Monday, 24 July 2017

இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

  

   என் செல்வராஜ்



இலக்கிய சிந்தனை  அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகளில் பன்னிரண்டு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது.அதில்  சிறந்த ஒரு கதையை ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து அந்த கதையின் தலைப்பில் 12 கதைகளையும் வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டு வருகிறது.2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பை கைபடாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி என்ற கதையின் தலைப்பை புத்தகத்தின் தலைப்பாகக் கொண்டு வெளியிட்டிருக்கிறது. இது இலக்கிய சிந்தனை அமைப்பின் 47 ஆவது ஆண்டு .இந்த பரிசளிப்பு விழாவும் புத்தக வெளியீடும் 2017 ஏப்ரல் 14 ல் சென்னையில் நடந்தது. 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி? என்ற கதையை தேர்ந்தெடுத்தவர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.அவரின் பன்னிரண்டு கதைகளைப்பற்றிய மதிப்புரை தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

  2016 ஆம் ஆண்டின் சிறந்த பன்னிரண்டு கதைகள்

   1. நாலு ஜனம் - ஜி விஜய பத்மா -   ( கல்கி)

   2. புரிதல் - லலிதா ராம்         ( குமுதம் தீராநதி)

   3. ஆழம் - கலைச்செல்வி     ( கணையாழி )

   4. கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி   
      சாப்பிடுவது எப்படி? - ராமச்சந்திர வைத்தியநாத்-    செம்மலர்

   5. அழையாத விருந்தாளி - சாருகேசி  ( அமுதசுரபி )

   6.   யா(ன்) னை ! - ப்ரியா கல்யாணராமன்  ( குமுதம் லைஃப்)

 7. காலவியூகம் - என் ஸ்ரீராம்      ( காலச்சுவடு)

 8. கனியும் மாற்றம் - பா ரகுபதி ( கல்கி)

 9. ரிட்டயர்மண்ட் - மதுரை சரவணன் - செம்மலர்

10. நாடு கடத்துதல் - எஸ் செல்வசுந்தரி - தினமணிக்கதிர்

11. ஆகாசப்பூ - பிரபஞ்சன்  - ஆனந்த விகடன்

12. திரை - ஜா தீபா    - ஆனந்த விகடன்.


நாலு ஜனம் - ஜி விஜய பத்மா

    வாழும்போது பிறருக்கு உதவினால் அவன் சாகும்போது நாலுபேர் உதவிக்கு வருவார்கள் என்பதை மையமாகக் கொண்டது. பாலு வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறான். கையில் காசில்லாமல் மொபைலுக்கு டாப் அப் கூட செய்யமுடியாத நிலை.மற்றவர்களுக்கு அப்பா உதவுவதை விரும்பாதவன். ஆனால்அவன் அப்பா எல்லோருக்கும் உதவுபவர். கடன் வாங்கியும் மற்றவர்களுக்கு பிரச்னை என்றால் உதவுபவர். அவருக்கு  ஹார்ட் அட்டாக் வருகிறது. அப்பா கையில் காசு இல்லை. பாலுவிடமும் ஒன்றும் இல்லை. வைத்தியம் செய்யப் பணமில்லை அதனால் ஹாஸ்பிடல் போகவேண்டாம் என தடுக்கிறார் அப்பா. ஜிஹெச் போகலாம் என்கிறான் பாலு.அதற்குள் சாவு முந்திக்கொள்கிறது. அப்பா இறந்து விடுகிறார்.வைத்தியத்துக்கே காசில்லாத அவன் அப்பாவை எடுப்பதற்கு என்ன செய்வது என தவிக்கிறான். அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாயர் காசு கேட்காமலே டீ  போட்டு டிரம்மில் அனுப்புகிறார். பக்கத்து வீட்டு மாமா பாலு கையில் ஐயாயிரம் ரூபாயை கொடுத்து எப்படியும் தூக்குற செலவு ஒரு லட்சம் ஆகிவிடும் என்கிறார்.அப்பாவுடன் வேலை பார்த்த பியூன்  சண்முகம் இரண்டு நாளைக்கு முந்திதான் அவன் அப்பா கட்டி வந்த சீட்டை எடுத்தார் என்றும் அந்த பணம் இரண்டு லட்ச ரூபாயில் எடுப்பதற்கான செலவையும், குழந்தை இல்லாமல் இருக்கும் அவன் அக்காவுக்கான வைத்திய செலவையும் பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்.அந்தப் பணத்தில் அப்பாவை எடுக்கிறான்.அப்பா கோபத்தில் ஒரு நாள் தன் சாவுக்கு  மகன் செலவு செய்ய வேண்டாம் என்றும் தன் காசிலேயே எல்லாம் நடந்து விடும் என்று சொன்னது அப்படியே நடந்து விடுகிறது.

       அப்பா சம்பாதித்த பணத்தில் வாழும் மகன்களுக்கு இது ஒரு பாடம். பணமில்லையென்றால் மருத்துவம் யாருக்கும் கிடைப்பதில்லை இது இன்றைய நிலை. மருத்துவத்துக்கு ஆகும் செலவை விட இன்று அதிக பணம் இறுதிச் சடங்குகளை நடத்த தேவைப்படுகிறது.திருமணமான பெண்ணுக்கு குழந்தை இல்லை என்றால் அதற்கான வைத்திய செலவையும் அவளின் பெற்றோர் தான் செய்யவேண்டும் போன்ற உண்மைகளைச் சொல்கிறது இந்த கதை.


 ஆழம் - கலைச்செல்வி

    குளிர்பான ஆலைகள் வந்ததால் அந்த ஊர் தண்ணீரில்லாமல் வறண்டு போகிறது. வரலட்சுமியின் நிலத்துக்கு தண்ணீரில்லாததால் பயிர்வைக்க முடியாத நிலையில் கடன் வாங்கி ஆழ்குழாய்க் கிணறு போடுகிறார்கள். 180 அடியை நெருங்கியும் தண்ணீர் வராததால் அதற்கு மேல் போர் போட வசதியின்றி நிறுத்தி விடுகிறார்கள். அந்த போர்வெல் போட்ட துளை மூடப்படவில்லை. அது இலைகளால் மூடி கிடக்கிறது. கணவன் நாச்சிமுத்து கடனை அடைக்க வழி இல்லாமல் கூலிக்காரனாகி  குடிகாரனாகி விடுகிறான்ஊர் எல்லையில் இருக்கும் கிணற்றில் இருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டுவர தன் இரண்டு மகள்களுடன் போகிறாள் வரலட்சுமி. மகனும் பிடிவாதமாக அவர்களுடன் வருகிறான். மகன் சின்னவன்.சட்டை கூட போடாமல் அம்மாவுடன் போகிறான். வழியில் சிறுநீர் கழிக்க ஒதுங்குகிறான். இலைகளால் மூடப்பட்டிருக்கும் அவளது நிலத்திலுள்ள  போர்வெல் துளைக்குள் விழுந்து விடுகிறான். அய்யோ அக்கா என்று அலறல் கேட்டு அவனது பெரிய அக்காள் திரும்பி பார்த்தபோது கை மட்டுமே வெளியே தெரிகிறது.வரலட்சுமி அடித்துக்கொண்டு புலம்புகிறாள். ஊர்க்காரர்கள் போலீசுக்கு தகவல் சொல்லி அவர்கள் மூலம் தீயணைப்பு படை வருகிறது.108 ஆம்புலன்ஸ் வருகிறது. ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்துகிறார்கள். அதிகாரிகள் வருகிறார்கள் .பையன் 44 அடி ஆழத்தில் கிடப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.பொழுது போய் விடுகிறது. எப்படியும் பையனை எடுத்துவிடலாம் என்று நினைக்கும் அதிகாரிகளுக்கு பையன் 60 அடிக்கும் கீழே போய்விட்டான் என்பதை அறிந்ததும் பாறையை வெடிவைத்து தகர்த்து குழி தோண்ட முடிவு செய்கிறார்கள். ஆக்சிஜன் சிலிண்டர் அகற்றப்படுகிறது. வரலட்சுமிக்கு பயம் ஏற்பட்டு அதிகாரிகளைக் கேட்கிறாள். பாறையாக இருப்பதால் 30 அடிக்கு கீழே குழி தோண்ட முடியவில்லை என்றும் சிறுவன் முகம்  மண் மூடி கிடப்பதால் அவன் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்றும் உடலை வெளியே எடுக்க வெடிவைத்து பாறைகளை உடைத்துப் பின் பள்ளம் தோண்டவேண்டும் என்கிறார்கள். தன் பையனே இறந்த பிறகு இனி தோண்டவேண்டாம் என்கிறாள் அவள்.அதிகாரிகள் அவளுக்கு நிலமையை புரிய வைக்க முயல்கிறார்கள். அவளோ " இருக்கிற எடத்தையும் பள்ளம் தோண்டி போட்டுட்டு போயிடுவீய...இன்னும் ரெண்டு பொட்டப்புள்ளங்க இருக்குதய்யா... அதுங்களை வெசம் வச்சா சாவடிக்க ?....." என்கிறாள் என்று கதை முடிகிறது.

                 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டினால் தண்ணீர் கிடைக்காத போது அந்தத் துளையை மூடாமல் அப்படியே போட்டு விடுகிறார்கள். வரலட்சுமி போர்வெல்லும் அதே கதை தான். அந்த மூடப்படாத போர்வெல் அவளின் மகனுக்கே எமனாகி விடுகிறது. நமது நிர்வாகமோ ஒரே மாதிரியான குழி தோண்டி சிறுவன் இருக்கும் ஆழம் வரை செல்லும் முறையையே கையாள்கிறது. பள்ளம் தோண்டுவதால் ஏற்படும் அதிர்வுகளே சிறுவனை இன்னும் உள்ளே கொண்டு போய்விடுகிறது. கடைசியில் வரலட்சுமி  சொல்வது போல் நிலத்தை பள்ளமாக்கி பிணத்தை அதன் சொந்தக்காரர்களிடம் கொடுத்துவிட்டு நகர்ந்து விடுவதாக இருக்கிறது. அந்த பள்ளத்தை மூட ஆகும் செலவு மிக அதிகம் ஆகும் என்பதே நிதர்சனமான உண்மை.அதைத்தான் வரலட்சுமி அதிகாரிகளிடம் சொல்வதாக கதை முடிகிறது.

  ரிட்டயர்மெண்ட் - மதுரை சரவணன்

      கணவன் ரிட்டயர்ட் ஆன பிறகு தினமும் அவரை அதிகாலை வாக்கிங்குக்கு தயார் செய்து அனுப்புவது முதல் மதிய உணவையும் தயார் செய்து எடுத்துக்கொண்டு பள்ளி செல்லும் பள்ளி ஆசியை சித்ரா  ஒரு நாள் ரிட்டயர் ஆகிறாள். பள்ளிக்கு சென்று குழந்தைகளைப் பார்க்கவேண்டும் என்பது அவள் ஆசை.ஆனால் அவளுக்கு முன்னால் ரிட்டயர் ஆன கிளாரா டீச்சர் பள்ளிக்கு வந்தபோது எல்லோரும் கிண்டலடித்ததையும் அவர் பள்ளிக்கு புரவலர் திட்டத்திற்காக தனது பென்சன் பணத்தில் பத்தாயிரம் தர வந்தபோது தலைமை ஆசிரியர் முதல் யாருமே மதிக்காத நிலையையும் பார்த்த சித்ராவுக்கு பள்ளிப் பிள்ளைகளைப் பார்க்காமல் எப்படி காலத்தை ஓட்டுவது என தவிக்கிறாள். பள்ளி மதிய உணவு வேளையில் கணவர் அவளைச் சாப்பிடுமாறு போனில் நினைவூட்டுகிறார். அவளுடைய இரண்டு பெண்களும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். வீடு சொந்த வீடு. ஆனாலும் அங்கு தொடர்ந்து இருப்பது கடினம் என்பதை உணரும் அவள் போனில் விசாரிக்கும் தன் கணவரிடம் வேறு வீட்டுக்கு போய்விடலாம் என்கிறாள். சொந்த வீடு அது என்பதை ஞாபகப்படுத்துகிறார் கணவர். அவளோ வாடகை வீட்டுக்கு போக புரோக்கரை அழைத்து பள்ளிக்கு எதிரில் உள்ள அபார்ட்மெண்ட் வாடகைக்கு வேண்டும் என்று கேட்கிறாள். கணவரும் சம்மதிக்கிறார்நகரின் ஒரு பள்ளியின் அருகில் உள்ள அபார்ட்மெண்டுக்கு குடியேறுகிறார்கள். தினந்தோறும் அவள் வாழ்க்கை பள்ளியில் இருப்பது போன்றே கடக்கிறது. அவள் கணவரும் மகிழ்கிறார். பள்ளி குழந்தைகளை பார்த்துக்கொண்டே அவர்கள் பள்ளி உணவு நேரத்தில் சாப்பிடுகிறார்கள்.

                       ரிட்டயர்மெண்ட் தவிர்க்க முடியாதது. பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்  அடிக்கடி அவர்கள் பணியாற்றிய அலுவலகம் செல்லவே  விரும்புவார்கள்.ஆனால் அவர்களுக்கு எந்த மரியாதையும் கிடைக்காதபோது, பணியில் இருப்பவர்கள் காட்டும் அலட்சிய மனோபாவத்தைப் பார்க்கும்போது ஏன் அங்கே போனோம் என்று ஆகிவிடும்.அதனாலேயே பெரும்பாலும் ரிட்டயர் ஆன பின் யாரும் தன் அலுவலகம் போக விரும்புவதில்லை. சித்ரா போல ரிட்டயர்ட் வாழ்க்கையை தனக்கு பிடித்தவாறு அமைத்துக்கொண்டால் நீண்ட நாள் நலமாக வாழலாம்.



  கால வியூகம் - என் ஸ்ரீராம்

                   அனாதையான சிறுவன் சேதுவை பெரிய சிற்பி எடுத்துச் சென்று தன் வீட்டில் வளர்க்கிறார்.அவனுக்கு சிற்பம் செதுக்கும் தொழிலைக் கற்று கொடுக்கிறார். அவனது திறமையைக் கண்டு பெரும்பாலான தனது சிற்ப வேலைகளை அவனுக்கு கொடுக்கிறார். சேது சிவனின் ஊர்த்துவ தாண்டவம் சிலை வடிக்கிறான்.முத்திரை சரியாக வரவில்லை என்று அவனை தேரில் அழைத்துக்கொண்டு  ஒரு நாட்டிய மங்கை வீட்டுக்கு அழைத்து சென்று அவளை ஆடச்சொல்லி முத்திரைகளை கவனிக்க சொல்கிறார்.அவளின் மகன் பெரிய சிற்பியை அப்பா என்று அழைக்கிறான். பெரிய சிற்பி சேதுவை போய் சிற்பத்தை செதுக்கு என அனுப்பி வைக்கிறார்.பெரிய சிற்பி அவள் வீட்டிலேயே தங்கிவிடுகிறார்.சேது ஊர்த்துவ தாண்டவ சிற்பத்தை சரியாக செதுக்குகிறான். ஒரு வாரம் சென்ற பின் பெரிய சிற்பியின் மகளிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறான் சேது. அவள்  தன் அப்பா ஏக பத்தினி விரதன் என்றும் அவரைப்போன்ற ஒருவனையே மணப்பேன் என்கிறாள். பெரிய சிற்பி வைப்பாட்டியாக நாட்டியக்காரியை வைத்திருப்பதை அவன் சொல்லி விடுகிறான். பெரிய சிற்பியின் மனைவியும் மகளும் வீட்டைவிட்டு வெளியே போக முடிவு செய்கிறார்கள்.பெரிய சிற்பி தானே வீட்டை விட்டு வெளியேறுவதாக சொல்லி வெளியேறிவிடுகிறார். அதன் பின் அவரது சிற்ப வேலைகளை எல்லாம் சேது சிற்பியிடமே விட்டு விடுகிறார். சேது சிற்பி பெரிய சிற்பியின் மகளை மணந்து கொள்கிறான். மரணத்தருவாயில் இருக்கும்போது பெரிய சிற்பியின் மகன் வந்து கடைசியாக ஒரு முறை தனது தந்தை அவனை பார்க்க விரும்புவதாக அழைக்கிறான். சேது சிற்பியும் உடனே அங்கு அச்சிறுவனுடன் செல்கிறான். பெரிய சிற்பி தான் கனவு கண்ட கோயில்களின் வரைபடங்களை எடுத்துச் செல்லுமாறு சொல்கிறார். அவன் மறுத்துவிட்டுச் சென்றுவிடுகிறான். பெரிய சிற்பி மரணம் அடைந்தபின் பத்தாண்டுகள் கழித்து சேது சிற்பிக்கு ஒரு பெரிய மலைக்கோயிலை உருவாக்கும் பொறுப்பு வருகிறது. அக்கோயிலுக்கு முருகனின் சிலையை வடிக்கும்போது உடைந்து விடுகிறது.மீண்டும் வேறு ஒரு கல்லில் செதுக்க முயல்கிறான்.அதுவும் உடைகிறது.பெரிய சிற்பியின் வீட்டுக்கு சென்று அவர் மகன் நாகேந்திரனை தேடிக் கண்டு பிடிக்கிறான்.அவனிடம் பெரிய சிற்பியின் வரைபடங்கள் உள்ள சிற்ப சாஸ்திர கோணிப்பையை கேட்கிறான்அவன் அவற்றை எரித்துவிட்டதாகவும் ஆனாலும் அதில் உள்ள அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் புதிய கோயில் கட்ட தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறுகிறான். சேது அவனை அழைத்து சென்று அவன் சொல்வதுபோல் கோயிலைக் கட்டுகிறான்.கட்டி முடித்த கோயிலின் நான்காவது கும்பாபிஷேகத்தின் போது நாகேந்திரனைத்தேடி காட்டுக்குச்செல்கிறான் சேது. அங்கு நாகேந்திரன் பேசாச்சாமியாக இருக்கிறார்.பேசாச்சாமி நீ ஆணவத்தால் ஆனவன் என்கிறார். அந்த ஆணவத்தை அழிக்கத்தான் தற்போது வந்திருப்பதாக சேது சொல்கிறான்.அதனால் என்ன பயன் என்று கேட்ட நாகேந்திரனிடம் பெரிய சிற்பிக்கு செய்யும் பிராயசித்தம் என்கிறான் சேது. தான் ஒரு சிற்பியே அல்ல என்றும் சேதுவை அவமானப்படுத்தவே கோயில் கட்ட வந்ததாகவும் ஆனால் அப்புறம் பெரிய சிற்பியின்  ஓலைகளைப் பார்த்த்போது தான் கோயில் அதில் உள்ளபடியே கட்டப்பட்டிருப்பதாகவும் சொன்ன நாகேந்திரன் தான் அந்த ஒலைகளை அழிக்கவில்லை என்றும் சித்தர் தவக்குகைக்கு  போய்ப் பார் என்றும் சொல்கிறான். மலைக்கோயிலின் வரைபடம் பெரியசிற்பியின் கையெழுத்திலேயே அப்படியே இருந்தது.அந்த கோணிப்பையை எடுத்துக்கொண்டு பேசாச்சாமியை பார்க்கப்போகிறான். அங்கே யாரும் இல்லை. அந்த இடத்தில் யாரும் இருந்ததற்கான அடையாளமே இல்லை.வனம் சேது சிற்பியை உள்வாங்கிக்கொண்டது.

                தான் மிகச்சிறந்த சிற்பி என ஆணவத்துடன் இருந்த சேது சிற்பி மலைக்கோயிலை கட்ட முடியாமல்  தனது குருவின் ஓலைச்சுவடியை தேடிப் போவதும் அவருடைய மகன் சொல்படி கோயிலைக்கட்டி முடித்தபின் ஆணவம் அழிந்து குருவின் மகனைத் தேடி அலைவதுமே கதை. கடைசியில் அந்த நாகேந்திரன் என்கிற பேசாச்சாமியும் மாயமாக மறைந்து விடுகிறார்.குருவின் ஓலைகளைச் சுமந்த படி நாகேந்திரனைத் தேடிக்கொண்டே இருக்கிறார் கடைசி வரை.



     2016 ஆம் ஆண்டின் இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதைகளின் தொகுப்பு " கை படாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி மற்றும் கப் /கோன்/ குல்ஃபி சாப்பிடுவது எப்படி  என்ற தலைப்பில் வானதி பதிப்பகம் வெளிட்டுள்ளது. விலை ரூபாய் 100/

No comments:

Post a Comment