Monday, 18 May 2020

கதை சொல்லிகளின் கதை - 2,3


சிறுகதை வரலாற்றின் முதல் மூவரில் ஒருவர் மாதவய்யா!- கதைசொல்லிகளின் கதை பாகம் 2


     
``திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து செங்கோட்டை - கொல்லம் வழியாக மலையாளம் செல்லும் பிராமணப் பிரயாணிகளுக்கு, ஆரியன் காவில் மலையாளத்து மகாராசா ஏற்படுத்தியிருக்கும் `ஊட்டுப்புரை' எனும் கோயில், வழித்தங்கலுக்கு வசதியான இடம். அந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் `சாஸ்தா பிரீதி' என்னும் விசேஷச் சடங்குக்கும் விருந்துக்கும், பிராமணர்கள் திரளாகக் கூடுவதுண்டு. பிரக்கியாதி பெற்ற சாஸ்தாவின் தரிசன மகிமையும், அன்று நிகழும் விருந்துச் சாப்பாட்டின் சிறப்பும் யாவரும் அறிந்தனவே.
செல்வச்சுருக்கமும் சீரணசக்திப் பெருக்கமும் ஒருங்கே வாய்ந்து, ஆங்காங்கே உள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசித்து, அந்தந்த இடங்களில் ஏற்பட்டிருக்கும் ஊட்டுப்புரை, சத்திரம், கோயில்களில் பணச்செலவின்றி வயிறு புடைக்க உண்டுகளித்து, தாம் கண்ட பற்பல தெய்வங்களின் ஏற்றத்தாழ்வையும் வரசக்திகளையும் பற்றிக் கதை பேசியும் வாதாடியும் ஒருநாள்போல பல நாள்களையும் ஆண்டுகளையும் கழிக்கும் பிராமணோத்தம கோஷ்டிகள் எல்லாம், கிழக்கே உதிக்கும் ஞாயிறு மேற்கே உதிக்கணும், ஆரியன் காவு சாஸ்தா பிரீதியன்று, அங்கு கூடாதொழியார். இத்தகைய கோயில் பெருச்சாளிகளின் யதார்த்தமான தெய்வபக்தியும் விசுவாசமும் ஆழ்ந்து பரிசோதிக்கத் தக்கதன்று. `பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.'
- அ.மாதவய்யாவின் `சாஸ்தா பிரீதி' என்கிற கதையிலிருந்து...
சாதி எதிர்ப்புப் போரின் முக்கியமான ஓர் அம்சமாக, சொந்த சாதிக்குத் துரோகம் செய்வது பற்றி இன்று நாம் உரையாடல் நடத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், தான் பிறந்த பார்ப்பன சமூகத்தின் போலிகளை நூற்றாண்டுக்கு முன்னரே, இன்ன மட்டும் என்றில்லாமல் தன் கதைகளில் பகடி செய்த அ.மாதவய்யா, `தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முதல் மூவர்' என அழைக்கப்படுவோரில் (வ.வே.சு.அய்யர், அ.மாதவய்யா, பாரதி) முக்கியமானவர். இந்த மூவருமே 1926-ம் ஆண்டுக்கு முன்பே மறைந்துவிட்டார்கள். ஆகவே, 1925 வரையிலான காலகட்டத்தை `தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முதல் கட்டம்' எனக் குறிப்பிடலாம்
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பெரும்புலமை பெற்றவரான அ.மாதவய்யா, இருமொழிகளிலும் நாவல்களும், சிறுகதைகளும், கட்டுரைகளும், நாடகங்களும், இசைப்பாடல்களும் எழுதியவர். இங்கு, அவரது சிறுகதைகளைப் பற்றியும் அவரது வாழ்வைப் பற்றியும் படிப்போம்.
1872-ம் ஆண்டு ஆகஸ்ட்16-ம் நாள் அன்றைய திருநெல்வேலி மாவட்டம் (இன்று தூத்துக்குடி மாவட்டம்) ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள பெருங்குளம் கிராமத்தில் அப்பாவையன் என்கிற அனந்தநாராயண ஐயருக்கும் மூனாட்சியம்மாளுக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் அ.மாதவய்யா. திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் மெட்ரிக்குலேஷன் படித்து, சென்னை கிறித்தவக் கல்லூரியில் பி.ஏ படித்து, உப்பு-சுங்க இலாகாவில் அரசு அதிகாரியாகச் சேர்ந்தார். இடையில் அவரது 15-வது வயதில் அந்தக் கால வழக்கப்படி 11 வயதேயான மீனாட்சியை, மணம் முடித்தார்.
தன்னுடைய 20-வது வயதில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார். `விவேக சிந்தாமணி' இதழில் மதிப்புரைகளும் தொடர்கதையும் தொடர்ந்து எழுதினார். விதவா மறுமணத்தை வலியுறுத்தும் `சாவித்திரி சரித்திரம்' என்ற நாவலின் சில இயல்கள் `விவேக சிந்தாமணி'யில் வந்தன. பிறகு இந்த நாவல் முழுமைபெற்று `முத்துமீனாட்சி' என்ற பெயரில் 1903-ம் ஆண்டில் வெளியானது.
தொடர்ந்து பல நாவல்களும் சிறுகதைகளும் ஆங்கிலத்திலும் பிறகு அவற்றைத் தமிழில் அவரே மொழிபெயர்த்தும் வெளியிட்டார். `பத்மாவதி சரித்திரம்', `முத்துமீனாட்சி', `விஜய மார்த்தாண்டம்', `தில்லை கோவிந்தன்', `சத்தியானந்தன்', `கிளாரிந்தா' போன்ற புகழ்பெற்ற நாவல்களைப் படைத்தார். `குசிகர் குட்டிக்கதைகள்' என்ற பெயரில் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டார்.
சாதி எதிர்ப்பு, இந்து மதச் சீர்கேடுகளைச் சாடுதல், பெண் கல்வி, ஆண்-பெண் சமத்துவம், விதவா விவாகம் என அன்றைய நாளில் மிக முற்போக்கான படைப்புகளை முன்வைத்தார். ஆகவே, `கமலாம்பாள் சரித்திரம்' என்ற ஒரு நாவலை எழுதிய ராஜம் அய்யரைக் கொண்டாடியதுபோல இவரைச் சாதிய சனாதனிகள் கொண்டாடவில்லை; புறக்கணித்தனர். ராஜம் அய்யரைக் கொண்டாடக் காரணம், `கமலாம்பாள் சரித்திரம்' நாவலின் பிற்பகுதி முழுக்க வேத விசாரத்தில் இறங்கியதுதான்.
கடுமையான சமூக விமர்சனங்களை முன்வைத்த கதைகள் தந்த மாதவய்யாவைப் பற்றி கண்டனம் தெரிவித்த `தி இந்து' நாளிதழ், ஒரே வருடத்தில் தன் நிலையை மாற்றிக்கொண்டு, தானே முன்வந்து தன் நாளிதழில் கதைகளை ஆங்கிலத்தில் எழுத அவரை வேண்டிக்கொண்டது.
தான் வாழும் காலச்சூழலை, தன் படைப்புகள் வழியே விமர்சனத்துக்கு உட்படுத்திய எழுத்தாளர் அ.மாதவய்யா. அவர் தீவிரமாக எழுத்துலகில் இயங்கிய காலம் 1890-1925க்கு உட்பட்ட 35 ஆண்டுகள். இந்தக் காலம், தமிழ்ச் சமுதாயத்தில் ஆங்கில ஆட்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த காலம். பொருளாதாரத் தளத்தில் மரபாக வந்த வேளாண்மை சார்ந்த அரசியல் பொருளாதாரமும், கைவினைத் தொழில்களும் வணிகமும், வழக்கிலிருந்த பழைய தொழில்நுட்பங்களும் பெருத்த சவாலைச் சந்தித்துக்கொண்டிருந்தன.
தொழிற்புரட்சியின் விளைவாக இங்கிலாந்தில் எழுந்து நின்ற நவீன தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப்பொருள்களை உற்பத்திசெய்யும் நிலப்பரப்பாக இந்தியா ஆக்கப்பட்டிருந்தது. லங்காஷியரில் உற்பத்தியாகும் பண்டங்களுக்கான சந்தையாக இந்தியா ஆகிக்கொண்டிருந்தது. உற்பத்தியாகும் பொருள்களை வாங்கும் நுகர்வோராக இந்தியர்களை மாற்ற பண்பாட்டுத்தளத்தில் அதிரடியான தாக்குதல்களை ஆங்கிலேயர் தொடுத்துக்கொண்டிருந்த காலம். பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பித்த இந்து மரபுக்கு 1833-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற கொள்கைப் பிரகடனம் சவுக்கடியாக அமைந்தது. பிறப்பால் உயர்ந்த சாதியினர் பழைய சட்டங்களின்படி மிகக்குறைந்த தண்டனை பெற்றுத் தப்பிக்கொண்டிருந்தனர். அந்த நடைமுறைக்கு இந்தப் பிரகடனம் ஆப்பு வைத்தது.
அ.மாதவய்யா உள்ளிட்ட அன்றைய உயர்சாதி அறிவுஜீவிகளின் முற்போக்கான பிரிவினர் இதை வரவேற்றனர். அ.மாதவய்யாவின் பல கதைகளும் நாவல்களும் இதைப் பாடுபொருளாக்கின. `தந்தையும் மகனும்' என்ற சிறுகதையில், தன் தந்தை வசதி படைத்தவராக இருந்தும் `சாணான்' என்ற சாதியிப்பிறப்பின் காரணமாக அக்கிரகாரத் தெருவில் நடப்பதற்கு, பார்ப்பனர்கள் தடை விதித்ததைக் கண்டு மனம் கொதித்த அந்தச் சாணாரின் மகன் ஆங்கிலக் கல்வி கற்று கிறிஸ்தவனாக மதம் மாறி, தாசில்தார் பதவி ஏற்று, அதே அக்கிரகாரத் தெருவில் குதிரை ஏறி பவனி வரும் காட்சியை அந்தக் கதையில் மாதவய்யா மிகுந்த குதூகலத்தோடு வர்ணிக்கிறார்.
இதேபோல, `குதிரைக்காரக் குப்பன்' என்கிற சிறுகதையில் கிறித்துவத்துக்கு மதம் மாறி வெள்ளைக்காரத் துரையிடம் குதிரைக்காரனாக வேலைசெய்த பறையரிடம் பார்ப்பனர்களின் ஜம்பம் ஒன்றும் பலிக்காமல்போவதை மாதவய்யா பலத்த கிண்டலும் கேலியுமாக விவரிக்கிறார்.
`தில்லை கோவிந்தன்' என்ற ஆங்கில நாவலில் வரும் தில்லை சாம்பவசிவ தீட்சிதர் என்பவர் கொலைகாரன் என்றாலும்கூட பார்ப்பனன் என்பதற்காகவே மதிப்பவர்; பிற சாதியர்களைச் சாதியின் பெயரால் அவமதிப்பவர். இவருக்கு எதிரில் வந்த சாணார் இளைஞர் ஒருவர் சாதி வழக்கப்படி ஒதுங்கிப் போகாததால், அவருடைய காலில் முள் தைத்துவிடுகிறது. அதற்காக சில மறவர்களைக்கொண்டு அந்தச் சாணார் இளைஞரை நையப்புடைக்கிறார். ஆனால், அந்தச் சாணார் இளைஞரோ கிறித்துவராதலால் பாதிரியாரின் துணையுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, பார்ப்பன நீதிபதியாலேயே தீட்சிதருக்கு அபராதம் வாங்கித் தருகிறார். இப்படி, தன் பல படைப்புகளில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற புதிய ஏற்பாட்டை உற்சாகத்துடன் கொண்டாடும் ஜனநாயகவாதியாக மாதவய்யா வாழ்ந்திருக்கிறார்.
அவர் வாழ்ந்த காலத்தில் காந்தியுகம் தொடங்கியிருந்தது. பெரியார், அம்பேத்கர் போல சமூக விடுதலையை முன்னெடுத்த பெரியவர்களும் சகபயணிகளாக வாழ்ந்துகொண்டிருந்தனர். அரசியல் விடுதலையா, சமூக அக விடுதலையா என்ற கேள்வி முன்னுக்கு வந்துகொண்டிருந்தது. அ.மாதவய்யா, அக விடுதலைக்காகத் தன் வாழ்வைக் கழிக்க விரும்பினார்.
``சம்பூர்ண சுயராஜ்யம், அரசியல்ரீதியில் பெறுவதல்ல... வறுமை, அறியாமை நீக்கித் தாழ்த்தப்பட்டவர்கள் விடுதலை பெற்றுச் சமமாகிறபோதுதான் அந்தச் சுயராஜ்யம் கிடைக்கும்என்று தன் பார்வையை அன்றே தெளிவாக முன்வைத்தவர் மாதவய்யா. தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய அவரது கருத்தும் மனங்கொள்ளத்தக்க வகையில் தெளிவானது.
`ஆரியர், திராவிடர்களுக்கு முன்பே இந்த நாட்டுக்கு உரியவர்கள். இவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்எனப் பொட்டில் அடித்தவர். `தீண்டத்தகாதாரை மனிதரிலும் கீழாய் நடத்திக்கொண்டு நாம் (பார்ப்பன - வேளாளர்), நம்மை ஆள்பவர்களிடமிருந்து (ஆங்கிலேயர்) சம உரிமை கேட்பது வெட்கத்துக்குரியது' என்று எழுதினார்.
நல்ல உத்தியோகத்தை, நல்ல சம்பளத்தை தன் 50-வது வயதில் உதறித் தள்ளிவிட்டு அச்சகம் ஒன்றைத் தொடக்கி `பஞ்சாமிர்தம்' என்ற பத்திரிகை வழியே சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கினார். நாட்டு விடுதலைக்கு முன் நிபந்தனை, `சமூக விடுதலை', அந்தச் சமூக விடுதலைக்கு முன் நிபந்தனை, `தனி நபர்களின் விடுதலை' என்ற கொள்கையுடையவராக மாதவய்யா இருந்தார். சூத்திர சாதியரிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்த தந்தை பெரியார்  வாழ்நாள் முழுவதும் பாடுபட்டதைப்போல, தனிப்பட்ட முறையில் மாதவய்யா தான் பிறந்த பார்ப்பன சமூகத்தாரிடையே கருத்துப் போரை நடத்தினார்.
ஆங்கில ஆட்சி நிறைவேற்றிய பல சட்டங்கள் - சதி வழக்கத் தடைச்சட்டம் (1829), கட்டாய அடிமைமுறைத் தடைச்சட்டம் (1843), விதவை மறுமணச் சட்டம் (1856), குழந்தை மணத் தடைச்சட்டம் (1891,1921) போன்றவை உடனடியாக நடைமுறைக்கு வந்ததும் ஆங்கிலக் கல்வி பரவலாகி சமூகத்தில் உருவான சமத்துவச் சிந்தனைகளும் சாதி வேற்றுமைகளை ஏற்காத கிறித்துவ மதபோதனைகளும் இறுகிக்கிடந்த இந்து சாதி சமய அமைப்பை பல முனைகளிலிருந்தும் தாக்கிக்கொண்டிருந்த காலம் அது. இந்து சமூகத்தைச் சீர்திருத்தி கௌரவமான முகத்தை அதற்கு வழங்கிட, பல அறிவாளிகள் முயன்றனர். அவர்களில் ஒருவர்தான் மாதவய்யா. முதலில் திருந்தவேண்டியது பார்ப்பன சாதிதான் என்று அவர் தீர்க்கமாக நம்பினார். `நம்முடைய நாகரிகங்களுக்கெல்லாம் மூலஸ்தானமாகிய பிராமணரது ஆச்சார அனுஷ்டானங்களை வேண்டியவாறு சீர்திருத்துவதே நமது முதற்கடமை' என்று எழுதினார்.
மாதவய்யாவின் படைப்புலகை ஆய்வுசெய்த தமிழின் மிக முக்கியமான ஆய்வாளரான ராஜ் கௌதமன் தன்னுடைய ஆய்வில் `மாதவய்யாவைப் பொறுத்தவரை, மனிதனை அளவிடுவதற்கு சாதிப் பிறப்பைவிட, தனிமனிதப் பண்புதான் அளவுகோலாக இருந்தது. குற்றங்கள் மிகுந்த ஒருவனை, அவன் பார்ப்பனன் என்பதற்காக ஏற்றுக்கொள்ளும் பார்ப்பனர்கள், நற்குணமும் நல்லொழுக்கமும் நிறைந்த பார்ப்பனர் அல்லாத உத்தமமான ஒரு மனிதரை, தங்களைவிடத் தாழ்ந்தவர் என சாதியின் பெயரால் ஒதுக்குவதை மாதவய்யா ஏற்கவில்லை. மொத்தத்தில் வாக்குண்மை, மனச்சுத்தி, மெய்யறி ஒழுக்கம் ஆகியவற்றை மதிக்காமல் வெளிவேஷத்தையும் பகட்டையும் பணத்தையும் பெரிதாகப் போற்றும் வாழ்க்கைப் பார்வையை மாதவய்யா கடுமையாக விமர்சனம் செய்தார்' என்று குறிப்பிடுகிறார்.
பெரிய ஒழுக்கமும் தர்மமும் வேதவியாக்கியானமும் பேசும் பிராமணர்களுக்குள் பெண் பித்தர்களும் மனிதாபிமானவற்றவர்களும் இருப்பதை, தன் பல கதைகளிலும் நாவல்களிலும் கதாபாத்திராங்களாக்கிக் கைகொட்டிச் சிரித்தவர் மாதவய்யா. `பஞ்சாமிர்தம்' பத்திரிகையில் தன்னுடைய அரசியல் கருத்துகளையும் தலையங்கத்திலும் கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறார்.
அவருடைய சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை `ஏணியேற்ற நிலையம்' என்னும் கதை. சேரன்மாதேவியில் வ.வே.சு ஐயர் ஆரம்பித்த பிரசித்திபெற்ற குருகுல அனுபவத்திலிருந்து கிளைத்தெழுந்த புனைவாக அது அமைந்துள்ளது. அதில் சமபந்தி போஜனம் இல்லாமல் பிராமணப் பிள்ளைகளுக்கு மட்டும் தனி பந்தி வைத்ததால், தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையே ஏற்பட்டதை நாம் அறிவோம். அ.மாதவய்யா, தனது இந்த `ஏணியேற்ற நிலையம்' கதையில் உண்மையிலேயே எல்லா சாதிப் பிள்ளைகளுக்கும் ஒரே சமையல், ஒரே சாப்பாடு என்கிற லட்சியத்தோடு ராமலிங்கம் என்கிற தேசபக்தர் ஏணியேற்ற நிலையத்தை ஆரம்பிக்கிறார். இதை இப்போது வாசிக்கும்போது கலைஞரின் சமத்துவபுரம் திட்டத்தை இது ஞாபகப்படுத்துகிறது. கதையை அவர் சொல்லிச் செல்லும் பாங்கில் அன்றைய காங்கிரஸின் சீர்திருத்தத் திட்டங்களையும் வெற்று முழக்கங்களையும் போலிமையையும் பகடிசெய்வதைக் காணலாம்.
ஜாமீன் கொடுக்க மறுத்து, நான்காவது முறை ஜெயிலிலிருந்து திரும்பி வெற்றி மாலைகள் அணிந்து, சொற்பொழிவுகள் சொரிந்து, ஒருவாறு ஆடிப்பாடி அமர்ந்த பிறகு, கதரையும் தீண்டாமையையும் தவிர மற்ற தேசிய பரவர்த்திகள் எல்லாம் தீண்டுவாரற்றுக் கிடப்பதை ராமலிங்கர் உணர்ந்தார். என் செய்வதென்று தெரியாமல் சில நாள் பயனின்றிக் கழிந்த பிறகு, சன்னமான நூலைத் தன்னால் நூற்க முடியாது என்பதை அனுபவத்தில் அறிந்தவராதலின், சாதி மத பேதங்களை வேரோடு களைந்து, தமிழர்கள் எல்லோரையும் ஒன்றுபடுத்தும் கடமையைக் கைக்கொள்ள நினைத்தார்.
தான் செய்தற்குரிய தேசத்தொண்டு இன்னதென்று துணிந்த பிறகு, தன்னிடம் இருந்த சிறு பொருளையும் பிறர் உதவியைக்கொண்டும் ராமலிங்கர் `ஏணியேற்ற நிலைய'த்தை ஸ்தாபித்தார். அதன் திறப்பு விழா கொண்டாட்டத்தன்று, ஜனநாயகர்கள் பலர் விஜயம் செய்து, சிற்றுண்டி அருந்தி, பிரசங்கமாரி பொழிந்தனர். ராமலிங்கர் சாதி ஏணியிலே கீழ்ப்படிகளில் இருப்பவர்களை மேலேற்றிவிடும் தன்மையினால், அந்த நிலையத்துக்குத் தான் சூட்டிய விசித்திர நாமத்தைப் பற்றி அரிய சொற்பொழிவு ஒன்றை சொரிந்தார்.
ராமலிங்கர் அந்த நிலையத்தை நடத்திவந்த விதமும் விந்தையானது. நடுநிலை உத்தியை அனுசரித்து `மேல்சாதியரைச் சற்றுக் கீழே இறக்கி, `கீழ்சாதியரை மேலே உயர்த்திவிட்டால், எல்லோரும் ஒரு பொது மேடையில் சாதிபேதமின்றி வாழலாம் என எண்ணினார். முதலில் மாமிசம் உண்ணும் விஷயம் பெருந்தடையாக இருந்தது. இப்போது ஊன் உண்ணும் சாதியர்கள், `அதை நீக்கிவிட்டால் இந்தியாவுக்குள்ள அரைகுறையான சரீர பலமும் அறவே ஒழிந்துபோகும்' என்று சிலர் அஞ்சினர். ஊன் உண்பது கடவுள் ஆக்கினைப்படி ஒழுகுவதே என்று சிலர் வாதாடினர். முடிவில் தன் ஆசிரமம் சம்பந்தப்பட்ட வரையில் ராமலிங்கர் புலாலை மறுத்துவிட்டார்.
இப்படி ராமலிங்கர் ஆரம்பித்த `ஏணியேற்ற நிலைய'த்தில் பிராமணர், க்ஷத்திரியர், முதலியார், பிள்ளைமார் தலா இரண்டு பேரும், முக்குலத்தோர் மூன்று பேரும், தீண்டா சாதியர் நான்கு பேரும் சேர்ந்திருந்தனர். முதலில் ஒரு பிராமணச் சமையல்காரரை நியமிக்கிறார். எல்லோரும் சாப்பிடுகிறார்கள். பிறகு அது நியாயமில்லை என, ஒரு சைவ வேளாளத் தவசிப்பிள்ளையைத் திட்டம் செய்கிறார். அந்தச் சமையல்காரர் தான் சமைத்ததைத் தானே சாப்பிடுவதில்லை. `மேல்சாதி, கீழ் சாதியர் எல்லாம் சாப்பிட்ட மிச்சத்தை தான் சாப்பிடுவதா?' என்கிற உணர்வில் தவசிப்பிள்ளை சாப்பிட, தன் வீட்டுக்குப் போய்விடுவார்.
அந்த நிலையத்துக்கு சாட்சாத் காந்தி மகானே நேரில் வந்து ராமலிங்கரைப் புகழ்ந்து பேசுகிறார். அன்று இரவு ராமலிங்கருக்குப் புளகாங்கிதத்தில் உறக்கம் வரவில்லை. இரண்டொரு முஸ்லிம்கள், கிறித்தவர்களையும் நிலையத்தில் சேர்த்துவிட வேண்டும் எனத் திட்டம் தீட்டுகிறார். ஆனால், மறுநாளே பிரச்னை வெடித்துவிடுகிறது. நிலையத்தில் அவரவர் சாப்பிட்ட பாத்திரத்தை அவரவர் கழுவ வேண்டும் என்பது விதி.
பழனி முதலிக்குக் காய்ச்சல். ஆகவே அவர் கஞ்சி குடித்த பாத்திரத்தை சமையல்காரரைக் கழுவி வைக்கச் சொல்கிறார். `நான் வேளாளப்பிள்ளை என்பது தெரியாதோ? என்ன வாய்க்கொழுப்பு இருந்தால், என்னைக் கழுவச் சொல்லுவாய்?' என்று பாய்ந்துவிடுகிறார். ராமலிங்கம் தலையிட்டபோது ``பள்ளனுக்கும் பறையனுக்கும் சாதிகெட்ட பயல்களுக்கும் பொங்கிப் போடுகிற இந்தப் பொல்லாத வேலை வேண்டாம்'' என்று வேலையைவிட்டுப் போய்விடுகிறார். பிறகு இரண்டு பறைச் சிறுவர்களை உதவிக்கு வைத்துக்கொண்டு ராமலிங்கர் தானே களத்தில் இறங்கிச் சமைக்கிறார். ஆனால், நிலையத்திலிருந்த 14 பேரில் 9 பேர் அதைச் சாப்பிட மறுத்து, சத்தியாக்கிரகம் இருக்கின்றனர். மாதவய்யா, கதையை முடிக்கும் கடைசிப் பத்தி பகடியும் சோகமும் கவிந்தது.
``ஏணியேற்ற நிலைய'மாகச் சில மாதங்களுக்கு இயங்கிய வீடு, இப்போது ஒரு கடையாகி, பழைய கோணிச்சாக்குகளும், கெரோசின் டின்களும், பீப்பாய் பிதிலிகளும் அதில் விற்கப்படுகின்றன. மூடபக்தி மூட்டைகள், சாதிக்கொழுப்புப் பிதிலிகள், வீண் டம்ப டின்கள், சத்திழந்த ஆசாரக் கழிசடைகள் போன்ற பழைய பண்டங்கள் மட்டும் அங்கே விலையாவதில்லை.
பிதிலி - எண்ணெய் பாத்திரம்
1925-ம் ஆண்டில் `பஞ்சாமிர்தம்' இதழில் வந்த கதை இது. விடுதலைப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிய அந்த நாளிலேயே அதற்குள் குடிகொண்டிருந்த போதாமைகளை விமர்சித்த இந்தக் கதை, பல வரலாற்று உண்மைகளையும், மனித மனதில் மாற்றம் வராமல் சும்மா அமைப்புகளை உருவாக்கினால் மட்டும் மாற்றம் வந்துவிடாது என்பதையும் சாப்ளின் பாணியில் கேலி பூசிய சோகத்துடன் சொல்கிறது.
ஜனநாயக எண்ணம்கொண்டவரான அ.மாதவய்யா, தமிழ்வழிக் கல்வியையும் ஆட்சியில் தமிழையும் வலியுறுத்துபவராக இருந்தார். மொழியும் ஜனநாயகமும் பிரிக்க முடியாதவை என்கிற புரிதல் அவருக்கு இருந்தது. தனித்தமிழ் மீதும் காதல் கொண்டிருந்தார். கலப்பில்லாத தனித்தமிழ் நடையில் சித்தார்த்தன் என்னும் நூலை (புத்தரின் வரலாறு) எழுதினார்.
1925-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் நாள் பிற்பகல் 3.40 மணி அளவில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில், `பி.ஏ பட்டப்படிப்பில் தாய்மொழியைக் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும்'' என ஆவேசமாகப் பேசிவிட்டு அமர்ந்தார். அடுத்த சில நிமிடத்தில் மூளையின் ரத்தநாளங்கள் வெடித்து உயிர் துறந்தார்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஓர் ஆளுமையாக தமிழ் மண்ணில் தனித்தடத்தை பதித்தவர் அ.மாதவய்யா. நம் தமிழ்ச் சாதி, அவரை அப்போதும் கண்டுகொள்ளவில்லை; இப்போதும் கண்டுகொள்ளவில்லை.
ஒரு துன்பியல் நாடகத்தின் இறுதிக்காட்சிபோல, அவரது வாழ்வு முடிவுக்கு வந்தது.
·          
·          
எதை எழுதினாலும் அதில் விடுதலையைப் புகுத்தியவன் பாரதி...! கதை சொல்லிகளின் கதை பாகம் 3



தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முதல் அலையாகிய 1910 - 1925 காலகட்டத்தின் மூன்று முன்னோடிகளான வ.வே.சு.ஐயர்அ.மாதவய்யா, பாரதி ஆகிய மூவரில் மற்ற இருவரையும் விட, பாரதியின் பெயரும் புகழும் விரிந்து பரவியதற்குக் காரணம், அவரது கவிதைகள்; அதுமட்டுமின்றி, சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாகவே அவரும் அவரது கவிதைகளும் ஆகிவிட்டதும் ஒரு காரணம். எட்டுத் திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் தமிழுக்குக் கொணர்ந்து சேர்க்கும் பணியில் அவர் அளப்பரிய பங்காற்றியுள்ளார். கவிதை, வசனக்கவிதை, கட்டுரைகள், கதைகள், சிறுகதைகள், நாவல், கார்ட்டூன் என எல்லா வடிவங்களிலும் எழுதிப்பார்த்தவர் பாரதி. ஆனாலும், அவரை சிறுகதை ஆசிரியராக தமிழ் இலக்கிய உலகம் முன்னிறுத்தவில்லை.

தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றை எழுதிய அமரர் சி.சு.செல்லப்பாகூட பாரதியை விட்டுவிட்டார். பிறகு தவறை உணர்ந்து அந்த நூலின் (தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - காலச்சுவடு பதிப்பகம்) இரண்டாம் பதிப்பில் சேர்க்கிறார். அது பற்றிக் குறிப்பிடும்போது ``வ.வே.சு.ஐயரின் `குளத்தங்கரை அரசமரம்எழுதப்படுவதற்கு ஏறத்தாழ பத்து ஆண்டுகள் முன்னரே பாரதி எழுதிய சிறுகதை இது (ஆறிலொரு பங்கு) என்ற அளவில் மட்டுமேகூட இதை ஒரு முன்னோடியாக நாம் கருத இடமிருக்கிறது. ஏன் இந்தக் கதையும் கணிப்பும் மறக்கப்பட்டன என யோசித்தால், பாரதியின் கவிதைகளும் கட்டுரைகளும் நம் மனதில் வேறு எதற்கும் இடமில்லாமல் செய்துவிட்டன என்றுதான் தோன்றுகிறது'' என்கிறார்.
இலக்கியத்தின் ஒவ்வொரு துறை, ஒவ்வொரு வடிவம் குறித்தும் தீர்க்கமான முடிவுகளும் கணிப்புகளும் பாரதிக்கு இருந்தன.
தமிழ் வசனநடை இப்போதுதான் பிறந்தது. பல வருஷங்களாகவில்லை. இப்போது நமது வசன உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்”  -  சொல்லும் பாரதிக்கு, உரைநடை குறித்து திட்டவட்டமான கருத்து இருந்தது. உரைநடை இலக்கியம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அழுத்தமான புரிதலுடன் சொல்கிறார்... ``கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என் கட்சி. ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம்... என எதை எழுதினாலும் வார்த்தை சொல்வது மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது. இந்த அடிப்படையைத் தவறவிட்டால்  வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். இந்தப் பண்பு, உரைநடையில் ஏறியிருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு வாசித்துப் பார்த்துக்கொள்வது நல்லது'' என்று மேலும் தெளிவுபடுத்துகிறார்.
பொதுவாக, சிறுகதை எழுதுவோர் நினைவில் கொள்ளவேண்டியவை என இன்று நாம் பேசிக்கொள்ளும் சில விஷயங்கள் உண்டு. எதை எழுதுவது, எப்படி எழுதுவது, யாருக்காக எழுதுவது, யாராக இருந்து எழுதுவது என்கிற நான்கு அம்சங்கள் அவற்றில் அடிப்படையானவை.
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்ட ஒரு தேசத்தின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பவேண்டிய கடமை தனக்கு இருப்பதாக உறுதியாக நம்பியவன் பாரதி. ஆகவே, அவன் எதை எழுத வேண்டும் என்பதில் தெளிவான பார்வை கொண்டிருந்தான். சுதேசியம், ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஒன்றுபட்ட தேசிய எழுச்சிக்குத் தடைக்கற்களாகத் திகழும் சாதிய ஒடுக்குமுறை, பெண் அடிமைத்தனம், இந்தியர்களின் அடிமைப்புத்தி போன்றவையே அவனது எழுத்தின் சாரமாக அமைந்திருந்தன. பாரதி, சிறுகதை வடிவத்தைக் கையிலெடுத்தபோதும் இவை பற்றியே எழுதினான்.
எதை எழுத வேண்டும் என்ற கருத்தில் தெளிவு, எழுத்துக்கு மிக அடிப்படையான அம்சம் என பாரதி கருதினார். ``சொல்லவந்த விஷயத்தைச் சரியாகக் கட்டியமைத்துக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால், கை தானாகவே நேரான எழுத்து எழுதும். தைரியம் இல்லாவிட்டால், வசனம் தள்ளாடும். சண்டி மாடுபோல ஓரிடத்தில் படுத்துக்கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.

ஆங்கிலேய ஆட்சியின்கீழ் வாழ்ந்துகொண்டு, அந்த ஆட்சி ஒழிய வேண்டும் என எழுதுவதற்கும் சாதி ஆதிக்கம் உச்சத்தில் இருந்த அந்த நாள்களில் அதற்கு எதிராகப் பேசுவதற்கும் நிச்சயமாக எழுத்தாளனுக்கு நேர்மையும் தைரியமும் அடிப்படையான குணாம்சங்களாக இருந்திருக்க வேண்டும். பாரதி, தன் வாழ்நாள் முழுவதும் முன்வைத்த முழக்கம் எது என ஆய்வு செய்த இலங்கைப் பேராசிரியர் ந.ரவீந்திரன்,
`பார்ப்பானை `ஐயர்' என்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே!'
என்ற இரு வரிகளில் அது அடங்கியிருப்பதாகக் கூறுவார். இந்த இரட்டைத் தேசியமே பாரதியின் அரசியல். அவருடைய சிறுகதைகளிலும் இது தொடர்வதையும் கூடுதல் அழுத்தம் பெறுவதையும் நாம் காணலாம். அவருடைய சிறுகதைகளில் மிகவும் போற்றப்படும் கதை சி.சு.செல்லப்பா குறிப்பிட்ட `ஆறிலொரு பங்குஎன்னும் கதையே.
இந்தச் சிறுகதையை பாரதியார் 1913-ம் ஆண்டில் எழுதியிருக்கிறார். இந்தச் சிறுகதைக்கு பாரதி எழுதிய முகவுரையில், `ஒரு சாதி, ஓர் உயிர், பாரத நாட்டில் உள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு சாதி. வகுப்புகள் இருக்கலாம், பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம். பிறவி மாத்திரத்தாலே உயர்வு-தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம், மத விரோதங்கள் இருக்கலாகாது. இந்த உணர்வே நமக்கு ஸ்வதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும். வேறு வழியில்லை. இந்த நூலை பாரத நாட்டில் உழவுத்தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத்தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்' என்று எழுதினார்.
பள்ளர், பறையர் சாதி மக்களை, பாரதி `வைசியர்' என்று குறிப்பிடுவதை உற்று நோக்கவேண்டும். நாள் வருடங்களிலும் சேர்க்காமல், `பஞ்சமர்' என நம் சமூகம் அவர்களை வைத்துக்கொண்டிருந்த காலத்தில், பாரதி அவர்களை `வைசியர்' எனக் குறிப்பிடுகிறார்.
`மீனாம்பாள், வீணை வாசிப்பதிலே சரஸ்வதிக்கு நிகரானவள். புரசைவாக்கத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு அவள் வரும் சமயங்களில் எல்லாம் மேல்மாடத்து அறையை அவளுடைய உபயோகத்துக்காகக் காலி செய்துவிடுவது வழக்கம். நிலாக்காலங்களில் இரவு 8 மணிக்கெல்லாம் போஜனம் முடிந்துவிடும். 9 மணி முதல் நடுநிசி வரை அவள் தனது அறையிலிருந்து வீணை வாசித்துக்கொண்டிருப்பாள்' எனத் தொடங்கும் இந்தக் கதை, ஒரு காதல் கதை. அறையில் அவள் வீணை வாசித்துக்கொண்டிருக்கும்போது, வெளியே அவளுடைய தந்தையான ராவ்பகதூர் சுந்தர்ராஜுலு நாயுடு கட்டிலின் மீது படுத்துக்கொண்டு குறட்டை விட்டுக்கொண்டிருப்பார். ஆனால், மகராஜன் குறட்டைச் சத்தத்தால் வீணைச்சத்தம் கேளாதபடி செய்துவிட மாட்டார். கோவிந்தராஜனுக்கும் அவனுடைய முறைப்பெண்ணான மீனாம்பாளுக்குமான காதல் கதைதான் இது. ஆனால், இந்தப் பையன் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்துவிட்டான். தேச சேவைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க சித்தமாகிவிட்டான். அதற்காகப் பிரம்மச்சர்ய சங்கற்பம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். ஏனெனில், ``இந்தச் சுதேசியம் கேவலம் ஒரு லௌகீக காரியமன்று. இது ஒரு தர்மம். இதில் பிரவேசிப்பவர்களுக்கு வீர்யம், தேஜஸ், கர்மயோகித்தன்மை முதலிய அரிய குணங்கள் வேண்டும்குடும்பஸ்தனுக்கு அதெல்லாம் வாய்க்காது என நினைக்கிறான்.

தந்தை நாயுடு இல்லாத ஓர் இரவில் மீனாம்பாளிடம் இதுபற்றிப் பேசுகிறான். அவள் மறுமொழி சொல்லும் முன் நாயுடுவின் வண்டி கீழே வந்து நிற்கிறது.
``நாயன்னா வந்துவிட்டார். நான் போகிறேன்என்று சொல்லி ஒரு முத்தத்துடன் பிரிந்தாள். குறட்டை நாயுடு கதவை உடைத்து, உள்ளிருக்கும் குறட்டைகளையெல்லாம் எழுப்பி, மேலே வந்து படுத்து அரை நாழிகைக்கெல்லாம் தமது தொழிலை ஆரம்பித்துவிட்டார். இரண்டு ஜீவன்கள் அன்று இரவு முழுவதும் விழித்திருந்தன. ஒன்று நான்; அவள் மற்றொன்று.
வெகு இயல்பான நகைச்சுவை உணர்வுடன் தொடங்கும் கதை, பின்னர் தீவிரமான அரசியல் கதையாக மாறிவிடுகிறது. சமூக விடுதலை, தேச விடுதலை என்கிற நெருப்பில் தகித்துக்கொண்டிருந்த பாரதியின் மனம், எதைப் பற்றி எழுத ஆரம்பித்தாலும் இந்த இரண்டு விடுதலைக் கருத்துகளும் வந்து குதித்துவிடுகின்றன.
அது பற்றி பாரதியே எழுதுகிறான், ``பொதுவாக நான் கதைகள் எழுதும்போது வெறுமனே கற்பனைநயத்தைக் கருதி எழுதுவது வழக்கமேயன்றி, ஏதேனும் தர்மத்தைப் போதிக்கவேண்டு என்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. கதை என்றெடுத்தால், கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன். எனினும், என்னை மீறியே கதைகளிலும் பெரும்பாலும் தர்மபோதனைகள் வந்து நுழைந்துவிடுகின்றன.
தந்தை குறட்டை நாயுடு, வேறு மாப்பிள்ளை பார்க்க, தன் காதலைப் பற்றி அவனுக்கு மீனா சொல்ல, அது பற்றிப் பரவாயில்லை என்று அவன் பணத்துக்காகவே இவளை அடைய முயற்சிக்க, தான் சாகப்போவதாக கோவிந்தராஜனுக்குக் கடிதம் அனுப்புகிறாள். அந்தக் கடிதம் அவன் கைவந்து சேர்வதற்குள் அவள் செத்திருப்பாளே என மனமுடைந்து சந்நியாசம் பூண்டு ஊர் ஊராகச் சுற்றுகிறான் கோவிந்தராஜன். பஞ்சாப் சென்று லாலாலஜபதிராயைச் சந்திக்கிறான். அவரோ அவனைக் கோசல நாட்டில் பஞ்சத்தில் செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்குச் சேவகம் செய்ய அனுப்புகிறார். அங்கே சென்று பார்க்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கேவலமாக நடத்தப்படுவதைக் கண்டு மனம் துடிக்கிறான்.
`ஆறிலொரு பங்கு' கதையின் முக்கியமான பகுதி இது. பாரதி, கதையில் இப்படி எழுதுகிறான்... `முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' நாம் பள்ளர், பறையருக்குச் செய்வதையெல்லாம், நமக்கு அந்நிய நாடுகளில் பிறர் செய்கிறார்கள். நமது சிருங்ககிரி சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நெட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். சாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்யேகமாக விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை.
சுருக்கம்: நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்கள் என்று பாவித்தோம். இப்போது நம் எல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள். நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினர் என்று விலக்கினோம். இப்போது வேத மார்க்கஸ்தர், மகம்மதியர் என்ற இரு பகுதி கொண்ட நமது இந்து ஜாதி முழுவதையுமே உலகம் தீண்டாத சாதி என்று கருதுகிறது. உலகத்தில் எல்லா சாதியரிலும் வகுப்புகள் உண்டு. ஆனால், தீராத பிரிவுகள் ஏற்பட்டு சாதியை துர்லபப்படுத்திவிடுமானால், அதிலிருந்து நம்மைக் குறைவாக நடத்துதல் அந்நியர்களுக்கு எளிதாகிறது. `ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.'
`ஆயிரம் உண்டிங்கு சாதி; எனில், அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி' என்று கவிதையில் ஆங்கிலேயரை நோக்கிக் கேள்வி கேட்ட பாரதி, இந்தக் கதையில் உள்முகமாகத் திரும்பி இந்தியர்களைப் பார்த்துப் பேசும்போது இப்படிப் பேசுகிறான். இந்திய ஜனத்தொகையில் ஆறிலொரு பங்காக வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேசிய தலித் ஆதரவுக் கதை இது.
இந்தக் கதையில் இன்னோர் இடத்தில், இந்த மக்கள் ஏன் தாழ்த்தப்பட்டார்கள் என்பதற்கு விளக்கமாக, ``இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழில் உடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்கள் ஆக வேண்டும். ஆனால், இவர்களிலேயே பலர் மாட்டிறைச்சி தின்பது போன்ற அனாசாரங்கள் வைத்துக்கொண்டிருப்பதால், இந்து சாதி இவர்களைத் தாழ்வாகக் கருதுகிறது. இந்து நாகரிகத்திலே பசு மாடு பிரதானமான வஸ்துக்களில் ஒன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொறுத்து நிற்கின்றது. விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால் இந்துக்கள் புராதன காலம் முதலாகவே கோ மாமிசத்தை வர்ஜனம் செய்துவிட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பது கண்டு, சாதிபொதுமை அந்தப் பகுதியைத் தாழ்வாகக் கருதுகிறது. இது முற்றிலும் நியாயம். ஆனால் பஞ்சம், நோய் முதலிய பொதுப் பகைவருக்கு முன்பு, நமது உயர்வு தாழ்வுகளை விரித்துக்கொண்டு நிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்திவிட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம்என்று விவரிக்கிறான்.
சாதியின் தோற்றம்குறித்து அண்ணல் அம்பேத்கர் தொடங்கி எண்ணற்ற அறிஞர்கள் அறிவியல்பூர்வமான விளக்கங்களை இன்று முன்வைத்துவிட்டனர். பாரதியின் காலத்தில் அவை வரவில்லை. மாட்டிறைச்சி உண்பதுதான் காரணம் என நம்பியிருக்கிறான் பாரதி. மாட்டிறைச்சி அரசியலாகியிருக்கும் இன்றைய நாளில் பாரதியின் இந்தக் கருத்து நமக்கு ஒவ்வாமை உணர்வைத் தோற்றுவிக்கத்தான் செய்யும். ஆனால், இதை வைத்து பாரதியை முத்திரை குத்திவிட முடியாது. அவனை அவன் வாழ்ந்த காலச் சூழலில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டும்.
இதே பாரதி, பல கதைகளிலும் கட்டுரைகளிலும் தண்டச்சோறு உண்ணும் பார்ப்பு என்கிற அளவுக்குத்தான் பிறந்த சாதியைச் சாடுவதையும் பார்க்க வேண்டும். அவன் எழுதுவதை, ஒரு குட்டிக்கதையிலும் பார்ப்போம். கதையின் தலைப்பு `சாஸ்திரியார் மகன்.'

கதை இது:
`பிராமணப் பையன் ஒருவன், தனது விளையாட்டு வண்டி தெருவில் ஒடிந்துபோனதால், அதைப் பார்த்து அழுதுகொண்டு நின்றான்.
அதைக் கண்ட ஒரு சிப்பாய், ``குழந்தாய், ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான்.

``
வண்டி ஒடிஞ்சுப் போச்சு."

``
இதற்காக அழாதே. வீட்டுக்குப் போ. உன்னுடைய தகப்பனார் அதைச் செப்பனிட்டுக் கொடுத்துவிடுவார்."

``
எங்கப்பா சாஸ்திரியார். அவரால் வண்டியை நேர்ப்படுத்திக் கொடுக்க முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கிக்கொண்டு வருவார். வேற ஒரு எழவும் தெரியாது" என்று விம்மி விம்மி அழுதான். சிப்பாய் சிரித்துக்கொண்டே போய்விட்டான்.'
இதுபோன்ற குட்டியான கதைகளை `வேடிக்கைக் கதைகள்' என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறான் பாரதி. `ஆறிலொரு பங்கு', `சந்திரிகையின் கதை' போன்ற நெடுங்கதைகளையும் எழுதியிருக்கிறான்.
பாரதியின் இன்னொரு சுவையான கதை `காக்காய் பார்லிமென்ட்'.
`… காக்காய் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்துக்குள் படித்துவிடலாம். `கா' என்றால் `சோறு வேண்டும்' என்று அர்த்தம். `கக்கா' என்றால் `என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே' என்று அர்த்தம். `காக்கா' என்றால் `எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே' என்று அர்த்தம். இது ஆண் காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லும் வார்த்தை. `காஹகா' என்றால் `சண்டை போடுவோம்' என்று அர்த்தம். `ஹாகா' என்றால் `உதைப்பேன்' என்று அர்த்தம். இப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதி முழுவதும் காக்கை பாஷையில் க, ஹா, க்ஹ முதலிய ஏழெட்டு அட்சரங்களைப் பல்வேறுவிதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கின்றன.
இன்று சாயங்காலம் அந்த பாஷையை பரீட்சை செய்துபார்க்கும் பொருட்டாக, மேல்மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. `நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மையில் சொல்ல வேண்டாமோ?' என்று எண்ணி, சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும். அது பிரயோஜனமில்லை.' இப்படி சுவாரஸ்யமாகச் செல்லும் கதைக்குள் மனிதர்களின் மன ஓட்டங்களையும் ரஷ்யப்புரட்சி உள்ளிட்ட உலக அரசியலையும் கொண்டு வந்துவிடுகிறார்.
பாரதியின் சிறுகதைகளில் முக்கியமான கதைகளாக மதிக்கப்படுபவை அவருடைய `ஞானரதம்' கதைகள். ஞான ரதத்தில் ஏறி உபசாந்திலோகம், கந்தர்வலோகம், சத்தியலோகம், தர்மலோகம் போன்ற பல லோகங்களுக்குச் செல்வதான கற்பனையில் எழுதப்பட்ட கதைகள் இவை. மனதோடு நடத்தும் உரையாடலாக, தத்துவ விசாரணையாக நகரும் இந்தக் கதைகள் வாசகர் மனதைக் கட்டிப்போடும் கதைகள். அந்தப் பயணத்தில் தலைவலியோடு மண்ணுலகம் வந்து சேரும் காட்சி பிற்காலத்தில் புதுமைப்பித்தன் `ஒரு நாள் கழிந்தது' என்ற அற்புதமான கதையை எழுத `அடி எடுத்துக் கொடுத்தது போன்ற' உணர்வை நமக்குத் தருகிறது.

``கதையை இடையிலே விட்டுவிட்டேனே. வீரராகவ முதலித் தெருவிலிருந்து வீட்டுக்கு வந்தேனா? வரும் வழியிலே `ஜட்கா' வண்டிகள், `துரை'கள் போகும் `கோச்சு'கள், புழுதி, இரைச்சல், துர்நாற்றம், இவற்றையெல்லாம் கடந்து, முன் பகுதியிலே பசு மாடு, ராயர் வீட்டம்மாள், குழந்தைக் கூட்டங்கள் முதலிய விபத்துகளுக்கெல்லாம் தப்பி, பின் புறத்திலே `மெத்தை'க்கு வந்து சேர்ந்தேன். அங்கே எனது படுக்கை, படிப்பு, எழுத்து, பகலில் ஸ்நேகிதர்கள் வந்தால் அவர்களுடன் சல்லாபம் முதலிய நாலாயிர விஷயங்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்ட அறையின் வெளிப்புறத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வந்து ஏனென்றாள். ``தலை நோவு பொறுக்க முடியவில்லை. கொஞ்சம் மிளகு அரைத்துக் கொண்டு வா" என்றேன். ``ஆமாம்; இரண்டு நாளைக்கு ஒருமுறை இதொரு பொய்த் தலைவலி வந்துவிடும். என்ன வேலை யேவுகிறதற்காக? அதெல்லாம் சரிதான்... பால்காரி வந்து மத்தியானம் பணம் கேட்டுவிட்டுப் போனாள். ராயர் வீட்டு அம்மாள் குடக்கூலிக்கு ஞாபகப்படுத்தச் சொன்னாள். ராயர் நேற்றே சொன்னாராம். இந்த மாதம் குழந்தைக்குக் காப்பு வாங்க ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தீர்கள். என்னைத்தான் ஏமாற்றுகிறது வழக்கமாகவே போய்விட்டது" இன்னும், அது இது என்று ஆயிரங்கணக்கு சொன்னாள்.
அன்று மாலை அவள் சொல்லிய கணக்குகளை எல்லாம் தீர்க்கவேண்டுமானால், குறைந்தபட்சம் மூன்று லட்சம் ரூபாய் வேண்டும் என்று என் புத்திக்குப் புலப்பட்டது. கடைசியாக ``தெருவிலே போகிற நாய்களுக்கெல்லாம் பணத்தை வாரி இறைக்கிறது; வீட்டுச்செலவைப் பற்றிக் கேட்டால் முகத்தைச் சுளிக்கிறது. இப்படிச் செய்துகொண்டே வந்தால், அப்புறம் என்ன கிடைக்கும்? மண்தான் கிடைக்கும்" என்று ஆசீர்வாதம் பண்ணிப் பிரசங்கத்தை முடித்தாள்.
``தலை நோவு தீர்ந்துபோய்விட்டது. நீ தயவுசெய்து கீழே போகலாம்என்று வணக்கத்துடன் தெரியப்படுத்திக்கொண்டேன். ``ஆமாம்.... ஊர்க்காரர் கூடவெல்லாம் ஓயாமல் பேசித் தொண்டைத் தண்ணீரை வற்றவைத்துக்கொண்டிருக்கலாம். நான் ஒரு வார்த்தை பேச வந்தால், உடனே கோபம் வந்து விடும்என்றாள். அவள் மனதில் என்னை சமாதானப்படுத்துவதாக எண்ணம். நடுத்தரவர்க்கத்து வாழ்க்கையின் அசலான ஒரு பக்கத்தை இப்படி எழுத முடிந்திருக்கிறது பாரதியால்.
புதுமைப்பித்தனிடம் பின்னர் துலக்கம் பெற்றதுபோல சிறுகதை வடிவம் பாரதியிடம் செம்மை பெறவில்லை என்றபோதும், மேற்கண்டதுபோல கதைகளின் சில பக்கங்கள் நுட்பமான சிறுகதைகளாகவே வார்க்கபட்டுள்ளதைக் காணலாம்.
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் பிறந்த பாரதி, 1921 செப்டம்பர் 11 அன்று சென்னை திருவல்லிக்கேணியில் காலமாகிறான். அவன் வாழ்ந்தது 39 ஆண்டுகள்தாம். 15 வயதில் பாடல் எழுதத் தொடங்கிய பாரதி எட்டயபுரம் ஜமீன் சேவகராக இருந்ததைவிடுத்து 1904-ம் ஆண்டில் வெளியேறிய பின்னரே சாகாவரம் பெற்ற பாடல்களை எழுத முடிந்தது.
செல்லமாள் பாரதியின் வார்த்தையிலேயே பாரதியின் வாழ்க்கைச் சுருக்கத்தைக் கேட்கலாம். 1904-ம் வருஷத்தில் `சுதேசமித்திரன்' பத்திரிகையில் உப பத்திர அதிபராக அமரும் முன்பே, நம் நாட்டைப் பற்றிய கவலை அவருக்கு அதிகம் ஏற்பட்டுவிட்டது. எட்டயபுரம் சமஸ்தான அதிபதியின் கீழ் தான் ஏற்றுக்கொண்ட வேலையைத் திரணமாக நினைத்துத் தள்ளினார். மதுரை சேதுபதி வித்யாசாலையில் தமிழ்ப்பண்டிதர் வேலையையும் அற்பமாக எண்ணித் தள்ளினார். சுதேசமித்திரன் பத்திரிகைக்கு உழைக்க ஆரம்பித்தவுடன் அவரது உள்ளம் மலர்ச்சியடைய ஆரம்பித்தது. சுமார் இரண்டு வருஷம் கழிந்த பிறகு `இந்தியா' என்னும் வாராந்திரப் பத்திரிகையை ஆரம்பித்தார். உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கர்யத்துக்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்தார். சரஸ்வதி தேவி, அவர் வாக்கில் நர்த்தனம் ஆட ஆரம்பித்தாள்.

வறுமை காரணமாக எட்டயபுரம் ஜமீனில் வேலைபார்த்த ஆறாண்டு காலத்தில், பாரதி ஏதும் எழுதவில்லை. மனம் ஒவ்வாத அடிமைச் சேவகமும் ஜமீந்தாரைக் குஷிப்படுத்த `கண்டதையும்' பேசிக்கழிக்கவேண்டியிருந்த துக்கமும் அவர் படைப்பு மனதின் குரல்வளையை நெரித்திருந்த காலம். இந்தக் காலத்தின் சோகக்கதையை சிரிக்கச் சிரிக்க பாரதி `சின்னச் சங்கரன் கதை' என்கிற முற்றுப்பெறாத கதையில் எழுதியிருக்கிறான். பாரதி எழுதாத இந்தக் காலம் பற்றி பா.கிருஷ்ணகுமார் `அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதியார்' என்கிற நூலில் ஆய்வுசெய்துள்ளார்.
பாதியியலில் தோய்ந்தெழுந்த ஆய்வாளர்களான ஆ.இரா.வேங்கடாசலபதி, ய.மணிகண்டன் போன்றோர் பாரதியின் வாழ்வில் வெளிச்சம் பெறாத பக்கங்களின் மீது ஒளி பாய்ச்சும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகின்றனர். சலபதியின் `எழுக நீ புலவன்' என்ற நூல், பாரதி என்னும் மகாகவியின் எழுச்சியையும் அதிர்ச்சியூட்டும் சில வீழ்ச்சிகளையும்கூட சான்றாதரங்களுடன் விளக்குகிறது.
அவன் வாழ்ந்த காலத்தில் அவனைத் தமிழ்ச் சமூகம் கண்டுகொள்ளவில்லை. புரவலரைத் தேடி அலையும் அவல வாழ்வே வாழ்ந்துள்ளான். தானே ஒரு பதிப்பகம் தொடங்கும் கனவை விரித்திருக்கிறான்.
`ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியாருக்கு, தமிழ்நாட்டில் நிகரற்று உயர்ந்த கீர்த்தி ஏற்பட்டிருக்கிறது. இவர் நூல்களை வாங்காமல் ஜனங்கள் யாருடைய நூல்களை வாங்கப்போகிறார்கள்? இந்த நூல்கள் இரண்டு வருஷங்களில் விலையாகிவிடும். அதற்குள்ளே இரண்டாம் பதிப்புகளுக்கும் புதிய நூல்களுக்கும் வேண்டுதல் ஏற்படும் என்பது மிகவும் நிச்சயம்' என்று பாரதி எழுதினான். பதிப்பகத்தைத் தொடங்கிட 30,000 ரூபாய் தேவைப்படும் எனக் கணக்கிட்டான். அதை எந்தப் புரவலரிடமும் கேட்க மனமில்லை. நூறு ரூபாய் வீதம் மக்களிடம் கடனாகப் பெற்று மீண்டும் வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிடலாம் என எண்ணினான். ஆனால், பாரதியின் பெருந்திட்டம் தோல்வியையே தழுவியது. ஒருவரும் கடனுதவி செய்து திட்டத்தை நிறைவேற்ற முன்வந்ததாகத் தெரியவில்லை. புரவலர் மட்டுமல்ல, மக்களும்தான் பாரதியைப் புறக்கணித்துவிட்டனர்.
காவல் துறை அவனைத் துரத்திக்கொண்டிருந்தது. கைதுசெய்து கடலூர் சிறையிலும் போட்டது. சிறைவாசம் முடிந்து கடையத்திலோ பாபநாசத்திலோ சொந்த ஊரிலோ போய் வாழ வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படுகிறான். கடையத்துக்கு வந்து சேர்கிறான். அது பற்றி பாரதியாரின் சரித்திரம் நூலில் செல்லம்மாள் பாரதி எழுதுகிறார், `கடுமையான யோகாப்பியாசத்தினாலும், சகிக்க முடியாத பல கஷ்டங்களாலும் என் கணவரது பொன் நிற மேனி கருகி, பார்க்கச் சகிக்காமல் எலும்பும் தோலுமாக மாறியது. புஸ்தகங்கள் அச்சிட்டு வெளியிடுவதற்கான முயற்சிகள்கூட பலிக்கவில்லை. பொருளாதார நிலை ஒரு காரணம். மற்றொன்று `கலையுணர்ச்சிநாட்டில் சிறிதளவேனும் இல்லாதது. மூன்றாவது மக்களுக்குப் பீடித்திருந்த ஆங்கிலக் கல்வி மோகம். தமிழ் மக்களுக்கு பாரதியார் சொன்னதெல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதினதுபோல்தான் ஆயிற்று. கடையமோ நாகரிக வாசனை இல்லாத பிற்போக்கான கிராமம். அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு சமூக முன்னேற்றத்துக்கு ஒருவன் உழைத்தால் அவன் கதி என்னவாகும்?'
1920-ம் ஆண்டில் மீண்டும் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகச் சேர்கிறான். 1921-ம் ஆண்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு, நோயுற்று வீழ்கிறான்.1921-ம் ஆண்டில் செப். 11 நள்ளிரவு 1 மணிக்கு காலமாகிறான்.
கடைசியாக அவன் பேசியது, 1921 ஜூலையில் ஈரோடு கருங்கல்பாளையம் வாசகச் சாலையில். தலைப்பு, `மனிதனுக்கு மரணமில்லை'.