சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காக தகவல்களை திரட்டும் போது தான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப் பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம்.
வண்ணதாசன்
வண்ணதாசன்
என்ற புனை பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனை பெயரில்
கவிதைகளும் எழுதும் இவரின் இயற்பெயர் சி கல்யாணசுந்தரம்.இவர் தி க சிவசங்கரன்
அவர்களின் மகன். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான இவர் தீபம் இதழில் 1962 ல் எழுதத் தொடங்கி இன்றுவரை தொடந்து சிறுகதைகள் எழுதி வருபவர். 12 சிறுகதை தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. இவரது அனைத்து
சிறுகதை தொகுப்புக்களையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் தனுமை, நிலை, ஞாபகம், போய்க்கொண்டிருப்பவன்,
சமவெளி, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், வடிகால்
கு ப ராஜகோபாலன்
கு ப ரா என பரவலாக அறியப்பட்ட
கு ப ராஜகோபாலன் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் சிறுகதை ஆசான் என்று அழக்கப்படுகிறார்.
கு ப ராவின் பக்கத்து
வீட்டுக்காரர் ந பிச்சமூர்த்தி. இவர்களிருவரும் இலக்கியத்திலும் இணைபிரியாமல்
இருந்தனர்.இவரின் இளைய சகோதரி கு ப சேது அம்மாள். கு
ப ரா வின் எழுத்துக்கள் பெரும்பாலும் ஆண் பெண் உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களை
கு ப ரா தம் சிறுகதைகளில் படைத்துக் காட்டியுள்ளார்.
கு ப ரா சிறுகதைகள் என்ற முழு தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் விடியுமா?, ஆற்றாமை, கனகாம்பரம், திரை, நூருன்னிசா, சிறிது வெளிச்சம், புனர் ஜென்மம்
புதுமைப்பித்தன்
இவரது இயற் பெயர்
சொ.விருத்தாசலம். நவீன
தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய
சமூக விமர்சனமும் நையாண்டியும்,
முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும்
கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன 1933 முதல் ஊழியன்,
சுதந்திரச் சங்கு, தினமணி, தினசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். புதுமைப்பித்தன்
தன் பெயருக்கு ஏற்ப, பலர் நடந்து - நைந்துபோன
பாதையில் போகாமல், புதிய பாதையில் புதிய சிந்தனையில் சோதனை முயற்சியில்
கதைகளைப் படைத்தார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது
அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப்
படித்தாலும் சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அவருடைய நடை ஆளுமைதான்.நடை வேறுபாடுகளில்
பல்வேறு சோதனைகளைச் செய்து பார்த்தவர் புதுமைப்பித்தன்.இவரது அனைத்து
சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது. முழு தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.பதினைந்து ஆண்டுகளே
எழுத்துலகில் இருந்த புதுமைப்பித்தன், தமிழில் தரமான சிறுகதைகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன்
சிறுகதை இலக்கியத் தகுதி பெற்றுத்தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புதுப்புது உத்திகளும் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் நடைநயமும் அவரது சிறுகதைகளில்
கலந்துள்ளன. தமிழ் நடைக்குப் புது வேகமும் புது அழகும் சேர்த்தவர்.
கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது சிறுகதைகள் சோகத்தை அடிநாதமாகக்
கொண்டு வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி காட்டின. அந்த அளவுக்குத்
தரமான கதைகளைத் தந்தவர். குறிப்பாக, துன்பக்கேணி, நாசக்காரக் கும்பல், மனித இயந்திரம்,
பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற கதைகளைச் சொல்லலாம்.
அம்பை
அம்பை என்கிற சி எஸ் லட்சுமி தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர்.
1960 களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும்
வகைமையான தமிழ் சிறுகதைகளின் முன்னோடி.பல பெண் படைப்பாளிகள் தொட சிரமப்படும் விஷ்யங்களை
சர்வ சாதாரணமாக தொட்டுச்சென்றவர். இவரின் முழு சிறுகதை தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது.
பெண்கள் பற்றிய ஆராய்ச்சி, ஆவணக்காப்பகமான ஸ்பாரோ என்ற அறக்கட்டளைய நிறுவி நடத்தி
வருகிறார். இவரின் சிறந்த சிறுகதைகள் அம்மா ஒரு கொலை செய்தாள்,
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான்
, சிறகுகள் முறியும், புனர் ,கருப்பு குதிரை சதுக்கம், மிருத்யு, வெளிப்பாடு
மௌனி
இவரின் இயற்பெயர் மணி. மௌனி என்ற புனை பெயரில் சிறுகதைகள்
எழுதினார். தமிழ் சிறுகதை உலகில் மிகக் குறைந்த அளவே கதைகள் எழுதி
நிலைத்த புகழைப் பெற்றவர். இவர் 24 கதைகள்
மட்டுமே எழுதி உள்ளார். அவை அனைத்தும் மனித மனங்களைப் எக்காலத்திலும் பிணிக்கின்ற வகையில் அமைந்துள்ளன.
மௌனியின் படைப்புகள் என்ற முழு தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் அழியாச்சுடர், பிரபஞ்ச கானம், சாவில் பிறந்த சிருஷ்டி, ஏன்
வண்ணநிலவன்
இவரின் இயற்பெயர் உ ராமச்சந்திரன், கடல்புரத்தில், கம்பா நதி, ரெயினீஷ்
அய்யர் தெரு ஆகிய புகழ் பெற்ற நாவல்களை எழுதியவர். வண்ணநிலவன் சிறுகதைகள்
என்ற முழு தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ்
சிறுகதையில் பல்வேறு உத்திகள் , கூறல் முறைகள் , உலகங்கள், மற்றும் மனிதர்களைக் கையாண்டு அவற்றை கலையனுபவமாகவும்
ஆக்கிய சிறுகதையாளர். இவரின்சிறந்த சிறுகதைகள் எஸ்தர், கரையும் உருவங்கள், பலாப்பழம், மிருகம் ,உள்ளும் புறமும்
அசோகமித்திரன்
தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர்
தியாகராஜன். எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவரது கதைகள்.
1996 ல் அப்பாவின் சினேகிதர் என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அக்காடமி
விருது பெற்றவர்.பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், கரைந்த நிழல்கள் ஆகிய சிறந்த நாவல்களை எழுதியவர். அசோகமித்திரன்
சிறுகதைகள் என்ற சிறுகதைகளின் முழு தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் புலிக்கலைஞன்,பிரயாணம், காலமும் ஐந்து குழந்தைகளும், குழந்தைகள், மாறுதல்,
பார்வை
கிருஷ்ணன் நம்பி
இவரது இயற்பெயர் அழகிய நம்பி. முதல் சிறுகதை
" சுதந்திர தினம் " 1951ல் வெளிவந்தது.
கண்ணன் சிறுவர் இதழில் சசிதேவன் என்ற பெயரில்
குழந்தைப் பாடல்களை எழுதினார்.கிட்டத்தட்ட
சுமார் 35 பாடல்கள் கண்ணனில் வெளிவந்தன.1965 ஆம் ஆண்டு தமிழ்ப்
புத்தகாலயம் கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களை தொகுத்து
`யானை என்ன யானை?’ என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தது. கிருஷ்ணன்
நம்பியின் படைப்புக்கள் முழு தொகுப்பாக கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் என்ற பெயரில் காலச்சுவடு
வெளியிட்டுள்ளது. மருமகள்
வாக்கு இவரது புகழ் பெற்ற சிறுகதை. மிகக்குறைவான கதைகள் தான்
எழுதினார் என்றாலும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் முத்திரையை ஒவ்வொரு கதையும் பதிவு செய்துள்ளது.
கதைகளை சொல்லும் முறையில் ஒரே பார்வை முறையைக் கையாண்டார். ஆசிரியர் பெரும்பாலும் குறுக்கிடுவதில்லை. பாத்திரங்களே
சம்பவங்களைப் பேசுகின்றன. இவரின் சிறந்த சிறுகதைகள் , மருமகள் வாக்கு, சட்டை, எக்ஸெண்டிரிக், நீலக்கடல், தங்க ஒரு.., காணாமல் போன அந்தோனி
சுஜாதா
இவரது இயற்பெயர் ரங்கராஜன். தன் மனைவி பெயரான சுஜாதா
என்ற பெயரில் எழுதியவர். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால்
வாசகர்களைக் கவர்ந்தவர். கணையாழி இதழில் பல வருடங்கள் கடைசிப்
பக்கம் என்ற பத்தியை எழுதியவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய கற்றதும்
பெற்றதும் தொடர் மிகவும் பிரபலமானது. நாவல்,குறுநாவல்,சிறுகதைகள்,விஞ்ஞானச் சிறுகதைகள், நாடகம், செவ்விலக்கியங்களின்
அறிமுகம் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தவர். இவரது
"என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ
" பெரும் வரவேற்பை பெற்ற நாவல்கள். இவரது
தேர்ந்தெடுக்கப் பட்ட சிறுகதைகள் மூன்று தொகுதிகளாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் நகரம், ஜன்னல், நிஜத்தை தேடி, திமலா
தி ஜானகிராமன்
தஞ்சை மாவட்டப் பேச்சும் நையாண்டியும் தனது கதைகளின் தனித்தன்மைகளாக் கொண்ட
படைப்பாளர் தி ஜா என அன்புடன் அழைக்கப்படும்
தி ஜானகிராமன். விடுதலைக்குப்
பிந்திய சிறுகதை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். புகழ் பெற்ற
மோகமுள், அம்மா வந்தாள் ஆகிய நாவல்களை எழுதியவர். தி ஜாவின் படைப்புக்களில் வரும் பெண்கள் பெரும்பாலும் மரபு மீறியவர்களாகவே
இருந்தனர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய
அக்காடமி விருது பெற்றவர். தி ஜானகிராமன் சிறுகதைகள் என்ற முழு
தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் சிலிர்ப்பு, பாயசம், முள்முடி, கோபுர
விளக்கு, பரதேசி வந்தான், துணை, கோதாவரிக் குண்டு
பி எஸ் ராமையா
வத்தலகுண்டு கிராமத்தில் பிறந்த ராமையா எழுதிய " மலரும் மணமும் "என்ற சிறுகதைக்கு ஆனந்த விகடன் பரிசு
பெற்றார். அவர் மணிக்கொடி
இதழ் பற்றி எழுதிய மணிக்கொடி காலம் என்ற கட்டுரை
நூலுக்காக 1982 ல் சாகிதய அக்காடமி
விருது பெற்றார். அவர் மணிக்கொடி இதழை சிறுகதைகளுக்கென்றே மாதமிருமுறை இதழாக சில
காலம் நடத்தினார். இவரது சிறுகதை தொகுதிகள் மலரும் மணமும், பாக்யத்தின் பாக்யம்,
ஞானோதயம், புதுமைக்கோயில், பூவும் பொன்னும் ஆகியவற்றை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இவரது தேரோட்டியின்
மகன் என்ற நாடகம் புகழ் பெற்றது. இவரின் சிறந்த சிறுகதைகள் நட்சத்திரக் குழந்தைகள், கார்னிவல், மலரும் மணமும்
கு அழகிரிசாமி
இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர். எழுத்தாளர் கி ராஜநாரயணனின் இளமைக்கால நண்பர்.
இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள் புகழ் பெற்றவை. 1970 ல் அன்பளிப்பு என்னும் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர்.
மலேசிய தமிழ் நேசன் பத்திரிக்கையில் பணியாற்றியவர். நவசக்தி நாளிதழில் பணியாற்றியபோது அவர் கவிச்சகரவர்த்தி என்ற நாடகத்தை எழுதினார். அது அவருக்குப் பெயரும் புகழும் பெற்றுத்
தந்தது. இவரது முழு சிறுகதைத் தொகுப்பை கு அழகிரிசாமியின் சிறுகதைகள்
என்ற பெயரில் காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரது
" ராஜா வந்திருக்கிறார்" என்ற கதை இந்திய
மொழிகளிலும் ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த கதை. இவரின் சிறந்த கதைகள் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், காற்று, சுயரூபம், திரிவேணி, இருவர் கண்ட ஒரே கனவு
ஜெயகாந்தன்
மக்கள் கவனத்தை பெரிதாகக் கவராத அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய உணர்ச்சிகளை, வாழ்வின் மேன்மை, அவலம் அனைத்தையும் தன் கதைகளின் பேசு பொருளாக்கியவர். சிறந்த
நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். சில நேரங்களில் சில
மனிதர்கள் நாவலுக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். 2005 ஆம் ஆண்டில் ஞானபீட பரிசு பெற்றவர். ஒரு வீடு ஒரு மனிதன்
ஒரு உலகம் இவரது புகழ் பெற்ற நாவலாகும்.இவரது சிறுகதைகளின்
முழுத் தொகுப்பை கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆனந்த விகடனில் தொடர்ந்து
பல முத்திரைக் கதைகளை எழுதினார். அவை முத்திரைக் கதைகள் என்ற
பெயரில் கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின்சிறந்த சிறுகதைகள் அக்னிப்பிரவேசம், யுகசந்தி,நான் இருக்கிறேன், குருபீடம், மௌனம்
ஒரு பாஷை, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, ட்ரெடில், பிணக்கு
ஆ மாதவன்
திருவனந்தபுரத்தில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் இவர். திராவிட எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராக ஆனார். திருவனந்தபுரத்தில் உள்ள
சாலைத்தெருவை பிண்ணனியாகக் கொண்டு பல சிறுகதைகளை
எழுதியுள்ளார். இலக்கியச்சுவடுகள் என்ற நூலுக்காக 2015 ஆம் ஆண்டு சாகித்ய
அக்காடமி விருது பெற்றார். இவருடைய கிருஷ்ணப் பருந்து நாவல் சிறந்த
நாவல் ஆகும். இவரது கடைத்தெருக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுதி
தமிழிலக்கிய உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆ மாதவன் கதைகள்
என்ற முழு தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின்சிறந்த சிறுகதைகள் நாயனம், பறிமுதல், தண்ணீர்
ச தமிழ்ச்செல்வன்
அறிவொளி இயக்கத்தில் பங்கேற்று பல கிராமங்களுக்குச் சென்று கல்விப் பணியாற்றியவர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி.
குறைவாகவே சிறுகதைகளை எழுதி உள்ளார். இவரின்
சிறுகதைகளின் முழு தொகுப்பு "ச தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்
" என்ற பெயரில்
பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. சிறுகதைக்
களத்தை தேர்ந்துகொண்டு யதார்த்த தளத்தில் இயல்பான மொழி, பிரச்சாரமற்ற
தன்மை சிறுகதைக்குரிய
சாதுர்யம் கொண்டு இயங்கியவர். இப்போது கதைகள் எழுதுவது இல்லை.
எழுத்தாளர் கோணங்கி இவரின் சகோதரர்.வெயிலோடு போய், வாளின் தனிமை ஆகிய கதைகள் சிறப்பானவை.
தீப்பெட்டி தொழிற்சாலயில் கருகும் பிஞ்சுகளும் , அத்தொழிற்சாலைகளில் பணிபுரியும்
கரிசல் மக்களும் இவரது கதைகளில் ஆழமாக வெளிப்படுகின்றனர். இவரின்
சிறந்த சிறுகதைகள் வெயிலோடு போய், வாளின் தனிமை,பாவணைகள்
பிரபஞ்சன்
புதுச்சேரி தந்த புகழ் பெற்ற படைப்பாளர். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். பிரபஞ்சன் என்ற புனை
பெயரில் எழுதி வருகிறார். சிறந்த சிறுகதை
எழுத்தாளர். வானம் வசப்படும் நாவலுக்காக
1995ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். மானுடம்
வெல்லும் நாவலும் சிறந்த நாவலாகும்.
குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம்
ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். இவரது முதல் சிறுகதை
"என்ன உலகமடா?" பரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.இவரது சிறுகதைத்
தொகுப்பான "நேற்று மனிதர்கள்" பல
கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப் பட்டுள்ளது. இவரது மகாநதி புதினம் கோவை
கஸ்தூரி ரங்கம்மாள் நினைவுப் பரிசு பெற்றுள்ளது.
இவரது சந்தியா புதினம் 1997- ஆம் ஆண்டு ஆதித்தனார் நினைவுப் பரிசு பெற்றுள்ளது. இவரது பிருமம் சிறுகதை இலக்கியச் சிந்தனையால் ஆண்டின் சிறந்த கதையாகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளது. இவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை கவிதா பதிப்பகம் பிரபஞ்சன் சிறுகதைகள் என்ற பெயரில்
இரண்டு தொகுதியாக வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் அப்பாவின் வேஷ்டி, மீன், மரி என்கிற ஆட்டுக்குட்டி, மனசு
கி ராஜநாராயணன்
கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர். தமிழ் எழுத்துக்கு வட்டார இலக்கியம் என்ற புது வகைமையை உருவாக்கி கொடுத்ததில் முன்னோடியாக இருந்தவர் கி ரா.
கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1991ல் சாகிய
அக்காடமி விருது பெற்றவர், இவரது கோபல்ல கிராமம் சிறந்த நாவல். கரிசல் வட்டார எழுத்தாளர்களின்
கதைகளை கரிசல் கதைகள் என்ற தொகுப்பாக தொகுத்திருக்கிறார். கரிசல் வட்டார வழக்கு அகராதியை தொகுத்துள்ளார்.
இவரது சிறுகதைகளை கி ராஜநாராயணன் கதைகள் என்ற தொகுப்பாக அன்னம் பதிப்பகம்
வெளியிட்டுள்ளது. வானம் பார்த்த பூமியான கரிசல் மக்களின் வாழ்க்கை,
ஆசாபாசங்களை நயமான கிண்டலுடன் எடுத்துரைப்பவை இவரது கதைகள். இவரின் சிறந்த சிறுகதைகள் கன்னிமை, கதவு, நாற்காலி, கோமதி
கந்தர்வன்
தமிழ்ச்சூழலில் முற்போக்கு இடதுசாரி எழுத்தாளராக நன்கு அறிமுகமானவர் நாகலிங்கம்
என்ற இயற்பெயர் கொண்ட கந்தர்வன். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில்
கந்தர்வனுக்கும் முக்கிய இடம் உண்டு. முற்போக்கு கருத்து நிலை
சார்ந்து வெளிப்படும் எழுத்து நடைக்கு, கதை சொல்லும் மரபுக்கு
செழுமையான வளம் சேர்த்தவர் கந்தர்வன்.வறண்ட பிரதேசமான பிற
படைப்பாளிகளால் ஒதுக்கப்படும் தொழிற்சங்க வாழ்வின் வாஞ்சை மிகு மனிதர்களை தமிழ்க்கதைப் பரப்புக்கு கைபிடித்து
அழைத்து வந்த படைப்பு முன்னோடி அவர். கந்தர்வன் கதைகள் முழு தொகுப்பை
வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் சாசனம், தராசு,
மங்கலநாதர், காளிப்புள்ள
சா கந்தசாமி
மயிலாடுதுறையில் பிறந்த இவர் சாயாவனம் என்ற நாவல் மூலம் புகழ் பெற்றவர். இந்நாவலை தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய
இலக்கியங்களுள் ஒன்றாக அறிவித்தது. 1998 ஆம் ஆண்டு விசாரணைக் கமிஷன் என்ற நாவலுக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றார். இவரின் சிறுகதைகளின் முழு தொகுப்பை
கவிதா பதிப்பகம் சா கந்தசாமி
கதைகள் என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. கந்தசாமியின்
படைப்புலகம் அனுபங்களின், வாழ்க்கையின் அடிநாதமாக தொழிற்படும்
மனித உணர்வுகளின் சிக்கல்களின் முரண்பாடுகளின் களமாக உள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் தக்கையின் மீது நான்கு கண்கள்,
உயிர்கள், ஹிரண்ய வதம்
இராஜேந்திர சோழன்
மயிலத்தில் வசித்து வரும் இவர் அஷ்வகோஷ் என்ற பெயரில் செம்மலரில் பல கதைகளை
எழுதி இருக்கிறார். படைப்பு வாசகனை சிந்திக்க தூண்டுவதாய் இருப்பதுடன், அவனுடைய
சமுதாயப் பார்வையில் மேலும் வெளிச்சம் பாய்ச்சுவதாகவும் இருக்கவேண்டும் என்ற சமூக அக்கறையுடன்
செயல்பட்டு வருபவர். இவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை இராஜேந்திர
சோழன் கதைகள் என்ற பெயரில் தமிழினி வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் புற்றில் உறையும் பாம்புகள், எதிர்பார்ப்புகள்,கோணல் வடிவங்கள்
திலீப்குமார்
குஜராத்தி மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர் தமிழ் இலக்கியத்தின் மீது பற்று
கொண்டவர். இவருடைய கதைகள் யதார்த்தத்தின்
களத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த
பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவபூர்வமான
வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள். மூங்கில் குருத்து,
கடவு ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. கடவு சிறுகதை தொகுப்பை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழிலிருந்து சிறப்பாக ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பு செய்யக்கூடியவர்.
சிறந்த தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் இரண்டு நூல்களாக தொகுத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் மூங்கில் குருத்து, கடிதம், அக்ரஹாரத்தில் ஒரு பூனை, மனம் எனும் தோணி பற்றி
கோணங்கி
சுதந்திர போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களின் பேரன் கோணங்கி.
இவரது இயற்பெயர் இளங்கோ.
இவரது அண்ணன் ச தமிழ்ச்செல்வன். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோணங்கி "கல்குதிரை" என்ற சிற்றிதழை நடத்தி வருகிறார்.
இவரது மொழி நடை தனித் தன்மையானது.இவரின் சிறுகதைகளில் மதினிமார்களின் கதை,
கொல்லனின் ஆறு பெண் மக்கள் சிறப்பானவை. சலூன் நாற்காலியில்
சுழன்றபடி என்ற முழு தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள்
மதினிமார்களின் கதை, கருப்பு ரயில், கோப்பம்மாள்
ஜெயமோகன்
1987 ல் கணையாழியில்
நதி சிறுகதை அசோகமித்திரனின்
சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு
தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் படுகை, போதி முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. 1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை
1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார்.
தமிழ்ப் புத்தகாலயம் இந் நாவலை வெளியிட்டுள்ளது. 1998
முதல் 2004 வரை "சொல்புதிது"
என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் என்ற நாவல் புகழ் பெற்றது. ஜெயமோகன்
சிறுகதைகள் என்ற முழு தொகுப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்புக்குப் பின் ஊமைச்செந்நாய், அறம்,
வெண்கடல் ஆகிய சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நவீனத் தமிழிலக்கிய
அறிமுகம், சங்க சித்திரங்கள் ஆகிய கட்டுரை நூல்கள் சிறப்பானவை. இவரின் சிறந்த சிறுகதைகள் திசைகளின் நடுவே பத்ம வியூகம், நதி, மாடன் மோட்சம், யானை டாக்டர், ஊமைச்செந்நாய்
லா ச ராமாமிர்தம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்தவர் லா ச ரா. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டும்
எழுதிவந்த லா ச ரா தனது ஐம்பதாவது வயதில்
புத்ர நாவலை எழுதினார். தினமணிக்கதிரில்
சிந்தாநதி என்ற வாழ்க்கைத்தொடரை எழுதினார். சிந்தாநதி நூலுக்காக
1989 ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றார். அவருடைய பாற்கடல் முக்கியமான படைப்பு.
ராமாமிர்தத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும்.
லா ச ரா தனக்கென ஒரு மொழியையும் நடையையும்
சிருஷ்டித்துக் கொண்டுள்ளார். அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும்.தமிழின்
முன்னோடி எழுத்தாளரான அவர் மணிக்கொடி எழுத்தாளுமைகளுளின் இறுதிச் சுடராகவும் ஒளி வீசியவர். கதை சொல்லலில் புதிய
நுட்பங்களைப் புகுத்தியவர். மனத்தின் அசாதாரணங்களைக் கவிதை மொழியில் புனைவாக ஆக்கியவர். ‘அபிதா, ‘புத்ர’. ‘செளந்தர்ய’ ஆகிய அவரது நாவல்கள் தமிழின் செவ்வியல் நாவல்களாகப் போற்றப்படுகின்றன. ஒரு விதத்தில் லா.ச. ரா
அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது.
அன்பு, சாந்தம், பரிவு,
தியாகம் ஆகியவற்றுடன் கோபம், சாபம், ரௌத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை. இவரின் சிறந்த சிறுகதைகள் பாற்கடல், ஜனனி, பச்சை கனவு
சுப்ரபாரதி மணியன்
இவர் சிறுகதைகள் , நாவல்கள், கட்டுரைகள்,
கவிதைகள் என பல தளங்களிலும் முப்பது வருடங்களாக எழுதி வருபவர்.
பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். கனவு என்ற
இலக்கிய சிற்றிதழை முப்பது வருடங்களாக நடத்தி வருபவர். இவரது
சாயத்திரை, மற்றும் சிலர், ஆகிய நாவல்கள்
சிறந்த நாவல்களாகும். இவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை சுப்ரபாரதி
மணியன் கதைகள் என்ற பெயரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.சுப்ரபாரதி மணியனின்
படைப்புக்கள் ஒவ்வொன்றுமே சமகால வாழ்வியல் தரிசனத்தின் பன்முகக்கூறுகளை நமக்கு அடையாளம்
காட்டுகின்றன. நகரமயமாதலின் விளைவான சூழல் பாதிப்பு, பொருள் மயமாதலின்
காரணமாக மனித உறவுகளில் ஏற்படும் முரண்கள் இவை இரண்டும் இவரது கதைகளில் துலக்கம் பெறுகின்றன. இவரின் சிறந்த சிறுகதைகள் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும், வாக்கு
இந்திரா பார்த்தசாரதி
கும்பகோணத்தைச்சேர்ந்த இந்திரா பார்த்தசாரதி சிறந்த நாவலாசிரியர். சிறந்த நாடகாசிரியர். இவர் படைப்பாளியாகவும்
,பேராசியராகவும் ஒருங்கே
செயல்படும் வாய்ப்பு பெற்றவர். குருதிப்புனல்
என்ற நாவலுக்காக 1977ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றவர்.
குருதிப்புனல் , தந்திர பூமி, சுதந்திர பூமி போன்ற இவரது
நாவல்கள் அரசியல் சார்ந்தவை. இராமானுஜர்
நாடகத்திற்காக சரஸ்வதி சம்மான் விருது பெற்றவர். இவரது நாடகங்கள்
ஔரங்கசீப், நந்தன் கதை,
இராமானுஜர் ஆகியவை சிறந்த படைப்புக்களாகும். கணையாழி
இதழின் கௌரவ ஆசிரியராகவும் பணியாற்றினார். 39 ஈழத்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை
எஸ் பொவுடன் இணைந்து " பனியும் பனையும் "என்ற தொகுப்பை தொகுத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு கப் காப்பி, தொலைவு, இளமாறன் கொடுத்த பேட்டி, நாசகார
கும்பல், பயணம்
எம் வி வெங்கட்ராம்
கும்பகோனத்தில் சௌராஷ்டிரா குடும்பத்தில் பிறந்த இவர் பல சிறுகதைகளை எழுதி
உள்ளார். தேனீ என்ற சிற்றிதழை சில காலம் நடத்தினார். இவரது சிறுகதைகள் முழு தொகுப்பாக வெங்கட்ராம்
கதைகள் என்ற தொகுப்பாக கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் வெளியிட்டுள்ளது. நாட்டுக்கு
உழைத்த நல்லவர் என்ற வரிசையில் 50 க்கு மேற்பட்ட நூல்களை சிறுவர்களுக்காக
இவர் எழுதி பழனியப்பா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு
காதுகள் என்ற நாவலுக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றார். இவரது
நித்ய கன்னி அழியாப்புகழ் படைத்த நாவலாகும். இவரின் சிறந்த சிறுகதைகள் பைத்தியக்கார பிள்ளை, தத்துப்பிள்ளை,
சார்வாகன்
சார்வாகன் என்று இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட மருத்துவர் ஹரி ஸ்ரீனிவாசன் ஒரு தொழுநோய் மருத்துவர் மற்றும்
தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட
கைகளை மீண்டும் சரியாக்குவதில் சார்வாகன் கண்டுபிடித்த முறைகள்தான் இன்றும் அவர் பெயரிலேயே
வழங்கப்படுகின்றன. இதற்காக இவருக்கு 1984 இல் இந்திய அரசால்
பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.எழுத்தில் ஆர்வம் கொண்ட
இவர் கவிதைகளையும் சிறுகதைகளையும் சிற்றிதழ்களில் எழுதியுள்ளார். இவரின்
கனவுக்கதை’ என்னும்
சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது. இவருடைய சிறுகதைகள் சில,
ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன.இவர் எழுத்துக்கள்
முழு தொகுப்பாக சார்வாகன் கதைகள் என்ற பெயரில் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவரின் சிறந்த கதைகள் கனவுக்கதை, சின்னூரில் கொடியேற்றம்
எஸ். சம்பத்
சம்பத்தின் இளமைப்பருவம் முழுவதும் டில்லியிலேயே கழிந்தது. 1984-ல் இடைவெளி நாவல் வெளிவருவதற்கு முன்பு எஸ். சம்பத் என்று
அறியப்பட்ட சம்பத் இடைவெளி வந்த பின் ‘இடைவெளி சம்பத்’ என்றே அறியப்பட்டார். சிறுகதைப் பரப்பில் சம்பத் எழுதிய கதைகள் அதிகம் இல்லை. ஆனால் எழுதிய கதைகள் எதிர் மரபு சார்ந்தவை.அங்கீகரிக்கப்பட்ட
கதைகூறல் மரபுக்கு, கருத்துக்கு எதிராகப் புனைவு செய்யப்பட்டவை. இவரது கதைகளை இரண்டு தொகுதிகளாக நவீன விருட்சம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் சாமியார் ஜூவுக்கு போகிறார், இடைவெளி
நகுலன்
டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர்
கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது
கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில்
முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள்
செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். 'எழுத்து' இதழில்
எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த 'குருஷேத்திரம்'
இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப்
பெற்றவர் நகுலன். நகுலனின் கவிதைகள் பெரும்பாலும் மனம் சார்ந்தவைகள். அவர் மனிதனின் இருப்பு சார்ந்தே கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவரின்சிறந்த சிறுகதைகள் ஒரு ராத்தல் இறைச்சி, அயோத்தி, ஒரு எட்டு வயது பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்
ஆர் சூடாமணி
உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்டவர். மனதுக்கு இனியவள்
என்ற நாவலுக்கு கலைமகள் வெள்ளிவிழா பரிசு பெற்றவர். ஆரவாரம் இல்லாமல் மிக எளிமையாக மத்திய தர வாழ்க்கையையும்
அதன் மனிதர்களையும் குறிப்பாகப்
பெண்களையும் பற்றி நிறைய எழுதி உள்ளார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தனது சொத்து முழுவதையும்
சேவை நிறுவனங்களுக்குச் சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர். தனிமைத் தளிர் என்ற தேர்ந்தெடுத்த
சிறுகதைகளின் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் அந்நியர்கள், புவனாவும்
வியாழக்கிரகமும்
ஆதவன்
கல்லிடைக்குறிச்சியில் பிறந்த ஆதவனின் இயற் பெயர் கே எஸ் சுந்தரம்.
முதலில் இரவு வரும் என்ற சிறுகதை தொகுப்புக்காக 1987 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அக்காடமி விருது இவரது மறைவுக்குப்பின் வழங்கப்பட்டது.என் பெயர் ராமசேஷன் , காகித
மலர்கள் ஆகிய நாவல்கள் சிறப்பானவை. தில்லியிலேயே தமது இளமைக்காலம்
முதல் இருந்த ஆதவன் அதன் மதிப்பீடுகள்,சிக்கலான வாழ்க்கை
முறை , போக்குவரத்து ஜனநெரிசல் என்று நகரின் மனநிலையை ஆழமாக படம் பிடித்தவர்.இவரின் சிறந்த
சிறுகதைகள் ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம், லேடி, ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்
வேல ராமமூர்த்தி
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் பிறந்த இவர் தான் பிறந்த ஊர் மற்றும் அதன்
அண்டை கிராமங்களைக் கதைக்களமாகக் கொண்டு
பல
சிறுகதைகள் எழுதி உள்ளார். இவரின்
குற்றப்பரம்பரை என்ற நாவல் சிறந்த நாவல். இவரின் சிறுகதைகள் பெரும்பாலும்
சுயசாதியைப் பற்றியவை.எனினும் விமர்சனப்
பார்வையோடு படைத்துள்ளார். தென் தமிழகத்திலுள்ள சாதிய சிக்கல்களை இவரின் கதைகள் கவனப்படுத்துகின்றன.சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களான
அம்பட்டர், அருந்ததியர், வண்ணார் முதலான பலரின் வாழ்வியல் சிக்கல்ளை
மையமிட்டு அவர்களின் வலியினை சரியாக பதிவு செய்துள்ளார். இவரது
சிறுகதைகளின்முழு தொகுப்பை வேலராமமூர்த்தி கதைகள் என்ற பெயரில் வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதை இருளப்ப சாமியும் 21 கிடாய்களும்.
சுந்தர ராமசாமி
சிறந்த
நாவலாசிரியர். பசுவய்யா என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். சிறந்த சிறுகதையாசிரியராகவும் இருந்தார்.
ஒரு புளிய மரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள்
இவரின் சிறந்த நாவல்கள் ஆகும். தமிழ் இலக்கிய தோட்டத்தின் இயல்
விருது பெற்றவர். காலச்சுவடு என்ற இலக்கிய இதழின் நிறுவனர்.
இவரின் சிறுகதைகளின் முழு தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் கோயில் காளையும் உழவு
மாடும்,பல்லக்கு தூக்கிகள், ரத்னாபாயின் ஆங்கிலம், விகாசம், பிரசாதம், சன்னல்,பள்ளம், வாழ்வும் வசந்தமும், எங்கள் டீச்சர், காகங்கள்,
சீதை மார்க் சீயக்காய் தூள்,
நாஞ்சில் நாடன்
நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான நாஞ்சில் நாடனின்
இயற்பெயர் க சுப்ரமணியம். சங்க இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். சூடிய
பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 2010ல் சாகித்ய அக்காடமி
விருது பெற்றவர்.இவரது நாவல்கள் புகழ் பெற்றவை. தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை
நாஞ்சில் நாடன் கதைகள் என்ற பெயரில் தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விவசாயக் கலாச்சாரத்தில்
ஊறிப்போயிருக்கும் மனிதர் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடனின் பார்வையானது விவசாய கலாச்சாரத்தின்
உள்ளீடுகளின் அடிநாதமாகவே
இழையோடுகிறது. இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு இந்நாட்டு மன்னர், கிழிசல், விரதம், பாலம்.
பாவண்ணன்
பாவண்ணனின்
இயற்பெயர் பாஸ்கரன் .
1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை நா. பார்த்தசாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தீபம்
சிற்றிதழில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது. சிற்றிதழ்களிலும் பெரிய இதழ்களிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதிவருகிறார். தமிழ்ச்சிறுகதைகளையும் தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து
’எனக்குப் பிடித்த
கதைகள்’ என்னும் தலைப்பில்
’திண்ணை’ இணைய இதழில் சிறுகதைகளில் பொதிந்திருக்கும் அழகியலையும் வாழ்வியலையும்
இணைத்துப் பொருத்திப் புரிந்துகொள்ளும் விதமாக இவர் எழுதிய நூறு கட்டுரைகள் பரவலான
வாசக கவனம் பெற்றவை. ஐம்பது தமிழ்க்கவிஞர்களின் படைப்புகளை முன்வைத்து ’உயிரோசை’ இணைய தளத்தில்
’மனம் வரைந்த ஓவியம்’ என்னும் தலைப்பில்
இவர் எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை. 17 சிறுகதை தொகுப்புகள் இதுவரை
வெளிவந்துள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு "பிரயாணம்" காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரது பாய்மரக் கப்பல் என்ற நாவல் இலக்கிய சிந்தனை விருது பெற்றது. பருவம் என்ற நாவலை கன்னடத்திலிருந்து தமிழில் மொழி
பெயர்த்ததற்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். இவரின் சிறந்த சிறுகதைகள் முள், பேசுதல்.
தஞ்சை ப்ரகாஷ்
பிரகாஷ் பொதுவாக அறியப்பட்டிருப்பது சிறுகதையாளர், பதிப்பாளர், ஒரு
கட்டுரையாளர், ஒரு பத்திரிக்கை ஆசிரியர் என்பதாகத்தான். அவ்வளவாக அறியப்படாதவை அவரது நாவல்கள். தமிழ்
நாவல் இலக்கியத்தில் அவரது ‘கரமுண்டார் வீடு,
‘மீனின் சிறகுகள்’ ஆகியவை முக்கியப் பங்களிப்புகள். மற்றவர்கள் பேசத் தயங்கும்
பாலியலின் பல்வெறு முகங்களை வெளிக்காட்டியிருப்பதும் இவற்றின் சிறப்பம்சம். இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் ஒரு
இலக்கிய இயக்கமாகவும் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ் என்று அழைக்கப்படும் ஜி எம் எல் ப்ரகாஷ். பாலம் என்ற சிற்றிதழை நடத்தினார்.
வெங்கட் சாமினாதனுக்காகவே வெ சா எ என்ற இலக்கிய இதழை நடத்தினார். வாழ்வின் தீரா
ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும்
கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம்
வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற
நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு
கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். இவரின் சிறந்த சிறுகதைகள் பற்றி எரிந்த தென்னை மரம், மேபல்.
ந பிச்சமூர்த்தி
தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்
கருதப்படுபவர். தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியை தமிழுக்கு
அறிமுகப்படுத்தியவர். கலைமகள் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற
முள்ளும் ரோஜாவும் என்ற சிறுகதை மூலம் தமிழிலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர். தமிழ்ப் புதுக்கவிதைக்கு அடித்தளமிட்டு வளப்படுத்தியவர். ந
பிச்சமூர்த்தி கதைகளை மூன்று தொகுதிகளாக மதி நிலையம் வெளியிட்டது. இவரின் சிறந்த சிறுகதைகள் ஞானப்பால், விஜயதசமி, பதினெட்டாம் பெருக்கு, விதை நெல், தாய், ஜம்பரும் வேஷ்டியும், மாயமான்.
எஸ் ராமகிருஷ்ணன்
மல்லாங்கிணற்றைச் சொந்த
ஊராகக் கொண்ட இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்"
கணையாழியில் வெளியாகியிருக்கிறது. ஆனந்த விகடன் இதழில்
இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு
ஈட்டித் தந்திருக்கின்றன. எஸ். ராமகிருஷ்ணனின்
நெடுங் குருதி, யாமம், உப பாண்டவம் ஆகிய நாவல்கள் சிறந்தவை. இவரது சிறுகதைகளை மூன்று தொகுதிகளாக உயிர்மை
பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள்,
குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை,
திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள்
ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார். இவரின் சிறந்த சிறுகதைகள் வேனல் தெரு, இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன, புலிக்கட்டம், தாவரங்களின்
உரையாடல்
சி என் அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)
அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர்.
திரையுலகில் திருப்பு முனையை உண்டாக்கியவர். தமிழ்நாட்டு
மக்களின் மனமாசுகளை அகற்ற வேண்டும், மறுமலர்ச்சியினைத் தோற்றுவிக்க
வேண்டும் என்ற எண்ணங்களோடு தன் இலக்கியப் பணியைச் செய்தவர். சொக்க
வைக்கும் எழுத்து நடையால் கதை, கட்டுரை, புதினம், நாடகம் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.
பேனா முனையின் வலிமையை நிரூபித்த எழுத்துத் தளபதி. அண்ணாவின்
முதல் சிறுகதை ‘கொக்கரகோ’ என்பது. 1934ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில்
வெளியாகி இருக்கிறது. அடுத்து நான்கு கதைகளைக் குடியரசு இதழில் எழுதியுள்ளார். மற்ற கதைகள் அனைத்தும் திராவிட
நாடு மற்றும் காஞ்சி இதழில் வந்தவை.அண்ணா தமிழ் சிறுகதையை
உன்னத நிலையில்
வைக்க வேண்டும் என்பதற்காகக் கதை எழுதியவர் அல்ல. அவருடைய நோக்கம் கருத்துப்
பிரச்சாரம் என்பது தெளிவு. சமகாலத்தில் நடக்கும் பிரச்சினைகளைப் பேசுவதன் வழியாக இவை
பெருந்திரளைச் சென்றடையும் வாய்ப்புப் பெற்றவையாக உள்ளன. செவ்வாழை
பொதுத் தளத்தில் மிகவும் பிரபலமான கதை. புலி நகம், பிடிசாம்பல், திருமலை
கண்ட திவ்யஜோதி, தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில்,
இரும்பாரம், முதலிய வரலாற்றுச் சிறுகதைகளையும் அண்ணா படைத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் செவ்வாழை, தனபால செட்டியார் கம்பெனி
கல்கி
இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத்
தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள்,
பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப்
புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய
பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள்
மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இவரது
சிவகாமியின் சபதம் மற்றொரு புகழ் பெற்ற வரலாற்று நாவல்.கல்கியின் சிறுகதைகள்
முழு தொகுப்பாக இரண்டு தொகுதிகளாக திருமகள் நிலையம் வெளியிட்டுள்ளது.சமூகப் புதினமான ‘அலைஓசை’ ஆகியவையும்
பெரும் வரவேற்பைப் பெற்றன. கல்கி இறந்த பின் அவரின் அலையோசை நாவலுக்கு
சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கல்கியினால் சிறுகதை தமிழ் மண்ணில் இரண்டறக் கலந்தது. அந்த அஸ்திவாரத்தின் மீதே சிறுகதை கட்டியெழுப்பப்பட்டு சிகரமும் அமைக்கப்பட்டது. சிறந்த சிறுகதை கேதாரியின் தாயார்
சி சு செல்லப்பா
சி.சு.செல்லப்பா ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா.
காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். சுதந்திரச்
சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. "சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர்
என்ற தகுதியை அளித்தது. சிறுகதை எழுத்தாளராக
இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில்
பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து"
என்ற இதழைத் தொடங்கினார்.நல்ல
எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர்
செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும்
கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள்
சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். இவரின் சிறந்த சிறுகதைகள் சரஸாவின் பொம்மை, மூடி
இருந்தது
நீல பத்மநாபன்
நீல பத்மநாபன் என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் , தமிழகத்தின் ஒரு முன்னணி
எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ்
நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ளார்.இவரின் படைப்புகள்
கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள் முழு தொகுப்பாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நீல பத்மநாபனது இரண்டு மிக முக்கியமான, அதிகமாகப் பேசப்பட்ட நாவல்கள் தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம். புதிய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் மூன்று தொகுதிகளைக் கொண்ட நூலை சாகித்ய அக்காடமிக்காக நீல பத்மநாபனும் சிற்பி பாலசுப்ரமணியனும் இணைந்து
பதிப்பித்துள்ளனர். இந்த நூலின் மூன்றாம் தொகுதி புத்திலக்கியத்தில் தொடங்கி புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வரையிலான
வரலாற்றை சொல்கிறது. இவரது
சிறுகதை நகுலன் தொகுத்த குருஷேத்திரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் கடிகாரம், ஜின்னின் மணம், சண்டையும் சமாதானமும்
க நா சுப்ரமணியம்
வலங்கைமானில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு
இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, க.நா.சு தமிழின்
மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற
எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார்.ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது
புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு
ஒரு இயக்கம்” என்ற இலக்கியத்
திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
க.நா. சுப்ரமணியத்தையே தமிழ் விமர்சன மரபின் முதல்
சிகரமாகக் கொள்ள வேண்டும். தமிழின்
தலைசிறந்த படைப்பாளிகளின் பட்டியலைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
பட்டியலில் அவ்வப்போது இணங்கான முடிகிற முரண்பாடுகள் அவர் பார்வையைத் துலக்குவனவாக
அமையவில்லை. ஆனால், அவர்
இனங்காட்டிய இலக்கியப் படைப்புகள் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளாக ஏற்கப்பட்டன. மயன் என்ற பெயரில் கவிதைகளை அவர் எழுதிவந்தது பிரசித்தம். ‘படித்திருக்கிறீர்களா’ சுதேசமித்திரன் வாரப்
பதிப்பில் வந்த தொடர். இது மிகச்சிறப்பான தொடர் கட்டுரை. இவரின் சிறந்த சிறுகதை சாவித்திரி
வாஸந்தி
பங்கஜம்
எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில
இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர்.இந்தியா டுடே தமிழ் பதிப்பின்
ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிக்கையாளர் என்று முத்திரை பதித்தவர். இவர் எழுதிய "வாஸந்தி
சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்
துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும்
வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.பஞ்சாப், இலங்கை, ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சனைகளைப் பின்புலமாக
வைத்து இவர் எழுதிய நாவல்கள் முறையே மெளனப் புயல், நிற்க நிழல்
வேண்டும், தாகம் ஆகியவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாப் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான ’ஆகாச
வீடுகள்’ இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது. சமூக, மனித உளவியல் கூறுகளை வெகு இயல்பாக எழுத்தில் கையாண்டவர். இவரின் சிறந்த சிறுகதை தேடல்,
சிவசங்கரி
சிவசங்கரி தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை,
பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார்.
1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு"
என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது
150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள்,
7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள்
ஆகியவை வெளியாகியுள்ளன.இவரது
முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத
இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 இல் கல்கியில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர்.
இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?"
- ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, `ஆனந்த விகடன்' பத்திரிகையில்
பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள்,
குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார். சிவசங்கரியின் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நெஞ்சில் நிற்பவை என்ற சிறுகதை தொகுப்பை சிவசங்கரி தொகுத்து வானதி பதிப்பகம் வெளியிட்டது. இதில் 60 எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் வைராக்கியம், பொழுது , செப்டிக்
மேலாண்மை பொன்னுச்சாமி
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. மேலாண்மை பொன்னுசாமி சிறுகதை, மற்றும்
புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற
சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.அவருடைய அரும்புகள், உயிரைவிடவும், சிபிகள்
போல தமிழில் குறிப்பிடத்தக்க பல கதைகளை தந்திருக்கிறார்.அவருடைய முற்றுகை நாவலில் கையாண்ட பிரச்னை மிக
முக்கியமானது.அவருடைய படைப்புகள் அத்தனையும்
ஒரு மானாவாரி கரிசல்காட்டு விவசாயியின் குரலில் சொல்லப்பட்ட கதைகள்தாம். சம்சாரியின் மனதோடு பேசிய கதைகள் தமிழில் மிக
மிக அரிது.அப்படியான அரிய கதைகளைத் தந்தவர்
மேலாண்மை.கரிசல் பூமி தந்த சிறந்த எழுத்தாளர்களில்
இவரும் ஒருவர். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் எழுதுவதில் தலை சிறந்தவர். இவருடைய மானாவரிப்பூ
33 சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது கிடைத்துள்ளது. இவரின் சிறந்த சிறுகதை அரும்பு
ஜி நாகராஜன்
1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
1957ல் ஜனசக்தி மாத இதழில் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ்
பெற்றார். பித்தன் பட்டறை என்ற பதிப்பகம்
வழியாக “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். ஜி. நாகராஜன் சிறுகதை எழுத்தாளர்.
பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல்
தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.இவருடைய மொத்தப் படைப்புகளையும் தொகுத்து
"ஜி.நாகராஜன்
ஆக்கங்கள் என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகம் முழு படைப்புக்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஜி.நாகராஜனின்
கதை உலகம் என்பது சமூகத்தால் கண்டுகொள்ளப்படாத தகுந்த அங்கீகாரமில்லாத நகரத்தின் இடுக்குகளில்
வாழும் விளிம்புநிலை மக்கள் சார்ந்தது. தமிழ்ப் புனைவுகள் அதுவரை கண்டிராத
ஓர் உலகத்தை தம் கதைகளின் வாயிலாகக் கட்டமைத்தார்.நாகராஜனின் சிறுகதைகளைவிட அவருடைய இரு நாவல்களும்
அதிகமாக கவனிக்கப்பட்டவை. அவருடைய இரண்டு நாவல்களுக்கும் இணையான ஒரு சிறுகதை,
"கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா' என்ற கதை. இதுகாறும் நம்பப்பட்டு வந்த ஒழுக்கத்தையும் அதன்
விதிகளையும் அதன் எல்லைவரை சென்று தன் கதைகளின் மூலமாகத் தகர்த்தெறிந்தவர் ஜி.நாகராஜன். இவரின் சிறந்த சிறுகதைகள் ஆண்மை , இளிந்த ஜாதி, தீராக்குறை,
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டி அணிந்த மனிதரும்
பா செயப்பிரகாசம்
பா. செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை.
மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதியுள்ளார்.அன்று தொடங்கி இன்று வரை மொழி, தேசியம், வர்க்கம், சாதி,
பாலியல் என்று எதுவானாலும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே சார்ந்து போதல்
என்ற உண்மைக் கலைஞனுக்கே உரிதான உளவியலைச் சிந்திச் சிதறவிடாமல் தக்க வைத்துக் கொண்டு
வருகிறார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் மன ஓசை இதழை நடத்துவதற்காக
தனது படைப்பாக்க மனநிலையையே தாரை வார்த்திருக்கிறார். பா.செயப்பிரகாசம் கதைகள் முழுமையான
தொகுப்பு எனும் இப்புத்தகம் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்
எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாகும். சந்தியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.“ஜே. பி. என
நண்பர்களால் அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம்
1941இல் பிறந்தவர். எழுபதுகளின் புகழ் பெற்ற இலக்கியப்
போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான சிறுகதைக் கலைஞர்களுள்
ஒருவர். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த
பகுதிகளைக் கவித்துவம் ததும்பும் தன் படைப்பு மொழியில் ‘உந்திக்கொடியோடும் உதிரச்சேற்றோடும்’ முன்வைத்த பா.செ., தொடக்கத்தில் தன் சொந்தப் பெயரிலும் பிறகு சூரியதீபன் என்னும்
புனைபெயரிலும் சிறுகதைகள் எழுதியவர் மறைந்த கரிசல் படைப்பாளி வீர.வேலுச்சாமி
அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் தேடிச் சேகரித்து ஒரே தொகுப்பாக தோழர் பா.செயப்பிரகாசம் ‘மண்ணின் குரல்’ என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு ஜெருசலேம், அம்பலக்காரர் வீடு, கரிசலின் இருள்கள், இருளுக்கு அழைப்பவர்கள், தாலியில் பூச்சூடியவர்கள்
கோபிகிருஷ்ணன்
விளிம்பு
நிலை மனிதர்கள்,கீழ்த்தட்டு மனிதர்கள்,நடுத்தர வர்க்கம்,அதிகாரங்களுக்குப் பழகிய இயந்திரமயமாகிப்போன மனிதர்கள்
என இவரது கதைமாந்தர்கள் இயலாமையின் உச்சத்திலிருந்து சமூகத்தின் போலி மதீப்பீடுகளை
விசாரணைக்குள்ளாக்குபவர்கள்.உளவியல்
சிக்கல்கள்,அக மனதின் விசாரங்கள் என இவரது
துறை சார்ந்த செறிவான உள்ளீடுகளையும் இவரது படைப்பில் காணலாம்.வாழ்வின் மீது மறைமுகமாகப் படிந்துபோயிருக்கும்
குரூரத்தினை தனது அடையாளமாகவே ஏற்றுக் கொள்ளும் வாழ்வின் உச்சகட்ட இயலாமைகளை மிகவும்
புதுமையான ஒரு நடையில் நமக்கு அறிமுகப்படுத்துவதாகவே இவரது கதைகள் இருக்கின்றன.மதுரையில் பிறந்த கோபிகிருஷ்ணன் உளவியல் துறையிலும்,சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக
சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும்
சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.எந்த ஒரு வடிவிலும் குரூரத்தை தாங்கிக் கொள்ளாத
மனநிலையே இவருக்கு வாய்த்திருக்கிறது. மனநிலை
பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். இவரது படைப்புக்களின் முழு தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் காணி நிலம் வேண்டும், புயல், மொழி அதிர்ச்சி
Email:- enselvaraju @ gmail.com