Tuesday 19 January 2021

என் பார்வையில் 2020ன் சிறந்த குறுங்கதைகள் மற்றும் அல்புனைவுகள்

 சரவணன் மாணிக்கவாசகம் முகநூலில்

என் பார்வையில் என்பதே தனிப்பட்ட ரசனையில் என்று ஆகிவிடுகிறது. சொல்லப்போனால் விமர்சனமே நீள்வாசிப்பு அனுபவத்தைத் தனிப்பட்ட ரசனை என்னும் குதிரை மீது ஏற்றுவது தான். இன்னொன்று நான் உபயோகிக்கும் Sorting method. 2020ல் வெளிவந்திருந்தாலும் புத்தகத்தில் 2019 என்று இருந்திருந்தால் இதில் இடம்பெறாது. உதாரணத்திற்கு திருமதி பெரேரோ சிறுகதைத் தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனால் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட வருடம் 2021. தமிழில் Physical books வாங்குவது இன்னும் கடினமாக இருக்கிறது. நான் மறந்துவிடக்கூடாது எனப் பதிப்பகத்தாரை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ததும் நடந்திருக்கிறது. பொறுத்துக்கொண்ட ஜீவகரிகாலன், Zero Degree காயத்ரி, எதிர் Anush, Arun Dir. வசந்தி கலா, காலச்சுவடு ஜெபா, சாகித்ய அகாதமி ராவ் ஆகியோருக்கு நன்றிகள்.
குறுங்கதைகள்:
உண்மையில் ஐந்நூறு வார்த்தைகளுக்குள் அடங்கும் கதைகளில் கூறியதுகூறலும் அலுப்பான தொனியும் வராமல் எழுதுவது வெகுசிரமம். அதற்கு ஒரு Collageஐப் போல் பயிற்சி தேவைப்படுவது. குறுங்கதைகள் வழக்கமான சிறுகதைகளுக்குள்ள ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு ஆகியவற்றைக்கொண்டிருப்பதில்லை. 20/20 விளையாட்டைப்போலவே Settle ஆக நேரம் இருப்பதில்லை. இந்த விதிகளின்படி பார்த்தால் ஒரே ஒரு தொகுப்பு மட்டுமே பொருந்துகிறது.
1. ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் -பெருந்தேவி.
ஐம்பத்தோரு குறுங்கதைகளின் தொகுப்பு. பெரும்பான்மையான கதைகள் குறுங்கதை Formatக்குள் உள்வருபவை, உணர்ந்து எழுதியவை. ஒருபக்கக் கதைகள் அல்ல குறுங்கதைகள். மிகவும் தீவிரமான ஒரு விசயத்தை, அதிகபட்ச வார்த்தை சிக்கனத்தோடு, மொழியின் லாகவத்தோடு சொல்வதே குறுங்கதைகள். Lydia Davisன் நான்குவரிக்கதை ஒன்றில் as if saying to the child 'dont move' என்ற வரிகள் உடல் முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும். பெருந்தேவி குறுங்கதைகளிலும் Fantasy, அமானுஷ்யம், erotic romance என பல பரிசோதனைகள் செய்திருக்கிறார். முக்கியமாகச் சொல்ல வேண்டியது மொழிநடை.
அல்புனைவுகள்:
1. சினிமா எனும் பூதம் - R P ராஜநாயஹம்::
முழுக்க முழுக்க சினிமா பற்றிய, கூகுளில் தேடி கண்டடைய முடியாத தகவல்கள் கொண்ட நூலிது. எதிரிருந்து பேசுவது போன்ற மொழிநடை இதன் சுவாரசியத்தைக் கூட்டும். பல பிம்பங்கள் உடைகின்றன. சில உண்மைகள் வெளி வருகின்றன. சினிமா எனும் பூதம் அடுத்து என்ன என்ன என்று கேட்கிறது. நகுலன் கவிதை, அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், தி.ஜா எழுத்து, Baudelaire போன்றவர்களின் Quotes, லா ச ராவின் பாற்கடல் என்று இலக்கியமும் நடுநடுவே இவரை விட்டு விலகாமல் வருகின்றது. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் கிளியோபாட்ரா சீசரை நினைத்து சொல்கிறாள் "When I was green in judgment, cold in blood.." அதை ஸ்ரீதேவியின் மரணத்துடன் கொண்டு வந்து பொருத்துவது இவரால் மட்டுமே முடியும்..
2. உப்புவேலி- ராய் மாக்ஸம்- தமிழில் சிறில் அலெக்ஸ்:
சிறில் அலெக்ஸின் மொழிபெயர்ப்பு இதமாக, படிப்பதற்கு தங்கு தடையின்றி செல்கிறது. இரண்டு காரணத்திற்காக இந்த நூலை அவசியம் படியுங்கள். ஒன்று மறக்கப்பட்ட நம் வரலாறு. உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டிருக்க வேண்டிய ஒரு வரலாற்று சான்று நம் அறியாமையால் அழிக்கப்பட்டு விட்டது. இரண்டாவது இதை எழுதியவர் ஆங்கில வரலாற்றாசிரியர், ஆங்கிலேய அரசின் கொடுமைகளை பட்டியலிட்டிருக்கிறார்.
3. மூவர் - கே என் செந்தில்:
அம்பை,வண்ணதாசன்,ந.முத்துசாமி இவர்கள் மூவருக்கும் இருக்கும் ஒற்றுமை நாவலின் பக்கம்கூட இவர்கள் போகவில்லை. சின்னு முதல்..... நீண்ட சிறுகதை. நாவலின் கூறுகள் அதில் இல்லை. இவரது பார்வையில் மூவர் குறித்த தெளிவான சித்திரத்தைத் தந்திருக்கிறார். கிட்டத்தட்ட மொத்தக் கதைகளைப் படித்து அவர்கள் எழுத்தைப்பற்றி எழுதும் கட்டுரைகள் அருகி வரும் காலத்தில் இந்த நூல் முக்கியமானது. செந்திலிடம் இருந்து தொடர்ந்து இது போல் நூல்கள் வர வேண்டும்.
4. பாண்டியாட்டம்- நம்பி கிருஷ்ணன்::
நம்பி கிருஷ்ணனின் இந்தப் புத்தகம், காயசண்டிகை போன்ற வாசிப்புப்பசி கொண்ட வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக விளங்கக்கூடும். இவரது தமிழ் சரளமாக ஒரு ambiguityக்கு வழியில்லாத வகையில் தெளிவாக உள்ளது. இவர் தொடர்ந்து எழுத வேண்டும். இது போன்ற புத்தகங்கள் நிறைய வரவேண்டும். படித்து முடித்து விட்டோம் என்று பரணில் போட முடியாமல் ஏதோ ஒன்றைக் குறிப்பெடுக்க வேண்டும் என்பதற்காக கைக்கெட்டும் தூரத்தில் அலமாரியில் வைக்கும் புத்தகம்
5. மண்ணில் உப்பானவர்கள் - சித்ரா பாலசுப்பிரமணியன்:
பல ஆளுமைகளைப் பற்றி ரத்தின சுருக்கமாக மூன்றாம் பகுதியில் தந்திருக்கிறார். நூலின் நடுவில் இவர் ஓரிடத்தில் சொல்வது போல், காந்திக்கு வாய்ந்த தளபதிகள் போல் செயல்வாய்ந்தவர் உலகின் எந்தத் தலைவருக்கும் வாய்ந்ததில்லை. (ஹிட்லரின் தளபதிகள் நாசவேலைகளில் அதிதீவிரம் காட்டினர்) அதுவும் கூட அவரது கொள்கைகளின் வெற்றிக்கு ஒரு காரணம். சித்ரா பாலசுப்பிரமணியன், எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகளைக் கொண்டு சுருக்கமான அத்தியாயங்களில் இந்த நூலை வடிவமைத்திருக்கிறார்
6. இரவு- எலி வீஸல்- பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மரியன்வீஸல்- தமிழாக்கம்- ரவி.தி. இளங்கோவன்;
Holocaust நூல்கள் புனைவோ, அபுனைவோ எல்லாமே பயங்கரமானவை. மனித வரலாற்றில் கறை என்று சொல்லப்படும் நிகழ்வுகளை நிகழ்த்தியோர் அதற்குண்டான தண்டனையை அடைந்ததாக வரலாறே இல்லை. எப்போதும் அவர்கள் சொல்வது அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. நாஜி SS அதிகாரிகள் பலர் பொதுமக்களுடன் கலந்து விட்டனர். நாஜிகளை விட்டுவிடுவோம். விசித்திரப் பிறவிகள். அரை ரொட்டிக்கு ஏராளமானோர் அடித்துக் கொண்டதை வேடிக்கை பார்க்கும் ஜெர்மன் தொழிலாளர்கள் எந்த ரகம். ஆடன் நகரில் தண்ணீரில் நாணயத்தை வீசி எறிந்து பழங்குடிகள் தண்ணீருக்குள் பாய்ந்து, அதைப் போராடிக் கைப்பற்றுவதைப் பார்த்து ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் எந்த ரகம்?
7. நெஞ்சம் மறப்பதில்லை - சித்ரா லட்சுமணன்:
ஐம்பது அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலில், ஆரம்பத்திலிருந்து சுவாரசியம் குறையாது எழுதியிருக்கிறார் சித்ரா லட்சுமணன். பலகாலம் சினிமாவுடன் தொடர்பு கொண்ட இவருக்குச் சொல்வதற்கு ஏராளமான விசயங்கள் சினிமா குறித்து இருக்கும். Controversial ஆக சின்ன விசயம்கூட இல்லாமல் இந்தநூலை எழுதியிருக்கிறார்.
8. நற்திரு நாடே- கார்த்திக் புகழேந்தி:
பத்து ஆழமான கட்டுரைகள். ஒவ்வொன்றும் வித்தியாசமான தலைப்பில். இந்தக் கட்டுரைகளுக்கு அதிகமான நேரம், பயணம், வாசிப்பு தேவைப்பட்டிருக்கும் கார்த்திக் புகழேந்திக்கு. சங்க இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், நூல்கள், இதழ்கள் என்று பலவற்றை படித்துத் தொகுக்கப்பட்ட கட்டுரைகள். உதவிய நூல்கள் மட்டும் சிற்றெழுத்தில் மூன்று பக்கங்கள் வருகின்றன. இவர் நன்றி சொல்லிய வெவ்வேறு ஊரைச் சேர்ந்த நூலகர்கள் ஒரு பத்தி முழுக்க வருகிறார்கள்.
9. கழிவறை இருக்கை- லதா:
ஒரு ஆண் தான் கொண்ட பல உறவுகள் ( அதில் முக்கால்வாசி கற்பனைக் கதைகள்) பற்றி ஒரு இராணுவவீரன் மெடல்கள் பற்றிச் சொல்லும் பெருமையுடன் பேசுவது போல் இங்கே பெரும்பான்மையான பெண்கள் பேசுவதில்லை. சுயசரிதை சாயல் வரும் நூல்களில் பெண்கள் சர்வ ஜாக்கிரதையைக் கையாளுகிறார்கள். சுதந்திரமான, தைரியம் வாய்ந்த பெண்களும் குடும்பத்தினருக்கு சங்கடத்தைக் கொடுக்க விரும்பவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த சூழலில் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்து, உள்ளடக்கங்களிலும் அதே தைரியத்தைக் கடைபிடித்திருக்கிறார். நிச்சயமாக புத்தகத்திற்கு நிறைய Homework செய்திருக்கவும் வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி நேர்மையான எழுத்து. நிறைய லதாக்கள் தங்கள் கடிவாளங்களைக் கழற்றி எறிந்து எழுத வரட்டும்.
10. மெச்சியுனை..... - உமா சங்கரி:
பல அரிய புகைப்படங்களுடன், நினைவுகூரக்கூடிய தகவல்களை இந்த நூலில் பகிர்ந்திருக்கிறார். புத்தகத்தின் வடிவமைப்பும், கறுப்புவெள்ளைப் புகைப்படங்களும், புதுப்புத்தக மணமும், பழைய சோவியத் யூனியன் பத்திரிகை போல் வழுவழுப் பக்கங்களுமாய், இது போல் புத்தகங்கள் வந்தால் கிண்டில் வாசிப்பு குறைந்து விடும் போல் தோன்றுகிறது.
11. அழ நாடு - அ.உமர் பாரூக்:
இந்த சிறிய நூலிலேயே கல்வெட்டுகள் சிதைந்தது, புதைந்தது, பாதி அழிந்தது என்று பலமுறைகள் வருகிறது. வந்தவர் எல்லாம் கோயிலை சிற்பங்களை அழித்தனர். எஞ்சியவையே நம் பண்பாட்டு எச்சங்கள். அதையும் Archaeological Survey of India முக்கியத்துவம் கொடுத்துச் செய்யும் என்று சொல்ல இயலாது. பாலியல் வல்லுறவு, விவசாயப்போராட்டம் என்று எதுவானாலும் வடக்கில் ஆரம்பித்தது என்றால் தான் நமக்கும் ஒரு மரியாதை.
12. தேனொடு மீன் - இசை:
கதைகளைப் படிப்பவர் எல்லோரும் கதைகளைப் புரிந்து கொள்வார்கள். வார்த்தைகள் தாண்டிய அர்த்தத்தை நோக்கி பயணம் செய்யும் வாசகர் குறைவு. அதனாலேயே தி.ஜா, அசோகமித்ரன் போன்றவர்கள் முழுமையாகப் படிக்கப்பட்டதில்லை. முத்துலிங்கம் கதை ஒன்றுக்கான இவரது கட்டுரை, எதைக் கவனிக்கத் தவறுகிறார்கள் என்பதைக்கூறும் வழிகாட்டி. எவ்வளவு வேகமாகப் படித்தாலும் சில வார்த்தைகள்/வரிகள் கண்ணைக் கொக்கிபோட்டு இழுப்பது ஒரு பயிற்சி.
13. தனுஜா - தனுஜா சிங்கம்::
உங்கள் ஆன்மாவால் படிப்பீர்கள் என் கதையை என்று முடிக்கிறார் இந்த சுயசரிதையை. இதைவிட நேர்மையான ஒரு எழுத்தை நீங்கள் இதற்கு முன் படித்திருக்க வாய்ப்பில்லை. சக்திவாய்ந்த கதைக்கு அலங்கார மொழிகூடத் தேவையில்லை என்பது மறுபடியும் நிரூபணமாகி இருக்கிறது. நிறைய இடங்களில் பேச்சு வழக்கிலோ இல்லை எதிர் இருப்பவரிடம் சொல்லும் தொனியிலோ இருக்கும் மொழிநடை அதன் உள்ளட.கத்தால் அத்தனை உணர்வுகளையும், வலியையும் வாசகருக்குக் கடத்துகிறது.
14. நாத்திக குரு - இரா.முருகவேள்:
இருபது கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. சேரமான் மெக்கா போனாரா, ஸ்டாலின் காலத்தில் நடந்ததென்ன, ரஷ்ய இலக்கியங்கள், பெண்களின் சொத்துரிமை இவற்றோடு American Sniper, அசுரன் போன்ற படங்கள் குறித்த கட்டுரைகளும் உள்ளன. ஏற்கனவே கூறியது போல திரில்லர் நாவல்களில் ஏற்படுத்தும் பரபரப்பு மொழிநடையை பல கட்டுரைகளில் கையாண்டிருக்கிறார். வெறுமனே பரபரப்பு இல்லாமல் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஆழ்ந்த தகவல்களைத் தேடிக்கொண்டே கட்டுரை எழுத ஆரம்பித்திருக்கிறார். இணையத்தில் கிடைத்த சின்னத்தகவலைக் கொண்டு பேனைப் பெருமாளாக்குவது போன்ற கட்டுரைகள் இல்லை இவை.
நேற்றைய பதிவில் விடுபட்ட சிறுகதைத் தொகுப்பு:
எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும் Excel என்னை ஏமாற்றுகிறது. பாவெல் சக்தியின் சிறுகதைத் தொகுப்பு நேற்றைய பதிவில் விடுபட்டுள்ளது. I am really sorry பாவெல் சக்தி.
நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் - பாவெல் சக்தி:
எட்டு நெடுங்கதைகள் கொண்ட தொகுப்பு. 374 பக்கங்களுக்கு எட்டு கதைகள் என்றால் சராசரி அளவை விடக்கூடியவை. வழக்கறிஞராகப் பணி புரிபவர் இவர். எட்டு கதைகளிலும் வழக்கும், நீதிமன்றமும்
கதை நகர்த்தும் காரணியாய் இருக்கின்றன. நீதிமன்றத்தின் அன்றாட விவரங்கள், வழக்கு எப்படிப் போகும், குறுக்குக் கேள்விகள் எப்படிக் கேட்கப்படும், பணம் பிடுங்கி வக்கீல்கள் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பது என்று அனுதினம் இவர் பார்க்கும் காட்சிகள் கதையோடு கதையாய் விவரிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment