வாசிப்பு
வழிகாட்டி|
புனைகதை: ஜெயமோகன்
ஜெயமோகன்
நம் நாட்டில் இலக்கியம் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுவது
இல்லை. வீடுகளில் இலக்கியம் சார்ந்த சூழலே இல்லை. பிழைப்புக்கான படிப்பு. அன்றாட
வாழ்க்கை. நடுவே இலக்கிய அறிமுகம் ஏற்படுகிறது. படிக்க ஆசை. எப்படித் தொடங்குவது
என்று தெரிவதில்லை.
ஆரம்பநிலை
வாசகர்கள் கதை சுவாரசியமும் ஓரளவு வெளிப்படையான அழகுகளும் கொண்ட படைப்புகளை
வாசிக்கலாம். பழைய எழுத்தாளர்களில் முக்கியமாக, ஜெயகாந்தன் (சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்குப் போ, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்), தி.ஜானகிராமன் (மோகமுள், அம்மா வந்தாள், மலர்மஞ்சம்), சுந்தர ராமசாமி (ஒரு புளிய மரத்தின் கதை), சி.சு.செல்லப்பா (வாடிவாசல்), கி.ராஜநாராயணன் (கோபல்ல கிராமம்), ஆ.மாதவன் (கிருஷ்ணப்பருந்து), நீல. பத்மநாபன் (பள்ளிகொண்டபுரம்) போன்றவர்களின் படைப்புகள்.
சிறுகதைகளில் புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி.
அடுத்த தலைமுறை
எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடன் (தலைகீழ்விகிதங்கள், எட்டுத்திக்கும் மதயானை), வண்ணநிலவன் (கடல்புரத்தில்), விட்டல்ராவ் (போக்கிடம்), சிறுகதைகளில் வண்ணதாசன், கந்தர்வன் போன்றோரை வாசிக்கலாம்.
சமகால
எழுத்தாளர்களில் ஜெயமோகன் (ஏழாம் உலகம், இரவு), எஸ். ராமகிருஷ்ணன் (உறுபசி), யுவன் சந்திரசேகர் (குள்ளச்சித்தன் கதை), இமையம் (கோவேறு கழுதைகள், ஆறுமுகம்) போன்ற நாவல்களை வாசிக்கலாம்.
இரண்டு வகை
எழுத்துகளுக்குள் எடுத்த எடுப்பிலேயே போகாமல் இருப்பது நல்லது. லா.ச.ரா., மௌனி போன்ற எழுத்தாளர்களின் நடை சிக்கலானது. அவற்றை எடுத்த
எடுப்பி லேயே வாசிக்கையில் ஒரு தடை இருக்கும். அதன் விளைவாக, தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் மட்டுப்படக்கூடும். அதேபோல, அசோகமித்திரன், பூமணி போன்றவர்களின் எழுத்துகள் அலங்காரமற்றவை. குறைத்துச்
சொல்லிச் செல்பவை. ஆரம்பநிலை வாசகர்கள் அவற்றை வாசிக்கும்போது ரொம்ப சாதாரணமாக
இருக்கிறதே என்று தோன்றக்கூடும்.
புதிய வாசகர்கள்
மூன்று விதிகளை நினைவில் கொள்ள வேண்டும். முதலாவது, இலக்கியம் என்பது மற்ற கதைகளைப் போல ‘அடுத்தது என்ன?’ என்று புரட்டிப் புரட்டி வாசிக்க வேண்டிய ஒன்று அல்ல. அதிலுள்ள
எல்லா வரிகளுமே முக்கியமானவை.
இரண்டு, இலக்கியம் ஒரு மையக் கருத்தைச் சொல்வது அல்ல. ஒரு வாழ்க்கையை
நாம் கற்பனையில் வாழச் செய்கிறது அது. அந்த வாழ்க்கையில் நாம் என்ன அனுபவத்தையும்
சிந்தனைகளையும் அடைகிறோமோ அதுதான் அந்த இலக்கியத்தின் சாராம்சம்.
மூன்று, இலக்கியம் கொஞ்சம் சொல்லி நிறைய ஊகிக்கவைக்கும் கலை. ஆகவே, இலக்கியப் படைப்பில் சொல்லப்படாமல் விடப்பட்டவை என்ன என்பதை
நோக்கியே நாம் நம் கற்பனையை விரிக்க வேண்டும்.
வாசிப்பு வழிகாட்டி | காந்தியை அறிதல்... -
சுனில் கிருஷ்ணன்
காந்தியைப்
பற்றி அறிந்துகொள் வதற்கான முதற்படி ‘சத்திய சோதனை’தான்.
அதற்குப் பிறகு,
காந்தியை நெருக்கமாக அறிந்து கொள்ளப் பயன்படும் இரு நூல்கள் என
ஜெயமோகனின் ‘இன்றைய
காந்தி’
யையும்’ (தமிழினி
வெளியீடு) தரம்பாலின் ‘காந்தியை அறிதல்’ நூலையும்
(காலச்சுவடு) குறிப்பிடுவேன். ‘இன்றைய காந்தி’ தமிழ்ச்
சூழலில் காந்தியை மறுஅறிமுகம் செய்கிறது. நாம் செவிவழியாகக் கேட்டிருக்கும்
பெரும்பாலான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. ‘காந்தியை
அறிதல்’
காந்தியைப் புரிந்துகொள்ளப் புதிய கோணங்களை அளிக்கிறது.கல்கி, திரு.வி.க., டி.டி.
திருமலை,
கொத்தமங்கலம் சுப்பு எனப் பலரும் காந்தியின் வாழ்க்கை
சரித்திரத்தைத் தமிழில் எழுதியிருக்கிறார்கள். லூயி ஃபிஷர் எழுதிய ‘காந்தி
வாழ்க்கை’
நூலை தி.ஜ.ர. மொழிபெயர்த்திருக்கிறார் (வெளியீடு: பழநியப்பா
பிரதர்ஸ்). வின்சென்ட் ஷீனின் ‘மகாத்மா காந்தி’(வ.உ.சி.
நூலகம் வெளியீடு) ஆகியவை முக்கியமான நூல்கள். சமீபத்தில், ராமச்சந்திர
குஹா எழுதியிருக்கும் ‘தென்னாப்பிரிக்காவில்
காந்தி’
(கிழக்கு வெளியீடு) அபாரமான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. குஹா
ஒரு கதைசொல்லியின் நேர்த்தியுடன் காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்வை நமக்கு
அறிமுகம் செய்கிறார். வி.ராமமூர்த்தியின்
‘காந்தியின்
கடைசி இருநூறு நாட்கள்’ (பாரதி
புத்தகாலயம்) இந்தியாவின் மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தில் காந்தியை நெருக்கமாக
அவதானிக்கிறது. மிலி கிரகாம் போலாக்கின் ‘காந்தி
எனும் மனிதர்’
(சர்வோதயா இலக்கியப் பண்ணை) ஒரு ஆளுமையாக காந்தி வெளிப்படுவதற்கு
முந்தைய காலகட்டத்தை ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் பார்வையில் பதிவுசெய்கிறது.
அ.
மார்க்ஸின் ‘காந்தியும்
தமிழ்ச் சனாதனிகளும்’
இன்றளவும் அடிப்படைவாதத் துக்கு எதிராக காந்தி முக்கியமான
தரப்பாக இருக்க முடியும் என்பதை நிறுவும் நூல். டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் ‘காந்தி
தீண்டத்தகாதோருக்கு என்ன செய்தார்?’ எனும்
நூலுக்குப் பதிலாக க. சந்தானமும் ராஜாஜியும் ஆதாரபூர்வமாக அப்போதே மறுப்பு
அளித்திருக்கிறார்கள். அவர்களின் அறிக்கைகள் காந்திய இலக்கிய சங்கத்தால் தமிழில்
தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. அ. ராமசாமி தொகுத்த ‘தமிழ்நாட்டில்
காந்தி’,
அதே தலைப்பில் தி.செ.சௌ. ராஜன் எழுதிய நூல் (சந்தியா) ஆகியவை
ஆவண அம்சம் பொருந்திய முக்கியமான நூல்கள்.இந்தப்
புத்தகங்களை வாசித்த பின் காந்திய ஆளுமைகள், சூழலியல், காந்தியப்
பொருளியல்,
சர்வதேச அரசியல் என இங்கிருந்து பல்வேறு தளங்களைத் தொட்டு
முன்செல்ல இயலும்.
வாசிப்பு வழிகாட்டி | தமிழில் பசுமை
இலக்கியம்
தமிழில்
சுற்றுச்சூழல்,
இயற்கையியல் சார்ந்த நூல்கள் குறைவு என்று ஒரு பேச்சு உண்டு.
உண்மையில்,
சுற்றுச்சூழல் தொடர்பான நூல்கள் நிறையவே உள்ளன. தரமானவைதான்
குறைவு. தமிழில் பசுமை இலக்கியமும் முன்பே தொடங்கிவிட்டது. மா. கிருஷ்ணன் 1947-லிலேயே
எழுத ஆரம்பித்துவிட்டார். இந்தக் கட்டுரைகளை 'மழைக்
காலமும் குயிலோசையும்' தொகுப்பில்
காணலாம். ச. முகமது அலி 1980-லிருந்து
காட்டுயிர்கள் குறித்து எழுதிவருகிறார். அவரது 'அதோ
அந்தப் பறவை போல'
என்ற நூலைத் தமிழில் பறவையியல் பற்றிய முதல் நூல் எனலாம். தியடோர்
பாஸ்கரன் எழுதிய 'இன்னும்
பிறக்காத தலைமுறைக்காக' நூல் உள்ளிட்ட
அனைத்துச் சுற்றுச்சூழல் நூல்களும், அவர் மொழிபெயர்த்த
'கானுயிர்
வேங்கை'
நூலும் முக்கியமானவை. கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் 'தமிழரும்
தாவரமும்',
ச.சண்முகசுந்தரம் எழுதிய 'வனங்கள்:
ஓர் அறிவியல் விளக்கம்', 'தமிழ்நாட்டுத்
தாவரங்கள்',
க.ரத்னம் எழுதிய 'தமிழ்நாட்டுப்
பறவைகள்',
பாமயனின் 'விசும்பின் துளி', நக்கீரனின்
'மழைக்
காடுகளின் மரணம்'
ஆகியவை அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள்.
பசுமை
இலக்கியம் என்பது களக் கையேடுகளும், இயற்கை சார்ந்த
அனுபவப் பகிர்வும்,
கட்டுரைகளும் மட்டுமே அல்ல. தமிழில் பல நாவல்களும், சிறுகதைகளும்
இயற்கைப் பாதுகாப்பைக் கருவாகவோ சாரமாகவோ, இயற்கை
தொடர்பான வட்டார வழக்குகளையோ கொண்டு படைக்கப் பட்டுள்ளன. இவற்றில் சில: சா.
கந்தசாமியின் 'சாயாவனம்', பெருமாள்
முருகனின் 'கூள
மாதாரி',
சோ. தர்மனின் 'கூகை', ஜெயமோகனின்
'காடு', 'ரப்பர்', கி.
ராஜநாராயணனின் 'பிஞ்சுகள்', நக்கீரனின்
'காடோடி'. மதுமிதாவின்
கட்டுரைத் தொகுப்பான 'மரங்கள்
நினைவிலும் புனைவிலும்' குறிப்பிடத்தக்கது.
க்ரியா பதிப்பகம் வெளியிட்ட 'பறவைகள்', 'வண்ணத்
துப்பூச்சிகள்',
'தட்டான்கள், ஊசித்தட்டான்கள்' ஆகிய
கையேடுகள் பயனுள்ளவை. செல்வ மணி அரங்கநாதனின் 'மாட்டுவண்டியும்
மகிழுந்தும்...'
எனும் கவிதை நூலும் முக்கியமானது. தலைப்பில்
சுற்றுச்சூழல்,
இயற்கை சார்ந்த வார்த்தைகளும், அட்டையில்
காட்டுயிர் கள் படமும் இருப்பதாலேயே அவற்றை வாங்கிவிடுவது சரியல்ல. நல்ல
படைப்புகளைத் தேடி வாசித்தல் நலம்.
வாசிப்பு
வழிகாட்டி | சிறார்
இலக்கியம் - உதயசங்கர்
குழந்தைகளின் ஆளுமையில் சிறார் இலக்கியம் மிக
முக்கியமான பங்கு வகிப்பதை இப்போது பெற்றோர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
நம்முடைய சிறார் இலக்கியத்தின் கடந்த காலம் வளம் மிக்கது. சுமார் 50 சிறார்
பத்திரிகைகள் தமிழில் வந்திருக்கின்றன. ‘சில்ரன்
புக் டிரஸ்ட்’டின் பிறமொழி சிறார் இலக்கிய நூல்கள், சோவியத்திலிருந்து
வெளியான சிறார் இலக்கிய நூல்கள் நமது வாசிப்பெல்லையை விரிவுபடுத்தின. சிறார் இலக்கிய முன்னோடிகளான அழ. வள்ளியப்பாவின் ‘மலரும்
உள்ளம்’, ‘நல்ல நண்பர்கள்’, ‘குதிரைச்சவாரி’, பெ.
தூரனின் ‘சிறுவர் கதைக்களஞ்சியம்’, வாண்டுமாமாவின்
‘நெருப்புக்கோட்டை’, ரேவதியின் ‘பவளம்
தந்த பரிசு’, ‘தும்பி சிறகை மடக்குமா?’ மா.கமலவேலனின்
அந்தோணியின் ஆட்டுக்குட்டி, கவிஞர் செல்ல கணபதியின் ‘தேடல்வேட்டை’, கொ.மா.
கோதண்டத்தின் ‘வானகத்தில் ஒரு கானகம்’, கவிமணி
தேசிகவிநாயகத்தின் குழந்தைப் பாடல்கள், பூவண்ணன், ஆர்.வி., தமிழ்வாணன், பெ.நா.
அப்புசாமி, பூதலூர் முத்து, கூத்தபிரான்
என்று பலரும் முன்பு சிறார் இலக்கியம் படைத்துக்கொண்டிருந்தார்கள்.சமகாலத்தில் சிறார் இலக்கியம் பரவலாக வளர்ச்சி
பெற்றுவருகிறது. வெ. ஸ்ரீராம்-ச. மதனகல்யாணி மொழிபெயர்த்த ‘குட்டி
இளவரசன்’, யூமா வாசுகி மொழிபெயர்த்த ‘அழகான
அம்மா’, ‘மாத்தன் மண்புழு வழக்கு’, ‘ஒற்றைக்கால்
நண்டு’ போன்ற மலையாள சிறார் இலக்கிய நூல்கள், புத்தகப்
பூங்கொத்து, புத்தகப் பரிசுப்பெட்டி (இரண்டும் என்னுடைய
மொழிபெயர்ப்புகள்), கொ.மா.கோ. இளங்கோ, ஜெயந்தி
சங்கரின் மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவை பிறமொழி சிறார் இலக்கியத்தை நமக்கு
அறிமுகப்படுத்தியுள்ளன. இவை தமிழ் சிறார் இலக்கியத் துறையில் குறிப்பிடத் தக்க
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இரா. நடராசனின் ‘டார்வின்
ஸ்கூல்’, ஜெயமோகனின் ‘பனிமனிதன்’, எஸ்.
ராமகிருஷ்ணனின் ‘கிறுகிறு வானம்’, ‘உலகிலேயே
மிகச்சிறிய தவளை’, கொ.மா.கோ. இளங்கோவின் ‘ஜிமாவின்
கைபேசி’, விஷ்ணுபுரம் சரவணனின் ‘வாத்து
ராஜா’, விழியனின் ’ ‘மாகடிகாரம்’, பாவண்ணனின்
‘யானைச்சவாரி’ ஆகிய நூல்கள் சமகாலச் சிறார் இலக்கியப் போக்குகளைப்
பிரதிபலிக்கின்றன.
குழந்தைகளுக்கு சிறார் இலக்கியப் புத்தகங்களை
வாங்கிக் கொடுப்பதற்குப் பெற்றோர் தயங்குகிறார்கள். இந்தத் தடை உடைக்கப்படும்
நிலையில், குழந்தைகளே தங்களுக்கான இலக்கியத்தை மிக அதிக அளவில்
உருவாக்கும் காலம் வரும். கேரளத்தைப் போல அரசும் நூலகங்களுக்குச் சிறார்
புத்தகங்களை நேரடியாக வாங்கிக் கொடுக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும்.
- உதயசங்கர், சிறார்
இலக்கியப் படைப்பாளி
வாசிப்பு
வழிகாட்டி | ‘பெண்
ஏன் அடிமையானாள்?’ வாசித்திருக்கிறீர்களா?- பெருந்தேவி, கவிஞர்.
பெண் இருப்பையும் குரலையும் பேசும் பல நூல்கள்
தமிழில் இருக்கின்றன. பெண்களால் எழுதப்பட்ட நூல்களைப் பற்றிச் சொல்லும் முன், ஓர்
ஆணால் எழுதப்பட்ட நூலை முதலில் குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். தந்தை
பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ (பெரியார்
சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு). பதின்ம வயதில் நான் வாசித்த, என்
சிந்தனையை ஆற்றுப்படுத்திய நூல் இது.
மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் ‘காலந்தோறும்
பெண்’(காலச்சுவடு வெளியீடு). ஆணின் உடைமைப் பொருளாய்ப் பெண்
கருதப்படும் நிலை, திருமணச் சடங்குகளின் அரசியல் போன்றவற்றை இடதுசாரி
அரசியல் பெண்ணியம் சார்ந்து அணுகுகிறார் ராஜம் கிருஷ்ணன். வரலாற்றை ஆண்-மையப் போக்கிலிருந்து அணுகும் பொதுத்தன்மைக்கு
மாறாகப் பெண் ணின் வாழ்வனுபவங்களை, பார்வைக் கோணங் களை மையமாகக் கொண்டிருக்கும் ஒரு
முக்கிய மான நூல், லட்சுமி அம்மாவின் ‘லட்சுமி
என்னும் பயணி’(மைத்ரி வெளியீடு). அன்றாடத்திலிருந்து விலகாத
தொழிற்சங்க நடவடிக்கைகளிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்த்
தேசியம் என்று தன் நேரடி அரசியல் அனுபவங் களையும் தோழமைகளின் சிறப்பையும் பேசுகிற
நூல் இது. புனைவெழுத்தில் பெண் இருப்பை அழுத்தமாகப் பதிவுசெய்திருப்பவர் அம்பை.
பால் பாகுபாடு எனும் பண்பாட்டுக் கயிற்றால் நெரிக்கப்பட்ட பெண் குரலை
மீட்டெடுக்கப் பார்க்கும் எழுத்து அவருடையது. வாழ்க்கையோடு பெண் நோக்கிலிருந்து
சிறிதாவது பரிச்சயம் வேண்டும் என நினைப் பவர்கள்
‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (க்ரியா
வெளியீடு) நூலை வாசிக்க வேண்டும். சாதி அதிகாரப் படிநிலையை, செயல்பாடுகளை
விசாரணைக்கு உட்படுத்துபவை சிவகாமியின் நாவல்கள். ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்வுக்
களங்களையும் நுணுக்கமான பரிமாணங் களையும் எடுத்துரைப்பவை. சிவகாமியின் ‘ஆனந்தாயி’ (தமிழ்ப்
புத்தகாலய வெளியீடு) பாலினப் பாகுபாட்டு வாதைகளின் ஊடாகக் கட்டப்படும் பெண்
சுயத்தின் குரலாக ஒலிக்கிறது.
பெண் சுயத்தின் வாழ்வுப் போராட்டப் பதிவுகள் பிற
மொழிகளிலிருந்தும் தமிழுக்கு வந்திருக்கின்றன. கவிஞர் கீதா சுகுமாரனின்
மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் அமெரிக்கக் கவிஞர் சில்வியா பிளாத்தின் கவிதைகள் - ‘தற்கொலைக்குப்
பறக்கும் பனித்துளி’ (காலச்சுவடு வெளியீடு), அ.
மங்கையின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் பெளத்தப் பெண் துறவிகளின் பழம் பாடல்கள்
- ‘தேரி காதை - பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்’(சந்தியா
வெளியீடு) இரண்டும் அவற்றில் மிக முக்கியமானவை!
- பெருந்தேவி, கவிஞர்.
வாசிப்பு
வழிகாட்டி | கமலாலயன்
- கல்வி சார்ந்த நூல்கள்
கல்வி கற்பது மனிதர்களின் வாழ்நாள் செயல்பாடு. மனித
சமூகத்தைப் பிணைத்துள்ள அடிமைத் தளைகளிலிருந்து விடுபட்டு, மேலெழ
உதவும் ஏணி கல்வி. கற்றுத்தர முற்படுகிற எவரும் தினசரி கற்பவராய் இருந்தாலொழிய, மற்றவர்களுக்குச்
சிறப்பாகக் கற்றுத்தர அவரால் முடியாது. ‘எங்களை
ஏன் டீச்சர் ஃபெயிலாக்கினீங்க?’ (தமிழில்: ஜே.ஷாஜஹான், வாசல்
பதிப்பகம்) என்று ஆசிரியருக்குக் கடிதம் எழுதிக் கேள்விக்கணை தொடுத்த மாணவர்களின்
குரல், ஏற்புடைய பதில் கிடைக்காமல் தேம்பி ஓய்வதை நாம் உணர
வேண்டும். எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்... அவர்கள் எப்படி கல்வியில்
தோற்றுப்போகின்றனர் என்பது குறித்த ஜான் ஹோல்டின் ‘ஆசிரியரின்
டைரி’ (யுரேகா வெளியீடு) நூல் நமக்குப் புதிய வாசல் திறக்கும். அதேபோல, கேளாக்
காதினரின் காதுகளில் உறைக்கும்படி உரத்து ஒலித்தது ‘நம்
கல்வி... நம் உரிமை’ நூல் (‘தி இந்து’ வெளியீடு). காந்தி, அம்பேத்கர், தாகூர், பாரதியார், விவேகானந்தர், பெர்ட்ரண்ட்
ரஸ்ஸல், தந்தை பெரியார், லெனின்
உள்ளிட்ட பல சிந்தனையாளர்களின் கல்விச் சிந்தனைகளைத் தனித்தனி நூல்களாக ‘பாரதி
புத்தகாலயம்’ வெளியிட்டுள்ளது. ‘டோட்டோசான்:
ஜன்னலில் ஒரு சிறுமி’ (தமிழில் அ. வள்ளிநாயகம், சொ.
பிரபாகரன்), கிஜுபாய் பாத்கேகாவின் ‘பகல்
கனவு’, ‘ஆயிஷா’ நடராசனின் ‘இது
யாருடைய வகுப்பறை’, ச.சீ. ராஜகோபாலனின் ‘தமிழகப்
பள்ளிக் கல்வி’, சிங்கிஸ் ஐத்மாத்தவின் சோவியத் நாவலான ‘முதல்
ஆசிரியர்’, ‘தமிழகத்தில் கல்வி’ - சுந்தர
ராமசாமி, வசந்திதேவி உரையாடல் பதிவு (காலச்சுவடு), ‘தலித்
மக்களும் கல்வியும்‘ (புலம்), ‘ஓய்ந்திருக்கலாகாது’ கல்விச்
சிறுகதைகள் (பாரதி புத்தகாலயம்), ‘முரண்பாட்டை முன் வைத்தல்’ பேரா.
கிருஷ்ணகுமார், பேராசிரியர் ச. மாடசாமியின் ‘போயிட்டு
வாங்க சார்’, ‘என் சிவப்பு பால் பாயிண்ட் பேனா’, சேவியர்
தனிநாயகம் அடிகளின் ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி’, ‘உனக்குப்
படிக்கத் தெரியாது’ (என்னுடைய மொழிபெயர்ப்பு), ‘டேஞ்சர்
ஸ்கூல்’ (தமிழில்: அப்பணசாமி), பிரளயன்
எழுதிய ‘கல்வியில் நாடகம்’ ச.
தமிழ்ச் செல்வன் எழுதிய ‘இருளும் ஒளியும்’ (அறிவொளிக்
கல்வி பற்றி), ச.முருகபூபதியின் ‘கதை
சொல்லும் கலை’ - இப்படி இன்னும் பல நூல்கள் கல்வித் தளத்தில்
அலையடிக்கின்றன. கல்வி தொடர்பான விழிப்புணர்வைப் பெற மேற்கண்ட நூல்கள் உதவும்
என்பது நம்பிக்கை.
- கமலாலயன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
வாசிப்பு
வழிகாட்டி | தமிழில்
மருத்துவ நூல்கள் - டாக்டர் ஜி.ராமானுஜம்
பொதுமக்களுக்கு மனித உடலைப் பற்றியும் நோய்களைப் பற்றியும் தகவல்களை மருத்துவத்
துறை சார்ந்த நிபுணர்கள் எழுதிய நல்ல நூல்கள் தமிழில் வந்துள்ளன. 'உச்சி
முதல் உள்ளங்கால் வரை' என்ற புத்தகம் பல்வேறு மருத்துவ நிபுணர்கள், தோல், கண், சிறுநீரகம்
போன்ற பல உறுப்புகளின் செயல்பாடுகள் மற்றும் நோய்கள், அவற்றின்
அறிகுறிகள், சிகிச்சைகள் போன்றவற்றைப் பொதுமக்களுக்குக் கேள்வி -
பதில் முறையில் விளக்குகிறது.
அதுபோல டாக்டர்
கணேசனின் 'ஏன் தெரியுமா?', டாக்டர்
காட்சனின் 'பதின் பருவம்: புதிர்பருவமா?' போன்று
சமீப காலத்தில் 'தி இந்து'வில் வெளிவந்த பல்வேறு நல்ல மருத்துவக் கட்டுரைகள்
நூல் வடிவம் பெற்றுள்ளன. இவை நோய்களையும் உடல் இயக்கத்தையும் புரிந்துகொள்ள
உதவுகின்றன. 'டாக்டர் இல்லாத இடத்தில்', 'மனநல
மருத்துவர் இல்லாத இடத்தில்'போன்ற புத்தகங்கள் மிகவும் அத்தியாவசியமானவை. இதுபோல்
புகழ்பெற்ற மேயோ க்ளினிக்கின் கையேடுகளும் தமிழில் வந்துள்ளன.
மருத்துவம் என்பது
வெறும் நோயுடன் தொடர்புடையது மட்டுமல்ல. அது வாழ்க்கை முறையோடு தொடர்புடையது.
அவ்வகையில், டி.கே.வி. தேசிகாச்சாரியார் எழுதிய 'உடலே
உன்னை ஆராதிக்கிறேன்' என்னும் புத்தகம் யோகாசனம் மட்டுமன்றி, கீழையியல்
வாழ்க்கை முறை பற்றியும் விவரிக்கும் முக்கியமான நூல். அது போன்றே கு.சிவராமனின் 'ஆறாம்
திணை' நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறை சார்ந்த அறிவின் சாராம்சமாக
விளங்குகிறது.
அறிவியல்ரீதியாக
மருத்துவத்தைப் பொதுமக்களுக்கு விளக்கும் வகை நூல்கள் மருத்துவத்தில் மிகப்
பிரபலம். தமிழில் சுஜாதாவின் 'தலைமைச் செயலகம்' மனித
மூளையின் அதிசயங்களை அறிமுகப்படுத்தும் நல்ல நூல். மருத்துவத் துறை மூளை, மனம்
போன்றவற்றின் அற்புதங்களை விளக்குவதில் தலைசிறந்தவரான வி.எஸ். ராமச்சந்திரனின் 'உருவாகும்
உள்ளம்' (தமிழில்: ஆயிஷா நடராஜன்) முக்கியமான நூல்.
இலக்கியத்திலும்
நோய், மருத்துவம் பற்றிய படைப்புகள் நமது புரிதலை விரிவாக்குகின்றன.
தாராசங்கர் பானர்ஜி யின் 'ஆரோக்கிய நிகேதனம்' மாறுபட்ட
மருத்துவ முறைகளின் தத்துவச் சிக்கல்களையும் , எம்.வி.
வெங்கட்ராமின் 'காதுகள்' மனப்பிறழ்வால் எழும் மாயக் குரல்களின்
வெளிப்பாடுகளையும், எஸ். ராம கிருஷ்ணனின் 'துயில்' நோயுற்றவர்கள்
நோயை எதிர்கொள்வதையும் கலைப் பாங்கில் வெளிப்படுத்தும் முக்கியமான நூல்கள்.
- டாக்டர் ஜி.ராமானுஜம், மனநல மருத்துவர் 'நோயர்
விருப்பம்' என்ற நூலின் ஆசிரியர்
வாசிப்பு
வழிகாட்டி: அறிவியல் புனைகதைகள்!
சுதாகர் கஸ்தூரி
தமிழில் அறிவியல்
கதைகள் என்பதை விட, அறிவியல் சார்ந்த கதைகளே வந்திருக்கின்றன எனலாம். நம்
யதார்த்த வாழ்வில் அறிவியல் சூழலை அறிமுகப்படுத்தியவர் சுஜாதா அவரது
எழுத்துக்களின் பலம் , ஓர் கதாசிரியரின் நுட்பமும், கற்பனை
வளமும், அறிவியல் தொழில்நுட்பமும் கலந்திருந்த விகிதாச்சாரம்தான்.
கதைகளின் வீச்சு அறிவியல், தொழில் நுட்பம், அதீத
வருங்கால வாழ்வு எனப் பல திசைகளில் பரந்து விரிந்திருந்தது. ‘ஜீனோ’, ‘மீண்டும்
ஜீனோ’ போன்ற கற்பனை எதிர்கால வாழ்வுக் கதைகளிலும் மனித உணர்வுகளை
மெல்ல, நெருடாமல் உலவவிட்ட திறமை அவருக்கேயுரியது.
அவரது காலத்தில்
அறிவியல் கதைகளை எழுத முற்பட்டவர்களில் முக்கியமானவர் இரா.முருகன். கணினித்
தொழில்நுட்பத்தில் அவருக்கிருந்த அனுபவம், கதைகளில்
தெறிக்கின்றன. இந்த வகையில் ‘சில்லு’, ‘போகம் தவிர்’ போன்ற
கதைகளை முக்கியமாகச் சொல்லலாம். ஜெயமோகன், மண்ணின்
பாரம்பரிய அறிவின் மணத்துடன் அறிவியலை இணைத்தார். இது புதிய கோணத்தைக் கொடுத்தது
என்றாலும், இந்த வகையில் எழுத தேர்ச்சியும் பாரம்பரியம் பற்றிய
அறிவும் தேவை. அவரது ‘உற்று நோக்கும் பறவை’ கதை
மனப்பிளவு , அதன் காரணிகளான நாளமில்லாச் சுரப்பி தரும்
வேதிப்பொருட்கள், தத்துவம் என அழகாக மிளிரும் அறிவியல்சார் கதை.
பெரும்பாலான கதைகள்
தொழில்நுட்பத்தையே முன்வைத்த காலத்தில் இரா.முருகனும் ஜெயமோகனும் அடிப்படை
அறிவியலையும் மனித உறவுகளையும் கலந்து தந்தார்கள். நளினி சாஸ்திரியின் ‘ஆத்மாவுக்கு
ஆபத்து’ அறிவியல் கதை சுஜாதாவாலேயே பாராட்டப்பெற்றது. தமிழ்மகனின்
கதைகளும் குறிப்பிடத் தகுந்தவை.
அறிவியல் கதைகள்
பெரும்பாலும் சிறுகதைகளாகவே நின்றிருந்தன. திடீர்த் திருப்பங்கள், அறிவியல்
தத்துவக் கோட்பாடுகள் என்பதோடு இவை 1,000 சொற்கள் என்ற எல்லையில் அடைபட்டிருந்தன. முழுநீள
அறிவியல் நாவல்கள் தமிழில் குறைவு.
தமிழில் அறிவியல்
கதைகளுக்கு முன்பே அறிவியல் கட்டுரைகள் வந்திருந்தன. பெ.நா. அப்புஸ்வாமி அறிவியல்
கட்டுரைகளின் முன்னோடி எனலாம். தகுந்த அறிவியல் சொற்கள் இல்லாத நிலையில், புதுச்
சொற்களை உருவாக்குவதில் உள்ள சிரமங்களை அவர் உணர்ந்திருந்தார். அவரது சமகாலத்தில்
சுஜாதா ஏராளமான அறிவியல் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார். தமிழில் கணினி
தொடர்பான கலைச்சொல் உருவாக்கத்தில் சுஜாதாவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
தற்போது என்.ராமதுரை போன்ற ஒருசிலர் அறிவியலை எளிமையான விதத்தில்
அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- சுதாகர் கஸ்தூரி, ‘6174’, ‘டர்மரின் 384’ ஆகிய அறிவியல் புனைகதை நாவல்களின் ஆசிரியர்
நன்றி : தி இந்து
No comments:
Post a Comment