Monday, 22 June 2020

துறவு - சம்பந்தன் (திருஞானசம்பந்தன்) -எனக்குப் பிடித்த சிறுகதைகள்( இலங்கை)

துறவு

சம்பந்தன்
 (திருஞானசம்பந்தன்)

அவர் நிமிர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமாகச் சற்று விலகி அந்தப் பாலசந்நியாசி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் நின்ற ஆலமரம் வானத்தை மறைப்பது போல எங்கும் பரந்து வளர்ந்து கிடந்தது. சற்றுத் தொலைவில், அவர்களுக்கு எதிரில் நெருப்பு ஒரு மனித உடலைக் கழுவித் துடைத்து உண்டுகொண்டிருந்தது. அப்படி எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஒளி வெகுதூரம் வரைக்கும் இருளைத் துரத்தி விரட்டியது. பிரமாண்டமான அந்த ஆலின் விழுதுகளின் நிழலும் அடிமரத்தின் நிழலும் பூதாகாரமாக எதிர்த்திசையில் படுத்துக் கிடந்தன.

இரண்டொரு நரை கண்ட பெரியவரின் கம்பீரமான முகமும், அடர்ந்து கறுத்த ரோமங்கள் பிரகாசிக்கும் இளையவரின் ஒளி நிறைந்த முகமும் தெளிவாகத் தெரிந்தன. பெரியவர் கண்களைப் பாதி மூடியபடி இருந்தார். மற்றவரோ அகல விழித்தபடி எதையோ கவனித்துக் கொண்டிருந்தார்.

எங்கும் நிசப்தம் நிலவியது. மரணத்தின் நிழல் படிந்த நிசப்தம் அது. அக்கினி அந்த உடலுடன் விறகையும் சேர்த்துத் துடைப்பதனால் உண்டான சப்தங்கள், அங்கே நிலவிய அமைதியை இடையிடையே மாசுபடுத்திக் கொண்டிருந்தன.

வாழுகிற மனிதனால் பெரிதும் அஞ்சி வெறுக்கப்படுகிற, கடைசியில் அவனுக்கு அடைக்கலம் தந்து ஆறுதல் செய்கிற இடம் அது. வேறுவகையில், அளவில், நிலையில், இன்பதுன்பங்களை மாறி மாறி அனுபவித்த தசை, நரம்பு, எலும்பு முதலிய எல்லாமே துகளாகி அந்த மண்ணின் உருவை ஏற்றுக் கொண்டு தாமும் அதுவாகி ஐக்கியமாகிவிட்டன.

ஒரு காலத்தில் யாரோ இரண்டு பகையரசர்களின் படைகள் ஒன்றோடொன்று மோதி நிர்மூலமான இடமும் அதுதானாம். அகால வேளைகளில் குதிரைகள் ஓடுகிற, கனைக்கிற, சத்தங்கள். யானைகள் பிளிறுகிற பேரொலிகள். வெட்டு, குத்து, கொல்லு என்ற இரக்கமற்ற குரல்கள், வேதனை தோய்ந்த மரண தாகத்தில் எழுகின்ற சோகமயமான ஓலங்கள் எல்லாம் கலந்து கேட்கும் என்று சொல்லுகிறார்கள்.

அது மயானம், இடுகாடும் சேர்ந்த மயானம். பேய்கள் தங்கள் விருப்பம்போல் விளையாடி மகிழும் இடம். எங்கே திரும்பினாலும் நிர்மானுஷ்யத்தின் சுவடுகள் தெரிந்தன.

பெரியவர் கண்களைத் திறந்து உற்றுப் பார்த்தார். எதிரில் அந்த உடல் கருகிச் சுருண்டு வெடித்து எரிந்து கொண்டிருந்தது. தீக்கொழுந்து எழுந்தும் அடங்கியும் வளைந்தும் நெளிந்தும் வேறு வேறு திசைகளில் குதித்தும் காற்றுடன் சேர்ந்து தானும் விளையாடியது.

திடீரென்று மேலே உறங்கிக் கிடந்த பறவைகளின் அவலக் குரல்கள் எழுந்தன. கூகை ஒன்று, எங்கிருந்தோ வந்து கொத்தியும் கிழித்தும் அவற்றைக் கொன்று தள்ளியது. அபாயத்தை எதிர்பார்த்திராத அந்த ஏழைப்பறவைகள் செயலற்று ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. யமனாகி வந்த கூகை அங்கிருந்து பறந்து சென்ற பிறகும், வெகுநேரம் வரைக்கும் அந்தப் பறவைகளின் துன்பக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.

நடுநிசி ஆகிவிட்டது. அதுவரை ஓங்கி எரிந்த நெருப்பு மெல்ல மெல்ல அடங்கித் தழலுருவாயிற்று. மறுபடியும் சப்த நாடிகளையும் ஒடுங்கச் செய்யும் அந்தப் பேயமைதி. சுற்றிலும் இருள் இருளை விழுங்கி அதையே உமிழ ஆரம்பித்தது.

பெரியவர் திரும்பிப் பின்னால் உட்கார்ந்திருந்த இளந்துறவியின் முகத்தைப் பார்த்தார். அவருக்கே அது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த வைராக்கிய புருஷனின் குழந்தை முகம் எதிரில் கிடந்த தழல் போல என்றும் இல்லாத ஒளியுடன் விளங்கியது.

:குழந்தாய்!” என்று அவர் தம்மை மறந்து கூப்பிட்டார்.

இளையவர் எழுந்து முன்னால் வந்தார். பெரியவர் கேட்டார்.
“இங்கே எதைக் காண்கிறாய்?”

சிறிது தாமதித்தே பதில் வந்தது. “கால ருத்திரனது நர்த்தனத்தையே காண்கிறேன், சுவாமி.”

கேட்டவர் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, இனிப் புறப்படுவோம்” என்று சொல்லிக் கொண்டு எழுந்தார்.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். குற்றுயிராய்க் கிடந்த ஏதோ ஒரு பறவையைச் சர்ப்பம் ஒன்று சிரமப்பட்டு விழுங்கியபடியே நகர்ந்து வழிவிட்டது.

கிழக்கிலிருந்து வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்றார்கள். பெரியவர் முன்னாகவே நடந்தார். எங்கும் வளர்ந்து கிடந்த நாணல்கள் அவர்களின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு மீண்டன. பாதையோ வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. இளையவர் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தார். அது நிர்மலமாகி ஞானிகளின் மனம்போலத் தெளிந்திருந்தது. கொஞ்சத் தூரம் சென்றதும் பெரியவர் திரும்பி நின்று, “அப்பனே, உனக்குத் தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டார்.

“இப்பொழுது இல்லை, சுவாமி.”
“பசி?”

“அதுவுமில்லை.”

மறுபடியும் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். இரண்டு நாழிகைத் தூரத்தில் அந்த ஒற்றையடிப்பாதை அகன்ற ஒரு சாலையில் போய் முடிந்தது. அந்தச் சாலையில் ஓரங்களில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. இடையிடையே மாளிகைகள் போன்ற வீடுகளும் தெரிந்தன.

அவர்கள் நிற்காமலே தொடர்ந்து நடந்தார்கள். “இது எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்?” என்ற விசாரம் அவர்களைத் தொடவில்லை. மேலும் சில நாழிகை தூரம் நடந்து சென்றார்கள். திடீரென்று பெரியவர் வழியை விட்டு இறங்கி ஒரு வீட்டின் முன்புறத்திலே மரமொன்றைச் சுற்றிக் கட்டியிருந்த மேடையை அடைந்து படுத்துக் கொண்டார். மற்றவரும் அவரைத் தொடர்ந்து சென்று அவரது காலடியில் சரிந்தார்.

புலருவதன் முன் இளையவர் எழுந்து உட்கார்ந்தார். மிகச் சமீபமாக யாரோ ஒரு பெண் நிற்பதைக் கண்டதும் அவர் நன்றாக ஊன்றிப் பார்த்தார். வைகறையின் மங்கிய ஒளியிலே அவளது தோற்றம் யாரோ ஓர் அணங்கு நிற்பதுபோல இருந்தது. பிரபஞ்சத்தின் எந்த விசாரமுமே அணுகாத அவரது உள்ளத்தில் அது பெரிய ஆச்சரியத்தையே உண்டுபண்ணியது. அதனால் அவர் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். கம்பீரமான அவரது தோற்றமும் பால் வடியும் முகமும் அவளையும் தன்னை மறந்த நிலையில் நிற்கச் செய்தன.

அந்தச் சமயத்திலேதான் பெரியவர் கண்களைத் திறந்தார். இந்த எதிர்பாராத காட்சி அவரை அதிரும்படி செய்யாவிட்டாலும் சிந்திக்கத் தூண்டியது. சிறிது நேரம் வரை அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவர், “அப்பனே, இவள் யார்?” என்று கேட்டார். இளையவர் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் திரும்பி நின்று பேசினாள். “சுவாமி, தங்கள் வரம் பெற்றதனால் பெரும் பாக்கியசாலி ஆனவள் இவள்.”

அவர் மெளனமாக இருந்தபடி அவளை உற்றுப் பார்த்தார். அப்போதும் அவளே தொடர்ந்து பேசினாள் : “சுவாமி, எதோ புண்ணியவசத்தால்தான் இங்கே தங்கி இந்த இடத்தைப் புனிதமாக்கிவிட்டீர்கள். கொஞ்சம் எழுந்து உள்ளே வருகிறீர்களா?”

அவள் நிலத்தில் விழுந்து வணங்கினாள். பெரியவர் கையை மேலே தூக்கி உயர்த்தி ஆசீர்வதித்தார். மற்றவரோ சும்மா இருந்தபடியே இருந்தார். அப்போழுது அவள் கண்கள் இருவரையும் மாறி மாறி மன்றாடின.

அவள் யாசித்ததை நிராகரிக்க அவர் விரும்பவில்லை. உடனே எழுந்து அந்த வீட்டை நோக்கி நடந்தார். அவர்கள் உள்ளே நுழையும் முன்பே அவள் ஓடிச் சென்று ஆசனங்களை இழுத்துவிட்டு “உட்காருங்கள்’ என்று வணங்கி நின்றாள். இருந்தவர் மற்றவரையும் உட்காரும்படி சமிக்ஞை செய்துவிட்டு எல்லாப் பக்கங்களையும் ஒருமுறை பார்த்தார். திடீரென்று அவரது முகத்தில் சொல்லமுடியாத ஒருவித வெறுப்பின் நிழல் படிந்தது.

அவள் இதை உணர்ந்ததும் மிகுந்த பண்புடன் பேச ஆரம்பித்தாள் : “சுவாமி பாவிகளுக்கு ஒருநாளும் விமோசனம் கிடைக்காதா?”

இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவர் கருணை நிறைந்த கண்களால் அவளைப் பார்த்து “நீயும் உட்கார்” என்று ஓர் ஆசனத்தைக் காண்பித்தார். அவள் உட்கார விரும்பவில்லை. மேலும் ஒருபுறமாக ஒதுங்கி நின்றாள்.

பெரியவர் பேசினார். “தவறு செய்தவர் தாமாகவே அதை உணர்ந்து பச்சாதாபப்படுவதே மிகச் சிறந்த பிராயச்சித்தமாகும்”

“சுவாமி, என்னைப் போன்றவர்களுக்கும் இந்த விதி பொருந்துமா?”

இப்பொழுது தெளிவான குரலில் அவர் பதில் கேட்டது : “குழந்தாய், உனக்குத்தான் இது முற்றும் பொருந்தும். வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே நிதானமான பாதையில் செல்வதில்லை. மனம் சந்தர்ப்பவசத்தால் பல தடவைகளில் குழியில் தள்ளி விடுகிறது. குழந்தை நடக்கப் பழகும்போது எத்தனை தடவை விழுந்து விழுந்து எழும்புகிறது என்பதை நீ அறியாயா?”

“மறுபடியும் எழுந்திருக்க முடியாதபடி விழுந்துவிட்டால்?” பெருமூச்சின் நடுவே அவள் இப்படிக் கேட்டாள்.

அவர் ஒருமாதிரி சிரித்தபடியே பதில் சொன்னார் : “குழந்தையின் மானிடத் தாய் அல்லவே லோகநாயகி.”

அவள் ஓடிவந்து அவர் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள். மற்றவரோ எல்லாவற்றையும் கவனித்தபடியே பின்னால் உட்கார்ந்திருந்தார்.

பிறகு அவள் பெரியவரையே பார்த்து, “சுவாமி, ஒரு பொழுதுக்காவது இங்கே தங்கிச் செல்லவேண்டும்” என்று வேண்டிக்கொண்டு உள்ளே போனாள். அப்பொழுது அவர் மற்றவரைப் பார்த்துச் சொன்னார் : “அப்பனே, எழுந்திரு. போகவேண்டும்.”

ஒருவர்பின் ஒருவராக அவர்கள் வெளியே சென்றார்கள்.

அவள் ஓடிவந்து பார்த்தபோது அந்தத் தெருவையே கடந்து அவர்கள் மறைந்துவிட்டார்கள்.

எதிர்பாராத வகையில் பெரியவர் வேகமாக நடந்தார். அவரது மனம் நிலைகொள்ளாமல் தடுமாறியது. அந்த நிலையிலும் ‘ஏன் இது?’ என்று தமக்குள்ளே கேட்டுப் பார்த்தார். காரணம் தெரியவில்லை.

“அங்கே நுழைந்தாயே, அதனால்தான்”

இது அவர் உள்ளத்தின் ஒரு கோணத்திலிருந்து எழுந்த குரல்.

“பாவத்தின் பயங்கர அந்தகாரம் சூழ்ந்த இந்த உலகத்தில் அவள் அப்படி ஓர் ஆகாத பண்டமா? உள்ளே இருந்து மற்றொரு குரல் இப்படிக் கேட்டது. பின்னால் தொடர்ந்து வரும் மற்றவரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அவர் மறுபடியும் முன்போலவே நடக்க ஆரம்பித்தார். இப்படிச் சிக்கலான மனநிலை அவரை முன்னும் சிலசமயங்களில் கலங்கச் செய்ததுண்டு. அப்போதெல்லாம் அதனதற்குரிய காரணங்களை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார். இன்று அது முடியவில்லை. விரும்பி முயன்றும் அது வெளிவர மறுத்தது.

அவர் முகத்தில் இலேசாக வியர்வை அரும்பியது. தமக்குள் பேசிக் கொண்டே நடந்தார். ’இந்த உலகத்திலிருந்து விடுபட்டு வாழ்வில் எத்தனையோ வருஷங்கள் கழிந்துவிட்டன. நித்திரை, உணவு என்ற இன்றியமையாதவற்றையே கட்டுப்படுத்தி மனத்தை மடக்கி வழி நடத்தினார். எத்தனை சோதனைகளைச் செய்து பார்த்தாயிற்று! எல்லாவற்றிலும் சித்தி லேசாகக் கிட்டியது. இன்றோ இது பெரிய புதிராகவே இருக்கிறது. அடிமனத்தில் – எங்கோ ஒரு மூலையில் – என் சக்திக்கு எட்டாத ஆழத்தில் ஏதோ ஒன்று அழுகிக் கிடக்கிறது.’

ஒரு பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தார். இளையவரது முகம் வழக்கம் போலவே பிரகாசத்துடன் விளங்கியது.

“குழந்தாய்!”

அந்தக் குரலில் அன்பு அமுதாகி கடலாகிப் பொங்கி வழிந்தது.

“சுவாமி!” என்று உடனே பதிலுக்குக் குரல் கொடுத்தார் மற்றவர்.

“களைப்படைந்தாயோ என்று பார்த்தேன். அவ்வளவுதான்”

மறுபடியும் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். அவர்களுக்கு நடுவில் மெளனம் நிலைத்திருந்தது. கொஞ்சதூரம் சென்றதும் தெருவின் ஓரத்தில் நின்ற ஒரு மரத்தின் நிழலில் அவர் போய் உட்கார்ந்தார். இளையவரும் அவரைத் தொடர்ந்து சென்று ஒரு பக்கத்தில் ஒதுங்கினார்.

பெரியவருடைய மனத்தில் மற்றவரைப் பற்றிய நினைவுகள் திடீரென்று முளைத்தன. உடனே அவர் கேட்டார் : “குழந்தாய், நீ என்னை அடைந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?”

“ஆம்” என்று தலையசைத்தார் இளையவர்.

“இதுவும் ஒருவகையில் நம்மைப் பாதிக்கக்கூடிய பந்தம் தானே? இதை நீ உணரவில்லையா?”

மற்றவர் பதில் இன்றி மெளனத்தில் மூழ்கியிருந்தார்.

“உனக்குப் பக்குவ நிலை கைவந்துவிட்டது. இனியும் நீ என் இறக்கைகளுக்குள் உறங்க வேண்டியதில்லை.”

இளையவர் பிறகும் பேச்சின்றியே இருந்தார். சிறிது பொறுத்து மறுபடியும் பெரியவே பேசினார்.

“அப்பனே, இனி நீயும் நானும் பிரிந்து விடவே வேண்டும். அல்லது இரண்டு பேருமே பெரிய நஷ்டத்தை அடைவோம்.”

இளையவர் எழுந்து கூப்பிய கரங்களுடன் அவர் பக்கமாகச் சென்று விழுந்து வணங்கினார்.

”குழந்தாய், உன்னை ஆண்டவன் ஆசீர்வதிப்பானாக!”

அவர் கண்களை மூடியபடி எழுந்து நின்றார். அவருடைய குரல் கரகரத்தது. மற்றவர் குனிந்து அவருடைய பாதங்களைத் தொட்டு பலமுறை கண்களில் ஒற்றிக்கொண்டு தெருவில் இறங்கினார்.

தெருவில் இறங்கிய இளையவர் ஒருமுறை கூடத் திரும்பிப் பாராமலே நடந்து கொண்டிருந்தார். அவரது நடையில் எது இல்லாவிட்டாலும் நிதானம் இருந்தது. எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட தெளிவு இருந்தது.

அந்த உருவம் கண்களை விட்டு மறையும் வரையும் நின்றபடியே பார்த்துக் கொண்டு பெரியவர் தாய் போல் மாறி, “ஐயோ வெயில் கடுமையாக எரிக்கிறதே!’ என்று அங்கலாய்த்தார். பிறகு தாமும் தொடர்ந்து போக எண்ணியவர் போல அந்தத் திசையில் வேகமாக நடந்தார். சிறிது தூரம் சென்றதும் ஏனோ மறுபடியும் திரும்பி வந்து அந்த மரத்தின் கீழ் உட்கார்ந்தார்.

இளையவர் இருந்த இடம் சூனியமாகிக் கிடந்தது. ஆனால் மண்ணில் அவர் காலடிகள் நன்றாகத் தெரியும்படி பதிந்திருந்தன. அந்த அடையாளங்கள் ஏதோ அருமையான பொக்கிஷங்கள் போல அவருக்கு இருந்தன. வெகுநேரம் வரையில் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஏதோ ஆறுதல் இருப்பது போலப்பட்டது. நடுவில், ‘இனி ஒருபோதும் சந்திக்க மாட்டேனா?’ என்ற கேள்வி எழுந்ததும் தடுமாறி எழுந்து நின்று அவர் போன திசையைப் பார்த்தார். பிறகு அங்கும் இங்குமாக நடக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம்  அந்த அடையாளங்கள் அழிந்து விடாதபடி விலகி விலகியே நடக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது.

’இந்தப் பாசம் இவ்வளவு தூரம் என்னைப் பாதித்துவிட்டதே’ என்ற ஏக்கமும் அவருக்கு அடிக்கடி உண்டாயிற்று.
‘அன்றைக்கே, அவன் வந்தபோது ‘இது வேண்டாம் மறுபடியும் கட்டுப்படாதே’ என்று எச்சரித்த என் அந்தராத்மாவின் குரலை நான் கெளரவிக்கவில்லை. ‘சுவாமி, எனக்கு வழிகாட்டுங்கள்’ என்று வந்தவனை எப்படித்தான் போ என்று தள்ளமுடியும்? வா என்று ஏற்றுக்கொண்டேன். அவன் நிழலாகி வளர்ந்தான். இந்த நிலையிலும் அவனைப் பார்த்து மனம் களித்தேன். ஆனால் இன்று?

அவர் நீண்ட ஒரு பெருமூச்சுடன் கிளம்பி வந்தவழியால் நடந்தார். இப்பொழுது அவரது நடையில் வேகம் இல்லை. நிதானமும் இருக்கவில்லை. தகித்துக் கொண்டிருந்த வெயில்கூட அவரை அவசரப்படுத்தவில்லை. மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றார். பாரம் ஏறிய மனநிலையை அவரது முகம் எடுத்துக் காட்டியது.

வழியில் ஜனங்கள் போனார்கள். வந்தார்கள். அவர்களுக்குள் அவனும் இருக்கலாம் என்பதுபோல அவர் கண்கள் எல்லோரையும் ஆராய்ந்தன. ‘இனி வேண்டாம்’ என்று சில சமயங்களில் கண்களை மூடிக் கொண்டும் நடந்தார்.

வரவர அவருக்கு நடப்பதே பெரிய சிரமமாக இருந்தது. ஆயினும் நிற்காமலே சென்றார். அந்தச் சமயத்திலே,  காலையிலே தாம் எந்த வீட்டில் இருந்து கிளம்பி ஓடினாரோ, அந்த வீட்டின் எதிரில் வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டார். நடப்பதை நிறுத்திவிட்டு அந்த மரத்தின் அடியில் இருந்து மேடையைப் பார்த்தார். எதிரில், ‘சுவாமி வாருங்கள்’ என்று வேண்டியவாறே அவள் ஓடிவந்தாள். அவர் இப்பொழுது அசையவில்லை. கண்களை அகல விழித்து அவளையே பார்த்துக் கொண்டி நின்றார். பிறகு தாமாகவே இறங்கி உள்ளே சென்றார்.

மற்றவரைப் பிரிந்ததினால் உண்டாகிய தாகம் மெல்ல மெல்ல தணிவதுபோல அவருக்குப் பட்டது. அப்பொழுது அவள் பேசினாள். ‘சுவாமி, எப்படியும் ஒரு நாளைக்கு உங்களைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆனால், அது இன்றைக்கே சித்தியாகும் என்று எண்ணவேயில்லை. நான் பெரிய பாக்கியம் செய்தவள்.’

அவர் உள்ளே புகுந்து ஒர் ஆசனத்தில் உட்கார்ந்தார்.

‘சுவாமி, மறுபடியும் போய்விட மாட்டீர்களே?’

அவள் உண்மையாகத்தான் இப்படிக் கேட்டாள்.

‘போ என்று தள்ளினாலும் முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறேன்.’

காலில் விழுந்து வணங்கியவள் எழுந்து உள்ளே சென்றாள். அவர் அதற்குள் அதிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார். பிறகு அவர் கண்களைத் திறந்தபோது முற்றும் எதிர்பாராத தோற்றத்தில் அவள் எதிரில் நின்றாள்.

‘அம்மா, இது என்ன கோலம்?’

அவர் ஆச்சரியத்தோடு இப்படிக் கேட்டார்.

அவள் இதற்குப் பதில் சொல்லாமலே தன் கருத்தைச் சொன்னாள். ‘சுவாமி, இவையெல்லாம் இனித் தங்களைச் சேர்ந்தவையே. விருப்பம் எதுவோ அப்படிச் செய்யுங்கள்.’

அவர் அதிர்ந்து போய் சோர்வடைந்து கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தார்.

அதற்குள் அவள் வெளியே இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.

கலைமகள், வைகாசி 1943.

நன்றி- சுருதி வலைப்பக்கம்

பாற்கஞ்சி -சி.வைத்திலிங்கம் -எனக்குப் பிடித்த சிறுகதைகள்( இலங்கை)

பாற்கஞ்சி 

சி.வைத்திலிங்கம்
 

'ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம். நாளைக்குப் பாற்கஞ்சி...' 

'சும்மாப்போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.' 

'இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே'
 

'கூழைப் பார்த்தாலே வவுத்தைப் புரட்டுதம்மா. முடியாதுன்னா முடியாது' என்றுசொல்லி அழத் தொடங்கினான்.
 

'அப்பா பசியோட காத்துண்டிருப்பாரடா. வயல்லே கூழ் கொண்டு போகணும். என்ன பாடுபட்டும் நாளைக்குக் கஞ்சி தந்துடுறனே. ஆம்... என் கண்ணோல்லியோ?'
 

'நிச்சயமாய்ச் சொல்றயாம்மா? நாளைக்கு பாற்கஞ்சி தருவாயா?'
 
சட்டென்று பக்கத்திலிருந்து சிறுவர்கள் தம்பளப் பூச்சி விளையாடும் சப்தம் கேட்டது. அவதி அவதியாய்ப் பத்துவாய் கூழ் குடித்தான் ராமு. எல்லாவற்றையும் மறந்துவிளையாட ஓடினான். 

அந்தக் கிராமத்தில் முருகேசனுடைய வயல் துண்டு நன்றாய் விளையும் நிலங்களில் ஒன்று. அதற்குப் பக்கத்திலே குளம். குளத்தைச் சுற்றிப் பிரமாண்டமான மருதமரங்கள். தூரத்திலே அம்பிகையின் கோயிற் கோபுரம். இவை எல்லாவற்றையும் சுற்றி வேலிபோட்டாற்போல தூங்கிக்கிடந்தன குடிமனைகள்.
 

மார்கழி கழிந்துவிட்டது. இப்பொழுது மேகத்திலே புகார் ஓடுவதில்லை. ஞான அருள்பெற்ற நாள் வெண்ணிறம் பெற்று வந்தது. ஆம் தைமாதம் பிறந்து துரிதமாய் நடந்து கொண்டிருந்தது.
 

மாரிகாலம் முழுவதும் ஓய்ந்து தூங்கிக்கிடந்த ஜீவராசிகள் பாட்டுடன் வேலை தொடங்கிவிட்டன. முருகேசனும் வயலிலே வேலை செய்து கொண்டிருந்தான். பனியிலே ஒடுங்கிக் கிடந்த நரம்புகளிலே சூரிய ஒளி வெள்ளம் பாயவே, அவன் தேகத்தில் ஒரு சுறுசுறுப்பு உண்டானது. வலிந்து இறுகியிருந்த நரம்புகள் விண்போல் தெறித்தன. எழுந்து நின்று கண்களைச் சுழற்றித் தன் வயலைப் பார்த்தான். நெற்கதிர்கள் பால் வற்றி, பசுமையும், மஞ்சளும் கலந்து செங்காயாக மாறிக்கொண்டிருந்தன. 'இன்னும் பதினைந்து நாட்களில்...' என்று அவனைஅறியாமல் அவன் வாய் முணுமுணுத்தது.
 

முருகேசன் மனத்திலே ஒரு பூரிப்பு. ஓர் ஆறுதல். ஒரு மன அமைதி. அவன் ஒரு வருஷமாயப் பாடுபட்டது வீண் போகவில்லையல்லவா? ஆனால் இவற்றுக்கிடையில் காரணமில்லாமல் 'சிலவேளை ஏதேனும்... யார் கண்டார்கள்?' என்ற இன்பமும் துன்பமும் கலந்த ஒரு மன ஏக்கம்...!
 

முருகேசனுக்கு வயலை விட்டுப் போக மனம் வரவில்லை. பொழுது உச்சிக்கு வந்துவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது. என்றாலும் பயிருக்குள் நுழைந்து ஒவ்வொரு கதிராக தன் கைகளால் அணைத்து தன் குழந்தைகள் போலத் தழுவிக்கொண்டிருந்தான்.
 
கண்ணை மின்னிக் கொண்டிருந்த அந்த வெயிலிலே காமாட்சி கூழுடன் அப்பொழுதுதான் வந்தாள். கூழ் குடித்துக் கொண்டிருக்கும் பொழுது முருகேசன் அவளைப் பார்த்து, 'போன வருசந்தான் மழை இல்லாமல் எல்லாம் சப்பையும், சாவியுமாய்ப் போயிருந்தது. காமு, அதோபார். இந்த வருசம் கடவுள் கண்திறந்திருக்கிறார். கருப்பன் செட்டி கடனைத் தீர்த்துப்புடலாம். நமக்கு ஒருவருடத்துக்குச் சோத்துக்குக் குறைவு வராது. எங்க ராமனுக்கு ஒரு சோடி காப்பு வாங்கணும்...'
 

'எனக்கு ஒட்டியாணம்'
 

'ஏன், ஒரு கூறைச் சேலையும் நன்னாயிருக்குமே'
 

'ஆமாங்க, எனக்குத்தான் கூறைச் சேலை, அப்படின்னா ஒங்களுக்கு ஒரு சரிகைபோட்ட தலப்பா வேணுமே'
 

'அச்சா, திரும்பவும் புதுமாப்பிள்ளை பொம்புளையாட்டம் ரெண்டு பேரும்.... ஓ... ஒரே சோக்குத்தான்' என்று அவளைப் பார்த்து இளித்தான்.
 

காமாட்சி வெட்கத்தினால் தன் சீலைத் தலைப்பால் முகத்தை அரை குறையாய்மூடிக்கொண்டு 'அதெல்லாம் இருக்கட்டும்.... எப்போ அறுவடை நாள் வைக்கப்போறீங்க' என்றாள்.
 

இன்னிக்குச் சனிக்கிழமை, சனியோடு சனி எட்டு. மற்றச் சனி பதினைந்து. ஆம் நல்லநாள். அதே சனிக்கிழமை வெச்சிடுவமே'
 

'தாயே, இதுக்கிடையில் ஒரு விக்கினமும் வந்திடப்படாது' என்று மனதில் சொல்லிக்கொண்டாள் காமாட்சி.
 

ஒரு பெருநாளை எதிர்பார்ப்பது போல் காமாட்சியும் முருகேசனும் அறுவடை நாளை எதிர்நோக்கி இருந்தார்கள். காமாட்சி தன் வீட்டிலுள்ள களஞ்சிய அறையைக் கோலமிட்டு மெழுகி வைத்திருந்தாள். லக்சுமி உறையப் போகும் அந்த அறைக்கு ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றி வந்தாள். மணையாகக் கிடந்த அரிவாளை, களைக்கொல்லன் பட்டடையிற் கொண்டுபோய்த் தேய்த்து வந்தான் முருகேசன். கதிர்ப்பாய்களை வெய்யிலிலே உலர்த்தி, பொத்தல்களைப் பனை ஓலை போட்டு இழைத்து வைத்தான். ஐந்தாறு நாட்களுக்கு முன்னரே அயல் வீட்டுக் கந்தையனிடமும் கோவிந்தனிடமும் 'அறுவடை வந்திட வேணும் அண்ணமாரே' என்று பலமுறை சொல்லி வந்தான். இருவருடைய மனதிலும் ஓர் ஆவல் துடித்து நின்று இவற்றை எல்லாம் செய்து வந்தது.
 

அறுவடை நாளுக்கு முதல் நாள் அன்று வெள்ளிக்கிழமை. பகல் தேய்ந்து மறைய இன்னும் மூன்று நாழிகை தான் இருந்தது. நிஜகளங்கமாய் இருந்த வானத்திலே ஒரு கருமுகிற் கூட்டம் கூடியது. வரவரக் கறுத்துத் தென்திசை இருண்டு வந்தது. அந்த மேகங்கள் ஒன்று கூடி அவனுக்கு எதிராகச் சதி செய்வதாக முருகேசன் நினைத்தான்.அந்தக் கருவானம் போல் அவன் மனதிலும் இருள் குடிகொண்டது. காமாட்சி மனதிற்குள் அம்பிகைக்கு நூறு வாளி தண்ணீரில் அபிசேகம் செய்வதாகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். சிறு நேரத்தில் ஒரு காற்று அடித்துக் கூடியிருந்த முகிற் கூட்டம் கலைந்து சிறிது சிறிதாய் வானம் வெளுத்துக் கொண்டு வரவே,முன்போல் ஆகாயம் தெளிவுடன் விளங்கியது. தன்னுடைய பிரார்த்தனை அம்பிகைக்கு கேட்டுவிட்டதென்று காமாட்சி நிளைத்தாள்.
 

முருகேசன் படுக்கப்போக முன் அன்றைக்கு பத்தாவது முறை கந்தையனுக்கும், கோவிந்தனுக்கும் காலையில் அறுவடையைப் பற்றி நினைப்பூட்டிவிட்டு வந்து படுத்துக் கொண்டான். அவன் படுக்கையிலேயே புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். நித்திரை அவனுக்கு எப்படி வரும்? அவனுடைய மனம் விழிப்பிற்கும், தூக்கத்திற்கும்இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. ஆயிரஞ் சிந்தனைகள் பிசாசுகளைப் போல்வந்து அவன் மனதிலே ஓடிக்கொண்டிருந்தன.
 

அவன் வயலிலே நெல் அறுத்துக் கொண்டிருக்கிறான். பக்கத்திலே கோவிந்தனும், கந்தையனும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அறுத்து வைத்ததைக் காமாட்சியும், பொன்னியும், சின்னம்மாவும் கட்டுக்கட்டாய் அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். கிளிகளையும், காக்கைகளையும் துரத்திக்கொண்டு திரிகிறான் ராமு. அப்பொழுது காமாட்சி, 'பள்ளத்து பள்ளன் எங்கேடி போய்விட்டான்' என்று பள்ளு பாடத் தொடங்கினாள்.
 

அதற்குப் பொன்னி 'பள்ளன் பள்ளம் பார்த்துப் பயிர் செய்யப் போயிட்டான்' என்று சொல்ல, காமு, 'கொத்துங் கொண்டு கொடுவாளுங்கொண்டு...' என்று இரண்டாம் அடியைத் தொடங்கினாள்.
 

அதற்குப் பொன்னி 'கோழி கூவலும், மண்வெட்டியும் கொண்டு' என்று சொல்ல, இருவரும் சேர்ந்து, 'பள்ளன் பள்ளம் பார்த்துப் பயிர் செய்யப் போயிட்டான்' என்றுமுடித்தார்கள்.
 

உடனே காமு, 'ஆளுங் கூழை அரிவாளுங் கூழை' என்று சொன்னதும், முருகேசன் 'யாரடி கூழை!' என்று அரைத் தூக்கத்திலிருந்து கத்திக்கொண்டு எழுந்திருந்தான்.
 

முருகேசன் - ஆள் கூழை. பாவம். தன்னையே அவள் கேலி செய்வதாக நினைத்து அப்படிக் கோபித்துக்கொண்டான். இப்பொழுது நித்திரை வெறிமுறிந்ததும், தான் செய்ததை நினைக்க அவனுக்கு வெட்கமாயிருந்தது. தனக்குள்ளே சிரித்துக் கொண்டு திரும்பவும் படுத்துக்கொண்டான். அந்தக் கனவுதான் எவ்வளவு அழகான கனவு! அதன் மீதியையும் காணவேண்டும் என்று ஆவலாயிருந்தது. ஆனால் நித்திரை எப்படி வரப்போகிறது? கனவுதான் மீண்டும் காணப்போகிறானா? தன் கற்பனையிலே மீதியை சிருஷ்டித்துப் பார்த்து அவன் மகிழ்ந்து கொண்டிருந்தான்.
 

பாட்டுடன் அறுவடை சென்று கொண்டிருக்கிறது. வயலிலே நின்று நெல்மூட்டைகளை வண்டியிலே போடுகிறான். வண்டி வீட்டு வாசலிலே வந்து நிற்கிறது. அவனுடைய களஞ்சியம் நிறைந்து பரிபூரணமாய் விட்டது. ராமன் வயிறு நிறையப் பாற்கஞ்சி குடித்துக்கொண்டிருக்கிறான். காமு ஒட்டியாணத்துடன் வந்து அவனை....
 

அப்பொழுது வீட்டுக்கூரைக்கு மேலிருந்து ஒரு சேவல் கூவிற்று. முருகேசனுடைய கற்பனை அறுந்துவிட்டது. அக்கிராமத்திலுள்ள சேவல்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாகக் கூவிக்கொண்டு வந்தன. அவன் வீட்டுக்கு முன்னால் கட்டியிருந்த ஆட்டுக்குட்டி 'மேய் மேய்' என்று கத்தத் தொடங்கியது. எங்கிருந்தோ கள்ளத்தனமாய் உள்ளே நுழைந்த மெல்லிய காற்று அவன் மேல் படவே மீண்டும் குளிர்ந்தது. முருகேசன் பரபரவென்று எழுந்திருந்தான். வாசலை அடைந்து வானத்தை அண்ணாந்து பார்த்தான்.
 

அவன் படுக்கைக்கு போனபொழுது வானத்திலே பூத்திருந்த நட்சத்திரங்கள் ஒன்றையும் காணவில்லை. வானம் கறுத்துக் கனத்து எதிலோ தொங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றிற்று. வீட்டு முற்றத்திலே வந்து நின்றான். ஒரு மழைத்துளி அவன் தலைமேல் விழிந்தது. கையை நீட்டினான். இன்னும் ஒருதுளி! மற்றக் கையையும் நீட்டினான். இரு துளிகள் வீழ்ந்தன. அவன் தலையிலே வானமே இடிந்து விழும் போல் இருந்தது.
 

உக்கிப்போய்த் தன் வீட்டுத் திண்ணையிலே குந்திக்கொண்டான். பொலுபொலுவென்று மழை தொடங்கியது. இடி இடித்தது. மின்னி மழை சோனாவாரியாய்க் கொட்டிக் கொண்டிருந்தது.
 

காலை ஏழு மணியாகியும் மழை விடவேயில்லை. ராமு ஓடி வந்து தந்தைக்கு பக்கத்திலே குளிர் காய்ந்து கொண்டிருந்தான். காமாட்சி இடிந்துபோய் நின்றாள். மழையுடன் காற்றும் கலந்து 'ஹோ'வென்று இரைந்து கொண்டிருந்தது.
 

'அம்மா இன்னைக்கு பாற்கஞ்சி தாரதாய்ச் சொன்னியே, பொய்யாம்மா சொன்னாய்?' என்று தாயைப் பார்த்துக் கேட்டான் ராமு.
 

காமாட்சிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் வயிறு பற்றி எரிந்தது. பச்சைக் குழந்தையை எத்தனை நாட்களாய் ஏமாற்றிவிட்டாள்? மழையையும் பாராமல் பக்கத்து வீட்டிற்கு ஓடினாள். காற்படி அரிசி கடனாய் வாங்கிக் கொண்டு வந்தாள்.
 

முருகேசன் ஒன்றும் பேசாமல் வானத்தைப் பார்த்தபடி இருந்தான். அவனுடைய பார்வை வயல்வெளியை ஊடுருவிச் சென்று எங்கேயோ லயித்துப் போயிருந்தது.
 

'வெள்ள வாய்க்காலிலே தண்ணீர் கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது குளம் நிறைந்து தண்ணீர் பெருக்கெடுத்து விடும். தன்னுடைய நெற் பயிர்கள் கீழேவிழுந்து உருக்குலைந்துவிட்டன. நெற் கதிர்கள் உதிர்ந்து வெள்ளத்துடன்அள்ளுண்டு போய்க் கொண்டிருக்கின்றன' என்று அவன் எண்ணி ஏங்கினான்.
 

காமாட்சி களஞ்சிய அறைக்குப் போனாள். அது வெறுமனே கிடந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை விம்மிக் கொண்டு வந்தது. அங்கே நிற்க தாங்காமல் வெளியே வந்தாள். ராமு 'நாளைக்கும் தாரியாம்மா பாற்கஞ்சி' என்று கெஞ்சிக் கேட்டான். அவன் கஞ்சி
 

குடித்த கோப்பை அவளுக்கு முன்னே காலியாகக் கிடந்தது.
 

அநேகநாள் பழக்கத்தினாலே 'நாளைக்....' என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது. அந்த அரைகுறையான வார்த்தை முருகேசன் வயிற்றிலே நெருப்பை அள்ளிக்கொட்டியது.
 

ஆனந்தவிகடன் (1940)


நன்றி- சுருதி வலைப்பக்கம்

தோணி- வ.அ.இராசரத்தினம்-எனக்குப் பிடித்த சிறுகதைகள்( இலங்கை)

தோணி

வ.அ.இராசரத்தினம்

கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சர சரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஓலைக் குடிசைகள் இருக்கின்றன. ஓரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் போகப் பெண்களின் தலைவகிடு போல ஒற்றையடிப் பாதைகள் செல்கின்றன. இந்தக் குடிசைகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கிராமம் என்று சொல்கிறேன். சரியோ பிழையோ? உங்கள் பாடு. 

எங்கள் குடிசைக்கு முன்னால் தென்னைமரங்கள் இரண்டைச் சேர்த்து நீண்ட கம்பு ஒன்று எப்போதும் கட்டப்பட்டிருக்கும். அதிலேதான் தூண்டிற் கயிறுகளையும் தோணியைச் செலுத்த உதவும் சவளையும் என் தந்தையார் வைப்பது வழக்கம். அதன் கீழே தென்னை மரத்தினடியிற் பென்னம் பெரிய குடம் ஒன்று இருக்கும். அந்தக் குடத்திலே தண்­ர் எடுப்பதற்காக ஒற்றையடிப்பாதை வழியாக அம்மா அடுத்த குடிசைக்குப் போகும் போதெல்லாம் நானும் கூடப் போயிருக்கிறேன்.
 
அநேகமாகக் காலை வேளையில் அம்மாவும் அப்பாவும் வீட்டில் இருக்க மாட்டார்கள். அப்பா கோழி கூவும் போதே எழுந்து கடலுக்குப் போய் விடுவார். அம்மாவிற்கு வெளியே என்ன வேலை இருக்குமோ, என்னால் ஊகித்துக் கொள்ள முடியாது. ஆனால், அம்மா வீட்டிற்கு வரும்போதெல்லாம் பனையோலைப் பெட்டியில் அரிசியும், மரவள்ளிக் கிழங்கும், தேங்காயும் கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். அம்மா வீட்டுக்கு வந்து சிறிது நேரத்திற்கெல்லாம், அப்பாவும் தூண்டிற்கயிறுகளோடும், சவளோடும் மீன்கோவையோடும் வீட்டுக்கு வந்து விடுவார். 

அப்பாவும் அம்மாவும் வீட்டிலில்லாத நேரங்களில் ஒரே குஷிதான்! ஏறுவெய்யிலின் மஞ்சட் கிரணங்கள் சரசரக்கும் தென்னோலைக்கூடாகவும் துள்ளிப் பாய்ந்து நிலத்தில் வெள்ளித் துண்டுகளைப்போல வட்ட வட்டமாக ஒளியைச் சிந்தும். அந்த வட்ட ஒளியை நான் என் கையால் மூட, அந்த ஒளி என் புறங்கையில் விழ, அடுத்த கையால் நான் அதை மறைக்க, அவ்வொளி அடுத்த கையிலும் விழ, நான் கைகளை ஒளி விழுமாறு உயர்த்தி உயர்த்திக்கொண்டே போவது எனக்குப் பிடித்தமான விளையாட்டாக இருக்கும். ஆனால் கூரைக்கூடாக ஒளி பாய்ந்துவரும் துவாரம், என்னால் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறபடியால் நான் என் விளையாட்டை முடித்துக் கொள்வேன்.
 

குடிசைக்கு வெளியே வந்தால், அங்கே பக்கத்து வீட்டிலிருந்து என் நண்பன் செல்லனும் வந்திருப்பான். செல்லன் என்னைவிட நோஞ்சான். பாய்மரக் கம்புபோல நீளமாக இருப்பான் இன்னமும் ஐந்தாறு வருடம் சென்றால் அவன் தென்னைமரத்து வட்டைத் தொட்டு விடுவான் என்று என் அம்மாகூட அவனைப் பரிகசிப்பது உண்டு.
 

செல்லன் வந்ததும், நான் எங்கள் வீட்டுப்படலையை இழுத்துச் சாத்திவிட்டு, அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே ஆற்றங்கரைக்கு ஓடுவேன்.
 

ஆற்றங்கரை, வீட்டிலிருந்து அதிக தூரத்திலில்லை. வங்காளக் கடல் சிறிது உள்ளே தள்ளிக்கொண்டு வந்து ஒரு சிற்றாறாக எங்கள் கிராமத்திற்கூடாகச் சென்று கொண்டிருந்தது. இந்த ஓடையில் பூரணையன்று வெள்ளம் வரும்போது தண்­ணீர் வீட்டு முற்றத்திற்கே வந்துவிடும்.
 

அந்த ஆற்றங்கரையின் ஓரமாக, ஆற்றில் நீண்டு வளர்ந்த கோரைப்புற்கள் சடைத்துக் கிடக்கின்றன. அந்தப் புற்களினடியில் நீருக்குள் ஓசைப்படாமல் இருகைகளையும் கூட்டி வைத்து இறால் பிடிப்பதில் எங்கட்குப் பரம திருப்தி; என்றாலும் இந்த விளையாட்டில் எங்கட்கு அலுத்துப் போய்விடும். அதன்பின், நாங்கள் நேரடியாகக் கடற்கரைக்கே போய்விடுவோம்.

கடற்கரையில் கச்சான் காற்று சுழற்றிச் சுழற்றி அடிக்கும் அந்தக் காற்றில் இராவணன் மீசைகளைத் துரத்திப் பிடித்தபின், அந்த விளையாட்டிலும் எங்கட்கு அலுப்பு ஏற்பட்டுவிடும்.
 

அதன்பின்னால், நாங்கள் இருவரும் கடற்கரை வெண்மணலில் மதாளித்துப் படர்ந்து கிடக்கும் அடம்பன் கொடிகளில்மேல் குந்திக் கொள்வோம். பதைபதைக்கும் வெய்யிலில் அந்த அடம்பன்கொடி மெத்தை எங்களுக்குக் "கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தரு" வாகத்தான் இருக்கும். அந்தப்பட்டு மெத்தையின் மேல் வீற்றிருந்து கொண்டு எதிரே கடவுளைப்போல ஆதியும் அந்தமும் அற்றுப் பரந்துகிடக்கும் கருநீலக் கடலிலே அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாய் விரித்தாடும் பாய்த்தோணிகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். கடற்பரப்பிலே வெள்ளைச்சீலைப் பாய்கள் வட்ட வட்டமாக, வண்ணாத்திப் பூச்சிகளைப் போல அழகாக இருக்கும். அவைகளில் ஏதோ ஒன்றில் தான் என் தகப்பனார் இருப்பார். ஆனால், எதிலே அவர் இருக்கிறார் என்று திட்டமாக எனக்குத் தெரியாது. எனினும் ஏதாவது ஒரு தோணியைக் குறிப்பிட்டு, அதில்தான் அவர் இருப்பதாக எண்ணிக் கொள்வேன். அந்த நம்பிக்கையில், முகத்தில் 'சுள்' என்றடிக்கும் சூரியக்கிரணங்களை நெற்றிப் பொட்டில் கைகளை விரித்து மறைத்துக்கொண்டு அந்தத் தோணியையே பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தச் சமாதிநிலையில், என்னுள்ளே இன்பகரமான கனவுகளெல்லாம் எழும். இன்னும் சில நாட்களில் நான் பெரியவனாகி விடுவேன்; அப்போது, அப்பாவிற்குப் போல, எனக்கும் ஒரு தோணி சொந்தமாகக் கிடைத்துவிடும். அந்தத் தோணிக்கு வெள்ளை வேளேரென்று அப்பழுக்கில்லாத ஒரு பாயைப் போட்டுக் கொண்டு நான் கடலிற் செல்வேன்; ஒரு தென்னைமர உயரத்திற்கு எழுந்துவரும் கடல் அலைகளில் என் தோணி தாவித்தாவி ஏறி இறங்கிக்கொண்டே செல்லும். எல்லாத் தோணிகளையும்விட வேகமாக ஓடுவதற்காக என் தோணியின் பாய், பெரியதாக இருக்கம். அந்தப் பாய்க்குள் சோழகக் காற்றுச் சீறியடித்துக் கொண்டிருக்கையில், என் தோணி கடற்பரப்பில் 'விர்'ரென்று பறந்து செல்லும். நான் பின்னணியத்தில் தலைப் பாகைக்கட்டோடு தைரியமாக நின்று சுக்கானைப் பிடித்துக் கொள்வேன்; செல்லன் முன்னணியத்தில் நின்று எனக்குத்திசை காட்டுவான். எங்கள் தோணி முன்னே முன்னே ஏறிச் சென்று, கடைசியாய்க், கடல் வானத்தைத் தொடும் இடத்திற்குப் போய்விடும். அங்கே அம்மா இராத்திரிச் சொன்ன கதையில் வரும் ஏழு தலை நாகத்தைக் காண்பேன்....
 

தூரத்தே நான் குறித்து வைத்திருந்த தோணி சமீபித்து விட்டது. அதிலே என் தகப்பனார்தான் இருந்தார். தோணி கரையை அடைந்ததும், அவர் பாயைக் கழற்றி வைத்துத் தோணியை ஓடை வழியாக இழுத்துச் சென்றார். நானும் அவரோடு சேர்ந்து கொண்டேன். பிறகு நாங்கள் எங்கள் வீட்டின் முன்னால் தோணியைக் கரையில் கொறகொற என்று இழுத்து வந்தோம். அப்பா தூண்டிற் கயிறுகளை வளையமாக்கி சவளில் போட்டு என்னிடம் கொடுத்தார். தோணிக்குள் இருந்த பழஞ் சோற்றுப் பானையையும், மீன் கோவையையும், நங்கூரத்தையும் எடுத்தத் தோளில் போட்டுக்கொண்டு அப்பா பின்னே வர நான் சவளைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு சப்த சமுத்திரங்களையும் கடந்து வந்த வீரனைப் போல முன்னே நடந்தேன்.
 

அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கமே வரவில்லை பசித்தவன் விருந்துண்ணத் கனாக் காண்பதுபோல நானும் தோணியைப் பற்றியே கனாக்கண்டேன், எங்கள் வீட்டுக்கு முன்னாலுள்ள ஓடையில் ஐந்து புத்தம் புதிய தோணிகள் இருந்தன. நான் முன்னணியம் உயர்ந்து சவாரிக் குதிரைபோல இருந்த தோணியின்மேல் ஏறிக்கொண்டேன். வாடைக் காற்றானபடியால் எல்லோருடைய தோணிகளும் முன்னேற முடியாமல் கரையை நோக்கியே வருகின்றன. என்னுடைய தோணி மட்டும் எரிந்துவிழும் நட்சத்திரம் போலக் கனவேகமாகக் காற்றை எதிர்த்துப் போகிறது. கலங்கரை விளக்கின் ஒளிகூடக் கண்ணுக்குப் படாத அத்தனை தூரத்திற்கு ஆழ்கடலின் நடுமையத்திற்கே என் தோணி போய்விடுகிறது....

நான் திடீரென்று விழித்துக்கொண்டேன். காலையில் எழுந்தபோதுகூட எனக்குத் தோணியின் நினைவு மாறவில்லை. அன்று நான் ஓடைக் கரையில் பழுது பார்க்க இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணி ஒன்றைத் தள்ளிக் கொண்டு கடலிற்குப் போவது எனத் தீர்மானித்துக் கொண்டேன். செல்லனைக் கூட்டிக்கொண்டு போய், இருந்த தோணியை எங்கள் பலத்தையெல்லாம் கூட்டித் தள்ளிப் பார்த்தேன். தோணி அசையமாட்டேன் என்றது. அப்படியானால் நான் தோணி விடவே முடியாதா? சப்த சமுத்திரங்களையும் என்னால் தாண்டமுடியாதா?
 

நான் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கையில் ஓடையில் முருக்க மரத்துண்டு ஒன்று மிதந்து வந்தது. அதைக் கண்டதும் எனக்கு ஒரே சந்தோஷமாகப் போயிற்று. ஆம்; எனக்கென்று ஒரு தோணி கிடைத்து விட்டது! அந்த முருக்கங்கட்டையை முன்னாலும் பின்னாலும் 'கொடுவாக் கத்தி'யினால் செதுக்கி உள்ளே குடைந்து தோணி ஒன்றைச் செய்தேன். பின்னர், அந்தத் தோணியில் செல்லனையும் ஏற்றிக்கொண்டு என் ஆசை தீருமட்டும் ஓடையில் தோணிவிட்டு விளையாடினேன்.
 

மதியம் திரும்பிவிட்டது. என் தந்தை கடலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். தோணிவிட்டு விளையாடிக் கொண்டிருந்த என்னைக் கண்டதும், "அடே பயலே! தோணி விடுறியா? அப்படியெண்டா நாளைக்கு என்னோட கடலுக்கு வா" என்றார்.
 

அதைக் கேட்டதும் எனக்குச் சந்தோஷம் தாங்க முடியாமற் போய்விட்டது. "சரியப்பா, நாளைக்கு நானும் வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டே சவளைத் தூக்கிக்கொண்டு முன்னால் நடந்தேன். பெரிய தோணியில் போகப் போகிற ஆனந்தத்தில் என் முருக்கந் தோணியை மறந்து விட்டேன்.
 

2

அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. தென்னோலைச் சரசரப்பும் சில் வண்டுகளின் கீச்சுக் குரலும் எனக்குக் கேட்டுக்கொண்டேயிருந்தன. படுக்கையிற் புரண்டு கொண்டே ஆனந்தக் கனவுகள் கண்டுகொண்டிருந்தேன். கடைசியாய் எங்கோ ஒரு சேவல் கூவிற்று அதைத் தொடர்ந்து எங்கள் கிராமத்துச் சேவல்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு கூவின. அம்மா எழுந்து விளக்கைக் கொளுத்திக்கொண்டு சமயல் செய்யத் தொடங்கினாள்.
 

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குடிசைகளிலிருந்து ஒருவர் மற்றவரைக் கூவியழைக்கும் சப்தம் கேட்டது. கடைசியாய் அப்பாவும் எழுந்து, "தம்பி, டேய்!" என்று என்னை எழுப்பினார். நான் சுட்டபிணம்போல வளைந்து நெளிந்து உட்கார்ந்து கொண்டேன். இரா முழுவதும் தூக்கம் இல்லாததினால் கண்ணிமைகள் கல்லாய்க் கனத்து அழுத்தின. ஆனாலும் உற்சாகத்தோடு எழுந்திருந்தேன். அப்பா சோற்றுப்பானை நிறையத் தண்­ரை ஊற்றி எடுத்துக்கொண்டு நங்கூரம், தூண்டில் கயிறு சகிதம் வெளிக் கிளம்பினார். நானும் சவளைத் தோளில் வைத்துக்கொண்டு புறப்பட்டேன்.
 

படலையைத் திறந்து வெளியே வந்ததும் முகத்தில் வாடைக் கடுவல் ஊசி குத்துவரைப்போலச் சுளீர் சுளீர் என்று அடித்தது. எனக்கு உடம்பெல்லாம் நடுக்கமெடுத்தது. மேல் துண்டை முகத்தை வளைத்துக் கட்டிக்கொண்டு முன்னால் விறுவிறு என்று நடந்தேன். தூரத்தே கடிசைக்குள் இருந்த அகல் விளக்குகள் இருளைக் 'குத்து குத்' தென்று குத்தின.
 

ஓடைக் கரையை அடைந்தபோது, ஆறு, பரமார்த்த குருவின் சீடர்கள் கண்ட ஆற்றைப்போலத் தூங்கிக் கொண்டிருந்தது. கண்டல் இலைகள் பொட்டுப் பொட்டு என்று விழுந்து ஆற்றில் எங்கே போகிறோம் என்ற பிரக்ஞையே அற்ற வண்ணம் போய்க் கொண்டிருந்தன. கோரைப்புற்களின் மேலே சிலந்தி வலைப்போலப் பனிப்படலம் மொய்த்துக் கிடந்தது.
 

அப்பா கரையில் இருந்த தோணியை ஓடையிலே தள்ளினார். அதற்குள்ளே சோற்றுப் பானையையும் மற்றைய சாமான்களையும் வைத்தார். உடனே தோணியை ஆற்றிலே விட்டுவிட்டுக் கோரைப் புறகளின் அடியில் 'அத்தாங்கை' வீசி இறால் பிடிக்கத் தொடங்கினார். நான் வெடுவெடுக்கும் குளிரில் வள்ளத்தின் முன்னணியத்தில் ஒடுங்கிப் போய் குந்திக்கொண்டிருந்தேன். கிழக்கே கூரையில் தொங்கும் புலிமுகச் சிலந்தியைப் போல, வானத்தில் விடிவெள்ளி நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் கீழே கிழக்கு வெளுக்கத் தொடங்கியது.
 

பறி நிறைய இறால் பிடித்ததும் அப்பா வள்ளத்தில் ஏறிக் கொண்டார். வள்ளமும் சமுத்திரத்தை நோக்கி ஓடத் தொடங்கிற்று. பலாரென்று விடிந்தபோது வள்ளம் நடுச் சமுத்திரத்தையே அடைந்து விட்டது. அப்பா நங்கூரத்தைத் தண்ணிரில் எறிந்து விட்டு தூண்டிலில் இறாலைக் குத்திக் கடலில் எறிந்தார். நானும் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தேன். சமுத்திரா தேவி நிர்க்கதியான தன் குழந்தைகளைத் தன் அலைக்கரங்களை எறிந்து எறிந்து தாலாட்டிக் கொண்டு இருந்தாள்.
 

வெய்யில் ஏறிக்கொண்டே வந்தது. முதுகுத்தோலை உரித்துவிடுவதுபோலச் சுளீரென்று அடிக்கும் வெய்யிலுக்கு ஆற்றாமல் அப்பா தன் சட்டையில் கடல் தண்­ரை அள்ளி அள்ளி ஊற்றிக்கொண்டேயிருந்தார்.
 

மதியத்தை அண்மியபோது, நாங்கள் ஆளுக்கு ஐந்து "கருங்கண்ணிப் பாரைகள்" பிடித்துவிட்டோம். என் உழைப்பைக் கண்டு எனக்கே திருப்தி ஏற்பட்டு விட்டது. அந்தத் திருப்தியில் பழஞ் சோற்றைக் கரைத்துக் குடித்த தண்ணீ­ர் எனக்குத் தேவாமிர்தமாகத்தான் பட்டது. வயிறு நிறைந்ததும், நங்கூரத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கையில் என் உள்ளம் பகல் கனாக் காணத் தொடங்கியது. "இந்தப் பத்துக் கருங்கண்ணிப் பாரைகளைக் கண்டதும் அம்மா சந்தோஷப்படுவா. பக்கத்துப் பட்டினத்துச் சந்தைக்கு அதைக் கொண்டு போனால் பத்து ரூபாய்க்கு விற்கலாம். சந்தையிலே, எதிரே வரும் பொங்கலுக்காகக் கமுகம் பூப்போன்ற பச்கையரிசியும் பாசிப்பயறும், சர்க்கரையும் முட்டி நிறையப் பாலும் வாங்கிக் கொள்ளலாம். 'எங்கள்' வீட்டுத் தென்னை மரத்தின் கீழே புதுப் பானை 'களக் களக்' என்று பொங்கும் போது நான் புது வேட்டியை எடுத்துக் கரும்பைக் கடித்துக்கொண்டு....
 

வள்ளம் கரையை அண்மிட்டது. கடற்கரையிலே புத்தம் புதிய பைசிக்கிளிற் சாய்ந்தவாறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். சூரிய கிரணங்கள் பைசிக்கிள் தகடுகளின் மேல்பட்டு ஜொலித்தன. அப்பா ஏதோ மந்திர சக்தியால் கட்டுண்டவரைப்போலத் தோணியை அங்கே திருப்பினார்.
 

தோணி கரையை அடைந்ததும் மீன்களையெல்லாம் பைசிக்கிள் காரரிடம் போட்டுவிட்டுத் திரும்பவும், வீட்டை நோக்கித் தோணியை விட்டார்.
 

எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
 

தோணி வந்துகொண்டிருக்கையில் நான் கேட்டேன்: "ஏன் அப்பா மீன்களை எல்லாம் அங்கே போட்டுவிட்டு வருகிறீர்கள்?"

அப்பா சொன்னார்: "அவர்தான் நம் முதலாளி, இந்தத் தோணி-எல்லாம் அவருடையதுதான். நாம் மீனைப் பிடித்து அவருக்குத்தான் கொடுக்க வேண்டும்."

"நமக்குக் காசு தரமாட்டாரா?"

"நம் கடனிலே கழித்துக் கொள்வார் விலையை. நமக்குச் சாப்பாட்டிற்காக மேலும் கடன் தருவார்."

"அப்படியானால் நாம் ஒரே கடன்காரராகத்தானே இருக்க வேண்டும்?

"என்னமோ அப்பா, நானும் தலை நரைக்கு மட்டும் உழைத்து விட்டேன். கடனை இறுக்க முடியவில்லை. நமக்கென்று புதிதாக ஒரு தோணி வாங்கவும் முடியாது."

"எல்லாத் தோணிகளும அந்த முதலாளியுடையது தானா அப்பா?"

"ஆம், ஓடைக்கரையிலே இழுத்து வைக்கப்பட்டிருக்கும் எல்லாமே அவருடைய தோணிகள்தான்."

வெள்ளம் ஓடைக்கரையை அடைந்து விட்டது. நாங்கள் தோணியைக் கரையில் இழுத்து வைத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தோம். என்னுள்ளே ஒரு பயங்கரமான உண்மை புலனாகியது. இந்தத் தோணி எனக்குச் சொந்தமில்லை. ஆம், தூண்டிற்காரனுக்குத் தோணி சொந்தமில்லை; அப்படியே உழுபவனுக்கு நிலம் சொந்தமில்லை; உலகில் உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை.

அன்றிலிருந்து தோணி எனக்குக் கனவுப் பொருள் ஆகிவிட்டது. எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்து ஆகக் குறைந்தது ஒரு தோணியாவது சொந்தமாக வாங்கிக்கொள்ள வேண்டும். அதன்பின் மீன் பிடித்தால் சந்தையில் கொண்டுபோய் நம் இஷ்டத்திற்கு விற்கலாம். பொங்கலுக்குக் கரும்பும், பாலும், பச்சையரிசியும் சர்க்கரையும் வாங்கலாம்... முதலாளிக்குப் பிடித்த மீனையெல்லாம் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு திரும்பிவரத் தேவையில்லை.

* * *
 

நாட்கள் கடந்துவிட்டன. நான் பெரியவனாகிவிட்டேன். சொந்தத் தோணி இன்னமும் வெறுங்கனவாகவே இருந்து வந்தது. தகப்பனார் வாழ்ந்துவரும் அதே பாதையிற்றான் என் வாழ்வும் போய்க்கொண்டிருந்தது. இந்த வாழ்வில், எனக்கு நேரகாலத்தில் கல்யாணம் முடித்து வைத்துவிடவேண்டும் என்பதே அம்மாவின் ஆசை.
 

ஒருநாட் சாயந்திரம் ஓடைக்கரையில் இராட்டினத்தில் நூல் முறுக்கிக்கொண்டிருந்தேன். மேலே நீல நிறமான ஆகாயம் ஓடையின் தெளிந்த தண்­ரிலும் விழுந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஒடை முகத்துவாரத்தில் இருந்த மணல் தீவில் கடற்புட்கள் கூட்டம் கூட்டமாக வந்து விழுந்து கொண்டிருந்தன.
 

"தண்ணீ­ர் எடுத்துக்கொண்டு வருகிறேன்" என்று வீட்டுக்குப் போன அம்மாவை இன்னமும் காணவில்லை. எனக்குத் தாகமாயிருந்தது. வீட்டுப் பக்கம் திரும்பிப்பார்த்தேன். கனகம் செம்பிலே தண்ணீ­ர் எடுத்துக் கொண்டு வந்தாள்.

கனகம் எங்கள கிராமத்துப் பெண்தான். நீரின் இடைமட்டத்தில் ஆடும் பாசிக்கொடியைப்போல எப்போதும் மென்மையாக ஆடிக்கொண்டுதான் அவன் நடப்பாள். கற்பாரில் நிற்கும் செம்மீவனப போலச் செக்கச் செவேலென்று அழகாக இருப்பாள். வண்டலிலே மின்னும் கிளிஞ்சல்போல் இருக்கும் அவள் கண்களை இன்றைக்கு முழுவதுமே பார்த்துக் கொண்டிருக்கலாம்.
 

அவள் அருகால் வந்தபோது, "கொஞ்சம் தண்ணி தந்திட்டுப் போறியா?" என்று கேட்டேன் நான்.
 

கனகம் ஒன்றும் பேசாமல் என்னிடம் செம்பை நீட்டினாள்.
 

நான் தண்­ரைக் குடித்துக் கொண்டிருக்கும்போது, அம்மாவும் தண்ணீ­ர் எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். அம்மாவைக் கண்டதும், கனகம் ஏதோ செய்யத்தகாத காரியத்தைச் செய்தவள்போல வெட்கப்பட்டுக் கொண்டு போய்விட்டாள்.
 

அம்மா சொன்னாள்: "என்ன வெட்கமாம் அவளுக்கு. நாளைக்கு அவளைத்தானே நீ கல்யாணம் முடிக்கப் போகிறாய்?"

"போ அம்மா, எனக்கென்று ஒரு தோணி இல்லாமல் எனக்குக் கல்யாணமே வேண்டாம்" என்றேன் நான்.
 

"ஏண்டா! அவள் அப்பாவிடம் ஒரு தோணி சொந்தமாக இருக்கிறது. அதை உனக்கே கொடுத்து விடுவார் அவர்" என்றாள் அம்மா.
 

நான் யோசித்தேன். எனக்குக் கல்யாணத்திலோ கனகத்திடமோ அக்கறை இல்லாவிட்டாலும் தோணி கிடைக்கப் போகிறதே! தோணி மட்டும் கிடைத்து விட்டால் என் உழைப்பீன் பயனை நானே அனுபவிக்க முடியும். என் குடும்ப வாழ்வும் இன்பமாகவே இருக்கும்...
 

அதன் பிறகெல்லாம் நான் கனகத்துடன் தைரியமாக நெருங்கியே பழகினேன். மனோகரமான மாலை வேளைகளில், ஓடைக்கரையில் இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணி மூலையில் குந்திக்கொண்டு நானும் கனகமும் எவ்வளவோ கதைத்திருக்கிறோம்! கனகம் எப்பொழுதுமே தன் தோணியைப்பற்றிப் பெருமைப் பட்டுக்கொள்வாள். அந்தத் தோணி அவள் தகப்பனாரின் சொந்தமாக இருக்கிறபடியாற்றான் கனகம் நல்ல சேலை கட்டியிருக்கிறாளாம். கையில் தங்கக் காப்புப் போட்டிருக்கிறாளாம்!' அவள் என்றைக்குமே அப்படி இருக்க வேண்டும்' என்று என் மனதுள் எண்ணிக் கொள்வேன்.
 

ஆனால், இரண்டு வாரத்துள் அந்தத் துக்ககரமான செய்தி கிடைத்தது. கிராமமே பரபரப்படைந்தது. கனகத்தின் தந்தை மீன் பிடிக்கப் போனவர் புயலின் அகப்பட்டு மாண்டு போனார். தோணியும் திரும்பி வரவில்லை.....

என் இருதயத்தில் சம்மட்டியடி விழுந்ததுபோன்றிருந்தது எனக்கு. பாவம்! எனக்குத்தான் சொந்தத் தோணி இல்லையென்றாற் கனகத்திற்குக்கூடவா இல்லாமற் போகவேண்டும்?

இரண்டு மூன்று நாட்கள் கழித்துக் கனகம் கடற்கரைக்கு வந்தபோது அவளை நிமிர்ந்து பார்க்கவே என்னால் முடியவில்லை. அவன் கண்கள் கலங்கியிருந்தன. என்னைக் கண்டதும் அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது அவளுக்கு. விம்மி விம்மி அழத் தொடங்கினாள். என் மடியிற் தலையைப் புதைத்துக்கொண்டு. கனகம் என்னிடம் எதை எதிர்பார்த்தாள?
 

கனகத்தை மடியில் வைத்துக்கொண்டே நான் எண்ணினேன். என்னிடமோ தோணி கிடையாது. இந்த நிலையில் அவளை நான் சுகமாக வாழ்விக்க முடியாது.
 

என் தகப்பனாரப்போல நானும் தலை நரைக்கும் வரை உழைத்து, உழைத்துச் சாகவேண்டியதுதான். என்னோடு சேர்ந்து கனகமும் ஏன் சாகவேண்டும்? பாவம் கனகம்...
 

எனவே கனகத்தை யாராவது சொந்தத் தோணியுள்ள ஒருவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும். என் கண் முன்னால் அவள் அழகான சேலையும், தங்கக் காப்பும் அணிந்துகொண்டு என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழவேண்டும். அவள் வாழ்வுதான் எனக்கும் ஆனந்தம்...
 

நான் எண்ணியது சரியாகப் போய்விட்டது. அமாவாசையன்றிரவு, புங்கை மரத்தின்கீழே இருந்த வைரவர் கோவிலடியில் கனகத்துக்கும் செல்லனுக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்தன்று பேசிப் பார்க்கவோ எனக்குக் கண்ணீ­ர் வந்துவிட்டது. என் கையில் இருந்த அரும்பொருள் இன்னொருவனுக்குப் போய் விட்டது... ஆனாலும், என் கண் முன்னால் அவள் ஆனந்தமாகவே வாழ்வாள். செல்லனிடம் ஒரு தோணி இருக்கிறது. அவன் என்னைப் போலக் கடன்காரனல்ல, செல்லனோடு கனகம் என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழட்டும். எனக்கென்று தோணி ஒன்று கிடையாமல் நான் எந்தப் பெண்ணின் வாழ்வையும் பாழாக்கப் போவதில்லை...
 

ஆனால், இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கின்றது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பந்தான், எப்போதாவது ஒரு நாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல, என் நண்பர்கள் எல்லாருக்குமே சொந்தத் தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்கும். அந்த மீன்களை விற்றுச் சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும் பணமும் என்னைப்போன்ற உழைப்பாளியான ஒருவனுக்கு நேரடியாகக் கிடைக்கும்! அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?
 

ஈழகேசரி (1954)


நன்றி- சுருதி வலைப்பக்கம்

கற்பு - வரதர் -எனக்குப் பிடித்த சிறுகதைகள்( இலங்கை)

கற்பு 

வரதர் 

மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டில் முன்விறாந்தையில் மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றிவந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.


''மாஸ்டர், நீங்கள் 'கலைச்செல்வி'யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?'' என்று கேட்டார் ஐயர்.

''ஓமோம், ஆரப்பத்திலிருந்தே 'பார்த்து' வருகிறேன். ஆனால் எல்லா விடயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன் என்ன விசேஷம்?''

''கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை....''

''யார் எழுதியது?''

''எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.''

''சொல்லுங்கள். நினைவு வருகிறதா பார்க்கலாம்?''''மூன்றாம் வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டதல்லவா? அந்தச் சூழ்நிலையை வைத்துக் கதை எழுதப்பட்டிருக்கிறது. குளக்கட்டை உடைத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகிறது. சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகின்றார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரனின் வீட்டுக்கு 'மேல் வீடு'ம் இருக்கின்றது. அங்கே அவன் தனியாக இருக்கிறான். வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் - இளம் பெண் - அந்த மேல் வீட்டுக்குச் செல்கிறாள், பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல்கிறான். அவள் இசையவில்லை. அவன் பலாத்காரம் செய்தேனும் அவளை அடைந்துவிடத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள்.... இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கீர்கள் மாஸ்டர்?''

''என்ன நினைக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த 'கருத்து'த் தான். கதையை அமைத்த முறையிலும், வசன நடையின் துடிப்பிலும் தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை படித்தால் தான் அதைப் பற்றிச் சொல்லலாம்.''

''நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாதச் சொன்னீர்களே. அந்தக் கருத்தைப் பற்றித்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்.''

''எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப்பற்றியா?''

''ஓமோம், அதையே தான்''

''ஒரு பெண்ணின் - முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அதில்தானே இருக்கிறது. மானம் அழிந்தபின் 'வாழாமை இனிதென்பதல்லவா தமிழின் கொள்கை?'''

ஐயர் பெருமூச்சு விட்டார். பிறகு, ''நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா?'' என்று கேட்டார்.
மூர்த்திமாஸ்டர் திகைத்தார். நான் என்ன தவறுதலாகச் சொல்லிவிட்டேன்? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்?

ஒரு நிமிஷநேரம் மௌனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்து விட்டவர் போல கணபதி ஐயரே மீண்டும் மௌனத்தைக் கலைத்தார்.

'மாஸ்டர், எனக்கும் என் மனைவிக்கும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்கு சொல்லப் போகிறேன். உங்களுக்கு சொல்லலாம். சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்ட பிறகு 'கற்பு' பிரச்சனையைப் பற்றிப் பேசுவோம்.
w

போன வருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குப் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர் கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களில் இருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர் கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்.

சிங்களவர் - தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடி வந்து விட்டார்கள். நான் பூசையை விட்டு விட்டு எப்படிப்போக முடியும்? என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டும் என்று அவள் மறுத்து விட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிட வரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். எங்களுக்கும் ஆபத்து நேராது என்ற துணிவில், அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டு விட்டேன்.

ஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி – அவள் எங்களோடு நன்கு பழகியவள் - கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் - அவள் சொன்னாள் - 'நீங்கள் இனி இங்கேயிருப்பது புத்தியில்லை ஐயா. காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். இன்றிரவோ நாளையோ இந்தப் பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்' – என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட பிறகு, 'அப்பனே முருகா! என்னை மன்னித்துக்கொள்' மனதுக்குள் வேண்டிக் கொண்டு கையோடு கொண்டுபோகக் கூடிய பொருட்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகைகளையும் - நூலில் கட்டிய தாலி ஒன்றைத் தவிர – எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்து மணியாகிவிட்டது. பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். 'ஐயா, ஐயா சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறாங்கள். அம்மாவை அவர்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளித்திருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் 'நேற்றே ஊருக்குப் போய்விட்டா' என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து, உங்களுக்கும் ஆபத்து' கவனம் ஐயா' – என்று சொல்லிவிட்டு பேபிநானோ ஓடி மறைந்து விட்டாள்.

சில்வாவை எனக்குத் தெரியும், ஆள் ஒருமாதிரி 'ஐயா ஐயா, என்று நாய் மாதிரிக் குழைந்து ஐப்பது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கி இருக்கிறான். ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனைவியை றோட்டில் தனியாகக் கண்டபோது அவனுடைய பார்வையும், சிரிப்பும் நன்றாக இருக்கவில்லை என்று அவள் சொல்வதுண்டு.

இப்போது அவன் வருகிறானென்றால் எனக்கு ஒரு கணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேரமில்லை. வீட்டுக்குள் உயரத்தில் பரண் மாதிரி மூன்று மரங்களைப் போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தோம். என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின் மேல்விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும்படி விட்டேன். பின் எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு முன் விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர, அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள்மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, 'என்ன சில்வா, இந்தப் பக்கம்?' என்று சிரிக்க முயன்றேன்.

''சும்மாதான், நீங்கள் இருக்கிறீகளா இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக் கம்பி நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்'' என்றான்.

''முருகனை விட்டு நான் எங்கே தான் போக முடியும்?'' என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.

'எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும்.' என்றான் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக் கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.'

''அது சரி ஐயா, எங்கே அம்மாவைக் காணவில்லை.''

நான் திரும்பித் திரும்பி மனதிற்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங்களை ஒப்புவித்தேன். 'அவ நேற்றே ஊருக்குப் போய் விட்டாவே.' 'பளீர்' என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறிற்று. என் கண்களுக்குப் பார்வை வரு முன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான். மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.

தமிழ்பண்டி, பொய்யா சொல்லுகிறாய்? இன்று காலையில் கூட உன் பொண்டாட்டியைப் பார்த்தேனே!'
மற்றவன் கேட்டான்: 'சொல்லடா! அவளை யார் வீட்டில் கொண்டுபோய் ஒளித்து வைத்திருக்கிறாய்?' –எனக்கு நெஞ்சில் கொஞ்சம் தண்ணீர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை வேறு யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்து விட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்க மாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி, அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன். 

''என்னடா பேசாமல் நிற்கிறாய்?''

குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை!

நான் இயக்கமின்றிக் கிழே விழுந்து விட்டேன். அம்மட்டிலும் அவர்கள் விடவில்லை. இரண்டு பேர் என்னைப் பிடித்து தூக்கினார்கள்.

''அவள் இருக்கிற இடத்தை நீ சொல்லமாட்டாய்? கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டு போய்க் கொடுத்தால் உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்திச் சுடுவான்கள். உனக்கு அது தான் சரி! வாடா!'' என்று சொல்லி இழுத்தார்கள். என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக்கொண்டு நடு வீட்டுக்கு வந்து விட்டார்கள். மேலே என் மனைவி.... அந்த அறையையும் கடந்து வெளியே காலை வைத்து விட்டார்கள். 

''நில்லுங்கள்! நில்லுங்கள்!'' என்ற கூச்சலோடு என் மனைவி பரணிலிருந்து குதித்தாள்.

''அவரை விட்டு விடுங்கள்!'' என்று அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.

அவர்கள் என்னை விட்டு விட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.

பிறகு....

என்னை ஒரு மேசையின் காலோடு பின் கட்டாகக் கட்டினார்கள். அவளை – என் மனைவியை குசினிப் பக்கம் இழுத்துக் கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்களில் அவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நான் தான் இரத்தம் கொதித்து மூளை கலங்கி, வெறி பிடித்து, மயங்கி விட்டேனோ?

மறுபடி எனக்கு நினைவு வரும் பொழுது அதே மேசையடியில் அவ்விதம் ஒருவருடைய மடியில் படுத்திருப்பதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடிமீது வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல். கண்களைத் திறந்து பார்த்தேன்.

என் மனைவி.

மானம் அழிந்த என் மனைவி...

எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன 'கருந்து' என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவியின் மடிமீது தலை வைத்துப்படுத்திருக்கிறேன்.... என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்து விடவேண்டுமென்று மனம் உன்னிற்று.

என் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணீர். இன்னொன்று இன்னொன்று என் முகம் அவள் கண்ணீரால் நனைய, மனமும் சிந்திக்கத் தொடங்கியது.

மூன்று விஷப்பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறுஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யாரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாத போது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால் பிரசவத்திற்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம்....

என் மனதில் எழுந்த அருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர வீசினேன். பரிதாபப்படவேண்டிய, பாராட்டப்பட வேண்டிய என் மனைவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

பிறகு பொலிஸ் வந்தது. பேபி நோனா தான் அந்த உதவியைச் செய்தாளென்று பின்னால் தெரிந்து கொண்டேன். என்னவோ கஷ்டங்களெல்லாம் பட்டு, அகதி முகாமில் கிடந்துழன்று எப்படியோ இங்கு வந்து சேர்ந்தோம். 

w

''இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்து விடுமா? அதற்காக அவள் உயிரையும் அழித்து விடவேண்டுமா...? அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறியவள் அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித் தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்திற்குப் பலியான பேதையா?.... சொல்லுங்கள் மாஸ்டர்....!''

கணபதி ஐயர் உணர்ச்சி மேலீட்டினால் பொருமினார்.

''என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா! இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்தத்தில் ஊறிப்போன பல விஷயங்களைப் பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டு விடுகிறோம். நான் கூட எவ்வளவு முட்டாள் தனமாக அபிப்பிராயம் சொல்லிவிட்டேன்... ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் வாய்வீச்சு வீசுகின்ற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான பகுத்தறிவு வாதியை இன்றைக்குக் கண்டு பிடித்து விட்டேன்'' என்று சொன்னார் மூர்த்தி மாஸ்ரர். ஐயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மா காந்தியின் படம் - அதிலே ஐயரின் சாடை தெரிவது போலத் தோன்றிற்று மூர்த்தி மாஸ்டருக்கு. 

நன்றி- சுருதி வலைப்பக்கம்