என் செல்வராஜ்
தளம் கலை இலக்கிய இதழ் காலாண்டிதழாக
வெளிவருகிறது. இதன் ஆசிரியர் பாரவி. மிகக் கடுமையான நெருக்கடிக்கிடையில் இந்த சிற்றிதழை பக்கங்கள் குறையாமல் வெளியிட்டு
வருகிறார். இப்போது 16 ஆவது இதழ் வெளியாகியுள்ளது.
இந்த இதழைச் சிறுகதை சிறப்பிதழ் என்றே சொல்லவேண்டும்.இந்த இதழின் பக்கங்கள் 164. விலை ரூபாய் ஐம்பது.
அக்டோபர் - டிசம்பர் 2016 காலாண்டிதழ். இந்த இதழில் விட்டல்ராவுடனான ஒரு உரையாடல் வெளியாகியுள்ளது.இந்த உரையாடல் முழுக்கச் சிறுகதைகள் குறித்தவை. சிறுகதை
சார்ந்த கேள்விகளைக் கேட்ட தளம் குழுவினரைப் பாராட்ட வேண்டும். விட்டல் ராவ் இந்த நூற்றாண்டு சிறுகதைகள் 1, 2, 3 என்ற
பெயரில் மூன்று தொகுப்புக்களைத் தொகுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இந்த நூற்றாண்டு சிறுகதைகள் 4,5,6 ஆகிய மூன்று தொகுதிகளை
அழகிய சிங்கருடன் இணைந்து தொகுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிறந்த சிறுகதைகள் என்ற தொகுப்பை விட்டல் ராவ் தொகுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
விட்டல் ராவ் தளம் இதழின் உரையாடலில் வெளியிட்டுள்ள சில கருத்துகள்
ஜெயகாந்தனோட பெரும்பாலான கதைகள் அந்த
கால கட்டத்துல ஒரு 15 வருஷம்
மனசுல அழியாம இருந்தது. ஜெயகாந்தன் கதைகள் பெரிய சமூக மாற்றம்
கொண்டு வந்துச்சு.
வண்ணனிலவன் சிறந்த எழுத்தாளர்.
அவரோட பல கதைகள் ஜன்னல், வெளிச்சம், எஸ்டேட், பலாப்பழம், தேர், பாம்பும் பிடாரனும் சிறந்த கதைகள்.
சோ தர்மன் கதைகள்ல இலக்கியத்துக்கு
அதிகமான முக்கியத்துவம் கொடுப்பாரு. எஸ் பொ நிறைய கதைகள் எழுதி
இருக்கிறார். இலங்கையின் மூன்று விதமான தமிழிலும் எழுதக்கூடியவர்
( கொழும்பு தமிழ், யாழ்ப்பாண தமிழ், மட்டக்கிளப்பு தமிழ் )எஸ் பொ என்கிறார் விட்டல் ராவ்.
சிறுகதைகளை தொகுக்கும்போது எழுத்தாளர்களின் குறிப்பு
அரைப்பக்கமாவது இருக்கவேண்டும். கதை வந்த கால கட்டத்தைப் போடனும்.
இது போன்ற நல்ல பல கருத்துக்களை இந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளது. புதுமைப்பித்தன்,
மௌனி, கு ப ராஜகோபாலன்,அசோகமித்திரன்,
சா கந்தசாமி, வண்ணதாசன், அரங்கநாதன், சார்வாகன்,பூமணி,
கி ராஜநாராயணன் சுரேஷ்குமார் இந்திரஜித் போன்றவர்களின் எழுத்துக்களைப்
பற்றிய தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். இந்த உரையாடல் முழுக்க ஆங்கிலம் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
அதை தவிர்த்திருக்கலாம்.
தமிழ் சிறுகதை வரலாறு மீதான
சில பதிவுகள் என்ற கட்டுரையை செ.ரவீந்திரன்
எழுதி இருக்கிறார். வ வே சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம்
1915 ஆம் ஆண்டு விவேகபானு இதழில் வெளியானது. அது
தான் தமிழின் முதல் சிறுகதை என சொல்கிறார். 1924 ல் வெளிவந்த
பாரதியாரின் ஆறில் ஒரு பங்கு கதையை விட ரயில்வே ஸ்தானம் சிறுகதை யதார்த்த பாணியில்
கச்சிதமான வடிவமைப்பு கொண்டது என்கிறார். அ மாதவையாவின் குசிகர்
குட்டிக்கதைகள் கதைத் தொகுப்பு 1924 ல் வெளிவந்தது.கண்ணன் பெருந்தூது என்ற அ.மாதவையாவின் கதை சிறந்த கதை
எனக் குறிப்பிடுகிறார்.தி செல்வகேசவராய முதலியாரின் அபிநவக்கதைகள்
1930 ல் வெளிவந்தது. மணிக்கொடி காலத்து முதல்கட்ட
எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், கு ப ராஜகோபாலன், ந பிச்சமூர்த்தி, மௌனி, க நா சுப்பிரமணியம்,
சி சு செல்லப்பா ஆகிய எழுத்தாளர்களுள் புதுமைப்பித்தனை முதன்மைப் படுத்துகிறார்.புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் கயிற்றரவு, தனி ஒருவனுக்கு,
செல்லம்மாள்,சிற்பியின் நகரம், மகாமசானம் வரலாற்றில்
இடம் பெறத் தக்க சிறுகதைகளாக அவர் குறிப்பிடுகிறார். மௌனி
24 கதைகளே எழுதி உள்ளார்.
கு ப ராவின் விடியுமா? சிறுகதை வடிவச்சிறப்பு வாய்ந்தது என்கிறார்.
கு ப ராவின் மற்றொரு சிறுகதையான ஆற்றாமை வரலாற்றில் என்றும் இடம்பெறத்தக்க
கதை என்கிறார். கல்கியின் கேதாரியின் தாயார், க நா சுப்பிரமணியத்தின் சோதனை, சி சு செல்லப்பாவின் கூடுசாலை,
மூடி இருந்தது, கு அழகிரிசாமியின் குமாரபுரம் ஸ்டேஷன்,
சுஜாதாவின் தனிமை கொண்டு, ந முத்துசாமியின் நீர்மை,
இழப்பு, கற்பனை அரண் ஆகிய கதைகள் சிறந்தவை எனக்
குறிப்பிடுகிறார். அவரே இது முழுமையான வரலாறு அல்ல என்பதால் இதைப்
பற்றி அதிகம் விவாதிக்கத் தேவையில்லை. அவசியம் படிக்க வேண்டிய
கட்டுரை. தமிழ் ஸ்டோரி என்ற தொகுப்பை திலீப்குமார் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த தொகுப்பு ஏப்ரல் 2016ல் வெளிவந்துள்ளது.
இதில் 100 கதைகள் இருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.ஆனால் 88 கதைகள் தான் தொகுக்கப்பட்டுள்ளன. எ பிளேஸ் டு லிவ் என்ற தலைப்பில் திலீப்குமார் ஏற்கனவே ஒரு தொகுப்பு கொண்டு
வந்துள்ளார். இதில் 29 தமிழ் சிறுகதைகள்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த இதழில் 13 சிறுகதைகள் உள்ளன. இதில் ஒரு கதை மொழிபெயர்ப்பு கதை.
மற்றவை தமிழ் சிறுகதைகள்.
1. பிம்பங்கள்- ஐசக் அருமைராஜன்
இந்த கதை சுபமங்களா இதழில் வெளிவந்து
பின்னர் சுபமங்களா இதழ் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. கட்
அவுட் கலாச்சாரத்தை எதிர்த்து ஒரு தனி மனிதனின் போராட்டமே இந்த கதை. சிறந்த கதைகளில் ஒன்று.
2. மீதிக்கதை - எஸ் டி ஏ ஜோதி
3. சுவர்க்கோழி - ஸிந்துஜா
4. விஜிரபூமி என்னும் காட்டு விடுதி - பூந்தளிர் ஆனந்தன்
5. பள்ளத்தாக்கு - அகரமுதல்வன்
4. விஜிரபூமி என்னும் காட்டு விடுதி - பூந்தளிர் ஆனந்தன்
5. பள்ளத்தாக்கு - அகரமுதல்வன்
6. உலர்ந்த பொழுதுகள் - சு மு அகமது
7.காந்த்தா - பாரதி வசந்தன்
8. பசுத்தோல் போர்த்திய நரி - ஏ ஏ ஹெச் கே கோரி
9. ஒரு திருடனும் ஊரு நாட்டாமையும் - சீராளன் ஜயந்தன்
10. பலவேஷம் - சித்துராஜ் பொன்ராஜ்
11. காக்கா நரி கதை - ராஜ்ஜா
12. நீர்ப்பாதை - இல சைலபதி
ராஜ்ஜா காக்கா நரி கதையை சிறுகதை வடிவத்தில் எழுதி இருக்கிறார்.
சிறுவர்களுக்கான கதை. நீர்ப்பாதை காட்டுக்கு தவத்துக்கு செல்லும் அர்ச்சுனன் காட்டு
அழகியை
கண்டு மயங்கும் நிலையைப் பேசுகிறது.பசுத்தோல் போர்த்திய நரி அரசியல்வாதிகளின் வஞ்சகத்தைப் பேசுகிறது.
சாதாரண உதவியாளனாய் சேரும் ஒருவன் அரசியல் சித்து விளையாட்டுகள் மூலம்
உயர் பதவியை எப்படி பிடிக்கிறான்
என்பதைப் பேசுகிறது.
ஒரு திருடன் திருடுவதற்கு முன் பிடிபட்டால் அவனை திருடன் என்று எப்படி
சொல்லமுடியும் என்கிற வாதத்தை முன் வைக்கும் ஒரு திருடனின் கதையை
ஒரு திருடனும் ஊரு நாட்டாமையும் பேசுகிறது. எல்லா கதைகளுமே வெவ்வேறு தளத்தில் இயங்குகின்றன. காந்த்தா
வித்தியாசமான கதை. புதுச்சேரியைக் களமாக கொண்ட கதை. தன் மகளிடம் தவறாக நடக்க அதன் மூலம் இருவரையும் அடைய
முயலும் ஒருவனை வீட்டை விட்டு விரட்டும் கதை.
பத்து கவிதைகள், ஏழு கட்டுரைகள், 13 சிறுகதைகள், இரண்டு நேர்காணல்கள் ஆகியவற்றைக்கொண்டு வந்துள்ள
இந்த இதழை சிற்றிதழ் விரும்புவோரும், சாதாரண வாசகனும் படிக்கவேண்டும்.
அப்போது தான் சிற்றிதழ்கள் நல்ல வளர்ச்சியை அடைய முடியும்.
தளம் இதழ் தனி இதழ் ரூ 50/ + அஞ்சல் ரூ 10/
தொடர்புக்கு தளம் பாரவி
மொபைல் எண் :- 94452
81820 Email
address:- thalam.base@gmail.com
No comments:
Post a Comment