என் செல்வராஜ்
சென்னை புத்தககண்காட்சியின் போது தி இந்து பத்திரிக்கை வெளியிட்ட புத்தக பரிந்துரைகளையும், விகடன்.காமில் வெளியான
புத்தக பரிந்துரைகளையும் தொகுத்து அளித்துள்ளேன். தீவிர வாசகர்களுக்கு இது புத்தகங்களை தேடி வாங்க உதவும்.
தமிழ் ஹிந்துவில் வெளிவந்த புத்தக பரிந்துரைகள்
கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்
1.கொம்மை (மறு குரலில் மகாபாரதம்),
பூமணி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ. 555
2.மௌனியின் இலக்கியாண்மை,
ஜமாலன், காலக்குறி பதிப்பகம், விலை ரூ.140
3.ராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள்),
ராகுல் சாங்கிருத்யாயன்,தமிழாக்கம்: ஏ.ஜி.எத்திராஜுலு,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை ரூ.1,100
4.செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன்,
சூரியன் பதிப்பகம், விலை ரூ.200
5. கடல் பயணங்கள், மருதன்,
கிழக்குப் பதிப்பகம், விலைரூ.130.
கவனிக்க வேண்டிய புத்தகங்கள்
1. கங்கை கொண்ட சோழபுரம் கல்வெட்டுக்கள்
இல. தியாகராஜன், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழுமம், விலை ரூ 550/
2. இதுவரை
கவிதைகள் சி மணி , க்ரியா விலை ரூ 250/
3. சோதிடமும் கடைசிப்பக்கம் கிழிபட்ட நாவலும் சமகால அரசியல் ( ஒரு கூர் நோக்கு)
4. மடவெளி
நாவல் - கவிப்பித்தன் - நூல்வனம், விலை ரூ 320/
5. நான் தேவதூதன் அல்ல , சிறிய ஊழியன்
உத்தமர் வாழ்க்கையில் உணர்வூட்டும் நிகழ்ச்சிகள், விஷ்னுபிரபாகர் தமிழில் எம் வி துளசிராம்
காந்தி இலக்கிய சங்கம் விலை ரூ 120/
கவனிக்க வேண்டிய புத்தகங்கள்
1. இந்திய பொருளாதாரம் கட்டுக்கதைகள்
ஜெ ஜெயரஞ்சன், மின்னம்பலம் பதிப்பகம் விலை ரூ 100/
2. பேட்டை
நாவல்- தமிழ்பிரபா, காலச்சுவடு பதிப்பகம் ரூ 390/
3. தோர்கல் - கடவுளரின் தேசம்
ஷான் வேன் ஹாம் , ஓவியங்கள் : ரோசின்ஸ்கி
தமிழில் எஸ் விஜயன் , முத்து காமிக்ஸ் விலை ரூ 300/
4. தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் ( பொது ஆண்டு 800-1500)
நொபொரு கராஷிமா எ.சுப்பராயலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விலை ரூ 70/
5. கதையின் கரு
ஜெயகாந்தன் , தொகுப்பு -ஜெயஸிம்ஹன், செல்லப்பா பதிப்பகம்,விலை ரூ 140/
கவனிக்க வேண்டிய புத்தகங்கள்
1. தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்
ஏ சண்முகானந்தன் , சா செயக்குமார், எதிர் வெளியீடு விலை ரூ 500/
2. உதிர்ந்த இலைகளின் பாடல் (சீனக்கவிதைகள்)
தமிழில் ப கல்பனா, பரிசல் விலை ரூ 150/
3. குஜராத் - திரைக்குப்பின்னால்
ஆர் பி ஸ்ரீகுமார், தமிழில் ச வீரமணி,தஞ்சை ரமேஷ்,
பாரதி புத்தகாலயம், விலை ரூ 190/
4. பிராமண போஜனமும் சட்டிச்சோறும் (இடைக்கால தமிழகத்தில் வைதீகமும் சாதி உருவாக்கமும்
ஆ சிவசுப்ரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விலை ரூ 75/
5. வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
நாவல் - தமிழ் மகன், உயிர்மை பதிப்பகம் ரூ 190/
கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்
1. போக்குவரத்துப் போராட்டத்தில் நீதித் துறை தலையீடு நியாயமா?
நீதியரசர் அரிபரந்தாமன்,ரூ. 5, பாரதி புத்தகாலயம்.
2. இந்தியாவின் இருண்ட காலம்
சசி தரூர், தமிழில் ஜே.கே.இராஜசேகரன், ரூ.350, கிழக்குப் பதிப்பகம்.
3. நூறு பௌணர்மிகளின் வெளிச்சம்
மனுஷ்ய புத்திரன், ரூ.800, உயிர்மை பதிப்பகம்.
4. இஸ்மத் சுக்தாய் கதைகள்
இஸ்மத் சுக்தாய், தமிழில்: ஜி.விஜயபத்மா, ரூ.400, எதிர் வெளியீடு.
5. மெரினா கூட்டுணர்வும் தமிழக அரசியலும்
வே.மீனாட்சி சுந்தரம், ரூ.150, புலம் வெளியீடு
கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்
1. கடவுள் என்னும் மாயை
தருமி, எதிர் வெளியீடு, விலை ரூ.350
2. உனது பேரரசும் எனது மக்களும்
கோர்கோ சாட்டர்ஜி, ஆழி பதிப்பகம், விலை: ரூ.100
3. அச்சப்படத் தேவையில்லை
சீனிவாசன் நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ.100
4. சமூகநீதி
க.நெடுஞ்செழியன், இரா.சக்குபாய், அகரம், ரூ.330
5. சுத்த அபத்தம்
டாக்டர் ஜி.ராமானுஜம், பாரதி புத்தகாலயம், விலை ரூ.80
கவனிக்க வேண்டிய 5 புத்தங்கள்
1. தை எழுச்சி - குடிமை சமூகமும் அதிகார அரசியலும்
தொகுப்பு - செ.சண்முகசுந்தரம் ,இரா தமிழ்க்கனல், யமுனா ராஜேந்திரன்
என் சி பி எச் ரூ 450/
2. தமிழ் சிறுகதைக்களஞ்சியம்
தமிழ்மகன் ,உயிர்மை பதிப்பகம் ரூ 240/
3. கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்
தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள், மாத்ரி பதிப்பகம் ரூ 140/
4. நான் சர்வாதிகாரியானால் : உத்தமர் காந்தி வாழ்க்கையில் உணர்வூட்டும் நிகழ்ச்சிகள்
விஷ்னுபிரபாகர், தமிழில் சி துரைராஜன்
காந்தி இலக்கிய சங்கமம் ரூ 120/
5. தெலுங்கு நாவல்கள், சிறுகதைகள்
ராசபாளெம் சந்திரசேகர ரெட்டி, தமிழில் ருத்ர துளசிதாஸ்
சாகித்ய அகாடமி ரூ 135/
கவனிக்க வேண்டிய 5 புத்தங்கள்
1.கடைசி முகலாயன்
ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857, வில்லியம் டேல்ரிம்பிள், தமிழில் - இரா.செந்தில், எதிர் வெளியீடு, விலை ரூ.750
2.மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்
கே.சங்கர நாராயணன், பாரதி புத்தகாலயம், விலை ரூ.80
3.ஐந்தாம் மலை
பவுலோ கோய்லா, தமிழில் - க.பூரணச்சந்திரன், அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை ரூ.100
4.வேதாந்தம் இனிது
எ.கொண்டல்ராஜ், சந்தியா பதிப்பகம், விலை ரூ.130
5.ஜே.கிருஷ்ணமூர்த்தி, (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாந்தா இராமேஷ்வர் ராவ், தமிழில் - அக்களூர் ரவி, சாகித்ய அகாதெமி வெளியீடு, விலை ரூ.50
கவனிக்க வைத்த புத்தகங்கள் 2017
சீர்மை | க. அரவிந்த் | தமிழினி பதிப்பகம்
இளம் எழுத்தாளரான க.அரவிந்த் நம்பிக்கைக்குரிய புதுவரவு. தமிழில் இதுவரை அறிவியல் எழுத்தாளர்களால் கூட அவ்வளவாக எழுதப்படாத சீர்மை (symmetry) எனும் கருப்பொருளை வாழ்க்கையோடும் இந்திய, உலக தத்துவங்களோடும் பொருத்திப் பார்க்கும் படைப்பு!
இருமுனை | தூயன் | யாவரும் பதிப்பகம்
தூயனும் இளம் எழுத்தாளர்தான். தமிழ்ப் புனைகதையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்ளச் செய்வர்களில் ஒருவர். விளிம்புநிலை வாழ்க்கை, புலம்பெயர்ந்து வரும் வட இந்தியர்களின் நிலை, அதீத மனநிலை, தொன்மம் என்று நல்லதொரு புனைவு சாகசம் இந்தச் சிறுகதை தொகுப்பு!
விதானத்துச் சித்திரம் | ரவிசுப்பிரமணியன் | போதி வனம்
மனித உணர்வுகளோடு புராதனமும் இசையும் சிற்பங்களும் தொன்மங்களும் இழைத்தெடுக்கப்பட்ட நுட்பமான கவிதைகள். ராகங்கள் தரும் உணர்வுகளைச் சொற்களில் கொண்டுவர முடிந்திருப்பது ரவிசுப்பிரமணியன் பெற்றிருக்கும் பேறு!
பனை மரமே! பனை மரமே! | ஆ.சிவசுப்பிரமணியன் | காலச்சுவடு பதிப்பகம்
தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்த பனை மரத்தைப் பற்றிய விரிவான சமூக, பண்பாட்டு ஆய்வு நூல் இது. இலக்கியம், வரலாறு, அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம், அரசியல், உணவு, பண்பாடு என்று பல்வேறு தளங்களில் பனை மரம் குறித்து ஆய்வு செய்திருக்கிறார் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்.
தாகங்கொண்ட மீனொன்று ரூமி | தமிழில்: என்.சத்தியமூர்த்தி | லாஸ்ட் ரிசார்ட் வெளியீடு
பாரசீகக் கவிஞரும் சூஃபி ஞானியுமான ரூமியின் கவிதைகளை ஆங்கிலம் வழி தமிழில் ‘கவிதை’களாகவே நல்ல மொழிபெயர்ப்பில் தந்திருக்கிறார் சத்தியமூர்த்தி. துல்லியமும் கவித்துவமும் ஒருங்கே அமையப்பெற்றதோடு அட்டகாசமான வடிவமைப்பிலும் வந்திருக்கும் நூல்!
நிச்சயமற்ற பெருமை: இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் | ஜீன் டிரீஸ், அமர்த்தியா சென் - தமிழில்: பொன்னுராஜ் | பாரதி புத்தகாலயம் வெளியீடு
உண்மையான வளர்ச்சி எது, இந்தியாவின் சிக்கல்களுக்கான சிடுக்குகள் எங்கே இருக்கின்றன என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவும் முக்கியமான நூல். பொன்னுராஜின் இயல்பான தமிழில். தமிழ்நாட்டின் பெருமைகளைத் தெரிந்துகொள்வதற்காகவேனும் இதைப் படிக்க வேண்டும்!
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் | ஆ.திருநீலகண்டன் |காலச்சுவடு பதிப்பகம்
நீடாமங்கலத்தில் 1937-ல் நடந்த தென்தஞ்சை மாவட்ட காங்கிரஸ் மாநாட்டின் விருந்தில் கலந்துகொண்ட தலித் மக்களுக்கு நேரிட்ட கொடுமையையும் அதற்கெதிரான திராவிட இயக்கத்தின் போராட்டத்தையும் வரலாற்றின் இடுக்குகளிலிருந்து கொண்டுவந்திருக்கிறார் ஆ. திருநீலகண்டன். முக்கியமான வரவு.
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? | பெரியார் ஈ.வெ.ரா. -பதிப்பாசிரியர்: பசு.கவுதமன் | என்.சி.பி.ஹெச். வெளியீடு
பல விஷயங்களைப் பற்றியும் பெரியார் கூறியவற்றை அவற்றின் பின்புலத்தை விடுத்து ஒற்றை வரி மேற்கோள்களாக எடுத்தாண்டு பெரியாரின் கருத்துகளைத் திரிக்க முயற்சிகள் நடைபெற்றுவரும் சூழலில் மிகவும் முக்கியத்துவம் உடையதாகிறது இந்தப் பெருந்தொகுப்பு. பல்லாண்டு உழைப்பு!
பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும் | டக்ளஸ் எம்.நைட் - தமிழில்: அரவிந்தன் |க்ரியா பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பரதக் கலைஞர்களுள் ஒருவரான பாலசரஸ்வதியின் இந்த வாழ்க்கை வரலாறு அவருடையதும் அவருடைய சாதனைகளுமுடைய தொகுப்பு மட்டுமல்ல; தமிழகமும், இந்தியாவும் நவீனமடைந்த கதை இதில் உள்ளது. அரவிந்தனின் உயிரோட்டமான மொழிபெயர்ப்பில்!
ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள் | ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் -தமிழில்: லியோ ஜோசப் | எதிர் வெளியீடு.
ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் எழுதி, 2015-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற, ‘தி ஆதிவாசி வில் நாட் டான்ஸ்’ சிறுகதைத் தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு. தேசிய அளவில் விவாதப்பொருளான தொகுப்பு இது!
K சவால்களை ஏற்கிறதா தமிழ் நாவல் உலகம்?
தமிழில் நாவல் இலக்கியம் தோன்றி 150 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். உலக நாவல் இலக்கியத்தில் பல்வேறு சாதனைகள் நடந்தேறியிருக்கின்றன. என்றாலும், தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமஸோவ் சகோதரர்கள்’, டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ ஆகியவைதான் நாவல் உலகில் இன்றளவும் உச்சமாக நிற்கின்றன. நவீன நாவல் காவியங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர்கள் முன் நாம் சிறு கல்போலக் கிடக்கிறோம்.
தமிழில் முன்னவர்களின் சாதனைகளை மெனக்கெடா மல் தனது கலை மனத்தால் ‘மோகமுள்’ நாவல் வழி முறியடித்தவர் தி.ஜானகிராமன். எதிர்பாராத துருவத்திலிருந்து ப.சிங்காரம் தனது ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் மூலம் பெருஞ்சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இந்தச் சாதனை யின் மரபை சுந்தர ராமசாமியும், ஜெயமோகனும் அடுத்தடுத்த காலகட்டங்களில் உருவாக்கியுள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளில் நிறைய இளைஞர்கள் நாவல்களைத் தந்துள்ளனர். ஆனால், இவர்களில் யாரும் அவர்களின் கண்முன் நிகழ்ந்திருக்கின்ற எளிய சாதனைகளைக் கூடத் தாண்ட முடியவில்லை. அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்கள்தான் இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். தேவிபாரதியின் ‘நிழலின் தனிமை’ சாதிய மேலாண்மையால் ஒடுக்கப்பட்ட இளைஞனின் உலகை ‘பரபரப்பு’ உத்தியை நிராகரித்துவிட்டு நிதானமாக முன்வைக்கிறது. அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘துருக்கித் தொப்பி’, நக்கீரனின் ‘காடோடி’, ஷோபா சக்தியின் ‘பாக்ஸ் - கதைப் புத்தகம்’, மீரான் மைதீனின் ‘அஜ்னபி’ கண்மணி குணசேகரனின் ‘வந்தாரங்குடி’, பா.வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ ஆகிய நாவல்கள் பொருட்படுத்தத்தக்கவை. அதிகம் பேசப்படாத உலகை இவர்கள் ஓரளவு சிறப்பாகவே தங்களது ஆக்கங்களில் கொடுத்தனர். நாவல் மரபில் மூத்தோர் உண்டாக்கிய காலடித்தடங்களை இவர்கள் நுகர்ந்துவந்ததாலே இந்த எளிய விளைச்சல்கள் கிட்டின. தமிழ் நாவலில் நிகழ்த்தியுள்ள எழுத்தாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும், கனவும் பற்றிய காரியங்களை அறியாமல் எழுதிவந்த இளம் எழுத்தாளர்களின் படைப்பு கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.
அதேசமயம், புதியவர்கள் என்று பார்க்கும்போது அரவிந்த் கருணாகரனின் ‘சீர்மை’யைச் சொல்லலாம். குறுநாவல் என்றாலும் முக்கியமானது. கென்வில்லர், தத்துவத்தின் மீது ஆர்வம் கொண்டவர். அவரது மனைவி புற்றுநோயால் துன்பப்படுகிறவர். கென்வில்லர் பல்வேறு தத்துவங்களின் பொதுத்தன்மையை ஒரு சாரமாக மாற்றிவிட முடியுமா என்ற தேடலில் இருப்பவர். காகிதத்தில் கொண்டு வர முடியாத ஒருமையை அவரது மனைவி தனது ஓவியத்தில் வரைந்துவிடுகிறார். இந்த இரு நிஜ மனிதர்களின் மன வோட்டங்களைத் தன் கற்பனையின் துணைகொண்டு உண்மையை நாடிச் செல்கிறது.
குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ எதிராளியின் ராணுவ முகாமை அழிக்க ஒற்றறியச் சென்று திரும்பும் இரு இளைஞர்களைப் பற்றிய கதை. பல்வேறு தடங்கல்கள், சவால்களைத் துச்சமெனக் கடக்கிற நிகழ்விலே அவர்களது காதல் நினைவுகள், தளபதிகள் பற்றிய செயல்பாடு கள் எல்லாம் உருண்டு வர திரும்புகின்றனர். அந்த கேம்ப் தகர்க்கப்படுகிறது. ஒற்றறியும் செயலில் அவர்களின் மன உலகம் சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது.
இந்திய ராணுவம் ஈழத்தில் இறங்கிய பின் ஈழத் தமிழர் எதிர்கொண்ட இன்னல்களைச் சொல்கிறது தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’. இன்றைய சமூக நடைமுறைகளில் எதிலும் ஒட்ட முடியாது திரியும் மனிதனின் அந்நியத்தன்மையைச் சொல்லும் குணா கந்தசாமியின் ‘உலகில் ஒருவன்’ வடசென்னையின் தனித்த வாழ்வைச் சொல்லும் கரன் கார்க்கியின் ‘கறுப்பர் நகரம்’, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டும் திட்டத்தில் நரிகளை வேட்டையாடி அழித்த ஆங்கிலேய வேடிக்கை மனிதர்களைச் சொல்லும் விநாயக முருகனின் ‘வலம்’ போன்றவற்றை நல்ல முயற்சிகளாகச் சொல்லலாம். இவற்றிலிருந்து தனித்துச் சொல்லப்பட வேண்டிய ஒரே நாவல், சயந்தனின் ‘ஆதிரை’. நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட படைப்பு. முப்பதாண்டுகால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ‘ஆதிரை’. இப்படி, இலக்கிய உணர்வுதான் நல்ல படைப்பை நம்மிடமிருந்து உருவாக்குமேயொழிய வெற்று ஆசைகளால் இது இயல்வதில்லை!
- சு. வேணுகோபால், எழுத்தாளர், ‘வெண்ணிலை’, ‘ஆட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,
சிந்திக்கவைக்கும் சித்திரக் கதைகள்
சித்திரக் கதைகள் பார்க்கவும் படிக்கவும் மட்டுமல்ல, சிந்தனைக்கும் ஏற்றவை. வரலாற்றையும் தத்துவங்களையும் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு சித்திரக் கதைகள் உதவுகின்றன. இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியில், வாங்க வேண்டிய சித்திரக்கதைப் புத்தகங்களாகப் பின்வருவனவற்றைச் சொல்லலாம்.
1. இயந்திரத் தலை மனிதர்கள் - முல்லை தங்கராசன் - முத்து காமிக்ஸ்
. தமிழ் காமிக்ஸ் உலகின் தலைமகன் முல்லை தங்கராசனின் கை வண்ணத்தில், மூத்த பத்திரிகையாளர் காமராஜின் மொழிபெயர்ப்பில், சௌந்தரபாண்டியன் உருவாக்கிய முத்து காமிக்ஸ் இதழின் மறுபதிப்பு இது. இரும்புக் கை மாயாவியின் சாகசங்கள் மறுபதிப்பு செய்யும்போது, கொஞ்சம் கிளாசிக் தன்மையை இழந்திருந்தாலும் பழைய வாசகர்களின் பாலைவனச் சொர்க்கம் அதுதான்.
2. ஜென் வெளிச்சம் - பூ சுன் ஜியாங் - கண்ணதாசன் பதிப்பகம்
அன்றாட வாழ்க்கையில் பயன்படும் பல ஜென் தத்துவங்களை, எளிமையாகப் புரியும்படி காமிக்ஸ் வடிவில், தெளிவான மொழிநடையில், சரியாக மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட புத்தகம் இது. தத்துவங்கள் என்றில்லாமல், கதையாகப் படித்தாலும், ஒரு அழகான சிறுகதைத் தொகுப்பாக இருக்கும். அனைத்துக் கதைகளுமே ஓரிரண்டு பக்கங்களில் இருப்பதால், வாசிக்க எளிமையாக இருக்கிறது.
3. அமெரிக்கப் பேரரசின் மக்கள் வரலாறு - பயணி பதிப்பகம்
அமெரிக்க அரசாங்கத்தின் இரட்டை வேடத்தையும், அரசாங்கத்துக்கான எதிர்ப்பு, எப்படி நாட்டுக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் கிளம்புகிறது என்பதைத் துல்லியமான அரசியல் பார்வையோடு சொன்ன கிராஃபிக் நாவல் இது. ‘வூண்டட் நீ’ சம்பவம் என்ற செவ்விந்தியப் பழங்குடியினரை அமெரிக்க ராணுவம் அழித்ததை விவரிக்கும் காட்சிகள் இதன் சிறப்பு. போருக்கு எதிரான ஒரு கிராபிஃக் நாவல்.
4. ஈரான் (குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்) 2 புத்தகங்கள் - விடியல் பதிப்பகம்
உலகப் புகழ்பெற்ற படைப்பாளி யான மர்ஜானே சத்ரபியின் கிராஃபிக் நாவல்களான இந்த இரண்டுமே திரைப்படங்களாகவும் வந்துள்ளன. மொழிபெயர்ப்பில் ஓரிரு இடர்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமான கலைப் படைப்பு என்ற பார்வையில், தமிழில் நீங்கா இடம்பிடிக்கும் புத்தகங்கள் இவை.
5. புலி வளர்த்த பிள்ளை - வாண்டுமாமா - கங்கை புத்தக நிலையம்
தமிழ் சிறுவர் இலக்கியத்தின் ‘சூப்பர் ஸ்டா’ரான வாண்டுமாமாவின் அமரத்துவம் வாய்ந்த படைப்பு இது. முதலிரண்டு பாகங்கள் சிறுவர் இலக்கியப் பாணியிலும் மூன்றாம் பாகம் ஓவியச் சக்ரவர்த்தி செல்லத்தின் அட்டகாசமான ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, ராஜா காலத்துக் கதையையும், தற்காலத்தையும் ஒரு மந்திரப் புள்ளியில் இணைக்கும் அற்புதமான படைப்பு இது.
6. கிமுவில் சோமு - சிம்புதேவன் - நர்மதா புத்தக நிலையம்
இம்சை அரசன் படத்தை இயக்குவதற்கு முன்பாக, சிம்புதேவன் ஒரு கைதேர்ந்த ஓவியராக, படைப்பாளி யாக இருந்தபோது உருவாக்கிய ஒரு காமிக்ஸ் தொடர் இது. அறிவியல், சாகசம், வேடிக்கை, விளையாட்டு என்று ஒரு அற்புதமான படைப்பாக அமைந்தது. கதை சொல்ல விரும்புபவர்களுக்கு ஏற்ற துணைவன்.
7. திரும்பி வரவில்லை - தமிழ்வாணன் - மணிமேகலைப் பிரசுரம்
ஒரிஜினலாக முதன்முதலில் வந்த காமிக்ஸ் கதையின் மூலம் எதுவும் கிடைக்காமல் போக, மறுபடியும் ஓவியர் ராமுவால் வரையப்பட்ட காமிக்ஸ் கதை இது. தமிழ்வாணனின் அட்டகாசமான கதை நகர்த்தலுக்கு மிகச்சிறந்த உதாரணமாக இதைச் சொல்லலாம். ஒரு குறுநாவலை அழகாக சித்திரங்களால் நிரப்பியிருக்கிறார் ஓவியர் ராமு.
8. சே வாழ்க்கை வரலாறு - படக்கதை வடிவில் - பயணி பதிப்பகம்
‘அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ்’ படைப்பாளிகளில் ஒருவரான ஸ்பெய்ன் ராட்ரீகஸின் கிராஃபிக் நாவல் இது. ஆஸ்துமாவால் அவதிப்படும் மருத்துவ மாணவராக இருந்து, உலகமே வியக்கும் ஒரு போராளி யாக மாறிய சே குவேராவின் அந்தப் பயணத்தை மிகவும் தீர்க்கமாகச் சொல்லும் படைப்பு இது.
9. மர்ம மாளிகையில் பலே பாலு - வாண்டுமாமா - திருவரசு புத்தக நிலையம்
தமிழ் சிறுவர் இலக்கியத்தின் மாமேதையான வாண்டுமாமாவின் அதியற்புத திரட்டு இது. அவரது ஆரம்ப காலப் படைப்பு (1957) முதல் அவரது படைப்புலகப் பயணத்தின் இறுதிக் கட்டம் வரையிலான 10 சிறந்த படைப்புகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் 7 படக்கதைகள் இருக்கின்றன. தமிழ் காமிக்ஸ் உலகின் ஓவியச் சக்ரவர்த்தி செல்லம் வரைந்த காமிக்ஸ் கதைகளும் இதில் உண்டு.
10. கன்ஃபூஷியஸின் கருத்துப் பெட்டகம் - கண்ணதாசன் பதிப்பகம்
கன்ஃபூஷியஸின் தத்துவங்களை எளிமையாக, மிகச்சிறப்பான படங்களுடன் இந்த காமிக்ஸை, அழகுத் தமிழில் வழங்கியிருக்கிறார் காந்தி கண்ணதாசன். தத்துவ போதனை கள் என்பதைக் கடந்து, ரசிக்கும் வகையிலான ஒரு தொகுப்பாகவும் இருப்பது பாமர ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர்,
திராவிட இயக்கத்தை அறிந்துகொள்ள என்னென்ன நூல்கள் படிக்கலாம்?
திராவிட இயக்கத் தலைவர்களில் பெரும்பாலானோர் எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்தார்கள். அவர்களைப் பட்டியலிட்டால் 300-க்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள். ஆகவே, திராவிட இயக்கத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முதற்கட்டமாகப் படிக்க வேண்டிய நூல்களை இங்கே பரிந்துரை செய்கிறேன்.
பெரியாரின் குடியரசுத் தொகுப்புகள் (42), அறிஞர் அண்ணாவின் தம்பிக்குக் கடிதங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்- 316), கலைஞரின் கடிதங்கள் (3,517), முரசொலி மாறனின் திராவிட இயக்க வரலாறு, க.திருநாவுக்கரசு எழுதிய நீதிக் கட்சி வரலாறு, திமுக வரலாறு ஆகியவை மிகவும் அடிப்படை நூல்கள்.
நம்பி ஆரூரானின் ஆங்கில நூலை நானும் பி.ஆர்.முத்துகிருஷ்ணனும் ‘திராவிட தேசியமும் தமிழ் மறுமலர்ச்சியும்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளோம். இருபதாம் நூற்றாண்டில் திராவிட தேசியம் எப்படி தமிழ் மலர்ச்சியை ஏற்படுத்தியது என்பதை விளக்கும் முக்கியமான நூல் இது. அடுத்ததாக, பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு’. 1965 ஆண்டு காலம் என்பது நான்காவது இந்தி எதிர்ப்புப் போராட்டம். அந்த உச்சகட்ட போராட்டத்தைப் பற்றி அவர் சிறப்பாக விளக்கியிருப்பார். பலரையும் பேட்டி எடுத்து நூலில் சேர்த்திருக்கிறார். அப்போது முதலமைச்சராக இருந்த பக்தவத்சலத்தின் பேட்டியையும் அந்த நூலில் இணைத்திருப்பார். அடுத்ததாக, ,பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் எழுதிய ‘திராவிட நாடு’ புத்தகம். திராவிட நாடு என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான் என்பதை நிறைய சான்றுகளுடன் நிறுவியிருப்பார்.
திராவிட இயக்கத்துக்கு இலக்கியம் இல்லை என்றெல்லாம் பலரும் சொல்லிவருகிறார்கள். ஆனால் 1940-களிலிருந்து நிறைய நாவல்கள், சிறுகதைகளை எல்லாம் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக, தில்லை மறைமுதல்வன், தில்லை வெள்ளாளன், ராம அரங்கண்ணல். பி.கே.சீனிவாசன், அண்ணா, கருணாநிதி, கே.ஜே.ராதாமணாளன் போன்றோரின் சிறுகதைகள் ப.புகழேந்தியால் தொகுக்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் படைப்புகள் மிக முக்கியமானவை. அவருடைய படைப்புகள் அனைத்தும் திராவிட இயக்க சிந்தனைகளை கவிதை வடிவில் தரக்கூடியவை. அதே போல் சுரதா, முடியரசன், வாணிதாசன், பொன்னி வளவன், த.மி.பழனியப்பன் என்று பாரதிதாசன் பரம்பரை என்று சொல்லக்கூடிய 42 கவிஞர்களுடைய படைப்புகள் இருக்கின்றன. புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ திராவிட இயக்கத்தின் இலக்கிய உணர்ச்சியின் வெளிப்பாடு, காவியப் படைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.
முரசொலி மாறனின் ‘ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’என்ற நூல் முக்கியமானது. அதேபோல் மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ என்கிற நூலில் மாநில சுயாட்சி என்றால் என்ன, அதன் தேவை என்ன, அதிகாரம் மத்தியில் குவிக்கப்படுவதன் நோக்கம் என்ன, மாநில சுயாட்சி இருந்தால் என்னென்ன அதிகாரங்களை நாம் வைத்துக்கொள்ள முடியும் என்பதையெல்லாம் விளக்குகிறது. மாநில சுயாட்சி பற்றி வழக்கறிஞர் கு.ச.ஆனந்தன் எழுதி சமீபத்தில் இரண்டாம் பதிப்பு கண்டிருக்கும் நூல், அரசியல் சட்டத்தை ஆய்வுபூர்வமாக அலசுகிறது. 1950-களில் பேராசிரியர் க.அன்பழகன் எழுதிய ‘வகுப்புரிமைப் போராட்டம்’ என்ற நூல் தற்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது. க.நெடுஞ்செழியன், சக்குபாய் எழுதிய ‘சமூக நீதி’ நூலில் இட ஒதுக்கீட்டின் வரலாறு விளக்கப்பட்டிருக்கிறது.
பொருளாதாரம் தொடர்பாகப் படிக்க விரும்புபவர்கள் அறிஞர் அண்ணாவின் ‘பணத்தோட்டம்’ படிக்கலாம். 1940-களில் இருந்த நிலைமைகளை எடுத்துச் சொல்லும் நூல் அது. இன எழுச்சி தொடர்பாக அண்ணா எழுதிய கட்டுரை, ‘ஆரியமாயை’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. அடுத்து, கருணாநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ நூலைப் படிக்க வேண்டும். ஆறு தொகுதிகளாக இது வந்துள்ளது. ஏ.எஸ்.வேணு எழுதிய ‘பெரியார் ஒரு சகாப்தம்’, பெரியாரைப் பற்றி, சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி, திராவிட இயக்கத்தைப் பற்றி கீ.வீரமணி எழுதிய ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ போன்றவை அவசியம் படிக்க வேண்டியவை. எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா இணைந்து எழுதிய ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ புத்தகம் பெரியாருடைய பொதுவாழ்க்கைப் பங்களிப்பை விளக்குகிறது.
20-ம் நூற்றாண்டின் வரலாறு, காங்கிரஸ், நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம் அந்தக் காலத்துத் தலைவர்களைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள கோவை அய்யாமுத்து எழுதிய ‘நினைவுகள்’ என்ற நாவலைப் போன்ற புத்தகத்தைப் படிக்கலாம். நெ.து.சுந்தரவடிவேலுவின் எழுதிய ‘நினைவலைகள்’, திமுகவைப் பற்றி ராம அரங்கண்ணல் எழுதிய ‘நினைவுகள்’ ஆகிய நூல்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை. அமைச்சராக இருந்த க.ராஜாராம் எழுதிய ‘ஒரு சாமானியனின் கதை’ நூலில் நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திமுக பற்றிச் சொல்லியிருப்பார்.
குத்தூசி கட்டுரைகள் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டியவை. குத்தூசி குருசாமியின் வாழ்க்கை வரலாறை குருவிக்கரம்பை வேலு எழுதியிருக்கிறார். திராவிடர் கழகத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் துல்லியமாக அவர் எழுதியிருப்பார். பி.எஸ். இளங்கோவின் ‘பிட்டி தியாகராயர் முதல் கலைஞர்வரை’, டி.எம். பார்த்தசாரதியின் ‘திமுக வரலாறு’, கே.ஜி.ராதாமணாளனின் ’திராவிட இயக்க வரலாறு’ போன்ற புத்தகங்களும் முக்கியமானவை.
இந்தப் புத்தகங்களையெல்லாம் படித்தால் திராவிட இயக்கத்தைப் பற்றி அடிப்படையான புரிதலும் உணர்வும் கிடைக்கும்.
- க.திருநாவுக்கரசு,
திராவிட இயக்க வரலாற்றாசிரியர்.
பார்வையை விரிவாக்கும் மொழிபெயர்ப்புகள்!
மொழிபெயர்ப்புகளை மட்டும் தேடித்தேடி வாசிக்கும் வாசகர்கள் எல்லா தலைமுறைகளிலும் இருந்துவருகிறார்கள். சொந்த மொழியின் படைப்பெல்லைகளை அயல்மொழி இலக்கியங்களால் விரிவுப்படுத்திக்கொள்ளும் முயற்சிதான் அது. எனக்கும் அந்த மோகம் எனது கல்லூரி தினங்களில் பீடித்திருந்தது. ரஷ்ய மொழி இலக்கியங்களை ராதுகா பதிப்பகம் மூலம் கண்டடைந்தேன்.
ரஷ்ய மொழி இலக்கியங்களில் தமிழுக்குக் கிடைத்த அற்புதமான படைப்புகள் என விளாதீமிர் கொரலேன்காவின் ‘கண் தெரியாத இசைஞன்’, லியோ டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ இரண்டையும் சொல்வேன். இவ்விரு நூல்களையும் மொழிபெயர்த்த ரா. கிருஷ்ணையாவின் எழுத்துத் திறன் மீது அந்த வயதில் எனக்கு உண்டான கவர்ச்சிதான் மொழிபெயர்ப்புத் துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
‘கண் தெரியாத இசைஞன்’ ஒரு மிகச் சிறிய நாவல். பிறவியிலேயே பார்வையில்லாத பியோத்தரின் அகவுலகத்தில் இசை உண்டாக்கும் மாற்றம் அவனைப் பெரும் இசைக்கலைஞனாக உருவாக்குகிறது. யதேச்சையாக சூரியனை அண்ணாந்து பார்க்கும்போது அந்தக் குருட்டுக் கண்களுக்குள் நிகழும் சலனங்கள், தோழியுடன் ஏற்படும் கோபம் என்று மறக்க முடியாத மகத்தான படைப்பு அந்நாவல். இன்று வரை நான் வாசித்த நாவல்களில் முதலிடத்தை வகித்திருப்பது ‘புத்துயிர்ப்பு’. காந்திக்கும் பிடித்தமான நாவல் இது. இளவரசன் நெஹ்லூதவ் மூலமாக டால்ஸ்டாய் தனது வாழ்வின் ஆன்மீகத் தேடலை விரிவாக நிகழ்த்திச் சொல்கிறார். இந்நாவலை விஞ்சக்கூடிய கலைப்படைப்பு எந்நாளும் சாத்தியமில்லை என்பேன்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரெஞ்சு மொழியில் அந்த்வான் து செந்த் எக்சுபெரியால் எழுதப்பட்ட ‘குட்டி இளவரசன்’ இன்றளவும் உலகின் மகத்தான நாவல்களில் ஒன்று. க்ரியா பதிப்பக வெளியீடாக வெ.ஸ்ரீராம், ச. மதனகல்யாணி ஆகியோரின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. குட்டி இளவரசன் ஒவ்வொரு கிரகமாகச் செல்கிறான். அங்கே பூ, பாம்பு, நரி போன்றவற்றோடு உரையாடுவதுதான் நாவல். குழந்தைகளுக்கான புத்தகத்தைப் போலிருந்தாலும் ‘அற்புத உலகில் ஆலி’ஸைப் போலவே ஆழமான தத்துவங்களையும், வாழ்வின் புதிர்த்தன்மையையும் சொல்லும் நாவலாக இருக்கிறது.
ஃபிரான்ஸ் காஃப்காவின் ‘உருமாற்றம்’ என்ற குறுநாவலைப் பற்றி புதுமைப்பித்தனே கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார். கிரிகோர் சாம்சா என்று விற்பனைப் பிரதிநிதி கடுமையான மன அழுத்தத்தில் வாழ்கிறான். அவனைச் சுற்றிலும் சுயநலக்காரர்கள். திடீரென ஒருநாள் தூங்கியெழும்போது அவன் ஒரு மிகப்பெரிய அசிங்கமான பூச்சியாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறான். இந்நாவலின் தொடர்ச்சியாக முரகாமி ஒரு சிறுகதை எழுதியுள்ளார். ருஷ்டியின் நாவல் ஒன்றில் இப்பாத்திரம் இடம்பெறுகிறது. காஃப்காவைப் படிப்பதும், தூக்கத்தில் துர்சொப்பனத்தில் ஓர் உலகத்தைக் காண்பதும் ஒன்றுதான் என்று க.நா.சு எழுதுகிறார். தமிழில் மிக அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நூல்களில் இந்நாவலும் ஒன்று. இம்மொழிபெயர்ப்பை பலமுறை செப்பனிட்டு வழங்கியிருக்கிறார் ஆர்.சிவக்குமார் (தமிழினி பதிப்பகம்).
சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட துருக்கிய நாவலான ‘அஸிஸ் பே சம்பவம்’ (அய்ஃபர் டுன்ஷ்) கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தக்கது. இசைக்கலைஞன் ஒருவனின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி என வெவ்வேறு தளங்களில் விரியும் நுட்பமான கதையாடல்; தேர்ந்தெடுத்த சொற்கள், நேர்த்தியான வாக்கிய அமைப்புகளால் ஆன நூல் இது.
என் வாசிப்பில் முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்கள் எனப் பட்டியலிட்டால் அது நீளமாகச் செல்லும் . குறிப்பிட்டு சொல்வதென்றால் வெ.ஸ்ரீராம் பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துள்ள ஆல்பெர் காம்யுவின் ’முதல் மனிதன்’, ‘அந்நியன்’, பியரெத் ஃப்லுசியோவின் ‘சின்ன சின்ன வாக்கியங்கள்’, எக்சுபெரியின் ‘காற்று, மணல், நட்சத்திரங்கள்’ ஆகிய நூல்களையும் கீழ்வரும் சில புத்தகங்களையும் சொல்லலாம். போர்ச்சுகீஸ் எழுத்தாளர் ஹொஸே ஸரமாகோ எழுதிய ‘அறியப்படாத தீவின் கதை’ ஆனந்தால் தமிழில் அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
உலகில் மிக அதிகமாக விற்பனையான ‘ சோஃபியின் உலகம்’ இளம் வாசகர்களுக்கான நாவல். யொஸ்டைன் கார்டெர் எழுதிய இந்நாவல், உலகின் பல்வேறு சிந்தனை மரபுகளை ஓர் இளம்பெண்ணுக்கு சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்வதுபோல் அமைந்தது. ஆர்.சிவக்குமாரின் மொழிபெயர்ப்பு (காலச்சுவடு). இது கடந்த நாற்பதாண்டுகளாக எல்லா நாடுகளிலும் மிகவிருப்பத்துடன் வாசிக்கப் படுகிற நாவல் காப்ரியேல் மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’. தமிழில் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியிட்ட நாவல்.
இந்திய மொழி நாவல்களில் குர் அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி’, அதீன் பந்தியோபாத்யாயவின் ‘நீலகண்ட பறவையைத் தேடி’, விபூதிபூஷணின் ‘பதேர் பாஞ்சாலி’, ஓ.வி விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ ஆகியவை தமிழில் வந்திருக்கும் நல்ல மொழிபெயர்ப்புகளில் சில.
-ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்,
ஆய்வுகளின் வழியே ஒரு வரலாற்றுப் பயணம்
தமிழ்ச் சமூக வரலாறு உருவாக்கத்துக்கும் பண்பாடு குறித்த அக்கறைக்கும் அடிப்படை வகுப்பவை நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த படைப்புகள். சமீபத்தில் வெளியான சில புத்தகங்கள், இவ்வகையில் கவனத்துக்குரியவை.
நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் ஆய்வுப்புலங்களின் முன்னோடி ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியிருக்கும் ‘பனை மரமே! பனை மரமே! - பனையும் தமிழ்ச் சமூகமும்’ (காலச்சுவடு பதிப்பகம்). புழங்கு பொருட்கள் பற்றிய பண்பாட்டு ஆய்வு இந்நூல். பனைக்கு நூற்றுக்கும் அதிகமான பெயர்கள்; வாய்மொழி வழக்காறுகளுடன் செவ்வியல் இலக்கிய, இலக்கணங்கள், கல்வெட்டுகள் என்று பல்துறைக் கூட்டாய்வாக இந்நூல் மலர்ந்துள்ளது. சிந்துச் சமவெளி குறித்த புதிய வெளிச்சம் தரும் அரிய நூல், ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ (பாரதி புத்தகாலயம்). மொழியியலையும், நிலவியலையும் இணைத்துப் பார்க்கிறது இவரது முறையியல். திராவிட இடப்பெயர்கள் - சங்க இலக்கியங்களில் காணலாகும் கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகியன சிந்துவெளியில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளதை உரிய தரவுகளின் வழி மெய்ப்பிக்கிறார்.
தமிழ் நாட்டுப்புறவியலின் பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கிய நூல் ஆறு. இராமநாதன் எழுதிய ‘தமிழர் கலை இலக்கிய மரபுகள் -நாட்டுப்புறவியல் ஆய்வு’ (மெய்யப்பன் பதிப்பகம்). நாட்டுப்புறவியல் அறிமுகம் தொடங்கி நாட்டுப்புறவியல் ஆய்வுகள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள், கதைப் பாடல்கள், கள ஆய்வு, கோட்பாடுகள், கோட்பாட்டாய்வுகள் ஆகியன பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 1937-ல் நீடாமங்கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நடந்த சமபந்திபோஜனத்தில் பங்கேற்றதற்காக 20 தலித்துகள் தாக்கப்பட்டனர். பெரியாரும் அவரின் சுயமரியாதை இயக்கமும் இக்கொடுமைக்கு எதிராகப் போராடினர். இது குறித்த கள ஆய்வு, ஆவணங்கள், பத்திரிகைச் செய்திகள் வழி ஆ.திருநீலகண்டன் எழுதியிருக்கும் நூல் ‘நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்’ (காலச்சுவடு பதிப்பகம்). நீடாமங்கலம் நிகழ்வு, தமிழ்ச் சமூக சாதித் தழும்பாக வரலாற்றில் பதிவானதன் சான்று இந்நூல். தமிழில் கலை வரலாறு குறித்த ஆக்கங்களின் தொகுப்பு, சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘கல் மேல் நடந்த காலம்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்). சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் வழியே பண்பாட்டு எழுதியலாக இக்கட்டுரைகள் அமைகின்றன. ஆர்மாமலை குகை ஓவியங்கள், தமிழ் அரச பரம்பரையின் உருவச் சிற்பங்கள், இருக்குவேளிர் கலைப் பாரம்பரியம், தஞ்சை பெரிய கோயில் புத்த சிற்பம் போன்ற கட்டுரைகள் தமிழுக்குப் புதியவை.
சி.மீனாட்சி, வித்யா தெஹிஜியா, தர்மாகுமார், ரொமிலா தாப்பர், குமாரி ஜெயவர்த்தனெ ஆகிய ஐந்து வரலாற்று அறிஞர்களை அறிமுகப்படுத்துவதுடன், அவர்களின் சிறந்த ஆய்வுகளில் ஒன்றையும் அறிமுகப்படுத்தும் நூல், தேன்மொழி தொகுத்திருக்கும் ‘வரலாற்றை எழுதும் பெண்கள்’ (மணற்கேணி பதிப்பகம்) வரலாற்றை வாசிப்பதிலும், உருவாக்குவதிலும் பெண்ணிலைப் பார்வையை விரிவாக்கிட இந்நூல் உந்துதல் தரும்.
சமகால சமூக நிகழ்வுகளை முன்வைத்து விவாதித்திக்கும் கட்டுரைகளின் தொகுப்பு, டி.தருமராஜ் எழுதிய ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ (கிழக்குப் பதிப்பகம்). நாட்டுப்புறவியல், மானுடவியல், சமூகவியல், பின்நவீனத்துவம் ஆகிய கோட்பாடுகளின் ஊடே விமர்சனங்களை முன்வைக்கிறது இந்நுல். “நான் ஏன் தலித் அல்ல என்ற பதிலைச் சுமந்தபடி தலித்தாகவே இருக்கும்படி நான் மீண்டும் மீண்டும் சபிக்கப்படுகிறேன்” என்கிறார் ஆசிரியர். பக்தவச்சல பாரதி, ஓ.முத்தையா தொகுத்திருக்கும் ‘பொதினி நாட்டுப்புறவியல் ஆய்வுகள்’, தமிழக நாட்டுப்புறவியல் அறிஞர் பெ.சுப்பிரமணியன் பணிப்பாராட்டு தொகை நூல் (காவ்யா பதிப்பகம்). வாய்மொழி வரலாறு, வாய்மொழி வழக்காறுகள், வழிபாடும் சடங்குகளும், கலைகளும் கலைஞர்களும், கோட்பாடுகளும் அணுகுமுறைகளும், வாய்மொழி மரபு அறிவு ஆகிய பகுப்புகளில் 41 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அரை நூற்றாண்டு தமிழ் நாட்டுப்புறவியலின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கட்டியம் கூறும் நூலாக அமைகின்றது.
தமிழின் தொல்லிலக்கியங்கள் குறித்த ஆய்வில் இலக்கிய மானிடவியல், இனவரைவியல் போன்ற அறிவுத் துறைகளைக் கருவிகளாக்கி ஆராயும் போக்கை அறிமுகப்படுத்துகிறது ஞா.ஸ்டீபன் எழுதியிருக்கும் ‘இலக்கிய இனவரைவியல்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்). இலக்கிய இனவரைவியல் என்பது இலக்கியத்தை மானிடவியல் அடிப்படையில் ஆய்வுசெய்யும் முறையியல் எனக் கூறுகிறார் நூலாசிரியர்.
கொங்கு வட்டாரத்தில் நாட்டுப்புறத் திருவிழாக்கள், குலதெய்வ விழாக்களில் இசைக்கப்பெறும் இசைக் கருவிகள் குறித்து விரிவாக ஆராய்கிறது பெ.சுப்பிரமணியன் எழுதிய ‘கொங்கு நாட்டுப்புற இசைக் கருவிகள்’ (ராம்குமார் பதிப்பகம்). உடுக்கை, பம்பை, உறுமி, திடும், நகார், தப்பு, பேரிகை முதலிய தோல்கருவிகள், நாதசுரம், சங்கு, சந்தக்குழல், கொம்பு, தாரை முதலான துளைக் கருவிகள் பற்றி இந்நூல் நுட்பமான தகவல்களைத் தருகிறது.
- இரா.காமராசு, எழுத்தாளர்,
உதவிப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
கவனத்தை ஈர்த்த கவிதைத் தொகுப்புகள்
ஒரு பண்பாட்டின் ஆரோக்கியத்தைக் கணிக்க உதவும் நாடித்துடிப்பு என்று அதன் மொழியில் எழுதப்படும் கவிதைகளைக் கூறலாம். தமிழின் கவிதை மொழிக்கு அவ்விதத்தில் ஆழமான தொன்மையும் அறுபடாததொரு தொடர்ச்சியும் உண்டு. இன்றும் உரைநடைப் புனைவுகளைக் காட்டிலும் அதிகமாகக் கவிதைகள் எழுதப்படுகிற மொழியாக தமிழ் இருப்பதைக் காண்கிறோம்.
சமீப காலத்தில் வெளியான கவிதை நூல்களில் தமக்கேயுரிய தனித்துவமான நோக்கு மற்றும் விவரணை மொழியோடு பலரின் கவனத்தையும் கருத்தை யும் ஒருங்கே ஈர்த்த தொகுப்புகளென்று சபரிநாதனின் ‘வால்’ (மணல் வீடு பதிப்பகம்), பெருந்தேவியின் ‘வாயாடிக் கவிதைகள்’ (சஹானா வெளியீடு), குணா கந்தசாமியின் ‘மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்’ (காலச்சுவடு பதிப்பகம்), ரவிசுப்ரமணியனின் ‘விதானத்துச் சித்திரம்’ (போதிவனம் வெளியீடு), கண்டராதித்தனின் ‘திருச்சாழல்’ (புது எழுத்து பதிப்பகம்), வெயிலின் ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃபிராய்டு’ (மணல் வீடு பதிப்பகம்), இசையின் ‘ஆட்டுதி அமுதே’(காலச்சுவடு பதிப்பகம்), போகன் சங்கரின் ‘தடித்த கண்ணாடி அணிந்த பூனை’ (உயிர்மை பதிப்பகம்) ஆகியவற்றைக் கூறலாம்.
இவற்றுக்கு அப்பால், நாளும் கூர்மையடைந்துவரும் சமூக முரண்களை, கலாச்சார நெருக்கடிகளை, அவற்றின் உள்ளார்ந்த அரசியலைப் பேசுபவையென்ற விதத்தில் மனுஷ்ய புத்திரனின் ‘இருளில் நகரும் யானை’ ( உயிர்மை பதிப்பகம்), பெருமாள் முருகனின் ‘கோழையின் பாடல்கள்’ ( காலச்சுவடு பதிப்பகம்), யவனிகா ஸ்ரீராமின் ‘அலெக்ஸாண்டரின் காலனி’ (மேகா பதிப்பகம்), நரனின் ‘லாகிரி’ (சால்ட் பதிப்பகம்), கரிகாலனின் ‘தாமரை மழை’ (நான்காவது கோணம்)ஆகிய தொகுதிகளைக் குறிப்பிட வேண்டும். தொடர்ந்து கவிதையில் இயங்கிவரும் முன்னோடிகளான வண்ணதாசனுக்கும் கலாப்ரியாவுக்கும் சென்ற வருடமும் ‘மூன்றாவது முள்’ (சந்தியா பதிப்பகம்), ‘தூண்டில் மிதவை யின் குற்ற உணர்ச்சி’ (டிஸ்கவரி பதிப்பகம்) ஆகிய தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மற்றொரு தொகுப்பு மகுடேசுவரனின் ‘புலிப்பறழ்’ (தமிழினி பதிப்பகம்) இம்மூன்றுமே அவற்றினுடைய மொழி ஆளுமைக்காகத் தனித்துக் கவனம் கொள்ளப்பட வேண்டியவை. இவைதவிர, சில கவிஞர்களின் முழுக் கவிதைகளும் மொத்தத் தொகுப்பாக வெளிவந்துள்ளன. தேவதச்சனின் ‘மர்ம நபர்’ (உயிர்மை பதிப்பகம்), எஸ். வைதீஸ்வரனின் ‘மனக்குருவி’ (அனாமிகா வெளியீடு), யுவனின் ‘தீராப்பகல்’ ( காலச்சுவடு பதிப்பகம்), ஆகியவை அவ்விதத்தில் முக்கியமானவை. ஒரு மொழிக்குள் முனைந்து புதிய போக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பவை மொழியாக்கங்கள். பிரம்மராஜனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘மிரோஸ்லாவ் ஹோலூப் கவிதைகள்’ (யாவரும் வெளியீடு), சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான ரூமியின் ‘தாகங்கொண்ட மீனொன்று’ தொகுப்பு (லாஸ்ட் ரிசார்ட்ஸ்) ஆகியன முக்கியமான மொழிபெயர்ப்புகள்.
இவையன்றி சுய அனுபவம், பார்வைக் கோணம், கூறு மொழி, வெளிப்பாட்டு உத்தி ஆகியவற்றில் தனக்கான தனி அடையாளத்தைக் கைக்கொள்ளும் முயற்சியாக எழுதிவருகிற புதியவர்களின் சில தொகுப்புகளும் கவனத்துக்கு உரியவை. பிரதாப ருத்ரனின் ‘கடலாடும் கல் ஓவியம்’, ‘சூரர்பதி கவிதைகள்’, ஜீவன் பென்னியின் ‘அளவில் சிறியவை அக்கருப்பு மீன்கள்’, நா. பெரியசாமியின் ‘குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்’, யாளியின் ‘கேவல் நதி’, சுவாதி முகிலின் ‘எலெட்க்ரா’ முதலியவற்றோடு பாயிஸா அலியின் ‘கடல் முற்றம்’ இமாம் அத்தனானின் ‘மொழியின் மீது சத்தியமாக’ என்ற இரு ஈழத் தமிழ்த் தொகுப்புகளையும் குறிப்பிடலாம்.
ஓலைச்சுவடியிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் காகிதத்துக்குள் நுழைந்த தமிழ்க் கவிதை இப்போதைய கணினி யுகத்தில் மின் பதிப்புகளாகவும் கிடைக்கிறது. பேயோனின் ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’, பாலா கருப்பசாமியின் ‘ஓரிரு வரிகளில் என்ன இருக்கிறது’ ஆகியவற்றோடு பிரமிளின் ‘மேல் நோக்கிய பயணம்’, ‘கைப்பிடியளவு கடல்’ ஆகியவையும் கிண்டில் பதிப்புகளாகக் கிடைக்கின்றன.
தமிழ் பேசுவோரின் நிலவெளி, கண்டங்கள் கடந்தும் விரிந்து கிடக்கிற சூழலில், காலத்தை ஒட்டிய அவர்தம் அனுபவங்களுக்கும் கணக்கில்லை. இவற்றையெல்லாம் மொழிக்குள் உணர்வாக, நினைவாக கொண்டுவந்து சேர்க்கப் புதிய சொற்களை வேண்டி நிற்கிறது இன்றைய கவிதை.
- க.மோகனரங்கன், கவிஞர், இலக்கிய விமர்சகர்
விகடன்.காம் இணைய தளத்தில் வெளியான புத்தக பரிந்துரைகள்
எழுத்தாளர் இமையம் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள் ( விகடன்.காம்)
“மனித மனங்களுக்கிடையே இருந்து எண்ணங்களைக் கொண்டுவந்து குவிக்கும் தேனீக்கள், புத்தகங்கள்"- ஜேம்ஸ் ரசல்.
வாசிப்பு குறித்தும் புத்தகங்களின் அவசியம் குறித்தும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் பேசியுள்ளனர். வாசிப்பின் வழியே தங்களின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை பலரும் பல தருணங்களில் நினைவுகூர்ந்துள்ளனர். பள்ளிகளில், கல்லூரிகளில் நாம் கற்கும் கல்விக்கு நிகராக நம்மைச் செம்மைப்படுத்தும் பணியை, புத்தகங்கள் மேற்கொள்கின்றன.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடப் புத்தகங்கள் மட்டுமன்றி பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களும் இலக்கிய நூல்களும் வைத்திருப்பதன் காரணம், வாசிப்பின் வாசலைத் திறப்பதற்காகவே. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூலகங்கள் அமைந்திருப்பதன் நோக்கமும் மக்களை வாசிப்பாளர்களாக உருவாக்கவே. பல்வேறு பதிப்பகங்கள் பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் பதிப்பித்து வெளிக்கொண்டு வந்துள்ளன. இணையவழிச் சமூகமாக இன்றைய தலைமுறை மாறிவிட்டபோதிலும் அச்சு ஊடகத்தின் மீதான நேசம் பலருக்கும் குறையவில்லை. இணையத்தில் படிப்பதற்கு நிகராக புத்தகம் வாங்கி படிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இமையம், தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். மனித வாழ்வின் அவலங்களை, நேர்மையான முகங்களை, எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வை தன் எழுத்துகளின் வழியே கடத்துவதில் கைதேர்ந்தவர். சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளை வார்த்தை வடிவமாக்குவதிலும், கற்பனைக் கதாபாத்திரங்களை கதை வழியே கொண்டுவருவதிலும் வாசகர்களின் வாஞ்சையான எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவரின் படைப்புகளை இளையோருக்கு மட்டுமல்லாமல் எழுத்தை வாசிக்கும் வல்லமையுடைய அத்துணை மனங்களிலும் ஆழப் பதித்திருக்கும் அற்புதப் படைப்பாளி. `கோவேறு கழுதைகள்', `செடல்', `பெத்தவன்' போன்ற முக்கியமான படைப்புகள், இவரின் எழுத்தாற்றல்களில் சில.
சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழின் முக்கியமான எழுத்தாளர் இமையத்திடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் குறித்தும் கேட்டோம்..!
“ஒருவன் ஏன் வாசிக்க வேண்டும்... அதன் தேவை என்ன?''
“இலக்கியத்தின் வழியாகத்தான் ஒருவர் சமூகத்தையும் மொழியையும் புரிந்துகொள்ள முடியும். விஞ்ஞானத்தைப் படிப்பதைவிட, மருத்துவத்தைப் படிப்பதைவிட முக்கியமானது வாழ்க்கையைப் படிப்பது. அதற்கு இலக்கியம் வகைசெய்யும். இலக்கியத்தின் மூலம்தான் ஒரு மனிதன் தான் வாழும் சமூகத்தையும், தான் வாழ்ந்த சமூகத்தின் முந்தைய காலத்தையும் அறிந்துகொள்ள முடியும். சகமனிதன் மீதும், தான் வாழும் சமூகத்தின் மீதும் மனிதன் அக்கறைகொள்ள, அன்பு செலுத்த இலக்கியமே வழிவகை செய்யும். தன் மொழியின், சமூத்தின் தொன்மைகுறித்த ஆவணங்களே, ஆகவேதான் மனிதன் இலக்கியத்தைப் படிக்க வேண்டும்.''
“சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு, நீங்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் எவை?”
1) அமைதி என்பது நாமே - திக் நியட் ஹான்.
தமிழில்: ஆசை. க்ரியா பதிப்பகம்.
2) போதியின் நிழல் - தமிழ் நாவல்
எழுத்தாளர்: அசோகன் நாகமுத்து, அந்திமழை பதிப்பகம்.
3) பெருவலி - தமிழ் நாவல்
எழுத்தாளர்: சுகுமாரன் , காலச்சுவடு பதிப்பகம்.
4) பனைமரமே... பனைமரமே! - கட்டுரைகள்
எழுத்தாளர்- ஆ.சிவசுப்ரமணியன் - காலச்சுவடு பதிப்பகம்.
5) அரசியல் பழகு - கட்டுரைகள் -எழுத்தாளர்: சமஸ்.
என் பரிந்துரை இந்த 5 புத்தகங்கள்!’’ - எஸ்.ராமகிருஷ்ணன் (விகடன்.காம்)
``நான் வாசித்த எல்லாவற்றையும் சேர்த்த ஒரு பகுதியே நான்" - தியோடர் ரூஸ்வெல்ட். புத்தகங்கள், மனிதகுலத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவருபவை. ஒரு புத்தகத்தை நாம் படிப்பதன் மூலம் நாம் பார்க்காத, உணராத விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். பெரும் சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் இவர்கள் எல்லோரையும் ஏதாவது ஒரு புத்தகம் அவர்களின் இலக்கை நோக்கி உந்தித் தள்ளியிருக்கும். வாழ்வில் பெருந்தோல்வியிலிருந்து மீண்ட பலருக்கும் ஒரு புத்தகம் உடன் இருந்திருக்கும். நம் அறையில் நம்முடனே இருக்கும் நண்பன்தான் புத்தகம். நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து படிப்பது ஒரு கலை. சென்னையில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழின் முக்கியமான எழுத்தாளர்களிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்களையும் கேட்டிருந்தோம். வாருங்கள் வாசிப்போம்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழின் மிக முக்கியமான கதைசொல்லி. மனித மனங்களின் அன்பை, துயரை, பரிதவிப்பை தன் எழுத்துகளின் வழியே கடத்தும் தேசாந்திரி. இந்தியா முழுவதும் சுற்றியலைந்து தான் பெற்ற அனுபவங்களை, பரவசத்தை வாசகனுக்குக் கடத்துவதில் வல்லவர். வாசகர்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கிவருபவரைச் சந்தித்தோம்.
ஒருவன் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்தோம். அதற்கான அவரது பதில்...
``வாழ்க்கை நம் ஒவ்வொருவரையும் குறிப்பிட்ட ஒரு சூழலில் குறிப்பிட்ட கால, இனம், குடும்பத்துக்குள் வாழ மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால், புத்தகங்கள் ஒருவனை எல்லா காலங்களுக்குள் சென்று வரவும், பல்வேறு மனிதர்களை, நிலவெளியை, அனுபவங்களை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. அந்த வகையில் புத்தகங்களே உண்மையான கால இயந்திரம். புத்தகங்களை வாசிப்பதன் வழியே உலகைத் தெரிந்துகொள்வதுடன் நம்மைப் பற்றியும் அறிந்துகொள்கிறோம். நம்மிடம் உருவாகும் மாற்றங்கள் சமூகத்திலும் எதிரொலிக்கும் என்பதே நிஜம்.
`நீங்கள் என்ன புத்தகம் வாசிக்கிறீர்கள் எனக் கூறுங்கள், நீங்கள் யார் எனச் சொல்லிவிடுவேன்' என்று எப்போதும் கூறுவேன். அது உண்மை. புத்தகங்கள் ஒரு மனிதனின் அகத்தை வெளிப்படுத்திக் காட்டக்கூடியவை. சொற்கள், வெறும் அச்சிடப்பட்ட வார்த்தைகள் அல்ல. அவை நம் ஒவ்வொருவருக்குமான வாழ்க்கை வழிகாட்டி. ஆகவே, நிறைய வாசியுங்கள். வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்களை வாசிக்கவையுங்கள். அதுவே உங்கள் வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் அவசியம்" என்றார்.
எஸ்.ரா பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள்:
1) புதுமைப்பித்தன் சிறுகதைகள்:
புதுமைப்பித்தன், தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியர். எளியவர்களின் வாழ்வை தன் எழுத்துகளின் வழியே சொன்னவர். 1948-ம் ஆண்டு புதுமைப்பித்தன் மறைந்தாலும் அவரது எழுத்துக்களோ இன்று வரையிலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவருகின்றன.
2) கு.அழகிரிசாமியின் சிறுகதைகள்:
தமிழில் குழந்தைகளின் உலகம் சார்ந்த கதைகள் எழுதியவர் கு.அழகிரிசாமி. `இருவர் கண்ட ஒரே கனவு' சிறுகதை மிகவும் பிரபலம்.
3) தி.ஜானகிராமன் சிறுகதைகள்:
`தி.ஜா' என அழைக்கப்படும் தி.ஜானகிராமன், மனித மனதின் உறவு சார்ந்த, உணர்வுநிலை சார்ந்த கதைகளை எழுதியவர்.
4) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன் : (நாவல்)
தமிழ் இலக்கிய உலகில் மிகவும் கொண்டாடப்பட்ட விமர்சிக்கப்பட்ட ஆளுமை ஜெயகாந்தன். தான் எழுதுவதை நிறுத்திக்கொண்ட பிறகும் தொடர்ந்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். இவரது நாவல்களில் மிக முக்கியமானதாக பலராலும் பரிந்துரை செய்யப்படும் நாவல் `ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்'.
5) வாடிவாசல் - சி.சு.செல்லப்பா: (நாவல்) முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல். சி.சு.செல்லப்பா தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர். `எழுத்து' என்ற சிறுபத்திரிகையை நடத்தி தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமான முன்னெடுப்பைச் செய்தவர்.
எழுத்தாளர் சோ.தர்மன் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் (விகடன்.காம்)
``கடைசிப் பக்கத்தை வாசித்து முடிக்கிறபோது, நண்பனை இழந்துவிட்ட கணம் நமக்கு ஏற்படுவது நல்ல புத்தகத்தின் அடையாளம்'' - பால் ஸ்வீனி.
சென்னைப் புத்தகக் கண்காட்சி களைகட்டத் தொடங்கிவிட்டது. தினமும் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உரை என ஒவ்வொரு நாளின் இலக்கிய மாலையும் மிக இனிமையாகக் கழிந்துவருகிறது. தத்துவம் சார்ந்த புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சிறுவர் இலக்கியங்கள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் என நிறைய நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நம் மொழிக்குப் பெருமைசேர்க்கும்விதமாக திருவள்ளுவரின் சிலை ஒன்று, புத்தகக் கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. மலையென குவிந்துகிடக்கும் புத்தகங்களில் எந்தப் புத்தகம் வாங்கலாம் என்ற எண்ணம் வாசகர்களுக்கு எழலாம். `கூகை' என்ற நாவலின் வழியே தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்த சோ.தர்மன், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவரிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும்
வாசகர்கள் வாங்கி படிக்கவேண்டிய முக்கிய நூல்கள் குறித்தும் பேசினோம்.
``இன்றைய காலகட்டத்தில் ஊடகத்தினுடைய தாக்கம் என்பது அதிகம் உள்ளது. மக்களுக்கான பெரும்பான்மையான நேரத்தை, அலைபேசியும் தொலைக்காட்சியுமே எடுத்துக்கொள்கின்றன. அவற்றை மீறித்தான் ஒருவன் வாசகனாக உருவாகவேண்டியுள்ளது. நுண்கலைகள் எனப்படும் நாட்டியம், சங்கீதம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள, பிறரின் பங்களிப்பு அவசியம். ஆனால், பிறருடைய பங்களிப்பு இல்லாமல் நாம் கற்றுக்கொள்ள முடிவது `இலக்கியம் படைப்பது' மட்டும்தான். அதற்கு வாசிப்பு, மிக முக்கியமான ஒன்று.
`வாசகன் எதற்காக வாசிக்க வேண்டும்?' என்ற கேள்வி எழலாம். இன்றுதான் எல்லா தகவல்களும் இணையத்திலேயே கிடைக்கின்றனவே என்ற எண்ணம் தோன்றலாம். தகவல்கள் இணையம் மூலம் கிடைக்கலாம். ஆனால், அந்தத் தகவல் சார்ந்த ஆழமான சுவடுகள் தெரிய இலக்கியம்தான் வழிவகை செய்யும். இதை உணரும்போது, வாசகர்கள் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்துவிடுவர். வாசிப்பு, மனிதனை பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்லும். வாசிப்பின் ருசியை உணர்ந்த வாசகர்கள், வாசிப்பைத் தொடர ஆரம்பித்துவிடுவர்.
அப்படி வாசிப்பவர்களுக்கு, இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்க குறிப்பிட்ட சில நூல்களைப் பரிந்துரைக்கிறேன்.
1) யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன் ( நாவல்)
நாவல் என்ற வகையில், நான் பரிந்துரை செய்வது `யாமம்'தான். சமகாலத்தில் வெளிவந்த நாவல்களில் முக்கியமான ஒன்று.
2) ஆண் பிரதியும் பெண் பிரதியும் - சமயவேல் (கட்டுரை)
கட்டுரைத் தொகுப்பில் சமயவேலின் `ஆண் பிரதியும் பெண் பிரதியும்' குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று. வாசகர்கள் அதை வாங்கிப் படிப்பதன் வழியே அவர்களுக்கு வேறோர் எண்ண மாற்றம் நிகழ வாய்ப்புண்டு.
3) மர்ம நபர் - தேவதச்சன் (கவிதை)
தேவதச்சனுடைய கவிதை நூலான `மர்ம நபர்' மிக முக்கியமான ஒரு பிரதி. வாசகனை மிக எளிய முறையில் சென்று சேரும் வகையில் கவிதைகள் இருக்கும். இது அவரது முழுக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு.
4) கடவுள் சந்தை - மீரா நந்தா (கட்டுரை)
உலகமயமாக்கலைப் பற்றி வந்த மிக முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. பூரணச்சந்திரனின் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.
5) தியோடர் பாஸ்கரனுடைய சூழலியல் சார்ந்த அத்தனை புத்தகங்களும்.''
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள் (விகடன்.காம்)
எனது பிறப்புரிமைக்கான விடுதலை நோக்கிய நுழைவுச் சீட்டு புத்தக வாசிப்பு" - பெடரிக் டக்லஸ். புத்தகம் என்பது பொழுதுபோக்கிற்காக வாசித்து இன்புறுவது மட்டுமல்ல. வாசிப்பின் வழியே மனித வாழ்வின் திறக்கப்படாத பக்கங்களை நாம் அறிய முடியும். மனித வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை, சமூக வாழ்வை சரிநிகராக கட்டமைக்கவும் புத்தகங்கள் முன்னெடுப்பு செய்துள்ளன. பல்வேறு ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வின் வழியே கண்டறிந்தவற்றை புத்தகங்களாக தொகுத்துள்ளனர். அவை காலத்திற்கும் அழியாத தகவல் புதையல்களாக உள்ளன. உலக நாடுகள் பலவற்றில் நடந்த மக்கள் புரட்சிகளுக்கெல்லாம் புத்தகங்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன.
கதைகள், நாவல்கள் போன்ற புனைவுகள் மட்டுமின்றி ,கட்டுரைகள் , ஆய்வுகள் போன்ற புனைவுகளும் காலம் கடந்து நிற்பவையாக உள்ளன. மனித குலத்தின் வளர்ச்சிக்கான மிக முக்கியமான காரணியாக புத்தகங்கள் உள்ளன. உலகெங்கும் இதன் பொருட்டே நிறைய புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழின் முக்கியமான கவிஞர், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் குறித்தும் கேட்டிருந்தோம்... வாருங்கள் வாசிப்போம்!
ஆதவன் தீட்சண்யா எளிய மனிதன் மனதில் கிடக்கும் ரணங்களை, ஆறாத வடுக்களை தன் கவிதைகளின் வழியே வெளி கொணர்பவர். "மீசை என்பது வெறும் மயிர்" என்ற இவரது நூல் மிக முக்கியமானதொரு பதிவாக இலக்கிய ஆளுமைகள் பலரால் முன்வைக்கப்படுகிறது. இந்த சமூகத்தின் மூலம் முன்வைக்கப்படும் பழமைவாதத்தை எதிர்த்து தன் எழுத்தின் வழியே குரல் கொடுக்கும் ஆதவன் தீட்சண்யாவிடம் பேசினோம்.
`ஒருவர் ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்?''
தம்மைத்தாமே சுயதணிக்கைக்கு ஆட்படுத்தி அடங்கிப் போகாமல் உண்மையைப் பேசுகிறவர்களையும் மாற்றுக்கருத்தாளர்களையும் சகிப்பின்மையினாலும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான வெறுப்பினாலும் கொன்றொழிக்கும் காலமிது. நூலை, நூலகங்ளை எரிப்பது, வெளியிட்ட நூலைத் திரும்பப் பெற்று அரைத்து காகிதக்கூழாக்கும் படியாக பதிப்பாளர்களை நிர்ப்பந்திப்பது என அச்சுறுத்தல் மூர்க்கமடையும் காலமாகவும் இருக்கிறது. ஆனால், படித்து என் நினைவில் தங்கிவிட்ட ஒரு விஷயத்தை எவராலும் அழித்துவிட முடியாது. அதனாலேயே நான் வாசிக்க முடிந்தவற்றையெல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
வெவ்வேறு தட்பவெப்பங்களில், நில அமைப்புகளில், கோடானுகோடி உயிர்க்கூட்டத்திற்கிடையே வாழ்கிற மனிதர்கள், தங்களது வாழ்வனுபவங்களில் பகிரத்தக்க விஷயங்களை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். எழுத்து வழியான அத்தகைய பகிர்வுகளை வாசித்தறிய நேரும்போது, நான் எனது காலத்திற்கேற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கின்றேனா, இல்லையா என்றும், அதற்கான காரணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் வாசகர்களுக்கு எந்தப் புத்தகங்களைப் பரிந்துரை செய்வீர்கள்?.
1. கொம்மை
பூமணியின் புதிய நாவல்
2. என் தந்தை பாலய்யா
ஒய்.பி. சத்தியநாராயணா தமிழில்- அ.ஜெனி டாலி
3. குஜராத் - திரைக்குப் பின்னால்
ஆர்.பி. ஸ்ரீகுமார் தமிழில் - ச.வீரமணி, தஞ்சை ரமேஷ்
4.இந்தியா என்கிற கருத்தாக்கம்
சுனில் கில்நானி தமிழில் - அக்களூர் இரவி
5. கினோ - ஹருகி முரகாமி சிறுகதைகள்
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்
``வேறு எங்கோ ஓர் அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே" - மார்க் ட்வெய்ன். சென்னை புத்தகக் கண்காட்சி, இன்று தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்வில் மிக முக்கியமான நிகழ்வாக இந்தப் புத்தகக் கண்காட்சியைச் சொல்லலாம். இது, வெறுமனே புத்தகச் சந்தையாக மட்டுமே அல்லாமல் வாசகனையும் படைப்பாளியையும் ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக உள்ளது. நல்ல புத்தகங்கள் ஒருவரைச் சென்றடையும்போது அதன் வழியே அவரைச் சார்ந்தவர்களும் பயனடைவது உறுதி. புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழின் முக்கியமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் குறித்தும் கேட்டிருந்தோம்... வாருங்கள் வாசிப்போம்!
ச.தமிழ்ச்செல்வன், கரிசல் மண்ணின் வெக்கை தாங்கிய மனங்களின் கதைகளைச் சொன்னவர். இவரது `வெயிலோடு போயி' சிறுகதை, தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றில் ஒன்று. இவரது `அரசியல் எனக்குப் பிடிக்கும்' என்ற கட்டுரைத் தொகுப்பு, பரவலான வாசகர்களை ஈர்த்தது. எழுத்து மட்டுமன்றி, இயக்கங்கள் சார்ந்தும் இயங்கிவருகிறார்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகச் செயலாற்றிவருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...
``ஒருவர் ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்?''
``இந்த வாழ்வை வாசிப்பதற்காகத்தான் புத்தகம் வாசிக்க வேண்டும். நாம் பிறந்ததிலிருந்து நாம் பெற்ற வாழ்வனுபவம் ஒன்றை மட்டும் வைத்து, இந்த உலகையும் நம் சமூகத்தையும் நாம் வாழும் சமகாலத்தையும் புரிந்துகொள்ளப் போராடுகிறோம். வாசிப்பு என்பது, பலருடைய வாழ்வனுபவத்துடனும் பல்வேறு கண்ணோட்டங்களினுடனும் இந்த வாழ்வைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. நான் என்பதற்கு, வெளியில் உள்ள மற்றமைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு நம் வாழ்வைச் செப்பமாக வாழ வாசிப்பு மிகவும் அவசியம். பிற ஜீவராசிகளுக்கு வாசிக்கத் தெரியாது. ஆகவே, அவர்களுக்காகவும் சேர்த்து அவர்களை நீதியுடன் வாழவைப்பதற்காகவும் சேர்த்து நாம் வாசிக்க வேண்டும்'' என்றார்.
``நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள்...''
``1) மார்க்ஸிய மெய்ஞ்ஞானம் - ஜார்ஜ் பொலிட்சர் (தமிழில்: ஆர்.கே.கண்ணன்) என்.சி.பி.ஹெச்
மார்க்ஸியத்தை, இதைவிட எளிமையாகப் புரியவைக்கும் இன்னொரு நூல் இன்று வரை வரவில்லை. மார்க்ஸியத்தின் அடிப்படைகளான இயக்கவியல் பொருள் முதல்வாதத்தையும் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தையும் புரிந்துகொள்ள விழையும் இளம் வாசகர்களுக்கு மிகப் பொருத்தமான நூல்.
2) துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு - ஜாரெட் டைமண்ட் - தமிழில் - ப்ரவாஹன் - பாரதி புத்தகாலயம்
இந்த உலகில் ஒருசில நாடுகள் வளமாகவும் மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் இருக்கக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடிய பயணமாக இந்த நூல் அமைகிறது. மனிதகுலத்தின் 13,000 ஆண்டுகால வரலாற்றின் ஊடாக இந்த நூல் பயணிக்கிறது. மனிதச் சமூகங்களின் நிலையைத் தீர்மானித்த காரணிகள் பலவற்றையும் ஆய்கிற இந்த நூல், புவியியலின் பங்கை அழுத்தமாகப் பேசுகிறது.
3) சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு - முனைவர் தே.வீரராகவன் - தமிழில் - ச.சீ.கண்ணன், புதுவை ஞானம் - அலைகள் வெளியீட்டகம்.
1918-க்கும் 1939-க்கும் இடைப்பட்ட காலத்தில் தொழிற்சங்க இயக்கம் வேரூன்றி கிளை பரப்பிய வரலாற்றைச் சொல்லும் நூல். அத்தோடு நில்லாமல் பாகிஸ்தான் பிரிந்து போயிராத அந்தக்கால இந்தியாவின் தொழிற்சங்க வரலாற்றின் பின்னணியில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பார்வையில்லாதவரான தே.வீர்ராகவன் கடும் உழைப்பைச் செலுத்தி உருவாக்கிய இந்த நுலை அப்படியே மொழிபெயர்க்காமல், மூல ஆவணங்களையும் வாசித்தும் விவரித்தும் தமிழில் வடித்திருக்கிறார் ச.சீ.கண்ணன்.
4) எழுக நீ புலவன் - ஆ.இரா.வேங்கடாசலபதி - காலச்சுவடு பதிப்பகம்
பாரதி பற்றி இதுவரை வெளிவராத பல உண்மைகள், தகவல்கள், நிகழ்வுகளின் சேகரமாக விளங்குகிறது இந்த நூல். பாரம்பர்ய வரலாற்றுப் போக்குகளையும் வரலாற்றின் வெளிச்சம்படாத இண்டு இடுக்குகளையும் ஒரே சட்டகத்துக்குள் கையாளும் முயற்சியாக இந்த நூல் அமைகிறது. `நம்ம பாரதியா இப்படி இருந்தான்!' என்று நம்மை அதிர்ச்சியடையவைக்கும் சில நிகழ்வுகள் இந்த நூலில் முதன்முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
5) பெரியார் - சுயமரியாதை சமதர்மம் - எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா - விடியல் பதிப்பகம்
கவிஞர் சுகுமாரன் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள் (விகடன்.காம்)
“ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, உலகை நோக்கிய ஒரு ஜன்னலைத் திறக்கிறோம்.” - தோழர் சிங்காரவேலர்.
இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் சமூகப் புரட்சிகளுக்கும், புத்தகங்களே மிக முக்கியக் காரணங்களாக இருந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதச்சமூகம் தன் வாழ்வை, தன் தொன்மையை புத்தகங்களின் வழியே அடுத்த தலைமுறைக்குக் கடத்திச்செல்கின்றன. புனைவு இலக்கியங்களான சிறுகதை, நாவல், கவிதை எனக் கற்பனை உலகில் சஞ்சரிக்கவும், அபுனைவுகளான கட்டுரைகள், ஆய்வு நூல்கள் என அறிவை விசாலப்படுத்திக்கொள்ளவும் புத்தகங்கள் உடன் இருக்கின்றன.
பெரும் சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் எல்லோரையும் ஏதேனும் ஒரு புத்தகம் அவர்களின் இலக்கை நோக்கி உந்தித் தள்ளியிருக்கும். வாழ்வில் பெருந்தோல்வியிலிருந்து மீண்ட பலருக்கும் ஒரு புத்தகம் உடன் இருந்திருக்கும். நம் அறையில் நம்முடனே இருக்கும் நண்பன்தான் புத்தகம். நல்ல புத்தகங்களைத் தேர்வுசெய்து படிப்பது ஒரு கலை. அப்படிப்பட்ட நூல்களைப் படைக்கும் ஏராளமான எழுத்தாளர்களின் உள்ளத்தில் ஊறித்திளைத்திருக்கும் புத்தகங்களையும் அதன் வீரியத்தையும் வார்த்தைகளின் வழியே வழிமொழியும் வரிசையில் இன்று... கவிஞர்.சுகுமாரன்.
இவர், தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் நவீன கவிதை உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளவர்; மனித மனத்தின் ஆறாத துயர்களை, தனிமையில் கதவடைத்து அழும் எளிய மனங்களின் அழுகுறல்களை தன் கவிதைகளில் தோழமையோடு சேர்த்துக்கொண்டவர்; கவிதை மட்டுமன்றி கட்டுரைகள், நாவல், மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் கவனிக்கத்தக்க படைப்புகளைக் கொடுத்தவர். இவரது `தனிமையின் வழி' கட்டுரைத் தொகுப்பு, `வெல்லிங்டன்' நாவல், கோடைக்கால குறிப்புகள், `பூமியை வாசிக்கும் சிறுமி' போன்ற கவிதை நூல்களும் மிகவும் கவனம் பெற்றவை.
சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியையொட்டி, கவிஞர் சுகுமாரனிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், அவர் பரிந்துரைக்கும் புத்தகங்கள் குறித்தும் கேட்டோம்...
“ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும்... வாசிப்பின் அவசியம் என்ன?''
“விரிவான பொருளில் சொல்வதானால் வாசிப்பில்லாமல் வாழ்க்கை இல்லை. வாசிப்பின் வழியேதான் மனிதன் சிந்திக்கிறான். அந்தச் சிந்தனையின் மூலமே முன்னேறுகிறான். அறிவியலும், மதங்களும், கண்டுபிடிப்புகளும் வாசிப்பின் விளைவாகவே நிகழ்ந்தன; நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வாசிப்பு இல்லாமல் இவை எதுவுமே நிகழ்ந்திடாது. வாசிப்பு, ஒருவன் என்னவாக இருக்கிறான், என்னவாக ஆகிறான், எந்த வகையில் தான் வாழும் உலகத்தைப் புரிந்துகொள்கிறான், தன் சக மனிதர்களுடன் எவ்வாறு உறவுகொள்கிறான் என்பதை உயிரோட்டமாக உணர்த்தக்கூடியது. வாசிப்பு இல்லாத ஒருவன் வெளிச்சம் இல்லாத இடத்தில் முடங்கிவிடும் தாவரம். வளர்ச்சியை விரும்புகிறவனே வாசிப்பவனாகிறான்.''
“நீங்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள்..?''
1) பெரியார் - இன்றும் என்றும் (கட்டுரைத் திரட்டு)
விடியல் பதிப்பகம்
2) எழுக நீ புலவன் (பாரதி இயல் ஆய்வுகள்)
ஆ.இரா.வேங்கடாசலபதி
காலச்சுவடு பதிப்பகம்
3) செல்லாத பணம் (நாவல்)
இமையம்
க்ரியா வெளியீடு
4) எழுதித் தீராத பக்கங்கள் (அனுபவக் கட்டுரைகள்)
செல்வம் அருளானந்தம்
தமிழினி
5) கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் (தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள்)