என் செல்வராஜ்
பின்நகர்ந்த காலம் என்ற நூலின்
இரண்டாம் பாகம் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் முதல்
பாகம் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. முதல் பாகத்தில்
வண்ணநிலவன் துக்ளக்கில் வேலைக்கு சேரும்வரை எழுதி இருக்கிறார். இரண்டாம் பாகம் அதற்குப்பின்னான அவரது வாழ்க்கையையும், அவர் பயணித்த இலக்கியத்தையும் குறிப்பிடுகிறது.அவர் துக்ளக்கில்
சேர்ந்தபோது நாட்டில் எமர்ஜென்ஸி அமலில் இருந்தது.முரசொலி,துக்ளக் இரு பத்திரிக்கைகளுக்கும் சென்ஸார் இருந்தது என்று குறிப்பிடும் வண்ணநிலவன்
துக்ளக்கில் ஃப்ரூப் ரீடராக இருந்திருக்கிறார்.ஆனாலும் சோ அவரை
எல்லா டிஸ்கஷனிலும் சேர்த்துக்கொள்வார்.
சினிமா இயக்குநர் மகேந்திரன் துக்ளக்கில் சிறிது காலம்
பணிபுரிந்தார்.அப்போது போஸ்ட்மார்ட்டம்
என்ற தலைப்பில் சினிமா விமர்சனங்கள் துக்ளக்கில் வெளிவந்தன. வண்ணநிலவன்
சேர்ந்தபின் அவருடைய சினிமா ஆர்வத்தையும், அவரின் சினிமா நண்பர்கள்
ருத்ரையா,ஜெயபாரதி
ஆகியவர்களுடனான நட்பையும் கண்ட சோ மீண்டும் போஸ்ட்மார்ட்டம் பகுதியை துவக்கினார்.அந்த பகுதியை டாக்டர் என்ற பெயரில் வண்ணநிலவன் எழுதி வந்தார்.துக்ளக் பத்திரிகையில் வெளிவரும் சினிமா விமர்சனங்களை சம்பந்தப்பட்ட இயக்குநருக்கே
அனுப்பி பதிலைப்பெற்று அதை பிரசுரிக்கும் வழக்கம் துக்ளக்கில் இருந்தது.
துக்ளக் சினிமா விமர்சனங்களில்
பாராட்டப்பட்ட படங்கள் 16 வயதினிலே, முள்ளும்
மலரும், உதிரிப்பூக்கள், சில நேரங்களில்
சில மனிதர்கள் ஆகியவை ஆகும். அனந்தகிருஷ்ணன் என்ற அனந்த் துக்ளக்
இதழில் "வாழ்ந்து காட்டுகிறார்கள் " என்ற தொடர்கட்டுரைகளை எழுதினார்.அது நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் பத்திரிக்கைகளிலேயே துக்ளக் தான் முதல் முதலாக 1976-77ல் எழுத்தாளர்களையும் பத்திரிக்கை ஆசிரியர்களையும் பேட்டி கண்டு எழுதியது.தமிழ் பத்திரிகை ஆசிரியர்களான மணியன்(இதயம் பேசுகிறது),
கி ராஜேந்திரன் (கல்கி) எழுத்தாளர்களான
வல்லிக்கண்ணன், லக்ஷ்மி, சுஜாதா,
சாண்டில்யன்சிவசங்கரி, இந்துமதி ஆகியோரின் பேட்டிகளை
வெளியிட்டது.
ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவிலிருந்து சாவி வெளியேறி தினமணிகதிர் என்ற வார
இதழின் ஆசிரியர் ஆனார். 50 களில் வெளிவந்து நின்றுவிட்ட வார இதழ்
அது.சாவி தினமணி கதிரில் தி ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியோரை சிறுகதைகளும் தொடரும் எழுதவைத்தார். ஒரு லட்சம் பிரதிகளை விற்றுக்காட்டுவதாக சாவி தினமணி கதிர் நிர்வாகத்திடம்
கூறியிருந்தார். ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா
தங்கதுரை என்ற பெயரில் பம்பாய் சிவப்பு விளக்கு பகுதி பெண்களைப் பற்றி தினமணி கதிரில்
எழுத ஆரம்பித்ததும் தினமணி கதிர் ஒரு லட்சம் பிரதியை தாண்டி விற்றது.இதைப்பார்த்த ஆனந்தவிகடன், பிரேமா ராமசாமி என்ற பெயரில்
வாராவாரம் ஆபாசக்கதைகளை பிரசுரித்தது.1977ல் ஆனந்த விகடனை விட்டு
வெளியேறிய இதயம் பேசுகிறது என்ற பயணத்தொடர் எழுதிய மணியன் " இதயம் பேசுகிறது
"என்ற பெயரில் ஒரு வார இதழை ஆரம்பித்தார். தினமணி கதிரிலிருந்த சாவியை கருணாநிதியும் முரசொலிமாறனும் அழைத்து வந்து
"குங்குமம்" என்ற வார இதழை துவக்கி அதன் பொறுப்பை சாவியிடம் ஒப்படைத்தனர்.
வண்ணநிலவனின்
நண்பர் ஒரு இயக்குனர். அந்த நண்பர்
சசி என்ற பெண்ணை விரும்பினார்.அவளுடைய பள்ளித்தோழனை அவளால் தவிர்க்க
முடியவில்லை அவனுடனான நட்பு தொடர்ந்தது.நண்பரோ சசி அந்த தோழனுடைய
உறவை துண்டிக்காவிட்டால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனச் சொல்லிவிட்டார்."அந்த பையன் சாதாரணமாகத்தானே பழகுகிறான்,அவனை ஏன் தவிர்க்கவேண்டும்
'என்றாள் சசி. திருமணத்துக்குப் பிறகு அந்த உறவு
தங்கள் உறவை கெடுத்துவிடும் என்று இயக்குனர் நினைத்தார். அதற்கு
சசி ஒப்புக்கொள்ளவில்லை.அந்த சசியின் கதையைத்தான் ருத்ரையா
" அவள் அப்படித்தான் " என்ற படமாக எடுத்தார்.
அந்த படத்துக்கு திரைக்கதை வசனத்தில் 50 சதவிகிதம்
தான் தன்னுடை பங்கு என்கிறார்
வண்ணநிலவன்.
டால்ஸ்டாய், தாஸ்தயேவஸ்கி போன்றவர்களை இலக்கிய மேதைகளாக
இவ்வுலகம் கருதுகிறது. ஆனால் அவர்களது படைப்பின் அடிநாதம் சோகமே.ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இது தான்
இருக்கிறது. தற்கால நவீன இலக்கியங்களும் இந்த சோக அடிச்சுவட்டைத்தான்
பின்பற்றி எழுதப்படுகின்றன.புதுமைப்பித்தனின் சில சிறுகதைகளில்
கேலியும் குத்தலும் உள்ளது என்றாலும் அவர் இலக்கியவாதியாகத்தான் மதிப்பிடப்படுகிறார்.
ஏனென்றால் அவர் இந்த வாழ்க்கைய விமர்சன நோக்குடன்தான் அணுகுகிறார்.
ஆதம்பாக்கத்தில் தங்கியிருந்தபோதுதான் வண்ணநிலவன் கம்பாநதி நாவலை எழுதினார்.
அதை எழுதி முடிக்க ஆறேழு மாதங்கள் ஆனது. பின் நாவலை
நர்மதா ராமலிங்கத்திடம் கொடுத்தார். நர்மதா பதிப்பகம் அந்த நாவலை
வெளியிட்டது.வண்ணநிலவனின் நண்பர்கள் வெளியிட்ட முதல் சிறுகதை தொகுப்பு எஸ்தர், அவரின் நாவல்களான் கம்பாநதி,
கடல்புரத்தில் ஆகியவை
எந்த விளம்பரமும் இல்லாமல் வெளிவந்தன.வாய்மொழியாகவே
அவை இலக்கிய உலகில் அறியப்பட்டன.வண்ண்நிலவன் சி சு செல்லப்பாவைத்தான்
நவீன இலக்கியத்தின் சரியான விமர்சகர் என்கிறார்.க நா சு ரசனை
அடிப்படையில் கருத்துக்களை சொன்னவர் என்கிறார்.
தெ.சண்முகம் "உதயம்" என்ற
இலக்கிய பத்திரிக்கையை நடத்தி வந்தார்.செம்மலர் மாதிரி அதிகம்
பிரச்சாரத்தன்மை இல்லாத பத்திரிக்கை "உதயம்".
முற்போக்கு முகாம் எழுத்தாளராக இருந்த போதும் கலாபூர்வமாக எழுதியவர்
ஆர் ராஜேந்திரசோழன். பூமணியையும் இதில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.எழுத்து, நடை,கசடதபற,யாத்ரா போன்ற சிற்றிதழ்கள் இலக்கியத்தில் கலையை வலியுறுத்தின.தீபமும் கணையாழியும் கூட.தமிழ்நாட்டில் முதன்முதலாக மாத
நாவல் என்ற வகைமயை ஆரம்பித்து
வைத்தது தினத்தந்தி நிறுவனம். ராணிமுத்து என்ற பெயரில் ஏற்கனவே
வெளிவந்த அகிலன் , நா பார்த்தசாரதி போன்றவர்களின் நாவல்களை சுருக்கி
தனிப்புத்தகமாகவே வெளியிட்டது. அதற்கு நல்ல வரவேற்பிருந்தது.ராணிமுத்துவின் வெற்றியைப் பார்த்த மோதி பிரசுரம் ஜெயகாந்தனுடைய குறுநாவல்களை
மட்டும் மாதா மாதம் வெளியிட்டுவந்தது.அறந்தை நாராராயணன் கல்பனா என்ற மாத நாவல் இதழைத் தொடங்கினார். மோதிபிரசுரம் விரைவில் நின்றுவிட்டது.ஜெயகாந்தனின் குறுநாவல்களை
கல்பனா வெளியிட்டது.சில இதழ்களுக்குப்பின் அதுவும் நின்றுவிட்டது.
"நான் மார்க்சியம்
கற்றிருந்தாலும் இலக்கியத்துக்கும் அதற்கும் காததூரம் என்பதை உணர்ந்தே இருந்தேன்
" மௌனி, லாசரா, நகுலன்
போன்ற தமிழின் அபூர்வமான உரைநடைக்காரர்களை மார்க்ஸிஸ்டுகளோ, கம்யூனிஸ்டுகளோ
பாராட்டியதில்லை. நான் மக்கள் கலை இலக்கிய கழகத்திலும் சேரவில்லை,
புதிய ஜனநாயகம் பத்திரிக்கையிலும் எழுதவில்லை , புதிய ஜனநாயகத்துக்கு மாற்றாக பா ஜெயப்பிரகாசமும் சில நண்பர்களும் சேர்ந்து
மனஓசை என்ற பத்திரிக்கையை வெளியிட்டனர்என்கிறார் வண்ண நிலவன். ஞாநி பரீக்க்ஷா குழுவை ஆரம்பித்திருந்தார்.அவர் இந்தியன்
எக்ஸ்ப்ரஸ்வேலையை விட்டபிறகுதான் பரீக்க்ஷா நாடகங்கள் நிறைய போட்டார்."தீம்தரிகிட" பத்திரிக்கையை ஆரம்பித்தார்.
தன்னை குறிப்பிடத்தக்க பத்திரிக்கையாளராக நிறுவிக்கொண்டார்.சாண்டிலனை ஆசிரியராகக்கொண்டு கமலம் என்ற பத்திரிக்கையை ஜேப்பியார் ஆரம்பித்தார்.
சில இதழ்களிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. டால்டன்
நிறுவனம் இந்துமதியை ஆசிரியாராககொண்டு "அஸ்வினி
" என்ற பத்திரிக்கையை தொடங்கியது.அதில் விக்கிரமாதித்தனும்,
ஞாநியும் உதவியாசிரியர்கள்.ஆனாலும் அந்த பத்திரிக்கையும்
அதிக நாட்கள் வரவில்லை.சாவி குங்குமத்தை விட்டு வெளியேறி சாவி
என்ற பெயரிலேயே ஒரு வார இதழை துவக்கினார்.இளைஞர்களுக்காக மாலனை
ஆசிரியராகக்கொண்டு திசைகள் என்ற இதழை துவக்கினார். திசைகள் சில
இதழ்களுடன் நின்றுவிட்டது. சாவி மட்டும் சற்று அதிக நாட்கள் வந்து
நின்றுபோனது.
என்கிறார்
வண்ணநிலவன்.
பி ஆர் சோப்ரா தயாரித்த மஹாபாரதம்
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூரதர்ஷனில் ஒளி பரப்பானது . அந்த தொடரின் கதைவசனத்தை தமிழில் வெளியிட துக்ளக் மற்றும் தினமலர் உரிமை பெற்றிருந்தன.டிஎஸ் வி ஹரி துக்ளக்குக்கு மொழிபெயர்த்து தந்தார். அவரின்
மொழிபெயர்ப்பில் வந்த மஹாபாரதம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 1,10000 பிரதிகள் விற்ற துக்ளக் விற்பனை இரண்டு லட்சம் பிரதிகளைத் தொட்டது.விக்கிரமாதிதனின் முதல் கவிதைதொகுப்பை அன்னம் மீராவிடம் அனுப்பினார் வண்ணநிலவன்.
அதை ஆகாசம் நீல நிறம் என்ற கவிதை தொகுப்பாக அன்னம் மீரா வெளியிட்டார்.
கூத்துப்பட்டறை
நவீன நாடகங்களை நடத்துவதுடன் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சியும் அளித்து வருகிறது.மறைந்த ந முத்துசாமிதான் கூத்ததுப்பட்டறையை
நடத்தி வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கூத்துப்பட்டறையை
1976ல் துவக்கியது வீராச்சாமி என்று அழைக்கப்படும் ரங்கராஜன் தான்.ந முத்துசாமி அரசியல் மற்றும் சமூகத்தில் நிலவும் மேலாண்மைப்போக்குகளையும்
அவற்றின் அபத்தங்களையும் தனது அப்பாவும் பிள்ளையும் , காலங்காலமாக,
சுவரொட்டிகள், நாற்காலிக்காரர் ஆகிய நாடகங்களில்
மிகுந்த நவீன உணர்வுடன் எடுத்துக் கூறியுள்ளார்.அவருக்குப்பிறகுதான் இந்திரா பார்த்தசாரதியையோ,
சே ராமானுஜத்தையோ வேறு யாரையுமோ சொல்லமுடியும்.இந்திரா பார்த்தசாரதியின் மழை, போர்வை பெரிதாக பேசப்பட்டன.ஆனால் ந முத்துசாமியின் காலங்காலமாக, நாற்காலிக்காரர்
ஆகிய இரண்டு நாடகங்களுக்கு முன் அவை காணாமல் போய்விடுகின்றன என்கிறார் வண்ணநிலவன்.
வண்ணனிலவன்
இந்த புத்தகத்தில் கூறியுள்ள இலக்கியம் பற்றிய செய்திகளில் முக்கியமானவற்றை குறிப்பிட்டு
இருக்கிறேன். இன்னும் பல அவர்
வாழ்க்கை பற்றியவை. துக்ளக் இதழ் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.
சினிமாவைப்பற்றியும்
சொல்லி இருக்கிறார். இந்த புத்தகம் அவசியம்
படிக்கவேண்டிய புத்தகம்.இதிலும் அவர் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டுமே எழுதி இருக்கிறார்.
மேலும் இன்று வரையான வாழ்க்கையை அவர் எழுத வேண்டும். இந்த புத்தகத்தை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment