Saturday, 25 April 2020

கதை சொல்லிகளின் கதை

ச தமிழ்ச்செல்வன் எழுதி விகடன்.காம் இல் வெளியான கட்டுரைகள்

வ.வே.சு.ஐயர்... தமிழின் முதல் சிறுகதை சொல்லி! கதை சொல்லிகளின் கதை பாகம் -1

பார்க்கப்போனால் நான் மரம்தான். ஆனால், என் மனதில் உள்ளதையெல்லாம் சொல்வதானால், இன்றைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுசுக்குள் கண்களால் எவ்வளவு பார்த்திருக்கிறேன். காதுகளால் எவ்வளவு கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்களால் பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதில் எள்ளளவும் பொய்யில்லை' எனத் தொடங்கும் வ.வே.சு. ஐயரின் `குளத்தங்கரை அரசமரம்' கதைதான், தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றைத் தொடங்கிவைத்த முதல் சிறுகதை.
ஐயருக்கு முன்னர் அச்சில் கதை சொன்னவர்களாக பரமார்த்தகுரு கதை சொன்ன வீரமாமுனிவரும், குசிகர் குட்டிக்கதைகள் சொன்ன அ.மாதவய்யாவும், சிறிய கதைகள் சொன்ன பாரதியும் இருக்கிறார்கள்தான். என்றாலும் `சிறுகதை' என அறியப்படும் வடிவத்தில் கதையைச் சொன்னவர் வ.வே.சு ஐயர்தான்.
சொல்கதைகள், பழங்கதைகள்தொன்மக்கதைகள், பாட்டி சொன்ன கதைகள், விடுகதைகள், நெடுங்கதைகள், குட்டிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள், மரியாதைராமன் கதைகள், ஆயிரத்தோர் இரவுக்கதைகள் என, விதவிதமான வடிவங்களில் மனிதச் சமூகம் காலம்காலமாகக் கதை சொல்லிவந்திருக்கிறது.
புதுமைப்பித்தன் சொன்னதுபோல சிறுகதை என்பது, தற்காலத்தில் எழுந்த மேல்நாட்டுச் சரக்கு.  சிறுகதை என்றால் சிறிய கதை, கொஞ்சப் பக்கங்களில் முடிந்துவிடுவது என்பதல்ல. ஒரு சிறு சம்பவம், ஒரு மனோநிலை என ஒரு பொருள் பற்றி எழுதுவது. சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரங்கள்.
அமெரிக்கச் சிறுகதைகளின் முன்னோடியான எட்கர் ஆலன்போ, சிறுகதைக்கான இலக்கணமாக சிலவற்றைச் சொல்லிச்சென்றார். அதில் ஒன்று, சிறுகதை என்பது ஒரே அமர்வில் வாசித்து முடிப்பதாக இருக்க வேண்டும். முதல் வரியிலேயே கதை ஆரம்பமாகிவிட வேண்டும். ஒரு பொருள் பற்றியதாகவோ, ஒரு மனோநிலை பற்றியதாகவோ ஒருமைகொண்டதாக அமைய வேண்டும்.
இந்த வகையில் பார்க்கும்போது வ.வே.சு. ஐயரின் சிறுகதைகளே முன்னத்தி ஏராக நிற்கின்றன. மங்கையற்கரசியின் காதல்', `காங்கேயன்', `கமல விஜயம்', `ழேன் ழக்கே', `குளத்தங்கரை அரசமரம்' ஆகிய ஐந்து சிறுகதைகளைத் தொகுத்து `மங்கையற்கரசியின் காதல்' என்ற சிறுகதைத் தொகுப்பை கம்ப நிலையம் சார்பில் அவரே வெளியிட்டார். இதுவே தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்த ஐந்து கதைகளிலும் `குளத்தங்கரை அரசமரம்', `கமலவிஜயம்' இரண்டும்தான் சமகால வாழ்வைப் பற்றிய கதைகள்.
ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சிக்குப் பிறகு உருவான அவசர வாழ்க்கை, தனக்கான வடிவமாகப் படைத்துக்கொண்டதே சிறுகதை. நீண்ட நேரம் அமர்ந்து வாசிக்க வாய்ப்பின்றி ஓடும் வாழ்க்கையில், போகிறபோக்கில் வாசித்துவிடக்கூடியதாக சிறுகதைகள் பிறப்பெடுத்தன. இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்துக்கொண்டிருந்த நாளில்தான் சிறுகதை பிறந்தது.
ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற `வாஞ்சி ஐயர்' என்றழைக்கப்பட்ட சங்கர ஐயருக்கு, துப்பாக்கிச் சுடுவதற்கு புதுச்சேரியில் பயிற்சியளித்த, தீவிர அரசியலில் நிலைகொண்டிருந்த வ.வே.சு. ஐயர் வழியேதான் சிறுகதை நம் ஊருக்கு வந்து சேர்ந்தது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும் இலக்கிய விமர்சகருமான என்.ஆர்.தாசன் குறிப்பிடும்போது...
இவரது தீவிர சுதந்திர இயக்க ஈடுபாடே இலக்கிய முயற்சிக்கும் இலக்கிய நோக்குக்கும் உத்வேகமாகி நின்றன என்று நாம் யூகிக்கலாம். சுதந்திர இயக்கம் என்பது, அரசியல் அளவில் நின்றுவிடுவதில்லை அல்லவா. கலாசார இலக்கிய எல்லைகளையும் தீண்டக்கூடியதுதானே! அடிமைப்பட்ட தேசம் ஆதிக்க தேசத்தை எதிர்க்கும் அதே நேரத்தில், அதன் உன்னதங்களையும் சுவீகரித்துக்கொண்டு அதற்குமேல் நிற்கவும், இல்லாவிட்டால் அதற்குச் சமமாக நிற்க முயல்வதும் இயற்கை. அடிமைப்பட்ட தேசத்தின் தவிர்க்க முடியாத தவிப்பு இதுஎன்று குறிப்பிட்டார்.
இப்படி சுவீகரித்துக்கொள்ளத்தக்க திறன் வ.வே.சு. ஐயருக்கு வாய்த்திட, அவர் பெற்றிருந்த கல்வியும் ஒரு காரணம். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானிய வசன இலக்கியங்களில் அவருக்கு ஈடுபாடும் பரிச்சயமும் இருந்தன.

வ.வே.சு.ஐயர் திருச்சிக்கு அருகில் வரகனேரியில் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) பிறந்த அவர், தன் 16-வது வயதில் பி.ஏ பட்டத் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார். பிறகு, சென்னைக்குச் சென்று வழக்குரைஞர் தேர்வில் முதல் பிரிவில் தேர்வுபெற்று, சென்னை மாநகர் மாவட்ட நீதிமன்றத்தில் முதல்வகுப்பு வழக்குரைஞராகச் சேர்ந்து பணியாற்றினார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமைபெற்றவர் வ.வே.சு. ஐயர். 19-வது வயதில் திருச்சிக்கு வந்து, வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
இதற்கிடையே இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பவர், வ.வே.சு. ஐயரை லண்டனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயிலவைக்கத் திட்டமிட்டார். அதன்படி 1907-ம் ஆண்டில் வ.வே.சு. ஐயர் ரங்கூன் வழியாக லண்டன் சென்றார். அங்கு அவர் இந்தியா ஹவுஸில் தங்கினார்.
பாரிஸ்டர் பட்டம் பெற வந்த வ.வே.சு.ஐயரை, சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது இந்தியா ஹவுஸ். இங்கு  அவர் அடிக்கடி சென்றபோது, தீவிர தேசிய இயக்கவாதியான ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, டி.எஸ்.எஸ்.ராஜன், வீர சாவர்க்கர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. இவர்களின் நட்பால், இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கிவந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சு. ஐயர் உறுப்பினராகச் சேர்ந்தார். அங்கு இருந்த மற்ற விடுதலைப் போராட்ட வீரர்களான விபின் சந்த்ரபால், லாலா ஹரிதயாள், மேடம் காமா ஆகியோருடன் ஒன்றிப் பழகினார்.
இவர் லண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் `இந்தியா' பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் வகையில் கட்டுரைகளை எழுதி அனுப்பினார்... என்று நீளும் அவரது வாழ்க்கை வரலாறு, விறுவிறுப்பான பக்கங்களைக்கொண்டது. இந்தப் பரந்த அனுபவமும் ஞானமும்தான் அவர் சிறுகதைக்கு வந்துசேர உதவின எனலாம்.
அவரது மறைவுக்குப் பிறகு, இன்னும் மூன்று கதைகளைச் சேர்த்து எட்டுக் கதைகள்கொண்ட தொகுப்பாக `மங்கையற்கரசியின் காதல்' என்ற சிறுகதைத் தொகுப்பை அவரது துணைவியார் பாக்கியலட்சுமி வெளியிட்டார். அந்தத் தொகுப்புக்கு முகவுரை வழங்கிய ராஜாஜி `இந்தக் கதைகளை ஒருவன் முழுவதுமாகப் படித்து, புத்தகத்தைக் கீழே வைக்கும் காலத்தில், அவன் மனதில் பரிசுத்தமான உணர்ச்சிகளும் உன்னதமான எண்ணங்களும் ததும்பும்' என்று எழுதினார்.
தன்னுடைய கதைகளுக்கு முன்னுரைபோல `சூசிகை' என்ற ஒன்றை ஒவ்வொரு கதைக்கு முன்னாலும் வ.வே.சு ஐயர் எழுதியுள்ளார். இது கதைக்குள் போக விரும்பும் வாசகனுக்கு வழிமறிச்சானாகத்தான் நிற்கின்றன. பிற்கால எழுத்தாளர்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து வெளியேறினார்கள். இது இடைஞ்சல் என்பதை அறிந்தேதான் சூசிகைகளை எழுதியுள்ளார் வ.வே.சு ஐயர். அதுபற்றி அவரே குறிப்பிடுகிறார், “இவற்றின் தலைப்பில் எழுதியிருக்கும் சூசிகைகளைப் படிக்காமல், கதைகளைப் படித்தால் சுவை அதிகமாகத் தெரியும். ஆனால், ரீதி புதிது என்பதால் சிலருக்குப் புரியாமல்போனாலும் போகலாம் என்று சூசிகையைச் சேர்த்திருக்கிறேன்.
தமிழில் சிறுகதை பிறப்பதற்கு முன்பே நாவல் வந்து சேர்ந்துவிட்டது. நாவல் வாசிப்பு நிலைபெற, அன்று உருவாகியிருந்த ஆபீஸ் உத்தியோகம் - குறிப்பிட்ட கால அளவு வேலைநேரம், ஓய்வுநேரம் மற்றும் வார விடுமுறை, ஆங்கிலக் கல்வி, மெக்காலே கல்விப் பரவலாக்கம் போன்றவை எப்படிக் காரணிகளாக அமைந்தன என்ற ஆய்வை வரலாற்று அறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதி தன்னுடைய `நாவலும் வாசிப்பும்' என்ற நூலில் விளக்கியுள்ளார்.
நாவல் வாசிப்பு உருவாக்கிவைத்திருந்த மௌன வாசிப்பாளர்கள், சிறுகதையும் இயல்பாக வாசிக்க வந்தார்கள் எனக்கொள்ளலாம். இந்த மௌன வாசிப்புக்குள் வந்தவர்களில் பெரும்பாலானோர், உயர் சாதிகளைச் சேர்ந்த நடுத்தரவர்க்கத்தினர் என்பதால் கதைகளும் அவர்களைப் பற்றியதாகவே அன்று வந்தன. கல்வி பரவலாகப் பரவலாகத்தான் சாதி அடுக்கின் கீழ்நிலைகளில் வைக்கப்பட்டிருந்தோரும் மௌன வாசிப்புப் பண்பாட்டுக்கும் நாவல், சிறுகதை வாசிப்புக்கும் வந்தனர். அதன்படி 1960-களிலும் 1980-களிலும் பிற்பட்ட சாதியரும் தாழ்த்தப்பட்ட சாதியரும் தமிழ் நாவல்களிலும் சிறுகதைகளிலும் கதாபாத்திரங்களாக வரத்தொடங்கினர் என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணியில்தான் `குளத்தங்கரை அரசமரம்' என்ற தமிழின் முதல் சிறுகதையை வாசிக்க வேண்டும்.
`சிறுவயதில் திருமணமான ருக்குமணியும் நாகராஜனும் சாந்திமுகூர்த்தத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் பேங்க் திவாலானதால் ருக்குமணியின் தகப்பனார் காமேஸ்வர ஐயர் செல்வத்தை இழக்கிறார். இதன் காரணமாக, நாகராஜனின் தகப்பனார் தன் மகனுக்கு வசதியான வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். நாகராஜன் இதை விரும்பாவிட்டாலும் தாலி கட்டும்போது மறுத்து, தகப்பனாரின் மூக்கறுக்கத் திட்டமிடுகிறான். இந்தத் தந்திரத் திட்டத்தை அறியாத ருக்குமணி, தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக மனம் உடைந்து குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள்.
நாகராஜனோ இனிமேல் எனக்கென்ன இருக்கிறது. ருக்குமணி, நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சந்நியாசம் வாங்கிக்கொள்கிறேன்!'' என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முன், தான் உடுத்தியிருந்த வேட்டியையும் உத்திரீயத்தையும் அப்படியே தாராகக் கிழித்துவிட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதிலிருந்து சுதாரிச்சுக்கொள்வதற்குள் அவர்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரியாகப் புறப்பட்டுப் போய்விடுகிறான். இப்படி முடிந்தது என் ருக்குமணியின் கதை!
என் அருமைக் குழந்தைகளே! பெண்களின் மனம் நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது, இனிமேல் இந்தக் கதையை நினைத்துக்கொள்ளுங்கள். பெண்ணாகப் பிறந்தவர்களின் மனதை விளையாட்டுக்குக்கூடக் கசக்க வேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்குக் கொண்டுவந்துவிடும் என யாரால் சொல்ல முடியும்' என்று அந்தக் குளத்தங்கரை அரசமரம், கதையை நமக்குச் சொல்லி முடிக்கிறது. ரீதி மட்டும் புதிதல்ல அன்று வழக்கிலிருந்த குழந்தைத் திருமணத்துக்கு எதிராகப் பிரசாரமின்றிப் பேசும் உள்ளடக்கத்தோடும் இந்தக் கதை அமைந்ததால் எல்லோரும் கொண்டாடும் கதையாக, பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ள இன்றைக்கும் இது பேசப்படுகிறது.
சமகால வாழ்வைப் பேசும் கதை எனச் சொல்வதற்கு, இன்னோர் அம்சமும் இந்தக் கதைக்குள் இருக்கிறது. பேங்க் திவாலானதால் காமேஸ்வர ஐயர் செல்வத்தை இழப்பதாகக் கதையில் வருகிறதல்லவா. இந்த பேங்க் திவால் என்பது, 1920-களில் அடிக்கடி நடந்தது. அன்று எல்லாமே வெள்ளைக்காரர்களின் தனியார் வங்கிகள்தாம். திவாலாகிவிட்டது எனச் சொல்லி, பணம் போட்ட இந்திய மக்களுக்குப் பட்டைநாமம் போடுவது அன்றைய வங்கிகளின் நடைமுறை தந்திரமாக இருந்தது. இதைத்தான் `பொழுதெல்லாம் எமது செல்வம் கொள்ளை கொண்டுபோவதோ' - தன் பாடலில் பதிவுசெய்தான் என்று, பாரதி ஆய்வாளரான தொ.மு.சி.ரகுநாதன் குறிப்பிடுவார். பாரதி பாடலில் பதிவுசெய்த அன்றைய சமகால வங்கி திவாலை, வ.வே.சு. ஐயர் இந்தக் கதையில் பதிவுசெய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
வ.வே.சு ஐயர் பிறகு காந்திஜியின்பால் ஈர்க்கப்பட்டு, தீவிரவாதத்தைக் கைவிட்டு காந்தி சொன்ன தேசியக் கல்விப்பணிக்காக சேரன்மாதேவியில் குருகுலத்தையும் பரத்வாஜ ஆசிரமத்தையும் உருவாக்கி நடத்தினார். அங்கே பிராமணக் குழந்தைகளுக்குத் தனிப் பந்தியில் உணவு பரிமாறப்பட்டதை முன்வைத்து எழுந்த பிரச்னையால் காங்கிரஸுக்குள் ஏற்கெனவே இருந்த பிராமணர் - பிராமணர் அல்லாதோர் அரசியல் இன்னும் கூர்மைப்பட்டதும், காங்கிரஸைவிட்டு பெரியார் வெளியேறி சுயமரியாதை இயக்கம் குறித்த விரிவான ஆய்வையும் `சேரன்மாதேவி' நூலில் (காலச்சுவடு பதிப்பகம்) பதிவுசெய்துள்ளார் பழ.அதியமான். ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம்.
குருகுலக் குழந்தைகளை, பள்ளிக்கு வெளியே சுற்றுலாவாக அழைத்துச் செல்வதை கல்வியின் ஒரு பாகமாக வைத்திருந்தார்கள். அப்படியான ஒரு பாபநாசம் யாத்திரையின்போது, பாபநாசம் பாணதீர்த்த அருவியிலிருந்து தண்ணீருக்குள் தவறி விழுந்த வ.வே.சு. ஐயரின் மகள் சுபத்ராவைக் காப்பாற்ற நீருக்குள் குதித்த ஐயர், சுழலில் சிக்கி காலமானார். 1925 ஜூன் 4-ம் நாள் அவர் மறைந்தார்.
தமிழின் முதல் சிறுகதை சொல்லியின் கதை, இவ்விதம் அகாலத்தில் துக்ககரமாக முடிந்தது.

தொடர்வோம்...

No comments:

Post a Comment