மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து கொண்டே இருந்தது.
நான்காம் தடவையாக, "எலே ராமு" என்று அவர் குரல் பலமாகக் கேட்டபோது, "இப்பத்தான் வெளியே போனான்" என்று அவர் மனைவி உள்ளேயிருந்து பதிலளித்தாள்.
ராமு வெற்றிலை இடித்துத் தரும் நேரம் அது. இரண்டு மூன்று வருடமாக அவன்தான் வெற்றிலை இடித்துத் தருகிறான். அநேகமாக அதில் மாறுதல் ஏற்படவில்லை.
ஒருநாள் தூண்டில் முள் தன் உள்ளங்கையைக் கிழித்துக் காயப்படுத்தியதும் மாணிக்கம் ராமுவின் சின்னஞ்சிறிய கையைப் பிடித்து வெற்றிலை இடிக்கக் கற்றுக்கொடுத்தார். அவனோ அவர் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கையை அழுத்திப் பிடித்து வேகமாக வெற்றிலை இடித்தான். அப்படி இடிப்பது அவனுக்கு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மூன்றாம் நாள் உலக்கையைக் கையில் பிடிக்க முடியவில்லை. புதிதாக இரண்டு கொப்புளங்கள் கிளம்பிவிட்டன.
அவனிடம் தன் பெரிய கையை அகல விரித்துக் காட்டி மாணிக்கம் கெக்கெக்கெக்க வென்று சிரித்தார்.
"தெரியுமா. நாப்பத்திரெண்டாம் வயசிலேயிருந்து வேத்தலே இடிக்கிறேன். இன்னும் ஒரு கொப்புளம் வரலே ஆனா ஒனக்கு ரெண்டு நாளிலே நாலு கொப்பளம். இதுக்குத்தான் சொல்றதைக் கேக்கனுங்கறது..." ணு என்ற படி வெற்றிலை இடிப்பதில் உள்ள சூட்சுமங்களைத் தாழ்ந்த தொனியில் விவரித்தார். அவன் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் காதில் வாங்கிக் கொண்டான். ஆனால் ஒரு முறையும் அவர் சொல்வதை பின்பற்றுவதில்லை. அவனுக்கொரு தனிக்குணம்.; முறித்துக்கொண்டு போவது.
மாணிக்கம் தெற்குத் துறையில் தூண்டில் போட்டால் அவனோ கிழக்குத் துறைக்குத் தூண்டிலை எடுத்துக் கொண்டு செல்வான். தாத்தாவிடமிருந்து பிரிந்து வந்த அன்றே அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.
ஒரு பகல் பொழுது முழுவதும் சின்ன தூண்டிலைத் தாத்தா கூடவே போட்டு ஒரு மீனும் கிடைக்காமற்போகவே அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தாத்தாவை நோக்கித் திரும்பினான். அவர் பார்வை தக்கையின் மீது இருந்தது.
"அந்தப் பக்கமா போறேன், தாத்தா." என்று தன் அதிர்ஷ்டத்தை தேடிச் சென்றான். ஒற்றையடிப் பாதையிலேயே நடந்து ஆனைச்சரிவில் இறங்கி, புன்னை மரத்தடியில் நின்று தூண்டிலை வீசினான். சற்று நேரம் தக்கை அசையவில்லை. போட்டது போலவே கிடந்தது. பிறகு மினுக் மினுக்கென்று ஓர் அசைவு; சின்னஞ்சிறிய மீன்குஞ்சுகள் இரையை அரிக்கின்றன. தக்கை முன்னும் பின்னுமாக அசைந்தது.
அவன் தக்கையை ஆழ்ந்து நோக்கினான். திடீரென்று நீரில் ஓர் அசைவு. அலையலையாக நீர் வட்டமிட்டது. ஆனால் தக்கை அசைவற்றுக் கிடந்தது. அவன் தூண்டிலை மேலே இழுத்துப் பார்த்தான். வெறும் முள் மட்டும் வந்தது. இரையைச் சிறிய மீன்கள் நினிவாயால் அரித்துத் தின்றுவிட்டன.
தூண்டிலை எடுத்துக்கொண்டு கரைக்குச் சென்றான். பெரிய கொட்டாங்கச்சியிலிருந்து மண்ணைத் தள்ளி ஒரு மண்புழுவை எடுத்துக் கோத்து தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினான்.
இப்படி இடம் மாறும் பழக்கமெல்லாம் தாத்தாவிடம் கிடையாது. ஓரிடத்தில்தான் தூண்டில் போடுவார். மீன் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாகும் சரி; அவர் இடம் மாறாது. ஆனால் கையை நீட்டித் தூண்டிலைச் சற்றுத் தள்ளி நூலைக் கூட்டிக் குறைப்பார்; வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வராது. குளத்தங்கரைக்கு வந்தவுடனே பேச்சு நின்றுவிடும். அமைதியாகவும், கம்பீரமாகவும் நின்று தூண்டிலை வீசுவார்.
"ஒரு மீனும் பிடிக்காமல் போகமாட்டேன்" என்ற உறுதியுடன் தக்கையைப் பார்த்தான். தக்கை குதித்துத் திடீரென்று மேலே எழும்பியது. அவன் முழுக் கவனமும் தூண்டிலில் விழுந்தது. கையைத் தளர்த்தி நூலைத் தாராளமாக விட்டான். சர சரவென்று தக்கை கண்ணுக்குத் தெரியாமல் நீரில் அழுந்தியது. மேலும் மேலும் தண்ணீரில் இறங்கியது.மீன் வேக வேகமாக இரையை விழுங்குகிறது என்பதை உணர்ந்து கொண்டான். இம்மாதிரிச் சந்தர்பங்களில் தாத்தா எப்படி நடந்து கொள்வார் என்பது அவன் நினைவிற்கு வந்தது.
மீசையை ஒரு விரலால் தள்ளிவிட்டுக் கொள்வார். முகம் மலரும். நரையோடிய மீசை ஒரு பக்கமாக ஒதுங்க சிறு புன்சிரிப்பு ஒன்று வெளிப்படும். பதற்றமில்லாமலும் ஆர்பாட்டமின்றியும் நேராகத் தூண்டிலை இழுப்பார். மீன் துடிதுடித்து மேலே வரும் அநேக சந்தர்பங்களில் தலைக்கு மேலே வந்த மீன் ஆட்டத்தாலும் உலுப்பளாலும் தப்பித்துக்கொண்டு போவதுண்டு.
ஒருமுறை தாத்தா தூண்டிலைத் தலைக்கு மேலாக இழுக்கும் பொது, "கொஞ்சம் வெட்டி சொடுக்கி இழுங்க தாத்தா" என்று கத்தி விட்டன. அவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். உதட்டில் சிரிப்பு தெரிந்தது. அவன் பின்னுக்கு நகர்ந்து மறைந்தான். மாணிக்கம் தூண்டிலைத் தன் விருப்பப்படியே இழுத்தார். மேலே வந்த கொண்டாய் ஓர் உலுப்பு உலுப்பி துள்ளித் தண்ணீரில் போய் விழுந்தது.
அவன் தூண்டிலில் சிக்கிய மீன் தப்பித்துக் கொண்டாட முடியாது; சாதுரியமாகவும், கனமாகவும் இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து விடுவான். தன் தீர்மானப்படியும் விருப்பப்படியும் தூண்டிலை இழுக்கலாம். கட்டுப்படுத்த யாருமில்லை.
ராமு தண்ணீருக்குள்ளேயே தூண்டிலைச் சொடுக்கி வலது பக்கமாக இழுத்தான். ஒரு பெரிய மயிலை துடிதுடித்துக் கரைக்கு வந்தது.
தூண்டிலைக் கீழே போட்டுவிட்டு காய்ந்த சருகுகளின் மேல் விழுந்து குதிக்கும் மயிலையைப் பார்த்தான் ராமு. மனதிற்குள்ளே சந்தோசம்.
தன்னந்தனியாக ஒரு மயிலையைப் பிடித்துவிட்டான். தாத்தா தூண்டிலில் கூட எப்பொழுதாவது - ரொம்ப அபூர்வமாகத்தான் மயிலை அகப்படும். நெளிந்தோடும் மயிலையின் கழுத்தைப் பின்பக்கமாகப் பிடித்து மேலே தூக்கினான்.அதைப் பற்றி தாத்தா நிறையச் சொல்லியிருந்தார்.மீனிலே அது ஒரு தினுசு. வீச்சு வீச்சாக முள்ளும், மீசையும் உண்டு. முள் குத்தினால் கடுக்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்கும்போது முதன் முறையாக மயிலை அவனைக் கொட்டியது. வலி தாளாமல் துடிதுடித்துப் போனான். அதிலிருந்து மயிலை மீது அவனுக்குத் தனியாகக் கவனம்.அதே கவனத்தோடு மயிலையைப் பிடித்துத் தூண்டில் முள்ளைப் பிடுங்கினான்.
"நீதான் பிடிச்சியா?" என்று கேட்டுக் கொண்டு தாத்தா அருகில் வந்தார். தாத்தாவின் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. குனிந்தபடியே தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். "பெரிய தூண்டிக்காரனாயிட்டே நீ " மாணிக்கம் அவன் தலை மீது கை வைத்தார்.
ராமு சற்றே நகர்ந்தான். தாத்தா மீது திடீரென்று அவனுக்குக் கோபம் வந்தது. தன்னை அழிக்கப் பார்க்கிறார் என்ற பயமும் தோன்றியது. அவர் பிடியில் சிக்காமல் ஒதுக்கினான். அன்றையிலிருந்து அவன் தன்னிடமிருந்து பிரிந்து செல்வது மாதிரி மாணிக்கத்திற்குத் தோன்றியது.
அந்நினைவு வந்ததுமே அவர் எரிச்சலுற்றார். இருக்கையை விட்டு விரைவாக எழுந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எத்தனை வெற்றிலை போட்டு எவ்வளவு சுண்ணாம்பு வைத்து இடிப்பது என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. வெற்றிலைப் பெட்டியை ஒரு பக்கமாகத் தள்ளி வைத்துவிட்டுத் தெருவுக்கும் வீட்டுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
சற்றைக்கெல்லாம் ராமு அவசர அவசரமாக ஓடிவந்தான். மாணிக்கம் நிதானமாக அவனை ஏறிட்டுப் பார்த்தார். முற்றத்திற்கு ஓடிக் கையை அலம்பிக்கொண்டு வந்து வெற்றிலை இடிக்க ஆரம்பித்தான்.
இடித்த வெற்றிலையை வாங்கி வாயில் திணித்துக்கொண்டு, "செத்த முன்னே எங்கே போயிருந்தே?" என்று கேட்டார் மாணிக்கம்.
"அந்தப் பெரிய மீனு..."
கெக்கெக்கெவென்று பெரும் சிரிப்பு வெளிப்பட்டது. அவன் ஆச்சர்யத்தோடு தாத்தாவைப் பார்த்தான்.
"அதைப் பிடிக்கப் புறப்பட்டுட்டியோ?" அவர் குரல் திடீரென்று உயர்ந்தது.
"அதை உன்னாலேயும் பிடிக்க முடியாது; ஒங்கப்பனாலேயும் பிடிக்க முடியாது".
ராமு தற்பெருமை அடிக்கும் தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவன் கொடுத்த வெற்றிலையை வாங்கி அடக்கிக்கொண்டு, பெரிய தூண்டிலுடன் குளத்தை நோக்கிச் சென்றான். அந்தத் தூண்டிலை ஒரு மீனும் அருத்ததில்லை. அநேகமாக மீனால் அறுக்க முடியாத தூண்டில் அது.
ராமுவும் கூடச் சென்றான்.
கயிற்றுத் தூண்டிலை வீசிய சற்று நேரத்திற்கெல்லாம் தக்கை சர்ரென்று அழுந்தியது. கீழே சென்ற வாக்கில் மேலே வந்தது. எம்பிக் குதித்தது. ஆடியது.
ராமு கயிற்றைப் பிடித்து இழுத்தான். ஏதோ ஒன்று வெடுக்கென்று உள்ளுக்குள் இழுத்தது.பெரிய மீன் இரையைத் தின்ன ஆரம்பித்து விட்டது தெரிந்தது.அவன் விரைந்தோடிச் சென்று தாத்தாவை அழைத்துக்கொண்டு வந்தான்.
"அதுக்குள்ளே அம்புட்டுக்கிச்சா" என்று வந்த மாணிக்கம் புன்னை மரத்தில் கட்டியிருந்த கையிற்றை அவிழ்த்துப் பிடித்து தக்கையை நோட்டமிட்டார். பெரிய தக்கை பொய்க்கால் குதிரை மாதிரி ஆட்டம் போட்டது. இன்னும் மீன் இரையை விழுங்கவில்லை என்று அவருக்குத் தோன்றியது. கயிற்றைத் தளரவிட்டார். குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த தக்கை குறுக்காகக் கீழே அமுங்கியது. இரையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு போய் மீன் விழுங்குகிறது. கை விரைவாகக் கையிற்றை இழுத்துப் பிடித்தது. மீன் ஆத்திரத்தோடு உள்ளுக்குள் வெடுக் வெடுக்கென்று இழுத்தது. அனுமானம் சரி, தூண்டில் முள் தொண்டையிலே குத்திக் கொள்வதற்கு நூலைத் தளர விட்டு மீன் ஆர்பாட்டத்தைத் துவங்குவதற்கு முன்னே இழுத்துப் போடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார் மாணிக்கம்.
அவர் கண்கள் வசதியான இடத்தைத் தேடின. புன்ன மரச் சரிவில் நின்று கையிற்றை விர்விரென்று இழுத்தார். இரண்டு பாகம் தடையின்றி வந்த மீன் உள்ளுக்குல்லிருந்து வாலால் தண்ணீரைப் படாரென்று அடித்தது. மாணிக்கம் கயிற்றைத் தளரவிட்டு முழு பலத்தோடு இழுத்தார். மேலே வந்த மீன் திடீரென்று தாவிக் குதித்தது. தண்ணீரைக் கலக்கியது. கயிறு அறுந்துபோக மாணிக்கம் சறுக்கிக்கொண்டே குளத்தில் போய் விழுந்தார்.
ராமு ஓடிவந்து தாத்தாவைத் தூக்கினான். கணுக்காலுக்குக் கீழேயிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டான்.
"மீன் தப்பிச்சிடுச்சா தாத்தா. செத்தப் பொருத்திருந்தா புடுச்சிருக்கலாம் தாத்தா."
மாணிக்கம் முட்டியைத் தடவி விட்டுக்கொண்டே அவனைப் பார்த்தார். அவனுடைய கழுத்தைத் திருகி வீசியெறிய வேண்டும் போல ஓர் உணர்ச்சி ஏற்பட்டது.
"எதுக்காக இங்கேயே நிக்கறே?" என்று உறுமினார். அவர் குரல் திடீரென்று உயர்ந்தது. அவன் சற்று ஒதுங்கி தாத்தாவைக் கடைக் கண்ணால் பார்த்தான்.
மாணிக்கம் கரைக்கு வந்தார். அவர் மனம் முறிந்துவிட்டது. குலைத்த ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு இருட்டிய பின்னால் வீட்டிற்க்குச் சென்றார். ராமு சின்னத் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தான். ஆழ்ந்த நிம்மதியான மூச்சு வந்தது அவருக்கு.
பெரிய மாடத்திலிருந்து அரிக்கேன் விளக்கை எடுத்துச் சாம்பல் போட்டுப் பளபளக்கத் துலக்கித் துடைத்தார்.நிறைய மண்ணெண்ணையை ஊற்றினார். சாப்பிட்டுவிட்டு ஈட்டியும், விளக்குமாக குளத்தை நோக்கி நடந்தார் மாணிக்கம். தேய்பிறை நிலவு. நேரம் செல்லச் செல்ல நிலவு ஒளி கூடிக் கொண்டு வந்தது.
குளத்தில் ஒரு விரால் தன குஞ்சுகளை அழைத்துக்கொண்டு பவனி வந்தது. பெரிய விரால். அநேகமாக நான்கைந்து ரூபாய் பெறும். அதே மாதிரி இன்னொரு விரால் கீழே வரலாம். இன்னொரு சந்தர்ப்பமாக இருந்தால் மாணிக்கம் இரண்டிலொன்றை வேட்டையாடி இருப்பார். இப்பொழுது அவர் இலட்சியம் விரால் அல்ல. தண்ணீரை அலங்க மலங்க அடிக்கும் வாளை. ஆற்றிலிருந்து புதிதாகக் குளத்திற்கு வந்திருக்கும் வாளை. அதுதான் குறி. குளத்தில் ஏற்படும் ஒவ்வொரு சலசலப்பையும் உன்னிப்பாகக் கவனித்தபடி குளத்தைச் சுற்றி வந்தார். நாவற்ப்பழங்கள் விழும் சப்தத்தைத் தவிர வேறு வழியே திரும்பிச் சென்று விட்டதோ என்ற எண்ணமும் தோன்றியது. விளக்கைச் சற்றே பெரிதாக்கி எட்டிய வரையில் குளத்தை ஊடுருவி நோக்கினார். தெற்கு முனையைத் தாண்டும்போது வாளை கண்ணில் பட்டது. வேகமாக வாலைச் சுழற்றி ஒரு கொண்டைக் கூட்டத்தைச் சாடியது.
மாணிக்கம் நின்றார். அவர் பார்வை இறந்த கொண்டைகளை விழுங்கும் வாளை மீது தீர்க்கமாக விழுந்தது. சற்று நேரம் இங்கேயே வாளை இருக்கும். இப்பொழுதுதான் வேட்டையைத் துவக்கியிருக்கிறது. பசியாற வேட்டையை முடித்துக்கொண்டு புறப்படுவதற்கு நேரமாகலாம்.
அவர் வசதியான இடத்தைத் தேடித் பிடித்தார். விளக்கு பெரிதாகி வெளிச்சத்தை உமிழ்ந்தது. நிலவும் பளிச்சென்று இருந்தது. சரியான நேரம் வாளை இரையை அவசரமின்றி விழுங்கிக் கொண்டிருக்கிறது.இரண்டடி முன்னே சென்று ஈட்டியை மேலே உயர்த்தினார்.
நீரின் ஒரு சுழிப்பு. எங்கிருந்தோ ஒரு பெரிய கொண்டை குறுக்காக எழும்பிப் பாய்ந்தது. ஈட்டி அதன் செதில்களைப் பிய்த்துக்கொண்டு சென்றது. எல்லாம் ஒரு நிமிஷத்தில் வீணாகிவிட்டது. அவர் நினைத்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. குளத்தில் இறங்கி ஈட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு கரைக்கு வந்தார்.
மீன் கலவரமுற்று விட்டது. அதனுடைய ஆர்ப்பாட்டத்தையும் குதூகலம் நிறைந்த விளையாட்டையும் காணோம். மாணிக்கம் கால்கள் சோர்வுறக் கரையோரமாகச் சுற்றி வந்தார். மீன் குளத்தில் இருப்பதற்கான ஒரு தடயமும் கிடைக்கவில்லை. சலிப்பும், சோர்வும் மிகுந்தன. கோழி கூவும் நேரத்தில் விளக்கும் ஈட்டியுமாகத் தள்ளாடிக் கொண்டே வீட்டிற்க்குச் சென்றார் மாணிக்கம்.
அடுத்த நாள் வெகு நேரம் வரையில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பலவீனமுற்றுப் போனார். மனதில் ஏக்கமும், கவலையும் நிறைந்தது. மீனைப் பற்றி ஆத்திரம் நிறைந்த உணர்ச்சி திடீரென்று தோன்றியது. அந்தக் கணத்திலேயே எழுந்து உட்கார்ந்தார். "ஒண்ணு நான்; இல்லே அது... ரெண்டு பேருக்கும் இருக்க கணக்கைத் தீர்த்துக்கொள்ளனும்."
பரண் மீது ஏறி இரண்டாண்டுகளுக்கு முன்னே கட்டிப்போட்ட தூண்டிலை எடுத்துக்கொண்டு குளத்திற்குச் சென்றார்.
குளத்தங்கரையில் பெரிய மீன் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு ராமு உட்கார்ந்திருந்தான். மாணிக்கத்தின் முதல் பார்வை மீன் மீதும், அடுத்து ராமு மீதும் விழுந்தது.
தலையசைத்து அவனை அருகே அழைத்தார். அப்புறம் தனக்கே கேட்காத குரலில், "என்ன பண்ணிக்கிட்டிருக்கே" என்று வினவினார்.
அவன் மெளனமாக இருந்தான்.
"உன்னைத்தான் கேக்கறேன்". காதைப் பிடித்துத் தன்பக்கம் இழுத்தார். "எம்மா நேரமா தேடிக்கிட்டிருக்கா. நீ இங்கே வந்து குந்தியிருக்கே..." என்று தள்ளினார். கீழே விழுந்து எழுந்த ராமு தாத்தாவின் விகாரமான முகத்தைப் பார்த்துத் துணுக்குற்றான்.
அவன் அவர் பார்வையிலிருந்து மறைந்த பின்னால் குளத்தில் வாளை எழும்பிக் குதித்தது. தண்ணீர் நாளா பக்கமும் சிதறியது.
"எவ்வளவு பெரிய மீன்... ராஜா மாதிரி..." மாணிக்கம் மீசையை தள்ளிவிட்டுக் கொண்டு வடிகால் பக்கமாக நடந்தார்.
மீன் வடிகால் பக்கமாக சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. வெளியில் ஓடிப் போக இடம் தேடுகிறது. மாணிக்கம் அவசர அவசரமாகக் கலயத்திலிருந்து ஓர் உயிர்க் கொண்டையை எடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார். சரியாக வளர்ச்சியுற்ற இரை. முள்ளில் கொத்து விட்டால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாங்கும். மீன் இங்கேயே இருப்பதால் அநேகமாக இந்தக் கொண்டையிலே பிடித்துவிடலாம். கொண்டையைச் சாய்த்துப் பிடித்து, நான்கைந்து செதில்களை முள்ளாலேயே பெயர்த்துவிட்டு, நடு முதுகில் தூண்டி முள்ளைச் செருகி, தூண்டிலைத் தண்ணீரில் போட்டார். தக்கை குத்திட்டு அசைந்தது. இரை வாளையை எப்படியும் கவர்ந்திழுத்து விடும் என்ற எண்ணம் நேரம் செல்லச் செல்ல வலுவடைந்து கொண்டே வந்தது.
சப்தம் செய்யாமல் நீரில் இறங்கி தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினார். தக்கை வேகமாக அசைந்தாடிப் போய் அல்லி இலையில் சொருகிக் கொண்டது. ஒரு பக்கமாக இழுத்து விட்டார். மெல்ல மெல்ல தக்கையின் ஆர்பரிப்பு முழுவதும் அடங்கி ஒடுங்கியது. இரை இறந்து விட்டது. மாணிக்கம் மீண்டும் நீர்ல் இறங்கித் தூண்டிலை இழுத்து இரையைத் தண்ணீரில் சுழற்றிச் சுழற்றி அடித்தார். மீன் பஞ்சு பஞ்சாய்ச் சிதறி நாலாபக்கமும் பறந்தது.
வெறும் தூண்டிலைச் சுருட்டிக் கொண்டுவந்தது மரத்தடியில் உட்கார்ந்தார். இப்பொழுது ஒவ்வொன்றின் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. ராமுவை இழுத்து வந்து நான்கு அறைகள் கொடுத்துத் தண்ணீரில் மூச்சுத் திணற அமுக்க வேண்டும் போல தோன்றியது. அதே நினைப்போடும், ஆத்திரத்தோடும் இன்னொரு கொண்டையை எடுத்துச் செருகிக் குளத்தில் வீசினார்.
தூண்டில் விழுந்ததும் நீர் பெரிதாகச் சுழிந்தது. வாளை மீன் உல்லாசமாக விளையாடியது. மாணிக்கம் மீசையை ஒரு பக்கமாகத் தடவி விட்டுக்கொண்டு புளிய மரத்தில் நன்றாகச் சாய்ந்தார்.
வழக்கத்திற்கு மாறான சில பழக்கங்கள் அவரிடம் தோன்றின. தனக்குத் தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்.
"இவனை எமாத்திப்புட்டு எங்கேயும் போயிட முடியாது" என்று மீனுக்கு அறைகூவல் விட்டார். உல்லாசமான சீழ்கையொலி அவரிடமிருந்து பிறந்தது.
தக்கை அசைந்தது. பெரிய மீன் வந்துவிட்டது.
மாணிக்கம் எழுந்து நின்றார்.
மீன் வாலால் தண்ணீரை அடித்த்தது. மேலே வந்து வாயைத் திறந்து மூச்சுவிட்டது. வேகமாகக் கீழே அமுங்கியது. சரசரவென்று நீர்க்குமிழிகள் தோன்றின. மீன் கிழக்கே சென்றது.
தெற்குப் பக்கத்தில் பூவரசு மரத்திலிருந்து ஒரு மீன் குத்திக் குருவி நீரில் குதித்தெழுந்து பறந்தது. கொக்கு ஒன்று பறந்து அல்லி இலையில் அமர்ந்தது.
மாணிக்கம் தூண்டில் கயிற்றைச் சற்றே இழுத்துப் பிடித்தார். தக்கை மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தது. விறாலோ கொண்டையோ வராமல் இருந்தால் பெரிய மீனைப் பிடித்துவிடலாம்.
கரையேறி வடக்குப் பக்கமாக நடந்து இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார். சுருட்டு ஒன்றுக்கு இரண்டாய்ப் புகைத்தாயிற்று. ஆனால் குளத்தில் எவ்வித ஆரவாரமும் சுழிப்புமில்லை. நீர் அமைதியோடு இருந்தது.
கொக்கு ஒன்று மேலே எழும்பிப் பறந்து சென்றது.
மாணிக்கம் சோர்வோடு எழுந்து வீட்டிற்குச் சென்றார். ராமு கண்ணியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்தவுடன் "எலே எப்ப சொன்ன வேலை. இப்பத்தான் செய்யிறியா?" என்று உறுமினார்.
அவன் பதிலொன்றும் சொல்லவில்லை. மௌனமாகத் தலைகுனிந்தபடியே குதிரை மயிருக்கு எண்ணெய் தடவிச் சிக்கலைப் பிரித்துக் கொண்டிருந்தான்.
"எலே கேக்கறது காதிலே உளுவுதா" சின்ன திண்ணைக்குத் தாவி அவன் தலைமயிரைப் பற்றினார்.
அவன் தலை நிமிர்ந்தான். கண்களில் நீர் தளும்பியது. தாத்தாவின் முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்த வேண்டும் போல ஓர் ஆத்திர உணர்ச்சி தோன்றியது.
"நேத்தியிலேருந்து என்ன பண்ணினே?" தலையை அசைத்து மேலே தூக்கினார்.
"எதுக்கு அவனைப் போட்டு இப்படி ரெண்டு நாளாக் கொல்றீங்க" என்று கேட்டாள் அவன் மனைவி.
"பின்ன, தரித்திரத்தைத் தலையிலா தூக்கி வச்சிக்குவாங்க"
"இப்படி அடிச்சிக் கொல்ல நாதியில்லாமலா போயிட்டோம்?"
"எட்டுக்கட்டு சனமுண்டு உனக்கு?"
"மவ செத்த அன்னைக்கே தெரிஞ்சிச்சே"
"என்னடி சொன்னே திருடன் மவளே" என்று அவள் கன்னத்தில் அறைந்தார்.
"நல்லா கொல்லு. எங்க ரெண்டு பேரையும் தின்னுப்புட்டு நடுச்சந்தியிலே நில்லு." என்று ஒவ்வோர் அடிக்கும் சொல்லி அழுதாள்.
"வாயை மூடு."
அவள் குரல் உயர்ந்தது.
மாணிக்கம் இடுப்பில் போட்டிருந்த பெரிய பெல்டைக் கழற்றினார்.
"போ உள்ளே."
”என்னைக் கொல்லு. உன்னைத்தான் கட்டிக்குவேன்னு சாதி சனத்தையெல்லாம் வுட்டுட்டு வந்தேனே. அதுக்கு இந்தப் பச்சை மண்ணோடு என்னையுங் கொல்லு.”
"பெரிய ரம்பை இவ; நா இல்லாட்டா ஆயிரம் பேரு வந்திருப்பான்."
அவர் பெல்ட் மார்பிலும், கன்னத்திலும் பாய்ந்தது. அவள் துடித்துக் கீழே விழுந்து ஓலமிட்டாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ஒவ்வொருவராக ஓடிவர ஆரம்பித்தார்கள். மாணிக்கம் பெல்டை ராமு முகத்தில் வீசி எறிந்துவிட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தார். அவளோ ஒவ்வொரு பழைய கதையையும் விஸ்தாரமாகச் சொல்லி அழுது கொண்டிருந்தாள். அவள் சொன்னது அவர் மனதைத் தொட்டு இரங்க வைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாள் விட்ட சண்டையை மறுபடியும் துவங்கியதற்காக வருத்தமுற்றார்.
அவருடைய ஒரே மகள் கல்யாணமான இரண்டாம் வருடம் ராமுவை விட்டுவிட்டுக் காலமானதும் மனமொடிந்து போனார். அந்த மணமுறிவின் விளைவாகவே மனைவியோடு சண்டை போடுவதும் நின்றது. துக்கம் பெருகப் பெருகக் கோபம் நீற்றுச் சாம்பலாகியது. ஆனால் இன்றைக்குத் தான் ரொம்ப தூரம் சென்று விட்டதாக எண்ணினார். சண்டையை ஆரம்பித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.
மகளைப் பற்றிக் கவி புனைந்து அரற்றிக் கொண்டிருந்தாள் அவர் மனைவி. தான் உயிருக்கு உயிராக நேசித்த மகளின் நற்பண்புகள் விவரிக்கப் படுகையில் அவரால் தாள முடியவில்லை. மெல்ல எழுந்து நடக்கலானார். கால்கள் குளத்தை நோக்கிச் சென்றன.
குளம் அமைதியாக இருந்தது. தூண்டில் அருகில் சென்று பார்த்தார். தக்கை மட்டுமே குதி போட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய பழக்கத்திற்கு மாறாகத் தூண்டிலை எடுத்துக் கொண்டு போய் கிழக்கே வீசினார். அது ராமு இடம். அங்கதான் அவன் தூண்டில் போடுவான். அவன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்ப்பது மாதிரித் தூண்டிலை வீசிவிட்டுக் கரையேறினார்.
குளம் சலிப்பு தரும் விதத்தில் அமைதியாக இருந்தது. சீழ்க்கை அடித்துக்கொண்டு கொன்றை மரத்தடியில் அமர்ந்தார் மாணிக்கம். களைப்பும், சோர்வும் மிகுந்தன. சாப்பிட வேண்டும் போல தோன்றியது. 'உம்' என்று உறுமிக்கொண்டு மரத்தடியில் சற்றே சாய்ந்தார். சற்றைக்கெல்லாம் ஆழ்ந்த குறட்டையொலி கேட்டது.
கண் விழித்தபோது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. சந்திரவொளி குளத்தில் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. மாணிக்கம் வேகமாக சென்று தூண்டிலைப் பார்த்தார். குதித்தாடும் தக்கையைக் காணோம். கோரையைப் பிடித்துக் குளத்தில் இறங்கித் தூண்டிலை இழுத்தார்.கயிறு தடையின்றி லேசாக வந்தது. சிறு கயிறு. பாதிக் கயிற்றை மீன் அறுத்துக்கொண்டு போய்விட்டது. இப்படிச் சென்றது விராலா, வாளையா என்பது தெரியவில்லை. இரண்டும் இல்லாமல் ஆமையாகக் கூட இருக்கலாம். உறுதிப்படுத்திக் கூறும் தடயம் ஏதுமில்லை. எதுவானாலும் சரி, இன்னொரு தூண்டில் சென்று விட்டது. ஒருபொழுதும் நடக்காதவையெல்லாம் நடக்கின்றன.
சாப்பிட்டுவிட்டு இரண்டு உருண்டை நூலை எடுத்து ஒன்றோடொன்றைச் சேர்த்து முறுக்கேற்றினார். முறுக்கேற, ஏற நூல் தடித்தது. ஆனாலும் திருப்தி ஏற்படவில்லை. அந்த மீனைப் பிடிக்க அந்த நூல் கயிறு தாங்காது. கொஞ்சம் பலமாக இழுத்தால் தெறித்து அறுந்துவிடும் போலப்பட்டது.
"அப்பா கும்பகோணம் ஒருவாட்டி போய் வரணும்" என்று சொல்லிக்கொண்டே முள்ளைக் காட்டினார். கட்டியதும் கயிறு தாளுமா என்ற ஐயம் வந்தது. கடைசிப் பகுதியை இரு கைகளிலும் சுற்றிக்கொண்டு ஒரு வெட்டு வெட்டி இழுத்தார். கயிறு பட்டென்று தெறித்தது.
'சை' என்று எரிச்சலோடு விளக்கை ஊதி அணைத்துவிட்டுப் படுத்தார்.
முன்னிரவு. தூண்டிலை வீசியதும் வாளை மாட்டிக் கொள்கிறது. கயிற்றை பரபர என்று இழுக்கிறார். தடங்கலின்றி மீன் வந்து கொண்டிருந்தது. ஒரே ஆனந்தம். கரைக்கு வந்து மீன் தண்ணீருக்குள் தாவிக் குதிக்கிறது. மாணிக்கம் எம்பி மீன் மீது உட்கார்ந்து கொள்கிறார். கீழே கீழே என்று பாதாளத்திற்கு மீன் செல்கிறது. மூச்சு திணறுகிறது. தாள முடியவில்லை. 'ஹா' என்று அலறுகிறார். எல்லாம் கனவு என்றதும் மனதில் திருப்தி உண்டாகிறது. அப்புறம் படுக்க முடியவில்லை. தலையணையைச் சுவரில் சார்த்தி, அதில் சாய்ந்துகொண்டு சுருட்டி புகைத்தார்.
கோழிகள் கூவின.
"வாங்க, அந்த வாண்டு என்ன கொண்டாந்திருக்கான்னு வந்து பாருங்க" என்று அவரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொல்லைக்கு அழைத்துக்கொண்டு ஓடினாள் அவருடைய மனைவி.
கிணற்றடியில் சேரும் நீரும் சொட்டச் சொட்ட ராமு நின்று கொண்டிருந்தான். அவன் காலடியில் பெரிய வாளை தாடையை அசைத்துக் கொண்டிருந்தது.
"நம்ப வாண்டு எம்மாஞ் சமத்துப் பாத்திங்களா."
மாணிக்கத்தின் கைகள் அவன் தோள்மீது விழுந்தது. அப்புறம் கழுத்தில் உராய்ந்து காதிற்குச் சென்றது.
"ஆத்தா" என்று அலறிக்கொண்டு ஓடிப் பாட்டியின் பின்னே மறைந்தான்.
*********
அழியாச் சுடர்கள் வலைதளத்திலிருந்து......