சுனீல் கிருஷ்ணன் - அந்திமழை கட்டுரை
|(மார்ச் மாத அந்திமழை இதழில் இருபதாண்டு கால தமிழ் நாவல்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். நியாயப்படி இது நண்பர் ஜா. ராஜகோபாலன் எழுதியிருக்க வேண்டியது. கடைசி நேரத்தில் என்பக்கம் திருப்பிவிட்டுவிட்டார். ஒருமாத காலம் அவகாசம் கேட்டேன். அதுவும் சாத்தியமில்லை, இது ஒரு தொடர் கட்டுரை என சொல்லிவிட்டார். ஜனவரி மாத சிறுகதை குறித்தான கட்டுரையில் 'அம்புப் படுக்கை' இடம் பெற்றாலும் கூட அது சரியான அல்லது முழுமையான கட்டுரையாக உருக்கொள்ளவில்லை. என்னால் எதற்கும் சட்டென மறுப்பு சொல்ல முடிவதில்லை. ஆகவே இந்த பரிசோதனை முயற்சியை ஒப்புக்கொண்டு இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன். எழுதி ஓரளவு பரந்துபட்ட வகையில் எல்லா முக்கிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய ஒரு வடிவத்தில் கட்டுரை உருக்கொண்டது என எண்ணியிருந்தேன். எழுதி அனுப்பிய பிறகு தான் சில குறிப்பிடத்தக்க விடுபடல்கள் உள்ளதை கவனித்தேன். யூமா வாசுகியின் ரத்த உறவுகள், ஃபிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' கலாப்ரியாவின் 'வேணல்' அழகிய பெரியவனின் படைப்புகள் போன்றவை முக்கிய விடுபடல்கள். இவைத்தவிர அபிலாஷின் 'கால்கள்' தவசியின் 'சேவற்கட்டு' போன்ற பல நாவல்கள் விடுபட்டிருக்க கூடும். ஈழத்தில் 'தேவகாந்தன்' சிங்கப்பூரில் 'சித்துராஜ் போன்ராஜின் நாவல்களும் நழுவிவிட்டன. இத்தகைய முயற்சி ஆபத்தானது. சிக்கலை தருவிப்பது. முழு இது பட்டியல் அல்ல என சொல்லிக்கொண்டாலும் கூட பட்டியல்தன்மை கொண்டது என நம்பப்படுகிறது. நிச்சயம் சிலருக்காவது வருத்தத்தை தருவிப்பது. கொஞ்சம் தவறினாலும் வெறும் பட்டியலாக சுருங்கிவிடும் ஆபத்து கொண்டது. எனினும் இதை ஒரு தொடக்க வரையறையாக கொள்ளலாம். இப்படி வேறு சில எழுத்தாளர்களும் விமர்சகர்களும் இருபது ஆண்டுகால நாவல்கள் குறித்து எழுதும்போது இயல்பாக இந்த விடுபடல்கள் நிறைவுறும்)
--
நவீனத் தமிழ் இலக்கியத்தின் இரு தொடக்கப் புள்ளிகள் என கவிதைக்கு பாரதியையும் புனைவுக்கு புதுமைபித்தனையும் அடையாளம் காட்டுவது வழக்கம். பாரதியில் தொடங்கிய கவிமரபு பல பெரும் கவிகளை உருவாக்கி இன்றுவரை வளமாக பெருகி வருகிறது. புதுமைப்பித்தனின் வெளிப்பாட்டு வடிவம் சிறுகதையாகவே இருந்தது. தொடக்கத்திலிருந்தே சிறுகதையில் பல மேதைகள் உருவாகி அந்த தளத்தை செறிவாக்கினார்கள். இன்று தமிழில் புதிதாக சிறுகதை எழுதவரும் எழுத்தாளருக்கு மூதாதையின் பளுவை கடந்து புதிதாக எழுத வேண்டிய நிர்பந்தம் உள்ளது ஒருவகையில் வரம் இன்னொரு வகையில் சவால். முன்னோடிகள் உருவாக்கியளித்த இவ்விரு வெளிப்பாட்டு வடிவங்களும் இன்றுவரை தழைத்து வளர்வதை உணர முடிகிறது. இந்த கட்டுரை கடந்த இருபது ஆண்டுகால தமிழ் நாவல் இலக்கியத்தின் செல்திசையை பற்றியதே அன்றி சிறந்த நாவல்களுக்கான பட்டியல் அல்ல. இதுவும் கூட பக்க வரையறைக்கும் ஞாபக வரையறைக்கும் உட்பட்டு செய்யப்படும் ஒரு முயற்சி மட்டுமே. ஏனெனில் இத்தகைய பேசுபொருள் ஒரு முனைவர் பட்ட ஆய்வு அளவிற்கு விரித்து எழுதப்படவேண்டியது. வரலாறு சார்ந்த ஒரு கோணத்துக்கு முக்கியத்துவம் அளித்து நாவல்களில் ஏற்பட்டுள்ள பரிணாமத்தை அடையாளம் காண முயல்கிறது.
புதுமைபித்தனின் காலத்தில் மலையாளத்தில் தகழி சிவசங்கரம் பிள்ளை செம்மீன், தோட்டியின் மகன் போன்ற ஆக்கங்களை உருவாக்கிவிட்டார். தமிழில் பரப்பிலக்கிய தளத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் தமிழ் நாவலின் அடையாளமாக நிலைபெற்றிருந்த போது கன்னடத்தில் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் ‘சிக்கவீர ராஜேந்திரனை எழுதிவிட்டார். மண்ணும் மனிதர்களும், சோமன துடி போன்ற பெரும் ஆக்கங்கள் உருவாகிவிட்டன. இந்தியில் கோதான் வெளிவந்தது. வங்காளத்தில் விபூதி பூஷன் பந்தோபத்யாயா, தாரா சங்கர் பானர்ஜி, அதீன் பந்தோபத்யாயா என பலரும் அபாரமான உயரங்களை நாவலில் அடைந்துவிட்டார்கள்.
பிற மொழிகளை ஒப்பிடும்போது தமிழில் நாவல் மரபு சற்று வேறுபட்ட தொடக்கத்தையே கொண்டிருந்தது. க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ லாசராவின் ‘அபிதா’, தி.ஜாவின் ‘மோக முள்’ ஆகியவை நம் தொடக்க கால நாவல்கள். கல்கி, சாண்டில்யன் போன்றோர் வரலாற்று புனைவுகள் வழியாக வெகு மக்கள் ஏற்பை பெற்றவர்கள் ஆனார்கள். ஆகவே நவீன இலக்கியம் அவற்றை நிராகரித்து தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தனிமனித சுயத்தை அதிகமும் பேசு பொருளாக்கிக் கொண்டது. ‘கரைந்த நிழல்கள்’ ‘கிருஷ்ணப் பருந்து’ ‘பள்ளிகொண்டபுரம்’ என பல தமிழ் நவீன செவ்வியல் நாவல்கள் எல்லாம் இவ்வகையின் நீட்சியே. வரலாற்று, பண்பாட்டு தடயங்கள் மிக சன்னமாகவே இவற்றில் வெளிப்பட்டன. தொடக்ககால நாவல்கள் அதிகமும் அகத்தையே பேசின. புறத்தை பேசிய மார்க்சிய பின்புல நாவல்கள் அதீதமாக அப்பக்கம் சாய்ந்தன. இப்போது நோக்குகையில் ஜெயகாந்தன் இதை ஓரளவு சமன்படுத்த முயன்றார் என அடையாளப்படுத்த முடிகிறது. அகத்திணையின் கூர்மையும் சமூக பிரக்ஞையின் விழிப்புணர்வும் கொண்ட எழுத்து. ஆனால் தீவிர நவீன இலக்கியம் அவரை பெரிதாக கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்நிலையில் இன்று தமிழின் முக்கியமான நாவலாக கொண்டாடப்படும் ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் ஆகியவை அவர் அதை எழுதிய காலத்தில் கவனிக்கப்படடவில்லை. இன்றைய தமிழ் நாவல் தாமதமாக என்றாலும் கூட, சிங்காரத்தை தன் முன்னோடியாக கண்டுகொள்கிறது என சொல்லலாம்.
தமிழ் நாவல்களின் முனைப்பான காலம் எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்து தொடங்குகிறது என தோராயமாக சொல்லலாம். தொன்னூறுகளில் அது வேகம் கொள்கிறது, இரண்டாயிரங்களில் உச்சம் கொள்கிறது என்றே சொல்ல வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்டுள்ள நாவல்களில் முக்கியமானவை பலவும் தொண்ணூறுகளில் உருவாகி வந்த எழுத்து தலைமுறையால் உருவாக்கப்பட்வை தான். இக்காலகட்டத்தில் நாவல் குறித்தான உரையாடலை வடிவமைத்த ஆற்றல்கள் என சிலவற்றை சுட்டிக் காட்டலாம். பின் நவீனத்துவம் மற்றும் கோட்பாட்டு சொல்லாடல்கள், தலித் இயக்கம், லத்தீன் அமெரிக்க இலக்கிய மொழியாக்கங்கள் என இவை மூன்றும் தமிழ் இலக்கிய மரபுடன் மோதி பல புதிய வெளிப்பாட்டு முறைகளை உருவாக்குகின்றன. நாவல் என்பது தத்துவத்தின் கலைவடிவம் எனும் வாதம் பேசப்படுகிறது. நாவல் தனிமனிதரின் அலைக்கழிப்புகளை மன அவசங்களை சொல்வதோடு நிற்க வேண்டியதில்லை எனும் நிலைக்கு விவாதம் வளர்கிறது. வரலாற்றுடன் அவருக்கிருக்கும் ஊடுபாவு என்ன என்பதே கேள்வியாகிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு சில காரணிகளை அடையாளப்படுத்தலாம். உலகமயமாக்கம், இணைய வசதி, கணினி தட்டச்சு ஆகிய மூன்றும் மிக முக்கியமான தாக்கங்களை செலுத்தின. குறிப்பாக இரண்டாயிரங்களில் ஆழி சூழ் உலகு, கொற்றவை, மணல் கடிகை என கணிசமான பெருநாவல்கள் வரத் தொடங்கியதற்கு கணினி தட்டச்சு ஒரு காரணி என தோன்றுகிறது. உலகமயமாக்கம் மற்றும் இணையம் பல உலக எழுத்தாளர்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. புத்தகங்களை எளிதாக பெற வழிவகை செய்கிறது.
இந்திய செவ்வியல் மரபைப் பற்றி சொல்லப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டே அது வரலாற்று நீக்கம் செய்கிறது என்பதைத்தான். அரிதாகவே படைப்பை உருவாக்கியவர் பற்றி அறிகிறோம், படைப்பில் வரலாற்று தகவல்களை பொருத்தங்களை தேடுவது இன்னும் சிரமம். ஒரு குறிப்பிட்ட அரசு, குறிப்பிட்ட காலம் என்பதற்கான தடையங்களை அழிப்பதன் வழியாக காலாதீத தன்மையை அடைவதே அவற்றின் நோக்கமாக இருந்தன. நவீனத் தமிழ் இலக்கியமும் வரலாற்று நீக்கத்தை ஒரு எதிர்வினையாக கைக்கொண்டது. தொன்னுருகளின் உரையாடல் பிரதிக்குள் இருக்கும் மனிதனை வரலாற்று மனிதனாக, சமூக மனிதனாக உருவகிக்கத் தொடங்கியது. இந்த மிக முக்கியமான மாற்றம் தான் இன்றைய நாவலுக்கு முன்னோடியாக சிங்காரத்தை கொண்டாட வைத்தது.
வரலாறை எழுதுதல், நுண் வரலாறை எழுதுதல், மாற்று வரலாறை அல்லது இணை வரலாறை எழுதுதல், வரலாற்றை திருகுதல் என தமிழ் இலக்கியம் நான்குவிதமான உரையாடலை வரலாற்றுடன் நிகழ்த்த தொடங்கியது.
பிரபஞ்சனின் வானம் வசப்படும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட நாவல். வரலாற்று நாவலின் தொடக்கப்புள்ளி. தொண்ணூறுகளில் தான் சி.சு செல்லப்பா தனது வாழ்வின் இறுதி காலத்தில் ‘சுதந்திர தாகம்; நாவலை எழுதுகிறார். சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாயக்கர் கால வரலாறை புனைவாக ஆக்கிய மிக முக்கியமான முயற்சி. அ.வெண்ணிலா, மு. ராஜேந்திரன் ஆகியோர் இத்தளத்தில் சில ஆக்கங்களை எழுதி வருகிறார்கள். சரவண கார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்’ காந்தியின் பாலியல் சோதனையை பின்புலமாக கொண்டது. கடந்த ஆண்டு மிகவும் கவனிக்கப்பட்ட நாவல்களில் ஒன்றான சுளுந்தீயையும் இப்படி வகைப்படுத்தலாம். வரலாற்று நாவல்களின் சவால் என்பது தகவல்களையும் புனைவுகளையும் எந்த விகிதத்தில் கலந்து சமநிலையை அடைகிறோம் என்பதில் உள்ளது. தகவல் குவியலாக ஆக்காமல் படைப்பூக்கத்துடன் வரலாற்றை கையாள்வதில் உள்ளது. பூமணியின் 'அஞ்ஞாடி' இவ்வகையில் மிக முக்கியமான முயற்சி. ஜெயமோகனின் 'வெள்ளை யானையும்' வரலாற்று புனைவாக கவனப்படுத்த வேண்டிய முக்கிய முயற்சி.
வரலாற்று கதை மாந்தர்களை தவிர்த்து வாழ்க்கைமுறை ஆவணம் என சொல்லத்தக்க மானுடவியல் நோக்கில் முக்கியமான முதல் முயற்சிகள் பலவும் இந்த இருபது ஆண்டுகளில் நிகழ்ந்தன. கி.ராவின் கோபல்ல நாவல் தொடர்களை ஒரு இனக்குழு வரலாறாக கொள்ள முடியும். அதுவே இவ்வகை நாவல்களின் முன்னோடி. தொண்ணூறுகளில் வெளிவந்த இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ இவ்வகை எழுத்துக்களின் நவீன கால முக்கிய மைல்கல் முயற்சி அவருடைய ‘செடல்’ குறிப்பிட்ட ஒரு வகையான ஆட்டக்காரர்களின் வாழ்வை சொல்கிறது. ஜோ டி குரூசின் ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகியவை பரதவர்களின் வாழ்வை சொல்பவை. கிறிஸ்தோபர் ஆண்டனியின் ‘துறைவன்’ முக்குவர் எனும் குறிப்பிட்ட மீனவக் குழுவை பற்றி பேசுகிறது. எஸ்.செந்தில்குமாரின் ‘காலகண்டம்’ பொற்கொல்லர் சமூகத்தின் சித்திரத்தை அளிப்பது. அவருடைய அண்மைய நாவலான ‘கழுதைபாதை’ போடி குரங்கணி பகுதியில் கழுதை மேய்ப்பவர்கள் மற்றும் முதுவான்குடி எனும் பழங்குடி மக்கள் பற்றிய முதல் சித்திரத்தை அளிக்கிறது. ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’, பழங்குடி வாழ்வை ஆவணப்படுத்துகிறது. லக்ஷ்மி சரவணகுமாரின் 'கானகன்' பளியர் வாழ்வை பேசியது. ஏக்நாத்தின் ‘கிடை காடு’ , ‘ஆங்காரம்’ போன்றவை மேய்ச்சல் தொழிலை பற்றிய நுண்மைகளை பேசுபவை. நக்கீரனின் 'காடோடி' காட்டை நுண்மையாக எழுத்தாக்கியது. வேல ராமமூர்த்தி, சி.எம். முத்து போன்றோரை இவ்வகை எழுத்தாளர்கள் என புரிந்து கொள்ளலாம்.
வரலாற்று நாவல்களின் சட்டகங்கள் சற்றே இறுக்கமானவை. அத்தோடு ஒப்பிட நுண் வரலாற்று நாவல் எழுதுவது சற்றே சுலபம். வரலாற்று நாவல்கள் வரலாற்று பாத்திரங்களை, வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவை. நுண் வரலாற்று நாவல்கள் வரலாற்று நிகழ்வுகளை சாமானியர்களின் தளத்திலிருந்து அனுகுபவை. இத்தளத்திலே பல நாவல்கள்; ததமிழில் எழுதப்பட்டுள்ளன. பி.ஏ. கிருஷ்ணனின் ‘புலி நகக் கொன்றை’ ஒரு வம்சத்தின் கதையை சொல்கிறது. மேற்சொன்ன நுண்வரலாற்று தன்மையை பயன்படுத்தி எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்று. ஒரு தீப்பெட்டியில் வரையப்பட்ட ஓவியத்தின் வழியாக திராவிட அரசியலின் சமூக பரிணாமத்தை தமிழ்மகனின் வெட்டுப்புலி சொல்ல முயல்கிறது. இப்படி ஏதேனும் ஒரு பொருளின் வரலாறை எழுதத் தொடங்கி ஒரு காலகட்டத்தின் வரலாறை நாவலாக நம்மால் எழுதிவிட முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஒரு நகரத்தின் பரிணாமத்தை பாத்திரங்களின் ஊடாக சொல்லும் எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகை, கண்மணி குணசேகரனின் ‘வந்தாரங்குடி’ தமிழ் பிரபாவின் 'பேட்டை' போன்றவைகளும் நுண் வரலாற்று சித்திரத்தையே அளிக்கின்றன. சு.வேணுகோபாலின் 'நிலம் எனும் நல்லாள்' கிராமம் நீங்கி நகருக்கு இடம்பெயரும் வேளாண் குடியின் வாழ்வை சொல்கிறது. சோ. தர்மனின் 'சூல்' நீர்நிலை சார்ந்து சீரழிவின் வரலாறை பதிவு செய்கிறது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் தனி மனிதர்களின் வாழ்வை சமூக பண்பாட்டு தளத்தில் அனுகுகிறது. கடுமையாக எதிர்க்கபட்டு தமிழகத்திற்கு வெளியே மிக பரவலாக அறியப்பட்ட முதல் தமிழ் நாவல் எனும் இடத்தை அடைந்தது. தமிழ் எழுத்தின் சர்வதேச முகமாக இந்த ஆண்டுகளில் பெருமாள் முருகன் அறியப்படுகிறார்.
‘போர் எனும் வரலாற்று நிகழ்வை பின்புலமாக கொண்டு பல்வேறு ஈழ நாவல்கள் இந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. ஷோபா சக்தியின் ‘ம்’ ‘கொரில்லா’ ‘பாக்ஸ் கதைகள்’ அண்மையில் வெளிவந்திருக்கும் ‘இச்சா’ வரை அனைத்துமே முக்கியமான நாவல்கள். குணா கவியழகனின், தமிழ்நதியின் நாவல்களும் இதே பின்புலத்தை பேசுபவை. சயந்தனின் ‘ஆறா வடு’ மற்றும் ‘ஆதிரை’ ஈழ பின்புலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான நாவல்கள். கடந்த ஆண்டு வெளிவந்த ம.நவீனின் ‘பேய்ச்சி’ மலேசிய தமிழர் வாழ்வை பற்றிய நுண் வரலாற்று சித்திரத்தை அளிக்கும் முக்கிய நாவல். சீ.முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ மற்றும் ‘மலைக்காடு’ ஆகியவையும் இந்த இருபது ஆண்டுகளுக்குள் வெளிவந்த முக்கிய மலேசிய நாவல்கள்.
. வெவ்வேறு தொழில் சார்ந்தும் நுண் வரலாற்று நாவல்கள் எழுதப்படலாம். சுப்ரபாரதி மணியன் நெசவு சாயப்பட்டறை சார்ந்து பல ஆக்கங்களை எழுதி வருகிறார். கணினி மற்றும் தகவல் தொடர்புத்துறை சார்ந்தும் சில நாவல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இரா.முருகன், செல்லமுத்து குப்புசாமி, வினாயகமுருகன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். கார்த்திக் பாலசுப்பிரமணியத்தின் ‘நட்சத்திரவாசிகளை’ குறிப்பிடத்தக்க முயற்சியாக சொல்லமுடியும்.
பெண் எழுத்துக்கள் கூர்மையான தன்னிலையில் வாழ்வனுபவ வெளியிலிருத்து உருவாகுபவை. தனித்த பேசுபொருள் மற்றும் கூறுமுறை காரணமாக தனித்தன்மையை அடைபவை. சிவகாமியின் 'ஆனந்தாயி' உமாமகேஷ்வரியின் 'யாரும் யாருடனும் இல்லை' பாமாவின் 'கருக்கு' சல்மாவின் 'இரண்டாம் ஜாமங்களின் கதை' போன்றவை இந்த காலகட்டத்தில் வெளியான குறிப்பிடத்தக்க பெண் எழுத்துக்கள். இஸ்லாமிய வாழ்வை எழுதிய முன்னோடி என தோப்பில் முகமதுமீரானை சொல்லலாம். கீரனூர் ஜாகிர் ராஜாவின் துருக்கி தொப்பி புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்களுடன் ஒப்பிடத்தக்க முக்கியமான ஆக்கம். அர்ஷியா, மீரான் மைதீனின் ஆக்கங்களும் இவ்வரிசையில் வருபவை
இணை வரலாறு அல்லது மாற்று வரலாறை எழுதுவதில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஆகியவை முக்கிய முன்னோடி ஆக்கங்கள். பெருங்கதையாடல் வடிவத்தை கைக்கொள்ள முயல்கின்றன. வெவ்வேறு மெய்யியல் தரப்புகளின் மோதலை உருவாக்குகிறார். அரவிந்தின் 'சீர்மை' சிறிய அளவில் என்றாலும் தத்துவ மோதல்களை வரலாற்று ஆளுமையின் பின்புலத்தில் நகர்த்துகிறது. மாற்று வரலாறு எழுத்துக்கள் நாட்டாரியல் மற்றும் தொன்மங்களை மீளுருவாக்கம் செய்தன. ஜெயமோகனின் ‘கொற்றவை’ மற்றும் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ‘வெண் முரசு’ தொடர் நாவல்கள் இவ்வகையை சேர்ந்தவை. பல தொகுதிகள், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் நீளும் ஒரு அரிய முயற்சி. நவீன கால அறிதல்களை கொண்டு பாரதத்தை மீளுருவாக்கம் செய்கிறார். ஃபிராய்டு, யுங், கிராம்ஷி என பலருடைய அறிதல்கள் பாரத கதையாடலோடு இணைகிறது. முருகவேளின் ‘மிளிர் கல்’ கண்ணகியை நவீன தளத்தில் மீளுருவாக்கம் செய்ய முயல்கிறது. கோணங்கியின் நாவல்களையும் இவ்வரிசையிலேயே ஒருவர் வைக்கக்கூடும். பூமணியின் ‘கொம்மை’ மகாபாரதத்தை நாட்டாரியல் தளத்தில் மறு உருவாக்கம் செய்கிறது. எஸ். ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் பின் நவீனத்துவ பாணியில் பாரதத்தை சொல்கிறது. நெடுங்குருதி யாமம் இடக்கை சஞ்சாரம் என அவருடைய நாவல்கள் முக்கியமானவை. வரலாற்று இடைவெளிகளை பேசுபவை.
வரலாறை திருகுதல் ஒரு வகையில் மாற்று அல்லது இணை வரலாறை உருவாக்கும் முயற்சி மற்றொரு வகையில் வரலாற்றை நிராகரித்தல். பா வெங்கடேசனின் நாவல்களை முந்தைய பகுப்பிலும் யுவன் சந்திரசேகரின் நாவல்களை பிந்தைய பகுப்பிலும் வைக்கலாம். வரலாறை திருகி அதன் அபத்தத்தை சுட்டி அதை நிராகரிக்கும் ஆக்கம் தேவிபாரதியின் நட்ராஜ் மகராஜ். இரா. முருகனின் 'அரசூர் வம்ச' தொடர் நாவல்கள் அடிப்படையில் ஒரு வம்சகதைதான். ஆனால் அதன் சொல்முறை காரணமாக வரலாறை திருகி அதை குறியீடுகளாக ஆக்கிக் கொள்கிறது. சாருவின் ஜீரோ டிகிரி சிதறல் வடிவத்தின் முன்னோடி முயற்சி. அவருடைய ராசலீலா எக்சைல் ஆகிய நாவல்கள் இந்த ஆண்டுகளில் வெளியாயின.
தேவி பாரதியின் 'நிழலின் தனிமை' தனிமனிதனை மையமாக கொண்ட நாவல். ஆனால் அந்த நாவல் கொண்டாடப்பட்டது. அது எழுப்பிய ஆழ்ந்த கேள்விகள் மற்றும் இறுதியில் சென்றடையும் வெறுமை அதை முக்கிய நாவலாக்கியது. லக்ஷ்மி சரவணகுமாரின் 'உப்பு நாய்கள்' வரலாறு தனிமனிதன் இடையீட்டில் நிகழும் நாவல். ஒரு வகையில் சுரேஷ் பிரதீப்பின் 'ஒளிர் நிழல் குணா எனும் ஒரு தனி மனிதனின் கதைதான் ஆனால் குறிப்பிட்ட வரலாற்று தருணத்துக்கு எதிர்வினையாற்றுவது. சுனில் கிருஷ்ணனின் ' நீலகண்டமும்' வரலாற்று காலத்திற்கான தனி மனிதனின் எதிர்வினை என்றே வகைப்படுத்த முடியும். இவை வரலாற்று நிகழ்வு என இல்லாமல் வரலாற்று போக்கின் மீதான எதிர்வினை என சொல்லலாம்.
நாவல்களில் எப்போதும் பேருரு கொள்வது காலம் தான். யதார்த்தவாத செவ்வியல் நாவல்கள் எதை எடுத்துக்கொண்டாலும் ஒருவகையில் நாம் மீண்டும் மீண்டும் சென்று மோதுவது காலத்தின் பேருரு தோற்றத்தில் தான். அது தால்ஸ்தாயின் போரும் வாழ்வுமாக இருந்தாலும் சரி பைரப்பாவின் குடும்பம் சிதைகிறது என்றாலும் சரி. தமிழ் நாவல்களின் கூறுமுறை பேசு பொருள் என்னவாக இருந்தாலும் அவை இந்த இலக்கை நெருங்குவதை பொருத்தே அதை மதிப்பிடுவது வழக்கமாகிவிட்டது.
ஒட்டுமொத்தமாக தமிழ் இலக்கியத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் நாவல்களில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்து வருவதை உணர முடிகிறது. வருங்காலத்திலும் தமிழ் நாவல்கள் தொடர்ந்து சரியான திசையில் புதிய சவால்களை கண்டடைந்தபடி முன்நகரும் எனும் நம்பிக்கை இருக்கிறது. தற்கால தமிழ் நாவலில் உள்ள கதாபாத்திரம் பண்பாட்டு தொடர்ச்சியோ வரலாற்று பிரக்ஞையோ அற்றவர் அல்ல. அவர்கள் சூழலின் காலத்தின் பிரதிநிதிகள். தற்கால தமிழ் நாவலின் சவால் என்பது தரவுகளை எந்த அளவில் புனைவாக்குவது என்பதே. கடந்த முப்பது ஆண்டுகளாக அது எதிர்கொண்டுவரும் சவால் என்பது அகத்துக்கும் புறத்துக்கும் இடையிலான சமநிலையை அடைய முற்படுவதுதான்.
No comments:
Post a Comment