதை இப்படி ஆரம்பிக்கிறது:
காலைல எழும்பி முகம் கழுவிவிட்டு பல் விளக்கி வாய் கொப்பளிச்சிட்டு கண்ணாடி பார்த்து தலையை கோத லாம்னு பார்த்தப்பதான் முகத்தைக் காணோம்னு புரிஞ்சுது. சட்டுனு ஏதோ ஒண்ணு பதைபதைக்க இன்னொரு முறை கெளரி கண்ணாடிய உத்துப் பாக் குறா. கண்ணு, மூக்கு, உதடு, நாடி எதுவுமே இல்லாம வெறும் சதைக் கோளமா இருக்கிற முகத்தை பார்த் தாலே மிரட்சியா இருந்துச்சு. கண்ணே இல்லாம எப்படி பார்க்க முடியுதுனு சத்தியமா இவளுக்குத் தெரியல...
தமயந்தி கதைகளின் மையம் அல்லது அகம் இப்படி இருக்கிறது. என்ன பண்ண? முப்பது நாளில் சிவப்பழகு பண்ணிக்கொண்ட பெண்ணைப் பற்றி, சீவி சிங்காரித்து வாசலில் ஸ்கூட்டர் சப்தத்தை எதிர்பார்த்து நிற்கும் குமாரிகள் பற்றி, நேத்திக்கு வாங்கின புடவைக்கு மேட்சாக பிளவுஸ் பிட் கிடைக்காத கவலையில் தோய்ந்த திருமதிகள் பற்றி எழுத நிறைய பேர்கள் இருக்கிறார்களே!
தமயந்தி, பெரும்பகுதி நிஜமானப் பெண்களின் பிரதிநிதியாக எழுத வந்து, நிஜமான பிரச்சினைகளை எழுதுகிறார்.
பிடிக்காத பாடத்தை எடுக்கச் சொல் லிப் பெண்களை வற்புறுத்தி காலேஜில் சேர்த்துவிட்டு ஆசைகளைக் கருகச் செய்த அப்பன்களை யார் எழுதுவது? கடைசி செமஸ்டர் முடிக்கும் முன்பாக இவன்தான் மாப்பிள்ளைஎன்று ஒரு கேனயனைக் கொண்டு வந்து நிறுத்திய தந்தைமார்களை யார் எழுதுவது?
பக்கி மவளதூரம் பட்ட துணியை பேப்பர்ல சுத்தி யாருக்கும் தெரியாம கொண்டு போடுஎன்கிற மாமியாரை யார் எழுதுவது.
கனவுல சில்வியா ப்ளாத் தினமும் வர்றா. பாதி புரியுற ஆங்கில கவிதை களச் சொல்றா. ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு. ஒரு தடவ பாலாஜியோட லேப்டாப்ல சில்வியா ப்ளாத்னு அடிச் சோன்ன இணையதளம் விரிய ஆரம் பிச்ச நேரம், அவன் பின்னந்தலைல தட்டி ‘‘என்ன பண்ணிட்டு இருக்க... டிபன் எடுத்து வை’’ன்னான். சில்வியா ப்ளாத் அவன் சொன்னதை இணையத்துலேர் ருந்து பார்த்துகிட்டே இருந்தா. அவ முகம் மாறின மாதிரி தோணுச்சு கெளரிக்கு.
அவளுக்குப் பாட ஆசை. வாயைத் திறந்தால் ‘‘என்னடி கரையுற காக்கா மாரி’’ன்பான் அவன். அதான் அந்த கேன யன்தான். அவனின் இன்னொரு பெயர் கணவன், இந்த தேசத்தில். இவர்களைத் தொழ வேண்டும் பெண்கள். தொழும் பெண்கள், பெய்யென்றால் மழை பெய் யும். ஆமாம் பெய்யும். பெய்யெனச் சொன்னால் மாடுகூடப் பெய்யாதே!
தமயந்தி கோபக்காரர் எல்லாம் இல்லை. அவர் கோபம் சமூகம் சார்ந்த கோபம். அந்தக் கோபம், கலாபூர்வ மாக மாறி சிறுகதை இலக்கியமாகவும் மாறுவதால், அற்புதமான நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துவிடுகிறது. வன் முறைக்கு - சகலவிதமான வன்முறை களுக்குமான எதிர்குரலை, கதைகளின் ஊடாகவும் உள்ளோட்டமாகவும் மாற்றி நல்ல வாசிப்புக்கு வடிவம் தருகிறார் அவர். விடுதலையைத் தமயந்தி அவர் கண்ணோட்டத்தில் முன் வைக்கிறார்.
ஓர் அழகிய கதை ஒன்றைப் பார்ப் போம். சமூக அக்கறையும் மனித நேயமும்கொண்ட அவள் செய்தி சேக ரிக்கக் கிராமம் செல்கிறாள். வசந்தி என்கிற பெண் பேசுகிறாள். எங்கள் ஊருக்கு அருகில் ஒரு காடு. அது எங்களுக்குத் தாய். அதில் ஏதோ ஆராய்ச் சிக்கூடம் கட்ட நினைக்கிறது அரசு. பழனி அண்ணன் தலைமையில் ஊர் போராடுகிறது. போராட்டக்காரர்களைப் போலீஸ் கடுமையாகத் தாக்கிச் சிறை பிடிக்கிறது. தலைமறைவான பழனியண் ணனுக்குக் குடிக்க நீர் கொடுக்கிறது வசந்தி குடும்பம். மாபெரும் குற்றம் அல்லவா அது? பழனியைத் தேடி வந்த காவலர்கள், அவள் தந்தையைக் கொல்கிறார்கள். அவளை இழுத்துச் சென்று நிர்வாணமாக்கிவசந்தியின் கர்ப்பப்பையே கிழிகிறது. வசந்தி தன் அனுபவத்தை கேட்பவள் மனம் பதறச் சொல்லிக்கொண்டு போகிறாள். இதனுடே, அந்த ஏழைக் குடும்பம் வெளிப் படுத்தும் விருந்தோம்பல் அற்புதமாகப் பதிவு செய்யப்படுகிறது. அவள், எழுந்து தரையில் அமரப் போகிறாள். அவசரமாகப் பாய் விரிக்கப்படுகிறது. ‘‘நீங்க கறி மீன்லாம் சாப்பிடுவீங்களா?’’ என்கிறாள் ஒரு பெண்.
இதற்கிடையில் செய்தி சேகரிப்புப் பெண்ணுக்குக் காதில் இன்னொரு குரல் - முரளியின் குரல் ஒலிக்கிறது.
‘‘ஊரு சுத்தப் போயிட்டியா?’’
கணவன்தான்.
‘‘ஊருக்கு நியாயம் கெடைக்கச் செய்வாளாம்... வீட்ல இட்லிகூட கெடைக்க வைக்க முடியலையே.’’ அலைபேசி சிணுங்கியது.
‘‘என்ன போனை எடுக்க மாட்டியா? உனக்கென்ன கவலை... நாங்க இருந்தா என்ன செத்தா என்ன? மெள்ள வா...
டிராவல் பண்ணாதனு சொல்றாங்க டாக்டர். சனியன். லீவு போடறியா..? சாதாரணமா வத்தக் குழம்பு சுட்ட அப்பளம்னு உள்ள பொண்டாட்டியைக் கட்டியிருக்கணும்...
தட்டு இட்லியோடு பறந்தது...
வசந்தியின் கதையோடு, அதே தரத் தில் இன்னொரு, அதே வன்முறைக்கு ஆளான செய்தி சேகரிப்பாளர் கதையும் இணைகிற ரசாயனம் அருமையாக இணைந்த, தமிழில் முக்கியமான கதை இது.
அன்பைத் தேடி அன்பைத் தவிர வேறு எதுவும் புழங்காத ஓர் உலகத் தில் ஒரு குழந்தையாக அலைய விரும்புகிறார் தமயந்தி. கிடைத்திருக்கும் இந்த அழகிய உறவை, அழகிய வாழ்க்கையை ஏன் விகாரப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்.
உண்மைதான். எத்தனை அழகியது இந்தக் குளிர் காலை, இந்த அருவி, இந்த நதி, இந்த நிலவு... இந்த அழகுகளோடு மனித குலம் ஏன் இணைந்துகொள்ளக் கூடாது என்கிறார் தமயந்தி. ஆமாம். ஏன் நாம் அழகாகக் கூடாது?
தமயந்தியின் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்சிறுகதை தொகுப்பை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- நதி நகரும்

 

 

 

 

 

 

கதாநதி 5: ‘லிவிங் ஸ்மைல்வித்யா - மாபெரும் வாழ்நாள் போராளி

குழந்தை ஆணாகப் பிறந்திருக்கிறது என்பதில் அப்பாவுக்கு பெரும் மகிழ்ச்சி. இரண்டு பெண் களுக்குப் பிறகு பிறந்த ஆண் சிங்கம். முருகன் அருளால் பிறந்ததால் சரவணன் என்று பெயர் சூட்டப்பட்டது. மகனை கலெக்டராக்குவது என்று அப்போதே தீர்மானித்துவிட்டார் அப்பா. இந்தியாவில் மூடக் கருத் துகள் கர்ப்பத்திலேயே தாயின் வயிற்றுக்குள் எப்படியோ சென்று சேர்ந்துவிடுகின்றன. அதில் ஒன்று ஆண் குழந்தை அருமை என்பதும்; ஆண் குழந்தை வரம், பெண் குழந்தை சாபம் என்பதும்.
சரவணன் 1982 மார்ச் 25-ல் பிறந்தான். ஆறு வயதில் தன் மஞ்சு அக்காவின் பாவாடையை அணிந்துகொண்டு நான் ராஜா மகள் / புது ரோஜா மலர் / என தாசை நிறைவேறுமாபாடலுக்கு ஆடத் தொடங்கினான். சினிமா பெண்களின் அழகும் இவற்றோடு பாவாடை, மை டப்பா, வளையல்கள், பொட்டு, ஆபரணங்கள் எல்லாம் சரவணனைக் கவர்ந்திருக்கின்றன. அதாவது, சரவ ணன் தன் சுயத்தை அடையாளம் கண்டு விட்டான். கதவைச் சாத்திக்கொண்டு, ‘‘தனிமை கொடுக்கும் பயம் கலந்த சுதந் திரத்தில் என்னை ஒரு முழுமையான பெண்ணாக மட்டுமே நினைத்துக் கொள்ள மிகவும் விரும்பினேன். நான் ஒரு பெண். துரதிருஷ்டவசமாக உலகம் என்னை ஆண் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது’’ என்று பின்னால் எழுதுகிறான் சரவணன்.
பள்ளிக்கூட வாழ்க்கையில் சக மாணவர்களால் அவன் பட்ட துன்பமும் அவமானமும் கொடுத்த பயத்தோடு கல்லூரியில் சேர்கிறான். மூன்றாவது ஆண்டில் கல்லூரியின் சார்பாக நடன நிகழ்ச்சிக்குப் பெயர் கொடுத்து சக மாணவர்களுடன் புறப்படும் சரவணன், ஒரே அறையிலேயே படுக்க வேண்டி வருகிறது. இம்மானுவேல் என்ற முரட்டு மாணவன், குடித்திருந்தவன் இவனை சீண்டுகிறான். போர்த்திக் கொண்டு ஒடுங்கியபடிப் படுத் =திருக்கிற இவனது போர்வையை விலக்கி சிகரெட்டால் காலில் சூடு வைத்துவிடுகிறான் அவன். அலறி யடித்து எழுந்த சரவணனைப் பார்த்து எல்லோரும் சிரித்துக் கொண்டிருக் கிறார்கள்.
இந்தச் சமூகத்தின் பிரதிநிதி அவன். அந்தச் சூடு வைத்தவன் பார்வையாலும் சொற்களாலும் சமூகம், திருநங்கைகளைத் தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருக்கிறது. கண்களில் நீர் வற்றும்வரை அவர்களை அழவைக்கிறது. அற உணர்வையும் . பெண் தன்மை கூடுதலாகச் சரவணன் பிறந்தது அவன் குற்றமா?
லிவிங் ஸ்மைல்வித்யா, சரவண னாக இருந்து வித்யாவான தன் வர லாற்றை நான் வித்யாஎன்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். வித்யாவின் தன் கதைவடிவ நூல், அதன் நம்பகத்தன்மையாலும், ஆச்சரியப்படத்தக்க மொழிப் பிரயோ கத்தாலும், அர்த்தமற்ற வீண் சொல் இல்லாத செறிவாலும் ஒப்பு சொல்ல முடியாத அற்புதப் படைப்பாக மிளிர்கிறது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த வித்யா, ‘எம்.ஏ தமிழ் மொழியியல்பாடத்தை எடுத்தார். தஞ்சைப் பல்கலையில் இருந்த நாடகத் துறையில் நடிக்கலாம் என்ற ஆசை அவருக்கு. உண்மையில் வித்யா, மனதில் நடிகராகத் தன்னை நிறுவிக் கொள்ள ஆசைப்பட்டார். நாடகத் துறைப் பேராசிரியர் மு.ராமசாமி, அப்போது எழுதி இயக்கிய கலகக்காரர் தோழர் பெரியார்நாடகத்தில் அரங் கப் பணி செய்யும் வாய்ப்பை வித்யாவுக்கே கொடுத்திருக்கிறார். நாடகக் கலைஞர் முருக பூபதியையும் அச்சமயம் வித்யா அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நாடகத்தில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெறுதல் என்பதே முதலில் தன் லட்சியமாக வைத்துக் கொண்டிருந்த வித்யா, தன்னைப் போன்ற கோத்தி (ஆணுடையில் இருக்கும் பெண்) களுடனும் திருநங்கை (பெண் ஆடை அணிந்து, தம் ஆண் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அறுத்துக் கொண்டவர்கள்)களுடனும் தொடர்ந்து உறவாடிக் கொண்டிருந் தார். அப்போதுதான் சில தீவிர மான மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்.
நான் யார்என்ற கேள்வி அவருக் குள் எழுந்து அவரை உருக்குலைக்கிறது. கேலி சொற்களால் என்னை அசிங்கப் படுத்தி வந்த அத்தனை பேருக்கும் நடுவே நானொரு திருநங்கைஎன்று கம்பீரமாக வெளிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். எது வெளிபட்டுவிடுமோ என்று இதுநாள் வரை அஞ்சிக்கொண்டிருந்தேனோ, அதனைப் பகிரங்கமாக்கிவிடத் துடித் துக்கொண்டிருந்தது மனம்என்று எழுதுகிறார். நீங்கள் ஆண் என்று அறிந்த நபர், பெண் என்றால் உங்களுக்கு ஏன் நோகிறது?
ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி எழுதுகிறார். என்னை கலெக்டராக்கிப் பார்க்க ஆசைப்பட்ட அப்பாவுக்கு முன் நிற்க வேண்டிய சூழ்நிலை. கருப்பு நிறப் புடவைக் கட்டிக்கொண்டு போனேன். புடவையில் என்னைப் பார்க்க அப்பாவுக்கு இஷ்டமில்லை. அவர் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
திருநங்கைகளுக்கு வாழ இரண்டு வழிகளே உண்டு. ஒன்று, பிச்சை எடுப்பது. மற்றது, பாலியல் தொழில் செய்வது. வித்யாவுக்கு வேலை கிடைக்கவில்லை. வேறு எந்த உதவியும் இல்லை. ஆக, வித்யா (எம்.ஏ., மொழியியல்) பிச்சை எடுத்துப் பிழைக்க புனே செல்கிறார். ஏன் திருநங்கைகள் வடநாடு செல்கிறார்கள்? ஏனென்றால் வடநாடுகளில் இவ்வளவு தொல்லை இல்லை. அவமானம் இல்லை. பெண்ணாகவும் வாழ வேண்டும், வன்முறையில் இருந்தும் தப்பிக்க வேண்டுமே.
எனக்குத் தெரியும். புனேவுக்குச் சென்ற நான் தங்கத் தட்டில் பால் சோறு தின்று கொண்டிருக்கப் போவதில்லை என்று. அங்கே என்ன செய்யப் போகிறேன்? பிச்சைதான்நான் எதிர்கொண்ட கேலி, கிண்டல்கள், நொறுங்கிப் போன எதிர்பார்ப்புகள் எல்லாமே இந்தச் சமூகத்தில் நான் ஓர் உறுப்பினரல்ல என்பதையே திரும்பத் திரும்ப எனக்கு சொல்லி வந்திருக்கின்றன. சகலருக்கும் கேலிப் பொருளாகிவிட்டிருந்த எனக்கு ஒரு கட்டத்துக்கு மேல் இந்தச் சமூகமே கேலிப் பொருளானதும் தவ றாகத் தோன்றவில்லை.
இந்தப் பைத்தியக்கார உலகில் என் மீது மட்டும் எத்தனைக் கற்கள் எறியப் பட்டிருக்கின்றன? அந்தக் கல்லடிகள்தான் என் மனதை மரத்து போகச் செய்தன. ஒரு வகையில் இச் சமூகத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொரு வரிடமும் அவர்கள் எனக்களித்த அடிகளுக்கு நஷ்டஈடு வசூல் செய்வது போல்தான் பிச்சைத் தொழிலை நான் கருதினேன்
ஆந்திராவில் உள்ள ஓர் ஊருக்கு நிர்வாணத்துக்குச் செல்கிறார் வித்யா. நிர்வாணம் என்பது ஆண் உறுப்பு அகற்றல். முறையாக மருத்துவமனை இல்லை. கறிக்கடை போன்ற ஓர் அறை. சரியாக மயக்கம் தராத ஊசியைப் போட்டு, உயிர் போகும் வலியோடு, தான் விரும்பாத அந்த ஆண் அடையாளத்தை அறுத்துப் போடுகிறார் வித்யா. மரணத்தைத் தொட்டுத் திரும்புகிறார்.
‘‘ஆ! நிர்வாணம். இதுவல்லவா நிம்மதியின் எல்லை
அப்பா, பாருங்கப்பாஅறுந்து கிடக் கும் என் உடம்பைப் பாருங்கப்பா. இப்போதாவது என்னைப் பொண் ணாப் பாருங்கப்பா. என்னை ஏத்துக் கோங்கப்பா
என் கதறல் எனக்கு மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததுஎன்று எழுதுகிறார்.
நாம், நீ, அவர், அவன் எல்லாம் மனிதர் என்றால், இனிமேல் திருநங்கை மீது கல் வீசாதீர்கள். அரசு, மக்கள் அரசு என்பது உண்மையானால், எல்லா ஆண்கள், பெண்களுக்கும் தரும் அனைத்து வாழ்க்கை உத்தரவாதங் களையும் திருநங்கை, திருநம்பிகளுக் கும் தர வேண்டும். கூடுதலாகத் தர வேண்டும். இயற்கை செய்த தவறை அரசே திருத்த வேண்டும்.
திருநங்கை சமுதாயத்துக்கு மட்டு மல்ல; மனித சமுதாயத்துக்கே ஒரு புரிதலை இந்தப் புத்தகம் மூலம் வழங்கி, மாபெரும் மானுடக் கடமை ஆற்றியிருக்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா. இப்போது மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இப்புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- நதி நகரும்...

 

 

 

கதாநதி 6: எம்.எஸ்.கல்யாணசுந்தரம் - சத்திய வேட்கை கொண்ட தத்துவவாதி

இலக்கணச் சுத்தமான சிறு கதைகளை இப்போது யார் எழுதிக் கொண்டிருக்கிறார் கள்? ’’ இந்தக் கேள்வியை அறுபதுகளில் நீங்கள் எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், பராங்குசம் போன்றோர்களிடம் கேட்டீர்கள் என்றால், அவர்கள் பதிலில் கட்டாயம் ஒரு பெயர் இடம்பெறும். அப்பெயர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம்!
அறுபதுகளில் தஞ்சாவூரில் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது, மேற்சொன்ன இலக்கிய ஆளுமைகள், ஓர் இளைய ரசிகனான என்னிடம் எம்.எஸ். கல்யாணசுந்தரம் என்ற பெயரை ஒரு கவுரமான தொனியில் சொன்னார்கள். ‘‘பிசிறில்லாத, செட்டான, அலம்பல் இல்லாத நல்ல கதைகளை முன்ஷிஎழுதிக்கிட்டிருக்கார். அவசியம் படிங்கோ’’ என்றார் தி.ஜானகிராமன்.
தி.ஜ.ர. முன்னுரையில் கல்யாண சுந்தரத்தின் சிறுகதைகள் எல்லாம் நவரத்தினங்கள் - உருவிலும் சரி, தன்மை யிலும் சரி, வகையிலும் சரி. அப்படிப் பட்டவைஎன்று எழுதியதைப் போல ஒரு முக்கியமான எழுத்தாளருடன் உறவாடுகிறோம் என்ற எண்ணம் அவரை வாசிக்கும்போது தோன்றியது.
கதைகளின் மூலம் இன்பக் கனா காண வைக்கவும், காதல் முதலான அங்கீகரிக்கப்பட்ட சந்தோஷங்களின் பிரச்சினைகளை எதிர்கொள்வதைத் தவிர்த்து, ஏனைய வண்ணமயமான சமாச் சாரங்களை எழுதிக்கொண்டிருந்தார்கள் புகழ்வாய்ந்த சிலர் அக்காலங்களில்.
இவர்களுக்கு எதிராக மனித மனதில் இருண்ட பகுதிகளை, தோல்விகளை, வாழ்க்கைப் போராட்டங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள் லட்சிய தாகம் கொண்ட எழுத்தாளர்களில் சிலர்.
மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு வாழ்வின் பாடுகளை எழுதும் போக்கும் சிலரிடம் இருந்தது.
எம்.எஸ்.கல்யாணசுந்தரம் ஒரு தனித்த கண்ணோட்டத்தை வாழ்க்கைச் சார்ந்து உருவாக்கிக்கொண்டார். அவர் தத்துவம், கொள்கை எல்லாம் மனிதம். உங்கள் அனுபவத்தை முன் வைத்து, சகல கயமைகளுக்கும் இருப்பிடமாக உள்ளதே மனித மனம் என்று நீங்கள் சொன்னால், ‘‘இல்லை, இல்லை. மனிதன் மேலானவன்தான்! சில சந்தர்ப்பச் சூழ்நிலையில் அப்படித் தோன்ற வைத்துவிடுவான் மனிதன். எனினும் மனிதன் உன்னதமானவனே’’ என்பதே அவர் பதிலாக இருக்கும்.
நல்லவைகள் என்று தான் நம்பிய நம்பிக்கைகளுக்கு கலை உருவம் கொடுத்த எழுத்தாளர் அவர்.
எந்தத்
தேர்ந்தெடுத்த தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பிலும் தவறாது இடம்பெறும் கல்யாணசுந்தரத்தின் கதை தபால்கார அப்துல்காதர்’. ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை இது.
அழகாகத் தொடங்குகிறது கதை.
பெர்னாட்ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது. ‘‘இங்கே பார்க்கத் தகுதி யானவை என்ன?’’ என்று விசாரிக் கிறார். ‘‘நவாப் கோட்டை, பாண்டவர் அனை, இடிநாதர் கோயில், தபால்கார அப்துல்காதர்’’ என்று பதில் கிடைக்கிறது.
அப்துல்காதர் தன் சொந்த ஊரான இந்த ஊரில் தபால்காரன். மாம்பிஞ்சு மீசை. நீலச் சட்டை. காக்கித் தலைப் பாகை. தபால்காரனாகவே பிறந்து எப்போதும் 35 வயதுக்காரனாகவே இருக்கிறான். மாலை ஆறு ஆறரை மணிக்குத் தபால் எடுத்து வருவான். தெருக்கோடி திரும்பியவுடனே மற்றொரு சூரியன் உதித்துவிட்டது போலவே மக்களுக்குத் தோன்றும்.
தபால் ஆபீஸில் இருந்து புறப்படும் போதே, யார் யாருக்குக் கடிதம் என்பதை மனப்பாடம் செய்திருப்பான். சுப்பையர் ‘‘என்ன அப்துல்காதர்?’’ என்பார். ‘‘இன்னிக்கு ஒண்ணுமில்லை. நாளைக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பார்ப்போமா?’’ என்பார் அப்துல்காதர்.
ராமா ஜோசியர் ‘‘சாயபு, என்ன தபால்’’ என்பார். ‘‘நீங்கள்தான் ஜோசியம் பார்த்துச் சொல்லுங்களேன்’’ என்பார் காதர். ‘‘என்ன காதர் தயவே இல்லியே’’ என்பார் கோபால் ராவ். ‘‘என்ன ஒரு வார்த்தையிலேயே அப்படிச் சொல் லீட்டீங்க’’ என்பார் காதர்.
‘‘ஒரு லெட்டரா கிட்டரா ஒண்ணையும் காணோமே.’’
‘‘பாத்தீங்களா, பாத்தீங்களாஎன் னமோ சொல்லப் போறீங்கன்னு நினைச்சா, என்ன இருந்தாலும் பாருங்க, தபால்காரப் பயன்னா வேறொண்ணும் கேட்கத் தோணுவதில்லை. அவனும் மனுஷந்தானே, அவனோட பிள்ளை குட்டியைப் பற்றி விசாரிப்போம்னு…’’
இப்படி ஒரு ஓட்டுறவு காதருக்கும் ஊர் மனிதர்க்கும். இடையில் காதர் ஒரு மாதம் விடுமுறை போட்டுச் சென்றான். ஒரு புதுத் தபால்காரர் வந்தார். சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம் டான்என்று தபாலைக் கொடுத்தார். ஒரு படித்த மனிதர். அவருக்குக் கோபம். என்னத்துக்கு இந்தக் காதர் மட்டும் லேட்ஆகத் தபால் கொண்டுவருகிறான். அப்துல்காதர், திரும்பியதும் அவனை எச்சரிக்கிறார்.
‘‘ஏன் இவ்வளவு தாமதம்?’’
‘‘எப்போதும் போலத்தானே வந்திருக்கிறேன்?’’
‘‘ஒரு மாதமா எனக்கு ஐந்து மணிக்கெல்லாம் கடிதம் வந்தது.’’
‘‘ஆம். அவர்கள் அப்படித்தான். விடுவிடு என்று கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். லாயத்துக்குத் திரும்பும் ஜட்காக் குதிரையைப் போல…’’
‘‘நீரும் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது?’’
அதற்கு அப்துல்காதர் சொல்லும் பதில் பேரழகு:
‘‘பிறந்து வளர்ந்து பழகிப் போன ஊர். ஜனங்கள் அதென்ன, இதென்ன என்று, தபால் பற்றி, ஊர் நிலவரம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். மனிதர்களைத் தட்டிக்கொண்டு போவதெப்படி சார்? (இந்தாங்கோ, பாட்டி சீயாழிலேந்து உங்க மூத்த பிள்ளை எழுதியிருக்காரு) இப்படி ஜனங்க இழுத்து வைத்துப் பேசினால், நான்தான் என்ன செய்றது? நீங்க இத்தன நேரம் இவ்வளவு தகவல் விசாரித்தீர்கள். நின்னு பதில் சொல்லிவிட்டுப் போறதுதானே மரியாதை. கடுதாசிக்கு என்ன அவசரம்? ஐஸ்கிரீமா, மல்லிகைப் பூவா இளகிப் போவும், வாடிப் போவும்னு பயப்பட…. முந்தா நாளு உங்க அண்ணாச்சியை மதுரயிலே பாத்தேன். ரொம்ப நேரம் எல்லாம் விசாரிச்சாரு. முன்னைக்கிப்போ ஒரு சுத்து பருத்திருக்கார். காதுகிட்ட நரையும் தட்டியிருக்குது. வரட்டுமா சார்…’’
கல்மிஷம் இல்லாத சிரிப்புடன் நகரும் அப்துல்காதரைப் பார்த்தபடி இருந்த, நேரம் குறித்துக் கோபப்பட்டவர், தன் கையில் இருந்த (அப்துல்காதரின் மேலதிகாரிக்கு எழுதி வைத்திருந்த) மனுவைக் கிழித்து எரிகிறார்… ‘என் கடிதங்கள் மறுநாள் காலை வந்து சேர்ந்தாலும் பரவாயில்லை. அப்துல்காதர்தான் கொண்டுவர வேண்டும்என்று தீர்மானித்தபடி.
கல்யாணசுந்தரத்தின் உலகம் இத்த கையதுதான். என் முன் அவ ருடைய பதினெட்டுக் கதைகள் விரிந் திருக்கின்றன. மிக மோசமான பாத்திரங் களானாலும் அவர்கள் அப்படி இருக்கிறமைக்காக இவர் வருந்துகிறார். பலவீனங்கள் எத்தகையதானாலும், அவை பெரிதே இல்லை இந்த எழுத் தாளருக்கு. யார் மீதும் சினம் இல்லாத இவர், எவர் மீதும் முதல் கல்லை எய் வதில்லை. தீர்ப்பு சொல்வது இல்லை. அவர்கள் அப்படிஎன்பதற்கு மேல் அவர் விமர்சனம் செய்வதில்லை. ஆனால், அவர்கள் நம்மோடுதான் வாழ்கிறார்கள் என்ற பிரக்ஞையை ஏற்படுத்தவும் தவறுவதில்லை.
ஒரு ஆசிரியர். அவரிடம் படித்த மாணவனின் தம்பி ஆசிரியரைப் புகைவண்டி நிலையத்தில் சந்திக்கிறான். ஆசிரியர் அவனிடம் ‘‘நீ என்ன செய்கிறாய்?’ என்று கேட்கிறார்.
‘‘எனக்குப் படிப்பு ஏறவில்லை. படிப்பை முடிக்கவில்லை. உங்க வகுப்புக்கு வந்து துன்பம் தர இருந்தேன்., அதற்குள் தப்பித்துக் கொண்டீர்கள்’’ என்கிறான் அவன்.
‘‘சீஅப்படி பழித்துக்கொள்ளாதே நாகராஜா. ஒரு யந்திரம் தயாரித்தாலும் பல குணங்களுக்கிடையே இயற்கை யாக அவகுணங்களும் அமைகின்றன. ரேடியோவின் சூட்சுமத்துவத்தை அதிகரித்தால், ஆகாயத்தில் உள்ள குப்பை ஒலிகள் எல்லாம் தன்கூட அழைத்து வரும். உன்னிடம் புத்திக்கும் உழைப்புக்கும் குறைவில்லை…’’ என்று தேற்றுகிறார் ஆசிரியர்.
மாணவர்களை அசடுகள், மூடர் கள் என்றல்லவா அசிரியர்கள் சொல்ல வேண்டும். இவர் இப்படி. சரி. மாண வனின் தம்பி என்னதான் தொழில் செய்கிறான்? பிக்பாக்கெட் என்கிறான் அவன். அத்தொழிலை விடும்படி மன்றாடு கிறார் ஆசிரியர். சாத்தியம் இல்லை என்கிறான் அவன். கடைசியாகப் பிரியும்போது ‘‘உன் குடும்ப ஷேமத்தைக் குறித்து தியானம் செய்யலாமா? உன் அனுமதி இல்லாமல் அந்த வகையிலும் நான் உன்னைப் பாதிக்க மாட்டேன். போய்வருகிறேன்.’’ என்று சொல்லி பிரி யும் ஆசிரியர் கைகளில் இரண்டு சுமை. கதையின் தலைப்பு மூன்றாம் சுமை’.
முன்னுரையில் சி.சு.செல்லப்பா, ஓர் அபூர்வமான செய்தியைக் குறிப்பிடுகிறார்.
சமீபத்து ஹிந்துபத்திரிகையில் ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில், ஒரு கடிதம் ரசமாக இருந்தது. எலெக்ட்ரிக் ரயிலில் பள்ளி மாணவர்கள் கத வோரம் தொத்திக்கொண்டு நிற்பதாலும், புறப்பட்டுவிட்ட ரயிலில் ஓடிப் போய் ஏறுவதாலும் விபத்துக்கள் ஏற்படுகின் றன. இளம் வயதுப் பிள்ளைகளுக்கு இப்படிச் செய்வதன் விளைவு தெரிவ தில்லை. உபாத்தியாயர்கள் பிள்ளை களிடம் அடிக்கடி அவர்கள் மனதில் பதியும்படியாக எடுத்துச் சொல்லி எச் சரிக்கை செய்துகொண்டிருக்க வேண் டும். விடாமல் அசட்டுத்தனமாக இதைச் செய்துகொண்டே இருக்கும் பையன் களுக்கு கவுரவ இளம் கதவுக் காவல் காரன்என்று பரிகாசப் பட்டம் கொடுக்கலாம்…’
கடிதம் எழுதியவர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம்.
எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் பொன்மணல்சிறுகதைத் தொகுதியை தமிழினி பதிப்பகம்வெளியிட்டுள்ளது.
- நதி நகரும்...

 

 

கதாநதி 7: சீதா ரவி - நீரால் ஆன காவிரிக் கதைஞர்

எனக்குக் காவிரிக் கரையில்தான் கர் னாடக சங்கீதம் அறிமுகமாயிற்று. நான் அப்போது (1965-1975) குடியிருந்த தஞ்சாவூர் ஐயன் கடைத் தெரு வெங்கடேசப் பெருமாள் கோயில் அக்ரஹாரத்தில் நிலைபெற்ற ஆஞ்சநேயர்க் கோயில் வருடாந்திர 10 நாள் உற்சவத்துக்கு மிகப் பெரும் சங்கீதக்காரர்கள் வந்து பாடுவார்கள். அப்போது காவிரியில் இரு கரையும் தொட்டு நீர் ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன். நீர், மக்கள் மனதில் ஈரம் செய்தது. ஈர மக்கள் இசையையும் இலக்கியத்தையும் நாடினார்கள்.
தமிழிலக்கியத்தில் சங்கீதம் குறித்த கலைப் பதிவுகள் குறைவுதான். அது அப்படித்தான் இருக்கும். இசை என்பது ஓர் அரூபக் கலை. உருவம் அற்ற, மனோதர்மத்தில் உருவம் கொள்ளும் கலை அது. இசைக்கும், இசை அனுபவத் துக்கும் கதை உருவம் கொடுப்பது சாதாரண முயற்சி இல்லை. என்றாலும் அதைச் சாதித்தவர்கள் உளர். தி.ஜானகி ராமன் சில சிறந்த கதைகளை படிக்கும் தரத்தில் மட்டும் இல்லை; கேட்கும் தரத் திலும் எழுதி இருக்கிறார். ஜானகிராமன் சங்கீதக் கதைகளை நாம் கேட்க முடியும். ஸ்வாமிநாத ஆத்ரேயன் முயன்றிருக் கிறார்.
சுஜாதா விஜயராகவன் ஒரு உருப் படியான நாவலைத் தந்திருக்கிறார். அண்மைக்காலங்களில் சீதா ரவி முழுமையான கலை அனுபவம் தருகிற, சங்கீதம் சார்ந்த கதைகள் பலவற்றை எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது ஸ்வரஜதிஎனும் சிறுகதைத் தொகுப்பில் 24 கதைகள் சங்கீதம் சார்ந்தும், வாழ்க்கை யின் பல சாகைகளைக் கொண்டதுமாக வும் இருக்கின்றன. தமிழ் நெடும்பரப்பில் சில குறிப்பிடத் தகுந்த சிறந்த கதை களைக் கொண்டிருக்கிறது இத் தொகுதி.
கர்னாடக இசை மூலவர்களுள் ஒருவ ரான முத்துசுவாமி தீட்சிதரின் சிஷ்யன் ஆனந்தனின் பார்வையில் எழுதப்பட்ட கதை. தீட்சிதரின் பெரிய கள்ளிப்பெட்டி யில் வரும் பூஜை சாமான்கள் ஆனந்த னின் பொறுப்பு. பல்லக்கு போல அதைச் சுமந்துகொண்டு, குரு செல்லும் ஊர்களுக்கு அவர் பாதச் சுவடுகளைத் தொடர்ந்து செல்பவன் அவன். பல வருஷங்களாக கனம் மிக்க அந்தப் பெட்டி யைச் சுமந்து அவன் தோள் தழும்பேறி இருப்பது அவனுக்கு மகிழ்ச்சி. தீட்சி தரின் சங்கீதத்துக்கு அவன் வாரிசு இல்லை.
ஆனால், குரு வடிவமைக்கும் பாடலின் சிருஷ்டி கணத்தில் அவருடன் இருக்க, அந்தத் தருணத்தில் தானும் கரைய அவன் ஆசைப்படுகிறான். அன்று காலையில்தான் தீட்சிதர் பரிமள ரங்க நாதருக்கு ஹமிர் கல்யாணியில் புனைந்த புண்டரீகவல்லி நாதம்ஏனைய சிஷ்யர்களால் பாடப்பட்டதை அவன் கேட்டிருந்தான். அந்தப் பாடலைச் சந்நிதி யில் அவர் இசைத்த பிறகு அரங்கனுக்கும் புண்டரீகவல்லிக்கும் முகவதனச் சோபை கூடியிருக்கிறதாக ஆனந்தன் உணர் கிறான். உணர்வதுதானே சத்தியம்!
அவன் குரு பாடிய அந்தத் தருணத்தை மனசுக்குள் கொண்டுவந்து கண்ணீர் பெருக்குகிறான்.
‘‘அழுகிறாயா..?’’ என்று கேட்கிறார் குரு.
‘‘இன்று உங்கள் சங்கீதத்தில் சந் தோஷப்பட்டுக்கொண்டு தாயார் முகச் சோதி கூடியிருப்பதை வந்து பாருங் கள்..’’ என்று குருவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து சந்நிதி முன் நிறுத்துகிறான் ஆனந்தன்.
‘‘சுவாமிதங்களிடம் நான் இணைந்து எத்தனைக் காலம் ஆயிற்று. எத்தனை நூறு கீர்த்தனைகளை நீங்கள் புனைந் திருக்கிறீர்கள். ஒரு முறை, ஒரே முறை பாடல் பிறக்கும் தருணத்தில் உங்கள் பக்கத்தில் நான் இருந்தது இல்லையே. அந்த அனுபவ மேன்மைக்கு நான் ஏங்குகிறேன்..’’ ஆனந்தன் என்ற அன்பு சிஷ்யனை நோக்குகிறார் குரு.
பரிமள ரங்கநாதம் பஜேஹம் வீர நுதம் பரிபாலித பக்தம்…’
தீட்சிதர் பாடினார்.
ஹமிர் கல்யாணியின் சுகந்தத்துக்கு அவர் சொற்கள் மேலும் வாசம் சேர்த்தன. குருநாதர் மெய்ம்மறந்து பாடிக்கொண்டிருக்கிறார். ஆனந்தன் அவரைப் பணிகிறான்.
தீட்சிதரின் ஞானம் ஒரு சமுத்திரம். அதனினும் பெரிது, அவர் சிஷ்யனுக்கா கப் பாடியது. இது அன்புக் கடல். கண் ணீரை வரவழைத்து மனசில் பேரொ ளியை ஏற்படுத்தும் அரிய கதை இது. இத யம் கோயில் ஆகும் இடம் இதுதான்!
தியாகராஜ
சுவாமிகள் முன், ராமன் காட்சி அளித்தான். அவர் மகள் சீதா லட்சுமம்மாவுக்கு வேறு கேள்விகள். இந்த அப்பாவுக்கு எத்தனைப் பேராசை? இத்தனைக் கோடி மக்கள் திரளில் இந்த அப்பாவை மட்டுமே தேர்ந்தெடுத்து, காட்சி கொடுத்திருந்தான் ராமன். யாரைக் காண வேண்டும் என்று அல்லும்பகலும் ஏங்கித் தவித்தாரோ அவரை அந்த ராமனைக் கண்குளிரக் கண்டாயிற்றுஅப்புறம் ஏன் அப்பாவுக்கு மீண்டும் மீண்டும் அவனைத் தரிசிக்க வேண்டும் என்ற பேராசை. இது அஞ்ஞானம் இல்லையா?
அன்று அவளுக்கு அதைக் கேட்கும் நேரம் வாய்த்தது.
‘‘அப்பாநீங்கள் ஸ்ரீராமனை நிஜமாகவே பார்த்தீர்களா அப்பா?.’’
‘‘ஏனம்மாஇத்தனை நாள் சென்று இப்படி ஒரு கேள்வி? பார்த்தேன்சத்தியமாகப் பார்த்தேன்..’’
‘‘அந்த அழகை வர்ணிக்க நான் என்ன வால்மீகியா, காளிதாசனா மகளே? என் கண்களை நிறைத்தது அவன் அழகு என்பதுதான் ஞாபகமிருக்கிறது. எனக்குள்ளே மூடிக்கிடந்த ஊற்றுக் கண்களை எல்லாம் திறந்துவிட்டது. உயிர்ப் புனல் பெருகி பாயச் செய்தது..’’
‘‘அப்படியானால் இன்னமும் ஏன் அப்பா ஏங்கித் தவிக்கிறீர்கள்? அவனை மீண்டும் மீண்டும் தரிசிக்க வேண்டும் என்ற பேராசையில், மீள முடியாது வீழ்ந்து கிடக்கிறீர்களேஅந்த விழை வும் தாகமும் அஞ்ஞானமே அல்லவா?’’
இது தியாகய்யரின் சிருஷ்டிகளின் முக்கிய அம்சம். சீதா ரவி எழுப்பும் கேள்வியின் தத்துவம் இதுதான். இறைவனைக் காண வேண்டும் என்பதே பக்தியின் உச்சம் என்றால், கண்டவுடன் ஆசைகளை விட்டொழிப்பது அதன் பலன் அல்லவா? ஆசைகளின் கனியான அந்தக் காட்சியைப் பெற்றுவிட்ட பிறகு பின் என்ன அந்தப் பசி..?
இதற்கான பதிலைக் கதையில் நீங்கள் வாசித்து அறியலாம்.
சொற்கள் சத்தம் போடுவது இல்லை. எப்போதும் இரைந்து பேசுவதில்லை. சுருதி பிசகிய சொற்களே இல்லாத எழுத்து அவருடையது. கை நிறைய நெல் மணிகளைக் கொத்தாக அள்ளித் தூவியபடி செல்கிறார். அவர் மணிகள் சாவியாவதில்லை. மனிதர்கள் மேல் அவருக்குள்ள நம்பிக்கை அளவற்றது. மனித மனங்களின் வெளிச்சப் பகுதியிலேயே அவர் கவனம் கொள் கிறார். இருள் அவருக்குத் தெரியாதது அல்ல; அதை விளம்ப அவர் விரும்பவில்லை.
சீதாவின் முழுக்கத் தம்பூரா போடும் கலைஞர் ஒருவரைப் பற்றிய கதை. தம்பூரா சோமுஎன்றால் கச்சேரி ஜமாக்கள் அறியும். மூன்று மணிநேரம், கையெடுக்காமல் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆரம்பத்தில் ஆள் காட்டி விரலில் தோல் உரிந்து எரியும். ஆனால், தனிமையில் அமர்ந்து தந்திகள் வெளிப்படுத்தும் நாதத்தைத் துய்க்க சோமுவுக்கு வலி மறந்து போயிற்று. அவருக்கு வாய்த்த குரு, சிஷ்யர்களுக்கு வழங்கும்மனிதரல்லர். தம்பூரா வாழ்க்கையாயிற்று.
காலம் ஆனால், சோமு, தம்பூராவின் மேன் மையை அறிந்த கலைஞர். சாகித்யம் பாடி முடித்தபின்னும் ரீங்கரிக்கும் தம்பூரா. அந்தச் சாகித்யத்தைத் தொடர்கிறது என்பதை உணர்ந்த கலைஞர் அவர். கீர்த்தனைகள் பாடினாலோ, வாசிக்கப் பட்டாலோ, பல்லவிக்கு முந்தைய எழுதப் படாத பல்லவியை முதலில் பாடுவதும், பாடகர்க்கு அடி எடுத்துக்கொடுப்பதுமே தம்பூராதான் என்பதையும் அறிந்த கலைஞர் அவர். என்றாலும் என்ன? கச்சேரிக்கு நூறுக்கு மேல் காணப் பெறாத ஏழைமை. அவரது ஒரே ஆசை, சொந்தமாக ஒரு தம்பூரா வாங்கி வைத்துக் கொள்வது. அதன் விலை இன்றைக்கு மூவாயிரத்துக்கு மேல். காலம் சென்ற மனைவியின் சொந்த தம்பூராகனவு நிறைவேறாமலேயே இருந்தது.
சோமு வீட்டை நோக்கி நடந்தார். வாசலில் வெளிச்சம் தெரிந்தது. மகள் வந்திருந்தாள். கணவனும். பூஜை அலமாரி முன் அது பாயின் மேல் கிடத்தப்பட்டிருந்தது. புது தம்பூராதான், தூக்கி நிறுத்தி மீட்டினார் சோமு. என்ன ஆச்சரியம்! அது காலம் சென்ற மனைவி சுந்தரியின் சுருதிக்கு ஒலித்தது.
பிரிமணை எறும்புகள்என்று ஒரு கதை. அதில் ஒரு சம்பாஷணை.
‘‘பழைய பிரிமணை நஞ்சு போயிட்டா தூக்கிப் போட்டுட்டு, மணல் கொட்டி பாணை வெச்சுக்க வேண்டியதுதானே..’’
‘‘ஊகும். அது மட்டும் மாட்டேன்..’’
‘‘ஏப்..?’’
‘‘பழைய பிரிமணையோட ஈரத்துக் காக எறும்பு வந்து அண்டியிருக்கு மில்லே. அதைக் கலைக்க மனசே வராது. புதுசைக் கூட கொஞ்ச நாளைக்குப் பழசு மேலேயே வைப்பேன். அதும் ஈரம் படிஞ்ச பிறகு பழசை மட்டும் எடுத் துருவேன்..’’
‘‘எறும்பு அண்டறது பிரிமணை ஈரத் துக்கா, உன் மனசோட ஈரத்துக்கான்னு தெரியலை..’’
நமக்குத் தெரியும். இந்தக் கதைகளை எழுதிய சீதா ரவியின் மன ஈரம்தான் இந்தக் கதைகளின் உயர்வுக்கெல்லாம் காரணம்!
- நதி நகரும்...

 

 

 

 

கதாநதி 8: மா.அரங்கநாதன் - நவீன எழுத்து யோகி

1932-ல் பிறந்த நாஞ்சில் நாட்டு மண் மணத்துக்கும் மொழிக்கும் சொந்தக்காரர் மா.அரங்கநாதனுக்கு இப்போது வயது 84-தான். அவர் ஞானத்துக்கும் மக்கள் திரள் மேல் அவர் வைத்திருக்கும் வாஞ்சைக்கும் வயது பல்லாயிரம். சில ஆண்டுகளுக்கு முன்னால், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று மா.அரங்கநாதனைக் குறிப்பிட்டிருந்தேன். இப்போது அவருடைய 90 சிறுகதைகளும், இரண்டு நாவல்களும், கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு, ‘மா.அரங்கநாதன் படைப்புகள்' என்ற பெயரில் நற்றினைபதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பெரும் புத்தகத்தை ஒருசேரப் படித்த பிறகு தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாளர், படைப்பாளி அவர் என்று தோன்றுகிறது.
இரண்டு கதைகளைப் பார்த்து விட்டு அவரின் பொதுவெளிக்குச் செல்வோம்.
அவன் ஓடிக் கொண்டிருந்தான். ஓடுவதில் அவன் மகிழ்ச்சி அடைந் திருந்தான்.
அவனுக்குப் பெரியவர் ஒருவரின் முகவரி தரப்பட்டு அவரைச் சந்திப்பது அவனுக்கு நலம் பயக்கும் என்று சொல்லப்பட்டது. அவன் அவரைச் சந்தித்தான். இந்த நாடு இளைஞர்களை நம்பித்தான் இருக்கிறது என்கிறார் அவர். அவன் நடந்து வந்தபோதே அவருக்கு என்னவோ தோன்றியது. ஏன் இத்தனை நாள்? முன்பே ஏன் வரவில்லைஎன்று கேட்கவும் எண்ணினார்.
பெரியவருக்கு வயது 60 இருக்கும். விளையாட்டு விஷயங்களில் தன்னை மூழ்கடித்துக் கொண்டவர். அந்த நாட்டின் எல்லாச் செய்தித்தாள்களிலும் அவர் புகைப்படம் வந்திருக்கும். ‘‘நான் என் நாட்டுக்காக என் விளையாட்டுக் கலையை அர்ப்பணித்தவன்என்று அவர் சொன்னார்.
அவர் அவனுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்தார். விடிவதற்கு முன் எழுந்து அவன் ஓடத் தொடங்கினான். நெடுஞ்சாலையில் ஓடும் பழக்கம் கொண்டான். தம்பியைத் தோளில் வைத்துக்கொண்டு ஓடிப் பயிற்சி பெற்றான். பெரியவர் அவன் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்தார். கொழுப்பற்ற உணவு வகைகள் அவனுக்குத் தரப்பட்டன.
வீடியோவில் உலக வீரர்கள் பற்றி அவனுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. ஒரு மல்யுத்தப் போட்டியில் வேற்று அணி நாட்டுக்காரன் குத்துவாங்கி மூக்கு நிறைய ரத்தம் வருகையில் பார்த்தவர்களின் சத்தம் - அதோடு இடையே ஒரு பார்வையாளன் முடிந்து விட்ட தனது சிகரெட் துண்டை ஆக்ரோஷத்துடன் கீழே நசுக்கி துவம்சம் செய்தல் -இவ்வகைக் காட்சி களைக் கண்டு முடிக்கையில் அவன் தனக்குள் ஏதோ ஒன்று ஏற்பட்டிருப் பதாக உணர்ந்தான். அன்றிரவு தொலைக்காட்சியில் இந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்என்று அவன் அறிமுகப்படுத்தப்பட்டான்.
ஆனால் நெடுஞ்சாலையில் அவன் அதிகாலை ஓட்டம் தொடர்ந்தது. 22 மைல் ஒடி இருக்கிறான். உலக ரிகார்டை அவன் நெடுஞ்சாலையிலேயே முறி யடித்துவிட்டான் என்று பெரியவர் சொல்லி மகிழ்வார். ஒரு மராத்தான் தேறிவிட்டான். இந்த நாடு தலை நிமிரும்என்று பத்திரிகை நிருபர்களிடம் சொல்லி மகிழ்ந்தார்.
அவன் பெயர் முத்துக்கருப்பன் அடுத்த ஒலிம்பிக் வீரன் என்று பத்திரிகைகள் எழுதின அன்றுதான் அதிகாரபூர்வமாக ஒலிபரப்பாக இருந்தது. கையில் சுருட்டுடன் பெரியவர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார்.
பேட்டி தொடங்கியது.
‘‘நீங்கள் போட்டியிடும் வீரராக-ஒலிப்பிக்கில் கலந்துகொண்டால் மகிழ்ச்சிதானே?’’
‘‘எனக்கு ஓடுவதில் ரெம்பவும் மகிழ்ச்சி!’’
‘‘நமது நாட்டுக்குப் பெருமை தேடித் தருவீர்கள் அல்லவா?’’
‘‘ஓடுவது ரொம்பவும் நன்றாக இருக்கிறது…’’
‘‘போன ஒலிம்பிக்கில் வென்ற வீரர் பற்றி உங்கள் கருத்து?’’
‘‘ஓடுபவர்கள் எல்லோருமே மகிழ்ச்சி அடைவார்கள்.’’
‘‘நமது நாடு விளையாட்டில் முன் னேறுமா..?’’
அவன் பேசாதிருந்தான். பெரியவர் தலை குனிந்திருந்தார்.
அவன் மீண்டும் சொன்னான்:
‘‘எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்குக் கிடைப்பதுதான் நான் ஓடுவதற்குக் காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்புத்தான் அதன் காரணம். நான் பொய் சொல்ல முடியாது. எனக்கு வேறேதுவும் தெரியாது.’’
பெரியவர் சுருட்டைக் கீழே போட்டு நசுக்கித் தள்ளினார்.
பேட்டி முடிந்தது.
பெரியவர் காரின் கதவைத் திறந்தார்.
அவன் வெகு தூரத்துக்கு அப்பால் இருந்த குன்றுகளைப் பார்த்தவாறே அவரிடம் கெஞ்சலுடன் கூறினான்.
‘‘இந்த அருமையான நிலவில் ஓட முடிந்தால் எப்படி இருக்கும் என்கிறீர்கள்?’’
‘‘நன்றாக இருக்கும். வேண்டுமானால் நீ இப்பவே ஓடு. அந்தக் குன்றின் உச்சிக்கே போய் அங்கிருந்து கீழே குதித்துச் செத்துத் தொலை…’’
இக்கதையின் தலைப்பு சித்தி’. ஓடுபவனாகிய அவன், தன்னை ஓட்டத் தில் இனம் காண்கிறான். ஓட்டம் வேறு அவன் வேறல்ல. ஓட்டத்துக்குள் அவனும்; அவனுக்குள் ஓட்டமும் இருக்கும்போது, ஓட்டம் அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவே அவன் சித்தம். ஓட்டத்தை மட்டுமே அவன் அறிவான். அவன், அவனுக்காகவே ஓடுகிறான். சித்தத்தைச் சிவன்பால் வைத்தல்என்பார்கள் சைவர்கள். அவன் ஓட்டத்தில் வைத்தான். விஷயம் எதுவானால் என்ன? தன்னையே அர்ப் பணிப்பு செய்கிறவனுக்குக் கற்பூரம், ஆரத்தி, மாலை மரியாதை என்னத் துக்கு? பெரியவர், கரடிக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார். யானையை ஸ்டூலின் மேல் நிற்கச் சொல்கிறார். மனசுக்குள் காடுள்ள மிருகத்தை யார்தான் பழக்க முடியும்? இதுதான் பிரச்சினை.
குழந்தைகள் விளையாட்டை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு குழந்தை ‘‘கைப் பொம்மைக்கு ஜுரம்; ஐயோ, டாக்டர் என் குழந்தையைப் பாருங்களேன்என்று சொல்லும். இன் னொரு குழந்தை டாக்டராக இருந்து மருந்து எழுதிக் கொடுக்கும். பொம்மை யின் தாயான குழந்தையின் முகத்தைப் பார்த்திருக்கிறீ்ர்களா? சோகம் வடியும். இதுதான் சித்தி’. தானே அதுவாக ஆதல். வீரன் என்பவனுக்குத்தான் வில்லும் அம்பும் தேவை. சுத்த வீரனுக்கு அது தேவை இல்லை.
மா.அரங்கநாதன் நம்மை யோசிக்கச் சொல்கிறார். அவர் கதையில் பல பாத்திரங்கள் நட்சத்திரத்தை, வானத் தைப் பார்த்துக்கொண்டு அப்படியே நிலைகுத்தி இருப்பார்கள்.
அந்தச் சுற்றுலாக் குழுவுக்கு 20 பேர்தான் என்று முதலில் தீர்மானம். 21 நல்ல நம்பர் என்பது குழுத் தலைவரின் எண் கணித நம்பிக்கை. முத்துக்கருப்பன் இணைக்கப்படுகிறார். சமதரையில் நடந்து படிக்கட்டுகளில் கீழே வந்தால் அந்தக் கோயில். அம்மன் சந்நிதியில் கூட்டம். ஒரு மூதாட்டி நாராயணிஎன்று பக்கத்து வீட்டுக்காரியைக் கூப்பிடுவது போல அம்மையை அழைத்து அரற்றுகிறாள். இறைவி பக்கத்து வீட்டுக்காரிதான். எல்லோரும் பேசிக்கொண்டு, அம்மனில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு சில பெண்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இடை இடையே அம்மே அம்மேஎன்று ஒரு சத்தம். அது அப்பெண்கள் போடும் சத்தம் இல்லை. அடிக்கடி கேட்கும் சத்தம். வேறு எங்கிருந்தோ வேறுவகை உச்சரிப்புடன் அதே சத்தம். அந்த ஒலியை தான் எப்போதுமே கேட்டுக் கொண்டிருப்பதாக முத்துக்கருப்பன் நினைவுகூர்ந்தார்.
அவன் நினைவு பின்னோக்கிச் செல்கிறது. ஒரு தொன்னூறு ரூபாய் விவகாரம் அது. எங்கிருந்து கிடைக்கும்? அப்பாவின் பாக்கெட்டில் இருந்துதான்.
சின்ன அறை. அப்பா கட்டிலின் மேலும் அம்மா தரையில் பாய் விரித்தும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவன் பணம் எடுத்துக்கொள்கிறான். பணத்தோடு கடிதம் ஒன்றும் கைக்கு வருகிறது. அதை மீண்டும் பையில் வைக்கத் திரும்புகிறான். அவன் கால்பட்டு பெரிய இரும்பு கம்பி சாய்ந்தது. அதன் கீழே அம்மா படுத்திருந்தாள். திருடன் வேலை என்று போலீஸ் எழுதியது.
முத்துக்கருப்பனுக்கு அவன் இப்போது லட்சாதிபதி - மீண்டும் அந்த அம்மேஎன்ற சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. தாமதம் செய்ததால், சுற்றுலாக் குழு போய்விட்டிருந்தது. ஏழு மைல் விடுதிக்கு. நடக்கத் தொடங்குகிறான் முத்துக்கருப்பன். அவன் சென்று சேர்ந்த இடம் போலீஸ் கமிஷனர் ஆபீஸாக இருந்தது.
இந்தியத் தத்துவத்தோடு நவீன கதை சொல்லியாக உருவானவர் மா.அரங்கநாதன். தத்துவம் அவரது கதைகளில் துருத்திக்கொண்டு இருப்ப தில்லை. கால் இடித்துக்கொண்டால், ‘ஐயோ கடவுளே…’ என்கிற சாதாரண மனிதர்களின் எழுத்தாளர் அவர். புதுமைபித்தனின் இன்றைய நவீன, சுயமான பதிப்பு. காக்கைச் சிறகினிலே என்றவுடன் கண்ணபிரானிடம்தானே வந்துசேர வேண்டியிருக்கிறதுஎன் கிறார் மா.அரங்கநாதன் பாரதி நினைவுகளோடு.
தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன்.
- நதி நகரும்

 

 

கதாநதி 9: பவா செல்லதுரை - பாறையில் முளைத்த தனிச் செடி

கோயில் சிலைகள் அழகு என் கிறோம். ஆனால், அவற் றைத் தனக்குள் வைத்திருக் கும் பாறைகள் எத்தனை அழகு என் கிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை. கற்பாறைகள் எவ்வளவு சதுரம், கோணம், ஒன்றுபோல ஒன்று இல்லாத அற்புத வடிவு. எந்தச் சிற்பி இந்தப் பாறைகளை இத்தனை விதமாக செதுக்கி இருப்பான்? இந்த வியப்பைத்தான் ஒரு கலைஞன் தனக்குள் வைத்திருக்க வேண்டும். புல்லை நகையுறுத்தியது யார்? பூவை வியப்பாக்கியது யார்என்கிறார் பாரதி. பவா செல்லதுரை, இந்த வியப்பில் இருந்துதான் கதைகளைக் கொய்கிறார்.
இரு கைகளின் விரல்கள் அளவுக்குத் தான் அவர் கதைகள் எழுதி இருக்கிறார். நிறைய கட்டுரைகள் உயர் தரத்தில் எழுதியிருக்கிறார்.
பவா செல்லத்துரையின் அருமை யான கதை ஒன்றைச் சொல்லப் போகிறேன்:
அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந் தான். சுற்றி நின்றவர்கள் முகங்களின் மரணமேறி இருந்தது. அவன் தலை மாட்டில் ரங்கநாயகி கிழவி பதற்றமின்றி அமர்ந்திருந்தாள். கட்டிலோடு கட்டப் பட்டவனின் மரணத்தின் அவசியம் கிழவிக்குச் சொல்லப்பட்டது. அவனைப் பிடிக்கப்பட்டதின் அதிகபட்ச கஷ்டங்கள் சொல்லப்பட்டன. கிழவியின் முகம் இருண்டது. புள்ளத்தாச்சிப் பெண் களுக்கு குச்சி வைத்து ரத்தப் பெருக்கில் புரளும் சதைப் பிண்டங்களை வாரி வீசிய கைகள்தான் அவளுடையது. ஒரு முழு மனிதனின் மரணம்நடுக் கம் கொண்டாள் அவள். எனினும் ஊரா ருக்குக் கட்டுப்படுவதாகக் சொன்னாள்.
‘‘இந்தப் பகலுக்கும் மலைக் காட்டுல சுத்தி விஷத்தழை பறிச்சாறேன். இருட் டினப்புறம் தழையை அறைக்கனும். எனக்கு ரெண்டு வெண்கல சருவச் சட்டி வேணும். விடியற நேரம் நாலு ஆள் அவனைத் திமிராமப் புடிச்சுக்கனும். அவன் ரெண்டு கையும் சருவச் சட்டியில் இருக்கிற மாதிரி பிடிச்சுக்கனும். ஒரே ஒரு மணிநேரம். ஆளு விரைச்சுடுவான்…’’
கண் திறவாமல் கிடந்தான், கயிற்றுக் கட்டிலில் பொட்டு இருளன். அவன் சாகசங்கள் பேசப்பட்டன.
பஞ்சம் தலை விரித்தாடிய காலம் அது. அந்த ஈரமற்ற நாட்களில் மனிதர்கள் உலர்ந்து, காய்ந்து கருகினார்கள். பிள்ளை பெற்ற பெண்களின் முலைக் காம்புகள் பச்சைக் குழந் தைக்கு சொரிய ஒரு பொட்டுப் பாலின்றி வெடித்திருந்தன. தண்ணி முட்லான் செடிகள் பள்ளி விட்டகன்ற பிள்ளை களுக்கு நம்பிக்கையின் மரணத்தைத் தள்ளிப் போட்டன. குழந்தைகள் கிழங்கு தோண்டி ஏமாந்தார்கள். ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வலை தோண்டி ஏமாந் தன. வண்டிப் பாதைகளில் பாம்புகளின் எலும்புக் கூடுகள் கிடந்தன. அம்மனுக்குக் கூழ் ஊற்றி அவள் கண்களில் மிஞ்சி இருக்கும் அருளை வேண்டுவது என்று முடிவு செய்தார்கள். குதிர்களைத் துடைத்து, பானைகளை அலசி, கதிர் அறுத்து வயல்களில் சிந்திக் கிடந்த எட்டு மரக்கால் கேழ்வரகும் அஞ்சு மரக்கால் கம்பும் கூழாக ஆயத்தம் செய்தார்கள். அதில் கை வைத்தான் திருடன். உயிர் விட இருக்கிறான்.
உரல் குடையப்பட்டு கம்பு இடித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. யாரோ? நிழல். திரும்புகிறாள். மூன்று பெண் குழந்தைகளுடன் ஒருத்திஅந்தக் குழந்தைகள் பார்வையாலேயே மாவைத் தின்று கொண்டிருந்தன.
‘‘கெழக்கத்தி பொம்மனாட்டியா நீ... கழுத்துல ஒண்ணேயும் காணோம். புருஷன் செத்துட்டானா... மாவு வேணுமா?’’
‘‘ஆமா. என் புள்ளைங்களுக்கு. நாளைக்கே திருப்பி தர்றேன்.’’
‘‘அதெப்படி நாளைக்கே திருப்பி தருவே?’’
‘‘நாளைக்குத் திருப்பித் தந்துடு வேன்.’’
‘‘அதான் எப்படி?’’
‘‘நாளைக்கு சத்தியமா திருப்பித் தந்துடுவேன். என் புள்ளைங்க வயிறு குளிரனும் தாயி.’’
அவள் குரலில் குழைந்திருந்த கனிவு, அதுவரை அவள் கேட்டிராதது. நிமிடத்துக்கு நிமிடம் வேறுபட்ட அவள் வார்த்தைகளுக்கு இவள் ஆச்சரியப்பட்டாள். அந்த வார்த்தையில் காய்ந்து வெடித்திருந்த அவள் முலைக் காம்புகள் பால் சொரிந்தது மாதிரி உணர்ந்தாள்.
‘‘சட்டி வெச்சிருக்கியா தாயி.’’
அவள் மூத்த மகள் கருஞ்சட்டியை நீட்டினாள். கம்பம் மாவு சட்டியில் நிரம்பியது. போடபோட... நிரம்பு கிறது. இன்னும்இன்னும்... பாறையின் குழி அவள் மார் மாதிரி சுரந்து, நிரம்பிக்கொண்டே இருக்கிறது. அவள் இடக் கண் முந்திக்கொண்டு ஒரு சொட்டை உதிர்க்கிறது.
காலம் கருணையில் நிரம்பி வழிந்தது.
உச்சி மத்தியானத்தில் மாரியம்மன் சிலையில் இடக் கண்ணில் இருந்து ஒரு சொட்டு விழுந்ததைப் பார்த்ததாக ஒருவன் சொன்னான். விஷத் தழை சேகரித்த ரங்கநாயகியின் நெற்றிப் பொட்டில் அத்துளி விழுந்தது.
வானம் கிழிந்து ஊற்றுகிறது. உக்கிரம் குறையாத மழை. இரவு முழுக்க மழை. மழை ஓய்ந்தபோது பத்து இருபது பேர் வந்து சேர்ந்தார்கள். கட்டிலில் கட்டப்பட்டிருந்த இருளன், தான் மரணத்தின் பற்களில் நசுங்கப் போகும் கணத்தை நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால், அவர்களின் முகங்களில் தெரிந்த கருணை ஒரே கணத்தில் அவன் நினைப்பை மாற்றிப் போட்டது.
காசிரிக்கா நாரின் இறுக்கம் தளர்த்தப்பட்டு, கட்டு அவிழ்க்கப்பட்டது. புஜத்தில் கசிந்த ரத்தம் கண்டு அவர்களில் பலர் இச்கொட்டினார்கள். அவர்கள் முகங்கள் வன்மமற்று, குழந்தை முகங்களாகி புன்னகை புனைந்திருந்தது.
‘‘இனி ஜென்மத்துக்கும் திருடாத. மாரி யாத்தா கண் தொறந்து மழை கொடுத் திருக்கா. போபோய்ப் பொழைச்சுக்க.
எல்லோர் குரலும் நனைந்திருந்தது. ஊர் ஈரத்தில் நனைந்திருந்தது!
பவா செல்லதுரையின் முதல் கதை 1991-ல் வெளிவந்துள்ளது. இன்று வரை சுமார் 25 கதைகள் எழுதி இருக்கிறார். காட்டு யானை ஒடித்துப் போட்ட தழைகளில் இருந்து வெளிப்படும் பசிய மர வாசனை, பவாவின் வார்த்தைகளில் இருந்து வந்து மனதை நிறைக்கிறது. மலை சார்ந்த, காடு சார்ந்த புலத்தை பவாவுக்கு நிகராக இத்தனை நெருக்க மான காதலுடன் யாரும் எழுதிய தில்லை. இளம் பெண்ணால் நேசிக்கப் படுவதை அறிய நேர்ந்த, ஒரு மூத்த பிரஜை அடைந்த மன விகாசத்துக்கு நிகராக அவர் தமிழ் எழுதுகிறார். நீரோட்டத்துக்குக் கீழே பளிச்சிட்டு விளங்கும் கூழாங்கல்லைப் போல், அவர் வாழ்க்கையை நேசிப்பதை அவர் கதைகள் குறைவான வார்த்தைகளில் அழுத்தமாகப் பேசுகின்றன. நாடு களின் பாஷையை நாம் அறிவோம். வனங்களின் பேச்சை நாம் கேட்டு இருக்கிறோமா? பாறைகள் பேச்சை, மரங்களின் உரையாடலை, மலர்களின் சங்கீதத்தை, பச்சைக் கொடிகளின் நாட்டியத்தைப் பவாவின் கதைகள் மொழிமாற்றம் செய்கின்றன.
உடம்பெங்கும் சொடலி முள் தைக்க, எக்கி எக்கிப் பறித்த சொடலிப் பழமும், ஜீவிதம் முழுக்க நானறியாத ருசியோடு சப்பிப் போட்ட காரப் பழமும், விரிந்த காடெங்கும் மின்சார பல்புகள் பூத்தது போல் பழுத்திருந்த நொணாப் பழத்தையும் கலாப் பழத்தின் புளிப்பு ருசியையும் எவருக்கும் எடுத்துத் தர விருப்பமின்றி, என் ஜோபியில் மறைத்து வைத்துக்கொள்ளவே விரும்புகிறது மனம்என்கிறார் பவா. ஆனால், ஜோபியில் இருந்து சிந்திய பழங்களே கதையாகி இருக்கின்றன.
பவாவின் கதைப் பயணத்தில் சில கதைகளின் சில வரிகள்:
கணவனுடன் முதன்முதலாக ஷாப்பிங் போய்வந்த மருகள், மாமியாரிடம் புதுப் புடவையைக் காட்டி, நானூற்றி அம்பது என்கிறாள். ‘‘பொடவை, நகையெல்லாம் அப் புறம் பார்த்துக்கலாம். மொதல்ல இருபத்திரெண்டாயிரம் கடனை அடைக் கிற வழியைப் பாருங்கஎன்கிறாள் மாமியார்.
பவா எழுதுகிறார்: இந்த வார்த்தை யைக் கொட்டும்போது இருந்த அம்மாவின் முகம் இந்த ஆல்பத்தில் ஒரு இடத்திலும் பதிவாகவில்லை. (முகம்’ - சிறுகதையில்...)
ஜேக்கப் சாருக்கு கிராஜுட்டி, பென்ஷன், பி.எப் பணம் எதுவுமே கைக்கு வரலை. கல்யாணத்துக்கு நிற்கும் இரண்டு பெண்கள். கொஞ்சம் கொஞ்ச மாக ஜேக்கப் சார் சமநிலை தவறி மென் டல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். ஆஸ்பத்திரியில் அவரைப் பார்க்க வந்த மனைவியிடம், ‘‘மேடம் என் பொண் ணுங்க கல்யாணம், எனக்கு ஒரு ஆப் ரேஷன் எல்லாம் நடந்தாகனும் மேடம். கொஞ்சம் யாருகிட்டயாச்சும் சொல்லி ஒதவி பண்ணுங்க மேடம்’’ என்கிறார். அந்த மனைவி கதை சொல்லியிடம் இதைச் சொல்லி, சர்ச் வாசல் என்பதையும் மறந்து வெடித்து அழுதார். (வேறு வேறு மனிதர்கள்’ - சிறுகதையில்...)
இம்மாதிரி வாழ்வின் பல தெருக் களிலும் விகசிக்கும் ஜீவிதத்தை எழுதி இருக்கிற பவா செல்லதுரையின் கதைகளில், சோடை என்று எதையும் சொல்ல முடியவில்லை. காரணம், எழுது என்று மனம் உந்தும்போது மட்டுமே அவர் கதை எழுதுகிறார்.
நாகரிக நகரங்கள் புறக்கணித்த காடுகள், மலைகள், மரங்கள், செடிகள், கொடிகள் ஆகிய ஜீவன்களை, அவற்றின் ஆதரவில் வாழும் மனிதர்களை எழுது பவர்கள் அருகிப் போன காலத்தில், பவா செல்லதுரை என்று ஒருவர் பாறைக்குள்ளிருந்து முளைத்த தனிச் செடியாக நிற்கிறார்.
சூரியனும், சந்திரனும் அவர் மேல் வீசுகிறார்கள். ஆனால், அவரோ மண் ணைப் பார்த்துக்கொண்டு தலையசைத் துக் கொண்டிருக்கிறார். நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறைசிறுகதைத் தொகுதி - வம்சி வெளியீடு.
- நதி நகரும்

 

 

 

கதாநதி 10: ஆதவன் - மனதை மொழிபெயர்த்த கதையாளர்!

நகரம் சார்ந்த படித்த இளைஞர்களின் ஆசை, நிராசை, லட்சியம், வெறுமை, எதிரி யார் என்று அறியாத கற்பனை கோபம், பிறர் மீதான அலட்சியம் ஆகியவைகளை ஆதவன் அளவுக்கு மிக உயர் தரத்தில் எழுதியவர் இல்லை. ஆதவனின் சிறுகதைகளும், ‘காகித மலர்கள்நாவல் போன்ற படைப்புகளும் தனித்துவம் கொண்டவை. முதலில் இரவு வரும்என்ற தொகுதிக்கு 1987-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர் ஆதவன்!
ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும்என்ற ஆதவன் கதையைப் பார்ப்போம்:
நாகராஜன் முடி வெட்டிக் கொள்ளத் தெருவில் கால் வைக்கிறார். ஓர் இளைஞன் மோட்டார் சைக்கிளில் சீறிப் பாய்ந்து செல்கிறான். அவருக்குப் படபடப்பு குறைய சில நிமிடங்கள் பிடித்தன. அந்த இளைஞன் மீது அவருக்கு வெறுப்புணர்ச்சி ஏற்படுகிறது. சலூனில் நாலைந்து பேர் காத்திருக்கிறார்கள். ஓர் இளைஞன் முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். இன்னொருவன் சினிமாப் பத் திரிகையைப் பார்த்துக் கொண்டிருக் கிறான். அவன் கையில் சிகரெட் புகைகிறது. அந்த முள்ளங்கி பையனும் சிகரெட் பையனும் நிச்சயம் ரவுடிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். சீறிப் பாய்ந்த அந்த மோட்டார் சைக்கிள் பையன் கோஷ்டி.
அங்கு இருந்த ஒரு தினசரியை எடுத்து அவர் வாசிக்கத் தொடங்கினார். அவர் மனைவி கல்யாணி இருந்தவரை முடிவெட்டிக்கொள்ளும் நாளை ஒரு விழாவாகக் கொண்டாடுவாள். அன்று ஸ்பெஷலாக ஏதாவது பலகாரம் செய்வாள். வீடு போனால், இன்னொரு அரை காபி, எண்ணெய், வெந்நீர் எல்லாம் தயாராக இருக்கும். கல்யாணி அவரை ரொம்பத்தான் சீராட்டியிருக்கிறாள்.
பசித்தது. வீட்டில் பிரட் இல்லை. பிரட் தொழிற்சாலையில் ஸ்டிரைக். அவர் மருமகள் தயா உப்புமா பண்ணியிருந் தாள். கேவலம் உப்புமாவைக் கூட மோசமாகப் பண்ணமுடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறாள் அவள். (உப்புமாவை ஒழிக்க இந்த நாட்டில் யாரும் இல்லையே)
அவர் மகன் பல்கலைக்கழகத்தில் லெக்சரர். அவர் மருமகளும் கூட லெக் சரர்தான். ஒரு குப்பைப் பத்திரிகையில் தலைப்புச் செய்திகளை யும் காசாரத் தலையங்கத்தையும் படித்துவிட்டு, அக்கருத்துக்களைத் தன் கருத்துகளாக அந்நாள் முழுக்கப் பேசித் திரிபவள்.
அவர் முடி வெட்டிக்கொள்ள அழைக்கப்பட்டார். இந்த நாவிதர் 35 வயதுக்காரர்தான். இவரைக் கண்டுபிடிக்கத்தான் எத்தனை அலைச் சல்? அவர் விரல்கள் தலையிலும் கழுத்திலும் முகத்திலும் தடவுவதில், ஒரு கண்ணியமும் மரியாதையும் தெரிகின்றன. வெளியே சென்றிருந்த அந்த வெள்ளரிப் பையன் திரும்பி வருகிறான். சலூன்காரரைப் பார்த்து, ‘‘நீ என்னப்பா, எனக்கு அப்புறம் வந்தவர்கெல்லாம் பண்ணுகிறாய்? நீ என்ன கிழடுகளுக்குத்தான் கடை திறக்கிறாயா?’’ என்று கிண்டலாகப் பேசுகிறான். இன்னுமொரு பையன், நாவிதரைக் குறித்து அவரது ஆண்மையைச் சந்தேகிக்கும் வார்த்தைகளை வீசினான்.
நாகராஜனுக்குப் பொறுக்க முடிய வில்லை. அவர் கோபம், நாவிதருக்குச் சாதகமாக இருக்கும் என்று தோன்றவில்லை. அவருக்கு உடல் பலமும் இல்லை. மனம் குமைந்து தெருவில் இறங்குகிறார். பயங்கர சத்தத்துடன் அந்த மோட்டார் சைக்கிள் பையன் இவரை இடித்துவிடுவது போல் கடந்து போகிறான். வீடு சேர்ந்து குளித்து சாப்பிட்டுவிட்டு, உறங்கி எழுகிறார். இன்று காபி பரவாயில்லை. காபிகூட சகிக்க முடியாமல் ஆகிக் கொண்டிருக்கிறது.
முன்னறையில் பேச்சுச் சத்தம் கேட்கிறது. பழக்கமான குரல்கள். இதெல்லாம் ஒரு வகை சோஷியல் கேதரிங்வாழ்வில் முன்னேற்றப் போகும் படிக்கட்டு. ஆனால், சொல்லப் படவேண்டிய சொல், அன்புச் சந்திப்பு. வந்திருப்பவர் புரொஃபசர் மோட்வானியும் அவர் பெண்டாட்டியும்.
நேற்றுகூட மோட்வானியோடு நாகராஜன் கருத்துரீதியாக மோதினார். ‘‘பல்கலை மூடப்பட்டிருக்கிறது. மாணவர் ரகளை செய்கிறார்கள்’’ என்றார் மோட்வானி நேற்று. நாகராஜன் எதிர்நிலை எடுத்தார். ‘‘மாணவர்களைப் பெரியவர்கள் புரிந்துகொள்ள விரும்பு வதில்லை’’ என்றார்.
நாகராஜன் டிராயிங் ரூமுக்கு வந்து விருந்தினர் முன் அமர்ந்தார். இப்போது புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. மோட்வானி அடுத்தபடியாக துணைவேந்தர் ஆக இருக்கிறார். இந்திய அரசியலில் இடது, வலது, நடு என்று எல்லா இடத்திலும் அவர் செல்வாக்கு வைத்திருந்தார். ஆகவே, அதை எந்தக் கணமும் மறக்கக் கூடாத இடத்தில் நாகராஜனின் மகனும் மருமகளும் இருந்தார்கள். இருவரும் பல்கலையில் ஆசிரியர்கள். அதோடு, அவர் மகன் தீசிஸ் ஒப்படைக்க வேண்டிய தருணம். அவனுக்கு வழிகாட்டியும் துறைத் தலைவரும் மோட்வானிதான்.
‘‘என்ன, யுனிவர்சிட்டியை எப்போது திறக்கப் போகிறார்கள்?’’ என்றார் நாகராஜன்.
‘‘என்னைக் கேட்டால் நான் வைஸ் சான்சிலர் அல்லவே’’ என்றார் மோட்வானி.
‘‘அட்லீஸ்ட் இதுவரை இல்லை’’ என்றார் தயா. அவர் மருமகள் ஆண்களுடைய ஈகோவுக்குத் தீனி போடுவதில் அதீத சாமர்த்தியம் கொண்டவள். மோட்வானி அமுத்த லாகப் புன்னகை புரிந்தார். திடீரென நாகராஜனுக்கு அவருடைய ஈகோவை புண்படுத்தும் ஆசை வந்தது.
‘‘எனக்கு மாணவர்களின் எதிர் காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது’’ என்றார் அவர்.
அவர் மகன் முகத்தில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நாகராஜன், ‘‘அரசியல்வாதிகளின் விளையாட்டுக் குச் சர்வகலாசாலையும் ஒரு நிலைக் களனாகிவிட்டதே’’ என்றார். பொடி வைத்த வாக்கியம்.
‘‘நீங்கள் என்னைப் புரிந்துகொள்ள விரும்பவில்லை’’ - மோட்வானி.
’’ஜெனரேஷன் கேப் இல்லையா?’’ என்றார் நாகராஜன் மிஸஸ் மோட் வானியைப் பார்த்து. அவள் அவர் பார்வையைத் தவிர்த்தாள். அண்மையில் அவள், பிரபலமான இடதுசாரிப் பத்திரிகை ஒன்றில், ‘மாணவர்கள் அலை வரிசையில் சிந்திக்கக் கூடிய இளம் லெக்சரர்கள் நிறைய வேண்டும்’’ என்று விலாசித் தள்ளியிருந்தாள். அவள் கவர்ச்சியில் கால் பங்குக் கூட இல்லாத மிஸ்டர் மோட்வானியைப் பார்க்கும்போது, அவளுடைய தாகம் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.
தயா உள்ளே இருந்து டிரிங்ஸ் ஊற்றிய தம்ளர்களுடன் வந்தாள்.
சியர்ஸ்என்றபடி எல்லோரும் தம்ளர் எடுத்துக்கொண்டனர். நாக ராஜன் குடிப்பதில்லை. அவர் மருமகள் வெற்றிகரமாக அவரை ஓரம் கட்டிவிட்டாள். இப்போது மருமகள், முன்னாள் துணைவேந்தர் இருவரை கேலிசெய்து அவர் பேசுவதுபோல் அபிநயம் பிடித்தாள். அந்தத் துணைவேந்தர் பெரிய படிப்பாளி. நாகராஜனுக்கு அவர் மேல் மரியாதை உண்டு என்பது தயாவுக்கும் தெரியும்.
வெளியே வந்தார் நாகராஜன். அவர் பேர்த்தி அனு விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டு உரிமையாளர் எதை எதையோ பேசிக்கொண்டிருந்த போது அத்தகவலையும் சொன்னார். அந்தச் சலூன் உரிமையாளர் ஒரு இளைஞனால் கத்தியால் குத்தப்பட்டார் என்பதும் ஒரு தகவல். முள்ளங்கி வெட்டித் தின்ற அந்த இளைஞன்தான். தெருவில் பயங்கரமான ஓசையோடு அந்த இளைஞன் அவரை அதிரச் செய்தபடி விரைந்துகொண்டிருந் தான்.
தாத்தா வீட்டுக்குப் போகலாமா?’ என்றாள் அனு. அருகில் வந்து அவர் அந்தக் குழந்தையின் பரிசுத்த மான ஸ்பரிஸத்தால் தன்னைக் கழுவிக்கொள்ள விரும்பியவர் போல, அவளை அவசரமாகத் தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டார்.
ஆதவன் நிகழ்ச்சிகளை, பேச்சுகளை மட்டும் எழுதுவதில்லை. அந்த வகையில் அவர் கதைகள் யதார்த்தம் போலத் தோன்றினாலும் அப்படி இல்லை. மனிதர்களின், உரையாடலின் பின்னிருந்து ஊக்குகிற, இயக்குகிற மனசை எழுதுகிறார். பொம்மலாட்டப் பாவையை இயக்குகிற கயிறு போன்று மனிதர்களை இயக்குகிற மனத் தூண்டுதலை எழுதுகிறார். மனதின் விசித்திர நடனத்தின் கலை வடிவமே அவர் கதைகள். முன்னாள் நின்று பேசும் மனிதர் பேச்சில் அல்ல - பேச விரும்பும் பேச்சை அல்லது மறைக்கும் பேச்சை எழுதியவர் ஆதவன்.
முத்தமிடப் போகும் அந்த இருவரும் முத்தமிட்டுக் கொள்ள முனையும் அந்த மூன்று நிமிஷ அமர கணத்தில், உலகம் ஒரு கணம் மூச்சை இழுத்து இதயத்துள் வைத்துக்கொண்டிருக்கும் அந்தப் பிரளயத்துக்கு முந்தைய பேரமைதி அல்லது பெரும் புயலுக்குப் பிந்தைய பெரும் அமைதியின்போது, அவன் இப்படிப் பேசுகிறான். பேச்சு தேவையே இல்லாத கணத்தில் அவன் இப்படி பேசுகிறான்.
‘‘நான் வழக்கமாக ஏறும் பஸ் ஸ்டாண்டில் ஒருவன் ஓடும் பஸ்ஸில் தொத்தி ஏறும்போது சறுக்கி விழுந்தான். பின்னால் வந்த பஸ் அவன் மேல் ஏறியது’’
எல்லாம் குலைந்து போயிற்று.
அவன் ஏன் அந்த அற்புதக் கணத்தில் மரணத்தைப் பற்றிப் பேசினான்? ஆதவனைக் கேட்டால் முத்தமும் மரணமும் ஒன்றுதான் என்று சொன்னாலும் சொல்லக்கூடும். உரையாடல்களைக் காது கேட்கும் போது, உரையாடலைக் கட்டமைக்கும் மனத்தின் கூத்தாட்டத்தை மொழி பெயர்த்த தனித்துவமான பெரும் கலைஞர் அவர்.
நிறைய தற்கொலை. திடீர்ச் சாவு, மரணம் பற்றி எழுதியவர் ஆதவன். சிருங்கேரி ஆற்றில் குளிக்க இறங்கியவர் சுழலில் சிக்கி 45 வயதில் மரணம் அடைந்தார்.
இந்திரா பார்த்தசாரதி தொகுத்த ஆதவனின் ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும்என்கிற சிறுகதைத் தொகுதியை நேஷ்னல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.
- நதி நகரும்

 

 

 

 

கதாநதி 11: தேன்மொழி - உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர்

தேன்மொழி, கவனம் கொள்ளத்தக்க கவிஞராகத் தெரிய வந்தவர். கவிதைக்குள் சொல்லப்படாத மீதம் இருப்பதை உணர்ந்து கதைகள் எழுதத் தொடங்கினார். விவரிப்பதற்கும் விளக்குவதற்கும் கதைகள் விஸ்தாரமான இடம் தருவதாக அவர் உணர்ந்திருக்கிறார். கடந்த ஐந்தாண்டுகளில் தேன்மொழியின் கதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 2009-ல் வந்த நெற்குஞ்சம்சிறுகதைத் தொகுதியின் பின் அட்டையில் தமிழின் எதிர்காலம்என்று தேன்மொழி பற்றி இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் 10 இளம் எழுத்தாளராக இந்தியன் எக்ஸ்பிரஸ்நாளேடு தேன்மொழியைத் தேர்வு செய்தது. எதுவும் பொய் இல்லை. எடுத்துக் கொண்ட விஷயத்தாலும், முதிர்ந்த வெளிப்பாட்டினாலும், கலாபூர்வமான படைப்பாக்கத்தாலும் அப்பாராட்டுரைகள் முற்றும் பொருந்தி நிற்கின்றன இந்த எழுத்தாளரை.
கவிதை உரைநடையாகும்போதும் கவிதை இருக்கவே செய்கிறது. உணர்வுத் தளத்தில் உரைநடைக்குள் விவரிக்கப்படும் நிகழ்வுகள், கவித்துவமாக உருமாற்றம் பெறுவதைத் தேன்மொழியின் இரண்டு கதைகள் மெய்ப்பிக்கின்றன. அதில் ஒன்று யசோதரா. புத்தன் என்று அறியப்படும் சித்தார்த்தனின் மனைவியான யசோதராதான்.
கதையின் தொடக்கமே இப்படி அமைகிறது:
 யசோதரா தன் நீண்ட கூந்தலை சிறிது சிறிதாக வெட்டிக்கொண்டிருந்தாள். யசோதரா தலையை மழித்துக் கொண்டிருந்தாள். காற்றும் வெளியும் கருமை படிந்துபோயின. அவள் தலையைச் சுற்றிக் கருப்பு ஒளிவட்டம் ஒன்று சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அவள் சித்தார்த்தனை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். நாளை அவன் வரப் போகிறான். இப்போது அவன் இளவரசர் இல்லை. பிச்சைப் பாத்திரம் கையிலேந்தி வாழும் துறவி. ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஞானி. (புத்தனாகும் ஆசையால்தான் அவன் வெளியேறினான். ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்பது தமிழ் மந்திரம்)
போதிசத்துவன் உபதேசித்துக் கொண்டிருந்தான். அவன் மொழி பெண்களின் மேல் புழுதி வாரி இறைத்துக் கொண்டிருந்தது. அவனின் நான்கு உண்மைகளும் எட்டுப் பாதைகளும் பெண்களைத் தவிர்த்துவிட்டிருந்தன. துணைக் காலற்ற சொற்களைப் போல அவன் போதனைகள் பெண்கள் அற்ற உலகத்தைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தன.
பெண்களைச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டால், ஆயிரம் வருடத்தில் மறைய வேண்டியது ஐநூறு வருடத்தில் மறைந்து போகும். பெண்ணில் இருந்து தப்பித்துக்கொள்ள நல்ல எண்ணங்களால் முகமூடியிட்டுக் கொள்ளுங்கள்.
புத்தனின் போதனைகளால் தெளிவு பெற்றவர்கள், இந்தப் பேச்சைக் கேட்டுத் திகைத்துச் சமைந்திருந்தனர். அவரவர் அவரது தாயை நினைத்துக் கொண்டார்கள். புத்தன் ஏன் இப்படிப் பேசுகிறான்? யசோதராவும் சங்கத்தில் இணைய ஆசைப்பட்டாள். புத்தன் இணங்கவில்லை. புத்தன் தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் சமாதானமா? போதி மர நிழல் புத்தனுக்குச் சாந்தியைத் தரவில்லையா?
அரண்மனைக்குள் இருந்த புத்தனை அவள் சென்று பார்க்கவில்லை. ‘‘வேண்டுமானால் புத்தனை இங்கு வரச் சொல். நான் அவரை வந்து பார்க்க மாட்டேன்'' என்று திட்டவட்டமாகச் சொன்னாள் யசோதரா.
யசோதரா அரண்மனைக்குள் ஒரு துறவியாக வாழ்ந்தாள். ஆபரணங்களை, மணப் பொருட்களைத் தவிர்த்தாள். மண் பாத்திரத்தில், உயிர் தரிக்கும் அளவே உண்டாள். புத்தன் வருவான். என் அறைக்கு என்னைக் காண வருவான். என்னிடமிருந்து விடைபெற்றுச் செல்ல வருவான். அது இன்னும் மிச்சமிருக்கிறது’.
யசோதராவின் தனித்த இரவுகள் ஏழு ஆண்டுகளில் உருமாறியிருந்தன. பிணியும் மூப்பும் மரணமும் சித்தார்த்தனைத் துரத்திக் கொண்டிருக்கின்றன. அவன் ஓடிக் கொண்டிருக்கிறான்.
புத்த சந்நிதியில் சித்தார்த்தன் வலது காலை எடுத்து வைத்தபோது, யசோதரா அரண்மனைக்குள் ஞானஒளி பெற்று புத்தராக மாறியிருந்தாள். குழந்தை இராகுலன் மண்ணில் விழுந்த அந்த ரத்தக் கவிச்சி நிறைந்த அறைக்குள் வந்து, பின் வெளியேறிய அந்த நள்ளிரவின் நிட்சியாக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அறைக்குள் பிரவேசிக்கிறான் சித்தார்த்தன்.
யசோதராவின் நாபியில் திரண்டிருந்த காதல் சுருண்டு வலிந்தது. அது அன்றைய இரவு தந்த பிரசவ வலியை விடவும் கடுமையாக இருந்தது. நாபியில் ஒரு வெடிப்பு நிகழ்ந்த போது, புதையுண்ட நிலம் போல அவள் புத்தனைத் தழுவி இருந்தாள்.
கதையின் கடைசிப் பகுதி இது:
புத்தன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டான். அவள் இன்னும் சிறிது நாளில் அவனோடு வர இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். அன்று சொல்லிக் கொள்ளாமல் விடைபெறாமல் யசோதராவின் சார்த்திய கண்களைக் கடந்து சென்ற சித்தார்த்தன், இப்போது புத்தனாக அவள் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்து விடைபெற்றுக் கொண்டான்.
ஊருணி நீர்போல உள்ளே மறைந்திருந்த சித்தார்த்தனுக்கான காதல்மறைந்தது. புத்தன் மேல் கருணை பொங்கி வழிய, இணைந்திருந்த மேகங்கள் கலையும் காற்றில் விடைபெற்றுக் கொள்வதுபோல, புத்தனுக்கு மென்மையாக விடை தந்தாள் யசோதரா'.
தேன்மொழி, கவிதைக்கும் உரைநடைக்கும் இடையேயான எல்லைக் கோடுகளை அழிக்கும் மொழியில் எழுதுகிறார். அவருடைய தனித்துவம் பொருந்திய மொழி அர்த்தங்களை, உணர்ச்சிகளை முழுதும் உள்வாங்கி வாசகர்களுக்கு மிச்சம் வைக்காமல் கடத்துகிறது. இதை யசோதராவிலும் ஆரிய மாலையிலும் மிகவும் அழகாகவும் இயல்பாகவும் செய்து காட்டுகிறார் அவர்.
தேன்மொழியின் புனைவுமொழி அடர்த்தியானது. அதே சமயம் விரல்களுக்கிடையே கசியும் நீரைப் போல ஈரம் கொண்டது. விரல்களோடு நகம் ஒன்றி வருவது போல அர்த்தமும் பாவமும் கூடி வருகிறது.
ஊமத்தை என்று ஒரு கதை. தாய்மையின் மேன்மை குறித்துப் பல லட்சம் பக்கங்கள் எழுதப்பட்ட பாரத புண்ணிய பூமியில் தம் பாட்டியைக் கள்ளச் சாராயக் கேஸில் மாட்டிவிட்டுப் பேரன்கள் தப்பிக்கும், வாசிப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் கதை.
அந்த நீதிமன்ற குமாஸ்தா வேலாயியைக் கூப்பிட்டார். அந்த வயது முதிர்ந்த அம்மாள் மெல்ல நடந்து வந்து கூண்டில் ஏறுகிறாள். நீதிபதி என்னமோ கேட்டார். கூண்டுக்கு வெளியே நிற்கச் சொல்கிறார்கள். அந்த மூதாட்டி கைகட்டிக் கொண்டு நிற்கிறாள். கள்ளச் சாராயம், அதில் கலந்திருக்கும் அட்ரோபின் பற்றியெல்லாம் நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
எதுவும் புரியாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார் அந்த மூதாட்டி. வேடிக்கை என்னவென்றால், அந்த மூதாட்டிதான் அந்தக் கள்ளச் சாராயத்தைக் காய்ச்சுகிறார் என்பதை நோக்கி அந்த வாதம், வழக்கு சென்று கொண்டிருக்கிறது. மூதாட்டியின் காதுகளில் ஊமத்தை என்கிற சொல், அழகுப் பூக்கள் பூக்கிற செடி ஒன்றை நினைவுபடுத்துகிறது. முடிவில், அந்த மூதாட்டி ‘‘என்னை இப்படிப் பண்ணிட்டீங்களே, நீங்க நல்லா இருப்பீங்களாடா?’’ என்று மண்ணை அள்ளித் தூற்றுகிறாள், பேரன்களைப் பார்த்து.
அவமானம், சிறை, ஊர் பழிப்பு எல்லாம் அவளை ஊமத்தைக் காய்களைத் தின்று உயிர்விடத் தூண்டுகிறது.
பணத்தில் கள்ளம் பார்க்கிறவர்கள். காதலில் கள்ளம் பார்க்கிறவர்கள், புருஷனில் கள்ளம் பார்க்கிறவர்கள், சாராயத்தில் கூட கள்ளம் பார்க்கி றவர்கள் வாழ்க்கையில் பார்க்க விரும்புவதில்லை. மனதின் தொந்தரவே இன்றி ஒரு மூதாட்டியைச் சிறைக்கு அனுப்புகிறது ஒரு குடும்பம்.
குழந்தைகள் பற்றி, மனநிலை தவறியவர்கள் பற்றி, பெண்கள் பற்றி, முதியோர்கள் பற்றித் தேன்மொழியின் இதர கதைகள், மிகச் சிறந்தவை. தமிழ்ச் சிறுகதையின் பரப்பை அகலமாக்கியும் ஆழப்படுத்தியும் இருக்கிறார் தேன்மொழி. தமிழ்நாட்டுப் பூலோகக் கோடுகள் தாண்டி, இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் ஆக்கத் தக்க பல கதைகளை இந்தக் கூலை பிறைஎன்ற தொகுதி தனக்குள் கொண்டிருக்கிறது.
தேன்மொழியின் கூனல்பிறைதொகுப்பை மணற்கேணி'ப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- நதி நகரும்

 

 

 

 

 

 

கதாநதி 12: கந்தர்வன் - தேர்ந்த கதைசொல்லி

கந்தர்வன் கதை ஒன்றைத் தாமரை இதழில் 1970-ம் ஆண்டு வாசித்தேன். தமிழில் இப்போது ஆளுமைகளாக நிலைபெற்றிருக்கும் ஆறேழு எழுத்தாளர்கள் அப்போது எழுதத் தொடங்கியிருந்தார்கள். தொடர்ந்து வந்த கண்ணதாசன்இத ழிலும் கந்தர்வனைப் பார்த்தேன். 1990-2000 காலகட்டத்தில், தமிழ் மொழியில் ஆகப் பெரிய கதை சொல்லியாகத் தன்னை ஸ்திரப் படுத்தியிருந்தார் கந்தர்வன்.
சிறுகதைஎன்ற கலை வடிவம், விளம்பலுக்கும் விரித்துரைப்புக்கும் வசனம் என்ற வகையில் இடம் கொடுப்பதுதான் எனினும், தேர்ந்த கலைஞர்கள் வார்த்தைகளை வீணடிப் பது இல்லை. வானம் இடிக்கிறதுஎன்று எழுதினால் கதை முடிவதற் குள் மழையால் கதை நனைந்திருக்க வேண்டும். கந்தர்வன் பல விஷயங் களைச் சொல்லாமல் உணர்த்திச் செல்பவர். ஒரு தேர்ந்த வார்த்தைக் கருமி அவர். கந்தர்வன் வாசகரோடு சேர்ந்து கதை எழுதுபவர். வாசகர்க்குச் சவுகரியமான சோபாவும் தனக்கு ஸ்டூலும் என்பதாக அவர் கவுரவிப்பவர். சாமானிய ஜனங்களோடு அவரும் முண்டாசு கட்டிக்கொண்டு நிற்பார். மத்தியதர மனிதர்களின் பாடுகளை அவர் அறிந்து எழுதியிருக்கிறார். அவர்களின் பாசாங்குகளை அவர் தெருவில் இழுத்துப் போடுவார். ஆக, கந்தர்வன் கதை எழுதுகிறார்.
கந்தர்வனின் 61 கதைகள் அடங்கிய கந்தர்வன் கதைகள்என்ற தொகுப்புக்கு முன்னுரை எழுதிய ஜெயமோகன், ‘காளிப்புள்ளேஎன்ற கதையைச் சிகரமான கதை என்கிறார். உண்மை. அதைச் சற்று பார்ப்போம்:
கதைசொல்லி இது என் பாட்டியின் கதைஎன்று கதையைத் தொடங்குகிறார். அம்மாவைப் பெற்றவள் அம்மாச்சி. அம்மாச்சியைப் பெற்றவள் பாட்டி. ஊர் முழுதும் இருந்த அவள் பிரயாத்துப் பெண்களில் அவளே அழகி யாக இருந்தாள். வலுமிக்கவள். அதை விடவும் யார் அழுதாலும் எதற்கு என்று கேட்காமல் தானும் அழு வாள், அழுபவளை விடவும் அதிக மாகவும் உண்மையாகவும். காளிஎன்ற அவள் பெயரை அன்பு காரணமாகக் காளிப்புள்ளேஎன்று சிறு பிள்ளை களைக் கூப்பிடுவதுபோல ஊர் கூப் பிட்டது. காளி, ஒரு கோடைக்காலத்தில் விதவையானாள். வளர்ந்த மகள், ஒரு மகன். மூன்றாம் நாளே, பால் செம்பை எடுத்துக்கொண்டு தொழுவத்துக்கு வந்துவிட்டாள். இன்னும் 30 நாள் முடியலையே என்றது சுற்றம். 'மகளைப் பார்க்கப் பாவமா இருக்கு. நான் எந்திருச்சி நடந்து திரிந்தாதான் என் மக அழுதறத நிறுத்துவாஎன்றாள் காளி. உதவிக்கு வந்த இளவட்டம் ஆம்பிளைகளைத் தள்ளி வைத்தாள். காடு கரை, மாடு கன்னு எல்லாம் அவர் கைப்பிடிக்குள் வந்து சேர்ந்தன.
ஊரில் பஞ்சம் வந்தது. வெள்ளாமை சுருங்கியது. நுங்கு வெட்டிக் குழந்தைகளின் பசி போக்கினாள். நாவல் பழம் பொறுக்கிக்கொண்டு வந்தாள். மேல வீட்டு வீரபத்ரன் ஒன்னா நம்பர் போக்கிரி. அவன் பார்வை சரியில்லை. அவன் மனைவி அண்மையில் இறந்து போயிருந்தாள். மூன்று பிள்ளைகள் தாயில்லாமல் தத்தளித்தன. ஒரு நாள் ஊர் பெரிய மனிதர் சகிதம் வந்த வீரபத்ரன் கொண்டுவந்த தாம்பாளத்தை அவனே காளிபுள்ளெயிடம் வலிந்து கொடுத்து, அவள் மகளைப் பெண் கேட்டான். காளி அழுது புரண்டாள். பெண்கள் துக்கம் கேட்க வந்தார்கள். என்றாலும் கல்யாணம் நடந்தது. அப்புறம், காளிப்புள்ளெ, மகள் வீட்டுக்கு உழைக்கத் தொடங்கினாள். மருமகனின் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்க வேண்டுமே. தன் பிழைப்பையும் பார்த்துக்கொண்டு மகள் வீட்டுக்கும் உழைத்தாள். பேத்தி பிறந்தாள். குழந்தைக்கும் உழைத்தாள். பேத்திக்கு ஒரு சூரன், பெரிய அழகன் வருவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால், பர்மாவில் இருந்து வந்த ஒரு சீக்காளிக்குப் பெண்ணைப் பேசி முடித்தான் அப்பன். மாப்பிள்ளை, மூல வியாதிக்காரன். உட்கார்ந்து எழுந்தால் வேட்டியில் ரத்தம் காணும்.
ஒரு மீன்பிடித் தகராறில் வீரபத்ரன் கொல்லப்படுகிறான். காளிப்புள்ளெ, தனியாக மகளோடு நின்று பலகாரம் சுட்டு விற்றாள். பேத்திக்கு ஊட்டினாள். பேத்தி புருஷனுக்கும் ஊட்டினாள். அவளுக்குப் பேரன் பிறக்க வேண்டும். ஆசை. கோயில் கோயிலாகச் சுற்றினாள். பேத்தி உண்டானாள். பேரன் (பூட்டன்) பிறந்தான். பேரன் தின்ன, முறுக்கும் அதிரசமும் சுட்டு அடுக்கினாள். மொச்சைப் பயிறு, தட்டைப் பயிறு அவித்து நெல்லுக்கு மாற்றாக விற்றாள்.
ஒரு நாள் டவுனில் இருந்து போட்டோ பிடிக்கிறவர் வந்தார். காளிபுள்ளெயிடம் பேத்தி சொன்னாள்:
‘‘நம்ம எல்லோரும் சேந்தாப்ல நின்னு ஒரு போட்டோ எடுக்கணும்.’’
பத்து நாள் கழித்து போட்டோ வந்தது. கையில் வாங்கிப் பார்த்த காளிப்புள்ளெ சொன்னாள்:
‘‘நான் காஞ்சு கருக்கழிஞ்சு இப்படியா இருக்கேன்?’’
பேத்தி கோபமாகச் சொன்னாள்:
‘‘போட்டோ வந்ததும் நீ மொதல்ல என் பூட்டனைப் பார்க்கலை. என்னைப் பாக்கலை. அம்மாவைப் பாக்கலை. ஒன்னைத்தான் பாத்தே.’’
காளிப்புள்ளெ சொன்னாள்:
‘‘இது என்னடி மாயமா இருக்கு. இந்தச் சனியனைக் கையில வாங்கியதும் கண்ணு என்னைத்தாண்டி பார்க்குது!’’
கந்தர்வன் எழுதிய கதையின் கடைசி வாக்கியத்தை அப்படியே கொடுத் திருக்கிறேன்.
காளிப்புள்ளெ, தனக்காக ஒரு கணமும் வாழ்ந்தது இல்லை. அவள் வியர்வை குடும்பத்தின் பொருட்டு. தேசத் தலைவர்கள் எவரின் தியாகத்துக்கும் கொஞ்சமும் குறையாதது அவள் தியாகம். ஒருபோதும் கண்ணாடியில் தன்னைப் பார்த்திருப்பாளா என்றால் இல்லை. அவள் கண்கள்... தன்னை, தனக்குள் இருக்கும் தன்னைப் பார்க்க முயன்றிருக்குமா என்றால் இல்லை. என்றாலும் குடும்பப் போட்டோ அவள் கையில் அளிக்கப்பட்டபோது, அவள் கவனம், பார்வை முதலில் பதிவது அவள் படத்தை நோக்கித்தான். ‘‘நான் இப்படியா இருக்கேன்?’’ என்றுதான் முதலில் சொல்கிறாள்.
அவளுக்கும் அவள்தான் முக்கியம். அவள்தான் அவளுக்கு உள்ளூர முக் கியம். தர்மமும் இதுதான். தரிசனமும் இதுதான்.
கந்தர்வனோடு அடிக்கடி பேசப்படும் கதை சாசனம்’.
கதை ஒரு புளியமரம் பற்றியது. அதை அப்பாவின் புளியமரம்என்று கதைசொல்லி அறிமுகப்படுத்துகிறார். அப்பாவுக்கு ஆறு கிராமங்களிலும் நிலம் உண்டு. அத்தனை நஞ்சை புஞ்சை களிலும் அப்பாவுக்கு இஷ்டமானது இந்தப் புளிய மரம்தான். அப்பாவின் சொத்துக்களில் எல்லாம் தாத்தா பேஷ காராக இருந்த காலத்தில் மகாராஜா வுக்கு நாக்கு ருசியாகச் சமைத்துப் போட்டு வளைத்ததுதான். சாசனங்கள் இருந்தன. அவை எல்லாம் இரும்புப் பெட்டியில் பாதுகாப்பாக இருக்கின்றன. அந்தப் புளியமரம் அப்பாவின் பெருமை! அதை கொறட்டுப் புளிஎன்று விநோதமான வார்தைப் பிரயோகத்தால் குறிப்பிடுவார். அதன் அர்த்தம் கொறவீட்டுப் புளி என்பதாகும். அதை அப்பாவால் முழுமையாகச் சொல்ல முடியாது. அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு கிழவி, மகளோடு வாழ்ந்து வந்தாள். அந்தப் பெண், தாத்தா ஜாடையில் இருந்தாள்.
அப்பா ஆட்களைக் கூட்டிக் கொண்டு புளி உலுக்கப் போவார். உதிரும் புளி, ஆண்டுக்கு வரும். அப்போது அப்பா, காலால் கொஞ்சம் புளி ஒதுக்குவார். அதை அந்தக் கிழவி எடுத்துக் கொள்ளும்.
எல்லாம் கிரமப்படித்தான் நடந்தது.
ஒரு வருஷம் எல்லாம் மாறியது. மரத்துக்குக் கீழே சுத்தப்படுத்தப்படாத பன்றிக் கழிவுகள். அங்கே கயிற்றுக் கட்டில் போட்டு கிழவி அமர்ந்திருந்தாள். பெண், குழந்தைககளோடும் புருஷனோ டும் நின்றாள்.
அப்பா கடுமையாக ‘‘என்ன இதெல்லாம்?'' என்றார்.
அந்தப் பெண் ‘‘இனிமேற்பட்டு இந்த மரத்தை நான்தான் உலுக்குவேன். இதிலே எனக்கும் பாத்தியதை உண்டு'' என்று பேசத் தொடங்கியது. அப்பாவுக் குக் கால் நடுங்கியது. உதடு கோணி யது.
‘‘போதும் போதும் பேச்சை நிறுத்து...'' என்று அதற்குப் அப்பால் அந்தப் பொம்பிளை பேசப் போவதைப் பதறிப்போய் நிறுத்தினார். கூட்டி வந்த ஆண்களைத் திருப்பி அழைத் துக் கொண்டு தலையைச் சாய்த் துக் குனிந்து நடந்து வீடு வந்து சேர்ந்தார்.
சாசனங்களை அப்பா ஆராய வில்லை. ஏன் எனில் நிலமும் மரமும் அவர்களுக்குச் சொந்தம்என்பது அப்பாவுக்குத் தெரியும். பணம், அதிகாரம், செல்வாக்கு என்ப தல்லாமல், தனக்குச் சொந்தம் இல்லாத பொருளைத்தான் அப்பாவும், ஊர், நாட்டு, தேசப் பெரிய மனிதர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என் கிறார் கந்தர்வன்.
காலம் மாறிவிட்டது. அவர்கள் உண்மையான உரிமையாளர்கள். பேசத் தொடங்கிவிட்டார்கள் என்று கந்தர்வன் காலத்தின் குரலாகப் பேசுகிறார்.
கந்தர்வன் 1944-ல் பிறந்து 2004-ல் மறைந்தார். 60 ஆண்டுகால வாழ்க்கையில் 62 கதைகள் எழுதினார். கந்தர்வன் கதைகள்என்ற பெயரில் பவா செல்லதுரை தொகுத்து வம்சிபதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இறந்துபோன ஒரு பெரிய எழுத்தாளரின் தொகுப்பு எப்படி வரவேண்டும் என்கிற முன் மாதிரியை இத்தொகுப்பே உருவாக்கி இருக்கிறது.
கந்தர்வன்
- நதி நகரும்

 

 

 

 

கதாநதி 13: கோபிகிருஷ்ணன்- மனதின் புதிர் மொழி

சமூகம் தன்னை எவ்வாறு காண வேண்டும்? அறிய வேண்டும் என்று திட்டமிட்டு ஜோடனைகளை அதற்கேற்ப புனைந்துகொண்டு தன் னைக் காண்பித்துக்கொள்ளும் மனிதர்கள் பற்றிக் கவலைப்படாமல், அவர்களை உள்ளிருந்து ஊக்கும் மனத் தூண்டிகளை' எழுதுவதற்குத் தமிழில் ஒருவர் வந்தார். அவர் பெயர் கோபிகிருஷ்ணன். மனித மனச் சிதைவுகளை அவர் கதை களாக ஆவணப்படுத்தினார். இம் முயற்சியின் மூலமாகத் தமிழ்ப் படைப்புலகில் புதிய நிலவெளியை உருவாக்கியதோடு, புதிய அம்சம் ஒன்றையும் கோபிகிருஷ்ணன் சாத்தியப்படுத்தினார். மனித நடத்தை களை உள்ளிருந்து இயக்கும் கிரியா ஊக்கிகளைச் சொல்லியதன் மூலம் தமிழில் புதிய வெளிச்சத்தைத் தன் படைப்புகளில் பாய வைத்தார்.
1983-ம் ஆண்டு எழுதத் தொடங் கிய கோபிகிருஷ்ணன், 2003-ல் அவர் மறையும் வரை எழுதிக்கொண் டிருந்தார். சுமார் 90 கதைகள், 4 குறுநாவல்கள், பல கட்டுரைகள்.
உதாரணமாக அவருடைய ஒரு கதையை வாசிப்போம்.
ராமன் அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். மிதமான நெரிசல்தான். பின்பக்க பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் இருந்தார்கள். ஒரு நபர் உட்கார இடம் இருந்தது. அதில் அமர்ந்து கொண்டான் ராமன். ஒரு ஸ்டாப்பில் தன் தோழனுடன் சொல்லிக்கொண்டு ஓடிவந்து பேருந்தில் நுழைந்தாள் அந்தப் பெண். வயது இருபதுக்கு மேல் இருக்காது. பூப்போட்ட தொளதொள வெள்ளைப் பனியன். பருத்தித் துணியால் ஆன வெள்ளை முழுக்கால் சட்டை. நின்றுகொண்டிருந்தாள். அவள் ஒரு கருப்பினப் பெண். அலை அலையான முடியைக் கிராப் செய்துகொண்டிருந்தாள். மலிவான பெரிய காதணிகள். எடுப்பான தோற்றம். சற்றே உயரம்.
ராமன் எழுந்து இடம் தரலாம் என்று நினைத்தான். இவன் எழுந்தால் பக்கத்தில் இருக்கும் நபரும் எழ நேரிடும். சில விநாடிகள் சென்றன. வலது பக்க ஆண்கள் இருக்கை யில் நாலு இளைஞர்கள். ஒருவன் மொட்டைத் தலையில் ரங்கீலா தொப்பி அணிந்திருந்தான். அவன் பெண்ணைப் பார்த்துப் பகிரங்கமாகப் பல்லை இளித்தான். காமப் பார்வை. தனது சகாக்களுடன் அவளைக் கொச்சையாக வர்ணித்துக்கொண் டிருந்தான். குறிப்பாக அவள் வளைவுகளை.
அந்தப் பெண் என்ன செய்வதென்று அறியாமல் நின்றிருந்தாள். (ஒன்றும் செய்ய முடியாது. காலித்தனம், காற்று மாதிரி பரவி, சமூக மனசாட்சியை முடக்கிவிட்டது) அவள் முகத்தில் கோபமும் அருவருப்பும் இருந்தன. எந்த உணர்வையும் தெளிவாகக் காட்டும் முகம்.
ராமனால் தாங்க முடியவில்லை. பக்கத்தில் இருப்பவரிடம், ‘‘நாம் எழுந்து அப்பெண்ணுக்கு இடம் அளிப்போம்என்றான். அந்த ஆள் வேண்டா வெறுப்பாகச் சரியென்று ஒப்புக்கொண்டார். ‘‘பெண்ணே உட்கார்'' என்றான் ராமன். ‘‘நன்றி சிநேகிதரே...'' என்றாள் அவள்.
சிநேகிதர் என்ற அந்த அந்நியோன்ய வார்த்தை அவன் நண்பர் பதியை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது. அவன் அவளிடம் ‘‘பெண்ணே எங்கே இறங்கப் போகிறாய்?'' என்று கேட்டான். திருநின்றவூர் என்றாள் அவள்.
அந்த நான்கு பையன்களும் அவள் மேல் கமென்ட்ஸ் அடித்தார்கள். நேருக்கு நேராகப் பார்த்து, ‘‘மச்சி... என்னதான் சொல்லு, நம்ம புடவை மாதிரி வராது'' என்றான் ஒருவன்.
ராமன் இறங்க வேண்டிய இடம் லூகாஸ். அந்த இடத்திலிருந்து திருநின்றவூருக்கு ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டான் ராமன். அவன் வயது அம்பது. இப்போதெல்லாம் இளம்பெண்களைப் பார்க்கும்போது ஒரு தந்தையின் பாசம் மனதில் எழுவதை அவன் இனம் கண்டு கொண்டிருந்தான். பட்டாபிராம் நிறுத் தத்தில், காமப் பார்வையை வீசிவிட்டு இறங்கிச் சென்றார்கள் அந்த இளைஞர்கள். ராமனுக்கு நிம்மதியாக இருந்தது. அந்தப் பெண்ணும் நிம்மதிப் பெருமூச்செறிந்தாள். திருநின்ற வூரில் அவனும் அவளும் இறங்கிக் கொண்டார்கள்.
‘‘பெண்ணே, இனி உன் இடத் துக்குப் பாதுகாப்பாகப் போய்விடு வாயல்லவா?''
‘‘நன்றி சிநேகிதரே...'' என்றாள் அவள் மீண்டும்.
‘‘என்னை அப்பா என்றழைக்க மாட்டாயா?''
அவள் புருவங்கள் உயர்ந்தன. கண்களில் கூடுதல் பிரகாசம்.
‘‘நன்றி அப்பா!''
அவள் வயதில் அவனுக்கு நிறைய கனவுகள் இருக்கும். அவள் கனவுகள் நிறைவேற வேண்டும் என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்துகொண்டான் ராமன். அவன் மனம் நிறைந்தது. வீடு வந்து சேர்ந்தான். ஒரு பத்திரிகையை எடுத்துப் புரட்டி ஒரு கவிதையை வாசித்தான். (கவிதை: சுகந்தி சுப்பிரமணியன்)
ஒரு பூச்சி வந்தது. சிறியது. தீங்கிழைக்காதது. நான் ஒரு உயிர்' என்ற கவிதை வரிக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டது. முதலில் அதைத் தட்டிவிடலாம் என்று தோன் றியது. அப்படிச் செய்ய முடியவில்லை அவனால். அந்தப் பூச்சி ‘‘நான் ஒரு உயிர்'' என்று அவனிடம் சொல்வது போல இருந்தது. ராமன் பூச்சியை அதன் போக்கில் விட்டுவிட்டான்.
சற்றுக் கழித்து, அதே பூச்சி மீண்டும் வந்தது. ‘‘நாம் பேசலாம்'' என்ற கவிதை வரி மீது உட்கார்ந்துகொண்டது. பூச்சியை உற்று நோக்கினான் ராமன். தன்னளவில் அது வடிவ நேர்த்தியுடன் இருந்தது. சாக்லேட் கலர் உடம்பு. முன்பக்கம் இரண்டு கால்கள். பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு மீசை. அவை அசைந்தவாறு இருந்தன. அதன் உயிரியக்கம்.
அந்தப் பூச்சி தனக்கு சிநேகித மாகிவிட்டது போன்ற தோழமை உணர்வு மனதில் வியாபித்தது. நான் ஒரு உயிர். நாம் பேசலாம்' என்று அது தன்னிடம் சொல்வது போல் இருந்தது ராமனுக்கு. கதையின் தலைப்பு: பூச்சிகள்.
கோபிகிருஷ்ணன், தன் படைப்பு களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். தன் அற்புத கணத்தை, ஆசா பாசத்தை, அவமானத்தை, வாழ்க்கை கொண்டுவந்து சேர்த்த கடைசிப் படியை எந்த தன்னிரக்கமும் இன்றி, ஒரு மூன்றாம் மனிதனின் கதையைச் சொல்வதைப் போல தள்ளி நின்று எழுதிக்கொண்டு போனார். அந்தரங்கம் என்ற ஒன்று தனக்கானது என்றுகூட அவர் விலக்கி வைக்கவில்லை. விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பால் தன் மனதை இருத்தி வைத்துக்கொண்டு எழுதினார். ஆங்கிலத்தில் நிறை புலமையும் தொழில் திறமைகளும் நிறைந்த அவர் அவற்றைக் கொண்டு அடிப்படைத் தேவைகளையும்கூட பூர்த்திசெய்துகொள்ள முடியவில்லை. எழுத்தைத் தன் விருப்பம் தாண்டி, அந்த அலாவுதீன் பூதத்திடம் அற்புத விளக்கு ஒன்று இருப்பதை அவர் அறியார். அறிந்திருந்தால் அந்த விளக்கில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருப்பார். அந்த விளக்கின் அற்புதப் பயன்பாட்டை அவர் லட்சியம் செய்திருக்க மாட்டார்.
சமூகக் கட்டுப்பாடுகள், அரசு களாலும் சமூகத்தாலும் விதிக்கப்படும் ஒழுக்கம் என்று சொல்லப்படும் கோட்பாடுகள், விதிகள் ஆகிய பல் சக்கரங்களில் சக்கையான மனிதன் மனநோயாளி ஆகிறான். இறுக்கம், சிக்கல், பிறழ்வு, என்று பலவிதமான மனத் தடுமாற்றத்துக்கு ஆட்படுகிறான். ஆனால், இந்த மனநோய்க் கூறு களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத் திக்கொள்ள முடியும் என்கிறார் கோபிகிருஷ்ணன். கொஞ்ச காலம் அவரே அவ்வகைத் தடுமாற்றங்களால் வாழ்ந்திருக்கிறார். அந்நிலைகளில் எழுதிய கதைகள், தமிழில் பல புதிய திறப்புகளை செய்பவை.
ஒரு பேட்டியில் அவர் இப்படிச் சொன்னார்:
‘‘எழுதும்போது மன நிறைவு ஏற்படுகிறது. அப்போது எந்த வேண்டாத சிந்தனையும் வருவ தில்லை. முழுமையான பிடிப்பு ஏற்படுகிறது. ஒரு நல்லுணர்வு அது. இதுவரை நான் எழுதியவை எனக்கு திருப்திகரமாகவே இருக்கின்றன. எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி நான் எழுத மாட்டேன். என் பாணியை மாற்றிக் கொள்வதிலும் எனக்கு விருப்பம் இல்லை!''
மிக்க அக்கறையுடன் கோபிகிருஷ் ணனின் கதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய வற்றைத் தொகுத்திருப்பவர், தமி ழின் முக்கியமான படைப்பாளியும், விமர்சகருமான சி.மோகன். கோபி கிருஷ்ணன் படைப்புகள் என்ற இந்தத் தொகுப்பை அழகாகப் பதிப் பித்திருப்பது நற்றிணை பதிப்பகம்.
- நதி நகரும்

 

 

 

 

 

கதாநதி 14: க.மோகனரங்கன்- புதிர்களை ஆராயும் கலைஞன்

எல்லோரும் அதைக் காதல் என்றும் சிரமம் என்றும் குறிப்பிட்டார்கள். சங்க இலக்கியம் இரண்டையும் ஒற்றாகத்தான் பாவிக்கிறது. வள்ளு வருக்கு காமம் கெட்ட வார்த்தை இல்லை. இடையில் யாரோ ஒரு குற்ற மனப்பான்மைக்காரன், காதலை உயர்சாதி என்றும் காமத்தை அ-உயர் சாதி என்றும் வகுத்தான். ஒழுக்கவான்கள் சமூகச் சட்டம் செய்து இது இது குற்றம்என்றார்கள். கலைஞர்கள் எல்லாக் காலத்திலும் இந்தக் குற்றவாளிகள், மீறியவர்கள் எனப்பட்டவர்கள் பக்கமே தம் நட்புக் கரம் நீட்டியபடி இருக் கிறாக்கள். கலைஞர்கள் ஒருபோதும் நீதிபதிகளாவது இல்லை.
யுத்தகளத்தின் புகைமூட்டங்களுக்கு இடையிலும் புல் முளைக்கத்தான் செய்கிறது. பெண்கள், ஆண்கள் என்று தம்மை உணரும் எல்லா ஜீவிகளிடமும் காதல் என்ற உயிர் எழுச்சி ஏற்படவே செய்யும். முறை, தக்கது, தகாதது காதலுக்கு இல்லை. கொடி படரக் கூடாத மரம் என்றெல்லாம் விதிகள் ஆண், பெண் உறவுக்குத் தெரிவதில்லை. ஆண், பெண் உறவில் இருக்கும் இந்தப் புதிர்த் தன்மை கலைஞர்களுக்குப் பெரும் கிளர்ச்சி தருகிறது. இதன் ஊற்றை, மையத்தை, மர்மத்தை அறியவும் எழுதவும் அவர்கள் முயல்கிறார்கள். காதலை, காதலர்களை எழுதுவது தெலைந்துபோன சாவியைத் தேடுவதாக இருக்கிறது. ஆனாலும், எழுத் தாளர்கள் இந்தச் சவாலை ஏற்பதில் பின்வாங்குவதில்லை. க.மோகனரங்கன், தான் அறிந்த சில விஷயங்களைத் தனக்குத் தெளிவு ஏற்படுத்திக்கொள்ள வேண்டி எழுதி இருக்கிறார். அவை வாசிக்கத் தக்க கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன.
க.மோகனரங்கன், தமிழின் முக்கிய மான கவிஞர். நல்ல விமர்சகர். அன்பின் ஐந்திணைஎன்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில், 13 கதைகள் இருக்கின்றன. சிறுகதைகளின் நுவல் பொருளைத் தொகுத்துக்கொள்வோம்.
சேட்டு என்கிற, கதை சொல்லியின் நண்பன் பள்ளி தோன்றிய நாளில் இருந்து ஆற அமர படித்து, ஒன்பதாம் வகுப்பு வருகிறான். தனம் கடந்த மூன்று வருஷமாக ஒன்பதாம் வகுப்பில். சேட்டு வுக்கு தனத்தின் மேல் காதல். தனத்துக்கு கல்யாண ஏற்பாடுகள். சேட்டு பூச்சி மருந்தைத் கையில் ஏந்துகிறான். இதெல் லாம் காதலின் சத்திய சோதனைகளில் ஒன்று. பூச்சி மருந்தைக் தனத்திடம் காட்டுகிறான். அவள், உயிரின் மேன்மை யைப் பற்றிப் பேசி நடக்கிறாள். பூச்சி மருந்து பிடித்த கையில் மதுவை ஏந்துகிறான் சேட்டு.
இன்னொருத்தன் பெயர் சேகர். அவனுக்கு ஒரு ஒன்பதாம் வகுப்புப் பெண் மீது காதல் (ஒன்பதாம் வகுப்பு காதல் கண்டம் போலும்) பிரச்சினை வீட்டுக்குத் தெரிந்து அமர்க்களம். பெண், அப்பா அம்மா பார்த்த பையனைத் திருமணம் செய்துகொண்டு, திருமதி ஆகி, மழையைப் பெய்யச் சொல்லும் கற்பரசியும் ஆனாள். சேகர் சக மாண வர்களின் அறைகளில் தேவதாஸானான்.
கருணாநிதிக்கு எதிர்வீட்டுப் பெண் ணின் மேல் காதல். அவன் அப்பாவுக்குத் தெரிந்து, அவள் வீட்டுக்குள் புகுந்து அவள் கூந்தலைப் பிடித்து இழுத்து அடித்திருக்கிறார். ஏழைப் பெண். எதுவும் செய்யலாம். அன்று மாலையே அந்தப் பெண் தூக்கில் தொங்கினாள். சேதி கேட்டு கருணாநிதி, பூவோடு அவளைப் புதைத்த இடத்தில் மலர் தூவ வந்திருக்கிறான். பேருந்தில் ஏறும் முன்பு பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு ஏறி இருக்கிறான். வழியிலேயே கருணாநிதி யின் உயிரும் பிரிந்திருக்கிறது.
இன்னொரு வேறுவிதமான கதை. டிரைவர் சண்முகத்தோட மனைவி ஜோதி. செல்வத்துடன் தொடர்பு. சண்முகத்துக்குத் தெரிந்தது விவ காரம். ஊர் பார்க்க சண்முகம் அவளை அடித்து துவைத்தான். வீட்டுக்கு எதிரில் இருந்த மரத்தின் கீழ் அழுது கொண்டிருந்தவளை நம் கதைசொல்லியும் பார்க்கிறான். பின்னர் ஒருசமயம் ஜோதியின் முன் போய் நிற்கிறான். ஏன்? காதல்தான்! ஜோதி இவனை வேண்டாம் என்கிறாள். ஏன், நான் என்ன, அந்தச் சண்முகத்தையும், செல்வத்தையும்விட எந்த விதத்தில் குறைச்சல் என்கிறான் கதைசொல்லி. அதற்கு அவள் சொல்லும் பதில்: ‘‘நீ என் புருஷனைவிட, நான் ஏதோ குருட்டு ஆசையில் சேர்த்துக்கிட்டு அவமானப்பட்ட அந்த செல்வத்தைவிட ஏன், என்னைவிடவும் நீ உசத்தி. அதனால்தான் வேண்டாம்கிறேன். புரியுதா?’’
இப்படியாகச் சில கதைகள். க.மோகனரங்கன், இவற்றை அன்பின் ஐந்திணைஎன்கிறார். இது ஒரு நுட்பம். சங்க இலக்கியம், காதல் வகைமைகள் அனைத்தையும் அன்பின் ஐந்திணைக்குள் அடக்க வில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய திணை களில், அதாவது நிலங்களில் வாழ்ந்த மனிதர்களின் காதலைச் சொன்ன தோடு; அந்தக் காதல்கள் கற்பு எனப்பட்ட மணவாழ்க்கைக்குள் செலுத் தப்பட்டபோதுதான் அன்பின் ஐந்திணை ஆயின. அல்லாத காதல்கள் கைக்கிளை மற்றும் பெருந்திணை என்றே பெயரிடப்பட்டன.
மொழி கருத்துச் சாதனமாகிப் பின்னர் கலைச் சாதனமானபோது, கவிதைகள் பரவலாகக் காதலின் அனைத்துச் சாகைகளிலும் எழுதப்பட் டன. கைக்கிளை, பெருந்திணை என்பவை வாழ்க்கையின் பெறு பொருள். ஆகையால் அவை புறக்கணிக் கப்படவில்லை. கவிதைகள் தொகுக் கப்பட்டு அகம் என்றும் புறம் என்றும் பிரிக்கப்பட்டபோது, சமூகத்தில் நிலவிய பொய்யும் வழுவும் கண்ட பெரியோர்கள் காதலை நன்னெறியாகிய குடும்ப நெறிக்குள் செலுத்த கைக்கிளையையும் பெருந்திணைப் பாட்டுகளையும் புறக் கணித்தார்கள்.
கைக்கிளையும் பெருந்திணையும் செய்த குற்றம் என்ன? ஒரு குற்றமும் செய்யவில்லை. சேட்டும், சேகரும், கருணாநிதியும் செய்த குற்றம் என்ன? காதலித்ததுதான்!
குலம், வயது, தகுதி, பொருளாதாரம் முதலான பல வகைகளில் இழிந்தவர்கள், ஏவலர்கள் காதலிப்பதையும் அவர் களின் காதலுக்கு அந்தஸ்து தருவதை யும் மேலோர் விரும்பவில்லை. அவர்கள் காதல் கைக்கிளையும் பெருந்திணையுமாயிற்று. கை = சிறுமை, அல்லது ஒருதலைக் காமம் என்று கைக்கிளையையும், பொருந்தாக் காமம் என்பது பெருந்திணையையும் குறித்தது.
எல்லாக் காதலும், பெருமை பெற்ற அம்பிகாபதி அமராவதி காதலும் கூட, கைக்கிளையில்தான் தொடங்கி இருக்க முடியும். பார்த்து, பேசி, பழகிய பின் வந்து சேரும் இடம் காதல் என்றால்; சேருமட்டும் அதன் பெயர் என்ன? பொருந்தாக் காமம் என்பது எப்படிச் சரி? காதலர்க்கு மனம் பொருத்திய பின், பிறர் அதை பொருந்தாதது என்பது என்ன வகையில் சரி?
க.மோகனரங்கனின் கதைகள், இந்தப் பார்வையில் முக்கியமானவை. சிறு பையன்களின் காதல்கள் சரியா என்று பெரிய பையன்கள் கேட்பது புரிகிறது. சிறு பையன்களின், பெண்களின் உயிரே போயிற்றே அதற்கென்ன பதில்? இதுகுறித்த பரவலான ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டும் என்கிற கவலை எழுத்தாளர்களுக்கு உண்டு. மோகனரங்கனும் அவர் பொறுப்புக்கு இதைச் செய்திருக்கிறார். கைக்கிளை பெருந்திணை என்று அக்காலத்துப் புறக்கணிப்பு போல இக்காலத்திலும் தமிழ்ச் சமூகம் அதைத் தொடர வேண்டுமா என்கிற கேள்வி புறக்கணிக்கக் கூடியதல்ல.
இரண்டாயிரம் பெண்கள் படிக்கிற பள்ளி. அறுபது ஆசிரியர்கள். ஐந்து பேர் ஆண் ஆசிரியர்கள். இடைவேளையின்போது டீ குடிக்கப் போவார்கள். ஒருவர் - அவர் பேர் மணிவாசகம். தனியாக இன்னொரு கடைக்குப் போய் டீ குடித்துவிட்டுத் திரும்புவார். ஏன்? ‘இந்தக் கடையில் முட்டை போண்டா போடுறானேஎன்பார். அந்த அளவு சைவர். பட்டினி கிடப்பார்கள். ஆனால் ஆசார அநுஷ்டானங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவரைப் பற்றி ஒரு வதந்தி. வீட்டு வேலைக்காரப் பெண்மணியோடு தொடர்பு வைத்திருக்கிறாராம். ஆசிரியப் பணிக்கான கவுரம் பிரச்சினையானது. மணிவாசகம் சார் அவளைத் தேடிக் கொண்டு குப்பத்துக்கே செல்கிறார். இரவுக் காட்சி சினிமாவில் அவர்களைப் பார்த்தார்கள் என்று பேச்சு. கிராமப் பள்ளி. பெண்கள் பள்ளி. தலைமை ஆசிரியர் மணிவாசகம் சாரைப் பணி மாறுதல் செய்கிறார். போகும்போதுதான் மணிவாசகம் மனம் திறக்கிறார்.
உடல் நலம் குன்றி அவர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். அந்த வேலைக்கார அம்மா கையால் தண்ணீர்கூடக் குடிக்காத சார், அவள் கொடுத்த மாத்திரைகளையும் துப்பிய சார், கண் திறக்க முடியாது மயங்கிக் கிடந்தபோது அவள் உதவியை ஏற்றுக்கொள்ளும்படி ஆயிற்று. அங்கிருந்து ஆரம்பித்தது எல்லாம்.
மோகனரங்கன் எழுதுகிறார்:
புத்திக்கும் மனசுக்கும் இடையே எழும்பி நின்ற சுவர், எப்புள்ளியில் எவ்விதம் நெக்குவிட்டுக் கசிந்தது என்று நிதானிக்கும் முன்னரே, சரிந்து விழுந்த மிச்சமுமின்றி அடித்துச் செல்லப்பட்டு விட்டிருந்தது...
மணிவாசகம் சார், கதை சொல்லியிடம் சொல்கிறார்.
‘‘டாக்டரிடம் காட்டி ஊசி மருந்தெல் லாம் போட்டு தேறி எழுந்திருக்க நாலு நாள் ஆயிடுச்சு. அதுக்குள்ள எனக்குள்ள கலைச்சு அடுக்கின மாதிரி எல்லாமே மாறிப்போச்சு. உங்களுக்கு சின்ன வயசு. நான் பேசறது ஏதோ அற்ப சாக்கு மாதிரி தோணும். இப்ப இல்லன்னாலும் பின்னால் ஒருநாள் புரியும். அப்புறம், இந்த மாதிரி உறவெல்லாம் கடைசியில் இப்படி மனவேதனையில்தான் போய் முடியும்னு எனக்கு முன்னாலேயே தெரியும். எல்லாத்தையும் ஏத்துக்கிற பக்குவம் இப்போது எனக்குக் கிடைச்சுடுச்சு.’’
இந்தப் பக்குவம்தான் முக்கியம். இதை ஏற்படுத்துவதுதான் எழுத்தில் அகப் பயன். இதற்காகத்தான் இந்தக் கதைகளை மோகனரங்கன் எழுதி இருக்கிறார். உலகத்தின் பெரும் படைப்பாளிகள் எல்லோரும் இந்த அகச் சிடுக்குகளில் விரும்பியே போய் சிக்குகிறார்கள். சிடுக்குகளை எடுக்க முயற்சிக்கிறார்கள். இம்முயற்சிகளில் பல கதவுகள் திறக்கப்படுகின்றன. க.மோகனரங்கனும் திறந்திருக்கிறார்.
ஒரு கவிஞராக, விமர்சகராக, நாள் தவறாமல் படிக்கிற என் மரியாதைக்குரியவர் க.மோகனரங்கன். இனி அவர் கதைகளையும் வாசிக்கக் காத்திருப்பேன்.
அன்பின் ஐந்திணை என்கிற இந்தத் தொகுப்பை யுனைடெட் டைரட்டர்ஸ்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- நதி நகரும்

 

 

 

 

 

கதாநதி 15: சல்மா: மீண்டு வந்த வாழ்வின் குரல்!

நவீன கவிதை, பொன்மொழி என்ற தனித்துவத்தைக் கண்டடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மிகுந்த காத்திரமாக வெளிப்பட்ட கவிஞர் களில் ஒருவர் சல்மா. இவரது புகழ் பெற்ற நாவல் இரண்டாம் ஜாமங்களின் கதை’, தமிழ் வசனப் படைப்பில் புதிய திறப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரு டைய சிறுகதைகளின் தொகுப்பு சாபம்என்ற தலைப்பில் 11 கதைகளைக் கொண்டதாக, ‘காலச் சுவடுபதிப்பகத் தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இத்தொகுப்பில் உள்ள கதைகள், பெரும்பாலும் பெண்கள் பற்றியது. எப்போதும் பதற்றத்துடன் வைக்கப்பட்டு, மிகுந்த தயக்கத்துடன் அடுத்த அடி எடுத்து வைக்கலாமா, வேண்டாமா என்கிற தடுமாற்றத்துடன் இருப்பவர்கள். அவர்கள் வாழும் அதாவது உயிர் வாழும் அறைகளுக்கு ஜன்னல் இருப்பதில்லை. நாற்புறமும் கட்டி எழுப்பப்பட்ட, காரை பெயர்ந்து விழும் சுவர்களும் தரையும் தவிர, ஆகாயம் அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. என்றாலும் என்ன, ஆகாயத்தில் புல் முளைப்பதில்லையே. அப்பெண்கள், தங்களுக்குக் கிடைத்த தரையில் தாங்கள் வாழ்ந்த சுவடைத் தங்கள் பெருமூச்சுகளால் எழுதிச் செல்கிறார்கள்.
சல்மாவின் சொற்கள், அர்த்தங்களை முழுமையாக ஏந்திக்கொண்டு வருவ தோடு, பொருளையும் தாண்டி நிற்பவை. மனதின் புதிர்களை எழுதிச் செல்லும் அவர் கதைகளுக்குச் சரியான சொற்கள் அவருக்குக் கிடைத்துவிடுகின்றன. ஒரு வர்ணனை என்ற அளவில் சுருங் காமல், அதைப் பாத்திரங்களின் மனநிலையாக மாற்றித் தரும் ஓர் உதாரணம் இது:
மங்களான மஞ்சள் ஒளி அறையில் பரவி இருக்க, வழிதவறிப் பறந்த ஈ ஒன்று தட்டுத் தடுமாறி டேபிளைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. தண்ணீர்ச் செம்பின் விளிம்பில் ஒரு நொடி அமர்ந்துவிட்டு மறுபடி எழுந்து, ஒரு சுற்றுச் சுற்றிச் சாம்பார் கிண்ணத்தை நெருங்கி, அதன் விளிம்பில் அமர எத்தனித்துத் தவறிப்போய்க் கொதிக் கும் சாம்பாருக்குள்ளேயே விழுந்து அதன் சூட்டில் தத்தளித்து பின் மிதந் தது. இவள் பார்த்துக் கொண்டிருந்தாள். தொலைக்காட்சியில் லயித்துச் சாம் பாரை எடுத்துத் தன் சாதத்தில் போட்டு அவன் பிசைந்து கொண்டிருந்தான்.
பொறிஎன்றொரு கதை.
கதவு தட்டப்படுகிறது. அவள் விழித்துக்கொண்டாள். எழுந்து சென்று கதவைத் திறக்க மனமின்றி, உட்கார்ந்தே இருக்கிறாள். தட்டிவிட்டுப் போய்விடக் கூடாதா என்ற ஏக்கம். கதவு தட்டப்படும் ஓசை அதிகமாகிறது. தட்டும் கை அவளை நெருங்கி வருகிறதாக உணர்கிறாள்.
திறக்கும் எண்ணம் துளியுமற்ற நிலையில் கதவையே வெறிக்கிறேன். கெட்ட செய்தியாக இருக்கக்கூடும்.
அவன்தான் எழுந்து தூக்கம் கலைந்த கோபத்தில் கத்திக்கொண்டே கதவைத் திறக்கச் செல்கிறான். அவனுக்கு வேறெ தையும்விட தூக்கம்தான் முக்கியம்.
அவனோடுதான் அவள் வாழ்கிறாள். அப்படிச் சொல்வது சரியாக இருக்குமா? இருக்காது. இருக்கிறாள். அப்புறம் கதவை எப்படித் திறப்பது? திறக்கக் கூடியவனாக, கூடியதாக எதுவும் இல்லை. மட்டுமல்லாமல் கெட்டதாக ஏதாவது வந்து சேர்ந்தால்…’ சல்மாவின் வசனம் இப்படியாகக் கவிதைக்கும் வசனத்துக்கும் இடையில் இருக்கிறது.
சாபம்என்று கதை. தொகுப்பின் சிறந்த கதைகளுள் ஒன்று இது.
மாலை மயங்கும் நேரத்தில் கண் விழிக்கிறாள் ஷமீம். ரஷீதா, காலையில் போனவள் இன்னும் வீடு திரும்பாதது மனதை உறுத்துகிறது. யார் வீட்டில் மோருக்குக் கையேந்தி நிற்கிறாளோ? ராதா ராதியின் (தந்தைவழி தாத்தா மற்றும் பாட்டி) புகைப்படம் கண்ணில் படுகிறது. அவர்களைப் பற்றிப் படர்ந்த கொடிய சாபம் நினைவுக்கு வருகிறது. எப்போதும் ராதா, தென்னந்தோப்பில்தான் வாசம். இருண்டு மழை பெய்த அந்த மாலையும் இருட்டும் ஷமீமின் நினைவுக்கு வருகிறது. அந்த மழையில் மின்னல் வெளிச்சத்தில் இருவர் மற்றும் ஒரு இடுப்புக் குழந்தையும் அவரை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். மழைக்கு அடைக்கலம் கேட்டு வந்தார்கள். தாத்தா, தோட்டத்துக் குடிசையில் தங்கிவிட்டுப் போக இடம் கொடுத்தார். கருணையா? இல்லை. அந்தப் பெண் அணிந்திருந்த நகைகள். ‘‘எங்களை விட்டுடுங்க…’’ என்று அந்தப் பெண் கதறியது கேட்டுக்கொண்டே இருந்தது.
விடிந்தபோது அந்த மூன்று பேரும் கிணற்றை அடைத்துக்கொண்டு மிதந்ததை ஊர் பார்த்தது. கனி சச்சா மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றார். (சாபம்?). ரஷீதாவுக்குத் தாய்ப் பாசமாவது கிடைத்திருக்கும். ரஷீதா, குறைந்தபட்சம் மோர் யாசகம் கேட்டலைய வேண்டி இருந்திருக்காது. ஜீனத்தும் வீட்டுக்கு வீடு மோர் கேட்டு அலைந்தாள். ஏன், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் ஷமீம் கேட்டாள். ‘‘பாப்பார வீட்டுப் பொண்ணைக் கொன்னா இல்லையா, உங்க ராதா. அவ பாவம்தான்’’ என்றாள் பக்கத்து வீட்டுப் பெண். ஒரு பெண் ஜீனத். அவளுக்கும் நாற்பத்தைந்து வயசும், நாலு குழந்தைகளுக்கும் தந்தையுமான ஒருவனுக்கும் கல்யாணம் நடந்தது. பாதி இரவின்போது அவன் கேட்டான். ‘‘உன் வயசு என்ன?’’ அவள் ‘‘27’’ என்றாள். ’’இது முதல் தடவை மாதிரி தெரியலையே. வலிக்கவே இல்லையே உனக்கு’’ என்றான் கணவன். விடியும்போது தலைவிரி கோலமும், வளையல்களை உடைத்துக் கொண்டு அமர்ந்திருந்த மணப்பெண்ணை உலகம் பார்த்தது. அந்த வீட்டில் எல்லோரும் கல்யாணம் வரை நன்றாகவும், அப்புறம் கிறுக்குப் பிடிக்கும் பெண்களை உலகம் பார்த்தது. சாபம்என்பது இந்த உக்ரமான கதையின் தலைப்பு.
அந்த மக்களை சிறுபான்மை மக்கள்என்கிறார்கள் மற்றவர்கள். என்றால், ஒரு நாகரிக பெரும்பான்மை சமூகம் சிறுபான்மையர் மேல் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்? அன்பும் அரவணைப்பும் காட்டப்பட வேண்டும். பசுமையும், சவுகரியமும் நோக்கிய வாழ்க்கைக்கு அவர்களைக் கொண்டு செல்ல, எத்தனை முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்? தாய், குழந்தைமேல் காட்டும் அக்கறையை அல்லவா பிறர் அவர்கள்பால் காட்டி இருக்க வேண்டும்?
கடவுளின் பிறந்த இடத்தை மசூதியில் தேடுகிற வரலாற்று மேதைகளை அல்லவா பிறப்பித்திருக்கிறது பாரதத் திருநாடு.
மனித இயல்பை மிக அழகாகவும் நுணுக்கமாகவும் சொல்ல முடிகிறது சல்மாவால். அவருடைய இரண்டாம் ஜாமங்களின் கதைநாவல் பெற்ற கலை வெற்றியை அவர் சிறு கதைகளிலும் பெறுகிறார்.
அவள் பக்கத்து வீட்டுப் பையன் மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்தாள். அவனும் அக்கா அக்காஎன்று கரைவான். திடுமென அவன் ஒரு விபத்தில் மாண்டுபோக, அவள் துவண்டு போனாள். இடைப்பட்ட காலத்தில் இரவு நேரங்களில் பெயர் சொல்லாத ஒரு தொலைபேசி அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது. யாரோ ஒரு பொறுக்கிதான். அண்மையில் புதுவிதமாக அவள் தொலைபேசியை எடுத்தவுடன் ஒரு மலையாளப் பெண் பாடிக் கொண்டிருந்தாள். அவள் அறியாமல் அவள் பாட்டை இவளுக்குக் கேட்கச் செய்கிறான், அந்த நம்பிக்கைத் துரோகி. இறந்துபோனவனின் மனைவியிடம் துக்கம் கேட்கப் போகிறான் இவள். பேசிக்கொண்டிருந்த மனைவி, போகிறபோக்கில், ‘‘எல்லாம் சரியாத்தான் இருந்ததுக்கா. அந்த மலையாளிச்சியோடு இவுர் தொடர்பு கொள்ற வரைக்கும்’’ என்கிறாள்.
‘‘என்ன மலையாளிச்சியா?’’ என்று அதிர்கிறாள் இவள். அவன் இறந்து போன அன்று தொலைபேசி வரவில்லை என்பது உறைத்தது. அப்படியானால் அக்கா அக்காஎன்று அவனது அழைப்பு
அவளது வீட்டுக்குள் அந்தகாரம் புகுந்துகொண்டதுபோல் இருந்தது அவளுக்கு. கதையின் தலைப்பு இழப்பு’.
சாத்தப்பட்ட கதவுகளுக்குள் வாசலுக்கும் பின்கட்டுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கும் பெண்களின் காலடிச் சுவடுகள், மிக அழுத்தமாகப் பதிவுபெற்று, அவர்களின் தயக்கமும் அச்சமும் கொண்ட குரல்கள் மிகவும் துல்லியமாக வாசகர் கேட்கும்படி எழுதும் பெரும் கலை சல்மாவுக்கு வாய்த்திருக்கிறது.
இரவு கவியத் தொடங்கியதும் ஜன்னத்திற்கு இரவுக்கு என்ன சமைக் கலாம் என்னும் யோசனை வந்தது. இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படிக் கஷ்டப்படப் போகிறோம்...என்று வரும் வரிகளுக்கும், ‘மிக மிருதுவான அணைப்பில் கழுத்தில் பதிந்த முத்தத்தில் கிறங்கித் தவித்தாள்என்ற வரிக்கும், ‘உடல் சார்ந்த பயங்களும் தயக்கங்களும், மறைந்த மேலான சுதந்திரத்தை அடைந்திருந்தாள். பயத்தின் கரங்களிடமிருந்து விடுபட்டுப் பரவசத்தின் எல்லைகளுக்குள் பய ணிக்க ஆரம்பித்தாள்என்ற வரிக்கும் இடைப்பட்ட வாழ்க்கையை எந்த மறைப்பும் இல்லாமல், கதைகள் என்ற வடிவம் கோருகிற, அனுமதிக்கிற பிரதேசத்தை எழுதி நம் மனசுக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவந்து காட்சிப்படுத்துகிறார் சல்மா.
- நதி நகரும்

 

 

 

கதாநதி 16: சாரா- கடல் கடந்த கண்ணீர்!

சாரா எழுதி அண்மையில் வெளிவந்திருக்கும் நாவல் சபராளி அய்யுபு’. சாராவின் இயற்பெயர் ஜபினத். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய காட்டான்என்கிற கவிதைத் தொகுதி மண்ணில் படர்ந்த மரபு மற்றும் வாழ்க்கை மதிப்பீடுகளைப் பேசியது. குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஈடுபாடுகொண்டவர் சாரா.
சபுர் என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் என்று பொருள். இஸ்லா மிய மக்கள் பகுதியில் பிழைப்புக் காக வளைகுடாவுக்குப் பயணப் படுகிறவர்களைச் சபுராளி அல்லது சபராளி என்பர். அப்படிப் பயணம் மேற்கொள்பவன் அய்யுபு என்பவன். அவன் கதை இது.
நாவல் கதை அல்ல. நாவலில் கதை இருக்கக்கூடும். தத்துவத்தின் பிம்ப வடிவம் என்கிறார் அல்பேர் கேமுய். வாழ்தலின் ஊடாக எழுதுபவருக்குக் கிட்டிய ஒரு புதிய ஒளி தெறிப்பு.
பிழைப்புக்காக வளைகுடா நாட்டுக்குப் புறப்படும் அய்யுபுவின் குழந்தைப் பருவம் முதலாக அவனது சுமார் 35 வயதுப் பிராயம் வரையுமான வாழ்க்கைப் பதிவாக இருக்கிறது, இந்த நாவல்.
10 மணிக்கு மேல் வரும் ஐஸ்காரரின் குரல், அய்யுபு போன்ற குழந்தைகளை விடவும் கம்மாவுக்கே அதிக உற்சாகம் தருகிறது. மாடியில் உப்புக் கண்டம் காயவைத்துக் கொண்டிருந்த கம்மா தட்டுத் தடுமாறிக் கம்பியைப் பிடித்துக் கொண்டு அறைக்குள் திரும்பி, 5 ரூபாய் நோட்டை எடுத்து அய்யுபுக்குத் தருகிறாள். சேமியா ஐஸை அய்யுபுக்கும், கிரேப் ஜுஸை ராபியாவுக்கும், இரண்டு ஐஸைத் தனக்குமாக பங்கு பிரித்துக் கொடுத்துவிட்டுத் தன் அறைக்குள் வந்து, இரண்டு ஐஸ்களையும் தின்றபிறகுதான் படபடப்பு அடங்கியது, 70 வயது கம்மாவுக்கு. முதிர்ந்த வயதுப் பாத்திரங்கள் அழகாக உருவாகி இருக்கிறது, நாவலில்.
அய்யுபுவின் அப்பா கரீமும் ஒரு சபராளிதான். அவர் மலேயாவுக்குப் போனார். வரும்போது மகனுக்கு வாட்சும், மொபைல் போனும் வாங் கித் தந்து அசத்தினார். பிள்ளை சந்தோஷமாக இருக்கட்டும் என்று அய்யுபுவின் அம்மாவுக்குச் சொன்னார். அவர் திரும்பிச் சென்ற சில நாட் களுக்குள் அவர் மரணச் செய்தி வருகிறது.
சபருக்கு வந்து, கைக் காசைக் செலவு செய்து, பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் வாங்கி தந்து அவர்கள் மகிழ்வதைப் பார்க்கும்போது, சபரா ளிக்கு வெளிநாட்டில் பட்ட அவமானங் களும், விட்ட கண்ணீரும் உலர்ந்து போகும். சில நாட்கள்தான் திரும் பும்போது குடும்பமே துக்கத்தில் புரளும். விமானம் ஏறி ஒருவனுக்கு அடிமைச் சேவகம் செய்யப் புறப்படும் சபராளியின் மனம் மரத்துப் போகும். வாழ்க்கையின் அர்த்தமின்மை, ஒரு பூதம் போல மருட்டும். நாவல் முழுதும் பல இடங்களில் இம் மனோபாவத்தைப் பதிவு செய்திருக்கிறார் சாரா. ஒரு சபராளி சாவது என்பதன் அர்த்தம், ஒரு குடும்பம் அநாதையானது என்பதாக இருக்கும்.
அப்படித்தான் ஆனான் அய்யுபுவும். வயது 20. ஆண் பிள்ளை. குடும்ப பாரத்தை இழுக்க அந்தல் காளை மண்ணடிக்கு வந்து சேர்கிறது. மண்ணடிக்கு வந்து சேர்வது என்பது வெளிநாட்டுக்குப் போவதன் முன் தயாரிப்பு. மண்ணடியில் ஒரு அறை. அங்கு சுண்டெலி, வெள்ளை எலி. பெருச்சாளி, எலி செத்த நாற்றம் மற்றும் அய்யுபு ஆகியோர் தங்கி இருக்கிறார்கள்.
மண்ணடிவாழ் ஒரு பகுதி மக்கள் பற்றி ஆசிரியர் சாரா செய்யும் சித்தரிப்பு, சரியானதாக இல்லை. கோடி ரூபாய் செலவிட்டு கட்டிய வீட்டின் முன், மரத் துண்டுகளால் ஆன ஒரு பெட்டியை வைத்து, பண்டம் பாத்திரங்களை வைத்துக் குடும்பம் நடத்துகிற மக்கள் பற்றி வெறுப்பான குரலில் பதிவு செய்கிறார் சாரா. கூலி வேலையும், இரவுக் குடியும், பச்சைப் பேச்சும், அவர்களின் சடங்கும்... என்று வர்ணனை போகிறது. அப்படி வாழ அவர்கள் என்ன வரமா வாங்கி வந்தார்கள்? இவர்கள் இப்படி வாழ யார் காரணம்? அதை ஆராய்வது அல்லவா கதை, இலக்கியம் எல்லாம்.
அய்யுபுவுக்கு ஈடுபாடு வருகிறது ரஷ்மி மேல். அவன் என்ன செய்வான் பாவம்! மன்மதன் கைவரிசை. அது நிறைவேறவில்லை.
ஏதோ ஒரு வழியாகத் துபாயில் ஒரு அரபிக்குக் கார் டிரைவராகப் பணியில் அமர்ந்தான். இப்படியாகச் சபர் ஆகிறான் அய்யுபு. பிழைக்கப் போன எல்லா இந்தியருக்கும் நண்பன் ஆகிறான் அவன்.
பணி இடத்தில் அகமது பாயும் மொய்தீன் பாயும் சக ஊழியர்கள். நட்பு ஒரு கொண்டாடப்பட வேண்டிய மனித உன்னதம். அதை அறிந்தவர்கள் அவர் கள். ஒருமுறை அகமது பாய் சபருக்குச் சென்றார். மொய்தீன் பாய் திணறிப் போனார். மனம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். செய்தி அறிந்த அகமது, விடுமுறையை கேன்சல் செய்துவிட்டு ஓடிவந்துவிட்டார். சபருக் குச் சொந்த ஊருக்கு வந்து குடும்பத் தோடு வாழும் பயணிகள், உயிரைக் கொடுப்பார்கள். விடுமுறையை வீணாக்க மாட்டார்கள். பிரிந்த மூன்று ஆண்டுகளை 30 நாட்களில் அவர்கள் வாழ வேண்டி இருக்கிறதே!
சாராவின் நல்ல எழுத்து, பல இடங்களில் பிரகாசிக்கிறது. பைத்தியம் என்று புறக்கணிக்கப்பட்ட பித்தளைப் பூட்டு என்பவரோடு அக்கறை ஏற்பட்டு, அவரின் நண்பனாகிறான் அய்யுபு. இது போன்ற, மனப்பிறழ்வு கொண்ட மனிதருக்கு அன்பின் ருசியே மருந்தாகிறது. கொஞ்ச கொஞ்சமாக அந்த மனிதர் குணத்தின் முதல்படியை மிதிக்கிறார். ஒரு நல்ல நாவலுக்கு இதுபோன்ற, கதைக்கு நேரிடையாகத் தொடர்பு இல்லாத, ஆனால் இருக்க வேண்டிய விஷயங்களை எழுதுவது ஒரு உயர்வு. இதுபோல, அய்யுபுவின் அப்பா கரீமுக்கும், சந்திரன் என்பவருக் கும், நாசுவன் மம்மீதுக்கு மான சிநேகம், மிகுந்த வாசனையுடன் சொல்லப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது. அது அத்தர் வாசனை பூசிய நட்பு!
அய்யுபு, அவன் அம்மாவின் அண்ணன் மகளை நெஞ்சுக்குள் வைத்திருந்தான். அதுதான் உகந்த இடம் என்று காதலர்கள் நம்புகிறார்கள்! தங்கச்சிகள் திருமணம் முடிந்து, திருமணம் செய்து கொள்ளலாம்தான். ஆனால் காமிலாவின் தந்தை நெருக்குதல் கொடுத்துத் திருமணத்தை ஒப்பேற்றிவிட்டார். அவர் வில்லன் போல் தோற்றம் அளிக்கிறார். ஆனால், மனிதனாகவும் இருக்கிறார். மனிதர்கள் அப்படித்தான்!
அய்யுபுவின் அறை நண்பன் சாதிக். அவன், தன் மகளோடு வெப் கேமில் பேசிக் கொண்டிருக்கிறான். ஹாஜரா, இப்படிக் கேள்வி போடுகிறாள்.
‘‘அத்தா எப்ப வருவீங்க?’’
‘‘சீக்கிரம் வந்துடறேன் செல்லம்.’’
‘‘ஒன், டு, ஃபை, ஃபோர், டென் டேய்ஸ் ஆயிடுச்சி அத்தா’’ என்று கைவிரல்களையும் கால் விரல்களையும் காட்டி அங்கலாய்க்கிறாள்.
‘‘ஹாஜரா பாப்பாவுக்கு பொம்மை கார், டிரெஸ் எல்லாம் வாங்கனுமில்லே செல்லம். அத்தா வாங்கிட்டு ஓடி வந்துடறேன்ம்மா.’’
‘‘வேணாத்தாநான் எதுவுமே கேக்க மாட்டேன். நீங்க வாங்க அத்தா. நான் மணி சேவ் பண்ணி வெச்சிருக்கேன். உங்களுக்கு பொம்ம கார், டிரெஸ்ஸு எல்லாம் வாங்கித் தர்றேன்’’ என்று சொல்லும்போது கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. சாதிக்கால் அதற்கு மேல் தொடர முடியவில்லை.
வெளிநாட்டுக்குக் கருத்த முடியோடு சென்று வெளுத்த முடியோடு திரும்பும் மனிதர்களின் ஒப்பிட முடியாத சோகத்தை, சில இடங்களில் சாரா பதிவு செய்திருக்கிறார்.
அய்யுபுவுன் வெளிநாட்டு வாழ்க்கை யின் அடர்ந்த துன்பம், தனிமை பதிவு செய்யப்பட்டிருப்பது குறைவே ஆனாலும், நாவலின் நோக்கம் நிறை வேற உதவுகிறது. ஆனால், அவன் மனைவி குழந்தையுடன் வந்து, கவிந்த வறுமையுடன் போராடுகிற பெரும் துயரம் போதுமான கவனத்தைப் பெறாமல்போகிறது. இன்னும் கூடுத லாக இப்பகுதியைச் சாரா சொல்லியிருக் கலாம் என்று தோன்றுகிறது.
நம் சொல்லேர் உழவர்கள் அதிகம் உழாத ஒரு களத்தைச் சாரா தேர்ந் தெடுத்ததும் அதை எழுதியதும் வரவேற்கத்தக்க விஷயம். குடும்பம் என்ற பாரத்தை மனதிலும் உடம்பிலும் சுமந்து, அது குடும்பத்துக்குத் தெரி யாமலும் காப்பாற்றிகொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர் திரும்பி, பிறகு நெஞ்சில் ரத்தம் கசிய பயணப்படும் சபராளியின் வாழ்க்கை மிகுந்த துயரம் கொண்டது. இசுலாமிய கிராமங்களின் இளைஞர்கள் பல நூறு பேர்களின் துயரப் பெருமூச்சை, மவுன அழுகைகளைக் கேட்டிருப்பாய் காற்றே…’ என்று வேறு சந்தர்ப்பத்தில் எழுதினார் பாரதி. இன்னும் பொருந்து கிறது, நம் இன்றைய இசுலாமியச் சகோதரர்களுக்கு,
சாராவின் அடுத்த நாவல் இன்னும் அடர்த்தி கூடிய, கலை வெற்றி பெற்ற நாவலாக வெளிவரப் போவதை எதிர்பார்க்கிறேன்.
இந்த நாவலை, ஹெச்.1/ ஹெச்.2-65 ஆர்.எம்.காலனி, திண்டுக் கல்லில் இயங்கும் வலசைபதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- நதி நகரும்

 

 

 

கதாநதி 17: ரவிக்குமார், அகரமுதல்வன்- தாயைப் பிரசவித்தவர்கள்!

தாயைக் குறித்த சித்தரிப்புகள் உலக இலக்கியங்கள் அனைத் திலும் நெகிழ்வுடையதாகவும், ஊற்று நீர்போல குளிர்ச்சியும் பரிசுத்த மானதாகவுமே படைக்கப்படுகின்றன. அது அப்படித்தான் இருக்க முடியும். கண்ணில் காணாத தன் குழந்தையை வயிற்றுக்குள் வைத்து உயிரும் உணவும் கொடுத்து வளர்ப்பவள் அல்லவா அவள். மனித குலத்தின் விழிகளைத் திறந்து உலகைப் பார்க்கக் கற்றுக் கொடுப்பவர்கள் தாய்களே!
மொழியைத் தாயோடு இணைத்துப் பேசுவது தமிழினம். அடிப்படையில் சட்டென உணர்ச்சிவசப்படுதல் தமிழர் பண்பு! இது படைப்பிலும் வெளிப்படவே செய்கிறது. எண்ணற்ற தமிழ்க் கதைகள் தாயை, தாய்மையை மிக உன்னதமாகவே வெளிப்படுத்துகின்றன. இது இயற்கைதான். என்றாலும் தாய்மார்கள் மனுஷிகள். ரத்தமும், சதையும் அதனாலேயே உணர்ச்சிகளும் கொண்டவர்களும் ஆவார்கள். அந்த மனுஷ அம்சங்களைக் கொண்ட வகை மாதிரி கதைகளே வளரும் மொழிக்கும் இலக்கியத்துக்கும் தேவை. அம்மாவைப் பூஜை அறையில் இருந்து வெளியே அழைத்துவந்து சமூக மயமும் அரசியல் மயமும்படுத்தும் கதைகளே இன்றைய தேவை.
எழுத்தாளர் அகர முதல்வன் அதை உணர்ந்திருக்கிறார். அவருடைய இரண்டாம் லெப்ரினன்ட்எனும் தலைப்பிட்ட சிறுகதைத் தொகுப்பில் உள்ள, அதே தலைப்பு கொண்ட ஒரு கதையில் அப்படியான ஒரு தாயை, சமூகமயமும் அரசியல் உணர்வும் கொண்ட ஒரு மனுஷியை அவர் படைத்துக் காட்டியுள்ளார்
பின்நேரம் சூரியன் கீழ் இறங்கிக் கொண்டிருக்கிறது. பிரதேச அரசியல் துறைப் பொறுப்பாளர், அந்த மரணச் செய்தியைச் சொல்லிவிட்டு அடுத்த வேலைகளில் ஈடுபடுகிறார். சிவா அண்ணாவின் தம்பி அலை யரசன் இன்று காலை மன்னாரில் நடந்த சண்டையில் வீரசாவு அடைந் திருக்கிறான். சிவா அண்ணா மயக்கம் மீளவில்லை. தாயும் தங்கச்சி யும் அழுவது யுத்த பூமியையே கலங் கடித்திருக்கும். சுகந்தி, திருமணத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறாள்.
இறந்துபோன அலையரசன் என்கிற சுகந்தனின் கடைசித் தம்பி சுதன், இயக்க அலுவலகத்தில் பணிபுரிகிறவன். செய்தி அறிந்து வந்து கதறுகிறான். தாய் தன் பிள்ளைகளிடம் இறந்துபோன தன் மகனைக் குறித்துப் பேசுகிறான்.
வீரச் சாவு வீடுகளில் போடப்படும் பந்தல் அரசியல்துறைப் போராளி களால் போடப்பட்டு, சுற்றிவர சிவப்பு மஞ்சள் நிறத்தில் எழுச்சி கொடிகள் கட்டப்பட்டன. வீட்டின் முன்னே வாகனம் ஒன்றில் இருந்து, தியாகம் செய்த அலையரசனின் உடல் இறக்கப்பட்டு, வாங்கில் கொண்டுபோய் வைத்தார்கள். வீடே கதறியது. தாய் தன் பிள்ளையை முகம் ஒத்தி கொஞ்சி அழத் துடித்தாள். களம் இருந்து விடுமுறையில் வருவ தாய் சொன்ன பிள்ளை வித்துடலாய் வந்திருப்பதை நினைத்து அவள் விதியை நொந்தாள்.
‘‘அண்ணா எங்கள விட்டுட்டுப் போயிட்டியே…’’ என்று அலையரசனின் பாதங்களில் தலையை வைத்து சுகந்தி அழுதாள். அவனைச் சுமந்த கருவறையின் உயிர்ப்பில் தீக்கங்கு மிளாசியது. தாய் அழுகிறாள். புலிச் சீருடை அணிந்து பெட்டிக்குள் கிடக்கும் தனது பிள்ளையின் உள்ளங்கைகளை எடுத்து தன் முகத்தில் ஒத்திக் கண்களை மூடுகிறாள். தன் பிள்ளையின் மரணக் காயம் எங்கெனத் தேடித் தேடி அழுகிறாள்.
ஒரு கிழமைக்கு முன்தான் அலையரசன் கொடுத்துவிட்ட கடிதம் வந்து சேர்ந்தது. அதில் அம்மா எனக்காக விரதம் பிடிச்சு உடம்பைக் கெடுக்காதேங்கோ... மண்ணுக்காகத் தான் நான் போராடிக் கொண்டிருக் கிறேன். நீங்கள் கவலைப்படும்படியாய் என் சாவு இருக்காது. மண்ணுக்கும் மக்களுக்கும் விடுதலை வேண்டித்தானே நிற்கிறேன்... நீங்கள் தந்துவிட்ட பண்டி வத்தல் சாப்பிட்டு முடிச்சாச்சு. அடுத்த முறை வரும்போது மாட்டிறைச்சி வத்தல்தான் கொண்டு வர வேணும். சுகந்தியை நேற்று கனவில் கண்டன். அவளுக்கு ஆம்பிளைப் பிள்ளை பிறந்தது மாதிரி கனவு. எனக்கு மருமகன் பிறந்தால் என்னோடு நீண்டு வீரச் சாவு அடைஞ்ச பூவழகன் பெயரைத்தான் வைக்க வேணும் என்று நினைச்சு இருக்கிறன்...
இப்போது அலையரசன் வித்துடலில் புகழ் உடலாய்க் கிடந்தான். அவ்வுடலை அவன் படித்த பள்ளிக்கூடத்தில் கொண்டுவந்து கிடத்தினார்கள். அவனுக்குப் படிப்பித்த ஆசிரியர்களும் கண்கலங்கி வணங்கினார்கள்.
நமது தேசத்தின் வரைபடத்தில் நீயுமொரு கோடுஎன்று புகழஞ்சலி செலுத்தப்பட்டது. தன் பிள்ளையின் புகழ் கேட்டு விம்மிதம் உற்று தாய் அழுதுகொண்டே இருந்தாள். சுகந்தன் என்கிற அலையரசனின் உடல் வெட்டப்பட்ட குழிக்குள் இறக்கப்பட்டது. தன் மகனின் உடம்பில் மண் அள்ளிப்போட மறுத்தாள் தாய். எட்டு மாதம் கழிய இடம்பெயர்ந்திருந்த காணியொன்றில் அலையரசனின் பெரிய படமொன்றை புதைத்த அந்த தாய், அப்படத்தின் மேல் மண் அள்ளிப்போட்டு மூடிய அம்மா, நிமிர்ந்து சொன்னாள்: ‘‘நீங்கள் நாடு பிடிச்சால்தான் இந்தப் படத்தை வெளியால எடுக்கலாம், தம்பி!’’
அகர முதல்வன் எழுதி, ‘தோழமைவெளியீடு பதிப்பித்திருக்கும் இரண் டாம் லெப்ரினன்ட்எனும் இச்சிறுகதைத் தொகுதி ஈழ யுத்தக் காலத்தையும் அதற்குப் பிரதான கொடுங்காலத்தையும் போராளிகள் பக்கம் நின்று, நுட்பமுடனும் மிகுந்த வீரியமுடனும் பேசுகின்றன. போராளிகள் என்பவர்கள் தியாகிகள். தாய் மண்ணின் விடுதலைக்கு வித்தாக மரித்தவர்கள், விடுதலை பெறும் தேசத்துக்கு உயிர் கொடுத்தவர்கள், யுகம் யுகமாகப் பேசப்படப் போகிறவர்கள். அந்நிரந்தர புகழுக்கு வார்த்தைகள் வழங்குகிறவை, அகர முதல்வனின் கதைகள். (தோழமை வெளியீடு, 19/665, 48-ம் தெரு, 9-வது செக்டார் , கே.கே.நகர், சென்னை - 78.)
மாமிசம்என்ற பெயரில், பல் வேறு நாடுகளைச் சேர்ந்த ஒன்பது கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார் ரவிக் குமார்.
கதைத் தேர்வும் மொழிபெயர்ப்பும் மேதைமை கொண்டதாக இருக்கிறது. அனைத்தும் அரசியல் கதைகள். பசியால் சாகிறவர்கள், அகதிகள் பால் செய்யும் வன்கொடுமை, சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயகத்தின் பெயரால் கொல்லப்படும் சாதாரண மனிதர்கள் பற்றிய கதைகள், ஆகச்சிறந்த அக்கதைகளில் இருந்து அம்மாஎன்று ஒரு கதை. ஒரு தாய், தன் மகனைக் கொல்கிற கதை.
மடகாஸ்கர் தீவில் பிறந்து இப்போது பாரீசில் வாழும் மிக்கேல் ரகோடசன், ஆப்பிரிக்கப் பெண் எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர். அவர் எழுதிய கதை இது.
காயத்தில் இருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. ரத்தம், சீழ், வியர்வை. அம்மா வியர்வையைத் துடைத்தாள்.
‘‘என் மகன் நோயுற்று வந்திருக் கிறான்’’ அவள் சொல்வாள்.
‘‘வலிக்குது அம்மா.’’
‘‘தெரியும் மகனே. அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி நாம் பேசக் கூடாது, மகனே.’’
மரணத்துக்கு ஒப்புதல் தந்தா யிற்று, அவன் ரத்தம், விந்து, மலம் ஆகியவற்றுக்கிடையில் கிடத்தப் பட்டிருந்தான்.
அந்தத் தாய் கதவையும் ஜன்னல் களையும் மூடிவிட்டிருந்தாள்.
‘‘உன் துயரத்தை யாரும் பார்க்கக்கூடாது. உன் அலறலை யாரும் கேட்கக்கூடாது. தூங்கு மகனே!’’
‘‘ஆண்கள் உன்னை விரும்பினார்கள். பெண்கள் உன்னை நேசித்தார்கள். அழாதேநேசத்தைப் பாரு.’’
தாய் கூந்தலை அவிழ்த்துவிட்டாள், துக்கம் அனுசரிப்பது போல.
‘‘நான் உன்னை அழைத்துச் செல்லப்போகிறேன். வெகு தொலைவில் உள்ள ஓர் இடத்துக்கு…’’
தாய் மகனை படுக்கையில் நிமிர்ந்து உட்காரச் செய்தாள். வெண்மையான் ஒரு சட்டையை அணிவித்தாள்.
‘‘என் மகன் வருந்தக்கூடாது.’’
தாய் மகனை மெதுவாக அழைத்துச் சென்றாள்.
கடலில் அவர்கள் நடக்கத் தொடங்கி னார்கள்,
மகனின் தலையைத் தன் மார்போடு வைத்து அழுத்தினாள். தண்ணீர் அளவுக்கு வரும் வரை அமுத்தினாள்.
அவள் ஒரு தாலாட்டுப் பாடலைப் பாடினாள்.
தண்ணீர் அந்த இளைஞனைத் தழுவி யது. தாய், தன் மகனுடைய தலையைத் தண்ணீருக்குள் வைத்து அமுத்தினாள்.
மகனின் படத்தை மண்ணில் புதைத் தவளும், மகனின் தலையை நீரில் அமுத்திக் கொன்றவளும் தாய்கள்தான்.
அன்பும் அருளுமே அல்லது தாய் களே இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். சகல துயரங் களும், சகல கொடுங்கோன்மைகளும் தாயின் விரல் நகத்தின் கீழ் நசுக்கப் படுகின்றன.
தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க் கும், புதிய பொருள் வழங்கும் மாமிசம்சிறுகதைத் தொகுப்பை மணற்கேணிபதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- நதி நகரும்

 

 

 

 

கதாநதி 18: சா.தேவதாஸ்- உலக ஞானம் உள்ளங்கையில்...

 நாடோடிக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், தேவதைக் கதைகள், நாட்டார் கதைகள் எனப் பலப் பல பெயர்களால் வழங்கப்படும் வாய் மொழிக் கதைகள் சிலவற்றைத் தொகுத் துத் தமிழில் மொழிபெயர்த்து, ‘சூதாடியும் தெய்வங்களும்எனும் பெயரில் வெளிப் படுத்தியிருக்கிறார் சா.தேவதாஸ்.
தமிழுக்கு, முப்பதுக்கும் மேற்பட்ட மொழி ஆக்க நூல்களைத் தந்தவர். காஃப்கா, கால்வினோ, டாலி முதலிய பெரும் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். விளிம்பு நிலை மக்கள், பெண் நிலை, நாட்டார் இலக் கியங்களில் ஆய்வுகள் செய்துகொண் டிருப்பவர். மொழிபெயர்ப்பு ஆக்கத்துக் காக 2014-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். தேவதாஸின் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், வெறும் மொழி மாற்றம் இல்லை. மாறாக, பெறு மொழியின் (தமிழின்) பண்பாடு, அரசியல் சமூகத் துறைகளில் வினையாற்றும் நோக்கமும் சக்தியும் கொண்டவை.
சூதாடியும் தெய்வங்களும்எனும் இத்தொகுதியில் இந்தியக் கதைகள் பர்மியக் கதைகள், இலங்கை, சீனம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, இத்தாலி என்று பல தேசங்களின் சுமார் 32 கதைகள் உள்ளன.
நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளின் அடிப்படை பண்பே, இலக்கியம் எனப் படும். எழுத்து இலக்கியத்துக்கு நேர் எதி ரானவை. சா.தேவதாஸ் எழுதியிருக் கும் முக்கியமான முன்னுரையில், வாய் மொழி இலக்கியத்தின் உள்ளார்ந்த கலகத் தன்மையைக் குறிப்பிட்டிருக் கிறார். எழுத்திலக்கியத்தில் ராமன் கொண்டாடப்படும் நாயகன் என்றால், நாட்டார் இலக்கியத்தில் சீதை.
பத்து தலை ராவணனை ராமன் வீழ்த்தினான் என்றால் ஆயிரம் தலை ராவணனைச் சீதை வீழ்த்துவாள். நாட்டார் கதைகள், அரசு மற்றும் நிறுவனங் களுக்கு எதிரானவை. பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நிற்பவை. பெண்கள் அறிவை ஒப்புக்கொள்பவை. தெய்வங் களைப் பரிகாசம் செய்பவை. பெண், ஆண் உறவுகளில் போலீஸ் வேலை மற்றும் நீதிபதி வேலைகளைச் செய்யாதவை.
உலகம் முழுவதுமான வாய் மொழிக் கதைகள் திருடன், பேய், பாம்பு முதலானவை பற்றி அதிகம் பேசுகின்றன. குறிப்பாக திருடன். திருட்டை அவை வியந்து பாராட்டு கின்றன. ஒரு இலங்கைக் கதையைப் பார்ப்போம்:
ஒரு
நகரத்தில் ஹராந்தகன் என்று ஒரு திருடன் இருந்தான். அவன் தன் தந்தையுடன் சேர்ந்துதான் திருடுவான். நீண்ட காலமாக திருடிவரும் அவனை யாராலும் பிடிக்க முடியவில்லை. ஒரு இரவு அரசனின் கருவூலத்தில் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டு, இருவரும் அரண் மனைக்குள் நுழைந்தார்கள். சமையல் அறை ஜன்னல் வழியாக உள்ளே இறங்குகிறான். மன்னனுக்காகச் சமைக் கப்பட்ட விருந்தைத் தாராளமாக உண்டு, கருவூலத்தையும் கொள்ளை அடித்து வந்து, அவற்றை ஜன்னல் வழியாக மகனிடம் கொடுத்தான். வெளியேறக் கழுத்தை ஜன்னலில் நுழைத்த தந்தை யால் வெளியேற முடியவில்லை. அரண்மனை விருந்தால் ஆள் கொழுத்து விட்டான். வேறு வழியில்லை. ஆள் யார் என்பது தெரியக்கூடாதே. ஆகவே மகன், அப்பாவின் கழுத்தை வெட்டித் தலையோடும் கருவூலச் செல்வத்தோடும் வீடு வந்து சேர்ந்தான்.
அம்மாவிடம் சொன்னான். ‘‘ஜன்னல் வழித் தப்பிக்க அப்பாவால் முடிய வில்லை. ஆள் தெரியக் கூடாது என்ப தால் தலையைக் கொண்டுவந்துவிட் டேன். நாளை மன்னனின் ஆட்கள் முண்டத்தைத் தெருவில் இழுத்து வருவார்கள். நீ அழவோ, அரற்றவோ கூடாது.’’
மன்னனின் ஆட்கள் அந்த முண்டத் தைத் தெருவில் இழுத்து வந்தார்கள். யார் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று மன்னனின் ஆட்கள் பார்த்தபடியே வந்தார்கள். திருடனின் மகன் ஒரு மரத்தின் மேல் ஏறிப் பதுங்கி இருந்தான். தெருவில் நின்றிருந்த மனைவி, கணவனின் உடம்பைப் பார்த்தவுடன் அலறிவிட்டாள்.
மகன் அருமையான காரியம் செய் தான். சட்டென்று மரத்தில் இருந்து குதித்து, இறந்தவன் போலக் கிடந்தான். அந்தப் பெண் ஏன் அழுதாள் என்று ஒரு படைவீரன் கேட்டான். ‘‘அதுவாபையன் மரத்தில் இருந்து விழுந்தான் அல்லவா, அதான்’’ என்று மற்றொரு வீரன் பதில் சொன்னான். சடலத்தைக் கண்டு மனைவி அழுதாள் என்பது இல்லாமலாகி, ஹராந்தகன் என்ற அந்தத் திருடனும் தப்பித்தான். எனவேதான் திருடனிடம் இருக்கும் சாதுர்யங்கள் விநாயகரிடம் கூட இருக்காது என்று சொல்வார்கள். இப்படிக் கதை முடிகிறது.
தமிழகம் உள்ளிட்ட இந்தியக் கதைகள் பலவற்றிலும் திருடர்கள் மன்னர்களின் கருவூலத்தைக் கொள்ளையடித்து வெற்றியுடன் திரும்புகிறார்கள். மன்னர்கள் திகைத்துப் போவார்கள். திருடர்களின் அதிசாமார்த்தியத்தை மெச்சி, தம் பெண்ணையும் கொடுத்து பாதி ராஜ்ஜியத்தையும் கொடுத்துத் திருடர்களை ஆட்சியாளராக்கு கிறார்கள். (பல ஆட்சியாளர்களின் பூர்விகம் புரிகிறது)
சரி. கருவூலத்தையே திருடர்கள் குறிவைக்கிறார்களே, ஏன்? வேறென்ன, கருவூலம் என்பதே மக்களிடம் இருந்து மன்னர்கள் திருடியதுதானே. மன்னர்கள் திருட்டை திருடர்கள் நேர் செய்கிறார்கள். திருடர்கள் நீதிமான்கள்!
ஒழுக்கம் அதாவது ஆண், பெண் ஒழுக்கம் குறித்தப் பொய்மைகள் வாய்மொழிக் கதைக்காரர்களிடம் இல்லை. பெண், ஆண் கதையைப் போல, பெண் பெண் காதலையும் இயல்பாகப் பார்க்கும் நேர்மை அந்தக் கலைஞர்களுக்கு இருக்கிறது. பட்டப் பகலில் கடைத் தெருவில் வைத்துக் காதலனை வெட்டும் ஆணவம், அவர்களால் புரிந்துகொள்ள முடியாதது.
ராஜஸ்தான் சூழலில் சொல்லப்பட்ட கதை. இரண்டு வட்டிக் கடைக்காரர்கள் நண்பர்கள், அவர்கள், தங்கள் மகன் அல்லது மகளை, மற்றவருக்கு மருமகனாக, மருமகளாகத் திருமணம் செய்து வைத்து, சம்பந்திகளாவது என்று முடிவெடுக்கிறார்கள். துரதிருஷ்ட வசமாக, இரண்டு பேருக்கும் பெண் குழந்தைகளே பிறந்தன. ஒருத்தர், தனக்குப் பெண் பிறந்ததை மறைத்து, ஆண் மாதிரியே தன் பெண்ணை வளர்க்கிறார். பெண்ணும் தான் ஆண் என்பது தெரியாமல் வளர்கிறாள். திருமணம் நடந்துவிடுகிறது. ஆண் என்று சொல்லிப் பெண்ணைக் கொடுத் தவர் ஏராளமான வரதட்சணை பெற்று நகர்ந்துவிடுகிறார்.
சிக்கல் அதன் பிறகு தொடர்கிறது. முதலில் அசல் பெண், தான் ஏமாற்றப்பட்டது அறிந்து திகைக்கிறாள். உண்மையில் தானும் ஏமாற்றப்பட்டோம் என்பதை ஆணாக இருந்த பெண்ணும் அறிகிறாள்.
காலம் எந்தப் புண்ணையும் ஆற்றும் போலும். காதலும் அன்பும் எப்போது எந்த உருவில் தோன்றும் என்பதை யார்தான் அறிய முடியும்? இரண்டு பெண்களும் காதல் கொள்கிறார்கள். உலகம் அவர்களுக்கு முன் நீண்டு செல்கிறது.
இந்தக் கதையைச் சொல்கிறவர், அச்சில் வந்திருக்கிற பதிவு இரண்டை யும் வாசிக்கும்போதும் கவனிக்கும் போதும் ஒன்று தெரிகிறது. ஒரு பெண் ஆண் காதலைச் சொல்லும் பரவசம், இயல்பு, யதார்த்தமே கதையின் மேல் வருகிறது. அவர்களுக்கு அது சந்தோஷம் என்றால் அதை விமர்சிக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது என்பது கதைசொல்லியின் தொனியாக இருக் கிறது.
மற்றுமொரு டென்மார்க் நாட்டு ஆண்டர்சன் சொன்ன, எழுதிய கதை.
கோடை காலத்தின் இனிய பொழுது. வாத்து குஞ்சு பொரிக்கிறது. குஞ்சு களும் முட்டை உடைந்து வெளிப் படுகின்றன. ஒரு பெரிய முட்டை நீண்ட நேரம் சென்று உடைகிறது. பெரிதான, அவலட்சணமான குஞ்சு. தாய் அதை உற்று நோக்கியது. அது வான்கோழியோ என்று அஞ்சியது. அதைத் தண்ணீரில்விட்டது. குஞ்சு நீந்தியது. மற்ற வாத்துக் குஞ்சுகள் அதைக் கொத்தி விரட்டுகின்றன. கோழிகள்கூட அந்த அருவருப்பான குஞ்சைத் தீண்டின. மனம் வருந்திய வாத்துக் குஞ்சு பல இடங்களிலும் அலை கிறது. பூனையும் அதை விரட்டுகிறது. மண்ணை விட்டு நீரில் குதித்தது. நீரின் அடி ஆழத்தில் நீந்தியது. அப்போது அன்னக் கூட்டம் அங்கு வந்து சேர்ந்தது. அன்னங்களின் அழகில் ஈடுபட்டது குஞ்சு. நீரின் அடியில் வாத்துக் குஞ்சு முதன்முதலாக தன் பிம்பத்தைப் பார்த்தது. அப்போதுதான் தெரிகிறது, தான் ஒரு அன்னக் குஞ்சு என்று. பெரிய அன்னங்கள் வந்து அதை தடவிக் கொடுக்கின்றன. சில அன்னங்கள் அதை வரவேற்று வணங்கின. சிறுவர் கள் ரொட்டித் துண்டுகளையும் பருப்பு களையும் எறிந்தனர். அன்னக் குஞ்சைக் கண்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர். அழகான பறவைகளில் அதுவே மிக அழ கானது என்று உலகம் கூறுகிறது.
ஸ்பானிய ஆட்சியின்போது, டென் மார்க் பட்ட மனிதச் சிறுமையைச் சொல்லும் கதை இது.
பெரும் படைப்பாளிகள், கற்றுக் கொள்ள ஏராளம் வாய்மொழிக் கதைகளில் இருக்கின்றன. அவை, முதுகை யாருக்கும் வளைப்பதில்லை. செங்கோலை விளையாட்டுக் குச்சியா என்று கேட்கின்றன. மனிதர்களை, மனிதர்களாக ஒப்பனையின்றிக் காட்டு கின்றன. அவை பொய் பேசுவதே இல்லை. இவை, கற்றவர்கள் என்று தம்மைக் கருதிக்கொள்ளும், கற்க வேண்டியவர்க்குக் கற்றுத் தர ஏராளமான விஷயங்களைத் தமக்குள் வைத்துள்ளன. முக்கியமாக வாசிப்ப வருக்குச் சிறகுகள் தரத் தயாராக இருக்கின்றன. கண்களில் கனவுகளைப் பூசவும் விரும்புகின்றன. மிக எளிமை யான தம்மிடத்தில் சூடான தேநீர்க் கோப்பையுடன் மாலை நேரத்தில் நம் வருகைக்காகக் காத்திருக் கின்றன.
அருமையான இக்கதைகளைத் தமிழுக்குத் தந்த சா.தேவதாஸ், தமிழர்களுக்குப் பெரும் தொண்டு செய்திருக்கிறார்.
பன்முகம்பதிப்பகம் அழகாக இந்த சூதாடியும் தெய்வங்களும்நூலைப் பதிப்பித்துள்ளது.
- நதி நகரும்...

 

 

கதாநதி 19: தமிழ்நதி - தமிழ் தலை நிமிரும் கதை சொல்லி!

கடந்த 15 ஆண்டுகளில் எழுதப் பட்டிருக்கும் மிகச் சிறந்த தமிழ்க் கதைகளில் தமிழ்நதியின் கதைகளும் அடங்கும். தமிழ்நதிக்கு வாய்த்திருக்கும் மொழி அபூர்வமானது. அவர் சொற்கள், நிலைபெற்ற அர்த்தத்தோடு, யோசித்துப் பெறத்தக்க ஆழப் பொருள்களைக் கொண்டதாக இருக்கும். ஆடம்பரம் அற்ற, அடக்கமான தொனியுடன் கூடிய அவர் கதைகள், பாத்திரங்களின் செயற்பாடுகளை மேற் கட்டுமானமாகவும், அச்செயற்பாடு களின் மன ஊக்கிகளை அடிகட்டு மானமாகவும் கொண்டிருக்கும். நாளின் நிகழ்வுகளைப் பட்டியலிடும் யதார்த்தக் கதைகள் அல்ல, தமிழ் நதியுடையது. நிகழ்வுகளின் மனக் காரணிகளைச் சித்தரிக்கும் ஆழ் யதார்த்தக் கதைகள் அவருடையவை.
ஈழத்தின் திரிகோணமலை நதி மூலம். யுத்தம், அவரைக் கனடாவுக்குப் புலம்பெயர்த்தியது. சென்னை வேடந் தாங்கல். அவர் நீராலானவர். ஒரு பேட்டியில் அவர் சொன்னபடி நதி பிடிக்கும் என்பதால் தமிழ் நதி ஆனார், கலைவாணி. நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவதுஎனும் பெயரில் சிறுகதைத் தொகுப்பும், ‘கானல் வரிகுறுநாவல், யுத்த வரலாற்றைச் சொல்லும் அரிய படைப்பான பார்த்தீனியம்என்ற அண்மை நாவலும், தற்போது தமிழக, உலகப் பத்திரிகைகளில் வெளியான நான்கு ஆகச் சிறந்த சிறுகதைகளும் என்முன் இருக்கின்றன.
காற்று, மரங்களை அசைக்கும். இலைகள் பெயர்ந்து காற்றில் மிதக்கும். தான் செல்லும் திசையை இலை தீர்மானிப்பதில்லை. தமிழ் நதி, இந்த இடப்பெயர்வில் தன் வேரோடும் பெயர்ந்து கொண்டிருக்கிறார். இந்த அலைவை அவர் கதைகளாக்கி இருக் கிறார். மூன்று அம்சங்களை அவர் கதைகளில் பார்க்க முடிகிறது. தன்பால், இனத்தின் மேல் கவிந்திருக்கும் சமூக மரபு, பண்பாட்டின் பெயரால் ஒடுக்கப்படும், சகல வன்முறைக்கும் எதிராக மனித அறத்தை அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். எல்லாக் காலத்துக்கும் பொதுவான அன்பை முன்னிறுத்தும் மானுட அறத்தை அடர்த்தியாகப் பேசுகிறார் தமிழ்நதி.
இரண்டாம் அம்சம், யுத்த கால ஈழம். அதற்கும் முந்தைய, பிந்தைய வாழ்நிலை ஆகிய தற்கால வரலாற்றை, நியாயங்களை முன்வைத்த சீற்றத்தோடு, வல்லாயுதக்காரர்கள் மற்றும் ஆமிக் காரர்களின் உச்சபட்சக் கொடுங் கோன்மை, தான் தளும்பாது வாசகர் கள் பதைபதைக்கச் சொல்லும் வன்மை கொண்டவை. நல்ல கலைஞர்கள் வரலாற்றுக்கு துரோகம் செய்யாதவர் கள். பக்கத்து தேசத்துத் தமிழ்ச் சகோதரர்களின் ரத்தத்தை, கலகலக்கும் நாணயங்களாக மாற்றிய தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் பற்றிய தமிழ் நதியின் மதிப்பீடுகள் முக்கியமான பதிவுகள்.
மூன்றாவது அம்சம், அவர் நீராலான மனோபாவம். அவர் யுத்த பூமியில் புல் முளைப்பது மட்டுமில்லை; பூவும் பூக்கும். வடிவமைக்கும் காதல் புலங்களில், வசந்தமும் பனியுமன்றி வேறு பருவங்கள் இல்லை. வாசலில் வழியும் மழையில் கைநீட்டிக் களிக்கும் குழந்தைமை, கதைகளை நனைக்கும். கதைகள், கையில் அமுத சுரபியை ஏந்தி பசித்தோர்க்கு அளித்துக் கொண்டு நகரும் மணிமேகலைகள்.
தமிழ் நதி, அண்மையில் எழுதிய சிறுகதை, மாயக் குதிரை. சுருக்கமாக அதை வாசிக்கலாம்.
கனவுக்கும் நனவுக்கும் இடை யிலான அந்தர நிலையில் இருந்தாள் அவள். தன்னைக் குறித்த அயர்ச்சியும் சூதாட்டத்தின் மீதான கிளர்ச்சியும் அவளைச் சூழ்ந்தன. அம்மாவிடம் சென்று ‘‘காசிருந்தால் தாங்கோ’’ என் றாள். ‘‘ஏன்…?’’ என்றாள் அம்மா ‘‘சிநே கிதப் பிள்ளைகளோடு நயாகராவுக்குப் போறன்’’ என்றாள். ‘‘அதை எத்தன தரம் தான் பாக்கிறது?’’ என்றாள் அம்மா. அவள் பேசாமல் நின்றாள். செல்லப் பிள்ளை. அதோடு ஒற்றைப் பிள்ளை. நயாகரா அவளுக்குப் பிடிக்கும். அதைவிட காசினோவுக்குச் சூதாடப் போவது அதிகம் பிடிக்கும். அம்மா போதுமான பணம் தந்தாள். உறவினர் கள் ஒழுக்க வரையறையான வீடு, வேலை, புத்தகங்கள், இசை, மாலை நடை, சில நண்பர்கள், ஒரே ஒரு காதலன் இவைகளோடு அடங்கிய அவளைச் சூதாட்டம் மாற்றிப் போட் டது. காசினோ ஞாபகம் வந்ததும் முற்றிலும் மாறிப் போய்விடுகிறாள் அவள். வங்கிக் கணக்கில் இருப்பது, கடன் அட்டை, அம்மா கொடுத்தது எல்லாம் சேர, செலவுக்குப் போக 550 டாலர்கள் தேறின. புறப்பட்டுவிட்டாள் அவள். ஸ்லொட் இயந்திரத்தில் விளையாடுவது எப்படி என்பதை அவள் நண்பன் சுதன்தான் கற்றுத் தந்தான். பின்னாளில் அதற்காக அவன் வருந்தியிருக்கிறான்.
பயணப் பைக்குள் ஒரு நாளைக்குத் தேவையான ஆடைகளோடு புறப்பட் டாள். பிரம்மாண்டமான அந்தச் சூதாட்டக் கட்டிடம் பல வண்ணங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதில் நுழைவது, கொடிய மிருகங்கள் நிறைந்த குகைக் குள் நுழையும் பதைப்பு வரத்தான் செய்தது. ஆனாலும் சூதாடும் கிளர்ச்சி அதனினும் பெரிதாக இருந்தது. முன்பு ஒரு முறை ஜாக்பாட் அடித்த இயந்திரம் முன் போய் அமர நினைத்தாள். ஆனால், அதில் யாரோ இருந்தார்கள். ஒரு சத இயந்திரம் முன் போய் அமர்ந்தாள். சட்டென்று 160 டாலர்களை இழந்திருந் தாள். இதோ இதோ வெல்லப் போகிறாய் என்று சத்தம் போட்டபடி அந்த இயந்திரம் சுழன்றது. ஆனால், அவள் தோற்றுக்கொண்டே இருந்தாள். வேறொரு இயந்திரத்தை நாடிப் போனாள். வழியில் இரண்டு 20 டாலர்களை இழந்தாள். ஏராளமான மனிதர்கள் குடித்துக்கொண்டும், சிலர் மது அருந்திக்கொண்டும் இருந்தார்கள். திடுமென எல்லோரும் அவனுக்கு மறைந்து போனார்கள்.
கடவுளே கடவுளே என்று அவள் அரற்றிக்கொண்டிருந்தாள். விழப் போகிறது. இதோவெற்றிஎன்று படபடப்புடன் காத்திருந்தாள். 100 டாலர்கள் ஜெயித்தாள். உடன் அதை யும், கூட அறுபதையும் இழந்தாள். ‘‘நாசமாய்ப் போனவள்’’ என்று தன் னையே திட்டிக் கொண்டாள். பையைத் திறந்து பணத்தை எண்ணிப் பார்த்தாள். இருந்தது வெறும் 200 டாலர்கள். அவளுக்குத் தலை சுற்றியது.
இதோ ஒரு நொடியில் எல்லாம் மாறிவிடப் போகிறது. அவள் நம்பி னாள். அதோ அந்த மாய நொடி வரப் போகிறது. பணம் குவியப் போகிறது. எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் விடுதி திரும்புவாள். இப்போது இரவு பதி னொன்றரை. யாரோ ஜாக்பாட்அடித்திருந்தார்கள். மீண்டும் முயற்சிக் கலாம் என்று தோன்றியது. வயிற்றில பசி எரிந்தது.
தோற்றாள். கையில் வெறும் 20 டாலர் இருந்தது. அறைக்கு அட்வான்ஸ்பணம் நூறு, அறையைக் காலி செய்யும்போது கிடைக்கும். இந்த 20 சாப்பிடப் போதும். அவளுக்கு அழுகை வந்தது. வங்கிக் கணக்கில் 80 டாலர்கள் இருந்தன. அதையும் பரிசோதிக்கலாம். அது நம்மைக் காப்பாற்றும். ஆடினாள். தோற்றாள். முகம் சரிந்து அமர்ந்திருந்தாள்.
அறைக்குத் திரும்பினாள். அம்மா பலமுறை அழைத்தது செல்லில் தெரிந்தது. சுதன் ஆறு முறைக்கு மேல் அழைத்திருந்தான். அவள் மீண்டும் அழைத்தான். எடுத்தவுடன் எவ்வளவு தோற்றாய் என்றான். நான் தருகிறேன் என்றான். அவன் குரலில் இருந்த அக்கறை உண்மை.
‘‘இனிமே இங்கே வர மாட்டன். அப்படி வந்தா என்னை விட்டுடுங்க’’ அவள் இதைச் சொன்னபோது, உண்மையாகத்தான் சொன்னாள்.
கதை இப்படி முடிகிறது:
நன்றாக உறங்கிவிட்டிருந்தாள். காலையில் கண் விழித்ததும் முதல் நாளின் ஞாபகங்கள் நெருஞ்சியாய் நெருடின. தன்னிரக்கம் மிகுந்து கண்கள் பனித்தன. அதனை நினைக்கும்தோறும் நெஞ்சம் காதலில் விம்மியது. அறையைக் காலி செய்தாள். முன்பணமாகக் கொடுத்திருந்த 100 டாலர்கள் வந்தது. விடுதியை விட்டு வெளியே வந்ததும் அந்த 100 டாலர்களையும் வெளியில் எடுத்தாள். அதில் பேருந்து கட்டணத்துக்கு என 25 டாலர்களை எண்ணித் தனியாக வைத்தாள். பிறகு, காசினோவை நோக்கி வெகுவேகமாக நடக்கத் தொடங்கினாள்.
தமிழ்நதியின் சில சொற்பிரயோகங் கள் இவை:
அதில் விழுந்து செத்துப் போய்விடத் தூண்டும் அழகோடும் நயாகரா கொட்டிக் கொண்டிருந்தது.
முதலிரவில் உனக்கு என்னவெல் லாம் பிடிக்கும் என்று கணவனானவன் கேட்டபோது, ஒரு நொடியும் தாமதிக்காமல் புத்தகங்கள்என்றாள். அரை இருளில் அவன் முகம் புலப்படவில்லை. எனினும் அந்தப் பதிலால் அவன் திருப்தியடையவில்லை என்பதைத் தொடுதலில் உணர்ந்தாள்.
அவனோடு நிறையக் கதைக்க விரும்பினாள். அவனோ வார்த்தையைக் காட்டிலும் செயலையே விரும்பினான். தன்னைத் தின்னக் கொடுத்து முகட்டைப் பார்த்துக்கொண்டு அவள் படுத்திருந்தாள். முகட்டைப் பிரித்துக் கொண்டு தன் குதிரையோடு ராஜகுமாரன் வெளியேறிப் போனான். வருத்தமாக இருந்தது.
- நதி நகரும்

 

 

 

 

 

கதாநதி 20: இமையம்- சமூகத்தின் மனசாட்சி

எழுத்தாளர் இமையம், மொழி குறித்த தீர்க்கமான கருத்துகள் உடையவர். மக்கள் பேசும் மொழியைத்தான் அவர் தனதாக்கிக்கொண்டார். எனினும், சொற்கள் தங்கள் முழு அர்த்தத்தையும் பயன்பாட்டையும் தந்துவிடுமாறு தன் உரையாடலை அமைத்துக்கொள்ளும் வல்லமைகொண்டவர்.
இறுக்கமும், இனிமையான வாசிப்பு அனுபவத்தையும் தரும் விதமாக அவர் கதைகள் மிளிர்கின்றன. தம் சமகாலத்து வரலாற்றை அவர் எழுதுகிறார். அதைக் கதையாக மாற்றி எழுதுகிறார். அவர் கதைகள் யதார்த்தக் கதைகள் போலத் தோன்றும். ஏனெனில் அவர் புலப்படுகிற, எல்லோரும் அறிகிற மேற்கட்டுமான வாழ்க்கையை எழுதுகிற வர் இல்லை. வாழ்க்கை, எதை அர்த்தப் படுத்துகிறதோ, அந்த மறைபொருள் வாழ்க்கையையே எழுதுகிறார். அவர் கதைகள் ஒவ்வொன்றும் ஓர் இனத்தின் பண்பாட்டு வாழ்வியல் ஆவணமாக இருக்கும்படியாக அவர் எழுதுவது அபூர்வம் என்றே சொல்ல வேண்டும். அவர் மொழியைத் தனக்கான மொழியாக மாற்றி அமைத்துக்கொள்கிறார்.
சாவு சோறுசிறுகதைத் தொகுதி யும் (2014), 2016-ல் வெளியான நறுமணம்தொகுதியும் என் மேஜையில் இருக் கின்றன. இரண்டும் க்ரியாவெளி யிட்டவை. மொத்தம் 60 கதைகளுக்குள் ளாகவே அவர் எழுதியிருப்பார். அவர் கதைகள் அனைத்தும் கூர்மையான எடிட்டிங்குக்கு உட்பட்டவை. இது அந்த எழுத்தாளரின் சமூக பொறுப்பைக் காட்டுவது. தன்னிடம் உள்ளதை ஆகச் சிறப்பாகத் தர வேண்டும் என்ற உள்ளார்ந்த ஈடுபாட்டின் விளைவு அது. கதைக்கு அல்லது படைப்புக்குத் தேவை யற்றது என்று எந்த வரியும் இமையம் கதைகளில் காணக் கிடைக்காது. இமை யம், தன் கதையை எழுதத் தொடங்கி வைக்கிறார்; கதை, தன் கதையை எழுதிக் கொள்கிறது!
இமையம், பெண்கள் பற்றி எழுதும் பரப்பு அகலமானது. பொதுவாகப் பெண்கள் இயக்கப்படுபவர்கள் என்ற கருத்து, இமையத்தால் மீண்டும் மீண் டும் மறுக்கப்பட்டுகணவர்களை, ஆண் களை, சமூகத்தை, சமூகத்தின் அனைத்து விவகாரங்களையும் இயக்குபவர்களாக பெண்கள் விளங்குகிறார்கள். இந்த மாற்றத்தை அவர்கள் கோஷங்கள், தத்துவார்த்தப் பிரச்சினைகள் ஏதுமற்று மிக இயல்பாக, காலை விடிவது போலவும், சாயங்காலம் வருவது போலவும் செய்துவிடுகிறார்கள்.
இரண்டு கதைகளைப் பார்ப்போம்:
ஒன்று சாவு சோறு’. பூங்கோதை என்பது அந்த அம்மாளின் பெயர். சுமார் 50 வயதுக்காரி. பள்ளிக்கூடம்தோறும் சென்று, தன் மகள் அம்சவல்லியைத் தேடிக்கொண்டு அலைகிறாள். வாட்ச் மேன் துரத்துகிறார். அரசு பெண்கள் பள்ளி மட்டும்தான் அவள் பார்க்காதது. நாலைந்து நாட்கள் முன் மொட்டை அடித்த தலை. முழங்காலுக்கு மேலாகக் கட்டியிருந்த சேலை. வியர்வை வழிந்து உப்பு பூத்த சட்டை. தடித்த கருத்த உருவம்.
அம்சவல்லி படிக்கிறாளா, இல்லை வேலைசெய்பவளாக இருக்கும். பூங்கோதை அரசு பெண்கள் பள்ளிக்கு வருகிறாள். அங்கு மணி அடிக்கும் வேலை பார்க்கும் கமலாவைச் சந்திக் கிறாள். கமலாவுக்கும் பூங்கோதைக்கும் இடையே நடக்கும் உரையாடலாகக் கதை நடக்கிறது.
‘‘அம்சவல்லி என்ற பெயரில் ஆசிரியை யாரும் இல்லை. என்ன விஷயம்?’’
‘ ‘வேலைக்குப் போறப்ப ஒரு பயகூட ஓடிப்போச்சி. வாத்தியார் வேலைக்குப் படிச்சவ. அதனால பள்ளிக்கூடங்கள்ல தேடுறேன். இன்னியோட இருவது நாள் ஆச்சி. அவளுக்கு நான் சிலதைத் தரணும்.’’
‘’என்ன தரப் போறே?’’
பூங்கோதை வெள்ளந்தியாக எட்டு பவுன் நகையையும், இருபதாயிரம் ரூபா பணத்தையும், படிச்ச படிப்புக் கான சர்ட்டிஃபிகேட்டுகளையும் எடுத்துக் காட்டுகிறாள். திடுக்கிட்டுப் போய்விடு கிறாள் கமலா. ஓடிப்போனவள் எங்கிருந் தாலும் இவற்றைக்கொண்டு பிழைத்துக் கொள்ளலாம்தானே? கமலா, அவளை ஒரு மரத்தடியில் உட்கார வைத்தாள். குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள். பூங் கோதை தண்ணீர், டீ குடிக்கவில்லை.
இந்த நகையையும், பணத்தையும், சர்ட்டிஃபிகேட்டையும் கொடுத்து மக ளைப் பிழைத்துகொள்ளச் சொல்லலாம் என்று தாய் எண்ணுகிறாள். எப்படியானா லும் மகள் ஊருக்குள் வரக் கூடாது. ஏன்? வந்தால் பஞ்சாயத்து தீர்ப்பின்படி ஊர் மானத்தை (கீழ்ச்சாதிபையனுடன் அல்லவா அவள் ஓடியிருக்கிறாள்) வாங்கியதுக்காக அவள் மாரை அறுத்துவிடுவார்கள். அதுக்கு ஊர் காத்திருக்கிறது. இதற்கு முன் இரண்டு பெண்கள் மார்கள் அறுக்கப்பட்டு, சாமியாகியிருக்கிறார்கள். அவர்கள் மானம் காத்த சாமிகள்.
‘‘அம்சவல்லி ஓடிட்டாள்னு தெரிஞ் சதும் அப்பனும் அண்ணனும் அவள் செத் துட்டதாப் பத்திரிக்கை அடிச்சு கருமாதி செஞ்சுட்டாங்க. அவளைத் தேடிட்டிருக் காங்க. கண்டுபிடிச்சா கொன்னுடு வாங்க. இழுத்துட்டு ஓடுன பையனின் தாய் தற்கொலை செஞ்சுகிட்டா. என் பொண்ணு ஊருக்குள்ள வந்துடாம அவளைக் கண்டுபிடிச்சு பணம் கொடுத்து எங்கேயாச்சும் ஓடிப் போய் பிழைச்சுக்க சொல்லணும் அதுக் காகத்தான் அலையறேன். இப்படி அலையறது தெரிஞ்சா, என் புருஷனும் என் புள்ளைகளும் என்னைக் கொன்னுடுவாங்க’’.
சுமார் 20 பக்கம் நீள்கிற கதை இது. நான் எழுதியது சுருக்கம்தான். வாசகர்கள், இக்கதையை இமையம் மொழியில் படிக்க வேண்டும். பதறா மலோ, கண்ணீர் துளிர்க்காமலோ இக் கதையை யாரும் படித்துவிட முடியாது.
தாழ்த்தப்பட்ட பையன்களுடன் ஓடிப் போகிற இடைநிலைச் சாதிப் பெண் களைக் கண்டுபிடித்துக் கொண்டுவந்து அவள் மாரை அறுப்பார்களா? ஆம்! அறுக்கிறார்கள். அப்பெண்களை செங்கல் சூளைக்குள் உயிரோடு இறக்கிக் கொல்கிறார்களா? ஆம்! கொல் கிறார்கள். சொந்த மகள் ஓடிப் போனாள் என்பதற்காக, அந்தப் பெண்ணின் தந்தை தன் மகளுக்குக் கருமாதி செய்வானா? ஆம்! செய்கிறான். அந்தப் பெண்ணை பெற்ற பூங்கோதைக்கு தலை மொட்டை அடிக்கப்படுகிறது. இவையெல்லாம் எங்கு நடக்கிறது. அதர்மபுரிகளில்தான்.
மானமற்ற மனிதர்கள் செய்யும் மானக் கொலைகள் பற்றியும், காதலர்கள் தலைமறைவு பற்றியும், அசாதாரண சமூகச் சூழலையும் ஆவணப்படுத்திய இக்கதையை (சாவு சோறு) போன்ற கதை, தமிழில் இன்னொன்று இல்லை. தங்கையைக் கொல்ல அலையும் அண் ணன்கள். பெண் உயிரொடு இருக்கும் போதே பெண்ணுக்கு கருமாதி செய்யும் தந்தை. காதலன் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவன் என்பதற்காக, அவன் தாய், தந்தையைக் கொல்கிற சாதி ஆணவம். இவர்களிடம் இருந்து தன் பெண்ணைக் காப்பாற்ற உணவு, உறக்கமின்றி அலையும் தாய்... என்று இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறார்கள். நம்மோடுதான் வாழ் கிறார்கள்.
அடுத்து, ‘நறுமணம்தொகுப்பில் இடம் பெற்ற மணியார் வீடுஎன்கிற கதை:
நல்ல வெயில். வீரமுத்து வீடு திரும்பு கிறார். வள்ளியம்மாளைப் ஃபேன் போடச் சொல்கிறார். ‘‘பவர் கட்…’’ என்கிறாள் வள்ளி. வியர்வை, குளிக்கலாம் என்று எழுகிறார். பம்ப் இறைக்க முடியாது. பவர் கட். ஊரில் சும்மா கிடக்கிற வீட்டை யும், நிலத்தையும் விலைக்கு வாங்க சிங்கப்பூர் சின்னச்சாமி வந்து காத் திருந்து, பிறகு வருவதாகச் சொல்லிச் சென்றதை சொல்கிறாள் வள்ளி.
‘‘என் வீடு மணியக்காரர் வீடு. அந்தப் பிச்சைக்காரனுக்கு நான் என் வீட்டை விற்பேனா?” என்கிறார் வீரமுத்து. ‘‘விற்றால் என்ன?” என்கிறாள் வள்ளி. பிள்ளைகள் எல்லோரும் இருக்கும் பட்டணத்துக்குப் போகலாம் என்கிறாள் வள்ளி. வீரமுத்துவுக்கு படுகோபம். கவுரவம்?
சின்னச்சாமி வருகிறான். வள்ளி முன் நின்று விலை பேச, அட்வான்ஸை வாங்கி அலமாரியில் வைக்கிறாள் வள்ளி. வீரமுத்து ஒன்றும் செய்ய முடியாமல், தன் குடும்பம் பற்றிய வளப்பமான கடந்தகாலப் பெரு மையை எண்ணிக்கொண்டு கண்ணீர் உகுக்கிறார்.
பழமை பித்து தன்னை அண்டவிடாது காத்துக்கொண்டவள் வள்ளி என்கிற பெண். பாழ் நிலத்தை தன் எதிர்காலச் சந்ததிக்குப் பயனாக மீட்டு எடுப்பவள்... பெண். வெற்றுப் பரம்பரை மேன்மைப் பித்தை துடைத்து வெளியேற்றி நவீனக் கதவைத் திறந்து வெளிச்சம் உள்ளே வரட்டும் என்று ஒளியை நோக்கி நடப்பவள்... பெண்.
இமையத்தின் பெண் இவள். சாதாரணக் கிராமத்துப் பெண். பெண் விடுதலை தத்துவம் எல்லாம் அவள் அறியாதது. ஆனால், வரலாற்றுப் பக்கத்தில், மாறுதல் என்ற மாறாத தத்துவத்தைப் படிக்காமலேயே, தன் உள்ளுணர்வின் போதத்தால் கணவனை, பிள்ளைகளை, சமூகத்தை முன் நகர்த்துகிறாள் வள்ளி.
இமையம் போன்ற எழுத்தாளர், மிக மிகச் சிலரே தமிழ்ச் சூழலில் மிகக் கடுமையான முயற்சி, உழைப்பை முன் வைத்து ஒரு புதிய உலக்குக்கு எழுதுகிறார்கள். இமையத்தின் முயற்சி தோற்பது இல்லை!
- நதி நகரும்

 

 

 

 

 

 

 

 

கதாநதி 21: சந்திரா - பனி நீர் எழுத்து

இரவென்பது சந்திராவின் மொழி, சந்திராவுடையது. இறுக்கமும், வாசிப்பவரின் கவனத் தைச் சிதறவிடாமல் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் பாணி அவருக்கு வாய்த்திருக் கிறது. அவர் அனுபவத்தை எழுதுகிறார். எல்லோரும் அனுபவத்தைத் தானே எழுதுகிறார்கள். ஆம் சரிதான்! தன் அனுபவத்தின் ரகசியத்தை அவர் எழுதுகிறார். அதாவது, வாழ்வின் மேல் அடுக்கை அல்ல; அதன் மடங்கிய உள் அடுக்கை, ரகசியமாக தட்டியவுடன் திறக்கத் தயாராக இருக்கும் ரகசியார்த் தங்களை எழுதுகிறார்.
அவரது முக்கிய மான கதை, ‘காட்டின் பெருங்கனவு’. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்த கதை. ஒரு காதல் கதை போன்றது. வழக்கமான காதல் கதை அல்ல; தவிர்க்க முடியாத, நேர்ந்தே தீர்கிற மனித பந்தத்தைச் சொல்லும் கதை. அதைச் சொல்ல அவர் தேர்ந்தெடுத்த திணைகள் குறிஞ்சியும் முல்லையும். அதாவது, மலைப் பகுதியும் காடும். காட்டின் வாசனையை, இற்றுவிடும் ஒற்றை இலையின் பச்சை வாசனையை, ஒரு வாசகன் உணர முடிகிற விதமாகக் கதையை மண் தோய்ந்து எழுதுகிறார். அதே சமயம் பூடகமும் அவருக்கு இயல்பாக அமைகிறது.
அவள் தன் காது தோட்டைத் தொலைத்துவிடுகிறாள். எல்லோரும் தேடுகிறார்கள். யாரிடமும் அது கிடைக்கவில்லை. கடைசியாக அவன் கண்டுபிடித்து எடுத்துத் தருகிறான். காணாமல் போனது தோடும் இல்லை. அதைக் கண்டுபிடித்து அவன் திருப்பித் தருவதும் தோடு இல்லை என்பதை நல்ல வாசகர் உணரத் செய்யும் விதமாக அவர் எழுதுகிறார்.
கட் சொன்ன பின்னும் கேமரா ஓடிக் கொண்டிருக்கிறதுஎன்ற தலைப்பில் ஒரு கதை. எனக்கு மிகவும் பிடித்த கதை. சினிமா என்ற பிரம்மாண்டத்தின் ஓரிழை இது. இதன் இருட்டுகளில் ஒன்று இது. இக்கதை அந்த இருட்டுக்குள் வெளிச்சம் கொண்டுவருகிறது. கடந்த பல பத்தாண்டுகளில் நம் சினிமாக்கள், பெண்ணின் உடம்பு மீது எழுப்பப்பட்ட கண்ணாடி மாளிகை. மானுட குலத்தின் விழுமியங்களின் மேல், சினிமா எனும் கலை நிர்மாணம் செய்யப்பட வேண்டிய அவசியத்தைச் சினிமாவின் மூத்த சகோதரக் கலை அல்லது சகோதரிக் கலையான இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது. பெண் உடம்பை மட்டுமல்லாது; திருநங்கையர் பற்றி அண்மைச் சித்தரிப்புகள் அறியாமை மற்றும் வக்கிர மற்றும் ஆபாச வெளிப்பாடுகள்.
கட் சொன்ன பின்னும் கேமரா ஓடிக் கொண்டிருக்கிறதுகதை உள்ளில் பிரவேசிக்கலாம்:
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக் கிறது. கதை சொல்லியான துணை இயக்குநர் (பெண்) பார்வையில் கதை நிகழ்கிறது. அவர் பேச்சிலேயே கதையைக் கேட்போம். ஒரு காட்சியை படம் பிடிக்கும்போது, அடுத்த காட்சிக்குத் தயாராவோம். ஆனால், என் வேலையை மற்றொரு அசிஸ்டென்ட் பார்த்தார். ‘‘என்ன விஷயம்?” மேக்கப் மேனிடம் கேட்டேன். ‘‘இத்தனை நாளா காஞ்சிக் கிடந்த யூனிட்டுக்கே இன்னிக்குத்தான் ஏதோ கண்ணுக்கு நல்ல குளிர்ச்சியாகத் தட்டுப்படுது. உங்க டைரக்டர் அந்த பிராஸ்டிட்யூட் வர்ற சீனை எடுக்கப் போறாரு’' என்றார் மேக்கப் மேன். ‘‘அதுல என்ன அதிசயம்?’’ என்றேன். ‘‘அதில் நடிக்கப் போவது உண்மையான பிராஸ்டிட்யூட்’’ என்றார்.
எங்கள் இயக்குநர் ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் பார்க்கக் கூடியவர் இல்லை. வேடிக்கை பார்க்கும் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் மட்டுமல்ல; யூனிட்டே வேடிக்கை பார்த்தது. நான் இயக்குநர் பக்கத்தில் இருக்கும் மானிட்டர் அருகே நின்று கொண்டிருந்தேன். அன்று காலையில்தான் இயக்குநர் திடீரென்று இந்தக் காட்சியைத் திட்ட மிட்டிருக்கிறார். சென்னையில் இருந்து நடிகை யாரையும் உடனடியாக வர வழைக்க முடியவில்லை. மேனேஜர் இந்த ஊரில் இருந்தே ஒரு நிஜ பாலியல் தொழிலாளியை வரவழைக்க ஏற்பாடு செய்துவிட்டார்.
முப்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்மணி லாரியில் இருந்து கீழே இறங்கி வந்தார். சுற்றி நின்றவர்கள் அந்தப் பெண்ணைப் பார்த்த பார்வை யைச் சகிக்க முடியாத டைரக்டர், அந்தப் பெண்ணை அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து ஒரு நடிகை வந்து சேர்ந்தார். இப்போது யூனிட்காரர்கள் அந்த நடிகையைச் சாதாரணமாகவே பார்த்தார்கள். அந்தக் காட்சியை இயக்குநர் விளக்கியதும், அந்தப் பெண் சொன்னாள்: ‘‘சார், என் சேலைத் தலைப்பை விலக்கணும்னு யாரும் சொல்லலை சார். என்னால அப்படி நடிக்க முடியாது சார்...’’
அன்று இரவு தனியாக அந்தப் பெண் என்னிடம் சொன்னாள்: ‘‘எனக்கு அடுத்த மாதம் கல்யாணம். இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க முடியாது’’. அவள் குடும்ப நிலைமை அந்த அளவுக்கு பரிதாபமாக இருந்தது. நான் அவள் முடிவை ஆதரித்தேன்.
கடைசியாக ஒரு பெண் வந்தாள். அறைக்குள் சேலைத் தலைப்பை எடுக்கும் காட்சியை படமாக்கினார் டைரக்டர். கேமராமேன் மற்றும் நாலு பேர் மட்டுமே இருந்தோம். இயக்குநர் அறைக்கு வெளியே டி.வி மானிட்டர் முன் உட்கார்ந்து காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார். சேலைத் தலைப்பை எடுத்துவிட்டு பிளவ்ஸின் முதல் பின்னை அவிழ்ப்பது போல் பாவனை செய்யச் சொன்னார். அதற்குள் கட் சொல்லிவிடுவார் டைரக்டர்.
அறைக்குள் அந்தப் பெண் தலைப்பை எடுத்துவிட்டு முதல் பின்னை அவிழ்க்கத் தொடங்கினாள். தாளிடப்பட்ட அறைக்குள் காட்சி நடந்தது. டைரக்டர் அறைக்கு வெளியே இருந்ததால் அவர் கட்' சொன்னது எங்களுக்குக் கேட்கவில்லை. இயக்குநர் கட்சொல்லாதவரை கேமராமேன் கட் செய்ய மாட்டார். இயக்குநரிடம் கட்வார்த்தைகள் கேட்காததால் கேமராமேன் யோசனையோடு படம் பிடித்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண் அவளுக்குச் சொல்லப்பட்ட ஆக் ஷனோடு நிற்காமல், பிளவ்ஸின் எல்லாப் பின்னையும் கழற்றி, அதைத் தனியாக கழற்றி எறிந்தாள். கேமரா ஓடிக்கொண்டே இருந்தது.
இந்தக் கதை இடம்பெற்ற அழகம்மாஎன்ற தொகுப்பும், ‘காட்டின் பெருங்கனவுஎன்ற இரண்டு தொகுப்புகளையும் உயிர் எழுத்துபதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பூனைகள் இல்லாத வீடு’ (உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட தொகுதி) ஆகிய மூன்று தொகுதிகள் 28 கதைகள் என் முன் இருக்கின்றன. மலையும் காடு சார்ந்த நிலப் பகுதிகளின், அவர் பால்யத்தின் நினைவுகள் கதை களாக வடிவம் கொள்கின்றன. இழப் பின் வலிகளால் ஆன உலக மாகவும் சந்திராவின் கதைகளைச் சொல்லலாம்.
மனித உறவுகளில் ஏற்படும் இழப்பு, பிரிவு, விலகல், தவறாகப் புரிந்து கொள்ளல் போன்றவைகளால் மனம் உலர்தல், புரிந்து கொள்ளக்கூடியது தான். ஒரு புளியம்காட்டை இழந்து வருந்தும், ஒரு ஆத்மாவைப் புளியம்பூ என்கிற கதை, ஒரு கவிதையின் உள்ளார்ந்த எழிலுடன் விவரிக்கிறது. வாங்கிய செவலைக் காட்டில் புளியம் கன்றை நட்டு, அண்டா அண்டாவாகச் சுமந்து வந்து தண்ணீர் ஊற்றி, ஒரு குழந்தையைப் போல புளியம் தோப்பை உருவாக்குகிறார் அப்பா. செடிகள் மரமாகி, மரங்கள் தோப்பாகின்றன. பார்த்துப் பூரிக்கிறார் அப்பா. அக்கா கல்யாணத்துக்குக் கடன், அண்ணன் வியாபாரத்துக்கு மூலதனம் என்று தோப்பு, கை மாறுகிறது.
கதை இப்படி முடிகிறது.
அப்பாவை வெகு நேரமாக வீட்டில் காணவில்லை. நிலா வீட்டு வாசலுக்கு வந்த நேரத்தில் அப்பா அமைதியாக வந்து உட்கார்ந்தார். ‘‘எங்கப்பா போயிருந்த?’’ என்ற கேள்விக்குப் பதில் இல்லை அவரிடம். அப்பாவின் சுவாசம் முழுவதும் புளியம் பூ வாசம்.
வானில் பறக்கும் புள் எலாம் நான்என்று நம் கவி சொல்வது இதைத்தான். இது ஓர் பேரனுபவம். எல்லாம் தாமாகவும், எல்லாவற்றிலும் தாமாகவும் ஆவது என்பதும் இதுதான். தி.ஜானகிராமனின் ஒரு பாத்திரம். எல்லோரையும் அணைத்துக்கொண்டு, அன்பே தானாய், தன்னைப் பனி நீராய் மாற்றிக்கொண்டு தெளிப்பாள்.
நம் கதைக்காரர் சந்திராவும் அப்படித்தான்!
- நதி நகரும்

 

 

 

 

 

கதாநதி 22: அழகிய பெரியவன்- மனித குலத்தை முன் நகர்த்தும் எழுத்து

தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் எழுபதுகள் பல சிறந்த ஆளுமைகளை அறிமுகப்படுத்தியது. வாழ்வின் ஜீவத் துடிதுடிப்பைக் கலாபூர்வமாக வெளிப்படுத்திய அவர்களால் தமிழ்ச் சிறுகதை புதுமுகம் கொண்டது. அதுவரையில் புறக்கணிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் பாடுகள், மனத் தலங்கள் வடிவம்கொண்டன. ஒடுக்கப்பட்டோர் பற்றிய பல கதைகள் அந்தத் தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டவை.
அந்தச் சலுகையின் பலத்தால் நிற்பவை அவைஎன்ற விமர்சனம் சுத்த சுயம்பிரகாச விமர்சகர்களால் முன் வைக்கப்பட்டன. உண்மை அதுவல்ல. மாதவையா காலத் தில் இருந்தே சிறுகதைகள் பத்துக்கு நாலு பழுதில்லை என்பதாகத்தான் இருந்தன. மிகச்சிறந்த கலை வெளிப்பாடு கொண்ட வாழ்வு பற்றிய சுயமான பார்வை கொண்ட சில ஆளுமைகள், இருபதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் வெளிப்பட்டார்கள். அவர்களில் முக்கியமானவர் அழகிய பெரியவன்.
வேலூர் மாவட்டம் எனத்தக்க மண்ணின் மக்களை, தான் அறிந்த அவர்களை அழகிய பெரியவன் எழுதத் தொடங்கினார். தமிழ்ப் பரப்பில் அவரது கதைகள் எப்போதும் இழந்தவர் பக்கம் நின்று பேசின. இன்றில் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டு கால நியாயங்களை வரலாறு மற்றும் மானுட நீதியின் பக்கம் நின்று அவர் உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். தாம் உருவாக்கிய சிறுகதைகள் மற்றும் சமீப நாவலான வல்லிசைவரைக்கும், கலைப் பிரதிகள் என்ற ஓர்மை வழுவாமல், கலைப் பின்னம் வந்துவிடாமல் அவர் முழுமையான படைப்புகளை எழுதி வந்திருக்கிறார்.
அழகிய பெரியவன் கதைகள்என்ற 56 கதைகளும் ஆறு நாவல்களும் கொண்ட நற்றினை பதிப்பகம் வெளி யிட்ட தொகுப்பு என் மேஜை மேல் இருந்துகொண்டு, பல கதைகள் தன்னை எழுதச் சொல்கின்றன.
பொற்கொடியின் சிறகுகள்என்ற ஒரு கதையைப் பார்ப்போம். மிகச் சிறந்த கதை இது. இந்தக் கதையின் முதல் வரி இப்படித் தொடங்குகிறது:
இளங்காலையின் செறிந்த மவுனம் பொற்கொடிக்காகக் காத்துக் கொண் டிருந்தது. அவள் திண்ணையில் வந்து அமர்ந்ததும் வெறியோடு அவளைத் தழுவிக் கொண்டது.அழகிய பெரியவன் கதைகளின் முதல் வரி, கவனம் கோரும் இயல்புடையது. கதையின் தொனியைஅந்த முதல் வரி எழுதிவிடுகிறது. வாசகர் கவனம் எனும் ரயில் சக்கரம், அந்த வரித் தண்டவாளத்தில் உருளத் தொடங்குகிறது.
பொற்கொடி குளிருக்காகக் கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு இப்படி அப்படியுமாக உடலைத் திருப்பினாள். அம்மா எதுவும் பேசாமல் இவளையே பார்த்துக் கொண்டிருந்து, பார்வையின் இறுதியில் இரண்டு சொட்டு கண்ணீர் வடிப்பார். பொற்கொடி கவனிக்குமுன், முந்தாணையால் கண்களைத் துடைத் துக் கொண்டார். திண்ணையில் உட் கார்ந்து கொண்டு தூரத்து இரட்டை மலைகளைத்ப் பார்த்துக் கொண்டி ருப்பது, கிழக்கு பார்த்த அரண்மனை வீடு, செம்மண் நிலத்தில் மொச்சைக் கொடிகள், தப்புச் செடிகளின் மஞ்சள் பூக்கள்... பார்ப்பதற்குத்தான் எத்தனை இருக்கின்றன!
அம்மா அவளுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்திருந்தாள். பகல் முழுக்க அவள், அவளுடன் மட்டும்தான். தனிமை. இரக்கமற்ற தனிமை. வேறு வழியும் இல்லை. அம்மா வேலைக்குப் போக வேண்டும். தம்பி, தங்கை பள்ளிக்கூடம் போனபிறகு, அவள் அவளையே தின்னுகொண்டு இருக்க வேண்டும். தவமணி அக்காவின் சட்டையை எடுத்து தைக்கத் தொடங்கினாள். தைப்பதை நிறுத்திவிட்டு வாசல் பக்கமிருக்கும் சரக்கொன்றையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். அப்புறம் மெஷின். அவளுக்கு முன் ஒரு புகைப்படம் சட்டம் போட்டு மாட்டப்பட்டிருந்தது.
மலையும், வானமும், மரங்களும், மேகமும். சட்டத்தை ஊடறுத்துக்கொண்டு சில பறவைகள் பறந்தபடி. அந்தப் பெரிய புகைப்படத்தைக் கழற்றி எறிந்துவிட வேண்டும். அவளுக்குப் பெரும் கனவு ஒன்று இருந்தது. ஆனால், அது முடியாது. ‘‘நீ கொழந்தடி... ஆயுசு முழுக்க குழந்தையாவே இருக்க வேணும்னு அந்த ஆண்டவன் எழுதிட்டான். உனக்கு என்னாத்துக்குக் கவலை? நான் இருக்கேன்’’ என்பார் அம்மா. அம்மாவின் மடியைக் கண்ணிரால் நனைப்பாள் பொற்கொடி.
பொற்கொடி படித்த பள்ளிக்கூடத்தில் இருந்து கூச்சலும் கும்மாளமும் எழுந்தது. அவள் வீட்டுப் பக்கம்தான் பள்ளிக்கூடம். அலமேலுவும் நந்தினியும் அவளை அரண் கட்டிய மாதிரி அழைத்துப் போவார்கள்.
நந்தினி தனது திருமண அழைப் பிதழை எடுத்துக்கொண்டு பொற்கொடி யைப் பார்க்க வந்தபோது அம்மா கதறி அழுதார். அழைப்பை வைத்துவிட்டு நந்தினி சொன்னாள்: நீதாண்டி எனக்கு தோழிப் பொண்ணு!
அவள் போன பிறகு அம்மா பொற் கொடியை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு விம்மினாள். உன்னை எப்படித்தான் கரையேத்தப் போறேனோ? எம்மாடி!அம்மாவின் கைகள் பொற்கொடியின் மெலிந்த கால்களை இறுக்கமாகப் பற்றி இருந்தன. அம்மாவின் தோளை நனைத்தாள் பொற்கொடி. தவமணி அக்கா வந்தாள். அவள்தான் பேச்சுத் துணை. சில நாட்களில் தனக்கோட்டி அண்ணன் வந்து, அவள் மார்பையே பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பான். அவனை வர வேண்டாம்என்றுதான் சொல்ல நினைக்கிறாள். ஆனால், ‘வரவேண்டும்என்கிறது அவள் உள்மனது.
புகைப்படத்துப் பறவைகள் பறந்தது மாதிரி அவளும் பறந்தாள்.
அப்போது அந்தச் செய்தி வந்தது.
‘‘நம்ம தாயிக்கு மூணு சக்கர வண்டி வந்திருக்குதுக்கா. பொதங்கிழமை டவுன் ஐஸ்கூலுக்கு பொற்கொடியக் கூட்டிக்கினு வந்துடு. மந்திரி வர்றாரு. வர்றப்ப ஊனமுற்றோர் அட்டையைக் கொண்டு வந்துடு.’’
‘‘பொண்ணே, உனக்கு வண்டி தர்றாங்களாண்டி…’’ என்று அம்மா ஆனந்தமாகச் சிரித்தார்.
‘‘சுத்துப்பக்கம் இருக்கிற சிநேகிதிக் காரிகளை நீயே போய் பார்த்து வரலாம். ஏதாவது வேணுமின்னா மேல்பட்டி வரைக்கும்கூட தனியோவே போகலாம்’’.
புதன்கிழமை அம்மா வரவில்லை. தம்பியும், தங்கையும் உடன் வந்தார்கள். வண்டியைத் தொட்டுப் பார்த்தாள் பொற் கொடி. மூன்று சக்கரத்திலும் காற்று இல்லை. எப்படியோ தள்ளிக் கொண்டு சைக்கிள் கடைக்கு வந்து காற்றடித்துக் கொண்டு புறப்பட்டார்கள். பேருந்துகள் வழிமாற்றிவிட்டிருந்தார்கள். பொற் கொடி உட்கார சைக்கிள் கடைக்காரர் உதவி செய்தார். இரண்டு புறமும் செவ்வந்தியும், சக்திவேலும் வண்டி யைத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். செவ்வந்தி, மிகவும் வெட்கப்பட்டு விட்டாள். அவள் சிநேகிதிகள் ஏதிர்பட்டுவிட்டார்கள்.
சில இடங்களில் பொற்கொடி பெட லைக் கையல் அழுத்தி முயற்சி செய்தாள். வண்டி தாறுமாறாக ஓடியது. வீடு வந்து சேர்ந்தார்கள். பல மைல் தூரம் தள்ளிய களைப்பில் உறங்கிப்போனார்கள். விடிந்ததும் செவ்வந்தி அம்மாவிடம் குறைப்பட்டுக்கொண்டாள். ‘‘நீ பாட்டுக்கு அம்பது ரூவாயை தந்து அனுப்பி வெச்சுட்டே. எவ்ளோ சிரமப்பட்டோம் தெரியுமா? வண்டியைத் தள்ளிக்கினு வர்றத்துக்குள்ளே வெக்கமாப் போச்சு. கையி, காலெல்லாம் வலி. எங்கூட படிக்கிறவள்லாம் பாத்துட்டா. இனிமே இதுக்கெல்லாம் என்னை அனுப்பாதே.’’
பொற்கொடி சரசரவென்று புழக் கடைப் பக்கம் போனாள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வாசலில் வண்டி யைத் தள்ளும் சத்தம் கேட்டது. அம்மா வும் செவ்வந்தியும் வாசலுக்கு ஓடி வந்து பார்த்தார்கள். வாசலில் இருந்த வண் டியை சாலைக்கு நகர்த்திக்கொண்டு போய் அதில் ஏறி உட்கார முயன்று கொண்டிருந்தாள் பொற்கொடி.
அம்மா வேகமாக ஓடி பொற்கொடி யைத் தூக்கிவிட முயன்றார். அம்மா வின் கைகளை வேகமாகத் தள்ளிவிட்டாள் அவள். வண்டியில் உட்கார்ந்ததும் கைப் பெடல்களை அழுத்தமாகச் சுழற்றினாள்.
அது மெல்ல நகர்ந்தது.
பொற்கொடி நம்மோடு வாழும் ஒரு மனுஷி. மனுஷி மட்டும் அல்லாது, கதையில் அவள் ஒரு குறியீடு. பொற்கொடியை முன்வைத்து வாசகர்க்கு, பறக்க ஆசைப்படும் மனிதகுலத்துக்கு றெக்கைகளைத் தருகிறது இக்கதை. தவளை தன்னை தவளை என்று நினைத்து அதை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் அது தவளைதான். மான், தன்னை மான் என்று நினைப்பதால் அது தாவுகிறது. பறவை, தன் நினைவுகளில் பறத்தலை வைத்திருக்கிறது. ஆகவேதான் அது பறக்கிறது. பொற்கொடியின் வீட்டுச் சுவரில் மாட்டப்பட்ட அந்தப் படத்தின் பறவையில் தன்னைக் கண்டாள். வண்டி அவள் றெக்கை ஆயிற்று.
மனிதகுலத்தை அடுத்த தளத்துக்கு நகர்த்துகிறது இலக்கியம். அவர்களை அவர்களிடம் இருந்து கற்றுக்கொடுத்து, அவர்களுக்கு அவர்களை உணர்த்து வதாக இருக்கிறது இலக்கியம். எப்போ துமே, எல்லாச் சமூகத்திலும் மனிதர்கள் மேல் வரிசையில் மேல் தளத்தில் இயங்கு பவர்களாக வடிவமைக்கப்படுகிறார்கள். டாக்டர், தொழிலாளி, மேனேஜர், அதிகாரி, அவர் இவர் என்று உருவா கிறார்கள். ஆனால், மனிதர்களிடம் இன்னொரு தளம் இருக்கிறது. அதுவே, அவர்கள் நிற்க வேண்டிய தளம். அத்தளத்தில் அவர்கள் மனிதர்கள் என்று அறியப்படுகிறார்கள். அசலான கல்வி அவர்களைத்தான் உருவாக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, நம் கல்வியின் நோக்கம் அதுவாக இப்போது இல்லை.
சிறந்த கதாசிரியர்கள் அந்த உயர் பணியைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிகவும் முக்கியமானவர் அழகிய பெரியவன்.
- நதி நகரும்

கதாநதி 23: கவின் மலர்- புதுயுகம் நோக்கிய வல் எழுத்து!
கவின் மலர் ஊடகத்துறையாளராக இப் போது இருக்கிறார். இவர் கட்டுரைகள் பாதிக்கப்பட்டோரின் குரலாக ஒலிப்பதைத் தீவிர வாசகர்கள் அறிவர். கவிஞராக, எல்லோரை யும் போல எழுதத் தொடங்கி இன்று உரைநடை யில் கை பதித்துள்ளார். அண்மையில் வெளி வந்திருக்கும் சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்என்ற கட்டுரைத் தொகுதி, அதன் உண்மை சார்ந்த அடர்ந்த வெளிப்பாட்டுக்காகப் பேசப் படும் பதிவாக மிளிர்கிறது.
இப்போது என் முன் நீளும் கனவுஎன்ற அவருடைய கதைத் தொகுதி நம் கவனம்கொள்ள இருக்கிறது. இது இவருடைய முதல் கதைத் தொகுதி. கயல் கவின்பதிப்பகம் வெளியீடு. எட்டுக் கதைகள் கொண்ட இத்தொகுதி, பல வகையில் வாசிக்க வேண்டிய முக்கியத்துவம் உடைய கதைகளாகும்.
முதலில் தோன்றுவது ரெளத்ரம் மிளிர்ந்த அவர் கட்டுரைகளுக்கு மாறாக, சிறுகதை வடிவம் குறித்த கவின்மலரின் தெளிவு, மகிழ்ச்சி தருகிறது. கதை கோரும் கலை அமைதியும் கதை படரவிடும் தொனியும் கதைகளை வாசிக்கத் தக்கதாகவும் மேலான தரத்திலும் வைக்கத் துணைபுரிகின்றன. எந்த எரியும் பிரச்சினையும் கதையாகலாம். எந்தச் சுவையிலும் கதை எழுதப்படலாம். அது கதை என்ற முகலட்சணம் கொண்டதாக (எழுதியவரின் முகம்தான்)அவருடைய வாழ்க்கைப் பார்வை யும் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை இலக்கணம் தவிர, கதைக்கு வேறு சூட்சுமம் இல்லை.
கவின்மலரின் கதைகள், புனைவுகளாக, அவர் பார்வையைத் துல்லியமாக வெளிப்படுத்து கின்றன. இவ்வளவு விரிந்த பூமிப் பந்தில் மனிதர்களின் இருப்பு, குறிப்பாகப் பெண்களின் இருப்பு ஏன் இத்தனை நெருக்குதலுக்கும், விளிம்பில் நிறுத்தப்படுவதற்கும் ஆன காரணம் பற்றிய கேள்விகள், அவர் கதைகள் எனலாம். இந்தியா போன்ற, பழம்பெரும் ஆனால், புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஒட்டாரம் பிடிக்கிற தேசத்துக்குள் மரபு என்கிற, வரையறுக்கப்பட்ட ஒழுக்கம் மற்றும் நடைமுறை மீறுகிற எவரையும் சகித்துக் கொள்ளாத மனோபாவம் பற்றிய கேள்விகளே இவர் கதைகளில் அடித்தளம் எனலாம்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், கவின் மலரின் முதல் கதை வெளிவந்தது. இரவில் கரையும் நிழல்கள்என்பது கதையின் தலைப்பு. அக்கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்:
இப்போதெல்லாம் கயல்விழியின் நினைவு ஓயாமல் வருகிறது என்று தொடங்குகிறார் கதைசொல்லி. சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போதெல்லாம் கயல்விழி நினைவுகள். அவள் வீட்டில் இருந்து இவர் வீடுவரை வந்து, இருவரும் ஒன்றாகப் பள்ளிக்குப் புறப்படுகிறார்கள். கயல்விழி கொஞ்சம் சிவப்பு. இவள் கருப்பு. பையன்கள் பிளாக் அண்ட் வொயிட் என்பார்கள். ரெட்டைப் புறா, நீலக் குயில்கள் என்றும் கூடப் பல பெயர்கள். பையன்கள் பின்னால் வந்து உரக்க இப்பெயரை அழைக்கும்போது, இவர்கள் சிரித்தபடி சைக்கிள் ஓட்டிக்கொண்டுச் செல்வார்கள்.
கயல் இவளுக்கு ஒன்பதாம் வகுப்பில்தான் சினேகிதியானாள். காரணம் இருந்து அல்லது இல்லாமல் சிரித்துத் திட்டு வாங்காத நாட்கள் இல்லை. தூங்கி எழுந்ததில் இருந்து தூங்கப் போகும் வரைக்கும் நிகழ்ந்த அத்தனையையும் அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.
திடுமென ஒரு பையன் கதை சொல்லி முன்வந்து நின்று ஐ லவ் யூஎன்ற, உலகம் சாகும் வரைக்கும் சாகாத வார்த்தையை மொழிந் தான். இவளுக்கு மட்டும் அல்ல; கயலுக்கும் ஒரு பையன். என்ன பண்ண? தும்பிக்குத் தெரிந்துவிடுகிறது, பூ மலரும் இடம். முத லில் பயம். அப்புறம் சிரிப்பு. பையன்கள் கிண்டலையும், கேலியையும் சிரித்தே எதிர்கொள்ளத் தொடங்கினார்கள் அவர்கள்.
இரண்டு பேரின் அப்பாவும் தமிழாசிரியர்கள். ஆகவே, பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள். கயல்விழி மற்றும் சுடர் மொழி. பிளஸ் டூ பரீட்சை வந்தது. ரிசல்ட் வந்தபோது சுடர் மட்டும் பாஸ். சேர்ந்து படிக்க முடியாமையே வருத்தம். கயல் அழுதாள். சுடர் கல்லூரிக்குப் போனாள். அப்போதுதான் வீட்டுக்குத் தொலைபேசி வந்தது. பேசுவதற்குத்தானே பேசி. அவர்கள் பேசித் தீர்த்தார்கள் மணிக்கணக்கில். கொஞ்சம் பேச்சு. கொஞ்சம் சிரிப்பு.
கல்லூரியில் கயலுக்குப் பல தோழிகள். தோழிகளோடு அவளைப் பார்த்தால் சுடருக்கு எரிச்சல். சுடரோடுச் சுற்றும் தோழிகள் மேல் கயலுக்கு கோபம். இறுதியாண்டு வந்தது. விடை கொடுக்கும் விழா. ஏழு தோழிகள் ஒரே நிறத்தில் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். எதுக்கு எல்லோரும் ஒரே நிறத்தில் சாரி என்று கயல் கோபித்தாள். அழுதாள்.
கயலுக்குத் திருமணம் ஆகி, மகனும் பிறந்தான். கணவர் வெளிநாட்டில் இருந்தார். சுடருக்கும் ஏதோ ஒரு பணி. ஒரு சந்தர்ப்பத்தில் சுடருக்கு வீடு பார்க்கும் பிரச்சினை. அப்போது கயல் கோபித்தாள். ‘‘உடனே தன் வீட்டுக்கு வந்து சேர்’’ என்றாள் கயல்.
கயல் வீட்டில் வந்து தங்கினாள் சுடர். ஒருநாள் வேலை முடிந்து வீடு திரும்பும்போது இரவு மணி 11. அழைப்பு மணியை அழுத்தும்போது விழித்துக்கொண்ட கயலின் குழந்தை அழுதது. கயல், அந்தச் சமயத்திலும் தோசை வார்த்து தந்தாள். அச்சமயம், கயலின் அத்தை அறை வாசலில் வந்து நின்றாள். ‘‘வேறு வீடு பார்த்தியாம்மா..?’’ என்று கேட்டாள் அத்தை. அன்று சுடருக்கு உறக்கம் வரவில்லை. அத்தை அப்படி ஏன் கேட்க வேண்டும்?
அன்றும் சோதனையாக வேலை 10 மணி வரையில் நீடித்தது. திரும்பவும் கயல் வீடு வந்துஅழைப்பு மணி. குழந்தை அலறல். அத்தை. அவள் முன் திருவண்ணாமலை பஸ் வந்தது. ஏறி அமர்ந்தாள். ஊர் சேர்ந்து, ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்தாள். சென்னை பஸ் நின்றது. ஏறி அமர்ந்துகொண்டாள். ஊர் சேர்ந்தாள். என்ன ஆச்சு என்றாள் கயல். வேலை. ஆபீஸிலேயே தங்கிவிட்டேன். கயல், அவள் திருமணம் பற்றிக் கேட்டாள். தேவை இல்லை என்றாள் சுடர். இரவு முழுக்கப் பயணம் செய்த அன்று இரவு, கயல் போன் செய்து என்ன ஆயிற்று என்று கேட்கவே இல்லை என்பது திடுமென்று தோன்றியது.
ஒரு மாலை கயல் கேட்டாள்:
‘‘அடுத்த வாரம் என் நாத்தனார் வர்றார். பழைய மாதிரி ஆள். நீ யார், எதுக்கு இங்கே தங்குகிறார் என்றெல்லாம் கேள்வி கேட்பார். அடுத்த வாரத்துக்குள் வேறு வீடு பார்த்துக்க முடியுமா..?’’
‘‘பார்த்துக்கலாம் கயல்!’’
நண்பர் செல்வத்துக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள்: இன்று உன் அறையில் தங்கிக்கொள்ளலாமா?’
தாராளமாக வாருங்கள்என்று பதில் வந்தது.
அறையில் இருந்தபோது கயல் பேசினாள்.
‘‘கோபம் இல்லையே…’’
‘‘சேச்சே…’’
‘‘என்னைப் புரிஞ்சுக்கோ, சுடர். நான் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறேன்…’’
கயலுக்குச் சுடர் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
எனக்கு உன்னைத் தெரியும். உன்னைப் புரியும்!
திடீரென்று ஒன்று உறைத்தது. அவள் வீட்டில் இருந்த இத்தனை நாட்களிலும், ஒரு முறைகூட நாங்கள் இருவரும் சிரிக்கவே இல்லை என்பது.
இதே போன்ற நீளும் கனவுஎன்று ஒரு கதை. தன்பால் பெண் என்பதை அறிந்துகொள்ள நேர்ந்த சிறுவர்கள் கடந்து தீர வேண்டிய அந்த பெரும் அவஸ்தை, பெற்றோர் என்பவர்கள் அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் மிகப் பெரிய காயத்தையும் மிகவும் நட்பு தோன்றும் சொற்களால் மிகவும் அழகிய கலைநயம் தோன்ற எழுதி இருக்கிறார் கவின் மலர்.
அவமானம், குடும்ப கவுரவம் என்பது போன்ற அர்த்தம் இழந்த வார்த்தைகளால் குடும்பமும் பெற்றோரும் பால் மாற்றம் நேர்ந்த குழந்தைகளுக்கு, அது உடம்பின் சின்ன மாற்றம்தான் என்பதைப் புரியவைக்கத் தவறியதால் அக்குழந்தைகள் எதிர்கொள்ள நேர்ந்த மிகப்பெரிய பாதிப்புகள் பற்றிய பிரச்சினைகளை, எதிர்கொள்ள நேர்ந்த ஒரு சிறுவனைப் பற்றிய கதை இது. தமிழ்ப் பரப்பில் ஒரு முக்கியமான கதை இது.
கவின் மலர் கொஞ்சமாகவே எழுதுகிறார். சில நேரங்களில் அது நல்லது. களம் சென்று ஆய்கிற சமூகப் பொறுப்பையும் அவர் ஏற்றுச் செயல்படுகிறார். அந்த அனுபவங்கள், மனிதர்களையும், சமூகத்தையும் புரிந்துகொள்ள அவருக்கு உதவும். நல்லது. நன்றாக எழுத முடிகிறவர்கள், தொடர்ந்து எழுதுவது படைப்பு என்பதையும் தாண்டி சமூக ஆவணமாகவும் இருக்கும்.
- நிறைந்தது.
என் எழுத்து வாழ்க்கையின் முக்கியப் பணி!


வாசகர்க்கு அன்பான வணக்கம்!
கடந்த பல வாரங்களாக, நான் மதிக்கும் பல எழுத்தாளர் படைப்புகள் பற்றி எழுத நேர்ந்தமைக்காக நான் மிகவும் மகிழ்கிறேன். என் எழுத்து வாழ்க்கையின் முக்கியப் பணியாக இந்தக் கட்டுரைகளை நினைக்கிறேன். நல்ல எழுத்தாளர்களை, நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்லத் தயங்கும் சூழலில், இதுவொரு தேவையான இலக்கியக் கடமை. இத்தனை வாரங்கள் எனக்கு எழுத வாய்ப்பு தந்த தி இந்துதமிழுக்கு மனமார்ந்த நன்றியைச் சொல்வதும் என் கடமை. இது இப்போதைக்கான விடைபெறல்தான். மீண்டும் தி இந்துதமிழ் வாசகர்களைச் சந்தித்து உரையாட விரைவில் நான் தயார் ஆவேன். இன்னும் சிறந்த, இன்னும் மேலான எழுத்துக்களுடன் உங்களைச் சந்திக்க வருவேன். நன்றி. வணக்கம்.


No comments:

Post a Comment