துறவு
சம்பந்தன் (திருஞானசம்பந்தன்)
சம்பந்தன் (திருஞானசம்பந்தன்)
அவர் நிமிர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமாகச் சற்று விலகி அந்தப் பாலசந்நியாசி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் நின்ற ஆலமரம் வானத்தை மறைப்பது போல எங்கும் பரந்து வளர்ந்து கிடந்தது. சற்றுத் தொலைவில், அவர்களுக்கு எதிரில் நெருப்பு ஒரு மனித உடலைக் கழுவித் துடைத்து உண்டுகொண்டிருந்தது. அப்படி எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஒளி வெகுதூரம் வரைக்கும் இருளைத் துரத்தி விரட்டியது. பிரமாண்டமான அந்த ஆலின் விழுதுகளின் நிழலும் அடிமரத்தின் நிழலும் பூதாகாரமாக எதிர்த்திசையில் படுத்துக் கிடந்தன.
இரண்டொரு நரை கண்ட பெரியவரின் கம்பீரமான முகமும், அடர்ந்து கறுத்த ரோமங்கள் பிரகாசிக்கும் இளையவரின் ஒளி நிறைந்த முகமும் தெளிவாகத் தெரிந்தன. பெரியவர் கண்களைப் பாதி மூடியபடி இருந்தார். மற்றவரோ அகல விழித்தபடி எதையோ கவனித்துக் கொண்டிருந்தார்.
எங்கும் நிசப்தம் நிலவியது. மரணத்தின் நிழல் படிந்த நிசப்தம் அது. அக்கினி அந்த உடலுடன் விறகையும் சேர்த்துத் துடைப்பதனால் உண்டான சப்தங்கள், அங்கே நிலவிய அமைதியை இடையிடையே மாசுபடுத்திக் கொண்டிருந்தன.
வாழுகிற மனிதனால் பெரிதும் அஞ்சி வெறுக்கப்படுகிற, கடைசியில் அவனுக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் செய்கிற இடம் அது. வேறுவகையில், அளவில், நிலையில், இன்பதுன்பங்களை மாறி மாறி அனுபவித்த தசை, நரம்பு, எலும்பு முதலிய எல்லாமே துகளாகி அந்த மண்ணின் உருவை ஏற்றுக் கொண்டு தாமும் அதுவாகி ஐக்கியமாகிவிட்டன.
ஒரு காலத்தில் யாரோ இரண்டு பகையரசர்களின் படைகள் ஒன்றோடொன்று மோதி நிர்மூலமான இடமும் அதுதானாம். அகால வேளைகளில் குதிரைகள் ஓடுகிற, கனைக்கிற, சத்தங்கள். யானைகள் பிளிறுகிற பேரொலிகள். வெட்டு, குத்து, கொல்லு என்ற இரக்கமற்ற குரல்கள், வேதனை தோய்ந்த மரண தாகத்தில் எழுகின்ற சோகமயமான ஓலங்கள் எல்லாம் கலந்து கேட்கும் என்று சொல்லுகிறார்கள்.
அது மயானம், இடுகாடும் சேர்ந்த மயானம். பேய்கள் தங்கள் விருப்பம்போல் விளையாடி மகிழும் இடம். எங்கே திரும்பினாலும் நிர்மானுஷ்யத்தின் சுவடுகள் தெரிந்தன.
பெரியவர் கண்களைத் திறந்து உற்றுப் பார்த்தார். எதிரில் அந்த உடல் கருகிச் சுருண்டு வெடித்து எரிந்து கொண்டிருந்தது. தீக்கொழுந்து எழுந்தும் அடங்கியும் வளைந்தும் நெளிந்தும் வேறு வேறு திசைகளில் குதித்தும் காற்றுடன் சேர்ந்து தானும் விளையாடியது.
திடீரென்று மேலே உறங்கிக் கிடந்த பறவைகளின் அவலக் குரல்கள் எழுந்தன. கூகை ஒன்று, எங்கிருந்தோ வந்து கொத்தியும் கிழித்தும் அவற்றைக் கொன்று தள்ளியது. அபாயத்தை எதிர்பார்த்திராத அந்த ஏழைப்பறவைகள் செயலற்று ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. யமனாகி வந்த கூகை அங்கிருந்து பறந்து சென்ற பிறகும், வெகுநேரம் வரைக்கும் அந்தப் பறவைகளின் துன்பக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.
நடுநிசி ஆகிவிட்டது. அதுவரை ஓங்கி எரிந்த நெருப்பு மெல்ல மெல்ல அடங்கித் தழலுருவாயிற்று. மறுபடியும் சப்த நாடிகளையும் ஒடுங்கச் செய்யும் அந்தப் பேயமைதி. சுற்றிலும் இருள் இருளை விழுங்கி அதையே உமிழ ஆரம்பித்தது.
பெரியவர் திரும்பிப் பின்னால் உட்கார்ந்திருந்த இளந்துறவியின் முகத்தைப் பார்த்தார். அவருக்கே அது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த வைராக்கிய புருஷனின் குழந்தை முகம் எதிரில் கிடந்த தழல் போல என்றும் இல்லாத ஒளியுடன் விளங்கியது.
:குழந்தாய்!” என்று அவர் தம்மை மறந்து கூப்பிட்டார்.
இளையவர் எழுந்து முன்னால் வந்தார். பெரியவர் கேட்டார்.
“இங்கே எதைக் காண்கிறாய்?”
சிறிது தாமதித்தே பதில் வந்தது. “கால ருத்திரனது நர்த்தனத்தையே காண்கிறேன், சுவாமி.”
கேட்டவர் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, இனிப் புறப்படுவோம்” என்று சொல்லிக் கொண்டு எழுந்தார்.
இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். குற்றுயிராய்க் கிடந்த ஏதோ ஒரு பறவையைச் சர்ப்பம் ஒன்று சிரமப்பட்டு விழுங்கியபடியே நகர்ந்து வழிவிட்டது.
கிழக்கிலிருந்து வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்றார்கள். பெரியவர் முன்னாகவே நடந்தார். எங்கும் வளர்ந்து கிடந்த நாணல்கள் அவர்களின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு மீண்டன. பாதையோ வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. இளையவர் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தார். அது நிர்மலமாகி ஞானிகளின் மனம்போலத் தெளிந்திருந்தது. கொஞ்சத் தூரம் சென்றதும் பெரியவர் திரும்பி நின்று, “அப்பனே, உனக்குத் தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டார்.
“இப்பொழுது இல்லை, சுவாமி.”
“பசி?”
“அதுவுமில்லை.”
மறுபடியும் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். இரண்டு நாழிகைத் தூரத்தில் அந்த ஒற்றையடிப்பாதை அகன்ற ஒரு சாலையில் போய் முடிந்தது. அந்தச் சாலையில் ஓரங்களில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. இடையிடையே மாளிகைகள் போன்ற வீடுகளும் தெரிந்தன.
அவர்கள் நிற்காமலே தொடர்ந்து நடந்தார்கள். “இது எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்?” என்ற விசாரம் அவர்களைத் தொடவில்லை. மேலும் சில நாழிகை தூரம் நடந்து சென்றார்கள். திடீரென்று பெரியவர் வழியை விட்டு இறங்கி ஒரு வீட்டின் முன்புறத்திலே மரமொன்றைச் சுற்றிக் கட்டியிருந்த மேடையை அடைந்து படுத்துக் கொண்டார். மற்றவரும் அவரைத் தொடர்ந்து சென்று அவரது காலடியில் சரிந்தார்.
புலருவதன் முன் இளையவர் எழுந்து உட்கார்ந்தார். மிகச் சமீபமாக யாரோ ஒரு பெண் நிற்பதைக் கண்டதும் அவர் நன்றாக ஊன்றிப் பார்த்தார். வைகறையின் மங்கிய ஒளியிலே அவளது தோற்றம் யாரோ ஓர் அணங்கு நிற்பதுபோல இருந்தது. பிரபஞ்சத்தின் எந்த விசாரமுமே அணுகாத அவரது உள்ளத்தில் அது பெரிய ஆச்சரியத்தையே உண்டுபண்ணியது. அதனால் அவர் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். கம்பீரமான அவரது தோற்றமும் பால் வடியும் முகமும் அவளையும் தன்னை மறந்த நிலையில் நிற்கச் செய்தன.
அந்தச் சமயத்திலேதான் பெரியவர் கண்களைத் திறந்தார். இந்த எதிர்பாராத காட்சி அவரை அதிரும்படி செய்யாவிட்டாலும் சிந்திக்கத் தூண்டியது. சிறிது நேரம் வரை அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவர், “அப்பனே, இவள் யார்?” என்று கேட்டார். இளையவர் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் திரும்பி நின்று பேசினாள். “சுவாமி, தங்கள் வரம் பெற்றதனால் பெரும் பாக்கியசாலி ஆனவள் இவள்.”
அவர் மெளனமாக இருந்தபடி அவளை உற்றுப் பார்த்தார். அப்போதும் அவளே தொடர்ந்து பேசினாள் : “சுவாமி, எதோ புண்ணியவசத்தால்தான் இங்கே தங்கி இந்த இடத்தைப் புனிதமாக்கிவிட்டீர்கள். கொஞ்சம் எழுந்து உள்ளே வருகிறீர்களா?”
அவள் நிலத்தில் விழுந்து வணங்கினாள். பெரியவர் கையை மேலே தூக்கி உயர்த்தி ஆசீர்வதித்தார். மற்றவரோ சும்மா இருந்தபடியே இருந்தார். அப்போழுது அவள் கண்கள் இருவரையும் மாறி மாறி மன்றாடின.
அவள் யாசித்ததை நிராகரிக்க அவர் விரும்பவில்லை. உடனே எழுந்து அந்த வீட்டை நோக்கி நடந்தார். அவர்கள் உள்ளே நுழையும் முன்பே அவள் ஓடிச் சென்று ஆசனங்களை இழுத்துவிட்டு “உட்காருங்கள்’ என்று வணங்கி நின்றாள். இருந்தவர் மற்றவரையும் உட்காரும்படி சமிக்ஞை செய்துவிட்டு எல்லாப் பக்கங்களையும் ஒருமுறை பார்த்தார். திடீரென்று அவரது முகத்தில் சொல்லமுடியாத ஒருவித வெறுப்பின் நிழல் படிந்தது.
அவள் இதை உணர்ந்ததும் மிகுந்த பண்புடன் பேச ஆரம்பித்தாள் : “சுவாமி பாவிகளுக்கு ஒருநாளும் விமோசனம் கிடைக்காதா?”
இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவர் கருணை நிறைந்த கண்களால் அவளைப் பார்த்து “நீயும் உட்கார்” என்று ஓர் ஆசனத்தைக் காண்பித்தார். அவள் உட்கார விரும்பவில்லை. மேலும் ஒருபுறமாக ஒதுங்கி நின்றாள்.
பெரியவர் பேசினார். “தவறு செய்தவர் தாமாகவே அதை உணர்ந்து பச்சாதாபப்படுவதே மிகச் சிறந்த பிராயச்சித்தமாகும்”
“சுவாமி, என்னைப் போன்றவர்களுக்கும் இந்த விதி பொருந்துமா?”
இப்பொழுது தெளிவான குரலில் அவர் பதில் கேட்டது : “குழந்தாய், உனக்குத்தான் இது முற்றும் பொருந்தும். வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே நிதானமான பாதையில் செல்வதில்லை. மனம் சந்தர்ப்பவசத்தால் பல தடவைகளில் குழியில் தள்ளி விடுகிறது. குழந்தை நடக்கப் பழகும்போது எத்தனை தடவை விழுந்து விழுந்து எழும்புகிறது என்பதை நீ அறியாயா?”
“மறுபடியும் எழுந்திருக்க முடியாதபடி விழுந்துவிட்டால்?” பெருமூச்சின் நடுவே அவள் இப்படிக் கேட்டாள்.
அவர் ஒருமாதிரி சிரித்தபடியே பதில் சொன்னார் : “குழந்தையின் மானிடத் தாய் அல்லவே லோகநாயகி.”
அவள் ஓடிவந்து அவர் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள். மற்றவரோ எல்லாவற்றையும் கவனித்தபடியே பின்னால் உட்கார்ந்திருந்தார்.
பிறகு அவள் பெரியவரையே பார்த்து, “சுவாமி, ஒரு பொழுதுக்காவது இங்கே தங்கிச் செல்லவேண்டும்” என்று வேண்டிக்கொண்டு உள்ளே போனாள். அப்பொழுது அவர் மற்றவரைப் பார்த்துச் சொன்னார் : “அப்பனே, எழுந்திரு. போகவேண்டும்.”
ஒருவர்பின் ஒருவராக அவர்கள் வெளியே சென்றார்கள்.
அவள் ஓடிவந்து பார்த்தபோது அந்தத் தெருவையே கடந்து அவர்கள் மறைந்துவிட்டார்கள்.
எதிர்பாராத வகையில் பெரியவர் வேகமாக நடந்தார். அவரது மனம் நிலைகொள்ளாமல் தடுமாறியது. அந்த நிலையிலும் ‘ஏன் இது?’ என்று தமக்குள்ளே கேட்டுப் பார்த்தார். காரணம் தெரியவில்லை.
“அங்கே நுழைந்தாயே, அதனால்தான்”
இது அவர் உள்ளத்தின் ஒரு கோணத்திலிருந்து எழுந்த குரல்.
“பாவத்தின் பயங்கர அந்தகாரம் சூழ்ந்த இந்த உலகத்தில் அவள் அப்படி ஓர் ஆகாத பண்டமா? உள்ளே இருந்து மற்றொரு குரல் இப்படிக் கேட்டது. பின்னால் தொடர்ந்து வரும் மற்றவரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அவர் மறுபடியும் முன்போலவே நடக்க ஆரம்பித்தார். இப்படிச் சிக்கலான மனநிலை அவரை முன்னும் சிலசமயங்களில் கலங்கச் செய்ததுண்டு. அப்போதெல்லாம் அதனதற்குரிய காரணங்களை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார். இன்று அது முடியவில்லை. விரும்பி முயன்றும் அது வெளிவர மறுத்தது.
அவர் முகத்தில் இலேசாக வியர்வை அரும்பியது. தமக்குள் பேசிக் கொண்டே நடந்தார். ’இந்த உலகத்திலிருந்து விடுபட்டு வாழ்வில் எத்தனையோ வருஷங்கள் கழிந்துவிட்டன. நித்திரை, உணவு என்ற இன்றியமையாதவற்றையே கட்டுப்படுத்தி மனத்தை மடக்கி வழி நடத்தினார். எத்தனை சோதனைகளைச் செய்து பார்த்தாயிற்று! எல்லாவற்றிலும் சித்தி லேசாகக் கிட்டியது. இன்றோ இது பெரிய புதிராகவே இருக்கிறது. அடிமனத்தில் – எங்கோ ஒரு மூலையில் – என் சக்திக்கு எட்டாத ஆழத்தில் ஏதோ ஒன்று அழுகிக் கிடக்கிறது.’
ஒரு பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தார். இளையவரது முகம் வழக்கம் போலவே பிரகாசத்துடன் விளங்கியது.
“குழந்தாய்!”
அந்தக் குரலில் அன்பு அமுதாகி கடலாகிப் பொங்கி வழிந்தது.
“சுவாமி!” என்று உடனே பதிலுக்குக் குரல் கொடுத்தார் மற்றவர்.
“களைப்படைந்தாயோ என்று பார்த்தேன். அவ்வளவுதான்”
மறுபடியும் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். அவர்களுக்கு நடுவில் மெளனம் நிலைத்திருந்தது. கொஞ்சதூரம் சென்றதும் தெருவின் ஓரத்தில் நின்ற ஒரு மரத்தின் நிழலில் அவர் போய் உட்கார்ந்தார். இளையவரும் அவரைத் தொடர்ந்து சென்று ஒரு பக்கத்தில் ஒதுங்கினார்.
பெரியவருடைய மனத்தில் மற்றவரைப் பற்றிய நினைவுகள் திடீரென்று முளைத்தன. உடனே அவர் கேட்டார் : “குழந்தாய், நீ என்னை அடைந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?”
“ஆம்” என்று தலையசைத்தார் இளையவர்.
“இதுவும் ஒருவகையில் நம்மைப் பாதிக்கக்கூடிய பந்தம் தானே? இதை நீ உணரவில்லையா?”
மற்றவர் பதில் இன்றி மெளனத்தில் மூழ்கியிருந்தார்.
“உனக்குப் பக்குவ நிலை கைவந்துவிட்டது. இனியும் நீ என் இறக்கைகளுக்குள் உறங்க வேண்டியதில்லை.”
இளையவர் பிறகும் பேச்சின்றியே இருந்தார். சிறிது பொறுத்து மறுபடியும் பெரியவே பேசினார்.
“அப்பனே, இனி நீயும் நானும் பிரிந்து விடவே வேண்டும். அல்லது இரண்டு பேருமே பெரிய நஷ்டத்தை அடைவோம்.”
இளையவர் எழுந்து கூப்பிய கரங்களுடன் அவர் பக்கமாகச் சென்று விழுந்து வணங்கினார்.
”குழந்தாய், உன்னை ஆண்டவன் ஆசீர்வதிப்பானாக!”
அவர் கண்களை மூடியபடி எழுந்து நின்றார். அவருடைய குரல் கரகரத்தது. மற்றவர் குனிந்து அவருடைய பாதங்களைத் தொட்டு பலமுறை கண்களில் ஒற்றிக்கொண்டு தெருவில் இறங்கினார்.
தெருவில் இறங்கிய இளையவர் ஒருமுறை கூடத் திரும்பிப் பாராமலே நடந்து கொண்டிருந்தார். அவரது நடையில் எது இல்லாவிட்டாலும் நிதானம் இருந்தது. எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட தெளிவு இருந்தது.
அந்த உருவம் கண்களை விட்டு மறையும் வரையும் நின்றபடியே பார்த்துக் கொண்டு பெரியவர் தாய் போல் மாறி, “ஐயோ வெயில் கடுமையாக எரிக்கிறதே!’ என்று அங்கலாய்த்தார். பிறகு தாமும் தொடர்ந்து போக எண்ணியவர் போல அந்தத் திசையில் வேகமாக நடந்தார். சிறிது தூரம் சென்றதும் ஏனோ மறுபடியும் திரும்பி வந்து அந்த மரத்தின் கீழ் உட்கார்ந்தார்.
இளையவர் இருந்த இடம் சூனியமாகிக் கிடந்தது. ஆனால் மண்ணில் அவர் காலடிகள் நன்றாகத் தெரியும்படி பதிந்திருந்தன. அந்த அடையாளங்கள் ஏதோ அருமையான பொக்கிஷங்கள் போல அவருக்கு இருந்தன. வெகுநேரம் வரையில் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஏதோ ஆறுதல் இருப்பது போலப்பட்டது. நடுவில், ‘இனி ஒருபோதும் சந்திக்க மாட்டேனா?’ என்ற கேள்வி எழுந்ததும் தடுமாறி எழுந்து நின்று அவர் போன திசையைப் பார்த்தார். பிறகு அங்கும் இங்குமாக நடக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் அந்த அடையாளங்கள் அழிந்து விடாதபடி விலகி விலகியே நடக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது.
’இந்தப் பாசம் இவ்வளவு தூரம் என்னைப் பாதித்துவிட்டதே’ என்ற ஏக்கமும் அவருக்கு அடிக்கடி உண்டாயிற்று.
‘அன்றைக்கே, அவன் வந்தபோது ‘இது வேண்டாம் மறுபடியும் கட்டுப்படாதே’ என்று எச்சரித்த என் அந்தராத்மாவின் குரலை நான் கெளரவிக்கவில்லை. ‘சுவாமி, எனக்கு வழிகாட்டுங்கள்’ என்று வந்தவனை எப்படித்தான் போ என்று தள்ளமுடியும்? வா என்று ஏற்றுக்கொண்டேன். அவன் நிழலாகி வளர்ந்தான். இந்த நிலையிலும் அவனைப் பார்த்து மனம் களித்தேன். ஆனால் இன்று?
அவர் நீண்ட ஒரு பெருமூச்சுடன் கிளம்பி வந்தவழியால் நடந்தார். இப்பொழுது அவரது நடையில் வேகம் இல்லை. நிதானமும் இருக்கவில்லை. தகித்துக் கொண்டிருந்த வெயில்கூட அவரை அவசரப்படுத்தவில்லை. மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றார். பாரம் ஏறிய மனநிலையை அவரது முகம் எடுத்துக் காட்டியது.
வழியில் ஜனங்கள் போனார்கள். வந்தார்கள். அவர்களுக்குள் அவனும் இருக்கலாம் என்பதுபோல அவர் கண்கள் எல்லோரையும் ஆராய்ந்தன. ‘இனி வேண்டாம்’ என்று சில சமயங்களில் கண்களை மூடிக் கொண்டும் நடந்தார்.
வரவர அவருக்கு நடப்பதே பெரிய சிரமமாக இருந்தது. ஆயினும் நிற்காமலே சென்றார். அந்தச் சமயத்திலே, காலையிலே தாம் எந்த வீட்டில் இருந்து கிளம்பி ஓடினாரோ, அந்த வீட்டின் எதிரில் வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டார். நடப்பதை நிறுத்திவிட்டு அந்த மரத்தின் அடியில் இருந்து மேடையைப் பார்த்தார். எதிரில், ‘சுவாமி வாருங்கள்’ என்று வேண்டியவாறே அவள் ஓடிவந்தாள். அவர் இப்பொழுது அசையவில்லை. கண்களை அகல விழித்து அவளையே பார்த்துக் கொண்டி நின்றார். பிறகு தாமாகவே இறங்கி உள்ளே சென்றார்.
மற்றவரைப் பிரிந்ததினால் உண்டாகிய தாகம் மெல்ல மெல்ல தணிவதுபோல அவருக்குப் பட்டது. அப்பொழுது அவள் பேசினாள். ‘சுவாமி, எப்படியும் ஒரு நாளைக்கு உங்களைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால், அது இன்றைக்கே சித்தியாகும் என்று எண்ணவேயில்லை. நான் பெரிய பாக்கியம் செய்தவள்.’
அவர் உள்ளே புகுந்து ஒர் ஆசனத்தில் உட்கார்ந்தார்.
‘சுவாமி, மறுபடியும் போய்விட மாட்டீர்களே?’
அவள் உண்மையாகத்தான் இப்படிக் கேட்டாள்.
‘போ என்று தள்ளினாலும் முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறேன்.’
காலில் விழுந்து வணங்கியவள் எழுந்து உள்ளே சென்றாள். அவர் அதற்குள் அதிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார். பிறகு அவர் கண்களைத் திறந்தபோது முற்றும் எதிர்பாராத தோற்றத்தில் அவள் எதிரில் நின்றாள்.
‘அம்மா, இது என்ன கோலம்?’
அவர் ஆச்சரியத்தோடு இப்படிக் கேட்டார்.
அவள் இதற்குப் பதில் சொல்லாமலே தன் கருத்தைச் சொன்னாள். ‘சுவாமி, இவையெல்லாம் இனித் தங்களைச் சேர்ந்தவையே. விருப்பம் எதுவோ அப்படிச் செய்யுங்கள்.’
அவர் அதிர்ந்து போய் சோர்வடைந்து கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தார்.
அதற்குள் அவள் வெளியே இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.
கலைமகள், வைகாசி 1943.
நன்றி- சுருதி வலைப்பக்கம்
No comments:
Post a Comment