Tuesday 11 June 2019

அண்மைக் காலத் தமிழ் நாவல்களின் போக்குகள் - சில மதிப்பீடுகள்

எழுத்தாளர்: பா.ஆனந்தகுமார் 
கதையிலக்கிய மரபு இந்திய இலக்கியத்தில் காணப்படும் மிகப் பழமையான ஒன்று. இந்தியக் கதை மரபு இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தொன்மை யுடையது. என்றாலும் நவீன இந்தியக் கதை இலக்கிய மரபில் மேனாட்டுத் தாக்கத்தின் வாயிலாக நாவல் என்கிற புதிய கதையிலக்கிய வகை உருவானது.
நாவல் வகை இந்திய இலக்கியத்திற்கு இந்தியப் படைப்பாளி களுக்கு அறிமுகமான பின்னர், நாவல் என்கிற மேனாட்டு இலக்கிய வகையின் பண்புகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும், மேனாட்டு நாவல் இலக்கியப் பண்புகளை இந்தியப் பண்பாட்டிற்கு இயைப ‘பண்பாட்டுவயமாக்கி’ உருவாக்குவதும் என்கிற இருவகைப் போக்குகள் தொடக்ககாலம் முதல் இன்று வரை தொடர்ந்து நிலவி வருகின்றன.
இவற்றுக் கிடையில் இந்தியப் பண்பாட்டிற்குரிய சொந்த சுதேசிய கலையிலக்கிய மரபை உருவாக்கும் முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழ் நாவலி லக்கிய வரலாற்றிலும் கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக மேற்சுட்டிய போக்குகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இயங்கி வருகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய பிரதாப முதலியார் சரித்திரம் உள்ளிட்ட தொடக்க கால தமிழ்நாவல்கள் ஆங்கில இலக்கிய நாவலாசிரியரான வால்டர் ஸ்காட்டின் சாகசக் கற்பனை (Romance) பாணியைப் பின்பற்றி அமைந்தவை.
ஆயினும் அவற்றுள் தமிழ்க்காப்பியம் மற்றும் நாட்டார் கதைப்பாடல்களின் கதைகூறும் முறைகளை - எடுத் துரைப்பியல் முறைகளைக் காணமுடிகின்றது. மேலும் அவை பழந்தமிழ் இலக்கியத்தின் அறச்சொல்லாடல் களையும் பெற்றுத் திகழ்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வார, மாத பத்திரிகைகளின் வெகுஜன இரசனைக்கேற்ப துப்பறியும் நாவல்கள் வெளிவந்தன. விடுதலைப்போராட்டம் தமிழ் மண்ணில் சூடுபிடித்த போது, காந்தியின் ‘கிராமத்திற்குத் திரும்பிச்செல்க’ என்கிற முழக்கத்தை ஏற்று, கிராமிய வாழ்க்கைப் பின்னணியை அதன் சமூகப் பண்பாட்டு முரண்களோடு நாவலுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரப்பட்டன.
இவ்வகையில் கா.சி.வேங்கடரமணி, சங்கர்ராம், ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர். விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கல்கியின் ‘வரலாற்று சாகசக் கற்பனை’ தமிழ் வாசகரிடையே கோலோச்சியது. கல்கியைத் தொடர்ந்து அகிலனின் இலட்சியப் பாங்கு தமிழ் மேட்டிமை வாசகர்களிடையே செல்வாக்குப் பெற்றது.
இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாவல் வரலாற்றில் ருசிய நாவலிலக்கியத்தின் தாக்கத்தால் மக்சிம் கோர்க்கியின் சோஷலிச யதார்த்தவாதப் போக்கு அறிமுகமானது. தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ நாவல் முதல் சோஷலிச யதார்த்தவாத நாவலாக அடை யாளப்படுத்தப்பட்டது. பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை உயர்த்திப் பிடித்த இந்நாவல், தொழிலாளர் போராட்டத்தைப் பற்றிய முதல் நாவலாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து டி.செல்வராஜின் ‘மலரும் சருகும்’ நாவல், நெல்லை மாவட்ட நிலத் தொழிலாளர்கள் போராட்டத்தைப் படம்பிடித்துக் காட்டியது. இதன் பின்னர் ஜெயகாந்தன் தமிழ் நாவல் உலகில் செல்வாக்குப் பெற்ற நாவலாசிரியராக உயர்ந்தார். இவரது நாவல்கள் தல்ஸ்தோயின் மனித நேயப் பாங்கையும் மக்சிம் கோர்க்கியின் போராட்ட ஆவேசத்தையும் வெளிப்படுத்தின.
ஆயினும் இவரது கதைமாந்தர்கள் தனிமனிதச் சார்புநிலையை நாடு பவர்கள். ஜெயகாந்தன் வெகுஜன இலக்கிய இரசனையையும் மேட்டிமை இலக்கிய இரசனையையும் சமநிலைப்படுத்தினார். ஜெயகாந்தனைத் தொடர்ந்து பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, கு.சின்னப்ப பாரதி, மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் யதார்த்தவாதப் போக்கினைப் பின்பற்றி வெற்றி பெற்றனர்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் முற்போக்குத்தன்மை கொண்ட இடதுசாரி இலக்கியப்போக்கான யதார்த்தவாதம் செல்வாக்குப் பெற்றதைப் போன்றே வட்டாரவியல் எழுத்தும் செல்வாக்குப் பெற்றன. இவ்வகையில் தி.ஜானகிராமன் தஞ்சைவட்டாரக் கிராமத்து வாழ் வியலையும் பிராமணர்களின் பண்பாட்டு வாழ்க்கை யையும் எடுத்துக் காட்டினார்.
கி.ராஜநாராயணன் கோவில்பட்டி மாவட்ட கரிசல்வட்டார வாழ்வியலைச் சிறப்புற எடுத்துக்காட்டினார். நீலபத்மநாபன், ஹெப்சிபா ஜேசுதாசன் ஆகிய இருவரும் குமரி மாவட்ட வட்டாரவியல் பாங்கை, அதன் சமூகப் பண்பாட்டு முரண்களுடன் எழுத்துக்குள் கொணர்ந்தார்.
1970களில் தமிழ் நாவல் இலக்கியத்தில் நவீனத்துவ இலக்கியப் போக்கு செல்வாக்கு பெற்றது. அதனை யட்டி பெருநகர வாழ்க்கையும் மனிதனின் இருத்தலியப் பார்வையும் தமிழ் நாவல்களில் விவரிப்புக்குள்ளாயின. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுந்தரராமசாமி ஆகியோர் நவீனத்துவ இலக்கியப் பார்வையுடையவர்களாக இருந்தனர்.
இந்திரா பார்த்த சாரதியிடம் நவீனத்துவப் பார்வையை இடதுசாரி மனோபாவத்துடன் அணுகும் போக்குக் காணப்பட்டது. 1980களில் தமிழ்நாவல் வரலாற்றில் பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய போக்குகள் செல் வாக்கு பெற்றன. கோணங்கி, எம்.ஜி.சுரேஷ், தமிழவன் ஆகியோர் பின்நவீனத்துவப் போக்கின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டனர். தலித்திய நாவல்களை எழுதியவர் களுள் சிவகாமி, பாமா, ராஜ்கௌதமன், இமையம் ஆகி யோர் குறிப்பிடத்தக்கோர். தலித் நாவல்கள் பெரிதும் சுயசரிதைத் தன்மையுடன் தன் எடுத்துரைப்புக்களாக அமைந்துள்ளன. இவற்றின் மொழியும் எடுத்துரைப்பியலும் எதிர் அழகியல் தன்மை கொண்டவை. பெண்ணிய எழுத்தில் சல்மா, உமாமகேஸ்வரி, சு.தமிழ்செல்வி ஆகியோர் முதன்மைப் படைப்பாளிகள் ஆவர். சல்மா தனது புனைகதைகளில் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் பாலியல் விடுதலையையும் பாடுபொருளாக்கியுள்ளார்.
உமாமகேஸ்வரி நடுத்தர பெண்களின் சமூக உளவியல் பிரச்சினைகளை குடும்ப வெளிக்குள் நின்று பேசியுள்ளார். சு.தமிழ்செல்வி கிராமப்புறத்திலிருக்கும் உழைக்கும் பெண்களின் போராட்ட வாழ்க்கையினைத் தனது நாவல்களின் பேசு பொருளாக்கியுள்ளார்.
பெண்கள் நிறம் சார்ந்தும் வர்க்கம் சார்ந்தும் ஒடுக்கப்படுவதைத் தனது மாணிக்கம், அளம், கற்றாழை முதலிய நாவல்களில் சித்திரித் துள்ளார். மேலும், குடும்பம் என்கிற அமைப்பின் அச்சாணியாகப் பெண்கள் திகழ்வதையும் நாவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
யதார்த்தவாதமும் ஆவண நாவல்களும்
இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பத்துக்களில் யதார்த்தவாதப் போக்கு பின்னடைந்துவிட்டது எனப் பின்நவீனத்துவவாதிகள் பேசினாலும், இருபத்தியோராம் நூற்றாண்டில் யதார்த்தவாதப் போக்கு தமிழ் நாவல் இலக்கியத்தில் பல புதிய பரிமாணங்களுடன் எழுச்சி பெற்றுள்ளது. இரண்டாயிரத்திற்குப் பின் சோசலிசம், வர்க்கப் போராட்டம் எனப் பேரரசியலைப் பேசக்கூடிய படைப்பாளிகளும் தலித், சிறுபான்மையினர், மூன்றாம் பாலினத்தார் ஆகிய விளிம்புநிலை மக்களின் நுண்ணரசி யலைப் பேசும் படைப்பாளிகளும் யதார்த்தவாத எழுத்து முறையினை நுட்பமாகக் கையாண்டுள்ளனர். பேரரசியல் பேசும் முற்போக்கு நாவலாசிரியர்கள் இக்காலப் பகுதியில் மிகப் பெரிய ஆவண நாவல்களை உருவாக்கி யுள்ளனர். இவ்வகையில் பொன்னீலனின் ‘மறுபக்கம்’, டி.செல்வராஜின் ‘தோல்’, சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ ஆகிய மூன்று நாவல்கள் குறிப்பிடத்தக்கன. இம்மூன்று நாவல்களும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவை. மண்டைக்காட்டு கலவரத்தை வரலாற்றுப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள பொன்னீலனின் ‘மறுபக்கம்’ நாவல் பழைய தென்திருவிதாங்கூர் பகுதியில் இன்றைய குமரி மாவட்டத்தில் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த சமூகப் பண்பாட்டுப் போராட்டங்களை ‘பனைவிளை’ என்ற கிராமத்தை மையமாக வைத்து ஆவணப்படுத்தியுள்ளது.
சமூகப் பொருளாதார உற்பத்தி உறவுகளின் ஒட்டுமொத்தமாக விளங்கும் ‘சமுதாய இருப்பு’என்கிற அடித்தளத்தைப் பற்றி அதிகம் பேசாது அவ்வடித்தளத்திலிருந்து உருவான சாதி என்கிற மேற்கட்டுமான அமைப்பின் பல்வேறு சிக்கல்களைச் சிடுக்குகளை இந்நாவல் பேசுகின்றது. அத்துடன் சாதிக்குப் பின்னால் ஒளிந்துள்ள பொருளாதார நலத்தையும், வர்க்க அரசியலையும் சுட்டிக்காட்டு கின்றது. சிலவிடத்து சாதி பற்றிய புனிதத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றது.
வரலாற்றுக்குள்ளும், தொன்மங்களுக்குள்ளும், கதைகளுக்குள்ளும் உண்மையைத் தேட நாவலாசிரியர் அறைகூவல் விடுக்கின்றார். சமூகத்தில் உள்ள சகலதரப்பினரின் குரல்களும் நாவலில் இயல்பாக வெளிப்பட்டுள்ளன. சிறுதெய்வ வழிபாட்டுக்குள் நுழைந்துவிட்ட பிராமணியத்தைத் தடுத்து நிறுத்துவது இடதுசாரித் தோழரின் நிகழ்ச்சித் திட்டமாக நாவலின் இறுதியில் சித்திரித்திருப்பது விவாதத்திற்குரியதாகும்.
நாவலின் இறுதிப் பகுதியின் எடுத்துரைப்பியல், பின் நவீனத்துவ உத்தி முறைகள் சார்ந்து பூடகத்தன்மையும் புனைவு மிக்கதாகவும் அமைந்துள்ளது.
டி.செல்வராஜின் ‘தோல்’ நாவல் திண்டுக்கல் வட்டார தோல் தொழிற்சாலை தொழிலாளர்களின் சமூக அரசியல் போராட்ட வரலாற்றை ஆவணமாக்கி யுள்ளது. “வகை மாதிரி பாத்திரப் படைப்பாக்கமும் வர்க்கங்களின் சித்தரிப்பும்” கொண்டு இந்நாவல் சோஷலிச யதார்த்தவாத நாவலாக அமைந்துள்ளது. தொழிலாளர்களின் ‘முறி அடிமை’ ஒழிப்புப் போராட்ட வரலாறு திண்டுக்கல் மாவட்ட சமூகப் பண்பாட்டு அரசியல் வரலாற்றுடனும் தமிழக சமூகப் பண்பாட்டு அரசியல் வரலாற்றுடனும் உலக அரசியல் வரலாற்றுடனும் இணைந்து சித்திரிக்கப்பட்டுள்ளது.
சோஷலிசம் என்கிற பேரரசியலைப் பேசுகின்ற இந்நாவலில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத் தொழிலாளர்கள் வர்க்க உணர்வு பெறு கின்றனர். நாவலில் இடம்பெறும் ஒசேப்பு, சங்கரன், வேலாயுதம், இருதயசாமி ஆகிய பாத்திரங்கள் தமது விதியை சமூகத்தின் விதியோடு இணைத்து புத்துயிர்க்கப் பட்ட ஆன்மாக்களாகத் திகழ்கின்றனர்.
தொழிற்சங்க அரசியல் இந்நாவலின் மையமாகத் திகழ்கின்றது. தொழிற்சங்கம் சமூக மாற்றத்திற்கு வழிகாட்ட வேண்டும் எனும் கருத்தினைக் கொண்ட இந்நாவல், திண்டுக்கல் மாவட்ட பொதுவுடைமை அரசியல் கட்சியின் வரலாற்றையும் எழுச்சியையும் பூடகமாக உணர்த்து கின்றது.
இந்நாவலின் முதன்மைப் பாத்திரங்களாகத் திகழ்கின்ற சங்கரன், வேலாயுதம் ஆகிய இருவரும் அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களாக இருந்த முறையே ஏ.பாலசுப்பிரமணியம், மதனகோபால் ஆகியோரின் மறுவுருவாக்கமே.
சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவல் மதுரை நகரின் சமூகப்பண்பாட்டு அரசியல் வரலாற்றை நாயக்கர்காலம் தொடங்கி ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் இறுதிவரை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரித்துரைத்துள்ளது. மதுரை நகரைப்பற்றிய இந்த ஆவண நாவலில் வரலாறு X புனைவு என்கிற எல்லைகள் தகர்க்கப்பட்டுள்ளன.
54 இயல்களைக் கொண்ட ‘முடியரசு’ எனும் முதல் பாகம் மதுரா விஜயம், பாளையப்பட்டு, யூனியன் ஜாக் எனும் மூன்று பெருந்தலைப்புகளில் மதுரை நகரின் அரசியல் வரலாற்றை விஜயநகர ஆட்சி, நாயக்கர்களின் பாளையப்பட்டு முறை, பிரிட்டிஷார் ஆட்சி என்ற கால வரிசையில் எடுத்துரைக்கின்றது.
66 இயல்களைக் கொண்ட ‘குடிமக்கள்’ எனும் இரண்டாம்பாகம் இருள் எனும் நாகம். தாது வருசத்திற்கு முன், மெஜுரா சிட்டி, பென்னிங்டன் ரோடு, ரயில் களவு, குற்றப்பரம்பரைச் சட்டம், பட்டசாமி எனும் ஏழு பெருந்தலைப்புகளில் மதுரை நகர் சார்ந்த குடிமக்களின் சமூகப் பண்பாட்டு வரலாற்றை விவரிக்கின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதுரைநகர், கல்வி, தொழில், வாணிபம், தகவல் தொடர்பு, போக்குவரத்து, நிர்வாகமுறை ஆகியவற்றில் படிப்படியாக அடைந்த மாற்றங்களை இப்பகுதி விவரிக்கின்றது. நாவலில் மையமாக நாயக்க மன்னர்களும் தாதனூர் கள்ளர்களும் இடம்பெறு கின்றனர். ஏனைய சமூக மக்கள் நாவலில் விளிம்பு நிலையிலேயே இடம்பெறுகின்றனர். ‘காவல் கோட்டம்’ எனும் தலைப்பிற்கேற்ப மதுரை நகரைக் காவல் செய்த கள்ளர் இன மரபினரின் இனவரைவியலும் பிரிட்டி ஷாரின் புதிய காவல் முறையால், அவர்கள் காவல் அதிகாரத்தை இழந்ததனால் ஏற்பட்ட முரண்களும் அவர்கள் குற்றப்பரம்பரை ஆக்கப்பட்ட சமூக வரலாறும் நாவலில் விரிவான சித்திரிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளன.
நாகமலை, கீழக்குயில்குடி அருகே இருப்பதாக சித்திரிக்கப்படும் ‘தாதனூர்’ என்ற கிராமமும், காவல் செய்யும் கள்ளர்கள் வந்து சாடும் மதுரை வடக்குமாசி வீதி இராமாயணசாவடியும் நாவலின் கதைநிகழ்வும் நடைபெறும் முக்கியக்களங்களாக நாவலின் மைய வெளியாக அமைந்துள்ளன. தாதனூர் கிராமம், நாட்டார் கதைப்பாடல்களில் திரும்பத்திரும்ப மறித்து வருகின்ற வினையலகு (அடிக்கருத்து) போன்று நாவலில் தொடர்ந்து இடம்பெற்று வாசகனுக்கு அலுப்பூட்டு கின்றது. மதுரை நகரின் அரசு அதிகாரத்திற்குட்பட்ட மையப்பகுதியும் தாதனூர் கிராமம் நீங்கலாக வேறு புறநகர்ப்பகுதிகள், கிராமங்கள் நாவலில் விவரிப்புக்குட் படுத்தப்படவில்லை. அதே போன்று நாயக்கர், கள்ளர் இனத்தாரல்லாத வேறு இனத்தார் பற்றிய பதிவுகள் நாவலில் மிக அருகியே உள்ளன. குறிப்பாக நாயக்கர் கால வரலாற்றில் மிகவும் பேசப்பட்ட மதுரைவீரனைப் பற்றி இந்த நாவலில் எந்தப்பதிவும் இல்லை. நாவலின் புனைவாக்க முறையிலும் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையில் ஒரே சீரான தன்மைகள் இல்லை. காலத்தின் வரலாற்றுப் பழைமையை மெய்ப்படுத்தும் சொல்வழக்குகளும் மொழிநடையும் இந்நாவலில் கையாளப்படவில்லை.
இருபத்தோராம் நூற்றாண்டில் மார்க்சியம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சர்வதேசப் பிரச்சினைகளுள் ஒன்றான சூழலியலை அடிப்படையாக வைத்து சாயத்திரை முதலான நாவல்களை எழுதிய சுப்ரபாரதிமணியன் அண்மையில் ‘தறிநாடா’ எனும் நாவலை வெளியிட்டுள்ளார். இந்நாவல் திருப்பூர் வட்டாரத்தில் கைத்தறி நெசவு நசிந்து விசைத்தறிகளும் பனியன் கம்பெனிகளும் நுழைந்த சமூக வரலாற்றுப் பின்புலத்தை மையமாகக் கொண்டுள்ளது. நெசவாளர் களின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் இந்நாவல் தொழிற்சங்கம் சார்ந்த வர்க்க அரசியலைப் பேசுகின்றது.
யதார்த்தவாதமும் கூறுபடுத்தப்பட்ட வாழ்க்கையும்
இருபத்தோராம் நூற்றாண்டு யதார்த்தவாத நாவல்களின் புதிய பரிமாணங்களுள் ஒன்றாக வட்டார வாழ்வியலை நோக்கியும் குறிப்பிட்ட இனத்தினரின் இனவரைவியலை நோக்கியும் செல்வதைக் காண முடிகின்றது. இவ்வகையில் வட்டார வாழ்வியலை அடிப்படையாக வைத்து கண்மணி குணசேகரன், தவசி ஆகியோர் சிறந்த நாவல்களை உருவாக்கியுள்ளனர். நடுநாட்டு (விழுப்புரம் மாவட்ட முந்திரிக்காடுகள்) வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு கண்மணி குணசேகரனின் ‘கோரை’, ‘அஞ்சலை’ ஆகிய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ம.தவசியின் ‘சேவல்கட்டு’ நாவல் இராமநாதபுரம் வட்டார சமூகப்பண்பாட்டு வாழ்வைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. ஜோ டி குரூஸின் நாவல்கள் (ஆழிகுழ் உலகு, கொற்கை) கடலோரப் பரதவரின மக்களின் இனவரைவியலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. அண்மையில் வெளி வந்துள்ள பூமணியின் அஞ்ஞாடி நாவல் சங்கரன்கோயில் வட்டாரத்தில் நிகழ்ந்த கழுகுமலைக் கலவரத்தைப் பின்புலமாகக்கொண்டது. என்றாலும், அப்பகுதியில் வாழ்கின்ற பள்ளர்களின் இனப்பிரிவுகளுள் ஒன்றான ‘அஞ்ஞா’ பள்ளர்களின் இனவரைவியலை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
பெருமாள்முருகனின் அண்மைக்கால நாவல்களான கங்கணம், மாதொருபாகன் என்பன கொங்கு வட்டாரத்தின் ஒரு பண்பாட்டுப் பிரதேசத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. கரன் கார்க்கியின் ‘கறுப்பர் நகரம்’ நாவல் சென்னை நகரின் புறஞ்சேரி வாழ்க்கையை மனிதநேயத்துடன் சித்திரிக்கின்றது. ஆர்.எஸ்.ஜேக்கப்பின் ‘பனையண்ணன்’ நாவலும் குமாரசெல்வாவின் ‘குன்னி முத்து’ நாவலும் பழைய தென்திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்த நாடார் இனத்த வரின் உள் முரண்களை (பனையேறி X வியாபாரி) அவ்வட்டாரப் பின்புலத்தோடு எடுத்துரைக்கின்றன. இவ்வாறே ஸ்ரீதரகணேசனின் ‘சடையன்குளம்’ நாவலும் தூத்துக்குடி வட்டார கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பறையரின மக்கள் ஆதிக்கச்சாதி யினரை எதிர்த்துப் போராடுவதைக் காட்டுகின்றது.
எனவே, பேரரசியல் (மார்க்ஸியம்) பேசாத யதார்த்தவாத நாவல்கள் எல்லாம் பொதுவாழ்க்கை அனுபவங்களிலிருந்து விலகி தனி இனக்குழுக்களை நோக்கிச் செல்வது இக்காலப் பகுதியின் முதன்மைப் போக்காக இருக்கின்றது. இவ்வகை நாவல்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் இயங்கியலை வகைமாதிரிப் படுத்துகின்ற தன்மையிலிருந்து விலகி கூறுபடுத்தப் பட்ட வாழ்க்கையின் தனித்த அனுபவங்களைப் பேசுகின்றன. யதார்த்தவாத நாவல்களில் சோஷலிசம் எனும் பேரரசியலைப் பேசக்கூடிய நாவல்கள் ஒரு வகையினதாகவும், வட்டாரம், தலித்தியம், பெண்ணியம் என்கிற விளிம்புநிலை அடையாளங்களைக் கொண்ட நாவல்கள் இன்னொரு வகையினதாகவும் அமைந் துள்ளன. விளிம்புநிலை அடையாளம் சார்ந்த நாவல் களுள் அண்மைக்காலத்தில் சிறுபான்மையினரான இஸ்லாமியரின் வாழ்வியல் சார்ந்த நாவல்களும், மூன்றாம் பாலினத்தாரான திருநங்கையரின் நாவல்களும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளன. அறியப் படாத இஸ்லாமிய வாழ்க்கையை எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தோப்பில் முகமதுமீரான் படம்பிடித்துக் காட்டியிருந்தார்.
21ஆம் நூற்றாண்டில் மீரான்மைதீன், தோப்பில் முகமதுமீரானைப் போன்றே குமரிமாவட்ட இஸ்லாமியரின் சமூகப்பண்பாட்டு வாழ்வைத் தமது நாவலுக்குரிய களமாகக் கொண் டிருந்தாலும் இஸ்லாமியத் தொன்மங்கள், பெண் மீதான ஒடுக்குதல் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி யுள்ளார். ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ எனும் இவரது முதல் நாவலைத் தொடர்ந்து அண்மையில் ‘அஜ்னபி’ எனும் நாவலை மீரான்மைதீன் வெளியிட்டுள்ளார். இந்நாவல், அராபிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்நாட்டு இஸ்லாமிய இளைஞர்களின் இன்னல்களை எடுத்துரைக்கின்றது. கீரனூர் ஜாகீர்ராஜாவின் கொங்கு வட்டார நாவல்கள் (துருக்கித்தொப்பி, கறுத்தலெப்பை, மீன்காரத்தெரு) அடித்தள இஸ்லாமிய மக்களின் - கறுத்த முஸ்லீம்களின் வாழ்வியலைச் சித்திரிக்கின்றது. இவரது ‘வடக்கே முறி அலீமா’ நாவல் இவரது வழக்கமான யதார்த்தவாத எழுத்துக்கு மாறாக பின்நவீனத்துவப் பிரதியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. பெண்ணின் எல்லையற்ற காமத்தையும் பாலியல் விடுதலையையும் பேசும் இந்நாவலில் பின்நவீனத்துவ உத்திக்கூறுகள் இயைந்து செல்லாமல் துருத்தி நிற்கின்றன. அர்ஷியா தனது ஏழரைப் பங்காளி வகையறா, அப்பாஸ்பாய் தோப்பு ஆகிய நாவல்களில் மதுரையில் வாழும் உருது பேசும் இஸ்லாமிய மக்களின் சமூகப்பண்பாட்டு வாழ்வியலை ஆவணப்படுத்தியுள்ளார். அன்வர் ராஜாவின் ‘கறுப்பாயி என்ற நூர்ஜஹான்’ நெல்லை மாவட்ட மீனாட்சிபுரம் பகுதியில் நிகழ்ந்த இஸ்லாமிய மதமாற்றத்தையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக மாற்றங்களையும், பண்பாட்டுச் சிக்கல்களையும் விவரிக்கின்றது.
பெண்ணியமும் பாலியல் எழுத்தும்
பெண்ணியம் என்கிற பாலின அடையாள அரசி யலுக்குப் பின்னர், அண்மைக்காலத்தில் உலகளாவிய நிலையில் பாலினம் கடந்த நிலையும் (Transgender) பாலின அடையாளத்தை நீக்கும் நிலையும், பாலினச் செயல்பாட்டுக் கொள்கையாக (Queer Theory)) தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்ச் சூழலிலும் மூன்றாம் பாலினத்தாரின் முகமும், குரலும் உயர்ந்து வருகின்றது. திருநங்கையர்களான மூன்றாம் பாலினத்தார் தமது வாழ்க்கையனுபவங்களை - சமூகம் தரும் நெருக்கடிகளை - அவமானங்களை - புறக் கணிப்புக்களை வலியின் மொழியில் இலக்கியமாக்கி வருகின்றனர். அவ்வகையில் பிரியா பாபுவின் ‘மூன்றாம் பாலினத்தின் முகம்’ குறிப்பிடத்தகுந்த நாவலாக விளங்குகின்றது. தலித் நாவல்களைப் போன்று இதுவும் தன் எடுத்துரைப்பியலாக ((Self Narrative) அமைந் துள்ளது. அண்மையில் வெளிவந்த சு.வேணுகோபாலின் ‘பால்கனி’ நாவல் திருநங்கையரின் வாழ்வியல் நெருக்கடி களை ஒரு பெண்ணின் (அக்காள்) நோக்குநிலையில் விவரிக்கின்றது.
இருபதாம் நூற்றாண்டு தமிழ்நாவல் இலக்கியத்தில் யதார்த்தவாதமும் நவீனத்துவமும் கருத்தியல் அடிப் படையில் முரணி நின்றதைப் போல 21ஆம் நூற்றாண்டு தமிழ் நாவல் இலக்கியத்தில் யதார்த்தவாதமும் பின் நவீத்துவமும் முரணி நிற்கின்றன. வேறுவகையில் சொல்வதானால் யதார்த்தவாதம், பின்நவீனத்துவம்
என்ற இரு எதிர் முரண்களுக்கிடையிலான இயங்கியல் வளர்ச்சியில் தமிழ்நாவல் இலக்கியம் வளர்ந்து வருகின்றது; அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றது. பின் நவீனத்துவமானது தமிழ்நாவல் இலக்கியத்தில் வெவ்வேறு முகங்களில், வெவ்வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. பாலியல் எழுத்து, பிரதிகளின் ஊடாட்டம், மாந்திரிக எதார்த்தம், மொழிச் சிதறடிப்பும் விளையாட்டும். அறிவியல் கதையாடல், மர்மக் கதையாடல் என்பனவற்றைக் கொண்டு தமிழ் நாவலிலக்கியத்தில் பின்நவீனத்துவ பிரதிகள் தயாரிக்கப் படுகின்றன. பாலியல் எழுத்திற்கு எடுத்துக்காட்டாக சாருநிவேதிதாவின் ஜீரோ டிகிரி, காமரூபக் கதைகள், தேகம், எக்ஸில் ஆகிய நாவல்கள் அமைந்துள்ளன. சாரு நிவேதிதாவைத் தொடர்ந்து அண்மையில் வாமுகோமுவின் நாவல்களும் அமைந்துள்ளன. இவரது தொடக்ககால நாவல்கள் காமத்தின் இயல்பான பேசவேண்டிய பகுதியைச் சித்திரித்தாலும் பிற்கால நாவல்கள் சாருநிவேதிதாவைப் போன்றே பாலியல் வக்கிரங்கள், பாலியல் பிறழ்வுகள் ஆகியவற்றைப் பேசின. மங்களத்து தேவதைகள், கள்ளி, காந்தாமணியின் இன்னபிற கதைகள் ஆகிய இவரது நாவல்கள் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன.
மாந்திரிக யதார்த்தம் : மர்மமும் வரலாறும்
யுவன் சந்திரசேகரின் நாவல்கள் மாந்திரிக யதார்த்தவாத பாணியில் அமைந்துள்ளன. இவரது பகடையாட்டம், குள்ளச்சித்தன் சரித்திரம், கானல் நிலவில் ஆகிய நாவல்கள் வாழ்வின் அபத்தத்தையும் நினைவுக்கும் இருப்புக்குமான ஊடாட்டத்தையும் எடுத்துரைக்கின்றன. பிரேம்ரமேஷின் ‘சொல் என்றொரு சொல்’ நாவல், பின்நவீனத்துவத்தின் பிறழ் எழுத்து முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. மையமற்ற தன்மையும், தர்க்கத்தை மறுதலிக்கும் தொடர்ச்சியற்ற தன்மையும், பல்வேறு பிரதிகளின் ஊடாட்டமும் இந்நாவலில் பின்நவீனத்துவக் கூறுகளாக இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் தமிழ்த்தொன்மம் குறித்த மறுவாசிப்பும் இந்நாவலில் இடம் பெற்றுள்ளது.
எம்.ஜி.சுரேஷின் யுரேகா என்றொரு நகரம், 37, சிலந்தி ஆகிய மூன்று நாவல்களும் மர்மமும் அறிவியலும் நிறைந்த கதையாடல்களாக அமைந் துள்ளன. அந்தமான் அருகே புதிதாகத் தொல்லியல் அறிஞர்களால் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட யுரேகா என்ற நகரம் கடைசியில் பன்னாட்டு முதலாளித்துவத்தின் சூழ்ச்சியால் பொய்யாக உருவாக்கப்பட்டதென அறியப்படுகிறது. பன்னாட்டு முதலாளித்துவம் தனது வர்க்க நலனுக்காக தொழில் நுட்பத்தையும் தகவல் தொடர்பையும் தவறாகப் பயன்படுத்துவதை இந்நாவல் துப்பறியும் நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எடுத்துரைக்கின்றது. வரலாறு அதிகாரம் சார்ந்து கட்டமைக்கப்படுவதையும் இந்நாவல் உணர்த்துகின்றது. இவரது ‘37’ எனும் நாவல் வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றிய புனைவாக அமைந் துள்ளது. இந்நாவல்களைப் போன்றே தமிழவனின் ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவலு’ம் துப்பறியும் நாவலுக்குரிய மர்மத்தன்மையுடனும் விறுவிறுப்புடனும் அமைந் துள்ளது. ஆயின் அறிவியல் புனைவுக்கு மாறாக வரலாறு குறித்த புனைவு இந்நாவலில் இடம்பெற்றுள்ளது. சுருங்கை எனப்படும் பழைமையான நகரத்தைக் கதைக் களமாகக் இந்நாவல் கொண்டுள்ளது.
கிரேக்க கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ள இந்நகரம் பல்வேறு கோயில்களும் அரசமாளிகைகளும் மர்மப் பாதைகளும் நிறைந்தவையாக அமைந்துள்ளது. இந்நகரில் நடக்கும் கொலையைத் துப்புத்துலக்குவதற்கு வந்த நபரே கடைசியில் அந்நகரில் நடக்கும் பல கொலைகளுக்குக் காரணமாக இருப்பது நாவலின் இறுதியில் விடுவிக்கப்படுகின்றது. புத்த சமயத்தாரால் ஆளப்பட்ட நாடு என்ற கருத்துக்கு மாற்றான வரலாற்றை எழுத முயலும் யுனசேனன், நாவலில் கொல்லப்படுகின்றான். மத அதிகாரத்தின் அரசியல் விளையாட்டு வரலாறெழுதியலிலும் தொடர்வதை இந்நாவல் நுட்பமாக உணர்த்துகின்றது. அதே சமயத்தில் மதவாத அரசியலால் இலங்கையில் பழைய தமிழ் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதையும் இந்நாவல் நினைவுபடுத்துகின்றது. இந்தியாவில் மதவாத அரசியல்வாதிகள் திராவிட நாகரிகமான சிந்துவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகமாக மாற்றிக்காட்ட செய்கின்ற முயற்சிகளையும் (காளை வடிவத்தை குதிரை வடிவமாக்கல்) தமிழவனின் இந்நாவலும் எம்.ஜி.சுரேஷின் ‘யுரேகா என்றொரு நகரமும்’ மறைமுகமாக வாசகனுக்கு நினைவுபடுத்துகின்றன. வெகுஜன அரசியலிலுள்ள துப்பறியும் நாவல்களில் விறுவிறுப்பும் மர்மமுமே நிறைந்திருக்குமே அல்லாது இந்நாவல்களைப் போன்ற சமூக உள்ளடக்கமும் பூடக வாசிப்பும் புதிய எடுத்துரைப்பியலும் அவற்றுக்குக் கிடையாது.
பிறழ் எழுத்தும் மொழிச் சிதறடிப்பும்: தமிழவன்
பிறழ் எழுத்துமுறைக்கும் மொழிச் சிதறடிப்பிற்கும் புனைவுலகப் பயணத்திற்கும் காட்டாக தமிழவனின் ‘சரித்திரத்தில் படித்த நிழல்கள்’ நாவல் அமைந்துள்ளது. நாட்டார் கதை பாணியில் துதி, சொல்வோன் கூற்று என்பதாகத் தொடங்கும் இந்நாவல், இமை மூடியபடி பார்க்கும் பாக்கியத்தாயின் சரித்திரத்தை முதலில் எடுத்துரைக்கின்றது. தொடர்ந்து அவளது கணவன் தெகிமொலோ அரசனான பச்சைராஜனின் சரித்திரம் எடுத்துரைக்கப்படுகின்றது. ராஜபோஜனம், சூனியக் குதிரையில் பிறந்தவன் கதை, கர்ணா பொக்கிசத்தின் கதை என ஒவ்வொரு அத்தியாயமும் தலைப்பைப் பெற்று மரபான எடுத்துரைப்பியலைக் கொண்டுள்ளது. பழைய தேவதைக்கதையைப் போன்று அமைந்தாலும் நிகழ்கால வரலாறும் நாவலுக்குள் ஊடாடத்தான் செய்கிறது. தெகிமொலோ தேசம் தமிழ்த்தேசத்தையும் தெகிலோ மொழி நூலக எரிப்பு யாழ்ப்பாண நூலக எரிப்பையும் ‘ஹேராம்’ என்ற உச்சரிப்பும் கைத்தடியும் காந்தியையும் நினைவுபடுத்துகின்றன. பல்கலைக்கழக மொழித்துறையும் நாவலில் ஓரிடத்தில் சுட்டப் படுகின்றது.
கதைக்குள் காலம் சீட்டுக்கட்டுப்போல் முன்பின் செருகப்படுவதாகவும், பொலபொலவென உதிர்வதாகவும் நாவலாசிரியர் காட்டுகின்றார். பழைய சரித்திரக்கதை போன்ற புனைவுக்குள் நிகழ்கால அர்த்தத்தைப் பொதிய வைக்க நாவலாசிரியர் முயற்சித்துள்ளார். ஆயின் புனைவு வாசகனிடம் எந்த விதமான கதையனுபவத்தையும் வாழ்க்கையனு பவத்தையும் வாசக அனுபவத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக வாசகனைப் பற்றி எந்தவிதமான அக்கறையு மில்லாத இந்தப் பிரதி படைப்பாளியின் மேதா விலாசத்தைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இதயத்தால் எழுதப்படாது மூளையால் செய்யப்பட்ட இந்த நாவல், பின்நவீனத்துவ இலக்கணம் கொண்ட நாவலாக இருக்கலாம். இலக்கியம் கண்டதற்குத்தான் இலக்கணம் இயம்பப்படும். ஆனால், இந்நாவலோ இலக்கணத்திற்காக உருவாக்கப்பட்ட இலக்கியப் பிரதியாக அமைந்துவிட்டது. பழைய யாப்பு, அணி இலக்கண நூல்களில் விவரிக்கப்பட்ட இலக்கணத்திற் கேற்ற எடுத்துக்காட்டுப் பாடல்கள் கிடைக்கவில்லை யெனில் இலக்கணக்காரர்கள் தாமே சொந்தமாக செய்யுட்களை எழுதிச் சேர்ப்பர். அதைப்போன்று இந்நாவலும் பின்நவீனத்துவ நாவல் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாகக் காட்டுவதற்கு செய்யப்பட்ட நாவலாக இருக்கின்றது. ஆயின், முதற்பதிப்பில் பின்நவீனத்துவ நாவல் என்ற முத்திரையைத் தாங்கிய நாவல் இரண்டாம் பதிப்பில் பின்காலனித்துவ நாவலாக மாறிய அதிசயம்தான் சாதாரண வாசகர்களுக்கு விளங்கவில்லை. பின்நவீனத்துவப் பிரதி, ‘நகரும் பிரதி’ என்பதால் ஒருவேளை முதற்பதிப்பிலிருந்து இரண்டாம் பதிப்பிற்கு நகரும்போது வேறொரு வகையான பிரதியாக மாறிவிட்டதோ என்னவோ!
அண்மையில் வெளிவந்த தமிழவனின் ‘முஸல்பனி’ நாவலும் இத்தகையதே. இந்நாவல் சரித்திரத்தில் படிந்த நிழல்கள், நாவலின் இரண்டாம் பாகம் எனக் கருதத்தக்க வகையில் அமைந்துள்ளது. சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவலைப்போன்று இந்நாவலிலும் தெகிமோலா அரசர் ஒருவர் வருகிறார். பாத்திரங்களை விநோதப்படுத்துதல் இந்நாவலிலும் இடம்பெறுகின்றது. தெகிமொலா அரசர் அத்திரிகப்பா எட்டுத் தலைகள் கொண்டவன். அத்திரிகப்பாவின் மகள் முஸல்பனி இந்நாவலின் கதைத்தலைவி. அவளது இடதுகால் வலது காலைவிட மூன்று அங்குலம் குறைவுடையது. முஸல்பனி மண்ரா பட்டணத்தை ஆள்பவள். தெகிமொலாவைத் தமிழ் என்னும் மண்ரா பட்டினத்தை மதுரைப்பட்டிண மென்றும் மூளையுள்ள வாசகன் தனது மூளையைக் கசக்கிப் பிழிந்து புரிந்து கொள்ளலாம். இதேபோன்று எட்டாவது இயலில் வரும் ஆதி இலக்கணக்காரனைத் ‘தொல்காப்பியன்’ என்றும் அவன் கட்டிய மூன்று கட்டிடத்தை எழுத்து, சொல், பொருள், என்ற மூன்று அதிகாரங்களாகவும் ‘ஐந்து பாத்திகள் கட்டி பிரித் திருக்கும் பயிர் போன்ற மக்கள்’ என்பதில் ஐந்து பாத்தி களை ஐந்துவகை ஜாதிப்பிரிவுகளாகப் புரிந்துகொள்ள வேண்டுமென வாசகன் நிர்பந்திக்கப்படுகிறான். இந் நாவலின் வாசகன், தமிழ் கற்றறிந்த ஆய்வாளராகவோ பேராசிரியராகவோதான் இருக்கமுடியும்.
இந்நாவலின் 23-ஆவது இயலான ‘எல்லோரும் செய்த யுத்தம்’ அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஈழ விடுதலைப் போரை நினைவுபடுத்துகின்றது. 24ஆவது இயலின் இறுதியில் இடம்பெறும் அடிக்குறிப்பில் இது முள்ளி வாய்க்கால் போராக ஆசிரியரால் சுட்டப்படுகின்றது. நாவல் வாசிப்பு நாம் முன்னர் குறிப்பிட்டதுபோன்று வாசகனுக்கு எந்த அனுபவத்தையும் ஏற்படுத்தாது, நாவலாசிரியரின் அறிவுஜீவித்தனத்தையே பறை சாற்றுகிறது. அத்திரிகப்பா, முஸல்பனி போன்ற ‘தூய’ தமிழ்ப்பெயர்கள் வாசகனைத் துரத்தியடிக்கின்றன. இந்நாவலின் முன்னுரையில் ஈழத்தமிழர் படுகொலையைப் பேசத்தக்க வலிமையான மொழியில், கற்பனையில், புனைவில் எதிர்மறைக் கேலியாக, பிரதிகளின் ஊடாட்ட மாக, மொழியையும் படிமத்தையும் கலந்து போர்ஹே, இட்டாலோ கால்வினோ பாணியில் எழுதியிருப்பதாக வாசகனை தமிழவன் மிரட்டுகிறார். போர்ஹே, பூடகமாக புனைவின் மொழியில் தனது நாவல்களை எழுதியிருப்பதற்கு ஒரு நியாயம் இருக்கின்றது. இலத்தீன் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிரான கருத்தியலை அங்கு சுதந்திரமாகப் பேச இயலாது. ஆனால், ஈழத்தமிழர் விடுதலைக்கு தமிழ்நாட்டில் அரசியல் இயக்கங்களே போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கும்போது, மேலை நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் யதார்த்தத்தின் மொழியில் தமிழ்நாவல்களைக் கட்டமைக்கும்போது, தமிழவன் மட்டும் புனைவுகளுக்குள் புதைந்து கொள் வதன் இரகசியம் நமக்குப் புரியவில்லை.
மொழிவிளையாட்டும் வாசகமறுப்பும்: கோணங்கி
பின்நவீனத்துவத் தமிழ் நாவலாசிரியர்களுள் நாவலை மொழியின் விளையாட்டுக் களமாகக் கையாளு கிறவர், கோணங்கி ஆவார். பாழி, பிதுரா என்கிற வரிசையில் அண்மையில் வெளிவந்துள்ள இவரது ‘த’ நாவலும் பின்நவீனத்துவப் பிரதியாக அமைந்துள்ளது. ஆயிரம் வயதான ஆமை பிரகஸ்பதியுடன் உரையாடல் செய்வதாக இந்நாவலின் நூன்முகம் அமைந்துள்ளது. இந்நான்முகத்தில் ‘த’ என்பது இயற்கை நிகழ்ச்சிகளால் வகுக்கப்படும் குறுக்கும் மறுக்குமான பாதைகள் என்று நாவலாசிரியரால் புலப்படுத்தப்படுகின்றது. இதே போன்று சூதுப்பலகையாக கதாபாத்திரங்களை வைத்து இந்நாவலை எழுதியுள்ளதாக நாவலாசிரியர் குறிப்பிடு கின்றார். நாவலின் முதல் இயல் கழுகின் நகம் பொருந்திய இறக்கைகள் கொண்ட பிணவசியக் காரனால் எழுதப்பட்டுள்ளது. ‘காலரா ரயில்’ எனும் 97ஆவது இயலுடன் முடியும் இந்த நாவல், நாற்கரச் சாலைகளை உருவாக்கிய உலக முதலாளித்துவம் இந்தியாவில் மண்ணின் மைந்தர்களான பழங்குடி களையும் விவசாயிகளையும் கொன்றொழிப்பதையும் அதற்குப் பின்புலமாக வேதாந்தா போன்ற அமெரிக்க பண்பாட்டு நிறுவனங்கள் இருப்பதையும் முதல்இயலில் குறிப்பாகச் சுட்டுகின்றது.
நாவலின் பெரும்பான்மை யான இயல்கள் பிரிட்டிஷாரின் காலனியஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் இராமநாதபுரம், செட்டி நாட்டுப் பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை முதலான தென்கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற வரலாற்றையும் அவர்கள் அடைந்த இன்னல்களையும், கங்காணிகளின் கொடுமைகளையும், காலரா முதலான கொடிய நோய்களின் தாக்கத்தையும் விவரிக்கின்றது. இவற்றி னூடாக தஞ்சையை மையமாக வைத்து காலனிய ஆட்சிக்கால ஓவிய (கலங்காரி), இசை (வீணை, கருநாடக இசை) வரலாறும் விவரிக்கப்படுகின்றது. நாவலின் எடுத்துரைப்பியல் மாந்திரிக யதார்த்தத்தின் புனைவுடனும் பிரதிகளின் ஊடாட்டத்துடனும் அமைந்துள்ளது. நாவலில் பைபிளில் வரும் மகதலேனா, மணிமேகலையின் ஆபுத்திரன், புத்தர், கபிலர், நாயக்கர் காலத் தெலுங்குப் பெண்கவிஞர் முத்துப்பழனி, பர்மா காங்கிரஸ், சயாம் மரணரயில், கழுவேற்றப்பட்ட சமணர்கள், சரபோஜி மன்னர், வள்ளலார், பாரதி, ஜி.நாகராஜன், ப.சிங்காரம், கிழக்கிந்திய கும்பெனியர் என காலம் வெளி கடந்து மனிதர்கள், சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதே போன்று நாவலின் கதைக் களமும் மதுரை, தஞ்சை, சென்னை, ஒடிஷா, பர்மா, இலங்கை, மலேசியா எனப் பல வெளிகளில் இயங்கு கின்றது.
முக்கூடற்பள்ளுவில் இடம்பெறும் நெற் பட்டியல் (பக். 3,4) ஈங்கையுரை கானம், ஈனில் முதலான சங்க இலக்கியச் சொற்களும் நாவலில் இடம்பெற்று உள்ளன. நாவலின் இறுதிப்பகுதியில் இடம்பெறும் “செத்தவர்களை சாவோர் சுமந்து கீழே விடுகிறார்கள்” என வரும் வரி ‘செத்தாரைச் சாவார் சுமப்பர்’ எனும் நாலடியார் பாடலை நினைவூட்டுகிறது. ‘த’ என்பது மூங்கில் ஒலியாக, தனுஷ்கோடி கடலாக, ஒரு நகராக, வெவ்வேறு விதமாக நாவலில் உருமாறுகின்றது. பாரதி காக்கைக் கவிஞன் என நாவலின் ஓரிடத்தில் குறிப்பாகச் சுட்டப்படுகின்றான். தினகரன், பாஸ்கரன், எட்டைய புரம் சுப்பையா ஆகியோர் இந்நாவலின் கதை மாந்தர் களாகவும் கதை சொல்பவர்களாகவும் திகழ்கின்றனர். இந்நாவலில் மையங்கள் எதுவும் இல்லை என்றாலும், மையம் சிதறடிக்கப்பட்டுள்ளதென்றாலும் நாவலில் இறுதி இயலில் இடம்பெறும் ‘உலோகச்சேவல் பிரஜை களை விழுங்கும் அகதிப்புராணம்’ எனும் தொடருக் கேற்ப இந்நாவலின் மையமாக ‘அகதிப் புராணம்’ (உலகத் தமிழர்களின் அகதிப்பயண வரலாறு) அமைந்துள்ளது.
பழந்தமிழ்ச் சொற்களின் பயன்பாடும் பழந்தமிழ் இலக்கிய நடையும் பல்பிரதிகளின் ஊடாட்டமும் சாதாரண வாசகனுக்கு அந்நியமானவை. மட்டுமல்லாது மொழிநடை கவிதைத்தன்மையில் அமைந்து வாசகன் மனதில் வெவ்வேறு படிமக் காட்சிகளை உருவாக்கு கின்றது. ஆயின், கதையின் எடுத்துரைப்பியலில் வெவ்வேறு வகையான முரண்பட்ட படிமங்கள் அடுக்கப்படும்போது வாசகன் கதையுலகிற்குள் தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் வழிமறிக்கப் படுகின்றான். நாவலாசிரியர் நாவலின் நூன்முகத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல நாவலின் பாதை குறுக்கும் மறுக்குமாக இருப்பதால் வாசகன் வெளியேற வழியின்றி இடியாப்பப் பின்னல்களுக்குள் சிக்கித்தவிக்க நேரிடு கின்றது. திறமையுள்ள சில வாசகர்கள் மட்டுமே குறுக்குமறுக்குப் பாதைகளைக் கடந்து நாவலின் இறுதிவரை பயணம் செய்ய முடியும். சாதாரண வாசகர்கள் முதல் அத்தியாயத்திலேயே நாவலைவிட்டு வெளியே திரும்பும் அபாயமும் இருக்கின்றது. இதுவே திறனாய்வாளர் முருகேசபாண்டியன், கோணங்கியின் நாவல்களைப் பற்றி ‘வாசக மறுப்புப் பிரதி’ என்று விமர்சிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
சமூக யதார்த்தமும் பின்நவீனத்துவமும்
சமூக யதார்த்தத்தையும் பின்னை நவீனத்துவத் தையும் புதிய எடுத்துரைப்பியல் பாணிகளையும் ஒன்றிணைத்துக் கையாளக்கூடிய படைப்பாளிகளாக எஸ்.ராமகிருஷ்ணனும், சு.வேணுகோபாலும் விளங்கு கின்றனர். எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம், உறுபசி, யாமம் ஆகிய நாவல்கள் புதிய எடுத்துரைப் பியல் தன்மைகளைப் பெற்றிருந்தாலும் தனிப்பட்ட வாழ்வின் சமூகத்தின் அறியப்படாத பகுதிகளை வெகு நேர்த்தியாக எடுத்துரைக்கின்றன சு.வேணுகோபாலின் அண்மையில் வெளிவந்த ஆட்டம், உயிர்நிலம் ஆகிய இருநாவல்களும் உலகமயமாக்கலும் பன்னாட்டு முதலாளித்துவமும் தமிழக விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரத்தை அடியோடு பெயர்த்தெறிந்ததை வாழ்வின் உக்கிரத்துடன் விவரிக்கின்றன.
விநாயக முருகனின் ‘ரா¦ஜீவ்காந்தி சாலை’ என்கிற நாவல் இதுவரை நாம் அறிந்திராத மென்பொருள் உலகின் உள்முரண்களை நாவலின் அடிப்படைப் பிரச்சினையாகக் கையாண்டுள்ளது. சென்னையின் நிலவெளியை, சமூகவெளியை, பண்பாட்டு வெளியை மென்பொருள் உலகம் எங்ஙனம் சிதைத்துள்ளது - சீரழித்துள்ளது என்பதை நாவலாசிரியர் விளக்கியுள்ளார். மென்பொருள் உலகம் மட்டுமல்லாது அதனருகே முரண்பட்டு நிற்கக்கூடிய சாமானியர்களின் சேரிப் புறங்களும் நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. மென் பொருள் உலகத்தின் மைய அச்சாக விளங்கும் தொழில்நுட்பங்கள் ஏராளமான ஊதியத்தைப் பெற்றாலும் ஊதியத்தின் பெரும்பகுதி அவர்களது வசிப்பிட, வாகனக் கடன்களுக்குப் போய்விட அவர் களும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித்தவிப்பதைக் காட்டுகின்றார். சைபர் வெளிக்குள் இயங்கும் இத் தொழில்நுட்பர்கள் தங்களது மானுட உணர்ச்சிகளை இழந்து எல்லா உணர்வுகளையும் கணிப்பொறியின் மொழியிலேயே புரிந்துகொள்கின்றனர். நவீன முதலாளித் துவம் மனித உடலை பண்டமாக்கி கசக்கிப்பிழிந்தது. பின்நவீனத்துவ குழும முதலாளித்துவம் மனித உடலை மட்டுமல்லாது மனித ஆன்மாவையும் சிதைத்து வருவதை இந்நாவலில் இடம்பெறும் கதை மாந்தர்கள் உணர்த்துகின்றனர்.
தொழில்நுட்பர்கள் கொம்பு சீவிவிடப்படும் காளைகளைப்போல் ‘தன்முனைப்பு’ என்கிற அகம் சீவப்பட்டு அலைந்து திரிகிறார்கள். வாழ்வியல் தேவைகளுக்காகவும் பணியிடத்தைத் தக்க வைப்பதற்காகவும் எல்லாவிதமான சூழ்ச்சிகளும் புரிகிறார்கள். வாழ்வியல் விழுமியங்கள் எதுவுமற்ற - அறவுணர்வே இல்லாத இயந்திரங்களான இவர்களுள் சிலர் தன்னையே மாய்த்துக்கொள்கின்றனர். மென் பொருள் உலகில் பெண்களின் கற்பு குறித்த கவலை இல்லை. பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மனித சமூகத்தின் உன்னத வளர்ச்சியாகக் கருதப்படுகின்ற ‘மென்பொருள் உலகு’ திரும்பிச்செல்ல முடியாத பாதையாகவும், வெளியேற முடியாத முட்டுச்சந்தாகவும் திகழ்வதை நாவலின் இறுதிப்பகுதி எடுத்துரைக்கின்றது. தொழில்நுட்பர்கள் உடல்உழைப்பில் ஈடுபடும் பாட்டாளிகள் இல்லை யென்றாலும் அவர்களது மூளையும் மூளையின்வழி இயங்கும் உடலும் பெரும் மூலதனத்தால் சுரண்டப் படுகின்றது. பின்நவீனத்துவ முதலாளித்துவ உலகில் வர்க்கப் போராட்டம் என்பது முதலாளிகளுக்கும் பாட்டாளிகளுக்குமான முரணாக இல்லாமல் மூலதனத் திற்கும் உழைப்பிற்குமான முரணாக விளங்குவதை இந்நாவல் வழி அறியமுடிகின்றது. ஆயினும் நாவலின் எடுத்துரைப்பின் சரிபாதி பாலியல் எழுத்தாக அமைந்து அதன் சமூகக்கூர்மையை மழுங்கடித்துவிட்டது.

2000-க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகம்

2000-க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகம்
இமையம்
“எல்லாமே நிரந்தரமாய் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான்
வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்.
வாழ்க்கை என்பது தொடர்ந்து செல்லும்”-*1 ‘லீவ் உல்மன்’.
மொழியின் வரலாறு என்பது மொழியில் உண்டான இலக்கியப் படைப்புகளின் வரலாறுதான். அந்த வகையில் நாவல் என்ற கலை வடிவம் தமிழ் மொழிக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. முதல் நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்து 2014ல் எழுதப்பட்ட நாவல்கள்வரை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான போக்கை கடை பிடித்து வந்திருக்கிறது. நாவலின் மையத்தைத் தேர்ந்தெடுப்பதில், கதை சொல்லும் முறையில், கதை சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், உத்தியில் என்று காலத்துக்குக் காலம் மாற்றம் பெற்று வந்திருக்கிறது. இந்த மாற்றம் காலப்போக்கிலும், காலத்திற்கு ஏற்றவாறும் இயல்பான போக்கிலேயே நிகழ்ந்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக இருப்பவை சமூக வாழ்வில் ஏற்பட்ட அரசியல் நடவடிக்கைகள், கொள்கைகள், கோட்பாடுகள், ஆங்கிலக் கல்வி, உலக அளவில் நாவல் கலையில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் தமிழ் நாவல் கலையிலும் ஏற்பட்டுள்ளன.
தொடக்கக் காலத்தில் நாவல் எழுதுவதின் நோக்கம் நீதியை, சமூக அறத்தை சொல்வதாக இருந்தது. அதற்காக மோசமான ஒரு பாத்திரத்தையும், உத்தமமான ஒரு பாத்திரத்தையும் உருவாக்கிக்காட்டி நாவலாசிரியர் சொல்ல வருகிற நீதியை சொல்வார். சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தில் தேசபக்தி, தேச நலன், தேச ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, விதவைகள் மறுவாழ்வு என்று லட்சிய மனிதர்களை தமிழ் நாவல்கள் உருவாக்கிக்காட்டின. அறுபது எழுபதுகள்வரை மார்க்சிய கொள்கையைப் பின்பற்றி, தொழிலாளர் போராட்டம், வறுமை, வர்க்கப் பிரச்சினை, சமூக மாற்றம், போராட்டம், ஊர்வலம், சங்கம் அமைத்தல், புரட்சி ஆகியவற்றை முதன்மைப்படுத்தி நாவல்கள் எழுதப்பட்டன. எண்பது, தொண்ணூறுகளில் பெண்ணியம், குழந்தை தொழிலாளர் பிரச்சனைகள், வரதட்சணைக் கொடுமைகள் நாவல்களில் முதன்மைப்பெற்றன. இதே காலக்கட்டத்தில் சர்யலிசம், இருத்தலியல் போன்ற தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு நாவல் எழுதியவர்கள் முற்றிலும் புதிய பாணியில் கதை சொல்லும் முறையைப் பின்பற்றினார்கள். தொண்ணுறுக்குப் பிறகு தலித்தியம் என்ற முழக்கத்தோடு நாவல்கள் எழுதப்பட்டன. இதே காலக்கட்டத்தில் பின் நவீனத்துவ பாணி, மேஜிக் ரியலிச பாணி என்ற முறையிலும் நாவல்கள் எழுதப்பட்டன. தற்காலத்தில் பெண்ணியம், தலித்தியம், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை அதிகம் நாவலாக்கப்படுகின்றன.
பழைய காலத்தில் குடும்ப நாவல்கள், சமுதாய நாவல்கள், உளவியல் நாவல்கள், வரலாற்று நாவல்கள், துப்பறியும் கதைகள் என்று பல அடையாளங்களோடு எழுதப்பட்டன. அடுத்து வந்த காலங்களில் நாஞ்சில் நாட்டு இலக்கியம், கொங்கு இலக்கியம், கரிசல் காட்டு இலக்கியம், விளிம்பு நிலை இலக்கியம் என்ற அடையாளங்களோடு வந்தன. இப்போது பெண்ணியம், தலித்தியம், விளிம்பு நிலை, ஒடுக்கப்பட்டடோர் இலக்கியம், மேஜிக் ரியலிசம் என்ற அடையாளங்களோடு நாவல்கள் வருகின்றன. தமிழ் நாவல் வரலாறு என்பது எப்போதுமே ஏதாவது ஒரு அடையாளத்துடனேயே வருகின்றன. கொள்கை, கோட்பாட்டு பின்னணியிலேயே நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மார்க்சிய எழுத்தாளர், பெண்ணிய, தலித்திய, மேஜிக் ரியலிச, பின் நவீனத்துவ, அறிவியல் புனை கதை, வரலாற்று நாவலாசிரியர் என்பது போன்ற அடையாளங்களைத் துறந்த நாவலாசிரியர் தமிழில் இல்லை. அடையாளம் குத்தப்படுகிறது, அடையாளம் விரும்பி ஏற்கப்படுகிறது. நாவலாசிரியர், எழுத்தாளர் என்ற அடையாளம் மட்டும் யாருக்கும் போதுமானதாக இல்லை.
தமிழ் நாவல் வரலாற்றில் எப்போதுமே இரண்டு விதமான போக்குகள் தொடர்ந்து நிலவி வருகிறது. வெகு ஜன எழுத்தாளர்கள் எழுதுகிற நாவல்கள், தீவிர இலக்கியம் என்று எழுதுகிற நாவல்கள். இந்த இரண்டு வகையான போக்கிலும் 2000க்குப் பிந்தைய நாவல்களில் பிராமணர்களின் வாழ்க்கை முறை இல்லை. பிராமணர் மொழி இல்லை. கிட்டத்தட்ட பிராமண எழுத்தாளர்களே இல்லாத காலம் இது. தமிழ் நாவல் உலகில் நிகழ்ந்த அதிசயம் இது. முதல் நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்து 2000 வரை தீவிர இலக்கியமோ, ஜனரஞ்சகமான எழுத்தோ இரண்டிலுமே கோலோச்சியவர்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்கள்தான். பிராமண வாழ்க்கை முறைதான் தமிழ் நாவல்களின் மையமாக இருந்தது. அது இன்று இல்லை. இன்றைக்கு எழுதக்கூடிய ஒன்றிரண்டு எழுத்தாளர்கள்கூட பிராமண மொழியில் எழுதுவதில்லை. பொது மொழியில் எழுதுகிறார்கள். பிராமண வாழ்க்கையை, பிராமண மொழியில் எழுதினால் இன்று அந்த நாவல்கள் விற்குமா? இலக்கியத்தில் – எழுத்தில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த பிராமணர்களின் இடம் இன்று வெறுமையாக இருக்கிறது. பிராமண எழுத்தாளரோ, பிராமண வாழ்க்கையோ, பிராமண மொழியோ ஆதிக்கம் செலுத்தாத காலம் இது.
இன்று தமிழ் நாவல் உலகம் என்பது பிற்படுத்தப்பட்டோரின், ஒடுக்கப்பட்டோரின், தாழ்த்தப்பட்டோரின், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையும் மொழியுமாக நிரம்பி இருக்கிறது. நாவலில் இதையெல்லாம் எழுதலாமா? இப்படியான மனிதர்களுடைய கதைகளை எல்லாம் நாவலாக எழுதலாமா, இப்படியெல்லாம் எழுதப்படுவது நாவலா, இப்படியான மொழியில் எழுதப்படுவதெல்லாம் நாவலா, கலையா, உன்னத இலக்கியமாகுமா என்ற கேள்விகள் எல்லாம் இப்போது இல்லை. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் நாவல் எழுதலாம் என்ற நிலை. யார் வேண்டுமானாலும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும், எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை. எழுத்தில் ஜனநாயகத்தன்மை ஏற்பட்டிருக்கிற காலம் இது. இலக்கியப் பத்திரிக்கைகளை படித்திருக்க வேண்டும், இலக்கிய நூல்களைப் படித்திருக்க வேண்டும், அப்படிப்பட்டவர்களால்தான் நாவல் எழுத முடியும் என்ற நிலையை, வாதத்தை இன்றைய பல தமிழ் நாவலாசிரியர்கள் மாற்றி இருக்கிறார்கள். கூர் மழுங்க செய்திருக்கிறார்கள்.
‘ஆழி சூழ் உலகு‘ (2004) என்ற நாவலை எழுதுவதற்கு முன் இலக்கிய நூல்களைப் படித்தவரோ, இலக்கியப் பத்திரிக்கைகளை படித்தவரோ அல்ல – ஜோ.டி.குரூஸ். அதே மாதிரி ‘சோளகர் தொட்டி‘(2004) என்ற நாவலை எழுதிய ச.பாலமுருகன் தன் முதல் நாவலை எழுதி முடித்த பிறகுதான் இலக்கிய நூல்களை, பத்திரிக்கைகளைப் படிக்க ஆரம்பித்தார். ‘கருக்கு‘(1992) நாவலை எழுதி, நல்ல வரவேற்பை பெற்ற பிறகுதான் பாமா இலக்கியம், நாவல், சிறுகதை என்ற வடிவங்கள் குறித்து அறிந்திருக்கிறார். ஆனால் இந்த மூன்று பேருமே தங்களுடைய முதல் நாவலிலேயே – தமிழ் இலக்கிய உலகில் அதிக கவனம் பெற்றவர்கள். மூன்று பேருமே அதுவரை தமிழ் நாவல் உலகம் அறிந்திராத கதைகளை, மனிதர்களை, வாழ்க்கையை, மொழியை பதிவு செய்தவர்கள். மூன்று நாவல்களிலும் வரும் மனிதர்கள் சமூக படிநிலையில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களோ, நாகரீகமான வாழ்க்கையை வாழ்ந்தவர்களோ, நாகரீகமான மேம்பட்ட மொழியை பேசியவர்களோ அல்ல. எளிய வாழ்க்கையை வாழ்ந்த எளிய மனிதர்கள். ஒரு வகையில் துயரப்பட்ட வாழ்க்கையை, பொது சமூகம் அறிந்திராத வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்.
2000க்குப் பிந்தைய தமிழ் நாவல் உலகம் என்பது விசித்திரமானது. ஒரு வகையில் வண்ணமயமானது. இதுவரை தமிழ் நாவல்கள் எழுதியிராத உலகம். நாவலாசிரியர்கள் கவனிக்கத் தவறிய, நாவலாகாது, கலையாகாது, உன்னத இலக்கியமாகாது என்று பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கித்தள்ளப்பட்ட, முகம் சுளித்த, விலக்கி வைக்கப்பட்ட மனிதர்களும், அவர்களுடைய வாழ்க்கையும், மொழியும்தான் இன்று தமிழ் நாவல்களாக, தமிழ் நாவல் இலக்கியமாக, கலையாக இருக்கிறது. வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்.
ஜெயமோகன் எழுதிய ‘ஏழாம் உலகம்‘ (2003) நாவலில் வரக்கூடிய எல்லா மனிதர்களுமே சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள். ஊனமுற்றவர்கள். பிச்சைக்காரர்கள். பிச்சை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். அவர்கள் மனிதர்கள் அல்ல. ‘உருப்படிகள்‘. வெறும் எண்ணிக்கைகள். அற்ப காசுக்காக ஓயாமல் விற்கப்பட்டுக்கொண்டேயிருப்பவர்கள். அவர்கள்தான் ஏழாம் உலகம். நாவலின் கதாநாயகர்கள். கதை மாந்தர்கள். பிச்சைக்காரர்களுடைய மொழியும், வாழ்க்கைகையும், இழிவும், இப்போதுதான் நாவலாகி இருக்கிறது. இலக்கியமாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழ் நாவல்களில் பிச்சைக்காரர்கள், ஊனமுற்றவர்கள், குருடர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் தனவந்தர்களின் பெருமையைக் காட்ட, ஈகை குணத்தைக் காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டவர்கள். பிச்சைக்காரர்களுடைய வாழ்க்கை மட்டுமல்ல நாடோடி இனத்தவரின் வாழ்க்கையும் மொழியும் இப்போதுதான் நாவலாகி இலக்கியத் தகுதி பெற்றிருக்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணனுடைய ‘துயில்’ (2012) நாவலில் வரக்கூடிய மனிதர்கள் ஊர் சுற்றிகள். நாடோடிகள். எங்கெல்லாம் திருவிழா நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று வித்தைக்காட்டி பிழைக்கக்கூடியவர்கள். சொத்து என்று ஒன்று இல்லாதது மட்டுமல்ல, சொந்த வீடு, சொந்த ஊர் என்றுகூட இல்லாதவர்கள். தனித்தக் கலாச்சாரமோ, பண்பாடோ, மொழிகூட இல்லாதவர்கள். தனித்த உணவு பழக்கம்கூட இல்லாதவர்கள். இவர்கள் வேடிக்கை காட்டும் மனிதர்கள் மட்டுமல்ல, வேடிக்கையான மனிதர்களுமகூட. உடலை மட்டுமே மூலதனமாகக்கொண்டு வேடிக்கைக்காட்டும் மனிதர்கள். எதுவுமே அற்ற மனிதர்களுக்குக்கூட ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது. தொழில் இருக்கிறது, தொழில் சார்ந்த தர்மம் இருக்கிறது. இப்படியான மனிதர்கள்தான் பொது சமுகத்தின் மகிழ்ச்சியாக, கேளிக்கையாக இருந்தார்கள் என்பதும், இதுவும் தமிழ் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதும் இப்போதுதான் நாவலாக சொல்லப்பட்டிருக்கிறது. இதே மாதிரி மற்றொரு நாடோடி வாழ்க்கை வாழ்கிற, ஊர் ஊராக சென்று ஆடுகளை வைத்து கிடைபோடுகிற மனிதர்களுடைய வாழ்கையை சு.தமிழ்செல்வியின் ‘கீதாரி’ (2003) நாவலில் பார்க்கிறோம். நவீன மயம், உலக மயம், கணினி மயம் என்றாகிவிட்ட நிலையிலும்கூட கீதாரிகள் இன்றும் ஆடுகளை ஒவ்வொரு ஊராக ஓட்டிக்கொண்டுப் போகிறார்கள். கீதாரிகள் சமூக அந்தஸ்த்தில் எந்த விதத்திலும் மேம்பட்டவர்கள் அல்ல. அவர்களிடம் இருக்கும் ஆடுகள்தான் அவர்களுடய சொத்து. ஆடுகள் கிடைபோடுகிற இடத்தில் எவ்வளவு புழுக்கைகளைப் போடுகிறதோ – அதை வைத்துத்தான் அவர்களுக்கு பணம் கிடைக்கும், சோறு கிடைக்கும். ஆடுகளின் புழுக்கைகளை விற்று வாழ்கிற வாழ்க்கை. ஆடுகளின் மலத்தை விற்று மனிதர்கள் சோறு சாப்பிடுகிறார்கள். திருமணம், திருவிழா சமயத்தில் மட்டுமே சொந்த ஊர் திரும்புகிறவர்கள். பெரும்பாலும் காட்டிலேயே ஆடுகளுடனேயே வாழ்கிற மனிதர்கள். இந்த மனிதர்களுடைய வாழ்க்கையும் இப்போதுதான் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்திருக்கிறது. அவர்களுடைய மொழியும் – சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் நாவல் இலக்கிய உலகம் தாழ்த்தப்பட்டவர்களுடைய வாழ்க்கையை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்று நாவலில் பதிவு செய்ததே இல்லை. அவர்களுடைய வாழ்வையும் மொழியையும் அசிங்கம் என்று காலந்தோறும் ஒதுக்கிவைத்தே வந்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுடைய மொழியை ‘நீச பாஷை‘ என்றும், ‘கொச்சை மொழி‘ என்னும் ‘கச்சடா‘ மொழி என்றும் சொல்லி வந்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுடைய வாழ்க்கையும் தமிழ் வாழ்வின் ஒரு பகுதிதான், தாழ்த்தப்பட்டவர்கள் பேசுகிற மொழியும் தமிழ்மொழிதான். அது நாவலாகும், இலக்கியமாகும், கலையாகும் என்பதை கடந்த இருபதாண்டுகளில் பல எழுத்தாளர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக பாமாவின் ‘வன்மம்‘ (2002) சோ.தர்மனின் கூகை (2006), அழகிய பெரியவனின் ‘தகப்பன்கொடி‘ (2011) ஸ்ரீதர கணேசனின் ‘வாங்கல்‘(2001), சிவகாமியின் ‘உண்மைக்கு முன்னும் பின்னும் (2013), ராஜ் கௌதமனுடைய ‘சிலுவை ராஜ் சரித்திரம்’ (2002), ‘காலச்சுமை’ (2003), ‘லண்டனில் சிலுவை ராஜ்’ (2004) ஆகிய நாவல்கள் முற்றிலும் அவர்களுடைய வாழ்க்கையை, அவர்களுடைய மொழியின் வழியே – தாழ்த்தப்பட்டவர்களுடைய வாழ்வின் அறத்தை, அழகியலை – நாவலாக்கினார்கள், இலக்கியமானார்கள், கலையாக்கினார்கள். தாழ்த்தப்பட்டவர்களுடைய நாவல்கள்தான் இன்று – தமிழ் நாவல்களின் உலகை, தரத்தை, மேன்மையை, அழகியலை கூட்டியிருக்கிறது என்பதை – இந்த நாவல்களுக்கு கிடைத்த வரவேற்பின் வழியே அறிய முடியும். இதுவரை பொது சமூகம் பார்க்கத் தவறிய, பொருட்படுத்த தவறிய வாழ்க்கையைத்தான் பாமா, சிவகாமி போன்றவர்களுடைய எழுத்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
சிவகாமியின் ‘உண்மைக்கு முன்னும் பின்னும்‘என்ற நாவல் தமிழ் இலக்கிய உலகிற்கு முற்றிலும் புதிய ஒரு உலகைக் காட்டியுள்ளது. தமிழ் நாவலாசிரியர்கள் பார்க்கத் தவறிய, சொல்லத் தயங்கிய, ‘ஐயோ‘ என்று பயந்து ஒதுங்கிய ஒரு உலகம். அதுதான் நம்முடைய அரசு அலுவலகங்கள். பொது வெளியில் பின்பற்றப்படுகிற ஒழுங்கீனத்தைவிட, தீண்டாமையைவிட நம்முடைய அரசு அலுவலகங்களில்தான் தீண்டாமை கடுமையான விதத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. சாதி சார்ந்த அணுகுதலும், விலகுதலும் எப்படி சாத்தியமாகின்றன? கடைநிலை ஊழியரிடம் காட்டப்படும் பாரப்பட்சம், தீண்டாமை, ஒதுக்குதல், புறக்கணித்தல் எப்படி உயர்ந்த பதவியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கக்கூடிய நபரிடம் காட்டப்படுகிறது. உயர்ந்த வகுப்பில் பிறந்த ஒரு கடைநிலை ஊழியன் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய அதிகாரியிடம் ஏன் கீழ்படியாமல் இருக்கிறான்? கீழ்படியாமல் இருப்பது மட்டுமல்ல புறக்கணிக்கவும், ஒரு வகையில் இழிவு படுத்தவும் முடியும் என்பதை சிவகாமியின் நாவல் பேசுகிறது. இதுதான் இன்றைய அரசு அலுவலகங்களின் உளவியல். சமூகத்தின் உளவியலும் இதுவே. தமிழ் நாவல் உலகம் கண்டிராத வாழ்க்கை இது. நீல பத்மநாபனுடைய ‘மின் உலகம்‘ என்ற நாவலுக்கு அடுத்து, அரசு அலுவலக நடைமுறைகள் குறித்து பேசிய நாவல் ‘உண்மைக்கு முன்னும் பின்னும்.‘
வரலாற்று நாவல்கள் என்று முன்பு எழுதியவற்றுக்கும் தற்காலத்தில் எழுதப்படுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கல்கி, அகிலன், ஜெக சிற்பியன், கோ.வி.மணிசேகரன், விக்ரமன், நா.பார்த்தசாரதி, மு.கருணாநிதி போன்றவர்கள் எழுதிய வரலாற்று நாவல்களில் – மன்னர்களுடைய வீரதீரங்கள், வெற்றிகள், காமக்களியாட்டங்கள், காதல் லீலைகள், புத்தி சாதூரியங்கள், கோட்டை கொத்தளங்கள், அழகு மேனிகள் போன்றவற்றைத்தான் பார்க்க முடியும். ஆனால் தற்காலத்தில் எழுதப்படுகின்ற வரலாற்று நாவல்களில் சாதாரண மனிதர்கள், திருடர்கள், பாலியல் தொழிலாளிகள், நாடோடிகள் என்று பலரும் வருகிறார்கள். எளியவர்களுடைய அழுகை, கண்ணீர், நடவடிக்கைகள், அசலான வாழ்க்கை பதிவாகியிருக்கின்றன.
மன்னர்களுடைய கதைகளை மட்டுமே வரலாறுகளாக, வரலாற்று நாவல்களாக புனையப்பட்டதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு – சமகால சம்பவங்களையும், வரலாற்று நாவல்களாக எழுத முடியும் என்று ச.பாலமுருகனுடைய சோளகர் தொட்டி நிரூபித்துள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடி வந்த கர்நாடக போலீசாரும், அதிரடிப் படையினரும் மலை வாழ் மக்களிடம் எப்படி நடந்து கொண்டனர்? எவ்வளவு வன்முறைகள், எவ்வளவு மனித உரிமை மீறல்கள், வன்புணர்ச்சிகள், கணவன் முன்னிலையிலேயே பலர் மாறிமாறி வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண்களின் அலறலும் பெண்ணுறுப்பில் லத்திகளை செருகித் துன்புறுத்தப்பட்ட பெண்களின் அலறலும், மேற்குத் தொடர்ச்சி மலையெங்கும் எதிரொலித்தது. அந்த கதறல்களின் தொகுப்புத்தான் சோளகர் தொட்டி. சோளகர் என்பது மலைவாழ் மக்களின் பெயர் – ஒரு பிரிவு. தொட்டி – என்பது வாழிடத்திற்கான பெயர். ஆவணத்தை, அரசுக் கோப்புகளை வைத்து நாவலாக்க முடியும், கலையாக்க முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் ‘சோளகர் தொட்டி‘. அரசும், அச்சு, காட்சி ஊடகங்களும், போலீசும், உருவாக்கிக் காட்டிய உலகத்தின் மறுபக்கத்தை வீரப்பன் தொடர்பான, மலை வாழ் மக்களின் துயரத்தைக் காட்டியது சோளகர் தொட்டி. சந்தன கடத்தல் வீரப்பன் தமிழ் நாவலில் முக்கியமான பாத்திரம். அவருடைய மனைவி முத்து லட்சுமியும் ஒரு பாத்திரம். இன்று உயிருடன் உள்ள பல மனிதர்கள் நாவலில் முக்கியமான பாத்திரங்களா இருக்கிறார்கள் என்பது தமிழ் நாவல் உலகில் நிகழ்ந்த பெரிய அதிசயம்.
ச.பாலமுருகன் அண்மைக்கால வரலாற்றை நாவலாக்கினார் என்றால் பா.வெங்கடேசன் நாயக்கர்கால வரலாற்றை ‘காவல் கோட்டம்‘(2008) என்று எழுதினார். நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் களவுத் தொழிலில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தவும், களவுத் தொழிலை ஒழிக்கவும் நினைத்த நாயக்க மன்னர்கள், களவுத் தொழிலில் ஈடுபடுகிறவர்களையே காவலர்களாக நியமித்தனர். திருடர்களைக் கொண்டே திருடர்களைப் பிடிக்க முயன்றனர். ஒவ்வொரு ஊருக்கும், கோவிலுக்கும், மதுரையிலுள்ள நாயக்கர் மகாலை காப்பதற்கும் நியமிக்கப்பட்டவர்கள்தான் கள்ளர்கள். காவலர்கள். அவர்கள் காவல் காக்கும் எல்லைதான் கோட்டம். அதாவது காவல் கோட்டம். கள்ளர்கள் என்பது சாதியின் பெயரல்ல, தொழிலின் பெயர். இந்நாவல் நாயக்கர் கால ஆட்சியின்போது – நிர்வாகத்தின் கடைநிலை ஊழியர்களாக இருந்த காவலர்களைப்பற்றி பேசுகிறது. மன்னர்களுடைய வாழ்க்கையைப்பற்றி அல்ல. அக்காலத்தில் சோற்றுக்காக திருடிய மனிதர்களைப்பற்றி பேசுகிறது. களவுத்தொழிலில் ஈடுபட்டவர்களையும் நாவலில், இலக்கியத்தில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்தது காவல் கோட்டம். இந்நாவல் கள்ளர்கள் அதிகாரம் பெற்ற வரலாறு, கள்ளர்கள் வீரம் பெற்றவர்களாக சித்தரிக்கப்பட்ட வரலாறு. காவல் கோட்டம் பல ஊர்களின் கதைத்தொகுப்பு. ஆங்கில அரசால் குற்றப்பரம்பரையினர் என்று வகைப்படுத்தப்பட்டவர்களின் கதை. வாழ்க்கை.
சிவகாசியில் நடந்த பெரும் சமூக கலவரத்தைப் பற்றி பேசுகிறது பூ மணியின் ‘அஞ்ஞாடி’ (2012), கேரளாவிலிருந்து விரட்டப்பட்ட, தப்பி ஓடிவந்த நாடார்கள் எப்படி தமிழகமெங்கும் நிலைபெற்றார்கள்? குறிப்பாக தென் தமிழகத்தில்? அதிகமாக சிவகாசி பகுதியில் கால் ஊன்றியதற்கான காரணம் என்ன? பெரும் எண்ணிக்கையில் நாடார்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் மதமாற்றம் பெற்றார்கள். தாங்களாகவும் மதமாற்றம் பெற்றனர். சிவகாசி கலவரத்திற்கு எது காரணம் என்று ஒரு நூற்றாண்டு வரலாற்றைப் பேசுகிறது. தோள் சீலைக்கூட போட அனுமதிக்கப்படாத சமூகம், ‘மரமேறி’ என்று இழிவுப்படுத்தப்பட்ட சமூகம் எப்படி தமிழகமெங்கும் வியாபாரத்தில், தொழிலில் பெரும் சக்தியாக மாறினார்கள் என்பது நாவலாகியிருக்கிறது. கடந்த நூற்றாண்டில் நடந்த சமூக மாற்றத்தை, அரசியல், பொருளாதார, மாற்றத்தை, சமூக வன்முறையை, பூமணி நாவலாக்கியிருக்கிறார். கலையாக்கி இருக்கிறார்.
வரவாறுகளைப் புனைவாக்கிய வரிசையில் ஜெயமோகனுடைய ‘வெள்ளை யானை’ (2013), கவனத்திற்குரிய நாவல். 1878 – காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டப் பெரும் பஞ்சத்தைப்பற்றி இந்நாவல் பேசுகிறது. தாது வருச பஞ்சம் – என்று வர்ணிக்கப்பட்ட, மக்களின் மனங்களில் இன்றும் நினைவிலிருக்கும் சமூக நிகழ்வு. முதன் முதலாக வரலாற்றில் கஞ்சித் தொட்டி வைக்கப்பட்ட நிகழ்வு நடந்த காலம். பசியைப் போக்கவும், உயிர் பிழைத்திருக்கவும் கொத்தடிமைகளாய் வெள்ளையர்களின் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலை செய்வதற்கு ‘மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, ஆப்பிரிக்கா, மொரீசியஸ் தீவுகளுக்கு கப்பலில் மனிதர்களை அடிமைகளாக்கி ஏற்றி செல்லப்பட்ட, தாங்களாகவே விரும்பி சென்ற வரலாறு. பசியால் ஒரே நாளில் எப்படி ஆயிரக்கணக்கில் மனிதர்கள் மாண்டார்கள் என்ற வரலாறு, செயற்கையான பஞ்சத்தை யார் உருவாக்கினார்கள்? தமிழகமெங்கும் பஞ்சத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது, வெள்ளையர்கள் மட்டும் எப்படி பெரும் பணக்காரர்களாக மாறினார்கள், ஐஸ் ஹவுஸ் போராட்டம் எதனால் நிகழ்ந்தது அனைத்தும் – கலை நுணுக்கத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது வெள்ளை யானை நாவலில். இந்த நாவல் வெள்ளையர்களுடைய நிர்வாகத்திறனைப்பற்றி பேசவில்லை. மாறாக அக்காலத்தில் வாழ்ந்த எளிய மனிதர்களைப்பற்றி பேசுகிறது. எளிய மனிதர்களின் உணர்வுகளை, உணர்ச்சிகளை, வயிற்றைப்பற்றி, உழைப்பைப்பற்றி, உழைத்தவர்கள், உற்பத்தி செய்தவர்கள் பட்டினியால் செத்ததுப் பற்றி பேசுகிறது.
வரலாற்று நாவல்களில் கூடுதல் கவனத்தை ஈர்ப்பதாக இருப்பது அசோகன் நாகமுத்து எழுதிய ‘போதியின் நிழல்’ (2012) என்ற நாவல். யுவான் சுவாங் இந்தியா வந்த பயணத்தை பேசுகிறது. வரலாற்று நூல்களில், வரலாற்று ஆசிரியர்களின், மாணவர்களின் மனதில் பதிந்துள்ள தகவல் – யுவான் சுவாங் ஒரு புத்த பயணி என்பதுதான். ஒரு வரி கேள்வி. ஒரு வரி பதில். ஆனால் போதியின் நிழல் நாவல் – யுவான் சுவாங்கின் பயண நோக்கத்தை பேசவில்லை. பயண வாழ்வை பேசுகிறது. அவருடைய ஆழ்மன வேட்கை, தேடலை பேசுகிறது. அவருடைய மனதிலிருந்த வெறுமையை, அறிவின் தீட்சிண்பத்தை பேசுகிறது. யுவான் சுவாங் புறப்பட்ட இடத்திலிருந்து வந்து சேர்ந்த இடம் வரையிலான வாழ்க்கைதான், பயணத்தில் அவர் பெற்ற, பகிர்ந்தளித்த சிந்தனையின் விதைகள் எப்படி இன்றும் மட்கிப் போகாமல் காலம்தோறும் முளைவிட்டபடியே, புதிய விதைகளை உற்பத்தி செய்தபடியே, விருட்சங்களாக இருக்கின்றன என்ற அதிசயத்தை – போதியின் நிழல் நாவல் பேசுகிறது. மரத்தைப்பற்றி பேசக்கூடாது. மரம் வேர்கொண்டுள்ள மண்ணைப்பற்றியும், நம் நிலத்தின் அழகையும், அதன் உண்மையான செல்வத்தையும் தேட சொல்கிறது. இந்த நாவலில் புத்தரையும் யுவான் சுவாங்கையும் புதிய வழியில் தர்சிக்கிறோம். அசோகன் நாகமுத்துவின் மொழிநடை ஈர்ப்புடையதாக இருக்கிறது.
2000க்குப் பிறகுதான் இனவரைவியல் சார்ந்த நாவல்கள் எழுதப்பட்டன. அந்த வகையில் எஸ்.செந்தில்குமாரின் ‘காலகண்டமும்‘(2013), ஜோ.டி.குருஸின் ஆழி சூழ் உலகு‘ம் முக்கியமானவை. சி.ராஜநாரயணனின் ‘கோபல்ல கிராமம்‘ என்ற நாவலுக்குப் பிறகு முழுமையான இனவரைவியலைப் பேசிய நாவல்கள் என்று இவற்றை சொல்ல முடியும். ஜோ.டி.குருஸ் தன்னுடைய ‘ஆழி சூழ் உலகு‘ நாவலின் மூலம் தமிழ் நாவல் உலகிற்கு ஒரு புதுமுகத்தை தந்தார். இதில் பெரிய தனவந்தர்கள், பண்ணையார்கள், நிலச்சுவான்தாரர்கள் இல்லை. கடலுக்குப் போனால் சோறு, பலமாக காற்று அடித்தால், கடல் கொந்தளிப்பாக இருந்தால் சோற்றுக்கு வகையற்ற மனிதர்கள் கதாபாத்திரமாகி இருக்கிறார்கள். மீனவ வாழ்க்கை என்பது கயிற்றில் அந்தரத்தில் தொங்கும் கழைக் கூத்தாடியின் வாழ்க்கைகையவிட மோசமானது. எப்போது என்ன நிகழுமோ என்ற அச்சத்திலேயே, பதட்டத்திலேயே வாழ நேர்கிற அதே நேரத்தில் சாகசம் நிறைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள். மீனவர்கள் அன்றாடம் அரிய சாகசத்தை நிகழ்த்துவது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அல்ல, வயிற்றை நிரப்புவதற்காக. கிருத்துவ மிஷனரிகள் எப்படி கடலோர வாழ்பகுதி மக்களை கிருத்துவ மயமாக்கியது என்ற வரலாறும் நாவலுக்குள் இருக்கிறது. சங்க கால இலக்கியத்திற்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் பரதவர் குறித்த பதிவு என்பது அரிதாகவே இருந்தது. அந்த குறையைப் போக்கியது மட்டுமல்ல சராசரியான மனிதர்களும், சமுகத்தில் எந்த முக்கியத்துவமுமில்லாத மனிதர்களும் நாவலில் கதாபாத்திரங்களாக முடியும் என்பதை சொன்ன நாவல் ஆழி சூழ் உலகு.
தமிழகத்தின்மீது நாயக்கர்கள் போர் தொடுக்கத் திட்டமிட்டு வந்தபோது, அவர்களோடு பல தொழில்களை செய்கிற சமூகத்தினரும் தமிழகத்திற்கு வந்தனர். குறிப்பாக கன்னடத்திலிருந்து, ஆந்திராவிலிருந்து. அப்படி வந்த ஒரு பிரிவு மக்கள்தான் பொற்கொல்லர்கள். ஆந்திராவிலிருந்தும், கன்னடத்திலிருந்தும் அவர்கள் எப்படி இடம் பெயர்ந்தார்கள், தமிழகத்தில் குறிப்பாக மதுரை, தேனி, போடி போன்ற இடங்களில் எப்படி நிலைபெற்றார்கள் என்ற வரலாற்றை, ஒரு இனத்தின் கதையை சொல்கிறது எஸ்.செந்தில்குமாரின் ‘காலகண்டம்‘. குடியேற்றம் என்பதும், இடம் பெயர்தல் என்பதும் காலந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இடம்பெயர்கிற மனிதர்கள் வெறும் உடலோடு, உடமைகளோடு மட்டும் வருவதில்லை. கலாச்சார, பண்பாட்டு கூறுகளோடும் சேர்ந்துதான் வருகிறார்கள். எந்த இடத்தில் நிலைபெற்றாலும் எந்த ஒரு சிறு இனக்குழுவும் மொழியை இழப்பதில்லை. சடங்குகளை, நம்பிக்கைகளை இழப்பதில்லை என்பதை காலகண்டம் நாவல் சொல்கிறது. போர்களால், படையெடுப்புகளால் இடம் பெயர்ந்த கதை தமிழில் நாவலாகியிருக்கிறது.
தமிழ் நாவல்களில் இரண்டுவிதமான போக்குகள் நிலவுகின்றன. ஒன்று சராசரியான மனிதர்களை எழுதுவது. மற்றொன்று வரலாற்று மனிதர்களை, வரலாற்று நிகழ்வுகளை எழுதுவது. இரண்டுக்கும் நல்ல உதாரணங்கள் தமிழிலேயே இருக்கின்றன. “அன்றாட மனிதர்களை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. வரலாற்று உருவகங்கள் மீதுதான் ஈர்ப்பு உள்ளது“ என்று ஜெயமோகன் சொல்கிறார். வரலாற்று உருவகங்களை மட்டுமே எழுதுவது சரியா? இரண்டுமே எழுதப்பட வேண்டும். அதற்கு நல்ல உதாரணமாக இருப்பது சுகுமாரன் எழுதிய “வெல்லிங்டன்”(2013) என்ற நாவல். “வெல்லிங்டன்” என்பது பிரிட்டிஷ் நிர்வாகத்தில் அன்றைய மதராஸப்பட்டின கவர்னருடைய பெயர். அவருடைய பெயரை ஒரு ரயில்வே நிலையத்திற்கு வைக்கிறார்கள். அதை ஒட்டி ராணுவ பயிற்சி மையம் உருவாக்கப்படுகிறது. ராணுவ வீரர்கள், வெள்ளைக்கார துரைமார்கள் வந்து போவதற்கு வசதியாகத்தான் ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டது. இன்று பிரிட்டிஷ் நிர்வாக அதிகாரிகள் இல்லை. ஆனால் ”வெல்லிங்டன்” என்ற ரயில்வே நிலையம் மட்டும் இருக்கிறது. பெயரை அழிக்க முடியவில்லை. காலத்தின், வரலாற்றின் சிறுபகுதி நிகழ்காலத்தோடு வாழ்கிறது. ராணுவ பயிற்சி முகம் இன்றும் இருக்கிறது. வெல்லிங்டன் ரயில் நிலையத்திற்கு செல்கிற இன்றைய மனிதர்கள் மனதில் உருவாகும் சித்திரம் என்ன? அன்றைய மனிதர்களுக்கும் இன்றைய மனிதர்களுக்குமான மனநிலை மாறுபாடு, வாழ்க்கை சார்ந்த பார்வை என்ன என்பதை சொல்கிறது “வெல்லிங்டன்“ நாவல்.
இதே வகையில் மற்றொரு கவனத்திற்குரிய நாவல் பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘புலிநகக் கொன்றை’ (2004). சுதந்திர போராட்ட காலத்தில் தமிழ் சமூகத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள், காந்தி மீதான ஈடுபாடு, தேசபக்தி எப்படியிருந்தது என்பதை ஒரு பிராமண குடும்பத்தின் வழியே சொல்கிறது. அன்றைய தமிழக சூழலை புரிந்துகொள்ள இந்நாவல் உதவுகிறது. சுதந்திர போராட்டம் தமிழகத்தில் எப்படி நடந்தது, எப்படி பார்க்கப்பட்டது, அதில் அதிக ஈடுபாடு காட்டியவர்கள் யார், அதற்கான சமூக காரணிகள் எவைஎவை என்பதை புலிநகக் கொன்றை நாவலின் மூலம் அறியலாம்.
2000க்குப் பிந்தைய நாவல் உலகத்தில் இஸ்லாமிய வாழ்க்கை முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது. தமிழ் நாவல் இலக்கியத்திற்கு இஸ்லாமிய சமூகத்தினர் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். சித்தி ஜீனைதா பேகம் என்பவர் 1938லேயே ‘காதலா கடமையா’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். அதோடு ‘செண்பகவல்லி அல்லது தென்னாடு போந்த அப்பாஸிய குலத்தோன்றல்’ (1947), ‘மலை நாட்டு மன்னன்’, தொடர்கதை, ‘ஹைலிமா அல்லது கற்பின் மாண்பு’, ‘பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை’ ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். 1917ல் நாகூரில் பிறந்தவர் சித்தி ஜீனைதா பேகம். 2000 காலக்கட்டத்லும் இஸ்லாமிய சமூகம் பெண்களை வீட்டிலேயே வைத்திருக்கிறது. பின்வாசல் வழியாக வெளியில் செல்ல அனுமதிக்கிறது என்ற நிலையில் 1938ல் சித்தி ஜீனைதா பேகம் நாவல் எழுதியிருப்பது அதிசயம். பழைய காலத்திலும், நிகழ் காலத்திலும் இஸ்லாமியசமூகம் எப்படியானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது, பெண்களை எப்படி நடத்துகிறது, மத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள் எப்படி குடும்பத்தை, குறிப்பாக பெண்களை பாதிக்கிறது என்பதை – தோப்பில் முகமது மீரானின் ‘அஞ்சு வண்ணம் தெரு‘, (2008), சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை (2004), கீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன்கார தெரு (2006), ‘துருக்கித் தொப்பி’ (2008) போன்ற நாவல்கள் படம் பிடித்துக்காட்டியுள்ளன. இஸ்லாமிய மக்களுடைய நம்பிக்கைகள், சடங்குகள், மொழி, தொழில் நிமித்தமாக வெளிநாடுகளில் வாழ்கிறவர்கள், அவர்களுடைய குடும்பங்கள், ஒரு இஸ்லாமியக் குடும்பம் ஆண் குழுந்தையை நடத்துகிற விதத்திற்கும் பெண் குழந்தையை நடத்துகிற விதத்திற்குமான வேறுபாடுகள், மசூதிகள், மசூதியைச் சுற்றியுள்ள அதிகார மையங்கள், சுரண்டல்கள் என்று சகலவிதமான விசயங்களும் இப்போதுதான் நாவலாகியிருக்கின்றன. ‘புர்கா’விற்குள் பெண்களை வைத்திருக்க விரும்பும் மத நம்பிக்கைகள் சார்ந்த கேள்விகள் அதிகமாக இப்போது எழுதப்படுகின்றன.
தமிழ் நாவல் உலகத்தில் முக்கியமானது பெண்களின் வாழ்க்கை. எல்லாக் காலத்திலுமே பெண்கள் எழுதியிருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் வெகுஜன இலக்கியப் பரப்பில் பெண் எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். பெயரும் புகழும் பெற்றிருக்கிறார்கள். லட்சுமி, சிவசங்கரி, வாஸந்தி இந்துமதி என்று பலர் இருந்தார்கள். இவர்கள் எல்லாருமே வெகுஜன எழுத்தாளர்களாக இருந்தவர்கள். பிராமண இனத்தைச் சேர்ந்தவர்கள். பிராமண குலத்தில் பிறந்திருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டு தீவிர இலக்கியப் பரப்பில் செயல்பட்டவர்கள் அம்பை, சூடாமணி, கிருத்திகா, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்கள். 2000க்கு பிந்தைய பெண் எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள் புதுமுகத்தைக் கொண்டிருந்தன. பெண் என்றால் ‘புனிதம்‘, பெருமை, கற்பு, அழகு, வீடு, அடங்கி நடத்தல், பணிந்து போதல், கேள்வியின்றி வாழ்தல் என்ற வகையில் எழுதாமல், பெண் உடல், பெண் மொழி, உரிமை, சமத்துவம், உடல் வேட்கை குறித்தெல்லாம் எழுதினார்கள். இது தமிழுக்கு புதியபோக்கு. உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை‘(2003), அஞ்சாங்கல் (2013), ஆகிய நாவல் பெண் இருப்பு குறித்து கேள்வி கேட்டவை. சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை. இஸ்லாமிய சமூகத்தில் பெண் என்பவளின் நிலை என்ன? அவளுக்கென்று ஆசைகளோ, விருப்பங்களோ இருக்கக்கூடாது, சமையல் செய்ய வேண்டியது, பிள்ளை பெற வேண்டியது என்ற இஸ்லாமிய சமூகத்தின் கருத்தாக்கம் பற்றி சல்மா கேள்வி கேட்கிறார். ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் இருந்தாலும் – வீடு என்ற நிறுவனத்தில் பெண்ணுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவளுக்கு வேலைக்காரி என்ற தகுதி மட்டும்தான் இருக்கிறது என்றும், நிலவுடமை சமூக சிந்தனைகளே இன்றும் நடைமுறையில் இருக்கின்றன என்ற கோபம் பெண் நாவலாசிரியர்களின் நாவலில் வெளிப்படுகின்ற கோபமாக, கேள்வியாக இருக்கிறது. ஹெப்சிபா ஏசுதாஸ் எழுதிய ‘புத்தம் வீடு‘, கிருத்திகா எழுதிய ‘வாசுவேச்வரம்‘ (1991) போன்ற நாவல்களில் வரக்கூடிய பெண்கள் குடும்ப அமைப்பை போற்றுகின்ற பெண்கள். புனிதப் பட்டம் பெறத் துடிப்பவர்கள். எதற்குமே தகுதியற்ற ஆண்களை திருத்தி நல்வழிப்படுத்தவே பிறந்தப் பெண்கள். புனிதவதிகள். ஆனால் இன்றைய பெண்ணிய நாவல்கள் – புனிதப் பட்டத்தை வெறுப்பவை.’நல்ல பெண்கள்’, ‘குடும்ப பெண்கள்’ ‘ஹோம்லி கேர்ள்ஸ்‘ போன்ற அடைமொழிகளை அருவருப்பாக கருதுபவை. குடும்ப அமைப்பை கேள்வி கேட்டவை, குடும்ப அமைப்பை உடைப்பவை. இந்தப் போக்கும் தமிழ் நாவலுக்கு ஒரு புதிய முகத்தைத் தந்துள்ளது.
2000க்கு பிந்தைய நாவல் போக்கு என்பது எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எப்படியான மொழியிலும் எழுதலாம் என்ற நிலையை உருவாக்கியது. அதனால் தமிழ் நாவலாசிரியர்கள் புதியபுதிய கதைக் களன்களைத் தேடி, புதியபுதிய மனிதர்களை, புதியபுதிய மொழியை, சொல் முறையைத் தேடி நகர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. உலகெங்கும் ஏற்பட்ட புதியபுதியக் கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள், புதிய போக்குகள் தமிழ் நாவல் உலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழவன் சர்யலிச பாணியில் ‘ஏற்னனவே சொல்லப்பட்ட மனிதர்கள்‘ (1985), ‘முசல் பனி‘ (2010), ‘வார்சாவில் ஒரு கடவுள்‘ (2008) ஆகிய நாவல்களை எழுதினார். சர்யலிச பாணி நாவல் என்பது முற்றிலும் கனவு நிலையில் நிகழ்பவை. யதார்த்தத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. யதார்த்தத்தில் எழுதப்படுபவை நாவல் அல்ல, கனவு நிலையை எழுதுவதுதான் நாவல் என்று வரையறுத்தது சர்யலிச பாணி நாவல்.
மேஜிக்கல் ரியலிச பாணியைப் பின்பற்றி கோணங்கி ‘பிதுரா’, (1998) ‘பாழி’ (2008) போன்ற நாவல்களை எழுதினார். சிடுக்கான மொழி. அடுக்கடுக்கான வாக்கியமைப்பு. கதையை முன்னும் பின்னுமாக அமைத்தல். தொன்மத்தை, பூர்வீகத்தை, பல தலைமுறைகளின் கதைகளை ஒரே நேரத்தில் சொல்வது என்ற போக்கைக் கொண்ட மேஜிக் ரியலிச பாணி நாவல்கள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. கோணங்கியின் நாவல்கள் – நாவலா, கலையா என்பதைவிட புதிய முயற்சிகளை மேற்கொண்டவை, புதிய முறையில் கதை சொல்ல முயன்றவை, யதார்த்த பாணியில் கதை சொல்வதை முற்றிலும் தவிர்த்தவை என்ற அளவில் முக்கியமானவை. கோணங்கியின் பாணியிலேயே – ரமேஷ் பிரேம் – ‘சொல் என்றொரு சொல்‘(2001), கனவில் பெய்த மழையைப் பற்றிய குறிப்புகள் (2000) போன்ற நாவல்களை எழுதினார்கள். இதே பாணியில் எம்.ஜி.சுரேசும் பல நாவல்களை எழுதியுள்ளார். தமிழ் நாவல் – வழக்கமாக கொண்டிருந்த வடிவத்தை, கதை சொல்லல் முறை, கதை சொல்வதற்கான மொழியை முற்றிலுமாக குலைத்துப் போட்டவர்கள் தமிழவன், கோணங்கி, எம்.ஜி.சுரேஷ், ரமேஷ் பிரேம் போன்றவர்கள். இவர்களுடைய நாவல் பாணி – தமிழ் நாவலுக்கு புதிய முகத்தைக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. நாவல் கலைக்கான வழமையான எல்லாக் கருத்தியல்களையும், கட்டமைப்புகளையும், வரையறைகளையும் உடைத்த காலம் இது.
தமிழ் நாவல் வடிவம் எப்போதுமே ஒரு புனித கட்டமைப்பிற்குள்தான் செயல்பட்டு வந்திருக்கிறது. சில விசயங்களை எழுதலாம். சில விசயங்களை எழுதக்கூடாது என்ற வரையறையை அது ஒரு போதும் மீறியதே இல்லை. குறிப்பாக பாலியல் சார்ந்த விசயங்களை நேரிடையாகப் பேசக்கூடாது என்ற மரபை காலம்காலமாக பேணி வந்திருக்கிறது. நாவல் கலையில் மனித துயரத்தை, கண்ணீரை, வலியை, இழப்பைத்தான் எழுத வேண்டும். காம வேட்கையை வெளிப்படையாக எழுதக்கூடாது. அப்படி எழுதப்படுபவை நாவல் அல்ல. கலை அல்ல. இலக்கியம் அல்ல என்ற மரபை உடைத்தவர் சாருநிவேதிதா. ‘ராஸ லீலா, காம ரூபக் கதைகள்’, போன்ற நாவல்களின் மூலம் புனிதமான, தூய்மையான, உன்னதமான, ஒழுக்கமான கதை சொல்லும் முறையையும், கதை சொன்னவர்களையும் முகம் சுளிக்க வைத்தவர் சாரு நிவேதிதா. மனிதனுடைய காம ஈடுபாடுகள், வேட்கை, விருப்பம், ஆசை, மாறுபட்ட விருப்பத்தேர்வுகள் என்று எதையும் தமிழ் நாவல்கள் பேசியதே இல்லை. பாலியல் விசயம் என்றாலே ‘அசூசை’ என்று ஒதுங்கிக் கொண்டவர்கள்தான் தமிழ் நாவலாசிரியர்கள். கண்ணீர் மட்டும்தான் நாவலாகும், கலையாகும் என்ற எண்ணம் நம்முடைய தமிழ் நாவல் மரபில் ஆழமாக வேர் ஊன்றிய மனோபாவம். சாரு நிவேதிதாவிற்கு அடுத்து ஜி.முருகன் எழுதிய ‘மரம்’ என்ற நாவல் மனிதனுடைய பாலியல் சார்ந்த ஈடுபாட்டை, விருப்பத்தை நேரிடையாக பேசியது. தாய் மகன், தந்தை மகள், அண்ணன் தங்கை போன்றவர்களுக்குள் ஏற்படும் பாலியல் இச்சைகளை, ஈர்ப்புகளை முறை தவறிய உறவுகளை வெளிப்படையாக பேசியது மரம் நாவல். சமுகம் வகுத்துள்ள முறையான உறவிற்கும், முறையற்ற உறவிற்குமான வேறுபாடு என்று எதுவுமில்லை. வேறுபாடு அவசியமுமில்லை என்பது ஜி.முருகனின் நிலைப்பாடு. விருப்பம் இருந்தால் யாரும் யாருடனும் உறவு கொள்ளலாம். கணினி, இணையம் போன்ற அறிவியல் சாதனங்கள் எப்படி பாலியல் உணர்வைத் தூண்டுகின்றன, மனித மனத்தின் அந்தரங்கமான பகுதிக்குள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து மரம் நாவலும், விநாயக முருகனுடைய ‘ராஜீவ் காந்தி சாலை‘ நாவலும் பேசுகிறது. ஆண் பாலியல் தொழிலாளியின் துயரத்தை, வலியை, ஆண் பாலியல் தொழிலாளியைப் பயன்படுத்தும் பெண்களைப் பற்றி பேசியது, பதிவு செய்தது – ராஜீவ் காந்தி சாலை – நாவல். வயதான மனிதனுக்கும் இளம் பெண்ணுக்குமான காதலை, உறவை, அந்த உறவில் ஏற்படும் கசப்பை, வினோதத்தை சொன்னது உமா வரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’ நாவல். தமிழ் நாவல்களின் புனித முகத்தை, பொய்யான முகத்தை உடைத்துக்காட்டிவர்கள் என்று சாருநிவேதிதா, உமா வரதராஜன், ஜீ.முருகன், விநாயக முருகன் ஆகியோரைச் சொல்லலாம்.
பழைய காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி தமிழ் நாவல்கள் என்பது தனி மனிதனின் கதையை, குடும்பக்கதையை, ஒரு இடத்தின், ஒரு இனக்குழுவின், காலத்தின், வரலாற்றின், நாடோடிகளின் கதையைத்தான் சொல்லி இருக்கிறது. கண்ணீர், சோகம், இழப்பு, வலி, காயம், வேதனை, கொடுமை, பரிதவிப்பு, இடம் பெயர்தலின் துயரம் என்பதுதான் தமிழ் நாவலின் மையம். அறிவியல் கண்டுபிடிப்புகளின் உதவியின்றி மனிதனால் ஒரு மணிநேரம்கூட வாழ முடியாது என்ற வாழ்க்கை முறைக்குள் வந்துவிட்ட மனிதன் அதிகம் பேசியிருக்க வேண்டியது, அதிகம் நாவலாக்கியிருக்க வேண்டியது – அறிவியல் புனைக்கதைகளைத்தான். சக மனிதனின் உதவியைவிட, குடும்பத்தார்களின் உதவியைவிட மனிதன் அதிகம் இன்று நாடுவது, விரும்புவது அறிவியலின் உதவியைத்தான். முற்றிலுமாக இயந்திரமாகிவிட்ட மனிதன் எதை அதிகம் பேசியிருக்க வேண்டும்? அறிவியல் தொடர்பான புனை கதைகள் தமிழில் அரிதாகவே கிடைக்கின்றன. வெகுஜன இதழ்களில் சுஜாதா அறிவியல் புனைக்கதைகளை எழுதினார். தீவிர இலக்கியப் பரப்பில் எம்.ஜி.சுரேஷ் – சிலந்தி (2001), ‘யுரேகா என்றொரு நகரம்’ (2002), ‘37’ (2003) ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். 6174 (2012), என்ற நாவலை என்.சுதாகர் எழுதியிருக்கிறார். நிகழ்காலத்தை மட்டுமல்ல இனிவரும் காலங்களையும், வாழ்வையும் தீர்மானிக்கப்போவது அறிவியல்தான். அதனால் அறிவியல் புனைவுகளின் தேவை அதிகமாகிவிட்டது. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை இயற்கையைவிட அறிவியல் கண்டுபிடிப்புகள்தான் தீர்மானிக்கின்றன. அறிவியல் திருட்டுகள், புதிய கண்டுபிடிப்புகளின் திருட்டுகள், அறிவு திருட்டு எப்படி நடக்கின்றன? ஏன் நடக்கின்றன? என்பதோடு – இந்த திருட்டுகளால் ஒவ்வொரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் எப்படி பாதிக்கப்படுகின்றன, மனிதப் பேரழிவுகள் எப்படி நடக்கின்றன என்று சொல்கிற 6174 நாவல் – பணம், நகை, பொருள், சொத்துக்களின் திருட்டுகளைவிட அறிவியல் சார்ந்த, புதிய கண்டுபிடிப்புகள், அறிவு சார்ந்த திருட்டுகள் என்பது ஆபத்தானது மட்டுமல்ல, அபாயகரமானது என்று சொல்கிறது. 6174 நாவல் தமிழ் நாவல் கலை வடிவத்திற்கு ஒரு புதிய முகத்தைத் தந்துள்ளது.
2000க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகத்திற்கு மற்றுமொரு புதிய முகத்தை கொண்டுவந்தது ஈழ நாவல்கள். அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்தோரின் நாவல்கள். தமிழ் நாவல் உலகம் ஒரு போதும் பார்த்திராத, கண்டிராத, பேசிராத பெரும் துயரம் – புலம் பெயர்ந்தோரின் துயரம். அந்த துயரத்தை நாவலாக்கியவர்களில் முக்கியமானவர் ஷோபா சக்தி. அவருடைய ‘கொரில்லா’ (2002), ‘ம்’, ஆகிய நாவல்கள் ஈழப் போராட்டம் சரியான திசையில் சென்றதா, ஈழ விடுதலைப் போராட்டம் வெகுஜன மக்களின் போராட்டமாக இல்லாமல் ராணுவமயப்பட்டதாக எப்படி மாறிப்போனது, இன அழிப்பில் ஈடுபட்ட அரசின் ஒடுக்குமுறை ஒரு பக்கம், விடுதலை இயக்கங்களின் ஒடுக்குமுறை ஒரு பக்கம் என்று மக்கள் சந்தித்த துயரங்களோடு, ராணுவத்திற்கு, குண்டுவீச்சுக்குப் பயந்தும், விடுதலை இயக்கங்களின் கொடூரங்களுக்குப் பயந்தும் – தப்பி ஓடி பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களின் கண்ணீர்தான் ‘கொரில்லா‘, ‘ம்‘ நாவல்கள். யுத்தக் களத்தில் போரிடுவது, யுத்த களத்தில் வாழ்வது, யுத்த களத்திலிருந்து தப்பி ஓடி வாழும் வாழ்க்கை, ஊர் அறியாத, தேசம் அறியாத, மொழி அறியாத ஒரு தேசத்தில் வாழும் அகதி வாழ்க்கை – கற்பனைகளுக்கு அப்பாற்ப்பட்ட துயரம் – அந்த பெரும் துயரத்தை ஷோபா சக்தியின் நாவல்களும் அ.முத்துலிங்கம் எழுதிய ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ (2008) போன்ற நாவல்களும் பேசுகின்றன. கோவிந்தனின் ‘விடுதலை’ என்ற நாவல்தான் முதலில் இதுபோன்ற விசயங்களை பதிவுசெய்தது. புலம் பெயர்ந்தோரின் நாவல்கள்தான் அண்மைக்காலத்தில் – தமிழ்நாவலுக்கு உயிரூட்டின. புதிய வாழ்வை அளித்தன. ஸர்மிளா ஸெய்யதின் ‘உம்மத்‘ (2013) நாவல் ஈழ விடுதலைப் போர் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பிறகு ஈழ மண்ணில் நடந்த நடவடிக்கைகள், ராணுவ செயல்பாடுகள் குறித்து பேசுகிறது. குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தினரிடையே நிலவக்கூடிய மதம் சார்ந்த பிடிமானம், வக்கிரம் போன்றவற்றைச் சொல்கிறது. ராணுவ அச்சுறுத்தல், அரசின் அச்சுறுத்தல், சிங்களர்களின் புதிய குடியேற்றம், தமிழர்களின் மறு குடியேற்றம் போன்றவை இன்று ஈழ மண்ணில் வாழும் மனிதர்களின் அவல வாழ்வை சொல்லி – தமிழ் நாவலுக்கு புதிய கணத்தை சேர்த்திருக்கிறது ஸர்மிளா ஸெய்யத்தின் ‘உம்மத்.’
மலேசியாவில் பொருட்படுத்தும்படியான நாவல்களே இல்லை என்ற எண்ணத்தை பொய்யாக்குகிறது அ.ரெங்கசாமியின் ‘இமையத் தியாகம்’ (2006) என்ற நாவல். ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ – நாவல் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மதிப்பு வாய்ந்தது இமையத் தியாகம் நாவல். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் மலேசியாவில் என்ன நடந்தது, அங்கிருந்த இந்தியர்களின் மனநிலை என்ன? குறிப்பாக தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கை, மலாய்க்காரர்களுடனான உறவு எப்படி இருந்தது? கிழக்காசிய நாடுகளில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த பிரிட்டிஷ் நிர்வாகத்தை மலேசியாவில் ஜப்பானியர்கள் எப்படி பின்வாங்கச் செய்தார்கள் என்ற வரலாறு நாவலாகியிருக்கிறது. போருக்கும் வெற்றிக்கும் தொடர்பில்லாத சாதாரண மனிதர்கள் எப்படி மாண்டுபோனார்கள் என்ற வரலாறு கதையாகி இருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அடித்தட்டு மக்களின் மனநிலை என்ன, பாதிப்பு அடைந்தார்களா இல்லையா என்ற பதிவு – நாவலாகவோ வரலாறாகவோ தமிழில் இல்லை என்பதை அ.ரெங்கசாமியின் ‘இமையத் தியாகம்’ நாவல் சுட்டிக்காட்டுகிறது. இழப்பை, வலியை மட்டுமல்ல, வரலாற்றைக்கூட பதிவு செய்யாத சமூகமா தமிழ்ச்சமூகம்? நாவல்கள் என்று எதை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்? தமிழ்நாட்டு நாவலாசிரியர்களை குற்றவுணர்ச்சிக்கொள்ள செய்கிறார் அ.ரெங்கசாமி. வாக்கிய பிழை, கருத்துப் பிழை என்று எந்த பிழையும் இல்லை. நல்ல தமிழ் நடை.
மலேசியாவில் புதியவகை எழுத்து வேரூன்றி வளர்ந்து வருகிறது என்பதற்கு கே.பாலமுருகனுடைய “நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் (2009)” என்ற நாவல் நல்ல உதாரணம். கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் மலேசியாவில் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களாக இருந்தவர்களுடய வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை இந்நாவல் பேசுகிறது. ரப்பர் தோட்டங்கள் செம்பனை மரங்களாக மாறுவது, தோட்டத் தொழிலாளர்கள் நகரங்களுக்கு இடம் பெயர்வது, அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை ஒரு குடும்பக் கதையின் வழியே கே.பாலமுருகன் சொல்கிறார். நகரமயமாதல் உலகளாவிய துயரம். கிராமத்திலிருக்கும் ஒரு குடும்பத்தின் தேவைஅளவு, அதே குடும்பம் நகரத்திலிருக்கும்போது – அதற்குத் தேவைப்படும் பொருள்களின் தன்மை எப்படி மாறிப்போகிறது? பணத்தின் தேவை கூடிப்போகிறது? மனதில், சிந்தனையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதுப்பற்றி நாவல் விரிவாக பேசுகிறது. எல்லாவற்றையும் இழந்துவிட்டோம், பறிகொடுத்துவிட்டோம் என்று புலம்புகிற அதேநேரத்தில் நகர வாழ்வை நோக்கி ஓயாமல் மனிதர்களை எது ஈர்க்கிறது? எது நகர வாழ்வைவிட்டு வெளியேறவிடாமல் தடுக்கிறது என்பது போன்ற கேள்விகளை நாவலின் வழியே கே.பாலமுருகன் கேட்கிறார்.
பொய், புனைசுருட்டு, வெறும் கற்பனை, மிகுபுனைவு, அதீத புனைவு என்ற காலம் ஒரு வகையில் முடிந்துபோய்விட்டது. புதுவெள்ளம் – என்ற நிலையில்தான் தமிழ்நாவல்கள் இருக்கின்றன என்றாலும் தமிழ் நாவல்கள் தொடாத ஒரு உலகம் – இன்றைய காட்சி ஊடகங்களின் உலகம் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். இந்தியாவில் வேறெந்த மாநிலத்தைக்காட்டிலும் தமிழகத்தில்தான் காட்சி ஊடகங்களின் தாக்கம் அதிகம். காட்சி ஊடகங்கள் நினைத்தால் எப்படியான மதிப்புமிக்க பொருளையும், மனிதரையும் மறந்துபோக செய்ய முடியும். எவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வையும், வரலாற்றிலிருந்து அழித்துவிடமுடியும். பொம்மைகளைப் போன்ற மனிதர்களைக்கூட பேருருக்களாக மாற்றி சமூகத்தை வழிபட செய்ய முடியும். அதற்கான ஆற்றல், சக்தி காட்சி ஊடகங்களுக்கு இருக்கிறது. அவ்வாறான செயல்களில் அது தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறது என்பது நிதர்சனம். நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, மூலை முடுக்கெல்லாம் சென்று காட்சி ஊடகங்கள் செய்திகளை சேகரிக்கின்றன. படம் பிடிக்கின்றன. ஒன்றை நூறாக்கிக் காட்டுகின்றன. அவ்வாறு காட்டப்படும் காட்சிகள் மக்களை சிந்திக்கத் தூண்டுவன அல்ல. மாறாக கேலிக்கைக்குரிய மனிதர்களாக்கி சுரணையற்றவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு பெரிய இழப்பையும் சகித்துக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்தெடுக்கின்றன. காட்சி ஊடகங்களில் காட்டப்படுகிற எல்லா செய்திகளுக்கும் மட்டுமல்ல, எவ்வளவு பெரிய செய்தியாக இருந்தாலும் அதற்கு ஒரு நாள்தான் வாழ்வு. பரபரப்பான, அதிர்ச்சிகரமான செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் மட்டுமே அவை திட்டமிட்டு உருவாக்குகின்றன. இது குறித்து இதுவரை தமிழ் நாவலாசிரியர்கள் தங்களுடைய நாவல்களில் பதிவு செய்யவில்லை. கேள்வி கேட்கவில்லை. விமர்சனம் செய்யவில்லை. தமிழக மக்களுடைய விழிகள் பிம்பங்களால் நிரம்பி வழிகின்றன. தமிழர்களுடைய மனம் காட்சிகளால் நிரம்பிவிட்டன. பிம்பங்களையே பார்த்துப்பார்த்து பழகிய தமிழர்களுடைய கண்கள் வேறு எதையும் நேரடியாக பார்ப்பதில்லை. பார்ப்பதற்கு விரும்புவதும் இல்லை. தமிழ்ச் சமூகம் பிம்பங்களின் கட்டுப்பாட்டின்கீழ், ஆட்சியின் கீழ், ஆதிக்கத்தின் கீழ் வந்து வெகுகாலமாகிவிட்டது. அரை நூற்றாண்டுக்கு மேலாக சினிமாவின் ஆதிக்கத்தின் கீழ் கட்டுப்பட்டுக்கிடந்த தமிழ் மக்கள் இப்போது காட்சி ஊடகங்களின் முன்னால், அவை உருவாக்கிக்காட்டும் காட்சிகளின் முன்னால், காட்சி பிம்பங்களின் முன்னால் கட்டுப்பட்டு கிடக்கிறார்கள் – என்பதுப்பற்றி ஒரு தமிழ் நாவல்கூட கவலைப்படவில்லை என்பது விநோதம். காட்சி ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்து எழுதாதது தமிழ் நாவல்களின் உலகில் ஒரு வெற்றிடம் அல்ல – பெரிய வெற்றிடம். பெரிய பள்ளம்.
2000க்குப் பிறகு ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக இருபத்தி ஐந்து முதல் ஐம்பது நாவல்கள் வரக்கூடும். எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் தமிழ் நாவல் கலை செழிப்பாகவே இருக்கிறது. சிறுகதை தொகுப்புகளைவிட, கவிதைத் தொகுப்புகளைவிட நாவல்களே அதிகம் விற்பனையாகின்றன. புதிய எழுத்தாளர்கள், புதிய வாழ்க்கை முறைகள், தமிழ் நாவல் கலைக்கு வலு சேர்க்கின்றன என்பது நிஜம். அதே நேரத்தில் அண்மைக்காலமாக பேப்பர் லெஸ் அலுவலகம், பேப்பர் லெஸ் செயல்பாடுகள் என்ற நிலை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தமிழ் நாவாசிரியர்கள் ஐநூறு பக்கம், ஆயிரம் பக்கம் என்று நாவல்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அதிசயம். முகநூலில் நொடிக்குநொடி ஸ்டேட்டஸ் போட்டு இலக்கியம் பேசுகிற, இலக்கிய விவாதம் செய்கிற காலச்சூழலில் – தமிழ் நாவலாசிரியர்கள் – தண்டி – தண்டியாக நாவல்களை எழுதிகொண்டிருப்பதும் – தமிழ் நாவல்களின் புதிய முகம்தான். அழகிய முரண்பாடு. “நான் குறைவாக எழுதும் கௌரவத்தை என்றுமே தக்கவைத்துக் கொண்டதில்லை. குறைவாக எழுதினால் எழுதியதுபோல் இருப்பதுமில்லை“ •3 என்று மனுஷ்ய புத்திரன் சொல்கிறார். அவர் சொல்வதைப்போல எழுதுவது நாவலாசிரியருக்கும் நல்லதல்ல. தமிழ் நாவலுக்கும் நல்லதல்ல.
நவீன இலக்கியப் பிரதிகள், நவீன இலக்கியவாதிகள் என்று எந்தப் படைப்புகளை, யாரை சொல்லலாம்? எது நவீன இலக்கியம்? யார் நவீன இலக்கியவாதி? திராவிட இயக்க எழுத்தாளர்களைத்தவிர மற்றவர்கள் எல்லாரையும் நவீன இலக்கியப் படைப்பாளிகள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. நவீன இலக்கியப் படைப்புகள் என்று வர்ணிக்கப்படுகிற எந்த ஒரு படைப்பும் நவீன வாழ்க்கையை, அதன் வசதிகளை, அதனால் ஏற்பட்ட இழப்புகளை பேசியப் படைப்புகள் என்று எவற்றையும் பட்டியலிட முடியாது.
இன்று எல்லாருடைய வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கிறது. எழுபது சதவிகிதத்தினருக்கும் மேல் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள். இருபது சதவிகிதத்தினருக்கும்மேல் கணினி வைத்திருக்கிறார்கள். நம்முடைய் வீடுகளில் இருபத்தி நான்கு மணிநேரமும் தொலைக்காட்சி ஓடுகிறது. இரவில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு கூடியிருக்கிறது. தனியாக அறை எடுத்து, வீடு எடுத்து நம்முடைய இளம் பெண்கள் தங்குகிறார்கள். பெற்றோர்களே, கணவர்களே, மகள்களுக்கு, மனைவிக்கு ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் வாங்கிக்கொடுக்கிறார்கள். பிறந்த நாள், கல்யாண நாள் கொண்டாடுபவர்கள், செல்ஃபி எடுப்பவர்களின் எண்ணிக்கை பெருகியபடி இருக்கிறது. சில வீடுகளில் இரண்டு கார்கள் இருப்பது சாதாரணமாகிக்கொண்டு வருகிறது. சென்னை என்பது இன்று செங்கல்பட்டு வரையிலும், மகாபலிபுரம் வரையிலும் வளர்ந்திருக்கிறது. மால்கள் பெருகியிருக்கின்றன. இரவில் ஹோட்டல்களில் சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. ஏழு செருப்பு தேய பெண் தேடிய காலம்போய், செய்தித்தாள்களில், கல்யாண மாலைகளில், சாட்டிங்கில் பெண் தேடுவதும், நிச்சயிப்பதும் சாத்தியமாகி இருக்கிறது. இருபத்தி நான்கு மணி நேரமும் உலகெங்கும் யாரும் யாருடனும் தொடர்பு கொள்ளலாம். ஆங்கிலம் படித்தால்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் உருவாகிவிட்டன. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகிவிட்டன. கூரை வீடுகள் குறைந்துவிட்டன. தங்கள் காதல், குடும்ப, அந்தரங்க கதைகளை நம்முடைய பெண்கள் தொலைக்காட்சிகளில் போட்டிப் போட்டுக்கொண்டு விவரிக்கிறார்கள். நடித்துக் காட்டுகிறார்கள். நவீன வாழ்க்கை என்பது இதுதானே? இதுபோன்ற பிரச்சனைகளை பேசிய நாவல்கள் இருக்கிறதா? இல்லையென்றால் நாம் எழுதுவது நவீன இலக்கியமா? நாம் நவீன இலக்கியப் படைப்பாளிகளா?
எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாவல்கள் தற்போது சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடைய வாழ்க்கையையும் எழுதுகிறது. பொது சமூகத்தின் பார்வைக்கு வராத பல சிறு சிறு பிரிவு மக்களுடைய வாழ்க்கையும் நாவலகிறது என்று பெருமை கொள்ளும் அதே நேரத்தில் சாதி, மத, இன மோதல்கள் அதிகரித்து வரும் வேளையில் புதிய கொருளாதார கொள்கையால் ஏற்பட்ட மாற்றம் உலகமயமாக்கல், நவீன மயமாக்கல், பெரும் வளர்ச்சி பெற்றுவிட்ட நிலையில், இது குறித்தெல்லாம் பேசாமல் தங்களுடைய இளமைக்கால வாழ்க்கை – அதாவது கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கையையே தமிழ் நாவல்கள் அதிகம் பேசுவது விந்தையானது. இது தமிழ் நாவல்கள் நவீனமான இன்றைய வாழ்க்கைக்குள் இன்னும் வரவில்லை என்பதும், அரசியல், வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இணைத்துப் பார்த்து நாவல் எழுதவும் நமக்கு இன்னும் கைகூடவில்லை என்பதும் புலனாகிறது. மரபுக்கும் நவீனத்துவத்திற்குமான உரையாடலை நமது அண்மைக்கால நாவல்கள் தொடங்கவே இல்லை. வரலாற்றை, மரபை மறுகதையாக்கம் செய்த நாவல்கள் என்று ஒன்றையும் குறிப்பிடமுடியாது. ஆங்கில மொழிப்படிப்பால் தமிழ் நாவல்கள் வடிவரீதியாக, மொழி ரீதியாக கதை சொல்லும் பாங்கில் எந்த மாற்றத்தையும் பெற்றுவிடவில்லை. எப்போதும் போல மொன்னையாகவே இருக்கிறது. யதார்த்தத்தை உள்ளது உள்ளபடியே எழுத்தில் கொண்டுவருவது கலை அல்ல. யதார்த்தம் நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பாதிப்பை எழுதுவதுதான் – வெளிப்படுவதுதான் கலை. மௌனத்தை கற்றுக்கொண்டவனே கலைஞன். ‘இயற்கையை அதிகம் நகல் செய்யாதே, கலை ஒரு கற்பனை, இயற்கையின் முன் நின்று கனவு நிலையாகி, அதை கொண்டுவர வேண்டும், கடைசியில் கையில் கிடைக்கப் போகும் படைப்பு முக்கியமல்ல, படைப்பதே முக்கியம்’ •4 என்ற காகின் (18-ம் நாற்றாண்டின் பிரான்ஸ் ஓவியர்) வாக்கியத்தை தமிழ் நாவலாசிரியர்கள் அறிவது நல்லது.
உலகில் தமிழர்களை போன்று மொழி உணர்வு, மொழிப் பற்றுள்ள வேறு ஒரு சமூகத்தை காண முடியாது. மொழியை தாயாகவும், தெய்வமாகவும் வணங்கக்கூடியவர்கள் தமிழர்கள் மட்டுமே. மொழிக்காக உயிர்த்தியாகவும் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். உயிர்த்தியாகம் செய்தும் இருக்கிறார்கள். அப்படியான மொழியில் உருவான நாவல்கள் எப்படி இருக்கின்றன? வாக்கியப் பிழைகள் மட்டுமல்ல கருத்துப் பிழைகளும் நிறைந்த நாவல்கள் அதீத புனைன என்ற பெயரில் – எப்படி எழுதப்படுகின்றன, கொண்டாடப்படுகின்றன? நம்பகத் தன்மைப்பற்றி, நாவல் வடிவம் பற்றி – தமிழ் நாவலாசிரியர்கள் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. பொருளிழந்த, பொருளில்லாத சொற்களின் சேர்க்கைகள் நிறைந்து இருக்கின்றன. பன்முக வாசிப்புக்கு இடமளிக்காத நாவல்களே அதிகம். சொற்களின் அர்த்தங்கள் வழக்கமான பொருள்களின் எல்லைகளைத் தாண்டி செல்வதில்லை. நவீன வாழ்வை கேள்விக்குள்ளாக்குகிற, வாழ்வின் அபத்தத்தைப் பேசுகிற, மனிதர்களின் அகவுணர்வுகளை, அற உணர்வுகளைப் பேசிய நாவல்கள் எவை? மோசமான நாவல்களை படிக்க நேர்வது பெரும் துன்பம். தமிழ் நாவலாசிரியர்கள் தன்னைப்பற்றி மட்டுமே, தனக்குத் தெரிந்த வாழ்க்கையை மட்டுமே எழுதுகிறார்கள். அதுவும் அரைகுறையாக. ஆழ்ந்த படிப்போ, ரசனையோ ஈடுபாடோ இல்லாமல் வரலாற்றை, மரபை, கலாச்சாரத்தை நவீன பார்வையில் அணுகும் விதமோ, மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியோ தமிழ் நாவலில் நடைபெறவில்லை. அதோடு வட்டார நாவல்கள், மார்க்சிய, பெண்ணிய, தலித்திய, சர்யலிச, மேஜிக் ரியலிச நாவல்கள் என்ற கோட்பாட்டு, கொள்கை அடையாளங்கள், கருத்தியல் சுமைகளை சுமக்கும் போக்கும், மத, இன, சாதி சார்ந்த அடையாளங்களை முன்னிறுத்தி நாவல்களை எழுதும் போக்கும், ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் கீழ் அடையாளப்படுத்திப் பேசும் போக்கும் அதிகரித்திருக்கிறது. இது காலத்தின் வீழ்ச்சி. நாவல் கலையின் வீழ்ச்சி. மொழியின் வீழ்ச்சி.
பின்குறிப்பு –
1.நான் பேச விரும்புகிறேன். – ச.தமிழ்செல்வன். வம்சி புக்ஸ் – திருவண்ணாமலை (2010) ப.14,88.
2.அருந்தப்படாத கோப்பை – மனுஷ்ய புத்திரன் – உயிர்மை பதிப்பகம். 2012 (ப.7)
3.தி இந்து தீபாவளி மலர் – 2014 (ப.283)