Friday 25 May 2018

மரணத்தின் வாசலில்

என் செல்வராஜ்

               செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அவசரமாகக் கண்ணாடியை அணிந்துகொண்டு வந்த அழைப்பை ஏற்றான் செல்வம். மறு முனையில் அவனது நண்பர் கோவா சங்கர். "செல்வம் எனக்கு ஒண்ணுமே புரியல. நான் இப்ப ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் "என்றார் அவர். " எங்க இருக்கீங்க " என்று கேட்டான் செல்வம். நான் மணிப்பால் மருத்துவமனையில் இருக்கேன். மீனா உடல்நிலை  மிகவும் கவலைக்கிடமா இருக்குதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க." " ஏன் என்னாச்சு , எதுக்கு மணிப்பால் போனீங்க? "  "செல்வம்உனக்கு தெரியாதா? அவள் உடம்பு மிகவும் பருமனா ஆயிட்டுதுநீ கோவாவை விட்டுப் போய்  இப்போ  10 வருஷம் ஆயிட்டுதுஇத்தனை வருடத்தில் உடம்பு பெருத்து  அதனால அவளால நடக்க முடியல. மணிப்பால் மருத்துவமனையில் அவளுக்கு உடல் பருமனை குறைக்க ஆப்பரேஷன் செய்தார்கள். மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்ததும் மர்காவ் அழைத்துப்போனேன். நல்லாத்தான் இருந்தா, திடீர்னு உடம்பு சீரியஸா போயிட்டது. மீண்டும் ஆஸ்பத்திரியில சேத்துருக்கேன் " என்றார் சங்கர். " இப்ப நான் பெங்களூரில இருக்கேன்.மாலை மங்களூர் பஸ் பிடிச்சு அங்க வந்துடுறன், பயப்படாதீங்க. எல்லாம் நல்லதே நடக்கும் என நம்புவோம்"   "சரி வா செல்வம், நடப்பது நடக்கட்டும், நம் கையில் எதுவும் இல்லை" என்றார் சங்கர்.

        மங்களூர் செல்லும் பேருந்தை மெஜஸ்டிக் பஸ்ஸ்டேண்டில் பிடித்து மாலையில் மங்களூர் பயணமானான்செல்வம்.பேருந்தில் ஏறி அமர்ந்ததும் கோவாவில் மீனாவுடனும் சங்கருடனும்  இருந்த பாசத்தை நினைத்துக்கொண்டான். கோவாவில் தொன்னூறில் வேலைக்கு சேர்ந்த போது தங்குவதற்கு இடம் தேடினான்.   அப்போது அவனுடன் பணிபுரியும் குணசேகரன் ஃபதோர்டா நேரு ஸ்டேடியம் பின்புறம் இருந்த மரியா ஃபெர்ணாண்டஸ் சாலில் தங்கியிருந்தான். பத்து வீடுகள் அதில் பெரும்பாலும் அரசு ஊழியர்களே தங்கி இருந்தார்கள். பத்து அடி அகலத்தில் முப்பது அடி நீளம் கொண்ட ஓட்டு வீடு ஒரு ஹால், மற்றுமொரு அறை அதில்  தான்  சமையல், குளியல் எல்லாம்.கழிவறை மட்டும் வெளியே இருந்தது.அங்கு ஒரு வீடு காலியாக இருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் அங்கு ஒரு வீட்டில் குடியேறினான் செல்வம்.

             குடியேறிய முதல் நாளே அங்கிருந்த நண்பர்களை குணசேகரன்  அறிமுகப்படுத்த சங்கர் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அப்போது இன்முகத்தோடு சங்கர் அவனை வரவேற்றார். அவர் நகராட்சி அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக வேலை செய்து வந்தார். அவர் மனைவி மீனா எம் ஏ படித்தவர். மர்காவோவில் படித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆனாலும் திருமணத்துக்குப் பின் வேலைக்கு செல்ல மறுத்துவிட்டார் மீனா. சங்கரிடம் "என்ன சம்பளமானாலும் அந்த பணத்துக்குள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறேன் "என்று சொல்லிவிட்டார். அதனால் சங்கருக்கு கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும் தன் மனைவியை அவர் வற்புறுத்தவில்லை.நல்ல வருமானம் உள்ள வேலைதான் அவர் பார்த்தது.வந்த வருமானத்தில்  மிக்க மகிழ்ச்சியாக அவர்கள் குடும்பம் இருந்தது.

         சங்கருக்கு ப்ரியா என்ற மூன்று வயதுப்  பெண்குழந்தை இருந்தது. தினமும் காலையில் வேலைக்குப் போய் மாலையில் வந்ததும் சங்கர் வீட்டுக்குச் செல்வம் செல்வான். அங்கே சங்கரின் நண்பரும் அவர் ஊர்க்காரருமான  கன்வாடேவும் பல நேரங்களில் இருப்பார். செல்வம் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவது வழக்கம். அப்போது டிவி சிலர் வீடுகளில் மட்டுமே இருக்கும். சங்கர் வீட்டில் போர்டபிள் கலர் டிவி இருந்தது.பம்பாயில் இருந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணியில் இருந்து 10 மணிவரை தூரதர்ஷனில் மகாபாரதம் தொடர்  ஹிந்தியில் ஓடியது. அதைச் செல்வம் தொடந்து பார்த்து வந்தான்,அதனால் டிவி பார்க்க சங்கர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வான்.மகாபாரதம் தொடரை வாரா வாரம் பார்த்து வந்தான். டி வி பார்க்கச் செல்லும்போதெல்லாம் ஏதாவது தின்பண்டங்கள் கொடுப்பார் மீனா. ப்ரியா வந்து அவன் மடியில் அமர்ந்து கொண்டு விளையாடுவாள். அங்கிள் அங்கிள் என்று அவனைத்தேடி அவன் வீட்டுக்கும் வருவாள். சில சமயங்களில் மீனாவின்  வற்புறுத்தலுக்காக டிபன்  அவர்கள் வீட்டில் சாப்பிடுவான்.

            
         தூத் சாகர் நீர்வீழ்ச்சி பார்க்கலாம் என்று சங்கர் ஒரு நாள் செல்வத்திடம் சொன்னார். சங்கர், மீனா, ப்ரியா, பக்கத்து வீட்டு தாமோதர் ஆகியோருடன் செல்வம் மர்காவோ ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயிலில் தூத்சாகர் ஸ்டேஷனுக்கு டிக்கட் வாங்கி ரயிலில் புறப்பட்டனர்.ரயிலில் ஜன்னலருகே செல்வம் அமர்ந்தான். ப்ரியா அவன் மடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். ரயிலில் ஜன்னல் வழியே வேகமாக ஓடுவது போலத் தோன்றும் கிராமங்களையும் மரங்களையும் பார்த்து ரசித்தான்.ப்ரியா கை கொட்டி மரங்கள் ஓடுவது போலத் தோன்றுவதை ரசித்தாள். வழியில் உள்ள ஊர்கள் எல்லாம் அவர்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க அவர்களின் ரயில் தூத்சாகர் நீர்வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஒரு நீண்ட டன்னல் (குகை)வழியே ரயில் சென்றபோது ரயிலில் இருந்த அனைவரும் உற்சாகத்தில் ஓ வென சத்தம் போட்டார்கள். இருண்ட குகைக்குள் செல்வது ஒரு திரில் அனுபவம் போன்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது. ரயில் தூத்சாகர் ஸ்டேஷனில் நின்றவுடன் எல்லோரும் இறங்கினார்கள்.

          ரயில் வந்த வழியிலேயே கொஞ்ச தூரம்  நடந்து சென்று  நீர்வீழ்ச்சியை அடைந்தனர். மீனாவுக்கு தெரிந்த பல நண்பர்களும் வந்திருந்தனர்.சங்கர் மலை ஏறிப் பார்க்கலாமா(ட்ரெக்கிங்) என்றார். மீனாவும், ப்ரியாவும் என்ன செய்வார்கள் என்றான் செல்வம். " சங்கர் என்னுடைய நண்பர்கள் வந்திருக்கிறார்கள். நானும் ப்ரியாவும் அவர்களுடன் நீர்வீழ்ச்சியின் கரையிலேயே இருக்கிறோம். நீங்கள் செல்வத்தைக் கூட்டிக்கொண்டு மலையேறிவிட்டு வாருங்கள்" என்றார் மீனா. சங்கர், செல்வம், தாமு மூவரும் அந்த டன்னல் வழியே சென்று மலையேறும் வழியில் மலையேற ஆரம்பித்தார்கள்.அந்த தூத்சாகர் நீர்வீழ்ச்சி கோவாவின் எல்லையில் உள்ளது. அதற்குப் பிறகு கர்னாடகா மாநில எல்லை வந்துவிடும்.

            மிகவும் உற்சாகமாக மூவரும்  மலையேற ஆரம்பித்தார்கள். தாமு கொஞ்சம் குண்டாக இருப்பான். அவன் மெதுவாக மலையேறி வந்தான். சங்கரும் செல்வமும் விறுவிறு என மலையில் ஏறினார்கள். எங்கு பார்த்தாலும் மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன. மலையேறும் பாதை ஒரு ஒற்றையடி பாதையாகத்தான் இருந்தது.சில மணி நேரம் ஏறிய பின் ஒரு இடத்தில் சமமான பகுதியாக மலை இருந்தது. அதன் வழியாக சிலர் நடந்து போவதைப் பார்த்த சங்கர் "எல்லோரும் அங்கே போறாங்களே நாமும் அங்கே போய் பார்ப்போம் " என்றார். மூவரும் அங்கே சென்றார்கள். மலையை ஒட்டி தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

            அங்கிருந்து சற்று தொலைவில் அருவியாக  தண்ணீர் சமமான மலைப்பகுதியில் இருந்து 100 அடி அகலத்தில் கீழே விழுந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் நிறைய பயணிகள் குளித்துக்கொண்டிருந்தனர்.சங்கர் அந்த இடம் சென்றதும் "செல்வம் வா குளிக்கலாம் "என்றார். செல்வத்துக்குப் பயமாக இருந்தது. சங்கரும் தாமுவும் உடன் பேண்ட் சர்ட் கழட்டிவிட்டு குளிக்க இறங்கினர், செல்வம் பிறகு பயம் நீங்கி அருவியில் குளிக்க இறங்கினான். சிறிது நேரம் நீரில் விளையாடிவிட்டு மூவரும் புறப்பட்டனர். மலைமீது ஏறும்போது எளிதாக இருந்த பயணம் கீழே திரும்பி வரும்போது மிகவும் கடினமாக இருந்தது. கால் நரம்புகள் இழுத்து பிடித்து வலிக்க ஆரம்பித்தன.ஒவ்வொரு அடியும் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து வைத்தார்கள். அந்த அருவியின் உயரம் முன்னூறு மீட்டர் என்றார்கள்.மூவரும் தூத்சாகரின் அடிப்பகுதிக்கு மெல்ல இறங்கி வந்து சேர்ந்தார்கள். மீனா அவர்களுக்காக காத்திருந்தார்.

                     மதிய உணவாக சப்பாத்தி, குருமா கொண்டுவந்திருந்தார். நீர் வீழ்ச்சியின் கரையில் அமர்ந்து அனைவரும் சாப்பிட்டார்கள். அதன் பின் மீனாவிடம் சங்கர் அருவியில் குளிக்கிறாயா? என்று கேட்டார். அவர் "நாங்கள் முழங்கால் ஆழம் வரை உள்ளே சென்று வந்து விட்டோம். இனிமேல் அதைத்தாண்டி செல்ல விருப்பமில்லை. மேலும் இந்த அருவியின் சுழலில் சிக்கி பலர் இறந்திருப்பதாக இங்கே உள்ளவர்கள் பேசிக்கொள்கிறார்கள்" என்றார். அதற்கு சங்கர் " நாங்கள் மேலேயே குளித்துவிட்டோம். கீழே குளிப்பது ஆபத்தானது தான்.ஆழத்துக்கு சென்று வீழ்ச்சியின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியவில்லை என்றால் சுழலில் சிக்கும் வாய்ப்பு அதிகம். அதில் மரணமடைபவர்கள் அதிகம் "என்றார். மீனா அப்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்தார்.மாலையில் ரயில் வரும் சப்தம் கேட்டது.
         அந்த ஸ்டேஷனில் ரயில் அதிக நேரம் நிற்காது என்பதால் நால்வரும் விரைந்து ரயில்வே ஸ்டேஷனை அடைந்தார்கள். ரயில் வந்து நின்றவுடன் ப்ரியாவயும் மீனாவையும் முதலில் ரயிலில் ஏற்றி விட்டு சங்கரும்,செல்வமும் ஏறிக்கொண்டனர். ரயில் புறப்படும்வரை வேடிக்கை பார்த்த தாமோதர் ஓடி வந்து ரயிலில் ஏறிக்கொண்டான்.ப்ரியா எல்லோருக்கும் டாடா காட்டிக்கொண்டே வந்தாள். அனைவரும் மர்காவோ ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தனர். அருகில் இருந்த மிலன் காமத் ஹோட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டனர்.பிறகு ஆட்டோவில்  வீடு சென்றடைந்தனர். வீடு வந்ததிலிருந்து மீனாவுக்கு வயிற்றில் லேசான வலியிருந்தது. மறுநாள் லேடி டாக்டர்  சீமாவிடம்  காட்டப்போனார்கள்.
                     
             மீனாவை பரிசோதித்த டாக்டர் சீமா "பிரச்சினை எதுவும் இல்லை. லைட் பிலீடிங்க் தான், ஆனாலும் அது நின்று விட்டது. கருவுக்கு ஒன்றும் பிரச்சினை  இல்லை எனினும்  ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம், எந்த நேரம் பிரச்சினை என்றாலும் உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள்" என்றார். செல்வம் அவர்களுடன் சென்று இருந்தான்.சங்கர் ஆட்டோவில் மனைவியுட்ன் வீட்டுக்கு சென்றார்.சில நாட்கள் கழிந்த பின்  மோந்தி ஹில் மேலே உள்ள ராகவேந்திரா கோயிலுக்கு சங்கர் தன் குடும்பத்துடன் சென்றார்அங்கேயே மதிய உணவு ஏற்பாடும் செய்திருந்தார்கள்.மதிய உணவுக்கு ராகவேந்திரா கோயிலுக்கு வருமாறு செல்வத்தை அழைத்திருந்தார் சங்கர். செல்வம் மதிய உணவை அங்கே சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்றுவிட்டான்.பூஜைகள் எல்லாம் முடிந்து மாலையில் வீடு திரும்பினார்கள். அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்த செல்வம் ,மாலையில் சங்கர் வீடு சென்று "என்ன சங்கர் எல்லாம் நல்லபடியா நடந்ததா? என்னால அங்க அதிக நேரம் இருக்க முடியல அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க" என்றான். அதற்கு சங்கர் " அதெல்லாம் நல்லாவே நடந்தது. நீ எங்க கூட இல்லேன்னு ப்ரியாதான் அழுதுகிட்டே இருந்தா. அப்புறமா சமாதானம் ஆயிட்டா" என்றார். ப்ரியா அவனிடம் ஓடி வந்தாள், "அங்கிள் நீங்க ஏன் அங்கேயே இருக்கல ? நீங்க இல்லாம எனக்கு போரடிச்சுது தெரியுமா  " என்றாள்.செல்வம் அவளிடம் " ப்ரியா அடுத்த முறை கட்டாயம் வந்து உன்னுடன் இருக்கிறேன் "என்றான்.

        ஆறாவது  மாதம் வரை மீனாவுக்கு பிரச்சினை எதுவும் வரவில்லை. ஆறாவது மாதம் முடிந்ததும்  சீமா டாக்டரிடம் சென்றார்கள். டாக்டர் பரிசோதனைகளை முடித்துவிட்டு ஒரு ஸ்கேன் எடுத்து விட்டு வந்து பாருங்கள் என்றார்.ஸ்கேன் எடுத்துக்கொண்டு டாக்டரிடம் சென்றார்கள். டாக்டர் ஸ்கேன் ர்ப்போர்ட்டை பார்த்துவிட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது என்றே ரிப்போர்ட் வந்திருக்கிறது அதனால் பயப்படவேண்டாம் என்று சொல்லி மருந்துகள் எழுதித் தந்து அனுப்பினார்.

              பத்து நாள் கழித்து ஒரு நாள் இரவில் மீனாவுக்கு லேசான வயிற்று வலி வந்துவிட்டது. லேசான வலி என்பதால் அதை தாங்கிக்கொண்டு படுத்திருந்தார். பொழுது புலர்ந்த நேரத்தில் சங்கர், மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லையென அறிந்து அவரை எழுப்பியபோது தான் மீனா இரவிலிருந்து அடிவயிற்றில் லேசான வலி இருப்பதாகவும் விட்டு விட்டு வருவதாகவும் சொன்னார்.உடனடியாக சீமா டாக்டரின் மருத்துவமனைக்கு ஆட்டோவில் புறப்பட்டார்கள். டாக்டர் அவசரம் என்பதால் உடனடியாக வந்தார். மீனாவை பரிசோதனை செய்த அவர் உடனடியாக ஒரு பெண்ணை மீனாவின் உதவிக்கு அழைத்து வரச்சொன்னார். காட்டன் புடவை, மற்றும் பழைய துணிகளும் எடுத்து வரச்சொன்னார்.ஏன் ? என்ன பிரச்சினை ? என்று சங்கர் கேட்டதற்கு உங்கள் மனைவி இன்னும் அரை மணி நேரத்துக்குள் குறை மாதத்தில் குழந்தையை பெற்றெடுக்கப்போகிறாள்" என்றார்.அந்த செய்தி அவருக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. மொபைல் போன் இல்லாத காலம் அது. டாக்டரின் போனில் இருந்து வீட்டுக்கு மாமியாரிடம் செய்தியை சொன்னார் சங்கர். கண்ணில் நீர் கலங்க வெளியே வந்த சங்கர்  மீனாவின் அம்மாவை வீட்டிலிருந்து அழைத்துவரச்சென்றார்.தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு தனது மாமியாரையும் அழைத்துக்கொண்டு வந்தார். கன்வாடேயும் அவரது மனைவியும் உடனடியாக அங்கு வந்தார்கள்.அவர்கள் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் மீனா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் குறைமாதத்தில்.

                   டாக்டரிடம்  "குறைமாதக் குழந்தையை பிழைக்க வைக்க வழி இருக்கிறதா" என்று செல்வம் கேட்டான். அதற்கு சீமா டாக்டர் "இந்த குழந்தை குறை மாதக் குழந்தை. 25 வாரங்களே முடிந்திருப்பதால் குழந்தை மூளை வளர்ச்சி அடையவில்லை.கை கால்களும் சரியாக வளரவில்லை. அரை மணி நேரம் மட்டுமே இந்த குழந்தை உயிரோடு இருக்கும். குழந்தையை அம்மாவிடம் காட்ட விரும்பினால் காட்டுங்கள், மீனாவிடம் பேசிப் புரிய வையுங்கள் " என்றார். குழந்தையைக் கையில் வாங்கிய சங்கர் அந்தக் குழந்தையை மீனாவிடம் கொண்டு போய்க் காட்டினார். "என்னங்க இந்த குழந்தையை காப்பாற்ற முடியுமா? " என்ற மீனாவிடம் " இல்லை மீனா, குழந்தை மூளை வளர்ச்சியோ கை கால்கள் சரியான வளர்ச்சியோ முடியாத நிலையில் பிறந்து விட்டதால் காப்பாற்ற வாய்ப்பில்லை என்கிறார் டாக்டர்" என்றார் சங்கர். குழந்தையை அணைத்து முத்தமிட்ட மீனா திருப்பி சங்கரிடம் கொடுத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

                        அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. வாழ முடியாத அந்த குழந்தையின் முகத்தை பார்க்க முடியாத தாயின் துயரம் கண்ணீராய் வழிந்தது. துடிக்கும் பெற்றோரின் கண்ணீருக்கிடையில் சில நிமிடங்களில் அந்த குழந்தை தன் சுவாசிப்பை நிறுத்திக்கொண்டது. டாக்டரின் மருத்துவச் சான்றிதழை வாங்கி முனிசிபாலிட்டியில் பதிவு செய்து அதைக் கொண்டு போய் மயானத்தின் பொறுப்பாளரிடம் கொடுத்தார் சங்கர். குழந்தை இறந்த செய்தியை நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு ஆட்டோவில் அந்த குழந்தையை துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு  மயானத்திற்கு சென்றார் சங்கர்.அவருடன் செல்வம் அனைத்து இடங்களுக்கும் சென்றான்.அவரின் நண்பர்கள் துக்கத்தில் பங்கு கொள்ள அங்கு வந்திருந்தனர். சடங்குகளை முடித்து குழந்தையை குழியில் இட்டு மண்ணைக் குழியில் தூவி குழந்தையை புதைத்துவிட்டு கனத்த இதயத்துடன் மருத்துவமனை சென்றனர் சங்கரும் செல்வமும். சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய மீனா இயல்பு நிலைக்கு திரும்ப வெகு நாளானது.ஆண் மகன் பிறந்தும் அவன் வாழாமல் மறைந்து போன துக்கத்தை மீனாவால் தாங்கவே முடியவில்லை.

              பேருந்து  மங்களூர் பேருந்து நிலையத்தை அடைந்து  நின்றது. கண்டக்டர் மங்களூர் வந்தாச்சு எல்லாரும் இறங்குங்க என்றார். செல்வம் நினைவுகளில் இருந்து மீண்டு  நிகழ்காலத்துக்கு வந்தான். கண்களை துடைத்துவிட்டுக்கொண்டான்.மீனாவின் நினைவுகளால் அவன் கண்கள் கலங்கியிருந்தன.கையில் பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான். உடுப்பி போகும் பஸ் உடனே கிடைத்து அதில் ஏறி அமர்ந்தான். குளிர்ந்த காற்று ஜில்லென்று வீசியது.ஆனாலும் அவன் முகமெல்லாம்  என்ன ஆயிற்றோ மீனாவுக்கு என்ற தவிப்பில்  வியர்த்திருந்தது.மணிப்பால் சென்று ஒரு ஆட்டோவில் ஏறி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைந்த அவனை சங்கர் " வா செல்வம், உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன் " என்றபடி வந்தார்.அவரின் முகத்தைப்பார்த்ததும் செல்வத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது.

                              "என்ன ஆச்சு  சங்கர்மீனா எப்படி இருக்காங்க ? என்றவனை இடைமறித்த சங்கர் " கடவுள்கிட்ட விட்டாச்சு, இனிமே அவரோட முடிவுதான். டாக்டர்களும் கை விரிச்சுட்டாங்க. கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணுங்க, மீனா மீண்டு வர வாய்ப்பு இல்லேன்னுட்டாங்க.இப்போ என்ன பண்றதுன்னு முடிவெடுக்கணும்,அதான் உன்னை வரச்சொன்னேன், நீ வந்தது எனக்கு கொஞ்சம் தெம்பாயிருக்கு." என்ன ஆச்சு அவங்களுக்கு ? நல்லாத்தனே இருந்தாங்க" "நல்லாத்தான் இருந்தா, ஆனா அவளால முன்னைப்போல அதிகமா நடக்க முடியல. உடல் எடை ரொம்ப அதிகமாயிட்டுதுன்னாங்க கோவா டாக்டருங்க. எடையைக் கொறச்சா தான் பழையபடி இருக்கமுடியும்னுட்டாங்க.அவங்க பரிந்துரைப்படி இந்த மருத்துவமனைக்கு மீனாவை அழைச்சுட்டு வந்தேன், இங்க இருக்கிற டாக்டர்களும் அதையே சொன்னாங்க? வேறு வழியில்லாம எடை குறைப்புக்கான பேரியாடிக் அறுவை சிகிச்சைக்கு ஒத்துகிட்டன்.அவளுக்கு சுகர் அதிகம், அதை கொறச்சிட்டு ஆப்பரேஷன் பண்ணுனாங்க. எல்லாம் நல்லா முடிஞ்சு வீட்டுக்குப் போனோம். ஒரு மாசம் ஆச்சு, திடீர்னு ஒரு நாள் அவ கால்களில் வீக்கம் வந்துச்சு. மூச்சுவிட சிரமப்பட்டா,உடனே இங்கே அழைச்சுட்டு வந்துட்டேன். ஆனா டாக்டருங்க மீனாவுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து போயிட்டதா சொல்லிட்டாங்க. டயாலிஸ் செய்றதுக்கும் அவ உடம்பு ஒத்துழைக்கல.இப்போ செயற்கை சுவாசத்துல தான் ஓடிக்கிட்டு இருக்கு அவ உசுரு"

            " இப்ப என்ன செய்யலாம்னு டாக்டருங்க சொல்றாங்க?"  "இனிமே வைத்தியம் ஒண்ணுமில்லே, வேணும்னா அவங்க உயிரோட இருக்கும்போதே வீட்டுக்கு கொண்டு போயிடலாம், ஆனா அவங்களுக்கு வீடு போகும் வரை செயற்கை சுவாசம் வசதி உள்ள ஆம்புலன்ஸில்  தான் கொண்டு போகனும்னு சொல்லிட்டாங்க" என்று சொல்லிய சங்கர் செல்வத்தின் தோளில் சாய்ந்து விம்மி அழ ஆரம்பித்தார்அவனும் சேர்ந்து அழ ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் ஆனதும் இருவரும் தன்னிலைக்கு வந்தார்கள். சங்கர் " செல்வம் எனக்கு அவளை உயிரோட வீட்டுக்கு கொண்டு போயிடனும்னு தோனுது.அவ அவளோட வீட்டிலே தான் உயிரவிடனும். வா போய் டாக்டர பார்க்கலாம்" என்றார். "அவங்க உயிரோட இருக்கிறவரை இங்கே வைத்திருக்கலாமே " " மருத்துவமனைக்கு மீனாவை அழைச்சிட்டு வரும்போதே மீனா என்னிடம் திரும்ப உயிரோட வருவேனா " என்றாள். "நான் அவளுக்கு கட்டாயம் உன்னை மருத்துவமனையில சாக விடமாட்டேன், ஒன்னும் முடியலேன்னா உன்னை இங்கே கொண்டுவந்துடறேன் "என்று சொல்லி விட்டுத்தான் அழைத்து வந்தேன்" என்றார் சங்கர்.

           டாக்டரை இருவரும் சந்தித்தனர், டாக்டர் அவர்களிடம் " பேஷண்ட்டோட நிலைமையை உங்களுக்கு சொல்லி இருக்கிறோம்.அவங்க இப்போ வெண்டிலேட்டரில் இருந்தால்தான் உயிரோடு இருக்கமுடியும். வெண்டிலேட்டரை எடுத்துவிட்டால் ஒரு மணி நேரத்திற்குள் அவர் மரணமடைந்துவிடுவார், எனவே வெண்டிலேட்டர் வசதி உள்ள ஆம்புலன்சை ஏற்பாடு செய்து தருகிறோம். நீங்கள் எப்போது எடுத்துச்செல்வது என்று முடிவு செய்துவிட்டு வாருங்கள், பில்லை கட்டிவிட்டு அவரைக்கொண்டு செல்லலாம்" என்றார். சங்கர் பில்லை தருமாறு கேட்டார். அத்ற்கு டாக்டர் கொஞ்சம் காத்திருங்கள். உங்கள் கணக்கை முடித்து டிஸ்சார்ஜ் செய்ய ஏற்பாடு செய்கிறேன். ஆம்புலன்ஸ் வரும். அதில் ஏற்றி வெண்டிலேட்டரில் இணைக்கும் வரை மருத்துவமனை பொறுப்பெடுத்துக் கொள்ளும், ஆம்புலன்சுக்கு அதன் கட்டணத்தை கட்டிவிடுங்கள் " என்றார்.பில் வந்ததும் சங்கர் பணத்தை கவுண்டரில் கட்டிவிட்டு வந்தார்.
                        டாக்டரிடம் ரசீதை காட்டியதும் மீனாவை ஆம்புலன்சுக்கு மாற்றும் நடவடிக்கை தொடங்கியது.துக்கம் தொண்டையை அடைக்க மீனா அருகிலேயே நின்றார் சங்கர். ஆம்புலன்சுக்கு மீனா மாற்றப்பட்டார். ஆம்புலன்சில் சங்கரும், செல்வமும் ஏறிக்கொள்ள ஆம்புலன்ஸ் புறப்பட்டது. வெண்டிலேட்டரில் மீனா உயிர் இயங்கிக் கொண்டிருந்தது. வீட்டின் அருகே நிறுத்திய ஆம்புலன்ஸ் டிரைவர் வெண்டிலேட்டரை அகற்றிவிடலாமா எனக்கேட்டார். அவர்களை பொறுத்திருக்க சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்ற சங்கர் தன் மகளை அழைத்து வந்தார். ப்ரியா அழுதுகொண்டே இருந்தாள். மகளைப்பார்க்க முடியாமல் கிடக்கும் மனைவியைக் கண்டு மனம் கலங்கினார் சங்கர். வீட்டில் படுக்கையைத்  தயார் செய்து வைத்திருந்தாள் ப்ரியா. செயற்கை சுவாசம் மீனாவுக்கு அகற்றப்பட்டது. உடனடியாக அவர் ஹாலில் இருந்த படுக்கைக்கு தூக்கிச்செல்லப்பட்டு படுக்க வைக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் புறப்பட்டு போய்விட்டது. உறவினர்கள் சூழ படுக்கையில் கிடந்த மீனாவின் கண்கள் சில நிமிடங்கள் திறந்தன. சங்கரும், ப்ரியாவும் மீனாவின் முகத்தோடு முகம் வைத்து ஆசைதீர பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவர்களின் குல விளக்கு அணைந்தது. மீனாவின் கண்களை கைகளால் மூடிவிட்ட சங்கர் துடித்து  கதறினார். அங்கே இருந்த அவரின் உறவினர்கள்
துக்கத்தில் அழ ஆரம்பித்தார்கள். வாசலுக்கு வெளியே நின்றிருந்த சாவு மேளக்காரர்கள் அவர்களது வேலையை ஆரம்பித்தார்கள்.


E mail :- enselvaraju@gmail.com