Saturday 16 January 2021

என் பார்வையில் 2020ன் சிறந்த புனைவுகள்

 சரவணன் மாணிக்கவாசகம் முகநூலில் எழுதிய பதிவு

2020 தமிழ் இலக்கியஉலகைப் பொறுத்தவரை சிறுகதைகளின் வருடம் என்றே கூறவேண்டும். கொரோனா இல்லாதிருந்தால், சென்னையின் பிரமாண்டமான புத்தகக்கண்காட்சி வழமை போல் இருந்திருந்தால், நாவல்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியிருந்திருக்கும்.
இந்தப்பட்டியலில் நான் வாசித்த 2020ல் வெளியாகி புத்தகத்திலும் 2020 என்ற ஆண்டைத் தாங்கிய நூல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. எண்கள், ஏறுவரிசையிவோ, இறங்கு வரிசையிலோ, தரவரிசையைக் குறிக்கவில்லை.
நாவல்கள்:
1. தீம்புனல் – ஜி.கார்ல்மார்க்ஸ்
வித்தியாசமான ஆனால் உயிர்துடிப்புள்ள மனிதர்கள் வந்து போகிறார்கள். எத்தனையோ பேர் இருக்கிறார்கள் இந்தக் கதையில் ஆனால் காரணம் தெரியாமல் என் மனம் விசாலாச்சியை சுற்றியே வருகிறது. எல்லா கதாபாத்திரங்களுமே புகைமூட்டத்தின் ஊடாகத் தெரியும் உருவம் போல் மங்காமல் செதுக்கி வைத்ததைப் போல் இருக்கிறார்கள. இவரது மொழியின், கதை சொல்லலின் முதிர்ச்சி, இது இவரது முதல் நாவல் என்பதை சிரமப்பட்டு நம்பும் படி செய்கிறது. மொழிநடை அங்கங்கே வசனகவிதையாதலும் நிகழ்கிறது.
2. கழுதைப்பாதை- எஸ். செந்தில்குமார்
கழுதைப்பாதை குடும்பத்தைப் பிரிந்து சொற்ப வருமானத்திற்கு கால்கள் தேய அலையும் கூலிகள் பற்றிய கதை. முகட்டிலிருந்து போடி அடிவாரம், இருபத்திரண்டு மைல்கள், அதன் பின் அடிவாரத்திலிருந்து ஊருக்கு,, ஐம்பது கழுதைகளை காப்பித்தளர் பொதியுடன் மலைப்பாதையில் உருண்டு விடாமல், நரி, செந்நாய்க்கு காவு கொடுத்து விடாமல் முதலாளியிடம் சேர்ப்பிக்க வேண்டும். கொல்லத்திலிருந்து தஞ்சாவூருக்கும், வேதாரண்யத்திற்கும் நூறு மாடுகளில் உப்புமூட்டைகள் ஏற்றிக்கொண்டு நடை பயணம். புளியமரத்தின் கதை தாமோதரன் ஆசான் போல் இந்த நாவலில் மூவண்ணா வருகிறார். மூவண்ணா குடும்பத்தில் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது.
3. இடபம் - பா.கண்மணி:
இரண்டு காரணங்களுக்காக இந்த நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. முழுக்க முழுக்க பங்குசந்தையை மையமாக வைத்து எழுதப்படுவதுமன்றி இதில் கூறப்பட்ட எந்தத் தகவல்களும் பிழையில்லை.(factual errors) எனில் பங்குசந்தையை நன்கு அறிந்த ஒருவரால் எழுதப்பட்டது. நான் அடிக்கடி சொல்வது போல் பல்துறை வல்லுந‌ர் தமிழில் எழுத வரவேண்டும். இரண்டாவது அறுபதுகளில் பிறந்தவர்களுக்கேயான தயக்கங்கள் எல்லாவற்றையும் தொலைத்த Boldஆன எழுத்து.
4. நீர்வழிப் படுஊம்- தேவிபாரதி
நம் மண்ணின் கதை இது. வசவுகள், ஏச்சுப்பேச்சு, சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நம்மால் மட்டுமே முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியும். படிக்கப்படிக்க அலைந்து, திரிந்து புழங்கிய பகுதிகள் நினைவுக்கு வருகின்றது. போய் நின்ற உடன், ஒரு செம்பு நிறைய தண்ணீர் கொடுத்துப்பின் வாங்க என்றழைத்த ஊர்கள். காருமாமாவின் இறுதிச் சடங்கிற்கான ஆயத்தங்களில் கதை ஆரம்பிக்கின்றது. பின் காலம் முன்னுக்கு நகர்கிறது.
5. ராஜவனம்- ராம் தங்கம்:
நாமும் சேர்ந்தே காட்டுக்குள் பயணம் செய்கின்றோம். உண்மையாய் வேலைபார்க்கும் வனக்காவலர் நடப்பு வழக்கப்படி இன்னல் அனுபவிக்கின்றார். ராம் தங்கத்திற்கு காடு நன்றாகத் தெரிந்திருக்கிறது. கற்பனையாகவோ, தகவல்களைத் தேடியோ இந்த நூலை எழுதமுடியாது. பெரியநாவல் வடிவில் வந்திருக்க வேண்டிய விஷயகனம் கொண்டது, பாதி வயிறு சாப்பிட்ட உணர்வு.
6. தவ்வை - அகிலா:
ஆங்கிலக்கவிதைகளில் வரும் அதே வார்த்தை சிக்கனத்தையும், அழுத்தத்தையும் இந்த நாவலிலும் பயன்படுத்தியிருக்கிறார். முழுக்கவே திருநெல்வேலி வட்டார வழக்கில் வரும் நாவல். பெண்ணின் அகஉணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்திருக்கிறது. தவ்வையின் Depressionக்கான காரணம் நமக்குத் தெளிவாகத் தெரிவது, இவருக்கு நாவலில் கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டும்.
7. ராமோஜியம் - இரா முருகன்:
நாவலின் நடுவே சிறுகதை வருகிறது. இல்லை இந்த சிறுகதையாலேயே இந்த நாவல் வந்தது. ஆரம்பத்தில் இருந்தே இரா. முருகனைப் படிக்கிறேன். வெகு சுவாரசியமான எழுத்துக்குச் சொந்தக்காரர். குறும்பு கொப்பளிக்கும் மொழிநடை எல்லோருக்கும் தெரியும் வண்ணமும் பூடகமாகவும் (உடும்புத் தைலத்தின் உபயோகம்?) நாவல் முழுதும் வருகிறது. மாயயதார்த்தமும் நடுவில் வந்தது தெரியாமல் வந்து போகிறது
8. பட்டக்காடு - அமல்ராஜ் பிரான்சிஸ்:
வன்னிக்கு வெளியே, அரசுக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து இறுதிப்போரை எதிர்கொண்ட இளைஞனின் கதையே இந்த நாவல். உண்மையில் நடந்த சம்பவங்களுடன் புனைவும் கலந்து வருகிறது.
9. ஆதுர சாலை - அ. உமர் பாரூக்:
கம்பம் போன்ற நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத சிற்றூரில் ஏழ்மைக் குடும்பத்திலிருந்து, சிரமப்பட்டுப் படித்து, நேர்மையான சிந்தனைகள் கொண்ட இளைஞன் ஆய்வுக்கூடத்தில் மற்றும் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்து, எதிர்கொள்ளும் அனுபவங்களே இந்த நாவல்.
10. புனைபாவை - இரா. முருகவேள்:
இரா.முருகவேளின் செம்புலம், முகிலினி நாவல்களைப் படித்தவர்கள் புனைவுடன் அவர் அசல் வரலாற்றைக் கலப்பதை அறிந்திருப்பார்கள். இந்த நாவலும் ஒரு புதிய கோணத்தில் நமது பழைய வரலாற்றை நம்முன் வைக்கிறது. இருபத்தெட்டு நூல்களை இந்த நாவலுக்கு குறிப்பெடுக்க உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதையும் தாண்டிய உழைப்பும், முனைப்பும் இல்லாமல் இந்த நாவல் சாத்தியமில்லை. இது போன்ற நூல்கள் பரவலாக வாசிக்கப்பட்டு, வரவேற்பு பெறவேண்டும். கடந்தகால வரலாறு எதிர்காலத் தவறுகளைத் தவிர்க்க உதவும்.
11. சாலாம்புரி- அ. வெண்ணிலா:
வெண்ணிலாவின் மொழி அழகு. தன் கண்முன் விரிந்த சரித்திரத்தை இவர் எழுதலாமே என்று சிலநேரம் நான் நினைத்ததுண்டு. இந்த நாவல் அது தான். எத்தனை உயிரோட்டம் இதில்! இவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாய் என்றும் இருக்கப்போகும் நாவலிது.
12. குமிழி- ரவி:
இந்த நாவல் சுயஅனுபவங்களை நாவல் வடிவில் எழுதியது. ஈழத்தை விட்டுத் தப்பிக்குமுன் தன் இயக்க அனுபவங்களைக் கொடுத்துப் பாதுகாக்க வைத்திருந்தது அழிந்து போகிறது. முப்பத்தைந்து வருடங்கள் கழிந்து நாவல் உருவம் எடுத்து வருகிறது. நினைவிலிருந்து எழுதப்படுவதால் இறந்த பாண்டி வெளிநாடு தப்புவது போல் சிறு நினைவுப்பிழைகள் உண்டு. என்றாலும் இது ஒரு ஆவணம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இது மற்ற போர்நாவல்களிலிருந்து வித்தியாசப்படுவதை வாசித்தவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.
13. பேரருவி - கலாப்பிரியா:
உதுத்துத் தாளிச்சது, சுண்டக்கறி, அங்கனாக்குழி,முளைப்பாரி கரைப்பது, சீவிலி தூக்குவது, கவட்டாப்புள்,கோட்டிக்காரன், எருவி வச்சிறது, வல்லா வல்லடி, உளுத்தம் பருப்பு சோறும் எள்ளுத்துவையலும் (எனக்கு கூடவே கருப்பட்டி) என்று வரிசையாய் வரும் திருநெல்வேலி வட்டாரச் சொற்களும், கலாச்சாரமும் புரிந்தோர் கூடுதலாய் ரசிக்கலாம் இந்த நாவலை
14. லிங்கம் - ஜெயந்தி கார்த்திக்:
கண்டியூர் வட்டார மொழி கதை முழுதும் இதமாக வருடிக்கொடுக்கிறது
பார்த்த மனிதர்களையே கதையில் வடித்திருக்கிறேன் என்பது கதாபாத்திரங்களில் தெளிவாகத் தெரிகிறது. சில பக்கங்களே வந்து போகும் லதா, குழந்தையை அறைவதில் இருந்து வேப்பங்கொட்டை விலைக்குக் கொடுக்கப் பொறுக்குவது வரை ஒரு தெளிவான சித்திரம். குழந்தைகள் மேல் குடும்ப பாறாங்கல் சுமத்தப்படுகிறது. தோளில் தையல்இயந்திரத்தை சுமந்து செல்லும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் குறித்து ஏதேனும் முழுநாவல் வந்திருக்கிறதா என் நினைவில் இல்லை.
15. யாம் சில அரிசி வேண்டினோம்- அழகிய பெரியவன்:
தலித் இலக்கியத்தை நுட்பமாக சித்தரிக்கும் வெகுசிலரில் அழகிய பெரியவனும் ஒருவர். கவசிநாதன், பதினைந்து, பதினாறு வருடம் படித்துப் பட்டம் வாங்கிவிட்டால் அதன்பிறகு எல்லாம் சுகமே என்ற கனவிலிருந்து, நிதர்சன வாழ்க்கையின் சூட்டுக்கோல் தகிப்பு தாங்காமல், பதறி விழிக்கும் லட்சோபலட்சம் இளைஞர்களின் பிரதிநிதி.
மொழிபெயர்ப்புகள்:
1. ஆயிரம் சூரியப் பேரொளிகள்- காலித் ஹுசைனி தமிழில் ஷஹிதா:
வெகு சில நாவல்களே தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலையும், இனிமேல் படிப்பது கடினம் என்ற எண்ணத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தும். அத்தகைய நாவல் இது. இரண்டு பெண்களின் கதையினூடே ஆப்கானின் Soviet invasionல் இருந்து American bombing வரை மாறும் அரசியலும் கூடவே வருகிறது. சபிக்கப்பட்ட தேசம். ஷஹிதாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி புதிதாக என்ன சொல்ல இருக்கிறது. இதமான மொழிபெயர்ப்பு.
2. பார்வையற்றவளின் சந்ததிகள்- அனீஸ் சலீம்- தமிழில் விலாசினி:
குடும்பங்கள் நமக்கு பாதுகாப்பு தரும் புகலிடமாக இல்லாமல் இருக்கலாம், குடும்பங்கள் நாம் விரும்புவதை விட அடிக்கடி நம்முடன் முரண்படக்கூடும், ஆனாலும் நாம் யார் என்பதை நம் குடும்பங்கள் தான் வடிவமைக்கின்றன. நகைச்சுவையுடன் ஆரம்பிக்கும் நாவல் அதனுடனேயே தொடர்கிறது. ஆனால் வெகுசீக்கிரத்தில் நீங்கள் சிரிப்பதை நிறுத்தி இருப்பீர்கள். What a dark read it was!
3. கானல் நீர்- அப்துல்லா கான்- தமிழில் விலாசினி
அப்துல்லா கானின் நாவல் எந்த சமரசமுமின்றி, தங்கு தடையின்றி சீரான வேகத்தில் சொல்ல வேண்டியது எல்லாவற்றையும் சொல்கிறது. முந்நூறு பக்கங்களுக்குள் இத்தனை விசயங்கள் நிறைந்த நாவலை எழுத முடியுமா என்ற ஆச்சரியம் எழுகிறது. காமம் ஒரு சாதாரணனை சேணம், கடிவாளம் பூட்டி ஓடவிட்டுப் பார்த்து வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் லகானை இழுப்பதை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சற்றே நாடகத்தன்மை கலந்திருந்தாலும் வெகு முதிர்ச்சியான எழுத்து. அதேபோல் சார்புநிலையின்றி, அடையாளச்சிக்கலின்றி இது போன்ற ஒரு நாவலைத் தருவதும் எளிதல்ல
4. மரக்கறி- ஹான் காங்- தமிழில் சமயவேல்:
மரக்கறி நாவல் முழுவதுமே தவிர்த்தல் என்ற ஒரு செயலைப்பின்னிப் படர்கிறது. இயாங்-ஹை சாதாரணனை மணந்த சாதாரண குடும்பத்துப் பெண். வலியுறுத்தல் எதுவும் செய்யாத எதிர்பார்ப்பு இல்லாத மனைவி. ஒருநாள் துர்கனவு ஒன்று கண்டு தான் முழுசைவத்திற்கு மாறியதாக கணவனிடம் சொல்கிறாள். மாமிசத்தை தவிர்க்கிறாள். கலவியைத் தவிர்க்கிறாள். அதன்பிறகு பொதுவாகப் பெண்கள் செய்யும் பலசெயல்களைத் தவிர்க்கிறாள். இறுதியில் மானுடத்தையே தவிர்க்கிறாள்.
5. உண்மை இராமாயணத்தின் தேடல்- ஜி.என். நாகராஜ்- தமிழில் கே.நல்லதம்பி:
ஐம்பது ஆண்டுகள் முன்பு கன்னடத்துமகாகவி குவெம்பு மற்றும் சமஸ்கிருத மகா நாடகஆசிரியன் பாசன் இருவரைப் படித்து இராமாயணத் தேடலைத் தொடங்கியவர். படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத இராமாயண ஆய்வால் பலரின் கேலியை சம்பாதித்தவர். இந்தியா முழுவதும் நாட்டுப்புற, கோயில் ஆய்வுகள் உள்ளிட்ட பல ஆய்வுகள் செய்திருக்கிறார். கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், தமிழ் (கன்னடர் கம்பஇராமாயணத்தை முழுமையாகப் படித்திருக்கிறார்) மொழிகளில் எழுதப்பட்ட முக்கியமான நூல்களைப் படித்திருக்கிறார். தலபுராணங்களின் கதை, யக்ஷகான, நாட்டுப்புறக் கதைகளைக் கேட்டிருக்கிறார். பெங்களூரின் பல நூலகங்கள், ஆராய்ச்சி மையங்கள், தார்வாட் நூலகம், ஹைதராபாத், புதுதில்லி, கல்கத்தா நூலகங்களுக்குச் சென்று தகவல்களைத் திரட்டியிருக்கிறார். இவர் சொல்வது அறுதியான முடிவல்ல. ஆனால் ஒரு தனிமனிதனின் ஆர்வம் எங்கெல்லாம் கொண்டு சேர்க்கும் என்பதன் எடுத்துக்காட்டு இந்த நூல்.
6. யாத்வஷேம்- நேமிசந்த்ரா- தமிழில் கே.நல்லதம்பி:
இரண்டாம் உலகப்போர் நடக்கையில், தப்பிஓடிவந்த, முப்பது யூதக்குடும்பங்கள் பெங்களூரில் வாழ வந்தன, பின்னர் அவர்களில் சிலர் இறந்து, சுமார் ஐம்பது சமாதிகள், இஸ்லாமிய மயான நிலத்தில் ஒரு ஏக்கர் பிரிக்கப்பட்டு புதைக்கப்பட்டன, இப்போதும் மாதத்திற்கு அவர்கள் உறவினர், வரலாற்று வல்லுந‌ர் உட்பட மூன்று, நான்கு வருகை நிகழ்கிறது, இருபத்தைந்து ஆண்டுகளாக கல்லறையை ஒரு இஸ்லாமியக் குடும்பம் பராமரித்து வருகிறது என்ற விவரங்கள் பெங்களூரில் பல வருடங்கள் வசிப்பவர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை மையமாகக் கொண்டு இந்த நாவல் ஆரம்பிக்கிறது.
7. மைனா- தெலுங்கில் சீலா வீரராஜூ- தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்:
இது சாதாரணனின் கதை. சபலங்களும், சந்தர்ப்பங்களும் இழுத்த இழுப்பிற்குச் செல்லும் சராசரி மனிதனின் கதை. ஆரம்பத்தில் இருந்தே எந்த தேக்கமும் இன்றி வேகநடை போடும் கதை. சாயிபாபா எனும் மனிதனின் அகஉணர்வுகளைத் தெளிவாக வாசகர் புரிந்துகொள்ளச் செய்யும் மொழிநடை. ராஜேஸ்வரி கோதண்டம் இது வேறுமொழி நாவல் என்று சிறிதும் தோன்றாத அளவிற்கு மொழிபெயர்த்துள்ளார். நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும் நாவல்.
8. கடைசி வைஸ்ராயின் மனைவி- ரியனான் ஜென்கின்ஸ் ஸேங்- தமிழில் பத்மஜா நாராயணன்:
இந்த நூல் புனைவு. ஆனால் இதில் வரும் சம்பவங்களில் பலவும், கதாபாத்திரங்களும் நிஜம். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தழுவி இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. நமக்கு மிக வேண்டியவர்கள் கண்முன் இறந்தால் அந்த முகம் தான் நம் மனதில் உறைந்து போகிறது. எத்தனை முயற்சித்தும் அவர்கள் இளமைத் தோற்றம் நினைவுக்கு வருவதில்லை. பிப்பியின் கணவருடான இறுதிக்கணங்கள் ஒரு கவிதை.
சிறுகதைகள்
1. தாயுமானவள் - சு.வேணுகோபால்:
ஆறு கதைகள் கொண்ட தொகுப்பு. சு.வேணுகோபாலின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான கதைபெஸ்டிகள். நுட்பமான உணர்வுகளை, விமர்சனப் பார்வையின்றி, பேருந்தில் ஜன்னல் வழியே பார்க்கும் காட்சிகள் மாறிக் கொண்டே வருவதைப் பார்ப்பது போலொரு அனுபவம். கதைக்குள் கதைகள் சிறுகதை வடிவத்தைக் கலைக்காமல் வருவது இவர் கதைகளின் தனித்துவம்.
2. துயிலாத ஊழ் - சமகால ஈழச்சிறுகதைகள்- தொகுப்பாசிரியர் அகரமுதல்வன்:
பத்து எழுத்தாளர்களின் பத்து கதைகள். வெவ்வேறு தரம் எனினும் சமகால ஈழ எழுத்தாளர்கள் என்ற வகையில் ஒரு புத்தகம். விடுபட்டவர்கள் (அகரமுதல்வனே இல்லை) இருப்பினும் இது பாராட்டப்படவேண்டிய ஒன்று. நிலம் ஒன்று. குரல்கள் வேறு. அடிவாங்கியவரின் வலியை அருகிருப்போர், அனுதாபம் கொள்வோரால் ஒருநாளும் முழுதாக உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
3. இறுதி வணக்கம்- சயந்தன்
சயந்தனின் ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்கருவைக் கொண்டவை. சயந்தனின் கதையுலகம் பரந்து விரிகிறது. கிழவனின் உயிர் கதையும், பூரணம் கதையும் நேரெதிர் திசையில் பயணிக்கின்றன. ஒரு சொட்டுக் கண்ணீர் மற்றும் கயல்விழி- தமிழரசி- சந்திரிகா இரண்டுமே ஸ்விஸ்ஸில் நடக்கும் கதைகள் என்றாலும் இரண்டாம் கதை தொடும் உயரங்கள் வேறு. சயந்தனின் தொடர் வாசிப்பு மொழிநடையின் செறிவில் தெரிகிறது. நல்ல தொகுப்பு இது.
4. அமீலா- ப.தெய்வீகன்
ஒன்பது கதைகள் அடங்கிய தொகுப்பு. என் பேரன் ஆம்பிள போன்ற கதைகள் தமிழில் சொல்லப்படாத கதைக்களம் எவ்வளவு இன்னும் மீதம் இருக்கிறது என்பதற்கு உதாரணம். பலர் நகைச்சுவையை கையை முறுக்கி, தரதரவென்று இழுத்து அழவைத்துக் கூட்டி வருகையில் தெய்வீகனிடம் நகைச்சுவை இயல்பாக வருகிறது. நகைச்சுவை மட்டுமல்ல, கதைசொல்லலிலும் ஒரு முதிர்ச்சி தெரிகிறது.
5. கச்சேரி - தி.ஜானகிராமன்
காவேரி ஆற்றொழுக்கு மொழிநடையால் சிரஞ்சீவி ஆன கலைஞன். உரையாடல்களில், அதற்கிடையே பொதிந்திருக்கும் மௌனங்களின் சத்தங்களில் வாசகர்கனை மயங்கவைத்த மந்திரவாதி. மீறல்களின் அழகியலை இலக்கியமாக்கிய எழுத்துச் சித்தன். வாழ்நாளில் ஒரே ஒரு எழுத்தாளரை மட்டுமே படிக்க முடியும் என்று நான் சபிக்கப்பட்டால், நான் சொல்லும் பெயர் தி.ஜாவாகத் தான் இருக்கமுடியும்.
6. சமாதானத்தின் கதை - ஜேகே:
போருக்குப்பின் வெளிநாடு சென்று தங்கிய இளம் தலைமுறையினரின் கதை பெரும்பாலும் அந்த நிலத்தின் கதை தாய்நிலத்தின் தொடர்போடு இருக்கும். இவரது கதைகள் பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும் அடையாளச் சிக்கல்கள் ( அடிக்கடி நீங்கள் இந்தியாவா என்று கேட்போரிடம் இலங்கை என்று சொன்னாலும் புரிவதில்லை), அலைக்கழிப்புகள், எப்படியும் ஊர் திரும்பவேண்டுமென்ற ஆசை, குடும்பத்தைப் பிரிந்த ஏக்கம் எல்லாம் வந்தாலும் ஒவ்வொன்றுமே வித்தியாசமான கதைகள்.
7. கடுவழித்துணை- கமலதேவி:
பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. கதைகள் முன்னும் பின்னுமாக எந்த அறிவிப்புமின்றி நகர்கின்றன. நனவோடையில் மனம் தோய்ந்து பின் மீள்கிறது. ஒரு வரி இல்லை என்றால் ஒரு உரையாடலில் கதையின் உயிர்நாடி ஒளிந்திருக்கிறது. நேர்க்கோட்டுக் கதை சொல்லலில் வாசித்துப் பழகியவர்கள் ஒரு தடவைக்கு மேல் கதையைப் படிக்க வேண்டியிருக்கும். வட்டாரவழக்கு அநேகமான கதைகளில். மாயை போன்ற சிறுகதையை எழுதிய கைகள் தமிழ் சிறுகதைத் தளத்தில் பல நல்ல கதைகளைத் தரப்போகும் கைகள்.
8. அநீதிக்கதைகள் - அருண்.மோ:
பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒன்றுக்கொன்று சற்றும் சம்பந்தமில்லாத பத்து வித்தியாசமான கதைகள். யுத்திகளும் மாறுகின்றன. கதை சொல்லலும் திரைக்கதை போல, Visual effect கொண்ட முதல் கதையிலிருந்து, பசி போல Poe பாணியில் சொல்லும் கதைகள் வரை வித்தியாசப்படுகின்றன.
9. மாயம்- பெருமாள் முருகன்:
வழமை போல் விவசாய, நடுத்தர வர்க்கத்தின் கதைகள் இவை. கதைக்கரு என்று இல்லாமல் சின்ன சம்பவங்களை, உணர்வுகளைக் கதையாக்கியிருக்கிறார். சில நல்ல கதைகளும், சில சராசரிக் கதைகளும் கலந்த தொகுப்பு. ஆனால் எல்லாக் கதைகளிலுமே பெருமாள் முருகனின் Touch இருக்கிறது.
10. உச்சை- ம.நவீன்:
ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பு இது. மாயம், அமானுஷ்யம் போலத் தோற்றமளிக்கும் எல்லாக் கதைகளிலும் கடைசியில் Realityயே தங்கிவிடுகிறது. நிறையக்கதைகளில் இருவருக்கு இடையே நடைபெறும் Mind game கதையாகி இருக்கிறது. சில கதைகள் பேய்ச்சியின் தொடர்ச்சி போல் காட்சியளிக்கின்றன. ஒரு Subtle humour அநேககதைகளில் இழையோடுகிறது.
11. ஆனந்த நிலையம் – பாவண்ணன்
எளிய மனிதர்களின் எளிய கதைகள். உரையாடல்கள், வர்ணனைகளில் கதையின் அழுத்தத்தைக் கூட்டுகிறார். வண்ணதாசனின் கதைகளில் வருவது போலவே இவர் கதைகளிலும் எல்லோரும் நேசத்தால் நிறைந்த மனிதர்கள். நேசமில்லா மனிதர்கள் வந்தாலும் அவர்கள் கோணத்தில் கதை நகர்வதில்லை.
12. அவளது வீடு- எஸ்.ராமகிருஷ்ணன்
இருபது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. எஸ்.ரா வின் மொத்த கதைகளிலிருந்து பத்து வாசகர்கள் அவர்களுக்கு சிறந்த கதைகள் என்று தோன்றியதை தேர்வு செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் எஸ்.ராவின் பலம் என்பது அவரது சிறுகதைகளில் தான் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment