Thursday 14 July 2016

புத்தாயிரத்தின் புத்தக பரிந்துரைகள்

 ஜூன் 2016 ல் புத்தக கண்காட்சியை முன்னிட்டு தி இந்து நாளிதழ் வெளியிட்ட புத்தக பரிந்துரை  கட்டுரைகளின் தொகுப்பு இது. நாவல், சிறுகதை, கவிதை, சுற்றுச்சூழல்,ஆகிய தலைப்புகளில்  வெளியான கட்டுரைகளை தொகுத்து தந்திருக்கிறேன்.

புத்தாயிரத்தின் படைப்பாளிகள்!
ஜெயமோகன்


இளைய வாசகர்களுக்குப் புதிய படைப்புகள், படைப்பாளிகளை அடையாளம் காட்டுவது இந்தப் பகுதியின் நோக்கம். 2000-க்குப் பின் எழுத வந்தவர்களின் கவனம் ஈர்த்த புத்தகங்களை எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்டோம்.
சிறுவயதில் எதையாவது விதைத்தால் ஒருநாளில் பத்துப் பதினைந்து தடவை சென்று முளைத்திருக்கிறதா என்று பார்ப்பதுண்டு. சில விதைகளின் ஓடுகள் மிக வலுவானவை. முளைக்க நாளாகும். அதற்குள் தோண்டிப்பார்த்துவிட்டுத் திரும்பப் புதைப்பதும் உண்டு. அதே ஆர்வத்துடன் இணையத்தை, அச்சிதழ்களைப் பார்ப்பது என் வழக்கம். ஆர்வமூட்டும் ஒரு தொடக்கத்துக்காக.
என் இன்றைய வாசிப்பின் அளவுகோல் இது. இப்போது பிரபல இதழ்களில் வணிக எழுத்து இல்லாமலாகிவிட்டிருப்பதால், வணிக எழுத்தே இலக்கிய முத்திரையுடன் பதிப்பகங்களால் வெளியிடப்படுகிறது. படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது என்பதே ஒரு முக்கியமான அளவு கோலாகப் பலரால் சொல்லப்பட்டு, அத்தகைய நூல்கள் முன்னிறுத்தப்படுகின்றன. சுவாரஸ்யம் என்பது இலக்கியத்துக்கான அளவுகோலே அல்ல என்று சொல்ல விரும்புகிறேன். ஆர்வமில்லாத வாசகனையும் வாசிக்கவைப்பதற்காக முயல்பவை வணிக எழுத்துகளே. இலக்கியம் இணையான உள்ளத்துடன் தேடிவரும் வாசகனுடன் நிகழ்த்தப்படும் அந்தரங்கமான உரையாடல். நான் இலக்கிய வாசகர்களுக்குரிய நூல்களை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சென்ற நூறாண்டுக்கால இலக்கிய மரபின் தொடர்ச்சியாக அமையும் ஒரு நூல், அம்மரபில் அதுவரை இல்லாத ஒன்றைச் சேர்ப்பதாக இருக்க வேண்டும். ஒன்றைக் கலைத்து அடுக்குவதாக அமையவும் கூடும். அதுவே எப்போதும் என் தேடல்.
1. அத்துமீறல்: வி.அமலன் ஸ்டேன்லி நல்ல நிலம் பதிப்பகம்
அமலன் ஸ்டேன்லி முக்கியமான கவிதைகளை எழுதியவர். அடிப்படையில் அறிவியலாளர். ஆய்வகச் சுண்டெலி ஒன்றின் வாழ்க்கையின் சித்திரமாக முதல் வாசிப்பில் அமையும் இந்த நுணுக்கமான நாவல், இருத்தலியம் ஓங்கி நின்றிருந்த காலகட்டத்தின் குறியீட்டு நாவல்களின் அழகிய கவித்துவத்தைச் சென்றடைகிறது.
2. ஆதிரை: சயந்தன் - தமிழினி பதிப்பகம்
தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.
3. துறைவன் - கிறிஸ்டோபர் முக்கூடல் வெளியீடு
கடலோர மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். நாமறியாத ஒரு நிலப் பகுதியை, உணர்வுக் களத்தை நுணுக்கமான தகவல்களுடன் சொல்கிறது.
4 குறத்தியாறு: கௌதம் சன்னா உயிர்மை பதிப்பகம்
நாட்டார் பண்பாட்டிலிருந்து பெற்ற குறியீடு களையும் நவீனப் புனைவு முறைமைகளையும் கலந்து எழுதப்பட்ட இந்நாவல், சமகால வரலாற்றின் ஒரு மாற்று வடிவம்.
5. காலகண்டம் - எஸ் செந்தில்குமார் உயிர்மை பதிப்பகம்
நூற்றைம்பதாண்டுகாலப் பரப்பில் கண்ணீரும் கையாலாகாத சோர்வும் கொந்தளிப்புமாக ஓடிச்செல்லும் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கையின் சித்திரம் இந்நாவல்.
6. ஆங்காரம் ஏக்நாத் டிஸ்கவரி புக் பேலஸ்
தென்னகக் கிராமம் ஒன்றின் சித்தரிப்பு வழியாக ஓர் இளைஞனின் தேடலையும் தன்னைக் கண்டறியும் தருணத்தையும் சித்தரிக்கும் குறிப்பிடத்தக்க படைப்பு.
7. ஆயிரம் சந்தோஷ இலைகள் ஷங்கர் ராமசுப்ரமணியன் பரிதி பதிப்பகம்
படிமங்கள், உருவகங்கள் ஆகியவற்றை மெல்லக் கைவிட்டுவிட்டு, நுண் சித்தரிப்புகளாகவோ சிறிய தற்கூற்றுகளாகவோ தன் அழகியலை உருவாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கவிதை யின் முகம் வெளிப்படும் முக்கியமான முழுத் தொகுப்பு.
8. மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது: குமரகுருபரன் - உயிர்மை பதிப்பகம்
கவிதைக்கு எப்போதுமிருக்கும் கட்டின்மையும் பித்தும் வெளிப்படும் வரிகள் கொண்ட நவீனப் படைப்பு.
9. ஒரு கூர்வாளின் நிழலில்: தமிழினி காலச்சுவடு பதிப்பகம்
மறைந்த விடுதலைப் புலிப் பெண் போராளி ஒருவரின் வாழ்க்கை விவரிப்பு. இதன் நேர்மையின் அனல் காரணமாகவே பெரிதும் விவாதிக்கப்பட்டது. முக்கியமான வரலாற்றுப் பதிவு.
10. சாமிநாதம் (உ.வே.சா.முன்னுரைகள்) : ப.சரவணன் - காலச்சுவடு பதிப்பகம்.
இளைய தலைமுறை தமிழறிஞர்களில் முதன்மை யானவரான ப.சரவணன் தொகுத்தளித்திருக்கும் இந்நூல், அவரது முந்தைய ஆய்வுத் தொகுப் புகளைப் போலவே வரலாற்றை அறிவதற்கான ஒரு முதன்மை வழிகாட்டி.

சமகாலச் சிறுகதை எழுத்தாளர்கள்: இமையம் பேட்டி

இமையம்
புத்தாயிரத்தில் சிறுகதைகள் எப்படி இருக்கின்றன, முக்கியமான சமகாலச் சிறுகதைப் படைப்பாளிகள் யார், முக்கியமான தொகுப்புகள் யாவை என்று எழுத்தாளர் இமையத்திடம் கேட்டோம்.
நிஜமான இலக்கியப் படைப்பின் நோக்கம் பாரபட்சமின்றி சமூக நிகழ்வுகளை ஆவணப் படுத்துவதாகும். கோஷத்தை உருவாக்குவதல்ல. கொள்கைகளை முழங்குவது அல்ல. சமூக அசைவு இயக்கத்தை ஆவணப்படுத்துவது என்பது சமூகவியலாளனின் பார்வையிலிருந்து தொகுக்கப்படும் புள்ளிவிவரத் தகவல் தொகுப்பு அல்ல. அசலான வாழ்வின் நிஜமான பதிவு என்பதுதான் இலக்கியம். இந்தப் பதிவிலிருந்துதான் எதிர்கால தலைமுறைக்கான அறநெறி, சமூக ஒழுக்கம், பண்பாட்டு, கலாச்சாரக் கூறுகளாக, கல்வியாக, அறிவாகப் போதிக்கப்படுவது.
முந்தைய தலைமுறையினரின் வாழ்விலிருந்து பிந்தைய தலைமுறையினர் பெறும் அறிவு, அரிய செல்வம் என்பது இலக்கியப் படைப்புகளின் வழியாகப் பெறப்படுவதுதான். அந்த வகையில் 2000-க்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளில் தமிழ்ச் சமூக வாழ்வு எப்படி பதிவாகியிருக்கிறது என்று ஆராய்வது தமிழ்ச் சமூக வாழ்வையே ஆராய்வதாகும். இந்த ஆய்வு தமிழ் மொழிக்கு, இலக்கியத்துக்கு, சமூகத்திற்கு நல்லது.
2000-க்குப் பிந்தைய எழுத்தாளர் களுக்கும் அதற்கு முன்பு எழுதிய எழுத்தாளர் களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. இந்த வேறுபாடு சமூக வாழ்வை, குடும்ப வாழ்வை, தனி மனித வாழ்வை படைப்பு ரீதியாக எவ்வாறு அணுகினார்கள் என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. கதைக்கான கருவைத் தேர்ந்தெடுத்தது, கதையைக் கட்டமைத்தது, கதையைச் சொல்லத் தேர்ந்தெடுத்த மொழிச் செறிவு போன்றவற்றிலும் இந்த வேறுபாடுகள் இருக்கின்றன. 2000-க்குப் பிந்தைய எழுத்தாளர்களின் சிறுகதைகள் மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், விளிம்பு நிலை, குழந்தைத் தொழிலாளர்கள், பின்நவீனத் துவம், அமைப்பியல், சர்ரியலிசம் போன்ற கொள்கை கோட்பாடுகளை முடிந்தவரை தவிர்த்தவையாக இருக்கின்றன. அடையாளங்களை விரும்பாத, அடையாளங்களைத் தவிர்த்தவர்களாக இருப்பது நல்லதா, கெட்டதா என்பது ஒரு கேள்வி. சமூக நிகழ்வு களை எந்த அளவுக்கு உள்வாங்கிப் படைப்புகளாக மாற்றினார்கள் என்ற கேள்வியும் முக்கியம்.
ஆரோக்கியமான போக்கு
முந்தைய தலைமுறையினர் எழுதத் தயங்கிய பல வாழ்க்கை முறைகளை, விஷயங்களை, பயன்படுத்தத் தயங்கிய பல சொற்பிரயோகங்களை இன்றைய தலைமுறையினர் எவ்விதத் தயக்கமும் இன்றி எழுதுகின்றனர். இப்போக்கு ஆரோக்கியமானது. யார் வேண்டுமானாலும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும், எந்த மொழியில் வேண்டுமானாலும், எப்படிப்பட்ட வாழ்க்கையையும் எழுதலாம் என்ற சுதந்திரத்தைக் காலம் தந்துள்ளது. எழுத்தில் இலக்கியத்தில், ஜனநாயகத் தன்மை ஏற்பட்டதால் ஏற்பட்ட நன்மை இது. சுதந்திரம் இது. இந்த நன்மையை, சுதந்திரத்தை இன்றைய சிறுகதை எழுத்தாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்களா என்பது முக்கியம். ஏனென்றால், தமிழ் சிறுகதையின் வளர்ச்சி என்பது தமிழ் மொழியின் வளர்ச்சி.
முந்தைய தலைமுறையினரின் சிறுகதைகளின் மையமாக சமூக வாழ்வு, குடும்ப வாழ்வு இருந்தது. ஆனால் இன்றைய எழுத்தாளர்களின் சிறுகதைகளில் மையமாக இருப்பது தனி மனித வாழ்வும் அதன் நெருக்கடியும், ரகசியமும், உடலும்தான். பெண் உடல் சார்ந்து, பெண் மொழி சார்ந்து இப்போதுதான் அதிகம் எழுதப்படுகின்றன. ஆண் பெண் உறவு சார்ந்த, ஜாதி, மதம் சார்ந்த கேள்விகள், உள்முரண்கள் இப்போதுதான் சிறுகதைகளில் அதிகம் பேசப்படுகின்றன. புனிதங்களைப் போற்றாத, புனிதங்களை வளர்க்காத, புனிதங்களைக் கேள்விக்குட்படுத்துகிற தன்மையுடன் இன்றைய சிறுகதைகள் இருக்கின்றன. கோட்பாட்டுச் சுமைகளைச் சுமக்காதவர்கள் இன்றைய எழுத்தாளர்கள். தனி மனிதப் பிரச்சினையாக இருந்தாலும் சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் எல்லாவற்றையும் நேரடியாகப் பேசுகிற தன்மை இன்றைய சிறுகதைகளில் இருக்கின்றன.
2000-க்குப் பிறகு எழுத வந்த சிறுகதை எழுத்தாளர்களில் கவனம் பெற வேண்டியவர்கள் யார், கவனம் பெற வேண்டிய சிறுகதைத் தொகுப்புகள் எவை என்று பட்டிலிடுவது எளிய காரியமல்ல. ஆனாலும் நான் படித்தவற்றில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு, சிறந்தவை எனக் கருதியவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். இது இறுதிப் பட்டியல் அல்ல. இது ஒரு மாதிரிதான்.
பட்டியலிடப்பட்ட 10 சிறுகதைத் தொகுப்புகளைப் படிக்கும்போது 2000-க்குப் பிந்தைய தமிழ்ச் சிறுகதைகளின் போக்கு, அதன் அழகியல் தன்மை, வளர்ச்சி, மொழி, கதை, கதை சொல்லப்பட்ட விதம், கதையின் மையம், கதைகள் முன்னிறுத்திய சமூக நிகழ்வுகள் ஆகியவற்றை அறிய முடியும். இன்றைய எழுத்தாளர்கள் முந்தைய தலைமுறையினரின் எழுத்துமுறையை எந்த அளவுக்குப் பின்பற்றினார்கள், எந்த அளவுக்கு நிராகரித்திருக்கிறார்கள் என்பதையும் இந்தத் தொகுப்புகள் காட்கின்றன. இந்தச் சிறுகதைத் தொகுப்புகளின் மூலமாகத் தமிழ்ச் சமூக வாழ்வையும், மனோபாவத்தையும், மாற்றத்தையும் அறிய முடியும். நிகழ்காலச் சமூகத்தின் முகம் இந்தச் சிறுகதைத் தொகுப்புகள்: இந்த எழுத்தாளர்கள்.
1. கண்டி வீரன்
- ஷோபாசக்தி: கருப்புப் பிரதிகள்- தொடர்புக்கு: 9444272500
2. முத்தி-
புகழ்: க்ரியா பதிப்பகம் தொடர்புக்கு: 9789870307
3. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
மாரிசெல்வராஜ் - வம்சி பதிப்பகம் தொடர்புக்கு: 9444867023
4. நிறைய அறைகள் உள்ள வீடு-
குட்டி ரேவதி: பாதரசம் பதிப்பகம் - தொடர்புக்கு: 7299239786
5. மண்டை ஓடி-
ம.நவீன்: வல்லினம் பதிப்பகம் தொடர்புக்கு: 044-24896979
6. வெளிவாங்கும் காலம்-
என்.ராம்: பாதரசம் பதிப்பகம் - தொடர்புக்கு: 7299239786
7. இரவுக் காட்சி
- கே.என்.செந்தில்: காலச்சுவடு - தொடர்புக்கு: 9677778863
8. வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும்
தமயந்தி: கருப்புப் பிரதிகள் தொடர்புக்கு: 9444272500
9. வெயில் உலர்த்திய வீடு
எஸ்.செந்தில்குமார்: உயிர்மை தொடர்புக்கு: 9444366704
10. கவர்னர் பெத்தா
- மீரான் மைதீன்: திணை வெளியீட்டகம் தொடர்புக்கு: 9894817439


சென்ற நூற்றாண்டின் இலக்கியம்: சாரு நிவேதிதா பேட்டி


மூத்த படைப்பாளிகளின் படைப்புகள், தவறவிடக் கூடாத புத்தகங்களை இளைய வாசகர் களுக்குப் பரிந்துரைக்குமாறு எழுத்தாளர் சாரு நிவேதாவிடம் கேட்டோம்.
இன்றைய தினம் பெரும்பான்மையான இளைஞர்களிடம் தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருந்துவருவதை நீங்கள் கவனிக்கலாம். தமிழை ஒழுங்காக நான்கு பக்கம் எழுதக்கூடிய இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலை நாடுகளில் இந்த அவலம் இல்லை. ஐரோப்பாவில் ஒவ்வொரு இளைஞருக்கும் நான்கு மொழிகள் தெரிந்திருக்கின்றன.
ஒரு ஃப்ரெஞ்சு மாணவரை எடுத்துக்கொண்டால் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில்கூட அவர்கள் படித்து முடிக்கும் வரையிலும் - ஆய்வுப் படிப்பிலும்கூட - ஃப்ரெஞ்ச் மொழித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். ஒரு ஐரோப்பிய மருத்துவ மாணவன் தன் தாய் மொழியோடுகூட லத்தீன் மொழியும் கற்கிறான். மருத்துவச் சொற்களில் பெரும்பாலானவை லத்தீன் மொழியை மூலமாகக் கொண்டவை.
இப்படி, தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்தச் சமூகமே உயர்வுறும். தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார, அரசியல் வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம், தமிழைக் கைவிட்டுவிட்டோம். உங்களுக்குத் தெரியுமா, இங்கே உள்ள 99% தனியார் கல்லூரிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள். என்னால் பெயர்கூடச் சொல்ல முடியும். தமிழ்ப் பேராசிரியர்கள்கூட இங்கே திக்கித் திக்கி ஆங்கிலத்திலேயே பேச வேண்டியிருப்பதன் அவலத்தை வேறு எந்த மண்ணிலும் காண முடியாது. நல்லவேளை, தமிழை ஆங்கிலத்தில் கற்பியுங்கள் என்று உத்தரவு போடவில்லை என்று பகடி செய்தான் என் நண்பராக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்!
இந்த நிலையில், ஒரு மொழியை எப்படி நாம் தக்க வைத்துக்கொள்வது? சிலர் தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்ற (நல்ல) நோக்கத்தில் தவறான வழியில் செல்வதையும் பார்க்கிறேன். குளம்பியகம், ஆகத்து (ஆகஸ்ட் மாதமாம்!) என்றெல்லாம் தமிழைச் சுத்தப்படுத்துகிறார்கள். இந்த மடி ஆச்சாரமெல்லாம் தமிழைக் காப்பாற்றாது. ஆங்கிலத்தில் உள்ள பெரும்பாலான சொற்கள் பிற மொழிகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவைதான்.
ஆக, ஒரு மொழி நிலைத்து நிற்பதற்காக நாம் செய்யக்கூடியது, அம்மொழியில் உள்ள இலக்கியத்தைக் கற்பது மட்டுமே. மேலும், அது ஒன்றும் மொழியைக் காப்பாற்றுவதற்காக நாம் செய்ய வேண்டிய கடமை அல்ல. பட்சிகளுக்கு உணவிடுவது பட்சிகளுக்காக மட்டும் அல்ல என்பதுபோல. பட்சிகளுக்கு உணவிட்டால் பூமி வாழும்; பூமி குளிரும். பூமியின் மரணத்தை இன்னும் பல கோடி ஆண்டுகள் தள்ளிப் போடுவதற்கு விருட்சம் வேண்டும்; வனம் வேண்டும்; மழை வேண்டும்; இந்தப் புவிச் சமநிலையைக் காப்பாற்றுவது பட்சிகள். அதேபோல் நாமும் நம் வாழ்வும் மேன்மையுற, அறம் தழைக்க நாம் செய்ய வேண்டிய அடிப்படையான காரியம், இலக்கியத்தை வாசித்தல். அதற்கு நான் பரிந்துரைக்கக் கூடிய பத்துப் புத்தகங்கள்:

1. சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகம்.
நம்முடைய பழைய வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதுதான் இன்றைய வாழ்வை மேலும் செழுமைப்படுத்திக்கொள்வதற்கு இருக்கும் எளிய வழி. பதிப்பாளர்: வெளி ரங்கராஜன்.
2. ந.சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம்.
என்னை காந்தியவாதியாக மாற்றிய நாவல். இதன் சில பக்கங்களை நம் குழந்தைகளுக்கு வாசித்துக் காண்பித்தால் போதும்; சமுதாயம் இப்போது இருப்பதுபோல் இருக்காது. நற்றிணை பதிப்பகம்.
3. தி.ஜானகிராமனின் செம்பருத்தி. காலச்சுவடு பதிப்பகம்.
4. லா.ச.ரா.வின் சிறுகதைகள்.
இந்த இரண்டு நூல்களும் தமிழைச் சங்கீதம்போல் மாற்றிக் காட்டியவை. டிஸ்கவரி புக் பேலஸ்.
5. எஸ்.சம்பத்தின் இடைவெளி.
உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று இது இப்போது இணையத்தில் மட்டுமே கிடைக்கிறது. விருட்சம் வெளியீடாக வந்திருப்பது திருத்தப்படாத பதிப்பு.
6. எம்.வி.வெங்கட்ராமின் காதுகள்.
இடைவெளிக்குச் சொன்னதையே இதற்கும் சொல்லலாம். காலச்சுவடு பதிப்பகம்.
7. ஆ.மாதவனின் கடைத்தெருக் கதைகள்.
நற்றிணைப் பதிப்பகம்.
8. அசோகமித்திரனின் இன்ஸ்பெக்டர் செண்பகராமன்.
குறுநாவல் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம்.
9. தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள்.
தமிழில் தஞ்சை ப்ரகாஷுக்கு இணையாக தஞ்சை இஸ்லாமிய வாழ்க்கையை யாரும் எழுதவில்லை. டிஸ்கவரி புக் பேலஸ்.
10. ந.முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள்.
க்ரியா பதிப்பகம். முக்கியமான சிறுகதையாளரான ந.முத்துசாமியின் பழைய கதைகளும் புதிய கதைகளும் கலந்த முக்கியமான புத்தகம்.
ஒரு ஐரோப்பிய மருத்துவ மாணவன் தன் தாய் மொழியோடுகூட லத்தீன் மொழியும் கற்கிறான். மருத்துவச் சொற்களில் பெரும்பாலானவை லத்தீன் மொழியை மூலமாகக் கொண்டவை. இப்படி, தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்த சமூகமே உயர்வுறும்!

நாவல்களின் காலம்

எஸ்.ராமகிருஷ்ணன்
சமகாலத்தின் முக்கியமான நாவல்கள் எவை? இன்றைய நாவல்களின் போக்கு எப்படி இருக்கிறது? ‘உபபாண்டவம்’, ‘நெடுங்குருதி’, ‘யாமம்’, ‘சஞ்சாரம்உள்ளிட்ட நாவல்களை எழுதியவரும் குறிப்பிடத்தகுந்த விமர்சகருமான எஸ்.ராமகிருஷ்ணனிடம் இது குறித்துக் கேட்டோம்.
நம் காலம் நாவல் களின் காலம். உலகெங்கு ம் நாவல்கள் விற்பனையில் மிகப் பெரிய சாதனை படைத்துவருகின்றன. ஹாரிபாட்டர் நாவல் 107 மில்லியன் விற்றிருக்கிறது. லார்டு ஆஃப் தி ரிங்ஸ் நாவல் 150 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. உலகில் எந்தக் கவிதைத் தொகுப்பும், கட்டுரைத் தொகுப்பும் இவ்வளவு விற்றதில்லை. தமிழிலும் நாவலுக்கெனத் தனி வாசக வட்டம் எப்போதும் இருந்துவருகிறது. நாவல் விற்பனையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
தமிழ் நாவல் உலகம் இன்று பெரும் விருட்சமாக வளர்ந்தோங்கி நிற்கிறது. ஆரம்ப காலத் தமிழ் நாவல்களில் கதாசிரியரே கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவார். அனுபவங்கள் மட்டுமே கதையாக உருமாறின. புனைவின் சாத்தியங்கள் அறியப்படவேயில்லை. நவீனத்துவத்தின் வருகையால் நாவல்களில் ஆசிரியரின் குரல் மறைந்துபோனது, அனுபவங்களை மட்டும் விவரிக்காமல் அவற்றுக்குக் காரணமாக உள்ள அரசியல் சமூக பொருளாதார உளவியல் காரணங்களை நாவல் ஆராயத் துவங்கியது.
இரண்டாயிரத்துக்குப் பிறகே தமிழ் நாவல்கள் பாலின்பம் குறித்த திறந்த உரையாடல்கள், அடையாளச் சிக்கல், நகர்மயமாதலின் பிரச்சினைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் அக உலகம் எனப் புதிய திசை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது. இன்றைய நாவல் என்பது ஒரு சிம்பொனிபோல பல்வேறு இசைக் கருவிகளின் ஒன்று சேர்ந்த கூட்டு வடிவம் என்பார் மிலன் குந்தேரா. அது தமிழ் நாவலுக்கும் பொருந்தக்கூடியதே.
மறைக்கப்பட்ட வரலாறு, புதிய வாசிப்புக்குள்ளான தொன்மம், இதிகாசம் பற்றிய புனைவெழுத்து, இனவரவியல் கூறுகள் கொண்ட நாவல் என இன்றைய நாவலின் இயங்குதளங்கள் விரிவுகொள்கின்றன.
புத்தாயிரத்துக்குப் பிறகான சிறந்த நாவல்கள்
1. சயந்தனின் ஆறாவடு’ (தமிழினி பதிப்பகம்)ஈழத் தமிழர்களின் துயர்மிகு வாழ்வினைச் சித்தரிக்கும் சிறந்த நாவல்.
2. முருகவேளின் மிளிர்கல்’ (பொன்னுலகம் பதிப்பகம்) கண்ணகியைத் தேடும் பயணத்தின் ஊடாக ரத்தினக்கல் தேடும் வணிக சூதின் கதையைச் சொல்லும் புதிய நாவல்.
3. நக்கீரனின் காடோடி’ (அடையாளம் பதிப்பகம்) சூழலியல் அக்கறையுடன் எழுதப்பட்ட புதுவகை நாவல்.
4. லட்சுமி சரவணக்குமாரின் உப்பு நாய்கள்’ (உயிர்எழுத்து பதிப்பகம்) விளம்புநிலை மக்களின் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவுசெய்த நாவல்.
5. ஜாகிர்ராஜாவின் மீன்காரத் தெரு’ (மருதா பதிப்பகம்) இஸ்லாமியர்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசும் நாவல்.
6. சுகுமாரனின் வெலிங்டன்’ (காலச்சுவடு பதிப்பகம்) ஊட்டியின் வரலாற்றுடன் பால்ய நினைவுகளை ஒன்று கலந்து விவரிக்கும் சிறந்த நாவல்.
7. இரா.முருகனின் அரசூர் வம்சம்’ (கிழக்கு பதிப்பகம்) தலைமுறைகளின் கதையைக் கூறும் மாய யதார்த்தவாத நாவல்
8. தமிழ்மகனின் வெட்டுப்புலி’ (உயிர்மை பதிப்பகம்) திராவிட இயக்க அரசியலை மையமாகக் கொண்ட நாவல்.
9. யூமாவாசுகியின் ரத்த உறவு’ (தமிழினி பதிப்பகம்) குடியால் அழிந்த குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல்.
10. பிரான்சிஸ் கிருபாவின் கன்னி’ (தமிழினி பதிப்பகம்) காதலின் துயரைக் கவித்துவமாகப் பதிவுசெய்த நாவல்.

புத்தாயிரத்தின் கவிஞர்கள்

புத்தாயிரத்துக்குப் பிறகான காலகட்டம் என்பது நவீனத் தமிழ்க் கவிதையின் வரலாற்றில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு மிகவும் முக்கியமான காலகட்டமாகும். 90-களுக்கு முந்தைய கவிஞர்கள் பெரும்பாலும் மனவெளியில் உலவியவர்களாகவே தெரிந்தார்கள். ஆத்மாநாம் போன்ற ஒருசிலர்தான் விதிவிலக்காக இருந்தார்கள்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உலகுக்கு இந்தியா திறந்துவிடப்பட்டது 1990-களின் தொடக்கத்தில். இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத் தாராளமயமாதல், உலகமயமாதல் போன்றவற்றின் கரங்கள் இந்தியாவை இறுகப்பற்ற ஆரம்பித்தன. இந்தப் போக்குக்கான எதிர்க்குரல்கள் தமிழ்க் கவிதைகளில் தீவிரமாகப் பிரதிபலிக்க ஆரம்பித்தது புத்தாயிரத்துக்குப் பிறகுதான்.
2000-வது ஆண்டில் வெ. ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ழாக் பிரெவெரின் சொற்கள்கவிதைத் தொகுப்பு தமிழ்க் கவிஞர்களிடையே பெரும் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தியது. அரசியல் பார்வையையும் அன்றாட வாழ்வின் தருணங் களையும் ஒருங்கே எழுதக் கூடிய குணாம்சத்தைப் பலரும் பிரெவெரிடமிருந்து ஆரத் தழுவிக்கொண்டார்கள்.
கவிதை அரசியல் பேசக்கூடாதுஎன்ற எழுதப்படாத விதியைத் தூக்கி எறிந்து புதிய போக்கைத் தொடங்கு கிறார்கள் புத்தாயிரத்தின் தமிழ்க் கவிஞர்கள். இதன் விளைவாகத் தமிழ்க் கவிதை உலகமயமாகிறது.
விற்பனைப் பிரதிநிதிகள், மாதவிடாய், தன்பாலின உறவு, குடும்ப வன்முறை, சாதியம், வெண்புள்ளி கொண்டிருக்கும் பெண், ஜார்ஜ் புஷ், ஈழ விடுதலைப் போராட்டம் என்றெல்லாம் விதவிதமான பாடுபொருள்களைக் கொண்டிருந்தன புத்தாயிரத்தின் கவிதைகள். இரண்டாயிரமாண்டு காலத் தமிழ்க் கவிதை வரலாற்றில் இந்த அளவுக்குப் பன்மைக்குரல்கள் ஒருபோதும் எழுந்ததில்லை. இந்த அளவுக்குத் தமிழ்க் கவிதைக்குள் ஒருபோதும் ஜனநாயகம் நிகழ்ந்ததில்லை. ஒடுக்கப்பட்ட தரப்புகளிலிருந்து எழுத வந்த, அல்லது ஒடுக்கப்பட்ட தரப்புகளைப் பற்றி எழுதிய கவிஞர்களின் குரல்கள்தான் மற்றவர்களைவிட அதிகமாக ஆதிக்கம் செலுத்தின என்பது தற்காலக் கவிதைப் போக்கில் சமூக நீதியின் நீட்சியை உணர்த்துகிறது.
தலித் கவிஞர்களின் வரவு தமிழ்க் கவிதைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களின் வாழ்க்கை, வலி, கோபம் எல்லாமே கவிதையாயின. பெண்களின் குரலும் கவிதைகளில் உரக்க ஒலிக்க ஆரம்பித்தது புத்தாயிரத்துக்குப் பிறகுதான். தலித் பெண்கள், இலங்கைப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் என்று பெண்களின் கவிதைகளும் பன்மைத்தன்மை கொண்டவையாக இருந்தன. புத்தாயிரத்துக்குப் பிறகான ஆண்டுகள் ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த ஆண்டுகள். அந்தப் போராட்டத்தின் இறுதியில் மனிதப் பேரவலமும் நிகழ்ந்தது. இயல்பாகவே, இவையெல்லாம் இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளில் உக்கிரத்தை ஏற்றின.
இன்றைய கவிதைகள் மக்களுக்கான அரசியலைப் பேசினாலும், வெகுமக்களை இந்தக் கவிதைகள் பெரிதும் போய்ச்சேருவதே இல்லை. ஒரு பக்கம், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வெகுமக்களின் ரசனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது என்றால் இன்னொரு பக்கம், கவிஞர்களும் மொழிரீதியாக வெகுமக் களை விட்டு விலகிவந்து, தங்களைச் சிறுபத்திரிகை களுக்குரியவர்களாக ஆக்கிக்கொண்டார்கள். ஆழமான கவிதைகள் வெகுமக்களையும் போய்ச்சேரும் என்பதை நிரூபித்தவர்கள் பாப்லோ நெருதாவும் ழாக் ப்ரெவெரும். அவர்களைப் போன்றதொரு கவி இயக்கம் தமிழில் நடைபெற்று கவிதை எல்லோருக்கும் போய்ச்சேர்ந்தால்தான் அது உண்மையிலேயே ஜனநாயகப்படுத்தப்படும். இந்த மாற்றம் வெறுமனே எளிய மொழியில் கவிதை எழுதுவதால் நிகழ்ந்து விடாது. கல்விமுறை, வாசிப்பு இயக்கங்கள், வெகுஜனப் பத்திரிகைகள் போன்றவற்றின் மூலம் செய்ய வேண்டிய மாற்றம் இது. மொழியின் உன்னத வடிவமான கவிதை என்பது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டுமே தவிர. ஒருசிலருக்கானதாக மட்டும் ஆகிவிடக் கூடாது.
புத்தாயிரத்துக்குப் பிறகு வெளிவந்த முக்கியமான தொகுப்புகளைப் பட்டியலிடச் சொல்லி கவிஞர்கள் சுகுமாரன், சுகிர்தராணி, சே. பிருந்தா, சமயவேல், ராணிதிலக் ஆகியோரிடம் கேட்டோம். அவர்கள் தந்த பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பட்டியல் இது.
1. உறுமீன்களற்ற நதி
இசை, காலச்சுவடு பதிப்பகம் (9677778863)
2. காயசண்டிகை
இளங்கோ கிருஷ்ணன் காலச்சுவடு பதிப்பகம்
3. திருச்சாழல்
கண்டராதித்தன் புது எழுத்து பதிப்பகம்- (9842647101)
4. களம் - காலம் - ஆட்டம்
- சபரிநாதன் புது எழுத்து பதிப்பகம் - (9842647101)
5. ஏரிக்கரையில் வசிப்பவன்
ஸ்ரீநேசன் - ஆழி பதிப்பகம்(98841 55289)
6. தீண்டப்படாத முத்தம்
சுகிர்தராணி காலச்சுவடு பதிப்பகம்
7. முலைகள்
குட்டி ரேவதி அடையாளம் பதிப்பகம் (94437 68004)
8. ஈதேனின் பாம்புகள்
- றஷ்மி காலச்சுவடு பதிப்பகம்
9. தலைமறைவுக் காலம்
- யவனிகா ராம் - நற்றிணை பதிப்பகம்(9486177208)
10.கல்விளக்குகள்
- என்.டி. ராஜ்குமார் காலச்சுவடு பதிப்பகம்

தவறவிடக் கூடாத ஆய்வு நூல்கள்: பழ.அதியமான் பேட்டி


பழ.அதியமான் தமிழின் முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவர். சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’, ‘அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்ஆகிய ஆய்வு நூல்களை எழுதியிருக்கும் இவரிடம், தமிழின் முக்கியமான வரலாற்று, ஆய்வு நூல்களைப் பற்றிக் கேட்டோம்.
ஆழ்பாதாளத்தில் வாழ்ந்துவந்த தமிழ் ஆய்வுலகத்தை வெளிஉலகத்தோடு உறவாடச் செய்தவர் க.கைலாசபதி. அவரைத் தொடர்ந்து, அந்த நம்பிக்கையை உயிர்ப்புடன் பல காலம் கட்டிவளர்த்தவர் கா.சிவத்தம்பி. நா.வானமாமலை உள்ளிட்டவர்களால் உந்துதல் பெற்ற சென்ற தலைமுறை அறிவாளர் பலர் புத்தாயிரத்தில் ஆய்வுப்பரப்பை விரித்தனர். ஆழமானதா என்ற சந்தேகம் இருப்பினும் பரப்பு பெரிதாகியுள்ளது.
துறை ஆய்வாக இருந்த தமிழாய்வு சமூகம், பண்பாடு, மானிடவியல், வருங்காலவியல், வரலாறு என இணைந்து பல்துறை ஆய்வாக இன்று மலர்ச்சி பெறத் தொடங்கியுள்ளது. பழமை மாறி நவீனமாகியுள்ளது. சுவாரசியமும் ஆழமும் ஆய்வுகளில் சேர்ந்துள்ளன.
இவ்வகையில் ஆ.சிவசுப்பிரமணியன், அ.மார்க்ஸ், ஆ.இரா.வேங்கடாசலபதி, பொ.வேல்சாமி, எஸ்.வி.இராசதுரை-வ.கீதா, க.திருநாவுக்கரசு போன்ற கல்விப்புலம் சார்ந்த மற்றும் சாராதவர்கள் குறிப்பிடத் தகுந்த முன்னெடுப்புகளைச் செய்துள்ளனர். ராஜ்கௌதமன், க.பஞ்சாங்கம், வீ.அரசு, தொ.பரமசிவன், அ.ராமசாமி போன்றோர் தமிழ் இலக்கிய ஆய்வுக்கும் நவீன இலக்கிய உலகத்துக்கும் பாலமாகச் செயல்பட்டனர்/செயல்படுகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை ஆய்வாளர் பட்டாளத்தினர், ப.சரவணன் போன்றோர் சிறிதுக்கும் பெரிதுக்கும் சென்னைச் சான்றுகள். மாற்றுவெளி, காலச்சுவடு, கவிதாசரண், மேலும் போன்ற இதழ்கள் இவ்வகை ஆய்வுகளுக்கு உற்சாகம் தரும் இலக்கிய இதழ்கள்.
ஆ.இரா.வேங்கடாசலபதியின் முன்னோடி ஆய்வு முயற்சிகளின் விளைபயனாய்ப் பதிப்புகள் ஆழமும் செம்மையும் பெற்றன.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வளர்ந்துவருகிறது. புதுக்கோட்டை ஞானாலயா புதுக் கட்டிடத்தில் பொலிகிறது. மறைமலை அடிகள் சேகரிப்புகள் இதற்கு விதிவிலக்கு. சாமிநாதையர் நூலகம் இலக்கமயமாகிறது (டிஜிட்டல் மயம்). 20-ம் நூற்றாண்டு ஆய்வுகளுக்கு அடிப்படையான இதழ்களும் ஓரளவுக்குத் தொகுதிகளாகிவிட்டன. மா.ரா.அரசு, இ.சுந்தர மூர்த்தி முயற்சியில் இந்த இதழியல் விவரங்கள் பத்துக்கும் மேற்பட்ட நூல்களாகிவிட்டன. கலைஞன், சந்தியா போன்றோர் ஏற்பாட்டால் 20-க்கும் மேற்பட்ட இதழ்கள் தொகுப்புகளாகியிருக்கின்றன.
புத்தாயிரத்தில் வந்த சில முக்கிய நூல்கள்
1. பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
- ஆ.இரா.வேங்கடாசலபதி, (காலச்சுவடு பதிப்பகம்). பாரதி பாடல்கள் நாட்டுடைமையானதன் முழுப் பின்னணி. இதுவரை வெளிவராத ஆதாரங்களுடன் கூடிய நூல்.
2. மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
- ய.மணிகண்டன், (காலச்சுவடு பதிப்பகம்). 2014. மணிக்கொடியும் பாரதிதாசனும் இணைய முடியாத இருவேறு துருவங்கள் எனக் கருதப்பட்டு வந்த மாயையை ஆதாரத்துடன் விலக்கிய நூல்.
3. திருமூலர்: காலத்தின் குரல்
- கரு.ஆறுமுகத் தமிழன், (தமிழினி பதிப்பகம்) திருமூலரின் வரையறுக்க முடியாத காலத்தை அவரது குரலிலிருந்து கண்டுணர்த்திய, அழகு தமிழில் எழுதப்பட்ட நூல்.
4. சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு
- க.பஞ்சாங்கம், (அன்னம் பதிப்பகம்) காலந்தோறும் சிலப்பதிகாரப் பனுவல் பார்க்கப்பட்டுவந்த பார்வையை நவீன தன்மையுடன், தரவுகளின் அடிப்படையில் சுவையாகச் சொல்லும் நூல்.
5. எம்.சி.ராசா வாழ்க்கை வரலாறு - எழுத்தும் பேச்சும்
- வாலாசா வல்லவன் (அருள் பாரதி பதிப்பகம்) பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட 20-ம் நூற்றாண்டுத் தலைவர்களின் வரலாறுகள் மீட்டெடுக்கப்பட்டு, புத்தாயிரத்தில் நூல்களாகியுள்ளன. அவற்றுள் ஒன்று இந்நூல்.
6. காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
- ப.திருமாவேலன், (தென்திசைப் பதிப்பகம்) திராவிட இயக்கத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய நூல்.
7. தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும்
- அ.பெரியார், (முரண்களரி பதிப்பகம்) மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின்னர் எழுந்த பிரச்சினைகளை அலசும் நூல்.

8. ஏ.ஜி.கஸ்தூரிரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்
- பசு.கவுதமன், (ரிவோல்ட் பதிப்பகம்). இடதுசாரித் தலைவர்கள் பற்றிய முக்கிய நூல்களில் ஒன்று.
9. குடி அரசு 1925-1938 பெரியாரின் எழுத்தும் பேச்சும்
- கொளத்தூர் தா.செ.மணி, (பெரியார் திராவிடக் கழகப் பதிப்பகம்) இவை இணையத்திலும் கிடைக்கின்றன.
10. கவரி, கருமை, காளமேகம்
- க.கதிரவன், (இராஜகுணா பதிப்பகம்) தமிழாய்வுக் கட்டுரைகளை ஆழமாகவும் சுவையாகவும் எழுத முடியும் என்பதற்கு இந்நூல் சான்று.

அதிகரிக்கும் அபுனைவுகள்: ப.கு.ராஜன் பேட்டி

தமிழில் அபுனைவுகள் முன்னெப்போதைவிடவும் இப்போது கூடுதலாக நூலாக்கம் பெற்றுவருகின்றன. தொடர்ந்து மொழியாக்கப் பணிகளோடு அபுனைவுகள் பற்றியும் தொடர்ந்து எழுதிவருகிற ப.கு.ராஜனிடம் தமிழின் குறிப்பிடத்தக்க அபுனைவுகள் குறித்துக் கேட்டோம்:
தமிழ் மக்களின் வரலாறு, உலக நோக்கு, அரசியல், இலக்கியம் ஆகியவை குறித்து வந்துள்ள நூல்கள் ஏராளம். கமில் சுவலபில், ஜார்ஜ் ஹார்ட் மற்றும் சமீபத்தில் மறைந்த நொபுரு கரோஷிமா ஆகியோர் எழுதியுள்ள நூல்கள் தனித்துவம் வாய்ந்தவை. மிகுந்த பொருட்செறிவுடன் விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டவை.
அதுதவிர, பேராசிரியர் ஆர்.செண்பகலக்ஷ்மி போன்றோர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல்களும் முக்கியமானவை. இவையெல்லாம் அதிகமாய்த் தமிழில் மட்டுமே வாசிக்கக் கூடியவர்களுக்கு இன்னும் வந்து சேராத நூல்களாகவே உள்ளன. இவை தவிர்த்து, நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நூல்களும் ஏராளமாகவே உள்ளன. அவற்றுள் சுயமான சிந்தனை, ஆழம், விரிவு, வாசிப்புத் தளத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தாலும், எந்தவொரு பட்டியலிலும் விடுபடக் கூடாத நூல்கள் பல உள்ளன. இருந்தாலும், சமகாலத் தமிழ் வாழ்வு, வரலாறு, இலக்கியம், சமூகம் ஆகியவை குறித்துக் கட்டாயமாக பத்து நூல்கள் மட்டுமே பட்டியலிட வேண்டுமென்றால் பின்வருவனவற்றைக் கூறலாம்.
1. அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுப்பு- I, II, III
தொகுப்பாசிரியர்: ஞான.அலாய்சியஸ்
வெளியீடு: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம். தொடர்புக்கு: 0462 - 2561394
அசலான சுயசிந்தனையாளரும் செயல்பாட்டாளரும் மறைந்து 100 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் சமூகப் பொருத்தப்பாடு உடையவருமான அயோத்திதாசரின் எழுத்துக்கள்.
2. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ்.
தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை, வெளியீடு: என்.சி.பி.ஹெச் நிறுவனம், தொடர்புக்கு: 044-26251968
உலகப் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் சிக்கலில் விழுந்து திணறிக்கொண்டிருக்கும் சமகாலச் சூழலில், உலகம் எங்கும் மீண்டும் கவனம் பெற்றுள்ள ஒரு சில நூல்களில் முக்கியமானது. எஸ்.வி.ராஜதுரையின் காலப்பொருத்தம் கொண்ட விளக்கங்களுடன் வெளிவந்துள்ளது.
3. பெரியார்: சுயமரியாதை சமதர்மம்
எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா
வெளியீடு: விடியல் பதிப்பகம், தொடர்புக்கு: 9789457941
தமிழகத்தின் அரசியல், சமூக மாற்றங்களின் ஒரு நூற்றாண்டு வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாத நூல்.
4. தமிழர்களின் தத்துவ மரபு தொகுப்பு I , II
அருணன்
வெளியீடு: வசந்தம் பதிப்பகம், தொடர்புக்கு: 0452 - 2621997
தத்துவம் என்றாலே அது மதம் சம்பந்தப்பட்டது. எங்கிருந்தோ வந்தது என்பதை புறமொதுக்கி, தமிழ்ச் சமூகம் தன் முயற்சியாகவும், வெளியிலிருந்து ஏற்றுக்கொண்டும் உருவாக்கிக்கொண்ட தத்துவ நோக்குகளின் வரலாறு.
5. பாட்டும், தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்
ராஜ்கெளதமன்
வெளியீடு: தமிழினி பதிப்பகம். தொடர்புக்கு: 9344290920
தமிழ்ச் சமூகத்தின் உருவாக்கம் குறித்து ஒரு சுயமான சிந்தனையாளரின் பல நூல்களில் முக்கியமானதொரு படைப்பு.
6. ம.சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் தொகுதி I, II, II
தொகுப்பாசிரியர்கள்: பா.வீரமணி, முத்து.குணசேகரன்
வெளியீடு: தென்னிந்திய ஆய்வு மையம். தொடர்புக்கு: 044 - 28482441
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், மண்ணிற்கேற்ற மார்க்ஸியத்துக்கான தேடலைத் தொடங்கிவைத்த மேதையின் எழுத்துக்கள்.
7. ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்
தொகுப்பு: பசு.கவுதமன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044 - 24332424
தந்தை பெரியாரின் வாழ்க்கையின் பரந்துபட்ட அக்கறைகளை அறியத்தரும் அவரது எழுத்துக்களின் தொகுப்பு நூலிது.
8. பண்பாட்டு அசைவுகள்
தொ.பரமசிவம்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம். தொடர்புக்கு: 9677778861
நாம் நன்கறிந்த தமிழகத்தின் அறியப்படாத பண்பாட்டு, வரலாற்றுக் கூறுகளை விளக்கும் நூல்.
9. புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி- I, II, III
பதிப்பாசிரியர்கள்: சிற்பி பாலசுப்பிரமணியன்
நீல.பத்மநாபன்
வெளியீடு: சாகித்திய அகாடமி, தொடர்புக்கு: 044 - 24354815
சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியங்கள் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு. தகுதிமிக்க பதிப்பாசிரியர்கள் தொகுத்துள்ளனர்.
10. தமிழர் வளர்த்த தத்துவங்கள்
தேவ.பேரின்பன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044 - 24332424
தமிழ்ச் சமூகம் தனது மண் சார்ந்த வாழ்க்கையிலிருந்து உருவாக்கி வளர்த்த தத்துவங்கள் குறித்த நூல்.

படிக்க வேண்டிய பசுமை இலக்கியங்கள்: சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் பரிந்துரை

காடோடிஎன்னும் சூழலியல்சார் நாவலை எழுதியவரும் சூழலியல் எழுத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருபவருமான நக்கீரனிடம் முக்கியமான சூழலியல் நூல்களைப் பற்றிக் கேட்டோம்.
தமிழில் சூழலியல் அக்கறை சார்ந்த பசுமை இலக்கியம் புத்தாயிரத்துக்குப் பிறகே தொடங்கியது. புத்தாயிரத்துக்கு பிறகான நடப்புப் பதின் ஆண்டைச் சூழலியல் எழுத்துக்கானது எனலாம். இதை மெய்ப்பிக்கும் வகையில் பல பதிப்பகங்கள் சூழலியல் சார்ந்த நூல்களைக் கொண்டுவருகின்றன. இதற்கான முயற்சியைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி வைத்த பெருமை பூவுலகின் நண்பர்கள்அமைப்பைத் தொடங்கிய நெடுஞ்செழியனுக்கே உரியது. இவ்வமைப்பின் வழி இத்துறை சார்ந்த ஏராளமான மொழிப்பெயர்ப்பு நூல்களை வெளியிட்டு கவனம் பெறவைத்தது இவரது சாதனையாகும். இதன் தொடர்ச்சியாகத் தற்போதும் பல மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன.
புத்தாயிரத்துக்குப் பிறகு, சூழலியல் அறிவைப் பெருக்கிக்கொள்ள உதவும் சிறந்த பத்து நூல்கள்:
1. பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் தமிழரும் தாவரமும்
(பாரதிதாசன் பல்கலைக்கழகம்): கடும் உழைப்பில் உருவான தமிழகத்துத் தாவரங்களையும் குறித்த முழுமையான கலைக் களஞ்சியம்.
2. பழ. கோமதிநாயகத்தின் தமிழகம்தண்ணீர்தாகம் தீருமா?
(பாவை பப்ளிகேஷன்ஸ்): தமிழ்நாட்டின் தற்போதைய தண்ணீர் சிக்கல் தொடங்கிய இடத்தை அடையாளம் காட்டும் நூல்.
3. பொ.ஐங்கரநேசனின் ஏழாவது ஊழி
(சாளரம்): நம்மைச் சுற்றிலும் உள்ள, நாம் அறியாத பல ஆபத்துகளை அறிவிக்கும் நூல்.
4. சு. தியடோர் பாஸ்கரனின் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
(உயிர்மை): தமிழில் இயற்கை சார்ந்து கவனம் குவியக் காரணமான நூல்.
5. ச.முகமது அலி, க. யோகானந்தின் யானைகள் அழியும் பேருயிர்
(இயற்கை வரலாற்று அறக்கட்டளை): யானையைக் குறித்து அறிவியல் பூர்வமான அரிய தகவல்களோடு வெளிவந்த நூல்.
6. பாமயனின் அணுகுண்டுகளும் அவரை விதைகளும்
(தமிழினி): அதிர வைக்கும் பல சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு.
7. வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய நெய்தல் சுவடுகள்
(தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் வெளியீடு): கடல் குறித்து எவரும் அறியாத உண்மைகளை எடுத்துரைக்கும் நூல்.
8. இரா. முருகவேளின் கார்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும்
(பாரதி புத்தகாலயம்): சூழலியலைக் காக்கப் போராடும் பல என்.ஜி.ஓக்களின் பின்னணி மர்மங்களைப் போட்டுடைக்கும் நூல்.
9. தி. இராமகிருட்டிணனின் நம்பிக்கையும் நடப்பும்
(நிறைவு பதிப்பகம்): நாளிதழ்களில் நாம் கவனிக்க மறந்த சூழலியல் செய்திகளோடு மேலும் பல அரிய சூழலியல் செய்திகள் உள்ளடங்கிய தொகுப்பு.
10. பொன்.தனசேகரனின் நிகழ்காலம்

(கார்த்திலியா): காலநிலை மாற்றம் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் பற்றிய ஆய்வு நூல் 

2 comments:

  1. மிக அருமையான தகவல்களோடு இலக்கியம் படிக்க விரும்பும் புது வரவுகளுக்கு மிகவும் பயனுல்ள்ள தொகுப்பு இது. மிக்க நன்ர்றி அய்யா.

    ReplyDelete